பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, December 31, 2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆம் பிறந்த நாள் விழா.-- 1

                            சுவாமி விவேகானந்தரின் 150ஆம் பிறந்த நாள் விழா.

புதிய இந்தியாவைப் படைப்பதில் முன்னணியில் இருந்த மூவர் சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதி, மகாத்மா காந்தி ஆகியோர். முதல் இருவரும் இப்பூவுலகில் மிகக் குறைந்த ஆண்டுகளே வாழ்ந்தார்கள் என்றாலும் வரலாற்றை மாற்றி எழுதுமளவுக்கு சாதித்துவிட்டுச் சென்றார்கள். இன்று நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கும் இவ்விருவரின் கருத்துக்கள் தீர்வு காண்பதாக இருப்பதை காண்கிறோம். தனி மனிதனின் வாழ்க்கையை முதன்மையாக வைத்து சிந்தித்தவர் சுவாமி விவேகானந்தர். ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள் அந்த நாட்டில் வாழும் மனிதர்களே. அந்த அற்புத மகானுடைய 150ஆம் ஆண்டு பிறந்த நாள் 2013 ஜனவரி 12இல் தொடங்குகிறது. அவர் பிறந்த நாளையொட்டி ஜனவரி 1முதல் "பாரதி பயிலகம் வலைப்பூவில்" ஒவ்வொரு நாளும் அவருடைய சிந்தனைத் துளிகளை இடம்பெறச் செய்யவேண்டுமென்பது நமது அவா. அதன்படி அதன் முதல் ஆக்கம் 2013 ஜனவர் 1இல் வெளிவருகிறது. இனி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சிறு கருத்துத் துளிகளை இதே வலைப்பூவில் காணலாம். படித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

                                  1. இந்தியப் பெண்மையின் இலட்சியம்.

ஓ இந்தியா! உனது பெண்மையின் இலட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துறவியருக்கெல்லாம் பெருந்துறவி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்ட உமாபதி சங்கரர் என்பதை மறவாதே!

இந்தியாவில் பெண்மையின் இலட்சியம் தாய்மை -- அற்புதமான, தன்னலமற்ற, துன்பங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கிற, என்றும் மன்னிக்கும் இயல்புடையவள் தாய்!

கீழை நாட்டுப் பெண்களை மேலை நாட்டு அளவுகோலால் மதிப்பிடுவது சரியல்ல. மேலை நாட்டில் பெண் என்றால் மனைவி; கீழை நாட்டிலோ அவள் தாய். இந்தியாவில் பெண்களைத் தெய்வ வடிவங்களாகவே கருதுகிறோம். ஒரு பெண்ணின் வாழ்க்கை தாய்மை என்ற ஒன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஓர் உண்மையான தாயாகத் திகழ அவள் கற்பு நெறியில் நிலைபெற்றவளாக இருக்க வேண்டும்.

நமது பெண்கள் அவ்வளவு படித்தவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தூய்மையில் சிறந்தவர்கள்.

ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைத் தவிர மற்ற ஆண்களைத் தன் பிள்ளைகளாகப் பார்க்க வேண்டும். ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தன் தாயாகக் காண வேண்டும். மேலை நாட்டினர் பெண்களிடம் காட்டும் மரியாதை இருக்கிறதே, அதைக் காணும்போது எனக்கு வெறுப்பே மிகுகிறது. பால் வேற்றுமையை மறந்து, மனிதர்கள் என்னும் அடிப்படை மீது இருபாலரும் சந்திக்கக் கற்றுக் கொள்ளும் போதுதான் மேலை நாட்டுப் பெண்கள் உண்மையாக முன்னேறுவார்கள். அதுவரை அவர்கள் விளையாட்டுப் பொருட்கள், அதற்கு மேல் எதுவும் அல்ல. இவை எல்லாம்தான் விவாகரத்திற்குக் காரணமாகின்றன. ஆண்கள் குனிந்து பெண்களுக்கு நாற்காலி அளித்து உபசரிக்கின்றனர்; அவர்களின் அழகைப் புகழ்கின்றனர்; 'அப்பப்பா, உன் கண்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!' என்கின்றனர். இதற்கு அவர்களுக்கு உரிமை ஏது? ஆணுக்கு அவ்வளவு தைரியமா? அந்தப் பெண்கள் இதை அனுமதிக்கலாமா? இவை மனிதனின் மோசமான குணத்தை வளர்க்கின்றன, உயர்ந்த நோக்கங்க்களை அல்ல.

'நான் ஆண், நான் பெண்' என்னும் எண்ணங்களைவிட்டு, நாம் மனிதர்கள், அன்பு காட்டவும் உதவி புரியவும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டும்.

பெண்களைப் புறக்கணித்தது -- இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம்.

பாரத நாட்டில் இரு பெரும் பாவங்கள் உள்ளன - (1) பெண்களை மிதித்து நசுக்குதல், (2) ஜாதி ஜாதி என்று ஏழைகளைக் கசக்கிப் பிழிதல்.

அமெரிக்கர்கள் தங்க்கள் பெண்களை மதிக்கிறார்கள். அதனால்தான் சுகமாக, கற்றறிந்தவர்களாக, சுதந்திரர்களாக, ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். நாம் பெண்களை இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், வெறுக்கத்தக்கவர்கள், தூய்மையற்றவர்கள் என்றெல்லாம் வசைபாடுகிறோம். விளைவு? நாம் மிருகங்க்களாக, அடிமைகளாக, முயற்சியற்றவர்களாக, ஏழைகளாக இருக்கிறோம்.

சக்தியில்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நமது நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்து கிடப்பது ஏன்?நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம்.

நன்றி: "எனது பாரதம் அமர பாரதம்" ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை.

1 comment:

 1. வீரத் துறவியவர் அதிர்வேட்டுப் பேச்சிலும்
  தீர்க்கமான ஆழ்ந்தக் கருத்துக்களை சமைத்தவர்

  இந்தியப் பெண்மையின் சின்னமாக / உதாரணமாக அவர் முன்னிறுத்தும் அந்த பெண்கள் எத்தகைய சூழலில் எப்படி எல்லாம் திகழ்ந்தார்கள் என்று எண்ணினால் போதமே இந்த ஞானச் சூரியன் கூற விளையும்கருத்துக்களை.
  புறத்திலும் அகத்தையே பெரிதெனப் போற்ற வேண்டும் அப்படி போற்றப் படும் அகம் அனைத்துமொன்றே ஆகவே அதிலே வேற்றுமை இல்லை என்பதைக் கூறியதோடு; சக்தி இங்கே புறக்கணிக்கப் படுகிறாள் அதனால் சக்தியற்ற மண்ணாக இருக்கிறது என்பதை தெளிவுப் படுக்கிறார்.

  அதனாலே ''தையலை உயர்வு செய்'' என்றான் மகாகவி.

  அதனை நான் இப்படி கூறுவேன். யாதுமாகி எங்கும் வியாபித்து இருக்கும் சக்தியவள் தீமைகளில் மாயா, நன்மைகளில் சக்தி. எதுவாயானாலும் அவளின்றி எதுவும் இல்லை. காரண காரியம் அவளன்றி வேறொருவர் அறியார்,

  ஆகவே, மாயையில் இருந்து விலகி சக்தியைப் போற்றி உண்மையான வாழ்வை வாழ இந்த மானுடம் உய்ய ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதோடு எல்லாவற்றிலும் இருவரும் சரிபாதியென வாழவாழ்வீரென கூறி அமெரிக்காவையும் சுட்டிக் காட்ட மறக்கவில்லை. நமது விவேக ஆனந்தர்.
  சுவாமிகள் ஜான்சிராணி அம்மையாரை பற்றி கூறியக் கருத்துக்கள் கூட இன்னும் வலு சேர்க்கும்.

  அருமை பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here