பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 2, 2012

திடீர் போரட்டங்கள்

திடீர் போரட்டங்கள்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், இந்திய குடிமக்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த ரெளலட் சட்டம் போன்ற கடுமையான வாய்ப்பூட்டுச் சட்டங்களுக்கு இந்திய ஜனநாயக அமைப்பில் இடமில்லை என்றாலும், அதுபோன்ற கடுமையான சட்டங்களை சில சந்தர்ப்பங்களில் நடைமுறை படுத்தப்பட்டன. குறிப்பாக நெருக்கடி நிலை காலத்திலும், அகில இந்திய அளவில் நடந்த பெரிய போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற காலகட்டங்களிலும், அன்னிய படையெடுப்பு காலத்திலும் சில அவசரச் சட்டங்கள், பொடா போன்ற சட்டங்களும் அமல் படுத்தப்பட்டாலும், பெரும்பாலும் சகல உரிமைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற ஒரு ஜனநாயக அமைப்பு நம்முடையது. அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு ஏராளமான உரிமைகளைக் கொடுத்திருந்த போதும், நமது கடமைகள் என்பதில் மிகச் சிலவே எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான கடமையாகக் கருதப்படுவது வரி செலுத்துதல், தேர்தல்களில் வாக்களித்தல் போன்றவை மட்டுமே.

சமீபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்ன கருத்து ஆராயத் தகுந்தது. அவர் சொல்கிறார் "அரசுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, எதிர்ப்பைக் காட்டிய காலம் மாறிப்போய், தங்களுடைய எதிர்ப்பையும், வீரத்தையும் காட்ட, சாலைகளில் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தும் மக்கள் கூட்டம் பெருகி விட்டது". "ஐயாயிரம் மக்களை வெறும் ஐநூறு போலீசார் அடக்க நினைக்கும் முயற்சியில் போலீசாருக்குக் கிடைப்பது அடி, உதை மட்டுமே. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, குடிநீர் பிரச்சினை என போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், போலீசாரை உயர் அதிகாரிகள் பகல் இரவு பாராமல் கசக்கிப் பிழிகின்றனர்" என்கிறார் அவர்.

எல்லா அரசாங்க அதிகாரிகளைப் போலத் தங்கள் கடமையைச் செய்யும் போலீசாருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருக்கிறது. இவர்கள் தங்கள் உரிமைகளுக்காகச் சங்கம் அமைத்துக் கொள்ளவோ, போராடவோ கூடாது என்கிறது பணி சட்ட விதி முறைகள். அதனால்தான் காவல்துறைக்கு என்று மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இவர்கள் பிரச்சினைகளை மட்டும் தனியாக விவாதித்து, இவர்களது உரிமைகள், சலுகைகள் இவைகளை கவனித்துக் கொள்ளும் கடமை சட்ட மன்றத்துக்கு இருக்கிறது. மக்களின் பாதுகாவலர்களான இவர்கள் தாக்கப்பட்டால், உயிரிழந்தால் அந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது.

இந்த உரிமைகள் நமக்குத் தாராளமாக வழங்கப்பட்டிருப்பதாலேயோ என்னவோ, இப்போதெல்லாம் தினமும் செய்திகளில் ஆங்காங்கே நடக்கும் மக்களுடைய திடீர் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுகின்றன. முன்பெல்லாம் பொதுமக்களை பெருமளவில் பாதிக்கும் சில பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகள், அல்லது தொழிற்சங்கங்கள், குறிப்பிட்ட குழுவினர் போன்றவை ஒன்று சேர்ந்து போராட்டங்களை அறிவிப்பார்கள். முறையான அறிவிப்புக் கொடுத்து, நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுப்பார்கள். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தம், அல்லது பந்த் போன்ற காலங்களில் மக்களின் சகஜ வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டாலும், அத்யாவசிய தேவைகளுக்கு மருத்துவ மனைகளின் செயல்பாடு, பால்வண்டிகளை அனுமதித்தல் போன்றவற்றிற்கு பந்திலிருந்து விதிவிலக்கு அளித்து விடுவார்கள்; அதனால் வேலைகள் ஸ்தம்பித்துப் போய்விடுவதில்லை.

காலம் போகப் போக, இப்போதெல்லாம் தினசரி ஆங்காங்கே நடைபெறும் திடீர் போராட்டங்களைப் பார்த்தால், இவைகள் எல்லாம் ஒருங்கிணைந்த, பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடத்தப்படும் போராட்டங்களாகத் தெரியவில்லை. ஒரு சில இடங்களில் அங்குள்ள மக்களின் அன்றாடத் தேவைகள் கிடைக்கவில்லை, அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதாலும் இதுபோன்ற போராட்டங்கள் நடக்கின்றன. மாறாக வாழ்வில் ஏற்படக்கூடிய சர்வ சாதாரணமான இடையூறுகள், எதிர் பாராமல் நடந்துவிட்ட நிகழ்ச்சிகள் இவைகளுக்கு எதிர்ப்பு என்கிற வகையிலும் போராட்டங்கள் தொடங்கிவிடுகின்றன.

ஒரு பகுதியில் குடிநீர் சப்ளை இல்லை என்பதற்காக மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் என்றொரு செய்தி வருகிறது. குடிநீர் சப்ளை இல்லை என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நம் நாட்டில் பெரும்பாலும் நல்ல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது என்பது அரிதாக இருக்கிறது. பல காரணங்களால் இப்போது இருக்கும் ஏற்பாடுகள் சில நேரங்களில் செயலிழந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் நல்ல முறையில் செயல்பட யாரிடம் முறையிட்டு, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்பதை தீர்க்க ஆலோசிக்காமல், உணர்ச்சிவசப்பட்டு உடனே நடுச் சாலையில் அமர்ந்து தர்ணா பண்ணுவது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகப் போய்விட்டதொன்று.

மின் பற்றாக்குறை என்பது இப்போதெல்லாம் கைக்குழந்தைகளுக்குக்கூட தெரியும். மின் உற்பத்தியில் குறைவு, எதிர்பாராத பழுது, காற்றாலையில் மின் உற்பத்தி இல்லை போன்ற எத்தனையோ வகை காரணங்களால் இதுபோன்ற அசாதாரணமான நிலை ஏற்படுகிறது. இதனால் சிறு தொழில்களும், மருத்துவ மனைகளும், அலுவலகங்களும் மட்டுமல்லாமல் பொது ஜனங்கள் அனைவரும் பாதிக்கத்தான் படுகிறார்கள். இதற்கு மாற்று என்ன? எங்கோ ஒரு சில இடங்களில் சாலை மறியல் செய்வதால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா? முறையாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள் மூலம் இவைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமே யன்றி, திடீர் போராட்டங்களால், மின்சாரமும் உடனடியாகக் கிடைக்கப் போவதில்லை, நம் அவதி மேலும் அதிகரிக்கவும் கூடும்.

ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி, உடல் நிலை மோசமடைந்த காரணத்தாலும் இறந்து போகலாம். அல்லது சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு அதனாலும் ஏற்பட்டிருக்கலாம், எங்கோ எப்போதோ ஓரிரு இடங்களில் தவறான மருத்துவ சிகிச்சை போன்ற தவறுகளாலும் நடந்திருக்கலாம். நோயாளியின் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு அந்த நோயாளியின் இறப்பு தாங்க முடியாத சோகத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கலாம். இறப்பு நேர்ந்து விட்டது என்று தெரிந்த பின் என்னதான் சாலை மறியல் செய்தாலும் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை. இதில் அலட்சியமாக இருந்தவர்கள், தவறான சிகிச்சை கொடுத்தவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கைதான் எடுக்கலாமே தவிர உயிர் இழந்தவர் பிழைக்கப் போவதில்லை. அப்படி ஒரு உயிர் போய்விட்டது என்பதற்காக நிர்வாகத்தை, அரசாங்கத்தைக் கண்டித்து உடனே சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டால், அப்படி மறித்ததால்கூட மேலும் சில உயிர்கள் போக நேர்ந்து விடலாமே. செத்துப்போனவர் உடலை வாங்க மறுத்தும் ஒரு போராட்டம். அப்படி அந்தப் பிணத்தை வாங்காமல் இருப்பதால் யாருக்கு இழப்பு ஏற்படுகிறது. நம் உறவினர் உடலை வாங்காமல் போட்டுவிட்டுப் போய்விட்டால், வாழ்நாள் முழுவதும் நாம்தான் வருந்த நேரிடும். எப்படி இருந்தாலும் உறவினர் அந்த உடலை மீண்டும் வாங்கி சமஸ்காரம் செய்துவிடுவார்களே தவிர, அப்படியே போட்டு விட்டுப் போய்விட்டதாக இதுவரை செய்திகள் வந்ததில்லை.

பாம்பு கடித்தவுடன் முதலுதவி செய்து உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றால், அதற்கான சிகிச்சைகளை செய்து பாம்பு கடித்தவரை பிழைக்கச் செய்ய முடியும். என்ன காரணங்களுக்காகவோ, மந்திரம், மாயம், வேப்பிலை அடித்தல் போன்றவற்றையெல்லாம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்று கடைசி நேரத்தில் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து போட்டுவிட்டு, அவர் இறந்து விட்டார் என்றதும், ஆத்திரப்பட்டு மருத்துவ மனையை சேதப்படுத்துவதும், மருத்துவர்களைத் தாக்குவதும், மருத்துவர்களைக் கண்டித்து மறியல் செய்வதும் எந்த விதத்தில் நியாயம் என்பதை நியாய உணர்வு உள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கேரளத்திலிருந்து ராஜஸ்தான் போகும் விரைவு ரயில் வண்டி கேரளத்திலிருந்து கிளம்பி வந்து கொண்டிருக்கிறது. கேரளத்திலுள்ள ஒரு கிராமப் பகுதியில் ஆள் இல்லாத ரயில்வே கேட் பகுதிக்கு அந்த ரயில் வந்து கொண்டிருந்த போது ஒரு கார் அந்த லெவல் கிராசிங்கை கடக்க முயல்கிறது. அங்கு கேட்டை மூடத்தான் ஆள் கிடையாதே. ரயில் வருகிறதா என்று இரு புறமும் பார்த்துவிட்டு, இப்போது ரயில் தண்டவாளங்களைத் தாண்டினால் ஆபத்து இல்லை என்று உறுதி செய்து கொண்டுதான் கார் அந்த கேட்டைத் தாண்டியிருக்க வேண்டும். இதுகுறித்து அந்த கேட் அருகில் அறிவிப்புப் பலைகைகளும் வைத்திருக்கிறார்கள். என்றாலும் இவை ஒன்றையும் கடைப்பிடிக்காமல் ஐந்து பேரை ஏற்றிக் கொண்டு ஒரு கார் லெவல் கிராசிங்கைக் கடக்கிறது. அப்போது வேகமாக வந்து ரயில் அந்தக் காரின் மீது மோதுகிறது. அதில் ஐந்து பேர் அங்கேயே உயிர் இழக்கிறார்கள். இதில் தவறு யாருடையது? இங்கு என்ன நடந்தது தெரியுமா? பொதுமக்கள் ரயில் மீது தாக்குதல் தொடுத்து இருக்கிறார்கள். சாலை மறியல் செய்து போராடியிருக்கிறார்கள். தவறு செய்தவர் அந்த காரின் ஓட்டுனர்; அப்படியிருக்க ரயிலைத் தாக்குவதும், ரயில்வேயைக் குறை சொல்வதும் எப்படி நியாயம். ஒன்று வேண்டுமானால் செய்யலாம், அந்த ஆளில்லாத ரயில்வே கேட்டுக்கு ஒரு கேட் கீப்பர் நியமனம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கலாம்.

ரயில்வே சட்டத்தின்படி ரயிலில் அடிபட்டு ஒரு மாடு இறந்து போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மாட்டின் இறப்புக்காக மாட்டின் உரிமையாளர் நஷ்ட ஈடு கோர முடியாது. மாறாக ரயில்வே லயனில் அலட்சியமாக மாடுகளை மேயவிட்ட மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு தொடர்ந்து அபராதம் விதிக்க இடமிருக்கிறது. இதனை மக்கள் புரிந்து கொண்டுதான் நடந்து கொள்கிறார்களா தெரியவில்லை. ஒரு உயிர் போகிறது என்றால் எல்லோருக்கும் வருத்தம் தான். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், நாம் கவனமாக இருக்க வேண்டிய இடத்தில் கவனமின்றி இருந்துவிட்டு, குற்றத்தை எதிராளி மீது சுமத்தி நாம் நஷ்ட ஈடு கேட்பது எந்த விதத்தில் நியாயமானது?

அந்தந்த கிராமம், அல்லது நகராட்சிகளில் குடிதண்ணீர் விநியோகம் செய்வது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு. அந்த விவகாரத்தை அகில இந்திய பிரச்சினையாக்கி சாலை மறியல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பொதுமக்களை, மாணவர்களை, உடல் நலம் இல்லாதவர்களை, அவசரமான காரியங்களுக்குச் சென்று கொண்டிருப்பவர்களை மறிப்பது என்ற உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்திருக்கிறார்கள்?

ஒரு முறை பந்த் நடந்து கொண்டிருந்தது. எப்போதும் போல அரசு விடுமுறை எதுவும் Negotiable Instruments Act படி விடப்படவும் இல்லை. அரசாங்க அலுவலகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அலுவலகம் செல்வதற்காக ஒரு பேருந்தில் ஒரு பெரு நகரத்துக்குள் நுழைகின்ற சமயம், எதிரில் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்புறம் ஒரு பதினைந்து பதினாறு வயது பையனை வைத்துக் கொண்டு எதிரில் வருகிறார். பஸ் நிறுத்தப்படுகிறது. அந்த பையன் ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்து பஸ் ஓட்டியின் எதிரில் கண்ணாடி மீது வீசி எறிகிறான். அருகில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீஸ் காவலர் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறார். இந்தப் பையன் பஸ்ஸை உடைத்துவிட்டு, அவசரமில்லாமல் அந்த மோட்டர் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து கொண்டு போய்விடுகிறான். என்ன சாதனை இது? அந்த பந்துக்கு அழைப்பு விடுத்தது ஒரு பெரிய கட்சி; அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் அந்த கட்சிக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார். வந்தவர் ஒருவர், குற்றம் இழைத்தது ஒரு சிறுவன் என்கிறபோதும் காவல்துறை வேடிக்கை பார்த்தது என்றால் அதற்கு யார் காரணம்? சொல்லியா தெரிய வேண்டும். இதுபோன்றவற்றை அரசியல் கட்சிக்காரர்கள் தூண்டிவிடலாமா?

முன்பெல்லாம் சாலைகளில் மோட்டார் வண்டிகள் மிகக் குறைவு, மாட்டு வண்டிகள், பின்னர் குதிரை வண்டிகள், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகனங்கள் ஓரளவும், நடந்து செல்வோர் மிகுந்தும் காணப்படுவார்கள். இன்று அப்படியே மாறி, கார், லாரி, பஸ், மினி லாரி, மணல் லாரிகள் என்று சாலைகளை அடைத்துக் கொண்டு இருபத்தி நான்கு மணி நேரமும் போய்க்கொண்டிருக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்கள் பெருத்து ஏராளமான பேர் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொப்பெட் என்று சவாரி செய்கிறார்கள். ஓரிடத்தில் சாலையைக் கடக்க மணிக்கணக்காககூட ஆகும். சாலை விதிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைக் காப்பதற்காக காவலர்களும் அதற்கென்றே போலீசில் ஒரு பிரிவும் இருந்தும், நம்மில் பலரும் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ஒழுங்கு கட்டுப்பாட்டை காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம்.

நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. நான்கைந்து பாதைகளாகப் பிரிக்கப்பட்டு வாகனங்கள் தேங்கிவிடாமல் அவை உடனுக்குடன் சுங்கத் தொகை வசூலித்து அனுப்பிவிடுகின்றன. ஒரு பஸ் மற்றொரு வண்டியைத் தொடர்ந்து சுங்கச்சாவடி லேனில் வந்து கொண்டிருக்கிறது. முந்திச் செல்லும் வண்டி மீது மோதிவிடாமல் பஸ் சற்று இடைவெளிவிட்டுப் பின்னால் வருகிறது. அதற்குள் ஒரு காரோட்டி தனது காரை முன்னால் செல்லும் வண்டிக்கும் பின்னால் வரும் பஸ்சுக்கும் இடைவெளியில் புகுந்து போய் முந்தி நிற்கிறார். அந்த நேரம் பார்த்து பஸ் ஓட்டுனர் பஸ்சை வேகமெடுத்திருந்தால் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியிருக்கும், உள்ளே இருந்தவர்கள் பரலோகம் போயிருப்பார்கள். உடனே மக்கள் சாலை மறியல் செய்திருப்பார்கள். முன்னால் செல்லும் பஸ் சென்ற பிறகு வரிசைப்படி சென்றால் என்ன? இந்தக் கார்க்காரரின் செயல் நியாயமானதா? இதெல்லாம் யாரால் நேருகிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எல்லா பொறுப்புகளுக்கும் அரசாங்கம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும், பொதுமக்களாகிய நமக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்ற வகையில் நாம் வளர்க்கப்பட்டு விட்டோம். அதனால் விளையும் தீமைகள்தான் மேலே சொன்ன நிகழ்வுகள் அத்தனையும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் கல்வி அறிவு பெற்றோர் இருபது சதவீதத்திற்கும் குறைவுதான். அறியாமையில் இருந்தவர்கள் எண்பது சதவீதம் பேர். இன்று அப்படியே மாறி கல்வி அறிவு பெற்றவர்கள் தொகை எண்பது சதவீதத்திற்கும் மேல் இருந்த நிலையிலும், பொறுப்புணர்வும், புரிதலும், சகிப்புத் தன்மையும் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதைப் பொறுப்புள்ளவர்கள் கண்டுபிடித்து அதற்கு சரியான மாற்றைச் சொல்ல வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம். மகாத்மா காந்தி பயந்தது போல சுதந்திரத்தைப் பெற்று அதனை முறையாக நிர்வகிக்கும் தகுதி இந்திய மக்களுக்கு வருவதற்கு முன்பு சுதந்திரம் கிடைக்கிறதே இதனை இவர்கள் சரியாக நிர்வகிக்க வேண்டுமே என்று கவலைப் பட்டாரே; அது எத்தனை உண்மை என்பதை நாமெல்லாம் உணரவேண்டும். சட்டங்களும் விதி முறைகளும் நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறர் உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ளவுமே தவிர, அவை உடனுக்குடன் மீறப்படுவதற்காக இல்லை என்பதை, குறிப்பாக படித்தவர்கள், வேகமாகச் செல்லும் வாகனங்களை உபயோகிப்பவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

3 comments:

 1. சுயநலம், சமூக அக்கறையின்மை, சாதி, இன, மொழி என்னும் முப்பெரும் அமைப்பின் மீது இருக்கும் வெறி.
  இன்னொரு பக்கம் பற்றாக் குறை, பகிர்ந்தளிப்பதில் பாரபட்சம், நிர்வாகிகளின் அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம்.
  தனிமனித ஒழுங்கு வேண்டும் அதற்கு பள்ளிகள் பெரும் பங்காற்ற வேண்டும். அந்த தனிமனித ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் அப்படித் தகுதி வாய்ந்த நல்லொழுக்கமுள்ள கல்வி மான்களை ஆசிரியர்களாகத் தேர்வு செய்ய வேண்டும் அப்படி இல்லாது எப்படியும் இந்தப் பெண்ணிற்கு ஆசிரியர் வேலை நமது ஆட்சியிலே தந்தாள் ஒருக் குடும்பமே நமக்கு ஓட்டுப் போடும் என்ற சுயநலத்தால் வந்த விளைவு. பள்ளிகளில் ஜடங்களே / ஞான சூன்யன்களே ஆசிரியர்களாக இருக்கும் அவலம்.

  இன்றைய மாணவன் நாளைய தலைவன். அவன் நல்ல நீதிகளைக் கேட்டு வளர்ந்த மனித நேயமிக்க மாணவனாக இருந்தால் நல்லத் தலைவனாக வருவான். முதலில் பணம் தான் அதை சம்பாதிக்க வழி கூறும்????!!!! (நல்லப் பண்பையும் அறிவையும் வளர்க்க அல்ல) பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகிறது. ஆக, அறிவு மட்டும் இருந்தால் அது அங்கே வீணாகிறது, வாய்ப்பு இன்றி கருகியும் போகிறது. பிள்ளைகள் நாளை பணம் காய்க்கும் மரங்கள் அதற்கு எப்படியாவது எவ்வளவு செலவு செய்து என்னேபாடு பட்டாவது அந்தப் பள்ளியில் கேட்கும் கொள்ளை கோடியைத் தந்து அங்கே சேர்த்து விடவேண்டும். அப்படி சேர்த்து விட்டு, பார் எவ்வளவு பணம் செலவழிக்கிறேன் இதயெல்லாம் மனதிலே கொடு படித்து நல்ல நிலைக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று பணத்தை மாத்திரமே நேசிக்கும் ஒரு மனப்பாங்கை வளர்த்து விடும் பெற்றோர்.

  சிரமப் பட்டுப் படித்து வந்த பின்பு அவனின் கல்வித் திறமையை மட்டும் கணக்கில் கொள்ளாது அதைப் புறந்தள்ளி குறிப்பிட்ட ஒரு வகுப்பில் பிறந்தவனுக்கு எல்லா உரிமையும் உண்டு மீதி இருந்தால் உனக்கு என்று ஒதுக்கும் நிலை. புத்திசாலித் தனம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் பிறவி இயல்பா.. அல்லது பிறந்த இல்லாத சாதியினால் வருவதா? அவனின் குடும்ப சூழலின் தாக்கம் இருக்கலாமே தவிர அதுவே காரணம் ஆகாது. தகுதியானவர்கள் இப்படி ஓரங்கட்டப் படுவது கொடுமை.

  பணம் வேண்டும், சலுகை தரப்படும் சாதியில் (அவன் குடும்பத்தில் எத்தனை அரசு வேலை பார்ப்பவார்ல் இருந்தாலும் எவ்வளவு சலுகைகளை பெற்று இருப்பவர்கள் இருந்தாலும் சரி) பிறந்திருக்க வேண்டும்.... மூன்றாவதாக கொஞ்சம் அறிவு இருந்தால் நல்லது, இல்லைஎன்றாலும் பாதகம் இல்லை. எப்படியும் அறிவு குறையுமா அளவிற்கு விரும்பியதை பணம் கொடுத்துப் பெற்றும் விடலாம்.

  ReplyDelete
 2. இன்றைய நிலையை கட்டுரையிலே தெளிவாக கூறி இருக்கிறீர்கள். முதலாவதாக நல்ல ஆசிரியர்கள் கொண்ட நல்லப் பள்ளிகள் அதுவும் அரசு சார்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கும் முக்கியமாக பள்ளிப் பாடங்கள் மிகவும் கவனமாக அவசியமானதாக அறிவு, ஒழுக்கம், தர்ம சிந்தனையை, மனித நேயத்தை, இன்றைய விஞ்ஞானத்தை வண்ணங்களிலே கண்முன்னமே அதாவது அவைகளை இணையத்திலே பெற்று பள்ளிகளில் வெண் திரைகளிலே ஆசிரியர்களே மாணவர்களிடமே காண்பிக்க வேண்டும். புரியாத வார்த்தைகளால், பார்க்காத ஒருப் பொருளை கருப்பு வேல்லைநிரத்திலே விஞ்ஞானப் பாடங்களைப் படிக்கும் நிலை அறவே போக வேண்டும். இளம் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு அரசு தத்து எடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி அரசுத் துறைகளிலே சேவை செய்ய கட்டாயப் படுத்த வேண்டும்.

  இவைகளைப் போல எண்ணிலா திட்டங்கள் நிறைவென்ற. நான் எப்போதும் சொல்வது போல், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் இன்றைய உலக நடப்பை நன்குணர்ந்து ஜனநாயக அமைப்பில் சில திருத்தங்களை கட்டாயமாகத் திருத்தம் செய்ய சட்டம் இயற்றி... முதலிலே சட்டமன்ற, பாராளுமற்றத்திற்கு செல்லும் பிரதி நிதிகளை புடம் போட்டு எடுக்குமா அளவிலே எழுத்து நேர்முகத் தேர்வுகளை நடத்தி அதிலும் உளவியல் தொடர்பான விசயத்தில் முக்கியத் துவம் தந்து அவர்களுக்கு தகுதி சான்றிதல்களைத் தர வேண்டும் அப்படி தகுதிச் சான்றிதல் பெற்றால் தான் அதன் அடிப்படை தகுதி இருந்தால் தான் அந்த நபர்கள் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட கட்சிகள் பரிந்துரை செய்ய முடியும். இது மிகவும் கட்டாயமாக்கினால் இந்த அரசியல் நிலை மாறும். நல்லம் சமூகம் உருவாக உண்மையிலே பாடுபட விரும்பும் மனிதர்கள் கூடும் இடமாக சட்டமன்றங்களும் ,பாராளு மன்றமும் இருக்கும். அதன் பின்பு எல்லாம் தானாக மாறும். இது சாத்தியமே.

  ஒரு சாதாரணமான அரசு அலுவலருக்கு (மருத்துவமனையிலே துப்புரவு செய்பவருக்கு) கல்வித் தகுதியும், அனுபவமும் வேண்டும் என்று நிர்ணயம் செய்யும் அரசு.. ஒரு எம்.எல்.ஏ ஆகப் போகும் ஒரு நபருக்கு எத்தனைத் தகுதிகளை பார்க்க வேண்டும் அது இல்லையே. முதலில் நல்ல மனிதர்கள் கொண்ட அரசு அமைய வேண்டும் (அதற்கு நீதியும் தேர்தல் ஆணையமும் சரியாக இயங்க வேண்டும்) அப்படி அமையும் பட்சத்தில் அவர்கள் அடிப்படைக் கல்வியிலே ஒழுக்கத்தையும், பொது நலத்தையும், மனித நேயத்தையும் வளர்க்கும் பள்ளிகளை அமைத்து வெறும் பத்து வருடங்களில் சமூகத்தை மாற்றிக் காண்பிப்பார்கள்.

  அப்போது இது போன்ற அநாகரிக செயல்கள், தர்ணா, போராட்டங்கள், பொது சொத்து அழிப்புகள் இல்லாது போகும். இவைகள் யாவும் நடக்கும் என்றே நம்புவோம். அவசரத்தில் பிழைதிருத்தம் செய்யாது வழக்கம் போல் அனுப்புகிறேன் மன்னிக்கணும்.

  நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 3. ஜி ஆலாசியம் has left a new comment on your post "திடீர் போரட்டங்கள்":

  இன்றைய நிலையை கட்டுரையிலே தெளிவாக கூறி இருக்கிறீர்கள். முதலாவதாக நல்ல ஆசிரியர்கள் கொண்ட நல்லப் பள்ளிகள் அதுவும் அரசு சார்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கும் முக்கியமாக பள்ளிப் பாடங்கள் மிகவும் கவனமாக அவசியமானதாக அறிவு, ஒழுக்கம், தர்ம சிந்தனையை, மனித நேயத்தை, இன்றைய விஞ்ஞானத்தை வண்ணங்களிலே கண்முன்னமே அதாவது அவைகளை இணையத்திலே பெற்று பள்ளிகளில் வெண் திரைகளிலே ஆசிரியர்களே மாணவர்களிடமே காண்பிக்க வேண்டும். புரியாத வார்த்தைகளால், பார்க்காத ஒருப் பொருளை கருப்பு வேல்லைநிரத்திலே விஞ்ஞானப் பாடங்களைப் படிக்கும் நிலை அறவே போக வேண்டும். இளம் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு அரசு தத்து எடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி அரசுத் துறைகளிலே சேவை செய்ய கட்டாயப் படுத்த வேண்டும்.

  இவைகளைப் போல எண்ணிலா திட்டங்கள் நிறைவென்ற. நான் எப்போதும் சொல்வது போல், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் இன்றைய உலக நடப்பை நன்குணர்ந்து ஜனநாயக அமைப்பில் சில திருத்தங்களை கட்டாயமாகத் திருத்தம் செய்ய சட்டம் இயற்றி... முதலிலே சட்டமன்ற, பாராளுமற்றத்திற்கு செல்லும் பிரதி நிதிகளை புடம் போட்டு எடுக்குமா அளவிலே எழுத்து நேர்முகத் தேர்வுகளை நடத்தி அதிலும் உளவியல் தொடர்பான விசயத்தில் முக்கியத் துவம் தந்து அவர்களுக்கு தகுதி சான்றிதல்களைத் தர வேண்டும் அப்படி தகுதிச் சான்றிதல் பெற்றால் தான் அதன் அடிப்படை தகுதி இருந்தால் தான் அந்த நபர்கள் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட கட்சிகள் பரிந்துரை செய்ய முடியும். இது மிகவும் கட்டாயமாக்கினால் இந்த அரசியல் நிலை மாறும். நல்லம் சமூகம் உருவாக உண்மையிலே பாடுபட விரும்பும் மனிதர்கள் கூடும் இடமாக சட்டமன்றங்களும் ,பாராளு மன்றமும் இருக்கும். அதன் பின்பு எல்லாம் தானாக மாறும். இது சாத்தியமே.

  ஒரு சாதாரணமான அரசு அலுவலருக்கு (மருத்துவமனையிலே துப்புரவு செய்பவருக்கு) கல்வித் தகுதியும், அனுபவமும் வேண்டும் என்று நிர்ணயம் செய்யும் அரசு.. ஒரு எம்.எல்.ஏ ஆகப் போகும் ஒரு நபருக்கு எத்தனைத் தகுதிகளை பார்க்க வேண்டும் அது இல்லையே. முதலில் நல்ல மனிதர்கள் கொண்ட அரசு அமைய வேண்டும் (அதற்கு நீதியும் தேர்தல் ஆணையமும் சரியாக இயங்க வேண்டும்) அப்படி அமையும் பட்சத்தில் அவர்கள் அடிப்படைக் கல்வியிலே ஒழுக்கத்தையும், பொது நலத்தையும், மனித நேயத்தையும் வளர்க்கும் பள்ளிகளை அமைத்து வெறும் பத்து வருடங்களில் சமூகத்தை மாற்றிக் காண்பிப்பார்கள்.

  அப்போது இது போன்ற அநாகரிக செயல்கள், தர்ணா, போராட்டங்கள், பொது சொத்து அழிப்புகள் இல்லாது போகும். இவைகள் யாவும் நடக்கும் என்றே நம்புவோம். அவசரத்தில் பிழைதிருத்தம் செய்யாது வழக்கம் போல் அனுப்புகிறேன் மன்னிக்கணும்.

  ReplyDelete

You can give your comments here