பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, October 24, 2012

அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள கரூர்


இந்த நகரம் திருச்சிக்கு மேற்கே அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் சிவபெருமான் கருணைக்கு ஆளான ஊர். சேர நாட்டின் தலைநகர் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இங்குள்ள புகழ்பெற்ற ஆநிலையப்பர் ஆலயம் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்ற நகரம் கரூர். பழம்பெரும் நகராட்சி எனும் புகழ் வாய்ந்தது இந்த ஊர். திருச்சி மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்த இந்தப் பகுதி 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. சங்க காலத்திலிருந்தே புகழ்வாய்ந்த பகுதியாக விளங்கியது இந்த ஊர். இங்கிருந்து வடக்கில் காவிரி ஆறு ஓடுகிறது.

இந்த ஊரை பழங்காலத்தில் வஞ்சி என்றும் கருவூர் என்றும் அழைப்பர். ஆதிபுரம், திருஆநிலை, பசுபதீச்சரம், கருவைப்பட்டினம், வஞ்சுளாரண்யம், கர்ப்பபுரம், பாஸ்கரபுரம், முடிவழங்கு வீரசோழபுரம், ஆடகமாடம் இப்படிப் பல பெயர்களைச் சொல்லுகிறார்கள். இந்நகரின் மத்தியில் ஓடும் ஆம்பிராவதி (அமராவதி) நதியை ஆண்பொருனை என்று சங்க நூல்கள் கூறுகின்றன. புராணங்களின்படி பிரம்மன் தனது படைப்புத் தொழிலை இங்குதான் தொடங்கினானாம். கருவூர்த்தேவர் எனும் சித்தர் இங்கு தோன்றினார். இவருடைய திருவிசைப்பா பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் காலத்தில் இந்த சித்தர் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

கரூர் நகராட்சி 1874இல் துவக்கப்பட்டது. 1969இல் இது முதல் நிலை நகராட்சியாக ஆனது. 1988இல் தேர்வுநிலை நகராட்சியாக ஆனது. சென்னைக்குத் தென்மேற்கே 371 கி.மீ. தூரத்தில் உள்ளது கரூர். திருச்சி ஈரோடு ரயில் மார்க்கத்திலுள்ளது கரூர் நகரம். இப்போது சேலம் திண்டுக்கல் மார்க்கமும் இங்கு சந்திக்கிறது. கரூர் நகர எல்லைக்குள் 2011 கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் மேல்.

கரூரில் எங்கு திரும்பினாலும் கைத்தறித் தொழில்தான் நிரம்பியிருக்கும். வீட்டுக்கு வீடு தறி. பெட்ஷீட், பெட் ஸ்ப்ரெட், டவல், பனியன் என்று கைத்தறித் தொழில் வளம் பெருக்கும் ஊர். ஜெய்ஹிந்த் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல பழைய கம்பெனிகள் பல காலமாகத் தொழில் புரிந்து வருகின்றன. பின்னி கம்பெனியில் கிடைத்த கருப்பு பிளாங்கெட் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. இவ்வூரிலிருந்து ஏற்றுமதியாகி வெளிநாட்டு செலாவணி ரூ.6000கோடிக்கும் மேல் ஒவ்வோராண்டும் கிடைக்கிறது. கின்னிங் மில், நூல் நூற்பு மில், சாயப்பட்டறைகள் இவைகளில் சுமார் 3 லட்சம் பேர் பயனடைகிறார்கள்.

கரூரில் இருக்கும் வீவிங் தொழிற்சாலைகளை கணக்கில் எடுக்க முடியாத அளவு அதிகம். கரூர் வைஸ்யா வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி ஆகியவற்றின் தலைமையகம் இங்குதான். ஆதி வி.சூரியநாராயணா, ஆதி வி.கந்தசாமி குடும்பத்தினர் வங்கிகள், வியாபாரம் ஆகிய துறைகளில் தலைசிறந்தவர்களாக இருக்கின்றனர். எம்.கே. கே.பி. எனப்படும் எம்.காளியண்ண கவுண்ட, கே.பெரியசாமி கவுண்டர் இவர்களின் கைத்தறி நிலையம் புகழ் பெற்றது. கோபுரம் மார்க் பனியன்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு நகரின் நடுநாயகமாக இருக்கும் பசுபதீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

கரூரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள புகளூரில் பாரி கம்பெனியின் சர்க்கரைத் தொழிற்சாலையும், தமிழக அரசின் காகித ஆலையும் இருக்கிறது. பேருந்துகள் கட்டும் தொழிலும் இங்கு உண்டு. எல்.ஜி.பி. கம்பெனி முதன்முதலில் இந்தத் தொழிலை இங்கு ஆரம்பித்தது. இப்போது பல தொழிற்சாலைகள் பஸ் பாடி கட்டும் தொழிலைச் செய்து வருகின்றன. கரூரை அடுத்த புலியூரில் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது.

இவ்வூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் தவிர, கம்பம் ஆற்றில் விடும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் மாரியம்மன் கோயில், அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், தாந்தோன்றிமலை ஸ்ரீ வெங்கடரமணசுவாமி ஆலயம், வெண்ணை மலை முருகன் ஆலயம், வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் இவை இங்கு புகழ்பெற்ற கோயில்களாகும்.

கரூருக்கு அருகிலுள்ள நெரூரில்தான் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்தத் தலம். இங்கு காவிரிக் கரையில் அவரது சமாதி கோயில் இருக்கிறது. நெரூர் அக்கிரகாரம் அழகான பகுதி. இரு வரிசையில் வீடுகளும், நடுவில் ஒரு வாய்க்காலும் போகிறது. சதாசிவ பிரம்மேதிரர் ஆராதனையின் போது இவ்விரு கரைகளிலும் உட்கார்ந்து பக்தர்கள் உணவு உண்டபின் அந்த இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அரிய காட்சி. பழம்பெரும் ஆயுர்வேத மருத்துவரும், பாலசஞ்சீவினி எனும் குழந்தைகளுக்கான கட்டி வைத்தியத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமசர்மா அவர்களின் மருந்து உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது.

கரூரிலும் சுற்று வட்டாரத்திலும் பல கல்விச்சாலைகள் உள்ளன. பொறியியல், கலைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் போன்ற பல இப்பகுதியில் உண்டு. பழம்பெரும் கரூர் நகரம் வளமும், செல்வமும் நிறைந்த பகுதி.











No comments: