சுதந்திர இந்தியாவைக் குலுக்கிய ஊழல் வழக்குகள்.
இது போன்ற ஊழல்கள் உலகின் வேறு எந்த நாட்டிலாவது நடந்ததுண்டா? அப்படி நடந்திருந்தால் ஊழல்வாதிகளுக்குக் கிடைத்த தண்டனை என்ன? இவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. ஜீப் ஊழல்: 1948இல் நடந்த 80 லட்ச ரூபாய் ஊழல் இது. சுதந்திர இந்தியாவைக் குலுக்கிய முதல் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தவர் அப்போதைய இந்திய ஹை கமிஷணராக லண்டனில் இருந்த திரு வி.கே.கிருஷ்ண மேனன். இடது சாரி சிந்தனையாளரும், ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினையில் நாள் கணக்கில் இந்தியாவின் வாதத்தை முன்வைத்துப் பேசியவருமான இவர் ஜவஹர்லால் நேருவின் அன்பிற்குப் பாத்திரமானவர். இவர் மீது சாட்டப்பட்டக் குற்றச்சாட்டுகள் என்ன வென்றால், இவர் அரசு வழிமுறைகளைப் பின்பற்றாமல் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான ஜீப்களை வாங்க ஒரு அயல் நாட்டு நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுத்தார் என்பதுதான். 1955இல் இந்த ஊழல் வழக்கு முடிவுக்கு வந்தது. பிறகு இவர் நேருவின் அமைச்சரவையில் சேர்ந்தார். நேரு மிகுந்த மன வேதனை அடைந்தது இந்த ஊழலையடுத்துத்தான்.
2. சைக்கிள் ஊழல்: 1951இல் மத்திய அரசில் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட் ராமன் என்பவர் சைக்கிள் இறக்குமதிக்காக ஒரு கம்பெனியிடமிருந்து லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்ட வழக்கு இது.
3. காசி பல்கலைக் கழக பணம் கையாடல் வழக்கு. 50 லட்ச ரூபாய் காசி பல்கலைக் கழகத்தில் அதிகாரிகள் கையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கு. கல்வி நிறுவனமொன்றில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் முதலில் வெளியான வழக்கு இது.
4. முந்த்ரா ஊழல் வழக்கு. 1956 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறை நிதி அமைச்சர் சி.டி.தேஷ்முக் அவர்களால் நாட்டுடமை ஆக்கப்பட்டது. பல நூறு தனியார் கம்பெனிகள் ஆயுள் காப்பீட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்ததை அடுத்து ஊழல்கள் அதிகரித்தது என்பதாலும், ஐந்தாண்டு திட்டங்களுக்காக மத்திய அரசுக்கு நிதி வசதி தேவைப்பட்டதாலும் ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. 1958இல் முந்த்ரா என்பவரின் கம்பெனி முழுகும் நிலைக்குப் போய்விட்டது. அதைக் காப்பாற்ற அந்த கம்பெனியில் ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் 1.2 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி அந்தக் கம்பெனி மூழ்காமல் காப்பாற்றியது. நஷ்டத்தில் இயங்கிய கம்பெனிக்கு எல்.ஐ.சியின் முதலீட்டைச் செய்ததால் இந்த ஊழல் வழக்கை நேருவின் மருமகனும், இந்திராகாந்தியின் கணவருமான ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அப்போது டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதி அமைச்சர். ஹெச்.எம்.படேல் எல்.ஐ.சி.தலைவர். இவர்கள் இருவருக்கும் தலைவலி. ஃபெரோஸ் தன் மருமகனாக இருந்தும், இந்த ஊழலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது நேரு தலையிட்டு நிறுத்த முயற்சி செய்யவில்லை. இந்த ஊழல் காரணமாக பொறுப்பேற்றுக் கொண்டு டி.டி.கே பதவி விலகினார்.
5. தர்ம தேஜா ஊழல் வழக்கு 1960: ஜெயந்த் தர்ம தேஜா என்பவர் மிகப் பெரிய கப்பல் கம்பெனி அதிபர். அவர் தன்னுடைய ஜெயந்தி கப்பல் கம்பெனியைத் தொடங்க 22 கோடி ரூபாய் கடன் பெற்றார். 1960இல் இவர் வாங்கிய கடன் தொகையைத் தன் சொந்த காரியங்களுக்காக எடுத்துக் கொண்டுவிட்டார் என்பது வெளியானதும், இவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
6. பிரதாப் சிங் கைரோன் 1963: பஞ்சாப் மாகாண முதலமைசராக இருந்தவர் பிரதாப் சிங் கைரோன். இவர் நேருவின் அன்பிற்குப் பாத்திரமானவர். பஞ்சாப் மானிலத்தை உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தவர். நல்ல நிர்வாகி, திறமையானவர். இந்தியாவிலேயே ஒரு மானில முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது இந்த பிரதாப் சிங் கைரோன் தான். தன்னுடைய அரசாங்க அதிகாரம், நிர்வாகம் இவற்றின் மூலம் சொந்த லாபம் அடைந்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. இவரது மகன் களும், உறவினர்களும் இவர் பதவியால் பயன்பெற்றார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இவர் பதவி விலகினார். இவர் கொலையாளி ஒருவனால் காரில் சென்று கொண்டிருக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
7. கலிங்கா ஏர்வேஸ்/கலிங்கா டியூப் கம்பெனிகள் ஊழல் 1965. பிஜூ பட்னாயக், இவர் தற்போதைய ஒரிசா முதலமைச்சரின் தந்தையார். நேரு காலத்தில் பாண்டூங் மகா நாட்டுக்கு வந்த சூ என் லாய் எனும் சீன பிரதமரைத் தனி விமானத்தில் ஏற்றிக் கொண்டு பாண்டூங் நகருக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர். நேருவின் அன்பிற்குப் பாத்திரமானவர், நல்ல திறமைசாலி. இவர் முதல்வராக ஒரிசா மானிலத்தில் இருந்த போது தன்னுடைய சொந்த கம்பெனியான கலிங்கா ட்யூப் எனும் நிறுவனத்துக்கு அரசாங்க ஒப்பந்தங்களைத் தந்தார் என்பது குற்றச் சாட்டு.
8. மாருதி ஊழல் வழக்கு 1974: மாருதி கார்கள். இன்று நாட்டில் எல்லா பகுதிகளிலும் மாருதி கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இந்துஸ்தான் கம்பெனி தயாரித்த அம்பாசிடர் காருக்கு அடுத்த பெருமளவிலான கார் உற்பத்திக்காக ஹரியானா மானிலத்தில் தொடங்கப்பட்டது மாருதி உத்யோக் எனும் கார் தயாரிக்கும் கம்பெனி. இந்த கம்பெனியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி இருந்தார். கம்பெனியில் சஞ்சய் காந்தி சம்பந்தப்பட்டிருந்த காரணத்தால் இந்தக் கம்பெனிக்கு லைசன்ஸ் வழங்கியதாகவும், ஹரியான அரசு தனிப்பட்ட சலுகைகளை வழங்கியது, நிலங்களை ஒதுக்கியது என்பது குற்றச்சாட்டு. பின்னர் நாடாளுமன்றத்தில் சூடான விவாதங்களும் இது குறித்த எதிர் கட்சி பிரசாரமும் கடுமையாக நடந்தன. சஞ்சய் காந்தி காரமாக விவாதம் நடத்தியதும் இந்த வழக்கில்தான்.
9. மாதவ்சிங் சோலங்கி இரகசிய பேரம் 1992: மாதவ்சிங் சோலங்கி என்பவர் குஜராத் முதல் அமைச்சராக காங்கிரசில் இருந்தவர். பின்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரானவர். இவர் காலத்தில் உலக பொருளாதார விஷயங்களுக்கான மகானாடு ஒன்று நடந்தது. அதில் இவர் இரகசியமாக ஒரு துண்டுச் சீட்டில் அருகிலிருந்த சுவிஸ் நாட்டுப் பிரதி நிதியிடம் அவர்கள் நாட்டு அரசாங்கம் ஃபோபார்ஸ் ஊழல் பற்றி விசாரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று எழுதிக் கொடுத்தார் என்ற குற்றச் சாட்டில் மாட்டிக் கொண்டார். அந்த பிரச்சனை வளர்ந்து பெரிதானது "இந்தியா டுடே" எனும் பத்திரிகை வெளியிட்ட செய்தியினால். பின்னர் அவர் பதவி விலக நேர்ந்தது. ஃபோபார்ஸ் ஊழலில் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.
10. ஹாங்காங் எண்ணெய் கம்பெனி ஊழல் 1976. குவோ ஆயில் கம்பெனி என்பது ஹாங்காங்கில் இருந்த ஒரு எண்ணெய் நிறுவனம். அந்தக் கம்பெனி 2.2. கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து அவர்களிடமிருந்து இந்திய ஆயில் கார்ப்பொரேஷன் பெட்ரோல் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது என்ற புகார் எழுந்தது.
11. ஏ.ஆர்.அந்துலே ஊழல் வழக்கு 1981: ஏ.ஆர்.அந்துலே மகாராஷ்டிர அரசின் முதல் அமைச்சராகவும், மத்திய அரசில் அங்கம் வகித்தவராகவும் இருந்தவர். இவர் மகாராஷ்டிர முதலமைசராக இருந்த காலத்தில் பெரிய வர்த்தக நிறுவனங்களிடமிருந்தெல்லாம் நிதி திரட்டித் தனது சொந்த அறக்கட்டளையில் வைத்துக் கொண்டார் என்று "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தி வெளியிட்டு அந்துலேவை சிக்கலில் மாட்டிவைத்தது. பிரபலமாக இந்த வழக்கு பேசப்பட்டது.
12. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழல் 1987. 'ஹெஸ் டி டபிள்யு எனும் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் கம்பெனியில் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதற்காக ரூ. 20 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு நடந்தது. முடிவில் அந்த வழக்கு ஜெர்மானிய கம்பெனிக்குச் சாதகமாக முடிவாகியது.
13. 'போபார்ஸ்' பீரங்கி ஊழல் வழக்கு 1987: அதே 1987ஆம் ஆன்டில் இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை சம்பந்தப்படுத்தி எழுந்த ஊழல் குற்றச்சாட்டு இது. போபார்ஸ் என்பது ஒரு சுவிஸர்லாந்து நாட்டு பீரங்கி உற்பத்தி கம்பெனி. இந்த பீரங்கி அதிக தூரம் சென்று குண்டு களைப் பொழியும் பீரங்கி என்பதால் இவற்றை இந்திய ராணுவத்துக்காக வாங்க முடிவாகியது. இது குறித்துப் பின்னர் சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த பீரங்கிகளை வாங்க சில இடைத்தரகர்கள் ஆதாயம் அடைந்தார்கள் எனவும், அவர்களுக்கு போபார்ஸ் கம்பெனி தரகுப் பணமாக ரூ.64 கோடி கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. அதில் இத்தாலியர் குத்ரோச்சி உட்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பிரதமர் ராஜிவ் காந்தியின் பெயரையும் சிலர் குறிப்பிட்டுக் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். நெடு நாட்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்தக் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டாலும் இறுதியில் அவை எவையும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இத்தாலியர் குத்ரோச்சியும் இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டதோடு எந்தவிதமான சேதமும் இல்லாமல் அவரது முடக்கப்பட்ட வங்கிப் பணத்தையும் எடுத்துக் கொள்ள இந்திய அரசு அனுமதித்து அவரை சுதந்திரமாகப் போகவிட்டுவிட்டது என்பதுதான் இந்த எபிசோடின் முடிவு.
தமிழ் நாட்டிலும் காங்கிரசுக்கு எதிராக தேர்தலில் எங்கு பார்த்தாலும் போபர்ஸ் பீரங்கி கட் அவுட்களை வைத்து பிரச்சாரம் நடைபெற்றது. மத்தியில் ராஜிவ் காந்தி தோற்று, வி.பி.சிங் பிரதமராகவும் இந்த ஊழல் வழக்கு வழிவகுத்தது.
14. செயின்ட் கிட்ஸ் தீவு போலி ஆவண வழக்கு 1989: போபர்ஸ் வழக்கை ஊதி பெரிதாக்கி ஆதாயம் கண்டவர்களில் வி.பி. சிங்கும் ஒருவர். பின்னர் இந்திய பிரதமர் ஆனவர். அவருடைய பெயரைக் கெடுக்க வேன்டுமெனும் நோக்கத்துடன் இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதுதான் செயின்ட் கிட்ஸ் தீவு போலி ஆவண குற்றச்சாட்டு. வி.பி.சிங்கின் மகன் அஜய் சிங்கின் செயின்ட் கிட்ஸ் தீவில் ரூ.21 மிலியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருப்பதாக எழுந்த இந்தக் குற்றச்சாட்டும் முடிவுக்கு வந்தது.
15. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான ஊழல் 1990: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கம்பெனி இந்திய அரசால் ஏற்று நடத்தப்படும் நாட்டுடமையாக்கப்பட்ட கம்பெனி. இதில் போயிங் விமானங்களுக்கு பதிலாக ஏர்பஸ் எனப்படும் விமான ரகங்களை வாங்க ரூ. 2000 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் பொடப்பட்டது. இந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. காரணம் ஆ 320 எனும் ரக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டதுதான். அதன் விளைவாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வாரத்துக்கு 2.5.கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.
16. ஹர்ஷத் மேத்தா ஷேர் மார்க்கட் ஊழல் 1992: மும்பை ஷேர் மார்க்கெட்டில் அதீதமான சாமர்த்தியங்களைக் கையாண்டு தனது திறமையால் பண முதலீடு இல்லாமலே வங்கிகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் முதலீடு செய்து பொருளாதாரத்தைப் பூதாகாரமாக்கி உள்ளே ஒன்றுமில்லாததால் அவை நொறுங்கித் தளர்ந்து பங்குச் சந்தை அழியும் நிலைக்குக் கொண்டு வந்த ஹர்ஷத் மேத்தா செய்த ஊழல் இது. இந்த மூளை பலம் கொண்ட, பண பலம் இல்லாத சாமர்த்தியசாலியால் இந்தய பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.5000 கோடி. இந்த சாமர்த்தியசாலி சிறையில் அடைக்கப்பட்டார்.
17. கல்பனாத் ராயின் சர்க்கரை இறக்குமதி ஊழல் 1994: கல்பனாத் ராய் என்பவர் மத்திய அரசில் உணவு அமைச்சராக இருந்தவர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் இவர். சர்க்கரை இறக்குமதிக்கு இவர் உத்தரவிட்டார். சந்தை விலைக்கும் அதிகமான விலையில் இவர் சர்க்கரையை வெளி நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தார் என்பது குற்றச்சாட்டு. இதனால் இந்திய அரசுக்கு சுமார் 650 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் பதவி விலக நேர்ந்தது.
18. இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் ஊழல் வழக்கு 1992: இந்தியன் வங்கியின் சேர்மனாக பல காலம் இருந்த கோபாலகிருஷ்ணன் வங்கித் துறையிலும் சரி, பொது வாழ்விலும் வல்ல செல்வாக்குப் பெற்றவர். அரசியல் தொடர்புகளும் உடையவர். வங்கியின் வளர்ச்சியிலும் அதிக கவனம் எடுத்துக் கொண்டு இந்தியன் வங்கியை வளர்க்கப் பாடுபட்டவர். இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இவர் காலத்தில் சுமார் 1300 கோடி ரூபாய் வரையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக தென் பகுதியில் சிறிய மற்றும் குறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் இவர்களுக்குக் கொடுத்த கடன் தொகை திரும்பச் செலுத்தப்படாமல் இருந்த காரணத்தால் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
19. தொலைதொடர்புத் துறை ஊழல் 1996. மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் சுக்ராம் என்பவர். இவர் மீது கூறப்பட்டக் குற்றச்சாட்டு, இவர் ஒரு டெலிபோன் தொழிலதிபரிடமிருந்து அரசுக்கு டெலிபோன் சப்ளை செய்யும் காண்ட்டிராக்ட் கொடுக்க லஞ்சம் வாங்கிக் கொண்டு கொடுத்தார், அந்த தனியார் டெலிபோன் தொழிற்சாலைக்குச் சலுகைகள் வழங்கினார் என்பது குற்றச்சாட்டு. அவரது வீட்டை சோதனையிட்ட போது சுமார் பத்து லட்சம் ரூபாய் அளவுக்கு சிறிய மதிப்பு கரன்சி நோட்டுகள் கிடைத்தன. இது சம்பந்தமாக ரூனு கோஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தொலைத் தொடர்புத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். இவர் மீது லஞ்ச ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறுதியில் அவர் தண்டனை பெற்றார். அமைச்சர் சுக்ராமும் பின்னர் தண்டனை அடைந்தார்.
கரள லவ்லின் ஊழல்: கேரளப் பிரதேச மின் வாரியமும் லவ்லின் கம்பெனியும் ஒரு புரிதல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது 1995 ஆகஸ்ட்டில். இந்த ஒப்பந்தத்தின்படி கேரள மின்வாரியத்தின் புனரமைப்புக்காக கனடாவின் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்தும், கனடா நாட்டின் சர்வதேச வளர்ச்சி நிதியகத்திடமிருந்தும், நிதியுதவியை லவ்லின் ஏற்பாடு செய்து தரவேண்டும். இதன்படி கேரள மின்வாரியம் புனரமைப்பு தேவைப்படாத நிலையில் இருந்த பள்ளிவாசல் மின் உற்பத்தி நிலையத்துக்கும், வழிகாட்டுதல் நெறிகளைப் புறந்தள்ளிவிட்டு நிதியுதவியை நல்ல நிலையில் இருந்த அந்த மின் உற்பத்தி நிலையத்துக்குச் செய்யதது. இந்த ஊழல் குறித்த பெரும் சர்ச்சை உண்டாயிற்று.
21.கேடன் பாரேக் ஊழல்: பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்ட சில கம்பெனிகள் ஸ்டாக் மார்க்கெட்டிலிருந்து நிதி பெறுவதற்காக சில இடைத்தரகர்களைக் கொண்டு பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்திக் கொள்வது எப்போதும் நடக்கும் காரியம்தான். அப்படிப்பட்ட இடைத் தரகரான கேடன் பாரேக் இடைத் தர்கர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, அதில் அலகாபாத், கல்கத்தா ஆகிய பங்கு மார்க்கெட்டுகளை இணைத்து இதுபோன்ற பேரங்களில் ஈடுபட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் இல்லாத பெயர்களிலும், மும்பை போன்ற பெரு நகரங்களில் வாழும் சில சாதாரண மக்கள் பெயரிலும் பங்குகளை வாங்கியதாகப் பொய்க் கணக்கும் காட்டி வந்தார். கேட்டனின் புகழும், பெயரும் நாளுக்கு நாள் பங்கு சந்தையில் வளரத் தொடங்கியது. 1999-2000 காலகட்டத்தில் இவர் சுமார் பத்து கம்பெனிகளுடைய பங்குகளை உயர்வதற்கு வழிவகைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டார். இந்த பங்குச் சந்தை ஊழல் வெளிச்சத்துக்கு வந்து கேட்டன் மீது விசாரணை நடத்தப்பட்டது.
22. டெல்ஜியின் முத்திரைத் தாள் மோசடி. 1991இல் மும்பை காவல்துறை டெல்ஜி என்பவரை மோசடிக் குற்றச் சாட்டு சம்பந்தமாகக் கைது செய்தது. அவரைப் பற்றி விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காலத்தில் இவர் குற்றச் செயல்களைச் செய்வதில் திறமை அடைந்தார். அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனபின் 1994இல் இவர் மத்திய அரசிடமிருந்து முத்திரைத் தாள் விற்பனை செய்யும் உரிமம் பெற்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் அச்சடித்த முத்திரைத் தாளைப் போலவே இவர் தனியாக போலி முத்திரைத் தாள்களை அச்சடிக்கத் தொடங்கினார். அந்த போலி முத்திரைத் தாள்களை விற்பனை செய்ய நாடெங்கும் 300க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்தார். இந்த முகவர்களை உண்மையான முத்திரைத் தாளுக்குப் பதிலாக மொத்தமாக இந்த போலித் தாள்களை விற்று கொழுத்த லாபம் சம்பாதித்து வந்தனர். இதன் மூலம் டெல்ஜிக்கும் ஏராளமான கொள்ளை வருமானம் கிடைத்தது. இப்படி முகவர்களாக இருந்தவர்களில் சில வங்கிகளும் இன்சூரன்ஸ் கம்பெனிகளும், பங்குச் சந்தை வர்த்தகர்களும் அடங்குவர். இவரது மாத வருமானம் இந்த மோசடியினால் ரூ.202 கோடிக்கும் மேல் என்று கணக்கிடப்பட்டது. டெல்ஜியும் இவரோடு சேர்ந்து ஊழலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து தீர்ப்பில் தண்டனையும் பெற்றனர்.
23. நட்வர் சிங்கும் அவர் மகன் ஜகத் சிங்கும் ஈராக்குடனான உணவுக்கு எண்ணெய் ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு நட்வர் சிங்க் பதவி இழந்தார். இவர் இந்திரா காந்தி அம்மையார் பதவியில் இருந்த காலத்தில் மிக்க செல்வாக்குதன் திகழ்ந்தவர் என்பதை நாடறியும்.
24. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: ரூ. 1,76,000 கோடி மதிப்புள்ள 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் இந்த நாட்டையே உலுக்கிய ஊழல். இந்திய நாட்டில் நடைபெற்ற எல்லா ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மிகப் பெரிய ஊழல் இது. ஆனால் மலை விழுங்கி மகாதேவங்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் சிலர் குறிப்பாக கபில் சிபல் போன்றோர் இந்த விவகாரத்தால் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று கூசாமல் சொல்லி வந்ததைக் கேட்டு இந்த நாடே சிரித்தது. இந்த 2ஜி விவகாரம் வெளிவந்து சிறிது சிறிதாக இதன் மிகப் பெரும் பரிமாணம் வெளியானபோது சற்றும் இது குறித்துக் கவலைப் படாமலும், இது ஒன்றுமே இல்லை வெறும் புரளி என்பது போல சம்பந்தப்பட்டவர்கள் நடந்து கொண்டார்கள். இந்த ஊழலின் ஆணிவேர் எங்கெங்கெல்லாம் ஊடுறுவியிருக்கிறது என்பது வெளியானபோது நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். சுப்பிரமணியம் சுவாமியின் விடாமுயற்சி காரணமாக இந்த ஊழல் வெடித்து வெளியானபோது தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அ.ராசா ராஜினாமா செய்ய நேர்ந்தது. அதற்கு முன்பிருந்த அமைச்சர் தயானிதி மாறன் இந்தப் புகாரை முதன் முத்லில் வெளியிட்டபோது நாடு அத்தனை கவனமாக இதைப் பொருட்படுத்தவில்லை. நாட்டுக்கு 1,76,000 கோடி நஷ்டம் ஏற்படுத்தியமைக்காக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இந்த வழக்கு நடந்தது. இந்த ஊழலை விசாரிக்க பார்லிமெண்ட் கூட்டுக் குழு அமைக்கக் கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தைப் பல நாட்கள் முடக்கிய பின் ஒரு வழியாக கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அதன் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை இப்போது பார்க்கிறோம். தொலைத் தொடர்புக்கான ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் எந்தவிதமான நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் சகட்டு மேனிக்கு முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்றும், 2001 விலைக்கே 2007லும் விற்கப்பட்டதில் இப்படிப்பட்ட இமாலய இழப்பு ஏற்பட்டதாக பத்திரிகைகள், ஊடகங்கள் பகலும் இரவுமாகக் கூச்சலிட்டும், அரசாங்கம் சற்றும் அசைந்து கொடுக்காத ஊழல் இது. என்ன நடக்கப் போகிறது? நீதி என்ன சொல்லப் போகிறது? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
25. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு: ரூ.8000 கோடி ஊழல். இந்தியாவில் கம்பெனி ஒன்று நடத்திய ஊழலில் பெரிய ஊழல் இது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரான ராமலிங்க ராஜு தனது கம்பெனி தலைவர் பதவியை இதனால் இழக்க நேர்ந்தது. கணக்கு வழக்கில் இவர் குளறுபடி செய்ததாகக் குற்றச் சாட்டு. இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.
26. ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்ட கருப்புப் பண ஊழல்: இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தின் அளவு 21 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஒரு அமெரிக்க புலனாய்வு மையத்தின் அறிக்கையின்படி இந்த கருப்புப் பணம் இந்திய முதலாளிகள், அரசியல் வாதிகள் ஆகியோரிடமிருந்து வரி ஏய்ப்பு செய்தும், ஊழல் புரிந்தும், லஞ்சம் வாங்கியும், இடைத் தரகு செய்தும், நியாயத்துக்குப் புறம்பான குற்றச் செயல்களைப் புரிந்தும் சம்பாதித்த பணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த கருப்புப் பண விவரங்களைக் கேட்டுப் பெறவும், அப்படி ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவும் இந்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்காததோடு, கிடைத்த விவரங்களை வெளியிடவும் மறுத்து வருவதுதான் வருத்தமளிக்கும் செய்தி. என்று வெளிவரும் இந்தக் கருப்பு, ஊழல் லஞ்சப் பணம். என்று மாறும் இந்திய சூழ்னிலை.
இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் இப்போது வெளிவந்திருக்கிறது. இதில் ஈடுபட்டவர்கள் யார் எவர் என்பது பற்றி மேல் விவரங்கள் வெளியாகும்போது இந்த ஊழல் பட்டியலில் சேர்க்கப்படும். இப்போதைக்கு இவ்வளவு ஊழல்கள் போதும், நாம் ஜீரணிப்பதற்கு. வாழ்க இந்திய ஜன நாயகம்! வாழ்க இந்தியக் குரியரசு! ஜெய் ஹிந்த்!!
3 comments:
யரையும் மறைக்காமல், எதையும் பாராபட்சம் கட்டாமல் வெளிவந்த ஊழல் கட்டுரை நல்ல வெளிச்சம். ,உலகுக்கே ஊழல் செய்ய இந்தியா தான் வழி காட்டியோ என்றே தோன்றுகிறது.
சீனர்கள் அடிக்கடி ஒன்று சொல்வார்கள், உலகில் புதிதாக ஒரு மண்திட்டு தோன்றினால் அங்கும் சீனனும், இந்தியனும் இருப்பான் என்று. இது ஏன் என்றால் உலகின் அத்தனை நாடுகளிலும் இந்த இருவரும் எப்படியும் குடியேறி இருப்பார்கள். இதில் சீனர் தன் அளவில் சிவப்பு சித்தாந்ததோடு இருப்பார்கள், நம்மவர்கள் கை அரிப்பு சித்தாந்தப்படி இருக்கிறார்கள்.
ஊழல்களின் பட்டியலை ஆவணப் படுத்தியது நல்லதுதான்= இருவருக்குமே!
ஊழல் எதிர்ப்புப் போராளிகளுக்கும்;ஊழல் செய்ய நினைப்போருக்கும்.ஆம் ஊழல் செய்ய நினப்போர் தன் முன்னோடிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு மேலும்
சிறப்பாக ஊழலில் ஈடுபடலாம்.
ஊழல்களின் பட்டியலை ஆவணப் படுத்தியது நல்லதுதான்= இருவருக்குமே!
ஊழல் எதிர்ப்புப் போராளிகளுக்கும்;ஊழல் செய்ய நினைப்போருக்கும்.ஆம் ஊழல் செய்ய நினப்போர் தன் முன்னோடிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு மேலும்
சிறப்பாக ஊழலில் ஈடுபடலாம்.
Post a Comment