பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 23, 2012

காவிரிக் கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறை


காவிரியில் துலாகட்டம்

மயிலாடுதுறை, மாயூரம், மாயவரம் என்றெல்லாம் புகழ்பெற்ற தமிழகத்தின் காவிரிக் கரையில் அமைந்துள்ள இந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். தென்னாட்டின் காசி எனப் புகழ் பெற்ற ஊர். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலாஸ்னானமும், மாதம் முழுதும் மயூர நாதசுவாமி நகர்வலம் வந்து 'தீர்த்தம்' வழங்கும் விழாவும் இனிமையானவை. இவ்வூர் அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்திலும், தற்போது பிரிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்திலும், சென்னை - ராமேஸ்வரம் இடையிலான ரயில்வழியின் மெயின் லைன் என வழங்கப்படும் வழித்தடத்திலும் உள்ள நகரம். இந்த ஊர் பற்றிய ஒரு சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மயூரநாதசுவாமி ஆலய கோபுரம்

சென்னைக்குத் தெற்கே 280 கி.மீ. தூரத்தில் மெயின் லைனில் உள்ளது இவ்வூர். இவ்வூருக்குக் கிழக்கே சில கல் தொலைவில் உள்ளதுதான் வரலாற்றுப் புகழ்மிக்க தரங்கம்பாடி. முதல் அச்சு இயந்திரம் கொண்டுவரப்பட்டு, டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஊர் தரங்கம்பாடி. தரங்கம் என்றால் அலை, இவ்வூர் கடலில் எழும் அலைகளின் ஓசையையொட்டி இப்பெயர் பெற்றது இவ்வூர்.
காவிரிக்கரையில் வேதபாடசாலை

அட்டவீரட்டான சிவத் தலங்களில் ஒன்றான திருக்கடவூர் இங்குதான் உள்ளது. மார்க்கண்டன் எனும் சிறுவனைக் காக்க எமனைச் சிவபெருமான் தன் காலால் உதைத்துக் கொன்ற தலம் இது.
அமிர்தகடேஸ்வரர் என்பது சுவாமியின் பெயர், அபிராமியம்மை அம்பாளின் திரு நாமம்.
துலாகட்டம் தூரத்துக் காட்சி

மயிலாடுதுறை இப்போது ஒரு பாராளுமன்ற தொகுதியாக உள்ளது. மணி சங்கர் ஐயர் அவர்கள் இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்று இந்தத் தொகுதிக்குப் பல நற்பணிகளை செய்துள்ளார். மக்களின் அன்பையும் பெற்றிருந்தார்.
வரலாற்றுப் புகழ்பெற்ற நகராட்சி மே.நி.பள்ளி

மயூரம் என்றால் மயில். இந்த ஊரின் தல புராணம் அம்பாள் மயிலாக இருந்து தவம் புரிந்ததாகக் கூறுவதால், அந்த மயில் ஆடும் காவிரிக் கரை என்பதால் இவ்வூர் மயிலாடுதுறை என வழங்கப் படுகிறது. ஆடுதுறை என்றும், குரங்காடுதுறை என்றும் ஊர்கள் உள்ளன. தட்ச யக்ஞம் எனும் தட்சன் செய்த யாகம் குறித்தும், அதற்கு அவன் தன் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. தட்சனின் மகள் தாட்சாயினியை யாகத்துக்குப் போக சிவன் அனுமதிக்கவில்லை. தன்னை அவமதித்த அந்த தட்சனின் யாகத்தை நடைபெறாமல் தடுக்க சிவன் வீரபத்திரன் எனும் சிறு தேவதையை அனுப்புகிறார். கணவனின் ஆணையை மீறி தாட்சாயினி தந்தை செய்த யாகத்துக்குச் சென்று விடுகிறாள்.
மயிலாடுதுறை ரயில் நிலையம்

சிவனால் அனுப்பப்பட்ட வீரபத்திரன் தட்சனின் யாகத்தைக் கலைக்கும் போது ஒரு மயில் அடிபட்டுவிடுகிறது. அது ஓடி தாட்சாயனியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறது. எல்லாம் முடிந்தபின் கணவனின் ஆணையை மீறியதற்காக தாட்சாயினி வருந்துகிறாள். பாவ விமோசனம் தேடி தீ மூட்டி அதில் இறங்குகிறாள். அப்படி தீயில் மாயும் முன்பாக தன்னிடம் அடைக்கலமடைந்த அந்த மயிலை நினைக்கிறாள். அதனால் தாட்சாயினி ஒரு மயிலாகப் பிறக்கிறாள்.
நகரத்தின் நடுவில் மணிக்கூண்டு

மயிலாகப் பிறந்த தாட்சாயினி பலகாலம் சிவனை நோக்கித் தவம் புரிகிறாள். அவள் தவத்தை ஏற்று சிவபெருமான் பார்வதியை மீண்டும் ஏற்றுக் கொள்கிறார். பார்வதி தேவி மயிலாக இருந்து சிவனை நோக்கித் தவம் செய்த இடமாதலின் இவ்வூர் மயூரம் என ஆயிற்று. இவ்வூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் மயூர நாதர் என்றும் பெயர் பெருகிறார். அன்னைக்கு அபயப்பிரதாம்பாள், அபயாம்பிகா,அஞ்சல நாயகி, அஞ்சலை என்றெல்லாம் பெயர். மயிலுக்கு அபயம் கொடுத்ததால் இந்தப் பெயர்கள் வந்தன.
ரயில் நிலைய நடைமேடை ஒரு காட்சி

மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்த ஊரில் வசித்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயர் இவ்வூரில் மேற்படி ஆசானிடம் தமிழ் பயின்றார். மாயூரத்தில் முன்சீபாக இருந்த வேதனாயகம் பிள்ளை இவ்வூர்க்காரர். பிரதாபமுதலியார் சரித்திரம் எனும் முதல் தமிழ் புதினம் படைத்தவர் இவர். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி இவ்வூருக்கருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர், மாயூரம் முனிசிபல் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர். கர்னாடக இசை வித்வான் மதுரை மணி ஐயர் இவ்வூரில் பல காலம் வசித்தவர். மாயூரம் ராஜம் ஐயர், மாயூரம் கோவிந்தராஜப் பிள்ளை ஆகியோர் இவ்வூர்க்காரர்கள் என்பதில் இசைப்பிரியர்களுக்குப் பெருமை.

தமிழிசைக்குப் பெருமை சேர்த்தவரும், நந்தனார் சரித்திரம் படைத்தவருமான கோபாலகிருஷ்ண பாரதியார் வசித்த ஊர். இவ்வூருக்கு அருகிலுள்ள ஆனைதாண்டவபுரம் என்பது இவர் ஊர். சைவ மடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ள ஊர் மாயூரம். இந்த ஊரின் ஒரு பகுதியும், ரயில் நிலையம் அமைந்துள்ள கூறை நாடு எனும் பகுதி கைத்தறி சேலைகளுக்குப் பெயர் பெற்ற இடம். ஐப்பசி மாதத்தில் இவ்வூர் காவிரியில் கங்கையும் சேர்ந்து வருவதாக புராணங்கள் சொல்வதால் அந்த மாதம் முழுவதும் காவிரி ஸ்னானம் புனிதமானது.
காவிரியின் வடகரை தென்கரையை இணைக்கும் நடைபாலம்

இவ்வூரில் உள்ள கல்வித் தாபனங்கள் பெருமை வாய்ந்தவை. தரமானவை. மாயூரம் அன்பனாதபுரம்  வகையறா குடும்பத்தாரின் ஏ.வி.சி.கல்லூரி, பொறியியல் கல்லூரி, மாயூரம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி, தேசிய மேல் நிலைப் பள்ளி, அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளி, செயிண்ட் பால் மேல் நிலைப் பள்ளி முதலான கல்வி நிலையங்களும், தருமபுரம் ஆதீனம் கல்லூரி, தமிழ்க் கல்லூரி முதலியனவையும் சிறப்பான இடம் பெற்றவை.
திருவிழந்தூர் பெருமாள் கோயில்

இவ்வூரை அடுத்த திருவிழந்தூர் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு பள்ளிகொண்ட பெருமானை தரிசிக்க வெகு தூரங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருவார்கள். ஐப்பசி மாதம் இந்த ஆலயத்திலும் மாதம் முழுதும் திருவிழா நடைபெறும். ஏவிசி. திருமண மண்டபம், ஏவிசி சத்திரங்கள் அனைத்தும் இப்பகுதியில் உள்ளன.

மாயூரம் எனப் பெயர் வரக் காரணமான மயில்

மாயூரத்துக் காரர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது என்ன தெரியுமா? "ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்பது. அது எல்லா காலத்துக்கும் பொருந்துமா, அல்லது 'அந்த'க் காலத்துப் பழமொழியா தெரியாது. எனினும் மாயூரத்துக் காரர்களுக்குத் தங்களைப் பற்றிய பெருமை எந்தக் காலத்திலும் மாறாமல் இருக்கும் என்பது துணிபு.

No comments:

Post a Comment

You can give your comments here