பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 21

                               வரலாறு பேசும் பயணம் பகுதி 21
ஏலாக்குறிச்சி.     

தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து வடக்குத் திசையில் சென்றால் திருமானூர் கொள்ளிட ஆற்றுப் பாலம் குறுக்கிடும். அதனையும் கடந்து அரியலூர் செல்லும் பாதையில் சென்றால் வடபுறத்தில் ஒரு பெரிய வளைவு காணப்படும், அதுதான் ஏலாக்குறிச்சி செல்லும் பாதை. இந்த ஏலாக்குறிச்சி அரியலூர் வட்டத்தினுள் அமைந்த ஒரு கிராமம். கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இதுவொரு புண்ணியத் தலம். இங்குதான் கன்னி மேரிக்கு ஒரு மாபெரும் ஆலயம் 1711இல் வீரமாமுனிவர் எனும் தமிழ்ப்பெயர் கொண்ட கத்தோலிக்க பிஷப் காஸ்டான்சோ பெஸ்கி என்பவரால் கட்டப்பட்டது. பெரம்பலூரிலிருந்து மானாமதுரை நெடுஞ்சாலையில் வந்தால் 65 கி.மீ தூரத்தில் இருக்கிறது இந்த ஊர்.

இந்த ஏலாக்குறிச்சியின் முன்னாளைய பெயர் திருக்காவலூர். அரியலூரிலிருந்து இங்கு வர 25 கி.மீ.பயணம் வரவேண்டும். இங்குள்ள மேரியின் பெயர் அடைக்கலமாதா, சர்ச்சுக்கு அடைக்கலமாதா ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் இந்த அடைக்கலமாதா தேவாலயத்தில் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும். எங்கெங்கிருந்தெல்லாமோ கிறிஸ்தவர்கள் இங்கு வந்து கூடுவார்கள். தஞ்சையில் இயங்கும் சில பெரிய காத்தலிக் நிறுவனங்களிலிருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு தொண்டாற்றுவதற்கென்று வாலன்டியர்கள் வந்து இலவச பணியாற்றுவது போற்றற்குரியது.

திருவையாற்றிலிருந்து பாரதி இயக்கத்தினர் அங்கு சென்று வாகனங்களை நிறுத்தியதும் யாரும் இவர்களைத் தடுக்கவில்லை. நுழைவாயிலில் இருந்த அலுவலக வாயிலில் ஒரு பாதிரியார் நின்று கொண்டிருந்தார். அவரிடம் பாரதி இயக்கத்தினர் வரலாறு பேசும் பயணத்திற்காக இந்த அடைக்கலமாதா தேவாலயம், அதன் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வந்திருப்பதாகச் சொன்னதும், தான் அங்கு புதியவர் என்றும் பழைய சாமி உள்ளே இருப்பதாகச் சொன்னதும், அவரைத் தேடி உள்ளே சென்றார்கள். அங்கு பழைய பாதிரியார் வந்தவர்களை அன்போடு வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்து அந்த ஆலயத்தின் வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் சில நூல்களையும், ஒலிப்பேழையொன்றையும் இவர்களுக்கு வழங்கி இவர்கள் வருகைக்காக மகிழ்ச்சியடைவதாகச் சொல்லி அன்போடு வழியனுப்பினார்.

பாரதி இயக்கத்தினர் அந்த தேவாலய வளாகத்தினுள் நுழைந்து எல்லா இடங்களையும் பார்த்து தேவாலயத்தின் உட்புறம் சென்று அந்த அமைதியான சூழ்நிலையில் அங்கு மக்கள் அமர்ந்து கண்மூடி தியானம் செய்வதைக் கண்டு அமைதியாக வெளிவந்தார்கள். சுற்றிலும் கிராமப்புற சூழ்நிலை, தேவாலயத்தின் உட்புறம் அமைதி, தூய்மை, அன்பு அனைத்தும் நிலவுவதைக் காண முடிந்தது.

காமரசவல்லி.  

ஏலாக்குறிச்சியிலிருந்து கிராமத்துப் பாதை வழியாக மிகவும் சிரமத்துக்கிடையே பெரம்பலூர் நோக்கிப் பயணப்பட்டவர்கள் வழியில் காமரசவல்லி எனும் கிராமத்தை அடைந்தனர். இந்த காமரசவல்லி பெயரே இவர்களைச் சுண்டி இழுத்து விட்டது. அது என்ன பெயர்? காமரசவல்லி? அழகான கிராம சூழ்நிலையில் மிக அமைதியாகத் தனித்து நின்றது காமரசவல்லி சிவாலயம்.

இந்த ஆலயத்து இறைவன் பெயர் கார்கோட்டீஸ்வரர், அம்பாள் பாலாம்பிகை. இந்த ஆலயத்தில் கார்க்கோடகன், மன்மதன், ரதி ஆகியோர் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசர் சுவாமிகள் இங்கு வந்து இவ்வாலயத்தில் தேவாரம் பாடியிருப்பதாகச் சொன்னார்கள், அந்த தேவாரப் பாடல் ஆலயத்துச் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது.
இவ்வாலயத்து ஈசரை காதல் தேவதையான மன்மதனும் காதல் தலைவி ரதியும் வழிபட்டதாகத் தல வரலாறு இருக்கிறது. காமனும் ரதியும் வணங்கி வழிபட்டதால் இவ்வூர் காமரதி வல்லி என்று பெயர் வந்து பின்னர் அது திரிந்து காமரசவல்லியாக மாறியிருக்கிறது. கார்க்கோடகன் என்பவன் எட்டு தெய்வீக நாகங்களில் ஒன்று. அந்த தெய்வீக நாகமான கார்க்கோடகன் வழிபட்ட தலம் இது. அவன் வழிபட்டதால் இந்த ஈசருக்கு கார்க்கோட்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததாம். அந்த சின்னஞ்சிறு சிவாலயத்தினுள் சென்று வழிபட்டதும் அங்குள்ள சிவாச்சாரியார் அவ்வூரின் தல புராணத்தை விளக்கி இங்கு வழிபட்டுச் செல்வோர் அடையும் நலங்களைப் பற்றி விரிவாகச் சொன்னதும் பாரதி இயக்கத்தினர் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்.

சாத்தனூர் (பெரம்பலூர்)  
 
சாத்தனூர் என்கிற பெயரில் ஏராளமான கிராமங்கள் பரவிக் கிடக்கின்றன. நாம் சொல்லும் இந்த சாத்தனூர் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தாலுகாவில் கொளக்காநத்தம் எனும் ஊருக்கருகிலுள்ளது. இவ்வூரில் அப்படியெல்ல அதிசயம் என்றுதான் அங்கு காட்டுப் பாதை போன்றிருந்த வழியாக புதர்களுக்கிடையே செல்லும்போது தோன்றியது. புதர்களுக்கு இடையே ஒரு பெரிய இடைவெளி. அங்கு ஒருசில கட்டடங்களும் அருகில் அரசு பாதுகாக்கும் சில பழங்காலத்து காட்சிப் பொருட்களும் இருப்பது தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோதுதான் அது பல யுகங்களுக்கு முன்பிருந்த மரம் விழுந்து கல்லாகி இன்று கல்மரம் என அழைக்கப்படும் அரிய காட்சி என்பது தெரிந்தது.


இவ்வூரின் ஜனத்தொகையே மொத்தம் 1500க்கு மேல். இங்குள்ள அதிசயம் இந்த கல்மரம்தான். மிக பிரம்மாண்டமான மரமொன்று எந்த யுகத்திலோ கீழே விழுந்து காலத்தால் அழியாமல் கல்லாகிப் போய் இன்று மரத்தின் உரு மாறாமல் கிளைகளோடு அப்படியே கிடப்பதைப் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. இதனை இப்போது தொல்பொருள் துறை வேலிகள் அமைத்துப் பாதுகாக்கிறது. அந்த கல்மரத்தின் சிறப்பைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு பாரதி இயக்கத்தார் புறப்பட்டனர்.

                                To be continued............

வரலாறு பேசும் பயணம் பகுதி 20

                        வரலாறு பேசும் பயணம் பகுதி 20
மேட்டூர் அணை. 

தமிழ்நாட்டில் மிகப் பழமை வாய்ந்ததும், மிகப் பெரியதும், காவிரி டெல்டா பகுதிகளுக்கு உயிர் கொடுக்கும் நீர்தேக்கமாகத் திகழ்வது மேட்டூர் அணை. மேட்டூரில் நீரின் மட்டம் உயர்ந்தால் நாடு செழிக்கும், குறைந்தால் மக்கள் வாழ்வும் மங்கும் எனும் நிலைமை. இது முந்தைய சேலம் ஜில்லாவில் 1934ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. காவிரி ஆறு மலைப் பகுதியிலிருந்து சமவெளிக்குள் நுழையுமிடத்தில் இது கட்டப்பட்டது. இது கட்டப்பட்டதால் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி தஞ்சை, நாகை முதலிய மாவட்டங்கள் பயன்பெற்றன.

இந்த அணையின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் நீள அகலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மொத்த நீளம் 1700 மீட்டர். இது நீரைத் தேக்கி வைக்கும் இடம் ஸ்டான்லி ரிசர்வாயர் என்கின்றனர். இந்த நீர்தேக்கத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் பயன்பெற்று வருகிறது. இதன் பிரம்மாண்டம் கருதி இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த அணையின் மேலே மலைப்பகுதியில் இருக்குமிடம் தான் ஹொகேனக்கல் எனும் சுற்றுலாத் தலம். மேட்டூர் அணையில் 120 அடிகள் வரையில் நீரைத் தேக்கி வைக்கலாம். கர்நாடக மாநிலத்திலுள்ள கிருஷ்ணராஜசாகரைப் போல இருமடங்கு நீரைத் தேக்க முடியும். கிருஷ்ணராஜசாகர் நம் ஊர் சுதேசி எஞ்ஜினீயரான எம்.விஸ்வேஸ்வரய்யா என்பவரால் 1922இல் தொடங்கி கட்டப்பட்டு 1917இல் முடிவடைந்தது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட இடம் நாயம்பாடி எனும் கிராமம். இதைக் கட்ட இங்கிலாந்து அரசு பணம் கொடுத்தது. அணையின் காரணமாக நீர் தேங்கிய இடங்களில் வசித்த மக்கள் குடிபெயர்ந்து கொள்ளேகால் பகுதிக்குக் குடியேறிவிட்டனர்.

மேட்டூர் அணையில் பாரதி இயக்கத்தினர் போனபோது தண்ணீர் அடிமட்டத்துக்குப் போய்விட்டதால், நீரின் அழகை, அது பாய்ந்து வரும் சிறப்பைக் காணமுடியாமல் வறண்ட சுற்றுப் புறத்தையும் அணையின் நீர்தேக்கப் பகுதியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கோயில் கோபுரம், தேவாலயம் ஆகியவற்றை மட்டும் பார்த்து விட்டுத் திரும்பினர்.

ஒகேனக்கல்.

கன்னடத்தில் ஹொகே என்றால் புகை. இவ்வூரில் கர்நாடகத்திலிருந்து காவிரி வனாந்தரங்கள் வழியாக ஓடிவந்து மலையிலிருந்து சமவெளிக்குத் தாவிக் குதிக்கும் பகுதி ஹொகேனக்கல் எனப் பெயர். ஹொகேனக்கல் என்றால் நீர்வீழ்ச்சியின் வேகத்தால் நீர்த்துளிகள் புகைபோல எங்கும் மண்டிக் காணப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது. அங்கு நுழைந்ததுமே சமவெளியில் காடுகளிலுள்ள மரங்கள் வழியாக பாறைகளுக்கு இடையிலுள்ள ஓடைகளின் வழியாக நீர் பெருக்கெடுத்து ஓடிவந்து மலையிலிருந்து மிக மிக ஆழமான பள்ளத்தாக்குகளில் நீர் விழுந்து ஓடும் அழகுதான் கண்களுக்குத் தென்படும். அப்படி இயற்கையின் வேகத்தோடு மிக உயரத்திலிருந்து பள்ளத்துக்குத் தாவும் வீழ்ச்சியில் சென்று யாரும் குளிக்க முடியாது என்பதால் ஒரு செயற்கை குளிக்கும் நீர்வீழ்ச்சியையும் இங்கு அமைத்திருக்கிறார்கள். பாரதி இயக்கத்து நண்பர்கள் போன நேரம், ஆற்றில் தண்ணீர் இல்லை, நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரவில்லை, எல்ல இடங்களும் வறண்டு போய் கிடந்தது.

காவிரியில் தண்ணீர் மிகுந்து ஓடுங்காலங்களில் ஹொகெனக்கல் மிக அருமையான சுற்றுலாத் தலம். அந்த அழகை இனி காணமுடியுமா என்கிற ஏக்கம் அங்கு வந்த அனைவருக்குமே இருந்தது. “தலை கொடுத்தான் தம்பி” என்றொரு பழைய படம், அந்த படத்தின் எல்லா காட்சிகளுமே இந்த ஹொகேனக்கல்லின் அழகைக் காட்டக்கூடியதாக இருந்ததை நினைவு படுத்திக் கொண்டோம்.


பயணிகளைப் பரிசல்களில் அழைத்துச் சென்று அருவி நீர் கொட்டும் இடங்களைக் காட்டும் ஊழியர்கள் கூட தங்கள் பரிசல்களைக் கவிழ்த்து வைத்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே தேங்கிக் கிடந்த நீர் குட்டைகளில் பிடித்த மீன்களை மீன்வியாபாரிகள் விற்றுக் கொண்டிருந்தனர். மீன் பிரியர்களுக்காக அந்த மீனைப் பதப்படுத்தி காரம் போட்டு விரும்பியவர்களுக்கு வியாபாரம் செது கொண்டிருந்தனர். சும்மா சொல்லக் கூடாது பாரதி இயக்க சுற்றுலா வந்தவர்களில் ஒருசிலர் மெல்லச் சென்று புதிய அந்த மீன்களை வாங்கி ரசித்துச் சாப்பிட்டு வந்தார்கள்.

                              To be continued..........

வரலாறு பேசும் பயணம் பகுதி 19

                           வரலாறு பேசும் பயணம் 19
கிருஷ்ணகிரி     
 
கிருஷ்ணகிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. தமிழ்நாட்டின் வரைபடத்தில் பார்த்தால் வடமேற்கில் ஆந்திர கர்நாடக எல்லைகளையொட்டி அமைந்த மாவட்டம். 2004இல் இது தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிரிந்தது. கிருஷ்ணகிரி எனும் பெயரில் கிருஷ்ண என்பது கிருஷ்ண பகவானைக் குறிப்பதல்ல, அவனுடைய வண்ணத்தைக் குறிக்கும் கருப்பு என்பதன் குறியீடு. கிருஷ்ணகிரி என்றால் கருப்புமலை என்பதாகும். கருப்பு என்பதால் இது கிரானைட் எனப்படும் விலைமதிப்பற்ற கற்கள் அமைந்த மலை. அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்ட ஓசூர் இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது.
கிருஷ்ணகிரியில் ஒரு வானுயர்ந்த கோட்டை இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோட்டை மீது ஏற்வதென்பது அசாத்தியம். விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ணதேவ ராயர் கட்டிய கோட்டையாம் இது. அவர் பெயராலேயும் இது கிருஷ்ண கிரி என அழைப்பதும் பொருத்தம் தானே. அந்தக் காலத்தில் இந்த மலைக்கோட்டையை பாராமகால் என அழைத்தனர். இந்த இடத்தைப் பின்னர் பீஜப்பூர் சுல்தான்கள் பிடித்துக் கொண்டனர். அவர்கள் இவ்விடத்தைத் தங்கள் படைத்தளபதியாக இருந்த ஷாஜி என்பவருக்குக் கொடுத்தனர். இந்த ஷாஜி யார் தெரியுமா? சத்ரபதி சிவாஜியின் தந்தை. தஞ்சைக்கு வந்த முதல் மராட்டிய அரசன் ஏகோஜி எனும் வெங்கோஜிக்கும் தந்தை. ஷாஜி இறந்தபின் தஞ்சாவூர் ஷாஜிக்குத்தான் இந்த கோட்டை கிடைத்தது. ஆனால் அவருடைய சகோதரர் சத்ரபதி சிவாஜி இதை போரிட்டுப் பிடித்துக் கொண்டார் தம்பியிடமிருந்து. 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்கதேவராய உடையாரின் உத்தரவின் பேரில் ஹைதர் அலி இந்த கோட்டையைப் பிடித்தார். பிறகு ஹைதர் மைசூரை தானே சொந்தமாக ஆண்டு வந்த போது இதனைத் தனதாக ஆக்கிக் கொண்டார். அதிக அளவிலான போரைச் சந்தித்த பகுதி இது; 1768இல் முதல் ஆங்கிலோ மைசூர் யுத்த காலத்தில் இந்த கோட்டைக்காக பிரிட்டிஷார் கடுமையாக மைசூர் படைகளுடன் போராடினார்கள். ஆனால் பலத்த சேதமடைந்த பிரிட்டிஷார் திப்பு சுல்தானிடம் தோற்று கிருஷ்ணகிரியையும் இழந்தனர். பிறகு பிரிட்டிஷ் திப்பு உடன்படிக்கை 1792இல் நடந்தபோது இதை பிரிட்டிஷாருக்குக் கொடுத்துவிட்டார் திப்பு. இந்த மலைக்கு மேலே செல்லும் படிகள் அருகில் ஏராளமான இஸ்லாமியர்கள் குடியிருக்கின்றனர். அவர்கள் மதச் சின்னங்களும், கொடிகளும் அந்த அடிவாரத்தில் இருக்கின்றன. மேலே தொழுகைக்காக ஒரு மசூதியும் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிரிட்டிஷ் படையெடுப்பைப் போல பாரதி இயக்கத்தார் பலர் சென்றபோதும், மலையின் பாதி வரை அனைவரும் செல்ல முடிந்தது, காரணம் அதுவரை போவதற்கு படிகள் இருந்தன. அதற்கு மேல் முண்டும் முரடுமான பாறைகளைப் பிடித்துக் கொண்டு போக வேண்டியிருந்ததால் பலரும் திரும்பிவிட ஒரேயொருவர் வினோத் என்பவர் மட்டும் உச்சிக்குச் சென்று அங்கிருந்த மசூதியையும் கண்டு வந்த பெருமை இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டும்.

தொரப்பள்ளி.       
 
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என வழங்கப்படும் ராஜாஜியின் பிறந்த இல்லம் ஓசூரையடுத்த தொரப்பள்ளி எனும் கிராமத்தில் இருக்கிறது. அந்த கிராமத்தைத் தேடிச் சென்றவர்களுக்கு அங்கிருந்த ஒரு பெருமாள் கோயிலும் அதனையடுத்த அக்ரஹாரத்தில் ஒருசில வீடுகளும் காணப்பட்டன. அதில் ஒரு பழைய காலத்து ஓட்டு வீடுதான் ராஜாஜி பிறந்த இல்லம் என்றார்கள். அதை உறுதி செய்வதுபோல அந்த வீட்டின் ஓட்டின் மேல் ஒரு பலகை அதில் சக்கரவர்த்தி ராஜாஜி பிறந்த இல்லம் என்றிருந்தது. அந்த வீட்டினுள் ஒரு ஊழியர் இருந்தார். அந்த சின்னஞ்சிறு கிராமத்தைத் தேடி வந்து ராஜாஜியின் பிறந்த இல்லத்தைக் காண வந்த இவர்களைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சி. அங்கிருந்த பொருட்களையெல்லாம் பற்றி விரிவாகச் சொன்னார். ஓடு தலையில் இடிக்கும்படியான அந்த பழைய இல்லம் உரு மாறாமல் நிர்வகிக்கப்படுவதை எண்ணி உண்மையில் பெருமைப்பட வேண்டும். இந்தியாவின் கவர்னர் ஜெனரால இருந்தவர் இப்படிப்பட்ட ஒரு சின்னஞ்சிறு வீட்டில் பிறந்தார் எனும்போது ஜனநாயகத்தின் பெருமை நமக்குப் புலப்படுகிறது அல்லவா. அங்கிருந்த பொருட்களையெல்லாம் நீண்ட நேரம் பார்த்துவிட்டு ராஜாஜியின் பெருமையை உள்வாங்கிக் கொண்டு கிளம்பும்போது அங்கு பணியாற்றிய ஊழியர் இவர்களைப் பிரிய மனமின்றி தெருக்கோடி வரை வந்து இவர்களை வழியனுப்பிய காட்சி மனதுக்கு இதமாக இருந்தது.

டெங்கனிக்கோட்டை (தேன்கனிக்கோட்டை)
                       
டெங்கனிக்கோட்டை என பரவலாகப் பேசப்படும் தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டட்தில் உள்ள ஒரு நடுத்தர கிராமம். பெங்களூர் நகரத்திலிருந்து ஹொகேனக்கல் எனும் சுற்றுலா இடத்துக்குச் செல்ல மக்கள் அட்டிபெலி, தேன்கனிக்கோட்டை, அஞ்சட்டி, நாட்றாபாளையம் ஆகிய ஊர்கள் வழியாகத்தான் செல்வார்களாம். கர்நாடக மாநிலத்தின் எல்லையோர் இடங்கள் தொரப்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய ஊர்கள். எனினும் இங்கு தமிழ் மொழியே பரவலாகப் பேசப்படுகின்ற மொழி. தெலுங்கும், கன்னடமும் இங்கு அதிக அளவில் பேசப்படுகின்றன. 1654 வரை இவ்விடத்தை மைசூரின் கந்தீரவ நரச ராஜா என்பார் ஆண்டு வந்தார். பிறகு ஹைதர் அலி ஆட்சியை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஹைதருக்கும் பிரிட்டிஷுக்கும் நடந்த யுத்தத்தில் இந்த ஊரும் பகடைக்காயாக மாறியிருந்தது. இது யாருக்கு என்பதில் போட்டா போட்டி இருந்தது. இங்கு ஒரு கோட்டை இருக்கிறது. அதுதான் சுற்றுலா வருவோருக்கு இங்கு ஒரு ஈர்ப்பு.

பாப்பாரப்பட்டி.    
    
பாப்பாரப்பட்டி எனும் பெயர் எங்கோ கேட்ட பெயராக இருக்கிறதா? ஆம்! சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா பாரத மாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்பத் திட்டமிட்டிருந்தது இந்தப் பாப்பாரப்பட்டியில்தான். இவர் ஆலயம் கட்டுவதற்காக ஒரு நண்பர் இவருக்கு இடத்தையும் தானமாகக் கொடுத்திருந்தார். அங்கு பாரதமாதா ஆலயம் கட்ட சுப்பிரமணிய சிவா அடிக்கல் நாட்டினார், வங்க தேசத்திலிருந்த பிரபலமான தலைவர் ஒருவரை அழைத்து வந்து விழா நடத்தினார்.

ஹொகேனக்கல் செல்லும் வழியில் பாப்பாரப்பட்டிக்குள் சென்று அங்கு சிவாவின் நினைவாலயம் எங்கே என்றதும் ஊரின் மையப்பகுதியில் மிகப்பெரிய இடத்தில் நான்கு புறமும் உயர்ந்த சுவர் எழுப்பியிருக்க அதன் ஒரு பக்கம் ஒரு நினைவில்லம் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சுப்பிரமனிய சிவா பற்றிய தகவல்கள் பதிவிடப் பட்டிருந்தன. அந்த பூமியில் சிவா கட்ட விரும்பிய பாரதமாதா ஆலய அஸ்திவாரத்தின் மீது அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டு இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து போவது மகிழ்ச்சியளித்தது. நாங்கள் அங்கே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஓரிரு கார்களில் சில முக்கியஸ்தர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்றும் ஏனையோர் நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்கள் என்றும் தெரிய வந்தது. அன்று சிறையில் தொழுநோய் வந்து ரயில் வண்டியில் கூட ஏற விடாமல் தடுக்கப்பட்டு மதுரையிலிருந்து பாப்பாரப்பட்டி வரை நடந்தே வந்து மாண்டுபோன தியாகி சுப்ரமணிய சிவாவின் ஆவி இப்போதாவது தான் மதிக்கப்படுவது கண்டு மகிழலாம். வாழ்க தியாக சிவாவின் புகழ்!

அதியமான்கோட்டை  


வருகின்ற வழியில் அதியமான்கோட்டை எனும் ஊர் இருந்தது. அங்கு ஒரு கோட்டை இருக்குமென்று விசாரித்ததில் அங்கு மன்னன் அதியமானுக்கு ஒளவை நெல்லிக்கனி கொடுத்த நினைவிடம் இருக்கிறது. அந்த மணிமண்டபத்தைப் போய் பார்க்கலாம் என்று போனபோது அங்கு யாரும் இல்லை. எப்படியோ உள்ளே நுழைந்து பார்த்தபோது மிக அற்புதமான நினைவாலயம அங்கு நிறுவப்பட்டிருப்பது தெரிந்தது. வாயிலில் ஒரு அரிய சிலை. அதில் நீரூற்றுக் கிடையே ஒளவைக் கிழவி  மன்னன் அதியமானுக்கு இறவாத நிலை தரும் நெல்லிக்கனியொன்றைத் தர, அதை அவன் திரும்பவும் புலவர் ஒளவைக்கே கொடுக்கும் காட்சி சிலை வடிவில் இருந்தது. பண்டைய தமிழ்ப் புலவர் மன்னர் உறவின் பெருமையைக் கண்டு மகிழ்ந்து புறப்பட்டனர்.

                                 To be continued...........

வரலாறு பேசும் பயணம் பகுதி 18

                             வரலாறு பேசும் பயணம் பகுதி 18

திருப்பத்தூர்.     
 
திருப்பத்தூர் என்று வேலூர் மாவட்டத்திலும் ஒரு ஊர் உண்டு. இந்தத் திருப்பத்தூர் இப்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஊர். புதுக்கோட்டை மதுரை செல்லும் பாதையில் உள்ளது. இவ்வூர் இருக்கும் பகுதியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. முந்நாளில் மக்கள் இறை வழிபாட்டில் எத்துணை அக்கறை கொன்டிருந்தார்கள் என்பதற்கு இத்தனை கோயில்களும் சான்று பகிர்கின்றன. இவ்வூரையடுத்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் கொண்டிருக்கும் அழகான ஊர். நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வகிக்கும் இந்தக் கோயில் மிக அழகும் நேர்த்தியும் கொண்டது. இதன் முன்பாக பரந்து விரிந்த குளம். இதனருகில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ஒன்று உண்டு. குன்றக்குடி ஐந்து குகைக் கோயில்களும் பார்க்க வேண்டிய இடங்கள்.

ஈரோடு   
            
இது ஒரு மாவட்டத்தின் தலைநகரம். வர்த்தக நகரம். ஈரஓடை என்பது மருவி ஈரோடாக ஆனது என்பார் ரா.பி.சேதுப்பிள்ளை “ஊரும் பேரும்” எனும் நூலில். தமிழகத்தில் வாணிபம் அதிகம் நடப்பதும், மிகுந்த மக்கட்தொகை உள்ளதுமான இந்த ஊர் பல பெரிய தலைவர்களை வழங்கியிருக்கிறது. காவேரி நதியால் வளப்படுத்தப்படும் சுற்றுப்புற ஊர்கள் இவ்வூரையும் செழுமைப் படுத்துகிறது. வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால் இங்கு ஆண்ட பரம்பரையினரின் பட்டியல் சொல்லி முடியாது. சேரர்கள், பாண்டியர்கள், சோழர்கள், பிற்கால சோழர், விஜயநகர சாம்ராஜ்யம், மதுரை நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கர்நாடக சுல்தான்கள், எல்லோருக்கும் மேலாக பிரிட்டிஷார் ஆதிக்கம் செலுத்திய இடம் ஈரோடு. இவ்வூரின் நடுவே ஓடும் காளிங்கராயன் வாய்க்கால் மிகவும் பிரபலமானது. இதில் ஆண்டு முழுதும் நீர் ஒடிக்கொண்டிருப்பதால் இவ்வூரில் ஈரமாகவே இருக்கும் அதன் பெயருக்குத் தக்கபடி.

இப்பகுதியை கொங்கு நாடு என்பர். செல்வச் செழிப்புள்ள இவ்வூரில் காகிதத் தொழிற்சாலை இருக்கிறது. டி.என்.பி.எல். எனும் அரசு தொழில் நிறுவனம் அச்சுக் காகிதம் தயாரிக்கிறது. சேஷசாயி கம்பெனியின் தனியார் தொழிற்சாலையும் இங்கு உண்டு. இவ்வூர் வியாபாரப் பொருட்களின் சந்தை மிகவும் பிரபலமானது. மாந்தர் உபயோக்கிகும் பல உணவுப் பொருட்களுக்குத் தேவையான தானியங்கள், மிளகாய் போன்றவை இங்கு வணிகத்தின் உயிர்நாடி. பெரிய மாரியம்மன், மலைமீதுள்ள சிவாலயம் ஆகியவை பிரபலமான இடங்கள்.

அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலை ஒரு நூறாண்டு காலம் கோலோச்சிக் கொண்டிருந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ஊர் இது. அவருடைய சகொதரரி ஒரு பிரபலமான வியாபாரி. அவருடைய இல்லம் இப்போது ஈ.வே.ரா. நினைவு இல்லமாக வைத்துப் பராமரிக்கப்படுகிறது. அந்த பழமையான சுண்ணாம்பு மாடிக் கட்டடம் புதிதாகக் காட்சி யளிக்கும் பழமையான மாளிகை. அதனுள் பெரியார் ஈ.வே.ரா. சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய புகழ்பெற்ற கைத்தடி, மூக்குக் கண்ணாடி, அவர் படுத்திருந்த மரத்தால் ஆன கட்டில், சாய்வு நாற்காலி முதலியன அவரை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கின்றன. மாடியில் பின்புறம் அப்போது அவர் நடத்தி வந்த “குடியரசு” பத்திரிகையில் வேலை பார்த்து வந்த சி.என்.அண்ணாதுரை தங்குவதற்காக ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இல்லத்தின் அவருடைய படுக்கை அறை, அலுவலகம், அதில் மேஜை, நாற்காலி, அவர் எழுதிய பேனா, இங்க் பாட்டில், மூக்குக் கண்ணாடி, படிக்கப் பயன்படுத்திய பூதக்கண்ணாடி ஆகியவைகளோடு, மிகச் சிறிய சமையல் அறையும் காட்சிக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. வரும் சுற்றுலாப் பயணிகளை அங்கு பணியாற்றும் பெண்கள் ஆர்வத்துடன் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார்கள். நம் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகரை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த இல்லத்தின் விசிட் ஒரு வாய்ப்பு.

பவானி.    
     

பவானி எனும் இந்த இடம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது. காவிரியும், பவானி ஆறும் சங்கமாகும் இடம். இவ்விரு ஆறுகளைத் தவிர நம் கண்களுக்குத் தெரியாமல் அமிர்தா நதியும் இங்கே சங்கமமாகிறது என்பது நம்பிக்கை. இந்த பவானி சங்கம் என்கின்றனர். இவ்விரு ஆறுகளும் இணையும் இடம் மிகவும் பெரிதாக இருக்கிறது. இங்கு வரும் இந்துக்கள் இந்த சங்கமத்தில் தங்கள் மூதாதையருக்குத் திதி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அருகிலுள்ள மண்டபத்தில் ஏராளமானோர் சங்கத்தில் நீராடி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவதைக் காண முடிகிறது. இங்கு ஆற்றங்கரையில் எரிக்கப்படும் பிணங்களின் மண்டையோடு சிதறிக் கிடப்பதில்லையாம். இங்கு பூமிக்கடியில் 1008 சிவலிங்கங்கள் இருப்பதாகவும், அவற்றை மக்கள் வழிபடுகிறார்கள் என்பதும் செய்தி. காய்ச்சல் வந்தால் மிளகு, ஜீரகம் கலந்து சோற்றை இறைவனுக்குப் படைக்கிறார்கள். இங்கு கோயில் கொண்ட ஈச்வரன் அமிர்தலிங்கேஸ்வரர். இவர் ஆவுடையார் எனும் லிங்கம் பதியும் பீடத்தின் மேல் உட்கார வைக்கப்பட்டிருப்பார். இச்சிலையை பீடத்தைவிட்டு அப்புறப்படுத்தவும் முடியும். இங்குள்ள அம்பிகை வேதநாயகி, சங்கமேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். பவானி, மருதநாயகி, வக்ரேஸ்வரி என்றெல்லாம் பெயர்களும் இவருக்கு உண்டு. இத்தனை பெருமைகளையுடைய பவானிக்கு ஜமக்காளத்துக்கும் நல்ல பெயர் உண்டு. பவானி ஜமக்காளம் தான் எங்கும் விற்பனையாகும் ஜமக்காளம்.

                               .To be continued..........

Saturday, January 13, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 17

                         வரலாறு பேசும் பயணம் பகுதி 17
ராமநாதபுரம்.        
                     ராமநாதபுரம் அரண்மனை ராமலிங்க விலாசம்

          பேய்க்கரும்பை விட்டு நீங்கி ராமநாதபுரம் நோக்கிப் புறப்பாடு. இந்த ஊரின் பெயரில் இருந்தே இது ராமாயணத்துடன் தொடர்புடைய ஊர் என்பது விளங்கும். பல நூற்றாண்டுகள் பழமையான இடம். இங்கு வட இந்தியாவிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து ராமநாத சுவாமியைத் தரிசிக்கிறார்கள். இவ்வூரின் வரலாறு மிகப் பழமை வாய்ந்தது. மறவர்கள் பூமி என்றழைக்கப்படும் ராமநாதபுரத்தில் புகழ் பரப்பிய சேதுபதிகள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பவும், அவர் கொழும்புவிலிருந்து திரும்பும்போது அவரது காலடி தன் தலையில் பட வேண்டுமென்று வணங்கிய பாஸ்கர சேதுபதி வாழ்ந்த ஊர். 12, 13ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியை சுல்தான் சையது இப்ராகிம் ஷாகீத் என்பவர் எரவாடியில் இருந்து ஆண்டதாகவும் வரலாறு இருக்கிறது. தமிழ் வரலாற்றுக் காலத்தில் இது பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்திருக்கிறது. ராஜேந்திர சோழன் காலத்தில் சோழர்களிடமும், பிறகு நாயக்க வம்சத்தாரிடமும், அதன்பின் மராட்டிய அரசர்களும் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். 1795இல் இங்கிருந்த முத்துராமலிங்க சேதுபதியை பதவி இறக்கம் செய்துவிட்டு பிரிட்டிஷார் ஆட்சியைப் பறித்துக் கொண்டார்கள். இவர்கள் வம்சத்தின் ஆட்சி தொடர்ச்சியாக 1801இல் மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கையை ஜமீன்தாராக இருந்து ஆட்சி புரிந்தார். வேலு நாச்சியாரின் வீர வரலாறும் சிவகங்கையில் அரங்கேறியது. மருது சகோதரர்களின் சாகசங்களைக் கண்ட பூமி இது. பிரிட்டிஷ், பிரெஞ்சு இடையே நடந்த போரினால் இந்தப் பகுதிகளும் ஏற்ற இறக்கங்களைக் கண்டது மருது சகோதரர்கள் தூக்கில் இடப்பட்டதும், பின்னர் ஆங்கிலேயர் சார்புடையவர்கள் ஜமீன்தாராக ஆனதும் திப்பு சுல்தானின் தலையீடும் இந்தப் பகுதி வரலாற்றோடு கலந்து இருப்பது. 1892இல் ஜமீன்தார் அமைப்பு நீக்கப்படும் வரை இதெல்லாம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. 

          ராமநாதபுரத்தில் மன்னரின் அரண்மனை இப்போது காட்சியகமாக மாறியிருக்கிறது. பழமையின் ஒருசில நினைவுச் சின்னங்களை இங்கே பார்க்கலாம். முழுமையான ராமநாதபுரம் சமஸ்தானத்தின் எச்சங்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஓரளவு பழமையின் சின்னங்களைப் பார்த்த திருப்தியோடுதான் திரும்ப வேண்டியிருந்தது.

         சிவகங்கையில் அரண்மனையொன்று இருக்கிறது. அதன் நுழைவாயில் அழகாக ஊரின் நடுவே இருக்கிறது. உள்ளே பரந்து விரிந்த திறந்த வெளி. அங்கிருந்து அரண்மனைக்குள் நுழைய ஒரு சிறிய வாசல். அங்கிருந்தோர் அங்கு இப்போது உள்ளே போக முடியாது என்று தடுத்துவிட்டதால் சிவகங்கையின் சிறப்பை உள்ளே நுழைந்து பார்க்க முடியாமல் திரும்ப நேர்ந்தது.

நாட்டரசன்கோட்டை.    
                                         கம்பர் சமாதி

           நாட்டரசன்கோட்டை எனும் இவ்வூர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களால் புகழ் பெறாவிட்டாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பர் சோழநாட்டை விட்டு நீங்கி இங்கு வந்து தங்கியிருந்த காரணத்தாலும், அவருடைய சமாதி இங்கிருப்பதாலும், ஆண்டுதோறும் காரைக்குடிக் கம்பன் கழகத்தார் கம்பன் விழாவின் ஒரு பகுதியை இங்கு வந்து கம்பன் சமாதியில் நடத்துவதால் இந்த இடம் புகழ்பெற்று விட்டது. நாட்டரசங்கோட்டை என்பது சிறிய கிராமம் அதிலும் கம்பன் சமாதி இருக்குமிடம் புதர் பூண்டுகளைத் தாண்டி ஒதுக்குப்புறமாக அமைதியாக இருக்கும் ஓரிடம். இங்கு ஒரு காவலாளி, நினைவிடத்தில் தங்கி வருபவர்களுக்குச் சமாதியைத் திறந்து காட்டுகிறார். வாழ்க! அவர் தயவால் கவிச்சக்கரவர்த்தி உறங்கும் அவர் சமாதியை வணங்க முடிந்தது.

காளையார்கோயில்    

          இந்த கிராமம் சிறியது என்றாலும் இங்கு அமைந்திருக்கும் சிவாலயம் பெரியது. பெரிய மருது, சின்ன மருது காலத்தில் கட்டப்பட்ட கோயில். மருது சகோதரர்களை கிராமப் புறக் கலைஞர்கள் இன்றும் கூட நினைவு வைத்து அவருடைய வீரத்தைப் போற்றிப் பாடுகின்ற பாடல்களைக் கேட்கலாம். “மதுரை கோபுரம் தெரிந்திடச் செய்த மருது பாண்டியர் பாருங்கடி” எனும் கும்மிப் பாட்டை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  சிவகங்கை ஜமீனுக்குச் சொந்தமானது இது.

          அரண்மனையிலுள்ள காளீஸ்வரர் ஆலயத்து மூலவரின் பெயரால் இந்த காளையார்கோயில் எனும் பெயர் உண்டானது. சங்க காலத்தில் இவ்வூருக்கு “கானப்பேரெயில்” என்ற பெயர் இருந்திருக்கிறது. இவ்வூர் ஆலயத்தின் சிவபெருமானை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியிருக்கிறார். அவர்தான் இவரை காளை என்று அழைக்கிறார், இவ்வூரின் பெயரும் அதனையொட்டியே காளையார் என்று வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வூருக்குப் பெருமை சேர்ந்த்தவர்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்ட முத்து வடுகநாதர், ஆங்கிலேயரை எதிர்த்துத் தூக்கில் மாண்ட மருது சகோதரர்கள் ஆகியோராவர். 

திருமயம்.      
   
          இவ்வூரின் சரியான பெயர் திருமெய்யம். அது மருவி திருமயம் ஆயிற்று. இங்கு கோட்டையில் அமைந்திருக்கும் ஆலயத்தில் கொலுவிருக்கும் பெருமாள் மெய்யர் என்று பெயர். இவ்வூர் புதுக்கோட்டைக்கும் காரைக்குடிக்குக் இடையில் இருக்கிறது. இங்குள்ள கோட்டையும், அதனுள் அமைந்திருக்கும் அழகான ஆலயமும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருழுக்கும் இடங்களாகும். இவ்வூரில் சாலையில் அமைந்திருக்கும் பைரவர் கோயில் இவ்வூர் வழியாக வாகனங்களில் போவோர் வருவோர் கும்பிடும் பிரபலமான கோயில். இங்குள்ள கோட்டை ராமநாதபுரத்தை ஆண்ட பிரபலமான மறவர் குல மன்னன் கிழவன் சேதுபதியால் 1687இல் கட்டப்பட்டது. ராமநாதபுரம் மன்னர்களின் பிரதிநிதிகள்தான் திருமயத்தையும் நிர்வகித்து வந்தார்கள்.

             இவ்வூருக்குப் பெருமை சேர்க்கும் ஆலயங்களில் கோயில் கொண்டிருக்கும் சத்யவாகீஸ்வரர், சத்தியமூர்த்தி பெருமாள் ஆகியோர் பிரபலமான மூர்த்தங்கள். முதல் சிவன், இரண்டாவது பெருமாள். இவை அடுத்தடுத்து உள்ள கோயில்கள். மலையில் அடிவாரத்தில் அமைந்தவை இவை. இவ்வூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. நமது சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டுவரும், நாவலருமான தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் இது. பெருந்தலைவர் காமராஜரின் குருவான தீரர் சத்தியமூர்த்திக்கு இவ்வூரில் ஒரு சில நிறுவப்பட்டிருக்கிறது.


                                   To be continued...........     

வரலாறு பேசும் பயணம் பகுதி 16

                        வரலாறு பேசும் பயணம் பகுதி 16
ராமேஸ்வரம்.           
       பாரதி இயக்கத்தார் தேர்ந்தெடுத்த அடுத்த சுற்றுலாத் தலம் ராமேஸ்வரம். காசி ராமேச்வரம் செல்வது என்பது இந்துக்கள் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு. அதனை பாரதி இயக்கத்தார் புனித யாத்திரையாக அன்றி ஆராய்ச்சி, அறிவுசார்ந்த பயணத்துக்காகத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது.

      ராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் சிவபெருமானை வணங்குவதற்காக மணலில் லிங்கம் வடித்து பூஜித்தத் தலம் ராமேச்வரம். தற்சமயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தத் தீவு. மீன்பிடித் தீவாக இருந்திருக்க வேண்டிய இந்த இடம் இப்போது ஒரு அற்புதமான இந்து புனிதத் தலமாகத் திகழ்கிறது. இந்தத் தீவை பாம்பன் தீவு என்றும் சொல்வர். ராமநாதபுர மாவட்டத்தை இந்தத் தீவையும் பிரிக்கும் இடம் மன்னார் வளைகுடா. இவ்விரு இடங்களையும் இணைக்க ஒரு ரயில்வே பாலம் முன்பு பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் இவ்விரு இடங்களையும் இணைக்க ஒரு தரைப்பாலம் அமைக்கப்பட்டு ரயில் பாலத்துக்கு இணையாகவே மிக அருகில் நல்ல உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் மீது நின்று கடலையும், ரயில் பாதையையும், பார்ப்பதே ஒரு அருமையான காட்சி. பாம்பன் பாலம் என்பது அனைவரும் அறிந்தவொன்று.

      சென்னையிலிருந்து ரயிலில் பயணம் செய்து ராமேச்வரம் வரலாம். இது ஒரு டெர்மினஸ். மதுரைக்கும், காசிக்கும்கூட இங்கிருந்து செல்ல முடியும். இந்துக்கள் வாழ்க்கையில் காசிக்கும் ராமேச்வரத்துக்கும் செல்லுவது என்பது ஒரு கடமையாகவே இன்றும்கூட இருந்து வருகிறது. முன்பெல்லாம் ராமேஸ்வரம் சென்றால் ராமநாத சுவாமி தரிசனம், பல தீர்த்தங்களில் புனித நீராடல் அருகிலுள்ள ராமர்பாதம், தனுஷ்கோடி சென்று வழிபடுதல் என்று இருந்தது. அப்போதெல்லாம் பயணிகள் வந்து தங்குவதற்கு அதிக வசதிகள் இல்லை. இன்றோ தேவஸ்தானம் பல கொட்டடிகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நவீன வசதிகள் கொண்ட உணவகங்களும் இருக்கின்றன.

      சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கடல்பாதையில் கப்பல்கள் போக்குவரத்துக்காக கடலை ஆழப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்குதான் ராமபிரான் கடல் கடந்து இலங்கை சென்று சீதையை மீட்பதற்காக ராமசேது எனும் அணையைக் கட்டினார் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்ததால் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட நேர்ந்தது. இன்றும் ராமசேது குறித்த வாதப் பிரதிவாதங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

      இரவு வெகுநேரம் கழித்து பாரதி இயக்கத்தினர் பட்டுக்கோட்டை, தெவிப்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். அங்கு ராமேஸ்வரம் தேவஸ்தான அறைகளில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் காலையில் எழுந்து தயாராகி சுவாமி தரிசனம் செய்யச் சென்றனர். சுவாமி சந்நிதியருகில் அமர்ந்து அபிஷேகம் தரிசனம் செய்து விட்டு கிளம்பி ராமர்பாதம் பார்த்துவிட்டு தனுஷ்கோடி கடற்கரைக்குச் சென்றனர். தனுஷ்கோடி ஒரு காலத்தில் மக்கள் குடியிருக்கும் நகரமாக விளங்கியது. அங்கு ரயில்நிலையம் உட்பட பல கட்டடங்கள் கடல் கொந்தளிப்பில் முழுவதுமாக கடலில் மூழ்கிக் கிடக்கும் காட்சியைக் கண்டு திரும்பினர்.

      ராமேஸ்வரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வட இந்திய யாத்திரீகர்களைக் காண முடிந்தது. இந்த இடத்தை மிகுந்த புனித இடமாகக் கருதி அவர்கள் வந்து வழிபடுகிறார்கள். அத்தனை கூட்டத்தையும் அந்தத்ட் தீவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வூரில் கடலில் மிதக்கும் பாறைகள் உண்டு என்பதைக் காட்ட ஒரு கண்காட்சி இருக்கிறது. அங்கு கடல் பாறைகள் நீரில் மிதப்பதைக் காண முடிந்தது. இதுபோன்ற மிதக்கும் பாறைகளைக் கொண்டுதான் ராமசேது உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

      முன்பெல்லாம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே ரயில் போக்குவரத்து இருந்ததும் போட் மெயில் என்ற பெயரில் ஒரு ரயில்வண்டு சென்று கொண்டிருந்ததும் வயது மூத்தவர்களுக்கு நினைவிருக்கும். இங்குள்ள ராமநாதஸ்வாமி குறித்து தேவார மூவர் பாடியிருக்கின்றனர். ராஜேந்திர சோழனின் ஆளுகைக்கும் உட்பட்டு இவ்விடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. டெல்லி அரசன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனாக இருந்த மாலிக்காபூர் என்பவன் தெற்கே படையெடுத்து வந்து பல ஆலயங்களை கொள்ளை அடித்தும், இடித்துத் தள்ளியதை வரலாற்றில் அறிந்திருப்பீர்கள். அவன் படையெடுப்புக்கு பாண்டிய நாடு கடும் எதிர்ப்பு காட்டியது என்பதும் தெரிகிறது. விஜயநகர சாம்ராஜ்யம் தலையெடுத்த சமயம் இந்த இடங்கள் அவர்களது ஆளுகைக்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் ராமேஸ்வரம் ஆலயத்துக்கு ஏராளமான பணிகளைச் செய்து வந்திருக்கிறார்கள். சேதுபதி என்ற பெயரே ராமர் கட்டிய சேதுவைக் காக்கும் பணியைச் செய்பவர் என்று தெரிகிறதல்லவா? அந்த மன்னர்களில் முதுக்குமர ரகுநாத சேதுபதி என்பவரும் முத்துராமலிங்க சேதுபதி என்பாரும் இந்த ஆலயத்துக்கு ஏராளமான தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

      இந்தப் பகுதிகள் மீது பலரும் பலமுறை படையெடுத்து வந்து ஆக்கிரமித்திருக் கிறார்கள். சந்தா சாஹேபு, ஆற்காட்டு நவாபு முகமது யூசுப் கான் ஆகியோர் தவிர கிழக்கிந்திய கம்பெனியாரும் இந்த இடத்தின் மீது கண்வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ராமேச்வரம் ஆலயத்தையும், சுற்றுலாப் பயணிகளையும், வடநாட்டு பக்தர்களையும் நம்பித்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

      இப்போது கடந்த சில வருஷங்களாக ராமேஸ்வரம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பெருமை அடைந்திருக்கிறது. திடீரென்று காலமாகிவிட்ட அந்த பெருந்தகையின் சமாதி இங்கு பேய்க்கரும்பு எனுமிடத்தில் தான் இருக்கிறது. அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டபின் அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பாரதி இயக்கத்தினர் தனுஷ்கோடிக்குச் சென்றனர்.

தனுஷ்கோடி.         

தனுஷ்கோடி முன்பு பரபரப்பான ஒரு ஊராக இருந்தது. அங்கு அடித்த புயல் காரணமாக தனுஷ்கோடியைக் கடல் கொண்டு எஞ்சிய நிலப்பரப்பும் மக்கள் வாழ வகையில்லாமல் காணப்படுகிறது. ராமேஸ்வரத்தை விட்டுக் காரில் புறப்பட்டு தனுஷ்கோடி நோக்கி செல்லும் வழியெல்லாம் மணல் பரப்பாகவும், கடல் கொண்டு எஞ்சிய நிலப்பரப்புகளில் கள்ளியும், புல்லும், கோரையும் பரந்து காணப்பட்டாலும், வழிநெடுக தார் சாலை அமைத்து ஆங்காங்கே பல புதிய கட்டடங்களும் எழுப்பப்பட்டு வந்தன. இரு பக்கங்களிலும் கடல், நடுவில் பாதை, எங்கும் மீன்பிடிக்கும் படகுகள், அப்படி இந்தப் பகுதி முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் சூழப்பட்டிருந்தது.

தனுஷ்கோடியில் கடற்கரைதான் பார்க்கக்கூடிய இடமாக இருந்தது. வெண்மணல் நிறைந்த இந்தக் கடற்கரை நீண்ட நெடிய கடற்கரை. இங்கு சுற்றுலா வந்தவர்கள் கால் பதியும் மணல்பரப்பில் நடந்து கடற்காற்றின் குளுமையை ரசித்தாலும், அங்கு ஏற்பட்டிருந்த அழிவுகளையும் மனக்கண்ணால் பார்த்து திகைத்துப் போனார்கள். முன்பொரு காலத்தில் இந்தியாவையும், இலங்கையையும் இணைத்த ஆடம்ஸ் பிரிட்ஜ் என வழங்கப்பட்ட இடம் கடலுக்குள் மூழ்கிவிட்டது. எனினும் மீனவர்கள் படகில் செல்லும்போது நீருக்கடியில் மணற்வெளியின் மேல்பரப்பு தெரிவதாகச் சொல்கிறார்கள். அங்குதான் சேது சமுத்திர பணி தொடங்குவதாக இருந்தது.

1064இல் இங்கு வீசிய புயற்காற்று இவ்வூரை அழித்துத் தரைமட்டமாக்கி விட்டது. அதற்கு முன்பு அங்கிருந்த ரயில் நிலையம், அருகில் ஒரு தேவாலயம் ஆகியவைகளின் எச்சம் இப்போதும் நாங்களும் இருந்தோம் என்பதுபோல இடிபாடுகளுடன் காணக் கிடைக்கின்றன. தனுஷ்கோடி கடற்கரையில் ஒரு பெரிய கட்டடம் அரசாங்கம் கட்டி வருகிறது, அது முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

திரும்ப ராமேஸ்வரம் வந்தால் அங்கு ராமர் பாதம் என்றொரு இடம். சிறிது உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ராமர் பாதம் ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு பாறையில் பதிந்த பாதங்களின் சுவடுகளைக் காணலாம். அங்குதான் அனுமன் இலங்கைக்குச் சென்று திரும்பி வந்து ராமரிடம் “கண்டேன் சீதையை” என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். வழியில் பாம்பன் தீவு. இந்தத் தீவைச் சுற்றி நீலத்திரைக்கடலின் அழகு, எங்கு நோக்கினும் மீன்பிடிப் படகுகள், அந்தத் தீவையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் ரயில் பாலம், தரைப்பாலம் இரண்டுமே அழகுக் காட்சிகள். அருகில் மன்னார்குடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சி காணலாம்.


ராமேஸ்வரம் ஊரிலிருந்து திரும்பும் வழியில் பேய்க்கரும்பு எனும் ஓரிடம். அங்குதான் நமது குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவிடம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மணல் பரப்பில் உருவாகும் அந்த நினைவிடத்தைப் பார்த்துவிட்டு ராமநாதபுரம் நோக்கிச் செல்லத் தொடங்கினர் பாரதி இயக்கத்தினர்.
                             To be continued............

வரலாறு பேசும் பயணம் பகுதி 15

                          வரலாறு பேசும் பயணம் பகுதி 15
சிதம்பரம்.         
    
      சைவர்களுக்குக் கோயில் என்றால் அது சிதம்பரம். பண்டைய காலம் முதல் இன்று வரை சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத இடம் இந்த சிதம்பரம். ஆதி காலத்தில் சிவபெருமான் ஆடவல்லானுக்கும், தில்லைக்காளிக்கும் நடனத்தில் போட்டியாம். இருவரும் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் தொடர்ந்து வெற்றி தோல்வியின்று இருவரும் ஆடிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு ஒரு முடிவு காண முடியுமா என்கிற ஐயம் இருவருக்குமே இருந்திருக்க வேண்டும். என்னதான் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்கிற சொற்களெல்லாம் இன்றும்கூட நாம் காதருகில் கேட்டுக்கொண்டிருந்தாலும், சிவனின் அந்த ஆதிக்கம் அங்கே வெளிப்பட்டது. என்ன இது? இந்தக் காளி, நமக்கு இணையாக, நம் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஆடுகிறாள், என்ன செய்யலாம்? சிந்தித்தார், உடனே தன் ஒரு காலை செங்குத்தாக தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு மற்றோரு காலாம் ஆடினார். “யார் ஆடுவார், இனி யார் ஆடுவார்” என்பது போல அவரது ஆட்டத்தைப் பார்த்து அதுபோல தன்னால் ஆடமுடியாது என்பதை உணர்ந்து, என்ன இருந்தாலும் பெண் அல்லவா? ஆங்.... ஆங்... இதுதான் ஆணாதிக்கம் என்பது. பெண்ணால் முடியாதாம், ஆண் ஆடிவிட்டாரம். போகட்டும் எதற்கு வம்பு. சிவபெருமான் வென்றுவிட்டார், காலை தலைக்குமேல் தூக்கமுடியாமல் தோற்ற தில்லைக் காளி ஊரிலிருந்து வெளியேறி காட்டினுள் குடி புகுந்தாள்.

      சிதம்பரம் நகருக்குள் நுழையும்போது இந்த சிந்தனைதான். ஆலயத்தின் கீழவாசலை நெருங்கும்போதே இரவு நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கோயில் நடை சாத்தும் நேரம். ஓடிப்போய் தரிசனம் செய்தபின் அங்கிருந்த வைணவ இளைஞரிடம் விசாரிக்கப்பட்டது. “அது சரி, சிவாலயமான இங்கு, கோவிந்தராஜ பெருமாளுக்கு ஏன் ஒரு சந்நிதி?” என்று அந்த இளைஞன் சொன்னார், “அதுவா, சிவன், காளி நாட்டியம் போட்டி நடந்ததல்லவா, அதற்கு நடுவராக வந்தார், பெருமாள், அதனால் இங்கு அவருக்கொரு சந்நிதி” என்றார். ஊகூம், உதைக்கிறதே, இங்கு வேறு ஏதோவொரு காரணம் இருந்திருக்க வேண்டும் அது என்ன?

      அப்போது நினைவுக்கு வந்தது ஒரு புராணச் செய்தி. பாற்கடலில் நாராயணன் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆதிசேஷன் மெல்ல நாராயணனிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். “ஐயனே, தங்கள் கிருஷ்ணாவதாரம் முடிந்து இப்போது ஓய்வில்தானே இருக்கிறீர்கள். துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியிருக்கிறது. தங்களுக்கு தற்சமயம் ஒன்றும் அவசர வேலையில்லை. தாயார் தங்களுக்கு சிசுருஷைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அங்கு தில்லையில் சிவபெருமான் உலகம் உருவாவதைக் கண்டு ஆனந்த தாண்டவம் சென்து கொண்டிருக்கிறார். நான் போய் அதைச் சற்று பார்த்துவிட்டு வர உத்தரவு தரவேண்டும்” என்கிறார்.

      உடனே நாராயணன் அவர் வேண்டுகோளை ஏற்று அவரை தில்லைக்குச் சென்று ஐயனின் நடனத்தைக் கண்டுவர அனுமதி அளிக்கிறார். அப்போது அன்னை லட்சுமி சொல்கிறார், “சேடா! நீ இந்த உன்னுடைய உடலோடு அங்கு போனால், பார்ப்பவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள். அதனால், நீ பதஞ்சலி முனிவராக உருமாறிச் செல். உன்னுடன் வியாக்கிரபாத முனிவரையும் அழைத்துச் செல்” என்கிறாள். உடனே ஆதிசேடன் தன்னுடன் வியாக்கிரபாதரையும் அழைத்துக் கொண்டு தில்லை விரைகிறார்.

      அவர்கள் போனபின்பு லட்சுமி சொல்கிறார் பெருமாளிடம், ஐயனே சேடன் சென்றுவிட்டான். நாமும் போய் அங்கு நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்த்துவிட்டு வரலாமே என்கிறார். எந்த மனைவி இப்படிச் சொல்லி கணவர் மறுத்துச் சொல்லியிருக்கிறார். பெருமாளும் தாயாருடன் அங்கிருந்து கிளம்பி தில்லைக்கு வந்து கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்த்து ரசித்துவிட்டு, போனது தெரியாமல் திரும்பியும் வந்து விடுகிறார். பின்னர் இது ஆதிசேடனுக்கும் தெரியவர மெல்ல சிவபெருமானுக்கும் செய்து தெரியவந்தது. இந்த வரலாற்றையொட்டியே சிதம்பரத்தில் தில்லை நடராஜருக்கு அருகில் அவர் நடனத்டைக் கண்டு ரசிக்கும் பாங்கில் நாராயணன் கோவிந்தராஜப் பெருமாள் எனும் நாமதேயத்தோடு அங்கு தரிசனம் தருகிறார் என்கிறார்கள்.

      பாரதி இயக்கத்தார் இப்படிச் சொன்னதை அந்த இளைஞனும் பேசாமல் ஒப்புக்கொண்டு இருக்கலாம், ஆனால் எனக்கு விவரம் தெரியவில்லை என்று நழுவிவிட்டான்.

      சிதம்பரம் தீக்ஷதர் ஒருவரிடம் தாங்கள் திருவையாற்றிலிருந்து வந்திருப்பதாகவும், தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானத்துக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்பதையும் சொல்ல அவர் இவர்களை அழைத்துக் கொண்டு சென்று சந்நிதியில் நல்ல தரிசனம் செய்து வைத்தார்.


      சிதம்பரம் விட்டுப் புறப்பட்ட பாரதி இயக்கத்தார் இரவு வெகுநேரம் பயணம் செய்து மாயூரம், கும்பகோணம் வழியாக தஞ்சை வந்து அங்கிருந்து திருவையாறு பயணமாகினர்.
                                To be continued.........