பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, April 14, 2021

“பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்”

 

 “பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்”என்ற தலைப்பில் முதுமுனைவர் டி,.என்.ராமச்சந்திரன் அவர்கள் எழுதிய நூலில் காணப்படும் செய்திகள்.

 

வேதப் பாடல்களின் சூக்குமப் பொருள்களை மகாகவி ஸ்ரீ அரவிந்தரிடம் பயின்றார். காசியில் வடமொழியைப் பயின்ற மகாகவி, ஸ்ரீ அரவிந்தரிடம் வேத நுட்பங்களை அறிந்து கொண்டார்.. எதையும் இலகுவில் ஈர்த்து வாங்கித் தக்கவைத்துக் கொள்ளும் வல்லபம் பாரதியாரின் இயல்பு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதிக முயற்சியில்லாமல் விரைவிலே வேதநுட்பங்களைத் தாம் பெற்றமை பற்றி மகாகவி இங்ஙனம் கூறியுள்ளார்.

   “வித்தை நன்கு கல்லாதவன் என்னுளே                                    வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்

வேத ரிஷிகளின் கவிதை என்று மகாகவி அருளிய பாடல்கள் ஸ்ரீ அரவிந்தருடைய நட்பால் மகாகவி பெற்றார் என்பது உண்மை. முனைவர் பிரேமா நந்தகுமார் அவர்கள் இதுபற்றி 40 பக்கங்கள் கொண்ட நீண்ட கட்டுரை ஆங்கிலத்தில் வரைந்துல்ளார். மிகச் சிறப்பான கட்டுரை இது. .அவரால் இக்கட்டுரை மேலும் விளக்கம் பெற்று நூல் வடிவம் பெற வேண்டும். தமிழிலும் அவர் இதுவகையில் ஒரு நூல் வரைய வேண்டும்.

ஸ்ரீஅரவிந்தர் உபநிடதம், பகவத் கீதை ஆகியவற்றை மொழிபெயர்த்தவர். மகாகவியும் உபநிடதங்கள் சிலவற்றையும் பகவத் கீதையையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஞானரதம் என்ற நூலை மகாகவி வரைந்திருக்கிறார். இதில் மகாகவி தத்துவ விசாரம் திறம்படச் செய்திருக்கிறார். சந்திரிகையின் கதையில் இது நிகழ்கிறது. இவற்றையெல்லாம் துலக்கி ஒரு நூல் வரையப் படவேண்டும்.

பாரதியார் வரைந்த சந்திரிகையின் கதை முற்றுப் பெறவில்லை. சந்திரிகை பிறப்பு வரையில் நிகழ்ந்தவை நூறு பக்கங்கள் வருகின்றன. ஆனால் சந்திரிகையின் சிறுகுழந்தைப் பருவம் நடைபெறும் இடத்தில் கதை நின்றுவிட்டது. இதை எப்படி பாரதியார் முடித்திருப்பார் என்று அக்கதையை மூவர் எழுத முனைந்து தோற்றனர். இவருள் புதுமைப்பித்தனும் ஒருவர். மகாகவியின் படைப்புகளில் உண்மையான தோய்வுள்ள ஒருவர் இக்கதையைத் தொடர்ந்து வரைந்து முடிக்க வேண்டும்.

‘வசனகவிதை’ என்ற தலைப்பில் இன்று குறிக்கப்பெறும் பாரதி படைப்புகள் வசன கவிதையாக எழுதப்படவில்லை. இவற்றுள் வால்ட் விட்மன், தாகூர் ஆகியொரது தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. இதுவகையில் பயனுள்ள ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாரதி அகராதி ஒன்று சமைக்க வேண்டும். மகாக்வி எளிய தமிழைக் கையாண்டார். ஆனால் பற்பல நேரங்களில் அவரது பாடல் அடிகள் விண்ணோக்கிப் பாய்ந்து வித்தாரம் பயில்கின்றன.. மகாகவியின் சொற்களையும் சொற்றொடர்களையும் நில நேரங்களில் வாக்கியங்களையும் புரிந்து கொள்வது எளிதன்று.

“கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து” என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இதன் உண்மைப் பொருள் என்ன?

“கொன்றிடும் என இனிதாய், இன்பக் கொடுநெருப்பாய் அனற்சுவை அமுதமாய்” என்று குறிப்பிடுறார், இதன் பொருள் என்ன?

“சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்து அங்கத் தேன் உண்ணுவாய் மனமே” என்கிறார், இதன் பொருள் என்ன?

“சீர் அவிரும் சுடர் மீனொடு வானத்துத் திங்களையும் சமைத்தே ஓர் அழகாக விழுங்கிடல்” என்கிறார், இதன் பொருளென்ன?

இப்படிப் பலப்பல காட்டுகள் காட்டலாம். சொற்களில் சிலவற்றை எடுத்துக் கொள்ளுவோம். காணிநிலம் வேண்டும் என்று அவர் பாடியுள்ளார். காணி நிலம் என்றால் எட்டு மனை. மனை ஒன்றுக்கு 2400 ச.அடி என்று சிலர் கணக்கிடுகிறார்கள். இது தவறு. காணி என்றால் உரிமை என்று பொருள். மஞ்சட் காணி, காணியாட்சி, குடிக்காணி பாத்தியம் என்றெல்லாம் நாட்டு வழக்கில் வருகின்றன.

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி” என்று மகாகவி பாடுகிறார். இங்கு அம்பு என்பது கணை, பாணம் என்று பொருள் தராது. அம்பு என்றால் தண்ணீர் என்று பொருள். அம்புஜம் என்பது நீரில் தோன்றும் தாமரையைக் குறிக்கும். “அம்பிலே சிலையை நாட்டி” என்று தொடங்கும் பழம்பாடல் கம்பரது பெருமையைப் போற்றும் பாடல். சிலை என்பது மலை. அம்பு என்பது நீர் நிரம்பிய கடல். பாற்கடலை மந்தர மலையால் கடைந்தது இவ்வடியில் சுட்டப்படுகிறது. அம்புக்கும் தீக்கும் என்கிறபோது நீருக்கும் நெருப்புக்கும் என்று பொருள்படும். நீரும் நெருப்பும் கூறப்பட்டுவிட்டபடியால், ஆகாயம், காற்று, பூமி என்றுள்ள பூதங்களையும் உபலட்சணத்தால் கொள்ள வேண்டும்.

“ஐயத்திலும் துரிதத்திலும் சிந்தி அழிவது என்னே” என்கிறார் மகாகவி. திரிதம் என்பது விரைவைக் குறிக்கும், என்ற அளவிலே நிறைவு கொள்ளாமல், திரிதம் என்பது பாவம் என்றும் பொருள்படும் என்பதை உணர வேண்டும். ‘துரிதக் க்ஷேத்வாரா’ என்று சங்கல்ப மந்திரித்தில் வரும்.

அளவை என்ற சொல் பிரமாண சாத்திரத்தைக் குறிக்கும். பலப்பல அளவை நூல்கள் தமிழில் பண்டு இருந்தன. இவ்விவரம் அறியாத பேராசிரியர் ஒருவர் “யான் சொலும் கவிதை என் மதி அளவை இவற்றினை” என்று வரும் மகாகவியின் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தலைப்பட்டு மதியளவை என்பதை extent of intellect என்று தவறாக மொழி பெயர்த்திருக்கிறார்.

சீன தேசத்து ஞானியான கன்பூசியஸ் (Confucius)  அருளிய மார்க்கத்தை மகாக்வி கன்பூசிமதம் என்று குறிப்பிடுகிறார். சீன தேசத்து உச்சரிப்பையே (கன்பூஜி) மகாகவி தமிழிலும் தந்திருக்கிறார். இதை விளங்கிக் கொள்ள முடியாத மொழிபெயர்ப்பாளர், கன்பூஜி மடம் என்பதைக் கண்ணாமூச்சி விளையாட்டு என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதன் துணைவேந்தர் டாக்டர் வ.அய்.சுப்ரமணியம் அவ்ர்கள் பாரதியார் கையாண்ட சொற்களில் 82 சதவிகிதம் செவ்விய தமிழ்ச்சொற்கள் என்று அறிவித்திருக்கிறார். எடுத்துக் காட்டுக்கு ஒன்றைக் காண்போம். பாரத மாதா தாமே பணித்தன்று என்று பாரதியார் வேல்ஸ் நகர இளவரசருக்குக் கூறிய வரவேற்புப் பாடலின் தலைப்பில் கூறியிருக்கிறார். இதில் இரண்டு செய்திகள் நாம் கற்க வேண்டியவை உள. பாரத மாதா தானே என்று சொல்லாமல், பாரத மாதா தாமே என்று மகாகவி மரியாதைப் பன்மையில் பேசியது நினைவில் கொள்ளத் தக்கது. பணித்தன்று என்று சொன்னால் பணித்தது என்று பொருள்படும்.

வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடிய பாடல் இப்படித் தொடங்குகிறது.

“ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்                          ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று                                கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர்              கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

இங்கு இழிந்தன்று என்று வரும் சொல்லிற்குப் பொருள் இழிந்தது என்பதாம். அதுபோன்றே உயர்ந்தன்று என்ற சொல்லிற்குப் பொருள் உயர்ந்தது என்பதே.

மகாகவி பாரத மாதா தாமே பணித்தன்று என்று கூறும்போது பணித்தன்று என்பதற்கு பணித்தது என்றே பொருள் கொள்ள வேண்டும். இதை விபரீதமாகப் புரிந்து கொண்டு அன்பர் ஒருவர் பணித்தது என்று என்று பொருள் கொண்டு அதன் அடிப்படையில் பல பக்கங்கள் தவறான விளக்கம் அளித்திருக்கிறார்.

பாரதியாரின் சில வாக்கியங்களுக்கு என்ன பொருள் என்று நமக்கு விளங்கவில்லை. “அல்லினுக்குப் பெருஞ்சுடர்” என்றும் “கல்லினுக்குள் அறிவொளி” என்றும் “புல்லினில் வைரப்படை” என்றும் பாரதியார் எவற்றைக் குறிக்கின்றார் என்பது தெளிவு படுத்தப்படல் வேண்டும் இப்படிப்பட்ட சொற்றொடர்களுக்கும், வாக்கியங்களுக்கும் பட்டியல் போட்டு ஆதாரத்தோடு விளக்கம் சமைத்தல் வேண்டும்.

சொற்களுக்கும் “காரண, தூல, சூக்கும” சரீரங்கள் உண்டு என்றும் அம்மூன்று நிலைகளிலும் மகாகவியின் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் நம உணர்ந்து கொளல் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், சொல்லெடுத்துச் சூக்குமத்தில் விட்டெறிந்து சுட்டபழம் உதிர்த்தவர் நம் மகாகவி. ஆக்வே மகாக்வியின் படைப்புகளுக்கான சொற்பொருள் அகராதி, சொறொபொருள் அடைவு, பெயர்ச்சொல் அகராதி, அடைவு ஆகியவை உருவக்கப்பட வேண்டும். இது வகையில் ஷேக்ஸ்பியர், மில்டன்,போன்ற மேனாட்டுப் புலவர்களைப் புரிந்து கொள்வதற்கென்று சமைக்கப்பட்ட அகராதிகள், அடைவுகள் ஆகிய்வற்றையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஞானிகள், விஞ்ஞானிகள், அருளாளர்கள், கவிகள், கட்டுரிஅயாளர்கள், சிறுகதை நாவல் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் வரலாற்றில் இடம் பெற்றவர்கள், இதிகாச, புராண பாத்திரங்கள், நண்பர்கள் என்றுள்ள பல்லோரைப் பற்றியும் மகாகவி செய்திகள் தந்திருக்கிறார். இதுவகையில் ஒரு பெயர்ச்சொல் அகராதியை உருவாக்கினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அப்பட்டியலி, இடம் பெறுவர். வெறும் பட்டியலாக அமைக்காது, அவரவர்களைப் பற்றிய முக்கியமான தகவல்களையும் உருவாக்கித் தருதல் மிகப் பயனுள்ள பணியாகும்.

............................

பாரதியார் சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, இந்தியா புதுவை, பாலபாரதி என்ற ஆங்கில வாராந்தரி, பாலபாரதா அல்லது யங் இந்தியா என்ற பெயர் மாற்றம் பெற்ற ஆங்கிலப் பத்திரிகை, கர்மயோகி (மாத இதழ்) சூர்யோதயம் (மாத இதழ்) தர்மம் (மாத இதழ்) சுப்ரமணிய சிவா தோற்றுவித்த ஞானபானு, சென்னையில் வெளிவந்த தி இந்து, அரவிந்தரின் ஆர்யா, அன்னிபெசண்ட் அம்மையாரின் நியு இந்தியா, காமன்வீல், தி மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் என்ற ஆங்கில இதழ் முதலிய பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். சித்ராவளி என்ற பத்திரிகையை வெளியிடப்போவதாக அறிவித்தார். ஆனால் அப்படி பத்திரிகை வெளிவரவில்லை. இதே போல் அமிர்தம் என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்க அவர் திட்டமிட்டார். அம்முயற்சி கைகூடவில்லை.

சுதேசமித்திரன் காரியாலயமே கதைகளுக்குப் பெரும் பங்கு அளித்து நடத்தி வந்த கதாரத்நாகரம் என்ற மாதப் பத்திரிகையிலும் பாரதியார் கதைகள் இடம் பெற்றன. இவை தவிர திரு வி.க. அவர்களின் நவசக்தி ஆண்டு மலரிலும், காரைக்குடியினின்றும் பிரசுரமான தன வைசிய ஊழியன் என்ற வாரப் பத்திரிகையிலும் சுப்ரமணிய சிவாவின் பிரபஞ்சமித்திரன்,இந்திய தேசாந்திர் ஆகிய பத்திரிகைகளிலும் பாரதியாரின் பாடல்களும் கட்டுரைகளும் வெளிவந்தன.

No comments: