பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, April 14, 2021

சேக்கிழாரடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்.

 

              மூத்த தமிழறிஞர் 

            தஞ்சாவூரில் சேக்கிழாரடிப்பொடி என்று சொன்னாலே அது முதுபெரும் தமிழறிஞரும், பாரதி ஆய்வாளரும், சைவ சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவரும், திருத்தருமை ஆதீனத்தில் சைவ சிந்தாந்தத்தின் இயக்குனராகவும் இருந்த வழக்கறிஞர் தில்லைஸ்தானம் நடராஜய்யர் ராமச்சந்திரன் என்பவரைத்தான் குறிக்கும்..

            திருவையாற்றில் ஒரு கூட்டத்தில் ஒருவர் பேசும்போது சம்ஸ்கிருதம் தேவபாஷை என்றார். டி.என்.ஆர். என்றே அறியப்பட்ட தி.ந.ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சொன்னார், “சம்ஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் மகாதேவ பாஷை” என்றதும் கைதட்டலில் மன்றம் அதிர்ந்தது.

            தஞ்சாவூர் செல்வம் நகரில் உள்ள அவரது வீட்டில் எப்போதும் அறிஞர்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். அவர்கள் கேட்கும் வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் மகிழ்ச்சியோடு விரிவாக பதிலளிப்பார். அவர்களில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இருக்காது, அனைவரின் ஐயப்பாடுகளையும் நீக்குவதில் குறியாக இருப்பார். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னையில் அவருடைய புதல்வர் இல்லத்தில் தனது 88ஆம் வயதில் காலமானார்.

            இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றை அடுத்த தில்லைத்தானம் எனும் தலத்தில் வாழ்ந்து வந்தார். சப்தஸ்தானம் எனும் பெரும் திருவிழா நடைபெறும் தலங்களான, திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைத்தானம் என்று சொல்லப்படும் ஊர்களில் கடைசி தலமான தில்லைத்தானம் இவர் வாழ்ந்த ஊர். இவர் அவ்வூரிலுலுள்ள பழமை வாய்ந்த ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி, திருவையாறு சீனிவாசராவ் மேல் நிலைப்பள்ளி, திருச்சி ஜோசப் கல்லூரி இங்கெல்லாம் படித்து சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞராக விளங்கினார். இவருடைய வாதங்கள் பற்றி மற்ற வக்கீல்கள் சொல்லும்போது அவர் வாதங்களில் இலக்கிய நயம் நிறைந்திருக்கும் என்பதால் எல்லோரும் அவர் பேச்சை கவனிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார் பிரபல வழக்கறிஞர் தஞ்சை வி.சு.ராமலிங்கம் அவர்கள்.

            இவருக்கு இருந்த தமிழ்ப் பற்றின் காரணமாக இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியங்கள், சைவ சித்தாந்தம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு அதில் தலை சிறந்து விளங்கினார். திருத்தருமை ஆதீனம் இவரை உலக சைவ சித்தாந்த சபையின் இயக்குனராக நியமித்திருந்தது. இவருடைய பெரிய புராண உரைகள் பெரிதும் பாராட்டப் பெற்றவை. ஆங்கிலத்தில் இவர் பெரும் புலமை பெற்று விளங்கியதால் பல தமிழிலக்கிய நூல்களை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிஒறார். பாரதியார் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். குயில் பாட்டை The Song of Kukkoo என்ற மிக அற்புதமான மொழிபெயர்ப்பு நூலாக வெளியிட்டிருக்கிறார்.  இவர் மொழி பெயர்த்துள்ள இதர சைவ சித்தாந்த நூல்கள் ஞானசம்பந்தரின் முதலாம் திருமுறை, நாவுக்கரசரின் ஆறாம் திருமுறை, மணிவாசகப் பெருமானின் எட்டாம் திருமுறை, திருக்கோவையார் இவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

            திருவாசகத்தின் பழைய மொழிபெயர்ப்புகளில் சில பிழைகள் இருப்பதைப் பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் இவர் திருவாசகத்தை பிழையின்றி மொழிபெயர்த்து வெளியிட்டார். இவர் மொழிபெயர்த்த இதர நூல்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவைகள் திருவிழைப்பா, திருப்பல்லாண்டு, காரைக்கால் அம்மையாரின் பிரபந்தங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம் இவற்றைக் குறிப்பிடலாம்.

            இவர் செல்வம் நகர் இல்லத்துக்கு யார் போனாலும் அன்போடு உபசரித்து அவரிடம் பேச்சுக் கொடுத்து, அவரிடம் அரிய பல செய்திகளை விளக்கி வந்தவர் திரும்பிச் செல்லும்போது இலக்கியத்தின் மீது புதிய ஈர்ப்புடன் திருபிச் செல்வர். யார் எத்துணை வினாக்களை எழுப்பினாலும் அவற்றுக்குப் பொறுமையாக பதில் சொல்லுவார். அவர் இல்லத்தின் வெளி முற்றத்தில் இருக்கும் ஊஞலில் உட்கார்ந்து தஞ்சை மாவட்டத்துகே உரிய வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக் கொண்டு அவர் சிரித்த முகத்துடன் விளக்கங்களைக் கொடுக்கும்போது நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

            பல கல்லூரி பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்று எப்போதும் அவர் இல்லத்தில் ஒரு அறிஞர்கள் குழாம் இருந்து கொண்டே இருக்கும். திருவையாறு பாரதி இயக்கம் எனும் அமைப்பு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கிட இவர் வழிகாட்டுதலும் உந்துதலும் காரணிகளாக இருந்திருக்கின்றன. இவரும் வக்கீல் வி.சு.ராமலிங்கம் ஆகியோர் கொடுத்த ஊக்கம் இன்றும் பாரதி இயக்கம் பாரதியைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

            இவருடைய இல்லத்தின் முதல் தளம் முழுவதும், வீட்டின் வாயில் புறத்திலும் இருந்த நூலகத்தில் ஐம்பதாயிரம் நூல்களுக்கும் மேலாக இருக்கும். யார் எந்தத் துறையில் சந்தேகங்களைக் கேட்டாலும் அவரிடம் அதற்கான நூல்கள் உண்டு. பல அரிய நூல்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிறந்த நூல்கள் இவைகளெல்லாம் இவரிடம் உண்டு. சமீபத்தில் அந்த நூலகத்தில் இருந்த நூல்கள் அனைத்தையும் தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்துக்குக் கொடுத்து விட்டார். அந்த வள்ளல் தன்மையை போற்றாதார் யார் இருக்க முடியும்? தான் காலமெல்லாம் தேடி சேகரித்த நூல்களை இளைய சமுதாயம் பயன்படுவதற்காகக் கொடுத்த பெருந்தன்மை முனைவர் டி.என்.ஆருக்கு உண்டு.

            இலங்கை யாழ்ப்பாணம் நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் இவர் சைவ சித்தாந்தம், பெரிய புராணம் குறித்தெல்லாம் தொடர் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். அவர்கள் இவருடைய பணிகளைப் பாராட்டி “முதுமுனைவர்” எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தார்கள். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவில்லத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதி விழாவின்போது இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இப்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் விருதினை அளித்து கெளரவித்தார்கள். பாரதி இல்ல வானவில் பண்பாட்டுக் கழகமும் இவருடைய பாரதி பணிகளைப் பாராட்டி விருது வழங்கியிருக்கிறார்கள்.

            திருவையாற்றைச் சேர்ந்தவரும், திருச்சியில் “சிவாஜி” எனும் தமிழ் பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திருலோக சீத்தாராம் என்பவர்தான் இவருக்கு வழிகாட்டி. புதுச்சேரியில் தமிழாய்வு மையத்தில் இருந்த தி.வே.கோபாலய்யர் எனும் தமிழறிஞரும், அவருடைய இளவல் தமிழ்ப் புலவர் ஒருவரும் இவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள். பல தமிழறிஞர்கள் கூடி தில்லைத்தானத்தில் “தேவசபை” என்ற பெயரில் மாதாமாதம் கூட்டங்கள் கூடி இலக்கியங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். பேராசிரியர்கள் எம்.எஸ்.நாடார், கே.ஜி.சேஷத்ரி, தஞ்சை சுவாமிநாத ஆத்ரேயர், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு, பேரா. தட்சிணாமூர்த்தி, இசையறிஞர் பி.எம்.சுந்தரம் போன்றவர்கள் தவிர, எந்த தமிழறிஞர் தஞ்சைக்கு வந்தாலும் இவருடன் உரையாடாமல் செல்ல மாட்டார்கள்.

            தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இவர் செய்த பெரியபுராண தொடர் சொற்பொழிவு பெரிய வரவேற்பப் பெற்றிருந்தது. திருவையாறு அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பனிடம் மாறா பக்தியுடையவர். இவருடைய அறுபது, எழுபது வயதிலும், எண்பதாவது ஆண்டிலும் இந்த ஆலயத்தின் சந்நிதியில்தான் வழிபாடுகளைச் செய்து கொண்டவர்.  ஈஸ்வரா என்று சொல்லிக்கொண்டு எப்போதும் நெற்றி நிறைய திருநீற்றுடன் காட்சி தருவார். பழகுதற்கு இனியவர், இவரே ஒரு பல்கலைக்கழகம் என்பதால் இவரைச் சுற்றி அறிஞர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

            இவருடைய மாமனார் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆண்டிக்காடு பாலசுப்ரமணிய ஐயர் என்பார் பல பிரபல வழக்குகளில் வாதாடியவர். முதுமுனைவர் டி.என்.ஆர். அவர்களுக்கு வயது காரணமாக உடல்நலம் சரியில்லாமல் போனதால் இவர் சென்னை தி.நகரிலுள்ள அவரது மகன் சுரேஷ் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் கடந்த 6ஆம் தேதி பிற்பகல் இந்நுயிர் நீத்து சிவனடி சேர்ந்தார். வாழ்க டி.என்.ஆர். புகழ்!

 

           

No comments: