பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, April 14, 2021

இந்திய நாட்டில் தேர்தல்கள்.

                                                

இந்தியத் திருநாட்டில் பிரிட்டிஷார் ஆட்சி புரிந்துகொண்டிருந்த போது 1934இல் தான் முதல் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலும் இப்போது போல பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வாக்களிக்கவும், 18 வயதான அனைவருக்குமான பொதுத் தேர்தல் இல்லை. சமூகத்தில் அந்தஸ்து உள்ள, கல்விமான்கள், நிலப்பிரபுக்கள், ஆங்கிலேய அரசால் விருதுகள் கொடுத்து கெளரவிக்கப்பட்டவர்கள், வியாபாரிகள், ஆங்கிலேயர்கள் சிபாரிசு செய்யும் பெரிய மனிதர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு ஆலோசனை அவையாகத்தான் அன்று இருந்தது. இப்போது போல மக்களின் பிரச்சினைகளை விவாதித்து சட்டங்கள் இயற்றும் அதிகாரம் அந்த அவைகளுக்கு இல்லை. ஆளுகின்ற பிரிட்டிஷ் அரசிடம்  சிலபல கோரிக்கைகளை ஆளுவோர் கவனத்துக்குக் கொண்டு செல்வது மட்டுமே இத்தகைய அவைகளின் பங்காகவும் இருந்தது. முடிவெடுப்பது ஆங்கில நிர்வாகத்தின் உரிமையாக இருந்தது.

1934இல் நடந்த அந்தத் தேர்தலில் மொத்தமே வாக்களிக்கக் கூடிய உரிமையுடையவர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 14,15,892 பேர் மட்டுமே. இவர்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 6,08,198, ஆம் ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர் மட்டுமே. இந்தத் தேர்தலில்தான் முதன் முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர் என்பது நமக்கெல்லாம் வியப்பளிக்கிறதல்லவா?  மொத்தம் பதிவு செய்துகொண்ட பெண் வாக்காளர்கள் 81,602 பேரில் 14,505 பேர் மட்டுமே வாக்களித்தார்கள் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அன்றைய தேர்தல் முறை இப்போது போல பரந்து விரிந்த மக்கள் உரிமையல்ல. நிலவுடைமையாளர்கள், பட்டதாரிகள் இப்படி ஒருசிலர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். அந்த தேர்தலில் இஸ்லாமியர்களுக்கென்று தனித் தொகுதிகள் இருந்தன. அவை 30 தொகுதிகள். அந்தத் தொகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் சுயேச்சை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களில் முகமது அலி ஜின்னாவும் ஒருவர்.

            மத்திய சட்டசபைக்குத் தேர்வான உறுப்பினர்கள்

அசாம் 4 பேர். ஆஜ்மிர் மேர்வாரா 1, வங்காளம் 17, பிஹார் & ஒரிசா 12, பம்பாய் 16   பர்மா (அப்போது இந்தியாவில் ஒரு மாகாணம்) 4, மத்திய மாகாணம் 6, டில்லி 1, மெட்ராஸ் 16, வடமேற்கு மாகாணம் 1, பஞ்சாப் 12, ஐக்கிய மாகாணம் 16. ஆக மொத்தம் 106 உறுப்பினர்கள்.

                        மத்திய சட்டசபைக்கு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவற்றில் சென்னை மாகாணத்திலிருந்து போனவர்கள்: சென்னை நகரம் எஸ்.சத்தியமூர்த்தி, சித்தூர் எம்.அனந்தசயனம் அய்யங்கார், விஜயநகரம் வி.வி.கிரி, கோதாவரி கிருஷ்ணா நாகேஸ்வர ராவ், குண்டூர் என்.ஜி.ரங்கா, சேலம், கோவை, வட ஆற்காடு டி.ஏஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார், தென்னாற்காடு, செங்கல்பட்டு சி.என்.முத்துரங்க முதலியார், திருச்சி, டஞ்சாவூர் டி.ஏஸ்.எஸ்.ராஜன், மதுரை, ராமநாதபுரம், பி.எஸ்.குமாரசாமி ராஜா, நீலகிரி சாமுவேல் ஆரோன், வட சென்னை உமர் அலி ஷா, தென் சென்னை மௌல்வி சையத் முர்டுசா பகதூர், ஹாஜி அப்துல் சத்தார், ஐரோப்பியர்களுக்கு எஃப்,இ.ஜேம்ஸ், கொல்லங்கோடு ராஜா சர் வாசுதேவராஜா, வர்த்தகர்கள் சாமி வெங்கடாசலம் ரெட்டி. ஆகியோர்.

1937 இல் சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தல்.

            1937இல் இந்தியா முழுவதிலுமுள்ள மாகாணங்களின் பிரதிநிதித்துவ சபையாக விளங்கிய மத்திய சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மொத்த இடங்களான 215இல் 159 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்தில் சட்டசபை அமைக்கப்பட்டு அதற்கு நடந்த தேர்தலில் முதல் வெற்றியை காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பெற்று தங்கள்  சட்டசபை அரசியல் வரலாற்றைத் தொடங்கியது. இதற்கு முன்பு 1920இல் சென்னை மாகாணத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்று 17 ஆண்டுகள் ஆண்டு வந்தார்கள். 1937இல் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட சென்னை சட்டசபைக் கூட்டம் 1937 ஜூலை மாதத்தில் சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தலைமையில் பதவியேற்றுக் கொண்டது.

            இந்தியா முழுவதும் எல்லா மாகாணங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வெற்றி சென்னை மாகாணத்தில்தான் குறிப்பிடத் தகுந்த வெற்றியாக அமைந்திருந்தது. 1937இல் பதவியேற்ற ராஜாஜியின் காங்கிரஸ் மந்திரி சபை 1939 அக்டோபரில் முடிவுக்கு வந்தது. காரணம் பிரிட்டிஷ் இந்திய அரசு அப்போது தொடங்கியிருந்த இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை கலந்து ஆலோசிக்காமலே இந்தியாவை உலகப் போரில் ஈடுபடுத்தியதை எதிர்த்து ராஜாஜி அரசு ராஜிநாமா செய்து விட்டது. இதற்குப் பிறகு 1946இல் தான் மற்றுமொரு தேர்தல் சென்னை மாகாணத்தில் நடைபெற்றது.

            பிரிட்டிஷார் இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஆக்கிரமித்து, இந்தியா முழுமையையும் ஆட்சி புரியத் தொடங்கிய பின் இந்திய நிர்வாகத்தைத் தங்கள் விருப்பப்படி மாகாணங்கள் என பிரித்து, ஒவ்வொரு மாகாணத்தின் கீழும் பிரதேசங்களை முடிவு செய்து, அங்கெல்லாம் அரசுக்கு ஆதரவான நபர்களைக் கொண்டு ஒரு ஆலோசனை சபையை அமைத்துக் கொண்டு ஆளத் தொடங்கினார்கள். அதற்காக அவர்கள் 1935இல் Government of India Act 1935  என்ற சட்டத்தை உருவாக்கி மாகாணங்களை உருவாக்கி அங்கு ஒரு கவர்னரையும் இரண்டு சட்ட மன்றங்கள், ஒன்று அசெம்பிளி என்றும் மற்றொன்று கவுன்சில் என்ற பெயரிலும், அதாவது சட்டசபை, மேல் அவை என்று இரு பிரிவாக வைத்து ஆட்சி புரியத் தொடங்கினார்கள். சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்துக்கு 215 உறுப்பினர்கள், இவற்றில் பொதுவான மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜெனரல் இடங்கள் என்றும், சில குறிப்பிட்ட ஜாதியாருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும் இருவகை பிரதிநிதித்துவம் இருந்து வந்தது.

            1935இல் உருவான சட்டசபையில் பொதுவானர்களுக்கென்று 116 இடங்களும், பட்டியல் இனத்து பிரதிநிதிகள் 30 பேரும், இஸ்லாமியர்கள் 28 பேரும், இந்திய கிறிஸ்தவர்கள் 8 பேரும், பெண்கள் 8 பேரும், நிலப்பிரபுக்கள் 6 பேரும், வர்த்தகம், தொழில்துறையினர் 6 பேரும், தொழிலாளர், தொழிற்சங்கங்கள் 6 பேரும் ஐரோப்பியர்கள் 3 பேரும், ஆங்கிலோ இந்தியக்ர்ள் 2 பேரும், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதி ஒருவரும், பிற்பட்ட பகுதிகள், பழங்குடியினர் 1 ஆகியோர் அடங்கியதாக அமைந்திருந்தது.

 

            சட்ட மேலவை என்கிற கவுன்சிலில் 54 உறுப்பினர்கள் இருந்தார்கள். 56 வரை அதனை அதிகரிக்க அதிகாரம் இருந்தது. இந்த கவுன்சில் தொடர்ச்சியாக செயல்படும், அந்தந்தப் பிரிவு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்தால், வேறு சிலர் பதவியேற்பார்கள், ஆக அந்த அவை தொடர்ச்சியாக இருந்துவந்தது. ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கொரு முறை இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். இந்த 54 உறுப்பினர்களில் 46 பேர்  வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், கவர்னர் 8 முதல் 10 பேர் வரை அவர் விரும்பியவர்களை நியமித்துக் கொள்ளலாம். அப்படி 1935இல் உருவான கவுன்சிலில் இருந்த உறுப்பினர்கள் விவரம்: பொது உறுப்பினர்கள் 35 பேர், இஸ்லாமியர் 7 பேர், இந்திய கிறிஸ்தவர்கள் 3 பேர், ஐரோப்பியர்கள் ஒருவர், கவர்னரால் பரிந்துரைக்கப்பட்டு தேர்வானவர்கள் 8 முதல் 10 வரை.

            பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என்ற உரிமை நிலவுடைமை யாளர்களுக்கு மட்டுமே இருந்தது. அப்போதைய மக்கட் தொகையில் 15 சதவீதம் பேர், உத்தேசமாக 70 லட்சம் பேர் சென்னை மாகாணத்தில் நிலவுடைமையாளர்களாக வரி செலுத்தி வந்தவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் தனித்தனி வாக்குப் பெட்டிகள் இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறப் பெட்டி இருந்தது. அவர்கள் வாக்கு கேட்கும் போது “மங்களகரமான மஞ்சள் பெட்டியில் வாக்களியுங்கள்” என்று பிரச்சாரம் செய்வார்கள். இஸ்லாமியர்களுக்கு பச்சை நிறப் பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும், பிரச்சாரங்களும்.

            1930 தொடங்கி அப்போது ஆட்சி புரிந்து வந்த பொப்பிலி ராஜாவின் தலைமையிலான ஜஸ்டிஸ் கட்சி சிறிது சிறிதால வலுவிழந்து வரத் தொடங்கியது. கட்சியினுள் கோஷ்டிகள் உருவாகி ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுக்கத் தொடங்க ஆட்சி பலவீனப்பட்டுப் போனது, அதோடு கூட பொப்பிலி ராஜாவின் சர்வாதிகார போக்கும் பிரிவினைகளுக்குக் காரணிகளாக அமைந்தன. பொப்பிலி ராஜாவை அவர் கட்சிக் காரர்களே கூட எளிதில் சந்திக்க முடியாத நிலைமை இருந்தது. அவர் காலத்தில் மாவட்டங்களில் இருந்த கட்சி தலைவர்களின் வளர்ச்சிக்கு அவர் தடையாக இருந்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக மாவட்டத் தலைவர்களின் புகழ் மக்கள் மத்தியில் மங்கத் தொடங்கியது. அது கட்சியின் வெற்றியை பாதிக்கத் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் “சுதந்திர சங்கு” என்றொரு தேசிய பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. சங்கு சுப்ரமணியம், சங்கு கணேசன் என்பவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். அந்த பத்திரிகையின் 1935 பிப்ரவரி 26ஆம் தேதி இதழில் உள்ளாட்சி மன்றங்களின் செயல்பாடுகள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு மக்கள் பணி தேங்கி நின்றது என்பதை விளக்கமாக எழுதியிருக்கிறது.

            உள்ளாட்சித் துறை சம்பந்தப்பட்ட Local Boards Act சட்டம் திருத்தப்பட்டு பல விதிமுறைகள் மாற்றப்பட்டன, தாலுகா போர்டுகள் என்பதே அறவே நீக்கப்பட்டன. ஆட்சியாளர்களுக்கு உடன்படாத ஜில்லா போர்டு நிர்வாகமும் பிரிக்கப்பட்து. விளைவு நிர்வாகம் சீர்குலைந்தது. பொப்பிலி ராஜாவின் ஆணைக்கு உடன்படாத நகரசபைகள் கலைக்கப்பட்டன, நகரசபை தலைவர்கள் நீக்கப்பட்டனர், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் உரிமைகளைப் பறிக்க கமிஷ்ணர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது.

            1930களில் உருவான கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் போது பிரிட்டிஷ் அரசின் மனிதாபிமானமற்ற செயல்பாடுகளுடன் ஆளும் ஜஸ்டிஸ் கட்சி இணைந்து செயல்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. பஞ்சமும், பொருளாதார வீழ்ச்சியும் தலைவிரித்தாடிய நேரத்திலும் நிலவரியை குறைக்கவோ, ரத்து செய்யவோ அரசாங்கம் மறுத்துவிட்டது. தானே ஒரு ஜமீன்தார் என்பதால் பொப்பிலி ராஜா காங்கிரசின் எதிர்ப்புகளை கடுமையாக நிராகரித்தார். இது மக்கள் மத்தியில் அவர் மீதான எதிர்ப்பை அதிகரித்தது.

            இதெல்லாம் பிரிட்டிஷாருக்குத் தெரியாமலில்லை. அப்போது சென்னை கவர்னராக இருந்த எர்ஸ்கின் பிரபு என்பவர் இங்கிலாந்திலுள்ள இந்தியா மந்திரிக்கு 1937 பிப்ரவரி மாதம் ஒரு கடிதம் எழுதினார். அதில் சென்னை மாகாணத்திலுள்ள விவசாய பெருங்குடி மக்கள் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் மீது வெறுப்படைந்திருப்பதைக் குறித்து விவரித்திருந்தார். அதில் அவர் சொல்லியிருந்த வரிகள் ஆங்கிலத்தில் “every sin of omission or commission of the past fifteen years is put down to them (Justice Party). வறட்சி, பஞ்சம் இவற்றாலும், வரிவிகிதம் குறைக்கப்படாமல் சிரமத்தில் இருந்த மக்கள் அப்போதைய ஜஸ்டிஸ் கட்சி அமைச்சர்கள் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கை மீது வெறுப்படைந்தார்கள். சென்னை பத்திரிகைகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து எழுதத் தொடங்கியது. அப்படி அவர்கள் வெளியிட்ட ஒரு முக்கியமான செய்தி மத்திய மாகாணத்தில் மந்திரிகள் மாதம் 2250 ரூபாய் ஊதியம் வாங்கும்போது, சென்னை மாகாணத்தி மாதம் 4333.60 வாங்குவதைச் சுட்டிக் காட்டி யிருந்தார்கள். இந்த விவரங்களை வெளியிட்ட சென்னை ஊடகங்கள் கேட்டிருந்த கேள்வி “சென்னை மாகாண அமைச்சர்களுக்கு மாதம் ரூ.2000 போதாதா? அவர்களில் பலர் பற்பல சிறிய ஊர்களில் வாழும் இரண்டாந்தர வக்கீல்கள். அங்கெல்லாம் மக்கள் வறுமையில் வாடுகின்ற போது இவர்களுக்கு இவ்வளவு ஊதியம் தேவையா என்றெல்லாம் எழுதினார்கள்.

            இத்தனை துன்பங்களில் மக்கள் வாடும் நிலைமையில் பணிகளில் ஆட்குறைப்பும் நடந்தது. ஏழை எளியவர்கள் துன்பத்தின் எல்லைக்குத் துரத்தப்பட்டார்கள். இதற்கெல்லாம் எந்த விளைவும் இல்லை. அமைச்சர்கள் பட்ஜெட் சமர்ப்பித்துவிட்டு சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார்கள்.

            ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டு, முந்தைய ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிகளுக்கு முட்டுக் கொடுத்து எழுதிக் கொண்டிருந்த “தி மெட்ராஸ் மெயில்” பத்திரிகை கூட அப்போதைய பொப்பிலி ராஜாவின் ஆட்சிக்கு எதிராக எழுதத் தொடங்கியது. 1935ஆம் வருஷம் ஜூலை 1ஆம் தேதி இதழில் அதன் தலையங்கத்தில் எழுதியது “ஜஸ்டிஸ் கட்சி தன்னை மற்றிக் கொள்ள வேண்டுமானால், இப்போதைய நடைமுறைகள் மாற்றிக் கொள்ளப்பட வேண்டும். “ஜமீன் ரயட்” எனும் ஜஸ்டிஸ் ஆதரவு பத்திரிகை கூட தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் எழுச்சி.

            1935இல் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்கட்சியாக விளங்கிய சுயராஜ்யக் கட்சி காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தவுடன், சுயராஜ்ய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக தீரர் எஸ்.சத்தியமூர்த்தி இருந்தார். அன்றைய காங்கிரஸ் கட்சி 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிர போராட்டத்தாலும் 1930-31இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தினாலும் மக்கள் இயக்கமாக விளங்கியது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிய வரிகொடா இயக்கம் கட்சிக்கு வலு சேர்த்து, மக்கள் ஆதரவைப் பெற்றது. வரிகொடா இயக்கத்தினால் விவசாய மக்களும், ராட்டையில் நூல் நூற்பது, தறியில் துணி நெய்வது எனும் காங்கிரசின் கொள்கையினால் நெசவாளர்களும் காங்கிரசின் பால் ஈர்க்கப்பட்டனர். காங்கிரசில் ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் மக்கள் தலைவர்களாக மலர்ந்தனர். அதே நேரத்தில் ஜஸ்டிஸ் கட்சியோ ஆற்காடு ராமசாமி முதலியாரை மட்டுமே நம்பி இருந்தது.

            காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் விவசாயிகள், விவசாயக் கூலிகள், நெசவாளர்கள், வியாபாரிகள் ஆகியோரைக் கவர்ந்திழுத்தது. இப்படி அசுர வளர்ச்சி கொண்ட காங்கிரசை எதிர்கொள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு காங்கிரசில் பிராமண ஆதிக்கம் என்ற ஒரே குற்றச்சாட்டைச் சொல்வது தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது காங்கிரசை ஜனரஞ்சகமான பொதுமக்கள் பங்கு பெறும் இயக்கமாக ஆக்குவதற்காக சத்தியமூர்த்தி, சித்தூர் நாகையா என்கிற நடிகர், கே.பி.சுந்தராம்பாள் எனும் பாடகி ஆகியோரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு பிரச்சாரத்தில் இறங்கினார். இவர்களில் கே.பி.சுந்தராம்பாள் சத்தியமூர்த்தி பேசும் கூட்டங்களில் எல்லாம் பாடல்களைப் பாடி மக்களைத் தன் வசம் இழுத்தார். ஒருசில திரைப்படங்களில் பேசி ராஜாஜி, சத்தியமூர்த்தி ஆகியோர் தங்கள் பிரசாரங்களைத் தொடங்கினார்கள். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அந்தப் படங்களை தடை செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் மஞ்சள் பெட்டி கிடைத்ததும் நல்லதாகப் போயிற்று. மஞ்சள் மங்களகரமானது என்று அவர்கள் பிரச்சாரம் செய்தது நன்கு வேலை செய்தது.

இதர கட்சிகள்.

          சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி தவிர சென்னை மாகாண முஸ்லீம் லீக் என்ற கட்சி ஜமால் முகமது என்பவர் தலைமையில் இயங்கியது. பித்தாபுரம் ராஜா தொடங்கிய சென்னை மக்கள் கட்சி என்ற கட்சி இது ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்தது, நவாப் சி.அப்துல் ஹகிம் அன்ட் எஸ்.எம்.பாஷா தலைமையிலான முஸ்லிம் முன்னேற்றக் கட்சி ஆகியவைகளும் இருந்தன.

            நடந்து முடிந்த தேர்தலில் பல ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் தோற்றுப் போனார்கள். பொப்பிலி ராஜாவை பொப்பிலி தொகுதியில் காங்கிரசின் வி.வி.கிரி 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தோல்வியுற்றவர்களில் இதர பிரபலமானவர்கள் வேங்கடகிரி குமாரராஜா, சர் பி.டி.ராஜன், ஏ.பி.பாட்ரோ, ராமநாதபுரம் ராஜா ஆகியொராவர்.

            1937 பிப்ரவரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ராஜாஜி முதலமைச்சராக ஆனார்; அப்போது பிரதம அமைச்சர் என்று குறிப்பிடுவார்கள், 1937 மார்ச்சில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சென்னை தவிர வேறு ஆறு மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் பதவியேற்க மறுத்தார்கள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? 1935 Government of India Act  இன்படி ஆட்சி அதிகாரத்தில் நிதித் துறை நிர்வாகமும், மந்திரிசபை எடுக்கும் எந்த முடிவையும் ஏற்பதா நிராகரிப்பதா என்கிற உரிமை கவர்னருக்கு உண்டு என்று சொல்லும் பிரிவும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் பதவியேற்க இந்த ஆறு மாகாணங்களிலும் மறுத்து விட்டது.

            பிரிட்டிஷ் அரசுக்கு இது ஒரு கெளரவப் பிரச்சனை. என்ன செய்வது? ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அவர்களே சிலரைக் கொண்டு வந்து முதலமைச்சராக நியமித்து ஆட்சியை நடத்த முன்வந்தார்கள். கவர்னர் எர்ச்கின் பிரபு என்ன செய்தார் தெரியுமா? ரைட்டானரபிள் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியை அழைத்து முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சாஸ்திரி அதனை மறுத்து விட்டார். வேறு வழியில்லாமல் கவர்னர் எர்ஸ்கின் குர்ம வெங்கட ரெட்டி நாயுடு என்பவர் தலைமையில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியை 1937 ஏப்ரல் 1 அன்று நியமித்தார். 

அந்த மந்திரிசபையில் குர்ம வென்கட ரெட்டி நாயுடு முதலமைச்சர், ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.ஏ.முத்தையா செட்டியார், பி.கலிபுல்லா சாஹேப் பகதூர், எம்.சி.ரஜா, ஆர்.எம்.பலாட் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தார்கள்.

 

 

காங்கிரசில் எஸ்.சத்தியமூர்த்தி போன்ற சிலர் பதவியை நிராகரிப்பதை விரும்பவில்லை. அதனால் அவர் காந்தியடிகளையும், நேருவையும் நிர்ப்பந்தித்து சென்னை மாகாணத்தில் சில நிபந்தனைகளுக்குபட்டுக் காங்கிரஸ் மந்திரிசபை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

            அப்போதைய வைஸ்ராய் லின்லித்கோ ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் பிரிட்டிஷ் அரசாங்கம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 1935ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி ஆட்சி அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.  அந்த ஆண்டு ஜூலை 1இல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது. ஜூலை 14 அன்று ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் ஒரு காங்கிரஸ் ஆட்சி உருவாயிற்று. அடுத்த நாளே புலுசு சாம்பமூர்த்தி சபாநாயகராகவும், டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி துணை சபாநாயகராகவும் பதவியேற்றார்கள். இந்த ருக்மணி லக்ஷ்மிபதிதான் 1930 உப்பு சத்தியாக்கிரகத்தின் போது வேதாரண்யத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட தியாகி.

            1937இல் பதவியேற்றுக்கொண்ட ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்த மந்திரிகள் பெயர்கள்: ராஜாஜி (முதலமைச்சர், நிதி) டி.பிரகாசம் (ரெவின்யூ), பி.சுப்பராயன் (சட்டம், கல்வி), சூரியநாராயணமூர்த்தி (தொழில்கள்), பி.கோபால ரெட்டி ( உள்ளாட்சி), டி.எஸ்.எஸ்.ராஜன் (ஹெல்த், இந்து அறநிலையம்) , மவுலானா யாகூப் ஹசன் சேட் (பொதுப்பணி), வி.ஐ.முனுசாமி பிள்ளை (விவசாயம்), எஸ்.ராமநாதன் (பொது நிர்வாகம்), கே.ராமன் மேனன் (நீதிபரிபாலனம்)

            இவர்களில் 1939 ஜனவரி 7இல் ராமன் மேனன் என்பவர் காலமானார் அவர் இடத்தில் வர்க்கீஸ் சுங்கத் என்பவர் அமைச்சராக நியமனம் ஆனார்.  கல்வி த்துறை சுப்பராயனிடமிருந்து இவருக்கு மாற்றப்பட்டது.

            1937ஆம் ஆண்டு தேர்தல்தான் இந்திய த் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கோலோச்சத் தொடங்கியது. ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக ஆனதும் சென்னை மகாணத்தின் காங்கிரஸ் வளர்ச்சிக்கு தொடக்கம். தேர்தல் பிரச்சாரத்தில் சத்தியமூர்த்தியே முன்னிலை வகித்தார், ஆனால் முதலமைச்சர் பதவி ராஜாஜிக்குப் போயிற்று. இதுமுதல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸின் ஆதிக்கம் தொடங்கியது. 1939இல் ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை பிரிட்டிஷ் அரசு உலக யுத்தத்தில் இந்தியாவையும் ஈடுபடுத்தியதைக் கண்டித்து ராஜிநாமா செய்தார்கள். பிறகு 1946இல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி இங்கே தொடர்ந்து 1967இல் தி.மு.க.விடம் தோற்றது வரை காங்கிரஸ் ஆட்சி சென்னை மாகாணம் பின்னால் தமிழ்நாடு என்றழைக்கப்பட்ட மாநிலத்தில் நடந்து வந்தது.

            தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்த பிறகு பொப்பிலி ராஜா அரசியலில் இருந்து விலகிவிட்டார். கட்சியின் செயல்பாடு அதன் பிறகு வளர்ச்சி இல்லாமல் பல மாற்றங்களைக் கண்டு, கடைசியாக பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் வசம் போய், அது 1944இல் திராவிடர் கழகமாக உருவாகிற்று.

1946 இல் நடந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தல்.

            சென்னை மாகாணத்துக்கு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்ற தேர்தல் 1946இல் நடைபெற்றது. 1936இல் ராஜாஜி தன் அமைச்சரவையை ராஜிநாமா செய்த ஆண்டு முதல் சென்னை மாகாணத்தில் கவர்னர் ஆட்சியில் இருந்து கொண்டிருந்தது. அது இரண்டாம் யுத்த காலம் என்பதாலும், அரசின் கவனம் உலக யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது என்பதால் உள்நாட்டுத் தேர்தல்கள், அமைச்சரவை அமைப்பது போன்ற வற்றில் கவனம் செலுத்தவில்லை.

            ஐரோப்பாவில் நாஜி ஜெர்மனியை எதிர்த்து நேச நாடுகள் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. கிழக்கில் ஜப்பான் தூரக் கிழக்கு நாடுகளையெல்லாம் வென்று தன் ஆளுமையை நிலைநாட்டிக் கொண்டு வந்து, கடைசியில் பர்மாவில் நுழைந்து இந்திய எல்லை வரை வந்து விட்டது. இந்த சூழ்நிலையில் அரசு போரில் கவனம் செலுத்துமா, உள்ளூர் தேர்தலில் கவனம் செல்லுமா? ஒரு வழியாக உலகப் போர் ஓய்ந்தது. ஜெர்மனியும் ஜப்பானும் தோல்வியடைந்தன. நேச நாடுகள் போர்க்கால அழிவுகளில் இருந்து மீண்டு புத்துயிர் பெற பாடுபட வேண்டியிருந்தது.

            அந்த அடிப்படையில் சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு இரண்டாவது பொதுத் தேர்தல் நடக்க ஏற்பாடாகியது. அதன்படி சென்னை மாகாண சட்டசபைக்கான தேர்தல் 1946இல் நடைபெற்றது. 6 ஆண்டுகள் கவர்னர் ஆட்சியில் இருந்த மாநிலம் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு ஏற்படத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் சட்டசபைக்கும், மேலவைக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 215 மொத்த இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் 163 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடையே அவரவர்களுடைய மாநில உணர்வு ஏற்பட்டு மாநிலம் சார்ந்த பிரிவுகள் தோன்றின. குறிப்பாக தமிழ் நாடு, ஆந்திரா உறுப்பினர்களிடையே போட்டா போட்டி இருந்து வந்தது. அது போதாதென்று பிராமணர், பிராமணர் அல்லாதார் என்கிற பிரச்சினையும் தலைதூக்கியது. இந்த போட்டியில் ஆந்திர பிராமணர் டி.பிரகாசம், தமிழக பிராமணர் ராஜாஜி, தமிழக பிராமணர் அல்லாத காமராஜர் ஆகியோருக்கிடையே நடந்த இழுபறியில் ஆந்திர டி.பிரகாசம் பிரதம அமைச்சராக தேர்வானார். இவர் சிறிது காலமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்க முடிந்தது. பதவிக்கு நானா, நீயா போட்டியில் இவர் கீழே இறக்கப்பட்டார், அவர் இடத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் என்கிற காங்கிரஸ் தலைவர் முதல்வராக ஆனார். காமராஜரின் ஆதரவு இவருக்கு இருந்தது. இந்த நிலைமையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை, அதற்குள் உள்கட்சி பிரச்சினை காரணமாக ஓமாந்தூரார் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல்வராக ஆனார்.

மீண்டும் கவர்னர் ஆட்சி.

            1939இல் ராஜாஜி மந்திரிசபை ராஜிநாமா செய்த பிறகு ஒன்பது ஆண்டுகள் உலக யுத்தம் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. இதற்கிடையே உலக யுத்தம் முடிவுக்கு வந்தது. 1945இல் இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சி தோற்றுப் போனது, கிளெமெண்ட் ஆட்லியின் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1945 ஜூலையில் ஆட்லி பதவியேற்றார்.  இவருடைய தொழிற்கட்சி இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதில் ஆர்வமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் வைஸ்ராயாக இருந்தவர் வேவல் பிரபு.

            லார்ட் வேவல் என்றழைக்கப்பட்ட இந்த இந்திய வைஸ்ராய் “வேவல் திட்டம்” (Wavell Plan) அறிமுகம் செய்து அதன்படி சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் விடுதலை செய்யப்படவும், புதிதாக சட்டமன்றத்துக்கு ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் அறிவித்தார். அந்த அடிப்படையில்தான் 1946இல் சென்னை மாகாணத்திலும் ஒரு தேர்தல் வந்தது.

            இந்த காலகட்டத்தில் ராஜாஜிக்கும், காமராஜர் அவர்கௌக்கும் சென்னை மாகாண காங்கிரசில் தலைமைக்குப் போட்டி இருந்து வந்தது. ராஜாஜி 1942 ஜூலை 15இல் காங்கிரசில் இருந்து ராஜிநாமா செய்திருந்தார்.  பாகிஸ்தான் பிரிவினை சம்பந்தமான கருத்து வேறுபாடு காரணமாக ராஜாஜி காங்கிரசை விட்டு விலகியிருந்தார். 1942க்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரசின் தலைமை காமராஜ் அவர்க்ளிடம் மட்டும் தான் இருந்தது. இந்த நிலையில் 1945இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசில் இணைந்தார். ராஜாஜியின் வரவை டெல்லியில் இருந்த காங்கிரஸ் தலைமை பெரிதும் வரவேற்றது. இங்கு அவருடைய பணிகளைப் பயன்படுத்திக் கொள்ள டெல்லி தலைமை ஆவலாக இருந்தது.  அதுவரை எதிரும் புதிருமாக இருந்த ராஜாஜி சத்தியமூர்த்தி ஆகியோரில் சத்தியமூர்த்தி காலமாகிவிட்டார். டி.பிரகாசம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய செல்வாக்கு ஆந்திரப் பகுதிகளில் மட்டும் தான் இருந்தது. அப்போது காமராஜ் இளையவர் என்பதால், ராஜாஜி காங்கிரஸ் தலைவராவதில் பெரும் ஆதரவு அலை வீசியது. இந்த நிலைமையில் மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 1945 அக்டோபர் 31இல் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமைக்கு யார் என்கிற போட்டியில் ராஜாஜிக்கு சி.என்.முத்துரங்க முதலியர், எம்.பக்தவத்சலம் ஆகியோர்  ஆதரவளித்தனர். மத்திய காங்கிரஸ் கமிட்டி டெல்லியில் இருந்து ஆசப் அலியை மத்தியஸ்தம் செய்ய இங்கே அனுப்பி வைத்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் ராஜாஜியின் தலைமையை விரும்பியது. ஆனால் சர்தார் வல்லபாய் படேல், ராஜாஜி சென்னையில் பதவியில் இருப்பதைவிட மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டுமென்று விரும்பினார்.

            ஆனால் ராஜாஜி சென்னை மாகாண அரசியலில் இருப்பதையே பெரிதும் விரும்பினார். அப்போதைய தேர்தல் விதிமுறைகளின்படி அவர் சென்னை பல்கலைக்கழக தொகுதியில் இருந்து பொட்டியிட விரும்பினார். ராஜாஜி இல்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் இல்லை என்கிற மனப்பான்மையை காமராஜ் முதலியவர்கள் ஏற்கவில்லை. இதற்கிடையே சென்னை இந்தி பிரசார சபா விழாவுக்கு வந்திருந்த காந்தி தன்னுடைய “ஹரிஜன்” பத்திரிகையில் ராஜாஜியை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  அதில் சென்னை மாகாண காங்கிரசில் நிலவும் பிளவினைக் குறிப்பிட்டு “க்ளிக்” (Clique)  என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். காந்திஜியின் இந்தக் கட்டுரை மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. காந்திஜிக்கு பல தந்திகள் கடிதங்கள் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்டன. அவர் பயன்படுத்திய “க்ளிக்” என்ற சொல்லைத் திரும்பப் பெறவில்லையானால் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூட எழுதியிருந்தார்கள். ஆனால் காந்தி இதற்கு அசைந்து கொடுக்கவில்லை. 1946 பிப்ரவரி 12இல் காமராஜ் காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டிலிருந்து ராஜிநாமா செய்தார். இந்த குழப்பங்களையெல்லாம் பார்த்து ராஜாஜி தீவிர அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்.  அப்படி ராஜாஜி ராஜிநாமா செய்தது வல்லபாய் படேலுக்குப் பிடிக்கவில்லை. இப்படி ராஜாஜி ராஜிநாமா செய்து விலகுவது மூன்றாவது தடவை, முதலில் 1923 பிறகு 1936 அதன் பின் இப்போது.

திராவிடர் கழகம் உதயம்.

            சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் பார்ட்டி என்கிற நீதிக் கட்சி காங்கிரசுக்கு முதல் எதிர்க்கட்சியாக இருந்தது. 1937 தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பிறகு கட்சியின் நடவடிக்கைகள் குறையத் தொடங்கின. 1937-40 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அதில் ஜஸ்டிஸ் கட்சியும் ஈ.வே.ராமசாமி நாயக்கருடனும், சுயமரியாதை இயக்கத்துடனும் இணைந்து செயல் ஆற்றியது. அதன் பிறகு ஜஸ்டிஸ் கட்சி ஈ.வே.ரா.வின் தலைமையினுள் 1938 டிசம்பர் 29இல்  வந்துவிட்டது. இந்த கட்சியை ஈ.வே.ரா. 1944 ஆகஸ்ட் 27 அன்று திராவிடர் கழகம் என்ற பெயரில் மாற்றினார்.  தனித் திராவிட நாடு இவர்கள் கோரிக்கையாக இருந்தது. இதனால் இந்தக் கட்சி 1946 தேர்தலை புறக்கணித்தது.

இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு.

            1934இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை தொடர்ந்து போர்க்காலத்திலும் இருந்து வந்தது. அதை 1942ஆம் ஆண்டில் தடை நீக்கப்பட்டது. அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பி.சி.ஜோஷி 1946 தேர்தலில் பங்கேற்பது என்ற முடிவை எடுத்தார். அவர்கள் 215 இடங்களில் 103 இடங்களில் பொட்டியிட்டார்கள். இரண்டு இடங்களில் வெற்றி பெற்றார்கள், ஒன்று ரயில்வே தொழிலாளர் சங்கப் பிரதிநிதியாக ஒன்று, மேற்கு கோதாவரி கிருஷ்ணா குண்டூர் தொழிலாளர் யூனியன் தொகுதி ஆகிய இரண்டிலும் வெற்றி அவர்களுக்கு.

            1946 தேர்தலி கட்சிவாரியான எண்ணிக்கை:-

காங்கிரஸ் 163,  முஸ்லீம் லீக்  28, சுயேச்சையான கட்சி 7, சுயேச்சைகள் 6, ஐரோப்பியர்கள் 6, கம்யூனிஸ்ட்டுகள் 2.

1946 மார்ச் 30இல் தேர்தல்கள் முடிவுற்றன. புதிய அரசு ஏப்ரல் 29க்குள் அமைக்க வேண்டிய சூழ்நிலை. காங்கிரஸ் யாருடைய தலைமையில் ஆட்சி அமைப்பது என்பதில் இழுபறியாக இருந்தது. அப்போதைய சென்னை மாகாணம் தமிழ்நாடு, ஆந்திரா, மைசூர், கேரளத்தின் பகுதிகள் இருந்தன. இதில் அமைச்சரவை அமைப்பதில் இம்மாநிலங்கள் மத்தியில் ஒரே இழுபறி. இந்த சூழ்நிலையில்தான் டி.பிரகாசம் தலைமையில் ஒரு அரசு சென்னையில் உருவாயிற்று.

            அந்த அமைச்சரவையில் டி.பிரகாசம் தவிர, வி.வி.கிரி, எம்.பக்தவத்சலம், டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார், பாஷ்யம் ஐயங்கார், பி.ஏஸ்.குமாரசாமி ராஜா, டேனியல் தாமஸ், ருக்மணி லட்சுமிபதி, கே.ஆர்.கராந்த், கோட்டி ரெட்டி, வெமுலா குருமைய்யா, பி.வீராச்சாமி, ஆர்.ராகவ மேனன் ஆகியோர் இருந்தார்கள். இவர்களில் பி.வீராச்சாமி 1947 பிப்ரவரை 3இல் ராஜிநாமா செய்ய அவர் இடத்துக்கு பி.வெங்கடரத்தினம் என்பவர் நியமனம் ஆனார்.

            விரைவில் டி.பிரகாசம் மந்திரிசபை கவிழ்ந்து ஓமாந்தூரார் தலைமையில் ஒரு புதிய அமைச்சரவை உருவாயிற்று. 21-3-1947இல் இந்த அமைச்சரவை பதவியேறது. இவருக்கு காமராஜ் அவர்கள் ஆதரவு இருந்தது. ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பட்டியல்

ஓமாந்தூர் ராமசாம்ய் ரெட்டியார், முதலமைச்சர், எம்.பக்தவத்சலம், பி.சுப்பராயன், டி.எஸ்.எஸ்.ராஜன், டி.ஏஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார், டேனியல் தாமஸ், வெமுலா குரமையா, ஹெச்.சீதாராம ரெட்டி, கே.சந்திரமவுலி, கே.மாதவ மேனன், காளா வெங்கட் ராவ், ஏ.பி.ஷெட்டி, குருபாதம் ஆகியோர்.

            இவர்களில் பி.சுப்பராயன் 1948 ஏப்ரல் 5இல் ராஜிநாமா செய்தார், டேனியல் தாமஸ் 1948 ஜூன் 15இலும், காளா வெங்கட் ராவ் 1949 ஜனவரி 24லும் ராஜிநாமா செய்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து பி.எஸ்.குமாரசாமிராஜா முதலமைச்சர் ஆனார். இவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த தனவந்தர்.  இவர் 1949 ஏப்ரைல் 6 அன்று அமைச்சரவை உருவாக்கினார். காமராஜர் இவரை ஆதரித்தார். இவரை பி.சுப்பராயன் தேர்தலில் எதிர்த்தார். இவர் 1952இல் இந்திய குடியரசின் முதல் தேர்தல் வரை பதவியில் இருந்தார்.

7-4-1949 முதல் 9-4-1952 வரை பதவி வகித்த குமாரசாமி ராஜா அமைச்சரவைல் இருந்த மந்திரிகள் விவரம்.

பி.எஸ்.குமாரசாமி ராஜா, முதல்வர், டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பக்தவத்சலம், சீத்தாராம ரெட்டி. சந்திரமவுலி , பி.கோபால ரெட்டி, கே.மாதவ மேனன், காளா வெங்கட் ராவ், ஏ.பி.ஷெட்டி, பி.பரமேஸ்வரன், சி.பெருமாள்சாமி ரெட்டிஆர், ஜே.எல்.பி.ரோச் விக்டோரியா, நீலம் சஞ்சீவி ரெட்டி ஆகியோர்.

            இவர்களில் நீலம் சஞ்சீவ ரெட்டி, ரோச் விக்டோரியா, காளா வெங்கட் ராவ் ஆகியோர் ராஜிநாமா செய்து விட்டனர். இந்த நிலையில் இந்திய குடியரசில் அரசியல் அமைப்புச் சட்டம் உருவானதன் பின்பு முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது.

இந்திய குடியரசில் 1952 முதல் தேர்தல்.

            சுதந்திர இந்தியாவில் இந்திய அரசியலமைச்சு சட்டம் உருவான பிறகு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தல் 1952 மார்ச் மாதம் நடைபெற்றது. சென்னை மாகாணத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் எந்தவொரு தனிக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. அந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் நேருவைச் சந்தித்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராஜாஜி முதலமைச்சராக வந்தால் நமது கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். அதை காங்கிரஸ் தலைவரான காமராஜும் வழிமொழியவே பொள்ளாச்சி என்.மகாலிங்கம், சி.சுப்ரமணியம் இருவரையும் டெல்லிக்கு அனுப்பி இங்கு நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ராஜாஜியை அரசு அமைக்குமாறு கேட்டுக் கொள்வதே நன்று என்று நேருவிடம் கேட்டார்கள். அவர் காமராஜ் என்ன சொல்கிறார் என்று கேட்ட பிறகு, அவர்தான் தங்களை அனுப்பியதாகச் சொன்ன பிறகு நேரு ராஜாஜியை முதலமைச்சராக வர சம்மதம் தெரிவித்தார்.

            ராஜாஜி முதல்வராக இருந்த போதுதான் தனி ஆந்திரா கேட்டு தெலுங்கர்கள் போராடினார்கள். பொட்டி ஸ்ரீராமுலு உயிர் நீத்தார் . வேறு வழியின்று நேரு மாநில பிரிவினைக்குச் சம்மதம் தெரிவித்தார்.  1953இல் தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

            இந்த சூழ்நிலையில் ராஜாஜி கொண்டு வந்த எல்லோருக்கும் கல்வி திட்டத்தில் இடம் பற்றாக்குறை காரணமாக காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றுமாக மாணவர்களுக்கு வகுப்பெடுக்கச் சொனதையும், வகுப்பு இல்லாத நேரத்தில் மாணவர்கள் ஏதாவதொரு தொழிலைக் கற்றுக் கொள்ளட்டும் என்றும் அறீவித்தார். அப்படி பெற்றோர்கள் எந்த தொழிலிலும் இல்லாதவர்கள், தந்தை செய்யும் தொழிலைச் செய்யலாம் என்று ராஜாஜி சொன்னதைக் “குலக் கல்வி”த் திட்டம் என்று பெயர் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் சர்ச்சையை உருவாக்க, ராஜாஜி பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போய் விட்டார், காமராஜ் முதலமைச்சர் ஆனார்.

            இதற்கிடையே ஆயுதம் ஏந்திய போராட்டத்தை கொள்கையாகக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி 1951இல் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தின் வழியில்  அரசியலில் ஈடுபடுவதாக ஆறிவித்தது.

            திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ரா. அவர்கள் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து இளைய தலைமுறையினர் வெளியேறி 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சி.என்.அண்ணாதுரை தலைமையில் உருவாக்கினார்கள்.

            1952இல் சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கிசான் மஸ்தூர் ப்ரஜா கட்சி, கிருஷிகர் லோக் கட்சி, காமன்வெல்த் கட்சி, உழைப்பாளர் கட்சி ஆகியவை போட்டியிட்டன. தி.மு.க. அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. 1952 ஜனவரியில் தேர்தல் நடைபெற்றது. 2507 பேர் போட்டியிட்டனர்.  இதில் 2472 ஆண்கள் 35 பெண்கள். 751 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.

            இந்தத் தேர்தலின் முடிவுகள். இந்திய தேசிய காங்கிரஸ் 152 இடங்கள், சோஷலிஸ்ட் கட்சி 13, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 35, கம்யூனிஸ்ட் கட்சி 62, கிருஷிகர் லோக் கட்சி, 15, எஸ்.சி. கூட்டமைப்பு 2, உழைப்பாளர் கட்சி 19, காமன்வெல்த் கட்சி 6, முஸ்லீம் லீக் 5, ஜஸ்டிஸ் கட்சி 1, ஃபார்வார்ட் ப்ளாக் 3, சுயேச்சைகள் 62,

            இந்த 1952 தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு ஐந்தாண்டிலும் பொதுத் தேர்தல் நடந்திருக்கிறது. இடையில் 1971, 1977, 1980 ஆகிய ஆண்டுகளிலும் தேர்தல்கள் நடந்த விவரங்காஇ பிரிதொரு கட்டுரையில் காண்போம்.

 

 

 

 

 

           

 

 

 

 

 

 

 

 

 

 

 

           

 

 

No comments: