பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 15, 2021

1957ஆம் ஆண்டு தமிழ்நாட்டுத் தேர்தல்.

    சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அப்போதைய உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை 375. ஏற்கனவே ஆட்சியில் இருந்தஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே தேர்தலில்  மீண்டும் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தில்ஆட்சியமைத்தது காமராஜர் இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல் அமைச்சரானார்..

   ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 375. சென்னை மாநிலத்திலிருந்து அக்டோபர் 1, 1953 இல் ஆந்திரா மாநிலம் தனி மாநிலமாகப் பிரிந்து உருவானது. சென்னை மாகாணத்தில்கன்னடம் பேசப்படும் பகுதியாக இருந்த பெல்லாரி மாவட்டம், மைசூர் மாநிலத்துடன் இணைந்தது. இதனால் ஆந்திராவுக்குச் சென்ற தொகுதிகள் தவிர பெல்லாரியும் மைசூருக்குப் போய்விட்டதால், சென்னை சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆகக் குறைந்தது.

நவம்பர் 1 1956 இல் சென்னை மாகாணத்தில் ஆந்திரா பிரிந்து போன பிறகு பிற மொழி பேசும் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை அந்தந்த மாநிலத்தில் இணைப்பதற்காக புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது.  மலபார் மாவட்டம் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டதால், உறுப்பினர் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. கேரளத்தின் தமிழ் பேசும் பகுதிகளாக கேரளத்துடன் இணைந்திருந்த  கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகா ஆகியவை சென்னை மாநிலத்தில் இணைந்தன. இதனால் உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்தது. இந்த 205 இடங்களுக்கே 1957 இல் தேர்தல் நடத்தப்பட்டது. 167 தொகுதிகளிலிருந்து சில இரு மெம்பர் தொகுதியாக இருந்ததால் இந்த 205 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 38 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 37 தாழ்த்தப்பட்டவருக்கும் (SC) 1 பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இரட்டை உறுப்பினர் தொகுதிகள்இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டன. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இல் விவரிக்கப் பட்டிருந்ததுஒரு லட்சத்திற்கு மிகுந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொகுதிகளில் இரு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன - பொதுப் பட்டியல் மற்றும் தனிப் பட்டியல். வாக்காளர்கள் இரு பட்டியல்களுக்கும் தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோம்.

·         தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்

·         பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் (இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்)

இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் (. கோவை -2 தொகுதி) இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித் தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது. இந்திய தேர்தல் முறையில் இது ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. ஒரே தொகுதிக்கு இரண்டு உறுப்பினர் என்கிற குழப்பம் இதனால் நீங்கியது.

 

பங்குபெற்ற கட்சிகள்:

1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, பெருந்தலைவர்  காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜருக்கும், அவர் தலைமையிலான மாநில அரசுக்கும்,  திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் வே. ராமசாமி நாயக்கரின்  ஆதரவையும் பெற்றிருந்தார். முந்தைய தேர்தலைப்   போலவே இம்முறையும் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் இருந்தது. 1954 இல் முதல்வர் பதவியை தான் கொணர்ந்த கல்வித் திட்டத்துக்கு உள்கட்சியிலேயே எதிர்ப்பு உருவானதால், ராஜாஜி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் , தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசு சீர்திருத்தக் கமிட்டி” என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (சில ஆண்டுகளில் அதுவே சுதந்திரா கட்சியாக மாறியது). 1952 இல் .டந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு முன்பு தங்கள் கட்சிக்கு மக்கள் அளித்துவந்த ஆதரவை இழந்து விட்டது. அதன் இடத்தை 1949 இல் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பிடித்துக் கொண்டது. தங்கள் செல்வாக்கை இழந்துவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கும், அவர்கள் விட்ட இடத்தைப் பிடித்துக் கொண்ட தி.மு.க.விற்கும் கொள்கைகளில் இமாலய வேற்றுமை உண்டு என்றாலும், இடதுசாரிகள் இழந்த இடத்தை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள். மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், ஆச்சார்யா கிருபாளினியின் பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சிமுத்துராமலிங்கத் தேவரின் ஃபார்வார்டு ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

 

பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக தமிழகத்தில் மாறியிருந்தது. ஆந்திர மாநிலம்தான் அதிகமான கம்யூனிஸ்ட்டுகளை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்ததால், ஆந்திரா பிரிந்து போனதால் தமிழ்நாட்டில்  கம்யூனிஸ்டுகள் பலமிழந்திருந்தார்கள்..இதனால். வலுவடைந்திருந்த காங்கிரஸ், இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது. 1952 தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாத தி, மு. , 1956 இல் நடந்த திருச்சிப் பொதுக் குழு கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், தி. மு. உறுப்பினர்கள் சிலவிடங்களில் மட்டும் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை. அன்பழகன்என். வி. நடராஜன்மு. கருணாநிதி சத்யவாணி முத்து உட்பட திமுக வினர் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும், 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு 55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. காமராஜரின் ஆட்சி காலத்தில் பல தமிழர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் தமிழ் தேசியவாதம் சற்றே வலுவிழந்தது. எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார பிரச்சனைகளுக்கு இடமளிக்கப்பட்டது.

1957 தேர்தல் முடிவுகள்.

மார்ச் 31 இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 47 சதவிகித வாக்குகள் பதிவாகின. முடிவுகள்:

காங்கிரஸ் கட்சி 151, திமுக 13, காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி 9, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4, ஃபார்வார்ட் பிளாக் 3, பிரஜா சோஷலிஸ்ட் 2, சோஷலிஸ்ட் 1, சுயேச்சைகள் 22 ஆகமொத்தம்  205 உறுப்பினர்கள்.

 

     முந்தைய 1952 ஆம் ஆண்டு தேர்தலில் வாங்கியதைக் காட்டிலும் காங்கிரஸ் ஒரு இடம் குறைவாகப் பெற்றது. காங்கிரஸுக்கு 45% வாக்குகளும், திமுகவிற்கு 14% வாக்குகளும் கிடைத்தன.

1957 காங்கிரஸ் அமைச்சரவை.

காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று, காமராஜர் இரணடாம் முறை முதல்வரானார். அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தவர்கள் 

 

பெருந்தலைவர் கு.காமராஜ்      --   முதலமைச்சர், திட்டங்கள், மகளிர்                                மேம்பாடு ஆகியவை.

எம்.பக்தவத்சலம்                --    உள்துறை                  சி.சுப்ரமணியம்                  --    நிதித்துறை                ஆர்.வெங்கட்ராமன்             --     தொழில்துறை       எம்.ஏ.மாணிக்கவேல் நாயக்கர்   --    வருவாய்த்துறை      பி.கக்கன்                       --    பொதுப்பணித்துறை    வி.ராமையா                   --    மின்துறை        லூர்தம்மாள் சைமன்               --     உள்ளாட்சித்துறை

 

 

 

No comments: