பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, July 6, 2013

மாவீரன் பழ. நெடுமாறன் தந்தையின் நூற்றாண்டு விழா.

                      மாவீரன் பழ. நெடுமாறன் தந்தையின் நூற்றாண்டு விழா.


1979இல் திருமதி இந்திரா காந்தி தமிழகம் வந்திருந்தபோது தாக்கப்பட்டார். அப்போது மதுரையின் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்த திரு பழ நெடுமாறன் அவர்களும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு ஆர்.வி.சுவாமிநாதன் அவர்களும் அவரைத் தாக்குதலில் இருந்து காப்பாற்றினர் எனும் செய்தியை அனைவரும் அறிவர். அது குறித்த ஒரு செய்தியின் தலைப்பு இதோ:

"DMK attacked Indira Gandhi in Madurai and now keeping friendship with Congress

In 1979, when the All India Congress President and former Prime Minister of India Mrs.Indira Gandhi visited Tamil Nadu, she was attacked by the D.M.K., Mr.Nedumaran who accompanied her, shielded her and bore the brutal attacks on his body and saved Mrs. Gandhi's life. After this incident, Mrs. Gandhi used to call Nedumaran as her eldest son."

அந்த மாவீரன் பழ நெடுமாறனைப் பற்றி குறிப்பிடும்போது மதுரையின் பாரம்பரியமிக்கக் குடும்பம் என்று சொன்னார்களே, அவருடைய பாரம்பரியம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவலை திரு பழ நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட "தென் செய்தி" எனும் பத்திரிகை நிறைவேற்றி விட்டது. 2013 ஜூலை முதல் இருவார இதழில் திரு நெடுமாறனின் தந்தையைப் பற்றிய கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.

"திரு பழ நெடுமாறனின் தந்தை பெயர் அறநெறியண்ணல் கி.பழநியப்பனார். அவருடைய நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. நெடுமாறனின் பாட்டனார் திரு கிருஷ்ணப் பிள்ளை. மதுரையில் புத்தக வியாபாரம் செய்து வந்தவர். விவேகானந்தர் பெயரில் 1921இல் தொடங்கி ஒரு அச்சகமும் இவர் நடத்தி வந்தார். திரு கிருஷ்ணப் பிள்ளை மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இவரைத் தேடி அந்த நாட்களில் பல தமிழ் அறிஞர்களும், நாடக ஆசிரியர்களும் வந்து போவார்கள்.

தமிழ் நாடக உலகின் ஜாம்பவானான தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் ஒன்பது நாடக நூல்களை முதன்முதல் அச்சிட்டு வெளியிட்டவர் இந்த கிருஷ்ணப் பிள்ளை. பிரபல எழுத்தாளர் பி.ஸ்ரீ.யின் முதல் நூலான "ஆண்டாள் சரித்திரம்" எனும் நூலை வெளியிட்டவரும் இவரே. சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த புலவர் ந.சஞ்சீவி அவர்களுடைய தந்தையார் திரு நடேச முதலியார்தான் பழ நெடுமாறனின் தந்தைக்குத் தமிழாசிரியர். தமிழ்நாடு வாலிபர் சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம் போன்ற அமைப்புகளைத் தொடங்கி தலைமை வகித்தவர் திரு பழநியப்பனார். மதுரை தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக பணியாற்றி செந்தமிழ்க் கல்லூரியை நிறுவியவரும் இவரே. 1942இல் மதுரையில் முத்தமிழ் மாநாடு ஒன்றை நடத்தியவர் இவர்.

மகாகவி பாரதியாரின் மாணவப் பருவ தோழரும், பின்னாளில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றியவரும், பிரபல தேசபக்தர் எல்.கிருஷ்ணசாமி பாரதியின் மாமனாருமான தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரின் 80ஆம் ஆண்டு விழாக்குழு செயலாளராக இருந்து சிறப்புற பணியாற்றினார் திரு பழநியப்பர். இவர் விழா எடுத்து போற்றிய தமிழறிஞர்களாவன: அ.கி.பரந்தாமனார், ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை, பேரறிஞர் கார்மேகக் கோனார், கல்வெட்டாராய்ச்சியாளர் சதாசிவ பண்டாரத்தார், கி.ராமலிங்கனார், கி.ஆ.பெ.விஸ்வநாதன், அ.மு.பரமசிவானந்தாம் முதலியோரைச் சொல்லலாம். ரா.பி.சேதுப்பிள்ளையிடம் அசாத்தியமான பக்தி கொண்டவர் பழனியப்பனார்.

இவர்கள் தவிர பழநியப்பனாரோடு தொடர்புடைய இதர தமிழ் அறிஞர்கள் பெயர்களாவன:-

வித்வான் ரா.ராகவ ஐயங்கார், கோவை சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணிய முதலியார், திருவனந்தபுரம் இசைச்செல்வர் தி.இலக்குமணப் பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, கா.சு. பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மறைமலை அடிகள், பேரா.கார்மேகக் கோனார், அ.மு.சரவண முதலியார் (அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார்), டி.கே.சிதம்பரநாத முதலியார், குடந்தை சுந்தரேசனார், அருணாசலக் கவிராயர், அருணாசல கவுண்டர் ஆகியோராவர்.

சோமசுந்தர பாரதியாரின் மகள் லட்சுமி பாரதி, மருமகன் எல்.கிருஷ்ணசாமி பாரதி, மகள் டாக்டர் லலிதா காமேஸ்வரன், மருமகன் காமேஸ்வரன், லட்சுமிகாந்தன் பாரதி ஆகியோரிடம் அன்பும், பாசமும் கொண்டவர் பழநியப்பனார். அடுத்த தலைமுறை தமிழ்ப் பேரறிஞர்களான டாக்டர் தெ.போ.மீனாட்சிசுந்தரனார், டாக்டர் அ.சிதம்பரநாதனார், வெள்ளைவாரணர், மா.ராசமாணிக்கம், அ.கி.பரந்தாமனார், டாக்டர் மு.வ. திருக்குறள் முனுசாமி போன்றவர்கள் இவரது நண்பர்கள்.

பத்திரிகையாளர்கள் கல்கி, கி.வா.ஜ., அகிலன், சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன், தீபம் பார்த்தசாரதி ஆகியோரும் இவரது நண்பர்கள். கருமுத்து தியாகராச செட்டியார் இவரது நண்பர். தமிழ் நாடக உலகின் பெருமக்களான எம்.எம்.தண்டபாணி தேசிகர், எம்.கே.டி., என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.எஸ்.சகோதரர்கள், திருமதி எம்.எஸ். ஆகியோரும் நட்புரிமை கொண்டிருந்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் குடமுழுக்கில் பெரும் பங்கு வகித்தார். மதுரையில் சாய்பாபா, ஐயப்பன் வழிபாடுகளுக்கும் இவர் உரிய வசதிகள் செய்து கொடுத்தார். தமிழ் மடாலயங்களுடனும் இவருக்கு நல்ல தொடர்பு இருந்து வந்தது. கூட்டுறவுத் துறையிலும் இவர் கால்பதித்து மதுரை கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் தலைவராக இருந்தார். கூட்டுறவு நில அடமான வங்கித் தலைவர், ரோட்டர் சங்கத் தலைவர் போன்ற பதவிகளிலும் இருந்தார் பழநியப்பனார்.

சிலம்புச் செல்வரின் தமிழரசுக் கழகத்தில் மதுரை நகரத் தலைவராக இருந்தார். அரசியல் கட்சித் தலைவர்களான ராஜாஜி, பெரியார், காமராஜர், எம்.பக்தவத்சலம், கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி, ம.பொ.சி., கே.டி.கே.தங்கமணி ஆகியோரும் இவரது நண்பர்கள். தமிழவேள் பி.டி.ராஜனுக்கு நெருங்கிய சகா இவர். இவருடைய குணநலன்களைப் பொறுத்தவரை காலம் தவறாமை, கடும்சொல் தவிர்த்தல், செய்நேர்த்தி, விருந்தோம்பல், இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்வது, ஆடம்பரம் இன்மை, நட்புக்கு முன்னுரிமை போன்றவற்றைச் சொல்லலாம்.

அறிஞர், கவிஞர், சிந்தனையாளர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், பேச்சாளர், அனைத்துக்கும் மேலாக செயல் வீரர் இப்படி சதாவதானியாக இருந்தவர் பழநியப்பனார். பழ. நெடுமாறன் அவர்கள் தன் தந்தையைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறார், "தந்தையாக இருக்கலாம், ஆனால் அன்பு நிறைந்த அப்பாவாக இருப்பது அரிது" என்று.

இந்த பெருமைகளால்தான் திரு பழ.நெடுமாறனைப் பற்றிக் குறிப்பிடும்போது, மதுரையின் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் வாரிசு என்று இவர் அறிமுகப் படுத்தப்பட்டார். அத்தகைய பெருமைக்குரிய பழ.நெடுமாறனின் தந்தையார் அறநெறியண்ணல் கி.பழநியப்பனாரின் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று (2013 ஜூலை 7ஆம் தேதி ஞாயிறன்று) மதுரை காமராசர் சாலை வரத்தக சங்க அரங்கத்தில் நடைபெறுகிறது. வாழ்க கி.பழநியப்பனார் புகழ். வாழ்க பழ நெடுமாறனின் புகழும் பொதுச்சேவைகளும்.





2 comments:

துரை செல்வராஜூ said...

நிறைகுணங்களோடு நம்மிடையே வாழ்ந்த பெருமகனார் கி.பழநியப்பனார் அவர்களைப் பற்றி விவரமாக அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!. அவர் தம் பெயர் தமிழ் கூறும் நல்லுலகில் என்றும் நின்று நிலவுவதாக!...

thanusu said...

ஒரு பெரியவரை அறிய தந்தமைக்கு நன்றிகள் ஐயா.