பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, July 13, 2013

ராஜாதிராஜ சோழன். (கி.பி. 1018 முதல் 1054 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப் பார்ப்போம். 

மாமன்னன் ராஜராஜன் பற்றியும், அவருடைய மகன் ராஜேந்திர சோழன் தன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டு வடக்கே கங்கைக் கரை வரையிலும் சென்று பின் கடல்கடந்து பல நாடுகளையும் வென்று வெற்றிக் கொடி நாட்டியதையும், பின்னர் அவரவர்க்கே அவர்கள் நாட்டைத் திருப்பிக் கொடுத்து நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொண்டு, சோழப் பேரரசர்களிலேயே சிறந்த மன்னனாக இருந்ததை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இனி அந்த ராஜேந்திர சோழனையடுத்து சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சிபுரிந்த ராஜாதிராஜ சோழ மன்னனைப் பற்றி சிறிது பார்ப்போம். தன் தந்தை ராஜேந்திர சோழன் காலத்திலேயே பல படையெடுப்புகளை தானே முன் நின்று போரிட்டு வெற்றி பெற்ற வீராதிவீரனாகத் திகழ்ந்தான் இந்த ராஜாதிராஜன் என்பதை ராஜேந்திர சோழன் வரலாற்றிலேயே பார்த்தோம். இனி தனியாக இந்த மன்னனின் வாழ்க்கையை, ஆட்சியை, வெற்றிகளை, புகழை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இவருடைய வரலாற்றினுள் நுழையும் முன்பாக இவரைப் பற்றிய சில முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். இவருக்கு "பரகேசரி" எனும் பட்டப்பெயர் கிடைத்திருந்தது. இவருடைய தலைநகரம் தன் தந்தையைப் போலவே கங்கை கொண்ட சோழபுரம்தான். இவரை மணந்த மாதரசி ராணி திரைலோக்கியமாதேவியார். இவருக்கு நிறைய பிள்ளைகள். இவர் கி.பி. 1054இல் காலமானார். இவருடைய தந்தை ராஜேந்திர சோழன் கி.பி.1012 லிருந்து 1044 வரை இருந்திருக்கிறாரே, பின் இவர் எப்படி 1018இல் பதவிக்கு வந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இவர்கள் காலத்தில் தந்தை ஆட்சியில் இருக்கும்போதே தனயனை ஆட்சிப் பொறுப்பில் உட்காரவைத்து அவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுப்பது போல இளவரசுப் பட்டத்தோடும் பின்னர் முழுப் பொறுப்போடும் ஆட்சி செய்ய அனுமதித்திருந்தனர். நூறு வயது வாழ்ந்தாலும் கடைசிவரை நானே அரசன் என்று இருந்துகொண்டு மகனுக்கு எழுபது அல்லது எண்பது வயது வரை ஆட்சி கிடைக்காத ஏக்கத்தை உருவாக்கியதில்லை இந்த மன்னர்கள். அத்தனை பரந்த மனப்பான்மை. போகட்டும் இனி வரலாற்றுக்கு வருவோம்.

இந்த மன்னனுடைய பெயரை முழுமையாகப் பார்ப்போமா? கோப்பரகேசரிவர்மன் ராஜாதிராஜ சோழன் எனும் பெயரோடு கூடிய இந்த சோழன், மிகப் புகழ்வாய்ந்த தனது தாத்தா ராஜராஜசோழன், தந்தை ராஜேந்திர சோழன் இவர்களுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன். அப்படி தன் முன்னோர்களின் பெருமையைக் காத்திட வேண்டுமென்கிற பொறுப்புணர்வு இல்லாமலா போய்விடும், அதுவும் தந்தை காலத்திலேயே பல போர்களைக் கண்டும் வெற்றிகளை ஈட்டியும், நல்ல நிர்வாகியாகத் திகழ்ந்த இந்த ராஜாதிராஜனுக்கு. பாட்டனார் ராஜராஜனைப் போல, தந்தை ராஜேந்திரனைப் போல இவனும் தலைசிறந்த சோழ மன்னனாக வாழ்ந்து காட்டினான். தந்தை காலத்திலேயே இவன் வட இந்திய படையெடுப்பின் போது பல நாடுகளைப் பிடித்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவன். இலங்கை, வடக்கே வேங்கி, கலிங்கம் ஆகியவை இவன் வெற்றி கொண்ட பிரதேசங்கள். கடல்கடந்த நாடுகள் பலவற்றை இவன் கைப்பற்றியிருந்த நிலையில் அங்கெல்லாம் புரட்சிகள் ஏற்பட்டபோதும் அவற்றை மிக சாமர்த்தியமாகச் சமாளித்த பெருமை இந்த ராஜாதிராஜனுக்கு உண்டு. பெயரைச் சொல்லும்போதே நம் மனம் இனிக்கிறதி, இல்லையா?

இவன் அரசன் என்பதால் படைகளை போருக்கு அனுப்பிவிட்டு இவன் அரண்மனையில் இருக்கும் ராஜா அல்ல. இவனுடைய சோழ பெரும்படைகளுக்கு இவனே முன்னின்று தலைமை வகித்து போரில் தானே நேரில் பங்கு கொண்டு தன் வீரத்தை வரலாற்றில் பதிய வைத்த மாவீரன் இவன். தங்கள் ராஜாவே போர்க்களத்தில் முன்னின்று போரிடுகிறார் எனும்போது அவன் படை தளபதிகளுக்கும், வீரர்களுக்கும் கேட்கவா வேண்டும். மன்னன் எவ்வழி அவன் படை வீரர்கள் அவ்வழியென்று அவர்களும் தீரத்தோடு போரிட்டார்கள். இவனுடைய வீரதீர பராக்கிரமங்கள், செய்த வேள்விகள் இவற்றால் இவனை "ஜெயம்கொண்டசோழன்" என்று அழைத்தனர். இவனது தாத்தா ராஜராஜனுக்கும் இந்த விருது இருந்தது என்பதை நினைவுகூரலாம். "விஜய ராஜேந்திர சோழன்" என்றொரு பெயரும் இவனுக்கு உண்டு.

இவனுடைய இளம் வயதிலேயே தன் தந்தைக்கு உதவியாக அவர் ஆண்ட காலத்திலேயே பொறுப்புகளைச் சுமந்தவன் இந்த ராஜாதிராஜன். தந்தையும், தனயனும் இணைந்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டனர். ராஜேந்திர சோழன் காலத்தில் இவனைப் பெயருக்கு இளவரசனாக வைத்துக் கொண்டதாக நினைக்கக்கூடாது. முழு உரிமை பெற்ற ஒரு அரசனாகவே இவன் திகழ்ந்தான் என்பதை கவனிக்க வேண்டும். தந்தை நாட்டை நடத்திச் செல்லும்போது இவன் போர்க்களத்தில் யுத்தங்களை நடத்திக் கொண்டிருந்தான்.

இலங்கையில் போர்.

இலங்கை கி.பி. 993 முதல் 1077 வரையில் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது என்று வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது. இலங்கையில் முன்னமே சோழர் ஆட்சி முழுமையாக இல்லாமல் ஒருசில பகுதிகளில் மட்டுமே இருந்தது. ஆகையால் இலங்கை சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பான் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால், ராஜேந்திர சோழன் அங்கு படையெடுத்துச் சென்று கி.பி. 1017இல் மகிந்தனைத் தோற்கடித்து நாடுகடத்திவிட்டு சிங்கள நாட்டைக் கைப்பற்றியிருந்தான். சோழ நாட்டுக்குக் கொண்டு போய் விடப்பட்ட அந்த மகிந்தன் அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்த பின் இறந்து போனான். ஆனால், அதன் பிறகு சோழர் ஆட்சிக்கு எதிராக சிங்களர்கள் அடிக்கடி கலகம் விளைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் வைத்திருந்தனர். இந்த நிலைமையை மாற்ற எண்ணிய ராஜாதிராஜன் 95000 வீரர்களைக் கொண்ட சோழர் படையை அழைத்துச் சென்று கலகக்காரர்களை இலங்கையின் தெற்குப் பகுதியான ரோகணா வரை அடித்துத் துரத்திவிட்டார். பிறகு தான் பிடித்த இலங்கையின் சிங்களப் பகுதிகளுக்கு அரசரானார்.

சோழர்கள் போரிட்டுப் பிடித்த நாடுகளைத் தங்கள் வசமே வைத்துக் கொள்ளவில்லை. பிறகு அந்தந்த நாட்டு மக்களிடமே திரும்ப பொறுப்புகளை ஒப்படைத்து விட்டனர். இலங்கையில் ராஜாதிராஜன் தான் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் தன் பொறுப்பில் வைத்திருந்தார். சோழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த சிங்களர்களுக்கு பாண்டியர்கள் உதவி புரிந்து வந்தனர். என்ன கொடுமை? சிங்களருக்கும் பாண்டியருக்கும் சோழர்கள் பொது எதிரிகள் என்பதால் இப்படி ஒன்று சேர்ந்து கொண்டனர். சிங்கள அரச குடும்பத்தாரோடு பாண்டியர்கள் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டிருந்தனர்.

ராஜாதிராஜ சோழன் காலத்தில் சிங்கள பாண்டிய உறவு உச்ச கட்டத்தில் இருந்தது, காரணம் பொது எதிரியான சோழர்களை ஒழித்துவிட வேண்டுமென்பது இவ்விருவரின் எண்ணம். இலங்கை விக்கிரமபாகு அங்கு இருந்த சோழ படைகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தான். அவனுக்கு உறுதுணையாக இருந்தவன் பாண்டிய இளவரசன் விக்கிரம பாண்டியன். இவர்களோடு வடக்கே கன்னோஜியின் இளவரசன் ஒருவனும் துணைக்கு நின்றான். சோழர் படைகள் இந்த பொது எதிரிகளோடு தீரமாகப் போரிட்டு இந்த இளவரசர்களை இரக்கமின்று கொன்று போட்டார்கள். இவற்றையெல்லாம் சிங்கள பெளத்த நூலான மஹாவம்சம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த மஹாவம்சம் பெளத்தர்களுக்காக பெளத்தர்களால் எழுதப்பட்டதானதால் இதன் கூற்று அன்றைய வரலாற்றுச் செய்திகளை அப்படியே எடுத்துரைக்கிறது. நமக்குக் கிடைக்கும் செய்திகளின்படி சோழர் படைகள் சற்றும் கருணை காட்டாமல் இந்தக் கொடிய எதிரிகளை இரக்கமின்றி அழித்தொழித்தார்கள் என்பது தெரிகிறது. போர் என்றால் அதில் இரக்கத்துக்கோ, மனிதாபிமானம் கொண்டு எதிரிகளை விடுவித்து விடுவதோ சோழர் படைகளுக்குப் பழக்கம் இல்லை. அது எல்லா எதிரிகளிடமும் அப்படித்தான் நடந்து கொண்டது, அவர்கள் சாளுக்கியர்களாகட்டும், பாண்டியர்களாகட்டும் அல்லது இலங்கையின் சிங்கள அரசர்களாகட்டும் எங்கும் ஒரே நிலைதான். சோழர்களின் இந்த மனப்பான்மையை, செயலை மஹாவம்சம் கண்டிக்கிறது. இதை மனிதாபிமானமன்ற்ற செயலாக வர்ணிக்கிறது. வேறு எப்படி அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும் இல்லையா? யுத்தம் என்றால் எதிரியை அழிப்பதுதான் நோக்கம் எனும்போது, இரக்கம் காட்டி விடுவிக்கவா முடியும். இந்த யுத்தக் கோட்பாட்டை மஹாவம்சம் கண்டிக்கிறது, குறை கூறுகிறது.

அதே சமயம் இந்த பெளத்த நூல் தமிழ்நாட்டு கடல் வாணிபம் செய்ய வந்த வணிகர்களை சிங்களர்கள் ஈவு இரக்கமின்றி கொல்வதைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. அது போலவே இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்க்க வரும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அங்கு தாக்கப்படுவதையும் இந்த நூல் குறிப்பிடவில்லை எனும்போது அதன் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக வணிகர்களாகட்டும், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் சாதாரண மக்களாகட்டும் இவர்கள் அனைவரும் சிங்களவர்களால் வழிமறித்துத் தாக்கப்படுவது, வழிப்பறிக்கு ஆளாவது என்பது தொடர்ந்து நடந்து வந்தது. இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டுத்தான் ராஜேந்திர சோழன் காலத்திலிருந்து இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க இலங்கைக்குப் படைகொண்டு சென்று தீயவர்களுக்குப் பாடம் கற்பித்தார்கள். இவற்றைப் பற்றி சொல்லும் பல ஆதாரங்கள் தமிழர்களிடம் இருக்கின்றன.

இலங்கையில் சோழர்கள் ஆட்சிக்குட்பட்ட தமிழ்ப் பகுதிகள் தனியான தமிழ்ப் பிரதேசமாக நிர்வகிக்கப்பட்டன. தென்கோடி இலங்கை மட்டும் எப்போதும் சிங்களவர்களின் பிரதேசமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அவர்கள்தான் சோழர்கள் மீது அடிக்கடி வம்புக்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிங்கள எதிர்ப்புக் குழுவுக்கு சிங்கள அரசன் விக்கிரமபாகுவின் மகன் கிட்டி என்பவன் 1058இல் விஜயபாகு எனும் பெயரோடு சிங்களருக்குத் தலைமை ஏற்றான். சோழர் படைத் தளபதிகள் இந்த சிங்களர்களைப் பிடித்துத் தண்டித்து தமிழ்நாட்டு வணிகர்களைக் காப்பாற்றினர்.

சாளுக்கியர்களோடு போர்.

இலங்கைப் பிரச்சினை இப்படியிருக்க வடக்கே சாளுக்கியர்கள் எப்போதும் போல சோழர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். மேலைச் சாளுக்கியர்களை ஒரு கட்டுக்குள் அடக்கி வைக்கவேண்டுமென்று ராஜாதிராஜன் விரும்பினார். இப்படிச் செய்வதன் மூலம் சோழர்களோடு திருமண உறவுகள் கொண்ட வேங்கி நாட்டைக் காப்பாற்றும் கடமையையும் இவர்கள் செய்து வந்தனர். வேங்கிக்கு உதவவும், மேலைச் சாளுக்கியர்களுக்குப் பாடம் கற்பிக்கவும் 1046இல் ராஜாதிராஜன் வடக்கே படையெடுத்துச் சென்றான். கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த போரில் சாளுக்கியர்களைத் தோற்கடித்து அவர்கள் கோட்டைக்கும் தீ வைத்து அழித்தார்கள் சோழர்கள். இதைத் தொடர்ந்து சாளுக்கியர்கள் மீதும், அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பல சிற்றரசர்கள் மீதும் சோழர்கள் படையெடுத்து அவர்களையெல்லாம் தோற்கடித்தார்கள். அவர்கள் அரண்மனைகளை அழித்தார்கள். கிருஷ்ணா நதியைக் கடந்து சென்று அக்கரையில் தங்கள் வெற்றியைப் பறைசாற்றும் விதமாக ஒரு வெற்றி ஸ்தூபியையும் நாட்டி வைத்தார்கள்.

மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரமாக விளங்கிய கல்யாணி (தற்சமயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கல்யாண் எனும் இடம்) நகரைத் தாக்கி சோழர்கள் அழித்தார்கள். இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் கொல்லாபுரம் (இப்போதைய கோலாப்பூர்) எனும் இடத்தில் ஒரு வெற்றிக் கம்பத்தை நாட்டினார்கள். இந்தப் போரில் வென்ற ராஜாதிராஜன் வெற்றி வீரனாக சாளுக்கிய தலைநகருள் நுழைந்து அங்கு தன்னுடைய மகுடாபிஷேகத்தை நடத்திக் கொண்டு "விஜயராஜேந்திரன்" எனும் விருதினையும் பெற்றான்.

கி.பி.1050இல் சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் என்பான் சோழர்களுக்குத் தரவேண்டிய கப்பம் கட்டாமல் சோழர்களை எதிர்த்துக் கொண்டு அவர்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அறிவித்துவிட்டு இப்போதைய பசவகல்யாண் எனும் கல்யாண் எனும் இடத்தில் தன்னை சுதந்திர அரசனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டான். இதனை அடுத்து வேங்கி நாட்டுக்குத் தனது படைகளை அனுப்பி அதனையும் தன் வசப்படுத்திக் கொள்ள முயன்றான். சாளுக்கியர்களுக்க் வேங்கி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என்பது எண்ணம்.

ராஜாதிராஜன் தென் கர்நாடகப் பிரதேசங்களின் மீது படையெடுத்து சாளுக்கியர்களின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். உச்சங்கி, நுளம்பவாடி, கடம்பலிங்கே, கோகாலி போன்ற இடங்கள் அவை. இந்த வெற்றிகள் சோமேஸ்வரனைக் கலங்க அடித்தது. அவன் தனக்குத் தானே "திரைலோக்கியமல்லன்" எனும் விருதினைக் கொடுத்துக் கொண்டிருந்தான். வேங்கியில் சோழர்களின் உறவினர்களான வேங்கி அரசர்களை வென்று அங்கு தன் சார்பில் ஒரு பொம்மை அரசனை நியமித்துவிட்டு வந்திருந்தான் சோமேஸ்வரன். தன் தலைநகரை நோக்கி சோழர்கள் வருவதறிந்து தன் நாட்டைக் காத்துக்கொள்ள அவசரமாக சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பினான் அவன். சாளுக்கிய படைகளும், மாபெரும் சோழர் படைகளும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த கொப்பம் எனுமிடத்தில் சந்தித்தது.

ராஜாதிராஜனின் இறுதி நாட்கள்.

ராஜாதிராஜன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சில காலத்துக்குள் இரண்டாம் ராஜேந்திரனை இளவரசாக நியமித்து நிர்வாகத்திலும் போர்களிலும் தனக்கு உதவி செய்யும்படி நியமித்துக் கொண்டார். ராஜாதிராஜன் காலமானவுடன் இந்த இரண்டாம் ராஜேந்திரன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சோழ மண்டலத்தை ஆளத் தொடங்குகிறான். வடக்கே சாளுக்கியர்களோடு கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த யுத்தத்தில் பல போர்க்களங்களையும், பல வெற்றிகளையும் பெற்ற ராஜாதிராஜன் கொப்பம் போரில் தன்னந்தனியாகப் போரிட்டு மாண்டுபோனான். இந்த யுத்தத்தில் இவர் தன்னுடைய யானையின் மீதிருந்து போரிடுகையில் வேல் பாய்ந்து மாய்ந்து போனதால் இவருக்கு "யானைமேல் துஞ்சிய தேவர்" எனும் பட்டப்பெயர் கிடைத்தது. தன் தந்தையார் ராஜேந்திரனுக்காக போர்க்களங்களைத் தன் இளம் வயதில் கண்ட ராஜாதிராஜன் கடைசியில் தன் உயிரை ஒரு போர்க்களத்திலேயே விட்டதன் மூலம் அவன் ஒரு போர்வீரனாகவே வாழ்ந்தான் வீழ்ந்தான் எனும் பெருமைக்கு உரியவனாகிறான்.

பெரும் புகழ் கொண்ட சோழ வம்சத்தில் இந்த ராஜாதிராஜனுக்கு உரிய இடம் உண்டு. வாழ்க ராஜாதிராஜ சோழன் புகழ்!
































2 comments:

துரை செல்வராஜூ said...

ராஜாதிராஜனை பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.அன்றே சிங்களத் தீவை முற்றாக நசுக்கியிருக்கலாம். சோழ மாமன்னர்களின் பெருந்தன்மையினால் தப்பிப் பிழைத்து - பாரதத்திற்கு இன்று பேரிடராக இருக்கின்றது!...

Shanti said...

chozha mannargalai patriya katuraiyaiya padika padika chozhar kalathirke selvathu pondru irukindrathu.