பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 25, 2013

இரண்டாம் ராஜராஜன் (1146 முதல் 1173 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)


21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இரண்டாம் ராஜராஜன் (1146 முதல் 1173 வரை)

இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் என்பான். இவனது தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம்தான். இவனுடைய ராணிகள் அவனிமுழுதுடையாள், புவனமுழுதுடையாள், உலகுடை முக்கோகிலம். இவன் இறந்த ஆண்டு 1173.

இரண்டாம் ராஜராஜன் தன்னுடைய தந்தையார் இரண்டாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்தான். அப்படி வந்த ஆண்டு 1150. ஆனால் 1146லேயே இவனை இளவரசாக ஆக்கி ஆட்சி பொறுப்புகளை இரண்டாம் குலோத்துங்கன் வழங்கியிருந்தான். ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் ஓஹோவென்று ஆண்ட அகண்டு விரிந்த சாம்ராஜ்யம் குறையத் தொடங்கியது இவன் காலத்தில்தான். இவன் பதவியேற்ற நேரத்தில் இருந்த சோழ நாட்டுப் பகுதிகள் வேங்கி உட்பட இவன் காலத்தில் இவன் ஆட்சிக்குட்பட்டுதான் இருந்தது.

ஆனால் இவன் காலத்தில் சோழப் பேரரசின் ஆட்சி சாம்ராஜ்யம் முழுவதும் இவனுடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தது போல ஒரு கட்டுப்பாடான மத்திய ஆட்சியின் கீழ் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் சோழப் பேரரசுக்கின் கீழ்தான் வேங்கி, பாண்டிய, சேர நாடுகள் இருந்து வந்தன. இலங்கை மீதும் இவன் படையெடுத்த செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. இவனும் சரி இவனுடைய மகனான மூன்றாம் குலோத்துங்கனும் சரி "திரிபுவன சக்கரவர்த்தி" எனும் விருதினைப் பெற்றிருந்ததிலிருந்து இவர்கள் தங்கள் முன்னோர்களின் வழக்கப்படி ஒரு பேரரசனாகத்தான் இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது.

பாண்டிய நாட்டு நிர்வாகம் சோழர் கையில்தான் இருந்ததென்றாலும், அங்கே பாண்டிய நாட்டின் உரிமை யாருக்கு என்பதில் அங்குள்ள பாண்டியர்களுக்குள் போட்டி இருந்து வந்தது. அதன் பலனாக சோழர்களின் பிடி பாண்டிய நாட்டின் மீது இவன் காலத்தில் சற்று பலவீனமடைந்து போயிற்று. விஜயாலயன் பரம்பரையில் முதலாம் ஆதித்தன் காலத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள் அதுமுதல் வீரராஜேந்திரன் காலம் வரையில் சோழர்களுக்கு அடிமைப்பட்ட நாடாகத்தான் இருந்து வந்தது. ஆனாலும் அவர்கள் தங்களை சோழர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள எல்லா காலங்களிலும் முயன்று வந்திருக்கிறார்கள். அதற்காக ரகசியமான நடவடிக்கைகளிலும், சதியிலும்கூட ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாண்டியர்களின் இந்த விடுதலை உணர்வு மாறவர்மன் எனும் மாறவரம்பன் சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீர பாண்டியன், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் காலத்தில் அதிகமாகிவிட்டது. பாண்டியர்கள் சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை விரும்பவில்லை. தங்களைச் சுயேச்சையான மன்னர்களாக அறிவித்துக் கொள்ள காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான முயற்சிகளில் 13ஆம் நூற்றாண்டு முழுவதும் இவர்கள் பாடுபட்டு வந்தார்கள் என்பதை மறந்துவிட முடியாது.

2ஆம் ராஜராஜன் 1163இல் தன்னுடைய மகனான இரண்டாம் ராஜாதிராஜனை இளவரசனாக முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தான். அதன் பிறகு பத்து ஆண்டுகள் 2ஆம் ராஜராஜன் வாழ்ந்தான். 2ஆம் ராஜராஜன் மிகச் சிறிய வயதிலேயே இறந்து விட்டான், ஆகவே அவன் மகனும் மிக இளம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. ஆகவே பல்லவராயரின் ஆதரவையும் பாதுகாப்பையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். பல்லவராயர் ஒரு வயதும், இரண்டு வயதும் ஆகியிருந்த இளம் சோழ ராஜகுமாரர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர்களில் 3ஆம் குலோத்துங்கன் தான் சோழ மன்னர்களில் கடைசி மன்னனாகக் கருதப்படுகிறான். இவன் 2ஆம் ராஜராஜனின் மகன்.

2ஆம் ராஜராஜ மன்னனின் காலம் அமைதியான காலம். இந்த அமைதியான காலத்தில்தான் இவன் தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலைக் கட்டினான். இந்த தாராசுரம் கோயில் சோழர்களின் மற்ற இரு கோயில்களான தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இவற்றுக்கு இணையாகப் பெருமை மிக்கதாக விளங்குகிறது என்பது தெரியும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் கருங்கல் வேலைகள் மிகவும் சிறப்பானவை. இவனது மகன் 3ஆம் குலோத்துங்கன் கட்டிய திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலும் அதற்கு இணையான அற்புத கலைப் படைப்புகளைக் கொண்ட கோயில்.
இந்த ஆலயத்தில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணக் கதைகளின் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

2ஆம் ராஜராஜன் தஞ்சாவூர், சிதம்பரம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆகிய கோயில்களுக்கு ஏராளமான நிவந்தங்களை வழங்கியிருக்கிறான். மதுரை ஆலயத்துக்கும் இவன் இவன் ஏராளமான செல்வங்களைத் தந்தான். சேர நாட்டுக் கோயில்களுக்கும் இவன் அடிக்கடி சென்று வந்ததும், அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிதியளித்ததும் கூட வரலாற்றில் காணப்படுகிறது. மேலைக் கடற்கரையிலிருந்து கீழைக் கடல் வரையிலுமுள்ள பிரதேசங்களில் சோழர்களின் ஆதிக்கம் இவன் காலத்தில் உறுதியாக இருந்திருக்கிறது.

இவன் இறந்த பிறகு 2ஆம் ராஜாதிராஜன் எனும் இவனது மகன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் வரலாற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம். 

1 comment:

துரை செல்வராஜூ said...

மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட சிற்பக் களஞ்சியமான, தாராசுரம் ஸ்ரீஐராவதேஸ்வரர் திருக்கோயில் இன்றும் இரண்டாம் ராஜராஜ சோழனின் பெயரினைப் பேசிக் கொண்டிருக்கின்றது.