பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 15, 2013

இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1054 முதல் 1063)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)

இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப் பார்ப்போம். 


இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1054 முதல் 1063)

ராஜாதிராஜ சோழன் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அவனுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டவன் இந்த 2ஆம் ராஜேந்திரன். ராஜாதிராஜன் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சிய தேவன் எனும் பெருமையோடு மாண்டுபோன பின்பு அவனுடைய தம்பியான இவன் "ராஜகேசரி" எனும் பட்டப்பெயருடன் பட்டத்துக்கு வந்தான். இவனது தந்தை ராஜேந்திரன், அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோர் ஆட்சி நடத்திய கங்கை கொண்ட சோழபுரம் தான் இந்த மன்னனுக்கும் தலைநகராக விளங்கியது. வழக்கம் போல எல்லா மன்னர்களையும் போல இவனுக்கும் பல மனைவியர் இருந்தனர். அவர்கள் ராஜராஜ அருள்மொழியார் எனும் தென்னவன் மாதேவியார், உருத்திரன் அருள்மொழி எனும் பிருதிமாதேவியார், கோகிலனடிகள் ஆகியோராவர்.

2ஆம் ராஜேந்திர சோழன் தன்னுடைய மூத்த சகோதரனும் இவனுக்கு முந்திய சோழ அரசனாக இருந்தவனுமான ராஜாதிராஜனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன். இவனுடைய தமையனாரான ராஜாதிராஜன் கொப்பம் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சியபோது இவனும் அந்தப் போரில் ஈடுபட்டு வீரமாகப் போராடினான். இவனுடைய தீரமிக்க போரினால்தான் போரின் முடிவு சோழர்களுக்கு சாதகமாகவும் சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு அழிவாகவும் முடிந்தது.

சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு எதிரான கொப்பம் யுத்தம்.

மேலைச் சாளுக்கிய மன்னர்களுக்கு எதிரான யுத்தம் சோழர்கள் நெடுநாட்களாக தொடர்ந்து வந்திருக்கின்றனர். முதலாம் ராஜேந்திர மன்னன் காலத்திலேயே சாளுக்கியன் சத்யாஸ்ரேயனுக்கு எதிராகப் போரிட்ட காலம் தொட்டு இந்த விரோதம் தொடர்ந்து வந்திருக்கிறது. அது தவிர ராஜராஜ சோழனுடைய மகளான குந்தவியை வேங்கிநாட்டு இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுத்து உறவு கொண்டதும், அவன் மகனுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் தன் மகள் அம்மங்கையாரைத் திருமண உறவு வைத்துக் கொண்டதும் சாளுக்கியர்களின் எரிச்சலை அதிகப்படுத்தியிருந்ததை முன் பதிவுகளில் பார்த்தோம். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அவன் மகன் ராஜாதிராஜன் காலத்தில் இந்த மேலைச் சாளுக்கியர்களோடு துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த ஊரான கொப்பம் எனும் இடத்தில் 1053-54இல் உக்கிரமான போர் நடந்தது. ராஜாதிராஜனே இந்தப் போரில் சோழர் படையை தலைமை வகித்து வழிநடத்திச் சென்று போரிட்டான். யானை மேல் இருந்து போரிட்ட ராஜாதிராஜனை குறிவைத்து சாளுக்கியர்கள் வேல் வீசித் தாக்கி அவன் மரணத்துக்குக் காரணமானார்கள். அதே நேரத்தில் அவன் தம்பி 2ஆம் ராஜேந்திரன் மற்றொரு சோழர் படைக்குத் தலைமை தாங்கி போர்புரிந்து கொண்டிருந்தான். அண்ணன் யானை மேல் இருந்து கொல்லப்பட்டான் எனும் செய்தி அறிந்து ஓடோடி வந்தான் 2ஆம் ராஜேந்திரன். வீரமாகப் போரிடும் தம்பியைக் குறிவைத்து சாளுக்கியர்கள் தாக்கத் தொடங்கினார்கள். ஆனால் தந்தைக்குச் சமமான வீரத்தோடு போரிட்ட 2ஆம் ராஜேந்திரனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

போர்க்களத்தில் ராஜாதிராஜன் மாண்ட செய்தி கேட்டு சோழர் படை மனம் தளர்ந்து பின்வாங்கிய நேரத்தில் தன்னை சோழ மன்னனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டு 2ஆம் ராஜேந்திரன் சோழர் படைக்கு தைரியக் கூறி அணிவகுத்து போரிடச் செய்தான். போர்க்களத்தில் நடந்த இந்த தீரமிக்க செயலால் சோழர் படை ஒன்று திரண்டு தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து சாளுக்கியர்களைத் தாக்கித் துவம்சம் செய்யத் தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்திலும் அவர் மகன் ராஜேந்திர சோழன் காலத்திலும் இருந்த பல சேனைத் தலைவர்கள் சோழர் படையில் இருந்ததாலும், தலைவன் மாண்டுபோன பின் அதே போர்க்களத்தில் அவன் தம்பி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இப்படியொரு தீரமான போரைச் செய்வான் என்று எதிர்பார்த்திராத சாளுக்கியர்கள் பயங்கரமான தோல்வியைச் சந்திந்தார்கள்.

ராஜாதிராஜன் கல்வெட்டுகளில் எல்லாம் அவன் போர்க்களத்தில் மாண்ட செய்தியையும், அவனோடு அவனது தம்பிகள் போரிட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் போரில் 2ஆம் ராஜேந்திரனும் காயமடைந்த போதிலும், அதனால் சோர்வடையாமல் போரிட்டிருக்கிறான் என்பது தெரிகிறது. போரின் முடிவில் சாளுக்கியர்கள் பல படைத் தலைவர்களை களபலி கொடுத்து தோல்வியுற்றார்கள்.

இந்த யுத்தம் பற்றி கர்நாடக மாநிலம் கோலாரில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் செய்தியின் சாரம் இது:

"கோப்பரிகேசரிவர்மன் எனும் ராஜேந்திர தேவரின் 3ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், இரட்டபாடி நாட்டை வென்றதைக் குறிக்கும் விதமாக கொல்லாபுரம் எனுமிடத்தில் எழுப்பப்பட்ட வெற்றித் தூணில் ஆதவமல்லனை புகழ்மிக்க ஆற்றங்கரையில் கொப்பம் எனுமிடத்தில் வீழ்த்தியதையும், அவனுடைய யானைகள், குதிரைகள் பலவற்றைக் கவர்ந்து கொண்டதையும், பெண்களையும் ஏராளமான செல்வங்களையும் அபகரித்துக் கொண்டதையும் அந்தப் போரில் மாபெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வெற்றிச் சிம்மாதனத்தில் அமரவைத்து எழுதப்பட்டது." என்று போகிறது அந்தக் கல்வெட்டு.

இந்த கொல்லாபுரம் எனும் இடம் கோலாப்பூர் எனத் தெரிகிறது. சோழர்கள் முன்பு பெற்ற வெற்றிக்கு ஒரு தூணும், இப்போது 2ஆம் ராஜேந்திரன் பெற்ற வெற்றியைக் குறிக்க மற்றொரு தூணும் நாட்டப்பட்டது என்பதாகத் தெரிகிறது.

இந்த கொப்பம் யுத்தம் பற்றியும் சாளுக்கியர்களின் தோல்வி, சோழர்களின் வெற்றி பற்றியெல்லாம் சோழர் வரலாறுகள் தான் தெரிவிக்கின்றன. சாளுக்கிய வரலாற்றில் இவை பற்றிய குறிப்புகள் இல்லை.

இவனுடைய அண்ணன் ராஜாதிராஜன் தனக்குப் பிள்ளைகள் இருந்த போதும், தனது தம்பியான இந்த இரண்டாம் ராஜேந்திரனைத்தான் போரிலும் துணையாக, தனக்குப் பின் ஆட்சிக்கும் வாரிசாக நியமித்தான். அவன் விருப்பப்படி போரில் அவன் மாண்டதும் தம்பி ராஜேந்திரன் அரசனாக அறிவித்துக் கொண்டு போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றியையும் பெற்றான். இந்தச் செய்திகளையும் சோழர்கள் கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன, சாளுக்கியர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. தமிழிலக்கியமான கலிங்கத்துப்பரணியிலும், விக்கிரமசோழன் உலாவிலும் இந்த குப்பம் யுத்தம் பற்றி சிறப்பாகப் பேசப்படுகிறது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய பிள்ளைகள் ராஜாதிராஜன் தொடங்கி வரிசையாக அவனது தம்பிமார்கள் அரசுக்கட்டிலில் ஏறிய செய்தி கவனிக்கத் தக்கது.

கூடல் சங்கம யுத்தம்.

கி.பி. 1062இல் நடந்த இந்த யுத்தம் சோழர்களுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த யுத்தம். சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனுக்கும் இரண்டாம் ராஜேந்திரனுக்குமிடையே நடந்த மிகக் கடுமையான யுத்தம் இது. இங்கு கூடல் எனக் குறிப்பிடுவதிலிருந்து இரண்டு நதிகள் சங்கமிக்குமிடம் என்பது தெரிகிறது. ஆனால் அவை எந்தெந்த நதிகள். துங்கபத்திரையும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம் இது. கொப்பம் யுத்தத்தில் சாளுக்கியர்கள் சோழர்களிடம் தோற்று ஓடிப்போனார்கள். சோழ மன்னன் ராஜாதிராஜன் யானைமேல் துஞ்சிய போதும் அவன் இளையவனான 2ஆம் ராஜேந்திரன் போரைத் தொடர்ந்து நடத்தினான். ஓடிப்போன மேலைச் சாளுக்கியனை வலிந்து போருக்கு இழுத்து நடத்திய யுத்தம் இந்த கூடல் யுத்தம். இதில் சாளுக்கியர்களின் மன்னன் முதலாம் சோமேஸ்வரன் தன்னுடைய தளபதி தண்டநாத வாலதேவன் தலைமையில் ஒரு பெரும்படையுடன் யுத்தம் செய்தான். சோழர் படைக்கு 2ஆம் ராஜேந்திரன் தலைமை வகித்து நடத்தினான். நடந்த இடம் துங்கபத்ரா நதியும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம்.
சோழர்களுக்கு ராஜேந்திரன் (2)வின் தம்பி ராஜமமேந்திரனும் மற்றொரு தம்பியான வீரராஜேந்திரனும் துணையாக நின்றனர். போர் கடுமையாக நடந்தது. சோழர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சோமேஸ்வரனின் பிள்ளைகளான விக்கலன் என்பவனும் சிங்கணன் என்பவனும் தோற்று ஓடிப்போனார்கள். இந்தப் போர் சோழர்களின் பக்கம் சந்தேகத்துக்கு இடமின்றி வெற்றியாக முடிவடைந்தது.

வீரராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று இந்தப் போரைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம். சாளுக்கிய மன்னன் கங்கபாடியிலிருந்து துங்கபத்திரைக் கரைக்கு ஓடினான். அவனோடு வில்வித்தையில் தேர்ந்த அவனுடைய தளபதிகளும் கையிலிருந்து ஆயுதங்களைப் போட்டது போட்டபடி ஓடினார்கள். ஓடியவர்களுக்குத் தலைமை வகித்து ஓடியவன் விக்கலன் எனும் சாளுக்கிய படைத் தளபதி. இந்தப் போரில் மண்டனநாயகன் சாமுண்டராஜன் எனும் தளபதியின் தலை வெட்டப்பட்டது. அவனுடைய அழகிய மகளான நாகலை என்பவள் முகத்தில் மூக்கு சேதப்படுத்தப்பட்டது.

தோல்வியினால் ஏற்பட்ட கோபமும் ஆத்திரமுமாக சாளுக்கியர்கள் மூன்றாம் முறையாகவும் சோழர்களை எதிர்த்து வந்தார்கள். முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கிவிடத் துடித்தார்கள். ஆனால் அவர்களது வேகத்தை முறியடித்து சோழ இளவரசன் சாளுக்கிய ஆகவமல்லனின் இரண்டு மகன்களான விக்கலன், சிங்கணன் என்பவர்களைத் தோற்கடித்தான். கி.பி.1062இல் இந்தப் போர் நடைபெற்றது. மேலைச் சாளுக்கிய ராஜ்யம் வீழ்ந்த பின்னர் அவர்கள் வேங்கியை நோக்கிப் படைகொண்டு போனார்கள். அங்கும் சோழர்களிடம் பலத்த அடிவாங்கி ஓடினார்கள்.

2ஆம் ராஜேந்திரன் தன் அண்ணன் ராஜாதிராஜனுக்கு உற்ற துணையாக இருந்து வந்தான். அண்ணன் போரில் ஈடுபட்ட காலங்களில் நாட்டு நிர்வாகத்தை இவன் தான் கவனித்து வந்தான். இவன் யுத்தத்திலும் நிர்வாகத்திலும் மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், நாட்டியம், நாடகம் என்று ஆர்வம் காட்டினான். தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயிலில் நடந்த ராஜராஜேஸ்வர நாடகத்தைப் பாராட்டி அதனை நடத்தியவர்களுக்க் அரிய பரிசுகளை வழங்கி கெளரவித்தான். அந்த நாட்டிய நாடகத்தை நடத்திய நடனக் கலைஞருக்கு 120 கலம் அதாவது 60 மூட்டை நெல் கொடுத்ததோடு, ஒவ்வோராண்டும் இதுபோன்ற நாடகங்களை நடத்தவும் ஆதரவு கொடுத்தான்.

இவனுடைய தம்பி வீரசோழன் என்பான் உறையூரில் இருந்து வந்தான். அவனுக்கு இந்த ராஜேந்திரன் 2 கரிகால சோழன் எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தான். இவனுடைய மகனான கடாரங்கொண்ட சோழனுக்கு சோழஜனகராஜன் எனும் பட்டத்தை வழங்கினான். இவனுடைய இன்னொரு மகன் இரட்டைபாடி கொண்ட சோழனையும் கெளரவித்தான்.

இந்த இரண்டாம் ராஜேந்திரன் தன்னுடைய முன்னோர்களைப் போலவே பாண்டிய நாட்டையும் தன்னுடைய நாட்டோடு இணைத்து நிர்வகித்து வந்தான். சாளுக்கியர்களை வென்று, வேங்கியைப் பாதுகாத்து அதன் பிறகு இவன் கலிங்கத்தின் மீதும் படையெடுத்தான். கலிங்கம் என்பது இப்போதைய ஒடிஷா பகுதிகள். இலங்கையும் இவனது படையெடுப்புக்குத் தப்பவில்லை, அங்கு நிகழ்ந்த கலவரங்களை அடக்க அங்கும் சென்று வெற்றி பெற்றான். இந்த படையெடுப்புகளுக்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகள் கலிங்கத்து மன்னன் வீர சலமேகன் இலங்கை அரசன் மனபரணனுக்கு உதவியாக இருந்து கலகத்துக்குத் துணை நின்றதுதான்.

இலங்கை, சாளுக்கியம், கலிங்கம் தவிர வடக்கே அயோத்தி, கன்யாகுப்ஜம், ரெட்டபாடி, கடாரம் ஆகிய பகுதிகளும் இவனுடைய ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கலிங்கத்துப் போரில் கலிங்க மன்னன் மனாபரணன் இறந்து போனான் அவன் இரண்டு மகன்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இப்படியொரு வீரமும், விவேகமும், நல்ல நிர்வாகமும், எதிரிகளை அடக்கி வைத்திருப்பதிலும் சிறந்து விளங்கிய 2ஆம் ராஜேந்திர சோழன் கி.பி. 1063இல் இறந்தான். இவனைத் தொடர்ந்து இவன் தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான்.


































1 comment:

துரை செல்வராஜூ said...

சோழ மன்னர்களின் வீரபராக்கிரமங்களை விவரமாக அறியத் தருகின்றீர்கள்!..பள்ளிகளில் கூட படிக்கக் கிடைக்காத விஷயங்கள்.. நன்றி ஐயா!..