கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.
1. விஜயாலய சோழன் (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன் (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன் (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன் (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067 முதல் 1070 வரை)
பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன் (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 முதல் 1279 வரை)
2ஆம் ராஜேந்திர சோழனைப் பற்றியும் அவனுடைய வெற்றிகளைப் பற்றியும் சென்ற பதிவில் பார்த்தோம். இனி அவனுடைய தம்பியும், அவனுக்கு அடுத்ததாக அரியணை ஏறியவனுமான இந்த வீரராஜேந்திர சோழனைப் பற்றி சிறிது பார்ப்போம். இவனுக்கு "ராஜகேசரி" என்ற பட்டப்பெயர் உண்டு. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் இவன். இவனது ராணியார் பெயர் அருள்மொழிமங்கை என்பதாகும். முதலாம் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் இவன். மூத்தவன் பெயர் ராஜாதிராஜன், இரண்டாமவன் 2ஆம் ராஜேந்திரன், இந்த வீரராஜேந்திரன் மூன்றாவது மகன். இவனுடைய பிள்ளைகள் மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன், மகள் ராஜசுந்தரி. இவன் இறந்த ஆண்டு 1070.
வரலாற்றில் அதிகம் இடம்பிடிக்காத ஒரு மன்னன் இந்த வீரராஜேந்திரன். காரணம் இவன் வாழ்க்கை முழுவதும் இவனுடைய அண்ணன்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன் ஆகிய முந்தைய சோழ அரசர்களுக்கு உதவுவதிலேயே போய்விட்டதால் அதிகமாக இவன் சாதித்தவை எவை என்று கூறமுடியாத நிலை உள்ளது. இருந்தபோதிலும் தந்தை ராஜேந்திர சோழனுக்கோ, தன்னுடைய மற்ற சகோதரர்களுக்கோ எந்தவிதத்திலும் குறைவில்லாத வீரனாகவே இந்த வீரராஜேந்திர சோழன் இருந்திருக்கிறான்.
சோழமன்னர்கள் தங்களது மூத்த குமாரன் தான் பதவிக்கு வரவேண்டுமென்ற கண்டிப்பான வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல், பிள்ளைகளில் வீரமும், விவேகமும், நிர்வாகத் திறமையும் அனுபவமும் உள்ளவனையே தனக்குப் பின் மன்னனாக அங்கீகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களில் யாரும் யாருக்கும் சோடை போகவில்லையாதலின் ராஜேந்திரனின் மூத்த மகன் ராஜாதிராஜன் பதவிக்கு வந்தான். அவனையடுத்து, அவனது அடுத்த தம்பி, அவனுக்குப் பின் அவன் தம்பி என்று வரிசைப்படி ஆட்சிக்கு வந்தனர்.
வீரராஜேந்திரன் தன் தந்தையார் காலத்திலும் சரி, தன்னுடைய அண்ணன்மார்கள் காலத்திலும் சரி பல்வேறு பணிகளில் இருந்து தன்னுடைய திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறான். தொண்டைநாட்டிலும், பாண்டிய நாட்டிலும், வேங்கி நாட்டிலும் இவன் ராஜப்பிரதிநிதியாக இருந்து சோழர் ஆட்சிக்குத் துணை புரிந்திருக்கிறான். சோழர்களின் கடற்படை ராஜேந்திர சோழன் காலத்தில் மிகவும் வலிமை பொருந்தியாதாக இருந்திருக்கிறது. இந்தக் கடற்படைக்குத் தலைமையேற்று வீரராஜேந்திரன் இலங்கைத் தீவுக்கும், ஸ்ரீவிஜயம், கடாரம், காடகம், பர்மா, சம்பா என பல நாடுகளுக்குச் சென்று போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறான்.
விஜயாலயன் ஸ்தாபித்த கடைச்சோழ வம்சத்தில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்த ஆதித்தன், பராந்தகன், சுந்தரசோழன், ராஜராஜன், ராஜேந்திரன் இவர்கள் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய வீரனாகத்தான் வீரராஜேந்திரன் தன் பெயருக்கு ஏற்ப இருந்திருக்கிறான்.
ராஜேந்திரனின் மகன் ராஜமகேந்திரன் தன் தந்தைக்கு முன்னதாகவே காலமாகிவிட்டபடியால் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனது தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவனுடைய காலம் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கடல்கடந்தும் பரவிக் கிடந்தமையால் அதனைக் காப்பாற்றும் பொறுப்பு இவனுக்கு இருந்தது. ராஜேந்திர சோழனின் புதல்வர்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் மொத்தமாக 16 முதல் 20 ஆண்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்திருக்கின்றனர். இப்படி இவர்களது ஆட்சி இடைவெளி அதிகமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக பதவி வகித்ததால் ராஜராஜன் போலவோ, ராஜேந்திரன் போலவோ ஒரு ஸ்திரத்தன்மையோ, அல்லது எதிர்கள் பய்ந்து ஒடுங்கிப் போயிருந்ததைப் போலவோ இல்லாமல், எதிரிகளுக்குக் குளிர் விட்டுப் போய், நேரம் வாய்த்தால் சோழர்கள் மீது போர்தொடுக்க ஆயத்தமாயிருந்தனர், குறிப்பாக சிங்களர்களும், சாளுக்கியர்களும், பாண்டியர்களும் ஓரளவுக்கு சேர மன்னர்களும் பரம்பரை எதிரிகளாகவே இருந்திருக்கின்றனர்.
வீரராஜேந்திரனின் போர்க்கள சாகசங்கள் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. இலங்கை படையெடுப்பில் இவனுடைய பங்களிப்பு இருந்தது. இலங்கையின் வெற்றிக்குப் பிறகு அந்த நாட்டை ஆளும் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான் வீரராஜேந்திரன். தொடர்ந்து உறையூரிலும் தனித்து இருந்து சோழ சாம்ராஜ்யப் பிரதிநிதியாகச் செயல்பட்டான்.
சாளுக்கியர்களுக்கு எதிராகத்தான் இவன் அதிகம் போரில் ஈடுபட்டான். காரணம் வேங்கி அரசர்கள் சோழர்கள் பெண் கொடுத்த சம்பந்திகள். அவர்களை மேலைச் சாளுக்கியர்களிடமிருந்து காக்கும் பொறுப்பு தஞ்சை சோழர்களுக்கு இருந்தது. தற்போது ஆந்திராவிலுள்ள விஜயவாடாவுக்கு அருகில் கிருஷ்ண நதிக்கரையில் சாளுக்கியர்களுடன் நடந்த யுத்தம் மிகப் பெரிய யுத்தம். அதில் வீரராஜேந்திரன் மாபெரும் வெற்றி பெற்றான்.
தொடக்கத்தில் இவன் சேரநாட்டில் போரிட்டு வெற்றிகளைப் பெற்றன், தொடர்ந்து பாண்டிய நாட்டையும் போரிட்டுப் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படி இவன் சேர நாடு, பாண்டிய நாடு என்று போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் இவனைத் தோற்கடிக்க இதுவே சமயமென்று தனது முந்தைய தோல்விகளை மறந்து சாளுக்கியன் சோமேஸ்வரன் சோழ தேசத்தின் மீது படையெடுத்து வந்தான். வீரராஜேந்திரனின் அண்ணன்மார்களான 2ஆம் ராஜேந்திரன் அவன் அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோரிடம் இவன் அடைந்த தோல்விகளை மறந்தவனாக வீரராஜேந்திரன் மீது துணிச்சலுடன் படையெடுத்தான்.
சோமேஸ்வரனுடைய புதல்வனான விக்கலன் எனும் விக்கிரமாதித்தன் (VI) கங்கைகொண்ட சோழபுரத்தைத் தாக்கினான். அப்போதுதான் வீரராஜேந்திரன் பாண்டியனையும், இலங்கை மன்னனையும் தோற்கடித்துவிட்டு சோழ நாடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் போர் செய்துவிட்டுத் திரும்பிய சூட்டோடு இங்கு இந்த சாளுக்கியன் சோழர் தலைநகரத்தையே தாக்கியதால் ஆத்திரமடைந்த வீரராஜேந்திரன் அந்த விக்கிரமாதித்தனை ஓடஓட விரட்டியடித்தான். அவர்களைப் பின் தொடர்ந்து தாக்கி கங்கபாடி நாட்டைப் பிடித்துக் கொண்டு சாளுக்கிய நாட்டிற்குள்ளும் நுழைந்தான்.
வீரராஜேந்திரன் காலத்திய பல கல்வெட்டுக்கள் அவனது வெற்றியைப் பற்றி குறிப்பிடுகின்றன. ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே மேலைச் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடிப்பதில் வல்லவர்களாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றனர். சோழர்களின் வீரத்துக்கு முன்பாக அவர்களுடைய ஆட்டங்கள் எதுவும் செல்லுபடியாவதில்லை. ராஜராஜன் காலத்தில் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தவன் சத்யாஸ்ரயன். ராஜேந்திர சோழன் காலத்திலும் இதே சத்யாஸ்ரயன் ஓட்டம் பிடித்தவன் தான். அவனோடு இரண்டாம் ஜெயசிம்மாவும் ஓட்டம்பிடித்த சாளுக்கியன். 2ஆம் ராஜேந்திரன் காலத்தில் தோற்றோடிய சாளுக்கியன் த்ரைலோக்கியமல்லன் முதலாம் சோமேஸ்வரன். வீரராஜேந்திரனிடமும் தோற்றோடிய பெருமை இந்த த்ரைலோக்கியமல்லனுக்கு உண்டு.
சாளுக்கியர்களுக்கு எதிரான சோழர்களின் போர் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. மிகக் கடுமையான போர். சோழர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி சாளுக்கியர்களை ஒழித்துவிட முயன்று போரிட்டும் அவர்கள் மிக சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய் பிழைத்துக் கொண்டு வந்தார்கள். வீரராஜேந்திரன் தன் அண்ணன்மார்கள் காலத்திலேயே இந்த களம்விட்டு ஓடிடும் மாவீரர்களான சாளுக்கியர்களோடு போர் புரிந்திருக்கிறான். 2ஆம் சோமேஸ்வரன் தன்னுடைய தோல்விக்கு பழிவாங்கவும், களத்தை விட்டு ஓடிவிடாமலும் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று தலைகீழாக முயன்றும் அவன் சாமர்த்தியம் எதுவும் வீரராஜேந்திரனின் முன் எடுபடவில்லை. சோமேஸ்வரனுடைய படைத் தளபதிகள் எல்லாம் பொலபொலவென்று சோழப் படைகளின் முன் வீழ்ந்தனர். சோழப் படைகளின் வீரத்துக்குத் தாக்குபிடிக்கமுடியாமல் சோமேஸ்வரன் மட்டுமல்லாமல் அவன் மகன் விக்கலன் எனும் 6ஆம் விக்கிரமாதித்தன் சிங்கணன் எனும் 3ஆம் ஜெயசிம்மா ஆகியோர் ஒட்டம்பிடித்த சாளுக்கியர்கள்.
தங்களது தொடர் தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்ட சாளுக்கியர்கள் ஒரு குறிப்பிட்ட நாளையும், இடத்தையும் சொல்லி அங்கு போருக்கு வரும்படி சோழர்களை அழைத்தனர். அதன்படி சோழர்படை 1067 செப்டம்பர் 10எல் அந்த இடத்துக்குச் சென்று சாளுக்கியர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர் என்கிறது மணிமங்கலம் கல்வெட்டுக்கள்.
சோழர்கள் ஒரு மாதகாலம் அங்கு காத்திருந்தும் சாளுக்கியப் படைகள் வந்து சேரவில்லை. கோபம் கொண்ட சோழர்கள் அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரங்களையெல்லாம் நாசம் செய்து ஆத்திரத்தைக் காட்டினர். பயந்து ஓடிய சாளுக்கியர்களின் கோழைத்தனத்தையும், தங்கள் வெற்றியையும் பறைசாற்றும் விதத்தில் சோழர்கள் துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு வெற்றித்தூணை நிறுவினர்.
இலங்கைப் போர்.
இலங்கையில் அப்போது அரசனாக இருந்தவன் விஜயபாகு என்பவன். இலங்கையின் தெற்குப் பகுதியில் ரோஹணா எனுமிடத்தையடுத்த சிறுபகுதியை இவன் ஆண்டுவந்தான். இவனுக்கு வட இலங்கையில் ஆக்கிரமித்திருந்த சோழர்களை விரட்டிவிடவேண்டுமென்கிற வேகம் இருந்தது. புத்த இலக்கியமான மஹாவம்சம் சொல்ல்கிறபடி சோழர் படைகள் ரோஹணா பகுதின் மீது படையெடுத்து விஜயபாகுவை அடக்கிவைக்க எண்ணியது. அச்சமடைந்த விஜயபாகு பர்மாவின் அரசனுக்கு உதவிகேட்டு ஆள் அனுப்பினான். அவனும் தன்னுடைய படைகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இந்த அன்னியப் படையின் உதவியோடு விஜயபாகு தமிழர் ஆக்கிரமித்திருந்த வடபகுதியில் கலகத்தை உருவாக்கினான். சோழர் படைகள் இந்த கலகத்தை அடக்கிவிட்டது. இருந்தாலும் விஜயபாகு தொடர்ந்து சில ஆண்டுகள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.
கடாரத்தின் மீது படையெடுப்பு.
வீரராஜேந்திரனின் ஆட்சிப் பொறுப்பேற்ற ஏழாம் ஆண்டில் கடாரத்து அரசன் உதவி கேட்டு அனுப்ப அவனுக்கு உதவியாகச் சோழர் படையை அங்கு அனுப்பி வைத்தான். அங்கு புரட்சியாளர்களை அடக்கிவிட்டு மீண்டும் ராஜ்யத்தை அந்த அரசனிடமே கொடுத்துவிட்டான் வீரராஜேந்திரன். இதெல்லாம் 1068இல் நடந்ததாக வரலாறு கூறுகிறது. சோழக்ர்ள் இப்போதைய இந்தோனேஷியா மலேசியா ஆகிய பகுதிகளை சுமார் 20 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்திருக்கின்றனர். இவன் காலத்தில் தூரக்கிழக்கு நாடுகளை வென்று அங்கெல்லாம் வாணிபம் செய்யச் சென்ற உறவு 1215 வரை தொடர்ந்து வந்திருக்கிறது.
சாளுக்கிய விக்கிரமாதித்தனுடன் உறவு.
சாளுக்கியன் சோமேஸ்வரன் (I) காலத்துக்குப் பிறகு அவனுடைய மகன் 2ஆம் சோமேஸ்வரன் 1068இல் ஆட்சிக்கு வந்தான். அவனுக்கும் அவனுடைய தம்பியான விக்கிரமாதித்தனுக்குமிடையே பூசல் எழுந்தது. இந்த 6ஆம் விக்கிரமாதித்தன் தன்னுடைய முன்னோர்கள் சோழர்களிடம் அடிவாங்கியதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களோடு மோதுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தான். ஆகையால் அப்போது சாளுக்கியப் பிரதேசத்தில் எழுந்த தாயாதிச் சண்டையில் தன்னை ஆதரிக்க சோழன் வீரராஜேந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மனம் இரங்கிய வீரராஜேந்திரன் அவன் பக்கம் நின்று சாளுக்கிய நாட்டுக்கு அவனை அரசனாக்கியதோடு அவனுக்குத் தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்தான்.
வீரராஜேந்திரன் வாழ்க்கை.
இவன் ராஜாதிராஜனுக்கும், 2ஆம் ராஜேந்திரனுக்கும் தம்பி என்பதை முன்பே பார்த்தோம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியிலிருந்து இவனது மனைவியின் பெயர் அருள்மொழிநங்கை என்பது தெரிகிறது. இவனுடைய மகள் ராஜசுந்தரி என்பாளைத்தான் கீழைச் சாளுக்கிய மன்னருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அந்த ராஜசுந்தரியின் மகன் அனந்தவர்மன் சோடகங்கதேவன் என்பான் கீழைச் சாளுக்கிய மன்னனாக இருந்தான்.
வீரராஜேந்திர சோழனுக்கு "சகலபுவனஸ்ரயா", ஸ்ரீமேதினிவல்லபா", "மகாராஜாதிராஜ சோழகுலசுந்தரா", "பாண்டியகுலாந்தகா", "ஆகவமல்லகுல கலா", "ஆகவமல்லனை மும்மாடி வெண் கண்ட ராஜ்ஸ்ரயா", "வீர சோழ" எனும் விருதுகள் இருந்தன. இவன் 1070இல் இறந்ததாகத் தெரிகிறது. இந்த அண்ணன் தம்பிகள் ஒருவருக்கொருவர் அதிகம் வயதி வித்தியாசமில்லாமல் இருந்திருக்கிறார்கள். வீரராஜேந்திரன் காலத்திலேயே தன்னுடைய மகனான மதுராந்தகனை காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலாதிபதியாக நியமித்திருந்தான். அப்போது அவனுக்கு "சோழேந்திரன்" எனும் பட்டப்பெயரும் இருந்தது. இவனுடைய இன்னொரு மகனான கங்கைகொண்டசோழன் என்பவன் பாண்டிய நாட்டியத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான். இவ்விருவரில் ஒருவர்தான் இவனுக்குப் பிறகு அதிராஜேந்திரன் எனும் பட்டப்பெயருடன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான், ஆனால் அது இவ்விருவரில் யார் என்பது தெரியவில்லை. வீரராஜேந்திரன் தில்லையம்பலத்தான் நடராஜப் பெருமானுக்குத் தொண்டு புரிந்தவன். அந்த ஆடல்வல்லானுக்கு கழுத்துக்கு மிகுந்த விலை உயர்ந்த சிவப்புக் கற்கள் பதித்த மாலையொன்றை இவன் அளித்திருந்தான். இவன் சைவனாயினும் வைணவ ஆலயங்களையும் போற்றி வழிபட்டு பாதுகாத்து வந்தான்.
கி.பி. 1063 முதல் 1070 வரை ஆட்சிபுரிந்த வீரராஜேந்திரன் காலமான பின்னர் அவனது மகன் அதிராஜேந்திரன் என்பான் அரசு கட்டிலில் வீற்றிருந்தான் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
1 comment:
மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது!...ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே மேலைச் சாளுக்கியர்கள் போர்க் களத்திலிருந்து ஓட்டம் பிடிப்பதில் வல்லவர்களாகவும் தீராத தலைவலியாகவும் இருந்திருக்கின்றனர்.
Post a Comment