பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 22, 2013

விக்கிரம சோழன் (1118 முதல் 1135 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


விக்கிரம சோழன் (1118 முதல் 1135 வரை)

முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே அரசு அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியவன் அவனுடைய நான்காம் குமாரனாகிய விக்கிரம சோழன். இவனுக்குப் "பரகேசரி" எனும் பட்டம் உண்டு. குலோத்துங்கன் முதலில் விக்கிரமாதித்தன் வந்து போரிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தைப் பிடித்துக் கொண்டபோது திருவாரூர் போய் தங்கியிருந்து, பின்னர் விக்கிரமாதித்தன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய பின் மீண்டும் கங்கை கொண்ட சோழபுரம் போய்விடுகிறான். அதன் பின் சோழர்களின் தலைநகரமாக இந்த கங்கைகொண்ட சோழபுரமே இருந்து வந்தது.

விக்கிரம சோழனுக்கு இரு மனைவியர்கள் முக்கோகிலனடிகள், தியாகபாதா என்பவர்கள். இவனுக்குப் பின் இவன் மகனான இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். விக்கிரம சோழன் 1135இல் காலமானான். கோப்பரகேசரிவர்மன் விக்கிரம சோழன் எனும் பெயரோடு விளங்கிய இந்த மன்னன் 12ஆம் நூற்றாண்டில் சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் முதலாமவனும் சிறந்தவனுமாக இருந்தான்.

விக்கிரம சோழன் முன்பே குறிப்பிட்டபடி குலோத்துங்கனின் நான்காவது மகன். வீரசோழன் என்பவன் மூன்றாவது மகன். விக்கிரமன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பாகவே வேங்கி நாட்டை ஆளும் பொறுப்பு 1089இல் கொடுக்கப்பட்டு அங்கு சென்றுவிட்டான். 1118இல் குலோத்துங்கன் தனக்கு வயது முதிர்ந்து விட்டது என்பதால் வேங்கியிலிருந்த விக்கிரமனை அழைத்து சோழ நாட்டில் பதவியில் அமர்ந்தினான். ராஜகேசரி என்றும் பரகேசரி என்றும் இவனுக்கு விருதுகள். 1118 முதல் 1122 வரை இவன் தன் தந்தை குலோத்துங்கணுடன் இணைந்து ஆண்டுவந்தான். விக்கிரமன் வேங்கியைவிட்டு சோழ தேசத்துக்குத் தன் தந்தைக்குத் துணையாக வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டான்.

விக்கிரமன் ஆட்சிக்கு வருவதற்கு 12 வருஷங்கள் முன்பாகவே சோழ சக்கரவர்த்தி குலோத்துங்கன் சார்பில் கலிங்கத்தின் மீது 1110இல் படையெடுத்தான். இந்த படையெடுப்பு பற்றிய இலக்கியமொன்று இருக்கிறது விக்கிரம சோழன் உலா என்று.

மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் 1118இல் கிழக்கு சாளுக்கிய நாடான வேங்கியைப் பிடித்துக் கொண்டான் என்பதைப் பார்த்தோம். 1126இல் விக்கிரமாதித்தன் இறந்தவுடன் விக்கிரம சோழன் வேங்கியை மீண்டும் பிடித்துக் கொண்டான். இந்தப் போர் குறித்த அதிகப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீண்ட காலம் சோழர்கள் ஆட்சியை நடத்தி வந்ததால் வேங்கி நாட்டவர் சோழர்களை சாளுக்கியர்களைக் காட்டிலும் அதிகம் விரும்பியிருக்கிறார்கள். அது போலவே அரச குடும்பத்தார் மீதும் மக்கள் அன்பு வைத்திருந்தனர். வேங்கி மக்களின் விருப்பத்துக்கிணங்க விக்கிரம சோழன் தன் குமாரன் இரண்டாம் குலோத்துங்கனை வேங்கி நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.

வேங்கியை முழுவதுமாக மீண்டும் தன்வசப் படுத்திக் கொண்ட பிறகு சோழர்கள் கலிங்கத்தின் மீதும் படையெடுத்துச் சென்றனர். சோழர்களிடமிருந்து ஹொய்சாளர்கள் கைப்பற்றிக் கொண்ட பிரதேசங்களை மீட்க விக்கிரமன் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. விக்கிரமன் கலம் அவன் தந்தையின் காலம்போல அதிகமான போர்களைக் கொண்டதல்ல.

விக்கிரமன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான். பல சிவாலயங்களை இவன் பல ஊர்களிலும் கட்டி வைத்தது இன்றும் அவன் பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன. சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அந்த சிதம்பரத்துக்கு நிறைய கைங்கர்யங்களைச் செய்தான் விக்கிரம சோழன். 1128இல் சோழ சாம்ராஜ்யத்தின் வருமானம் முழுவதையும் சிதம்பரம் கோயில் கைங்கர்யத்துக்கும் விரிவாக்கத்துக்கும் கொடுத்து விட்டான். ஆலயத்தின் முக்கிய விமானம் மற்றும் நடைபாதை கூரைகளுக்குப் பொன் வேய்ந்தான். இவன் காலத்தில் மக்கள் ஆலயங்களின் அபிவிருத்திக்கு அதிக நன்கொடைகளைக் கொடுத்தனர்.

விக்கிரம சோழனை "தியாகசமுத்திரன்" என அன்போடு விருது கொடுத்து அழைத்தனர். இவனுக்குப் பிறகு இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வந்தான்.



2 comments:

துரை செல்வராஜூ said...

சோழர் தம் வரலாறு வார்த்தைகளால் வார்த்தெடுக்கப் பட்ட பொக்கிஷமாக விளக்குகின்றது. நூலகங்களில் எப்போது கதைச்சுருக்கம் போலப் படித்தது. தஞ்சை மத்திய நூலகத்தில் கழித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன!..

guru said...

விக்கிரம சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் எங்கள் ஊர் விக்கிரமம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள கல்வெட்டு களில் ஊரின் பெயர் விக்கிரம சோழபுரம் என்று உள்ளது. மதுக்கூர் அருகில் 0.5 கிலோமீட்டர் தூரத்தில் எங்கள் ஊர் உள்ளது.