பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 21, 2013

உத்தவ கீதை

                     பரத நாட்டியத்தில் உத்தவ கீதை 

         (அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்திலிருந்து வந்திருக்கும் திருமதி பாலா தேவி சந்திரசேகர்        
                                                     அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி.)

தஞ்சை பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாச்சார அகாதமியின் சார்பில் திருமதி பாலாதேவி சந்திரசேகர் தஞ்சை நவநீதகிருஷ்ணன் ஆலயத்தின் பகவத் கீதா மண்டபத்தில் கடந்த 19-7-2013 வெள்ளிக்கிழமை மாலை "உத்தவ கீதை" எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார். 

உத்தவ கீதை என்றால் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவருடைய பக்தரும், ஒரு வகையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சகோதருமான உத்தவருக்கு போதித்த "கீதை" இந்த "உத்தவ கீதை". உத்தவ கீதை உபதேசிக்கப்பட்ட காலம் இந்த பூவுலகில் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார நோக்கம் முடிந்து வைகுந்தம் திரும்புகின்ற காலகட்டம். ரிஷிகளின் சாபத்தின் பலனாக பூவுலகில் யாதவ இனம் அழிகின்ற நிலையை எட்டுகிறது. அப்போதுதான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதீத பக்தி கொண்டவரான உத்தவர் வரப்போகும் ஆபத்தை உணர்ந்து சில உபதேசங்களைச் செய்யுமாறு வேண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அருளிச் செய்த உபதேசங்களே இந்த உத்தவ கீதையாகும்.

இந்த கீதை ஸ்ரீமத் பாகவதத்தில் 11ஆவது ஸ்காந்தமாக இருக்கிறது. இதை ஹம்ச கீதா என்றும் சொல்வார்கள். பகவத் கீதையை "Song of the God" என்பார்கள். வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியது. 

இந்த உத்தவ கீதையில் ஆன்மீக சிந்தனைகள், மதக்கோட்பாடுகள், பல தரப்பினருக்கும் உரிய நடத்தை விதிமுறைகள், வாழ்வின் நோக்கம், பக்தி ஈடுபாட்டின் அவசியம், உண்மைகளை உணரும் வழிமுறைகள், நமக்கு ஏற்படும் தீமைகளுக்கான காரணங்கள் இவை பற்றியெல்லாம் சிந்திக்கச் செய்யும் விவாதங்கள் இதில் உண்டு. பிறப்பால் க்ஷத்திரியனான ஸ்ரீ கிருஷ்ணன் யாதவ குலத்தில் வளர்ந்து யாதவனாக உணரப்பட்டு அந்த இனம் அழியும் தருணத்தில் சொல்லப்பட்ட தத்துவ விசாரங்களைக் கொண்டது இது.

                                  நடன நிகழ்ச்சி பற்றிய விவரங்கள்.
முதல் காட்சி. ஐந்து குருமார்கள்.
யதுகுலம் கரைகடந்து கட்டுக்கடங்காத பலம் கொண்டு வளர்ந்துவிட்டது. தன் அவதார நோக்கம் முடிந்துவிட்ட நிலையில் ஸ்ரீ கிருஷ்ணன் பூபாரத்தைக் குறைக்க முடிவு செய்துவிட்டான். தன் மாய விளையாட்டை நிறுத்திக் கொண்டு ராக்ஷஸ பலம் பெற்றுவிட்ட யதுகுலத்தை அழித்திட முடிவு செய்து விட்டான்.

துவாரகைக்கு அருகில் ஒரு மாபெரும் யாகமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு (கெளசிகர், பிருகு, வாமதேவர் முதலியோர்) ரிஷிகள் அழைக்கப்பட்டனர். புனிதமான ரிஷிகள் அந்த யாகத்துக்கு வரும்பொழுதில் யாதவ இளைஞர்கள் சம்பா என்பவனை (இவன் கிருஷ்ணனுடைய ஜம்பாவதி எனும் ஒரு ராணியின் மகன்) நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணைப் போல வயிற்றைப் பெரிதாகக் காட்டிக் கொண்டு அந்த ரிஷிகளை நெருங்கி, இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் ஆணா? பெண்ணா? என்று வினவினர். உண்மையை உணர்ந்த ரிஷிகள் கோபம் கொண்டு இவள் ஒரு உலக்கையைப் பெற்றெடுப்பாள், அது உங்கள் யாதவ இனத்தை பூண்டோடு அழிக்கும் என்று யாதவர்களைச் சபித்தனர். 

அந்த நேரம் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூவுலகத்தை நீங்கிப் போவதை அறிந்த உத்தவர் கிருஷ்ணரிடம் தன்னையும் அழைத்துப் போக வேண்டினார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னர், "உத்தவா, நீ என்னை எப்போதும் மனத்தில் நிறுத்தி இவ்வுலகத்தையும் என்னையும் ஒன்றாக நினை. உனக்கு எந்த தீங்கும் நேராது" என்றார். பிறகு சில அரிய உபதேசங்களை பகவான் உத்தவருக்குச் அருளிச்செய்கிறார். ஒருமுறை யது மன்னன் அவதூதரிடம் (Avaduta is a person roam free like a child upon the face of the Earth - a mystic or saint) தங்களுக்கு எப்படி இத்தனை ஞானம் கிடைக்கப் பெற்றது என வினவினான். அதற்கு அவர் சொன்னார், "ஓ ராஜாவே! எல்லா ஞானங்களையும் அறிவையும் ஒரு ஞானியிடமிருந்து மட்டும் பெற்றுவிட முடியாது. நான் இருபத்தி நான்கு ஞானியரிடம் இந்த ஞானத்தைப் பெற்றேன். அந்த பரிபூரண ஞானத்தைப் பெற்றதால் நான் இவ்வுலகில் பரிபூரணனை மட்டும் மனதில் எண்ணித் திரிகிறேன்" என்றார்.

அவர் சொன்ன அந்த இருபத்திநான்கு குருமார்களில் ஐந்து குருமார்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஞானம் எவை என்பதுதான் இந்த நாட்டிய நிகழ்ச்சியின் மையக் கரு. அந்த ஐந்து ஞானியர் எவர்? ஒரு சிலந்தி, ஒரு புறா, ஒரு தாசி, இளம் கன்னிப்பெண், ஒரு குளவியும் அதன் கூட்டுப் புழுவும்.

1. சிலந்தி: சிலந்திப் பூச்சி தன் உடலினுள்ளிருந்து வாய் வழியாக பின்னி பின்னர் அதனை விழுங்கிவிடுவதைப் போல பரம்பொருளான கடவுள் இப்பூவுலகை உருவாக்கி, காத்து பின்னர் அதனை அழித்தும் விடுகிறான். பரம்பொருள் ஒன்றே நிஜம். அவனே ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறான்.

2. புறாவின் குடும்பம்: ஓரிடத்தில் ஆணும் பெண்ணுமாய் இரு புறாக்கள் வசித்தன. தங்கள் குஞ்சுகளை அவை அன்போடு பாதுகாத்து மகிழ்ச்சியடைந்தன. ஒருநாள் அவ்விரு புறாக்களும் இறைதேட சென்றிருந்த சமயம் ஒரு வேடன் அந்த குஞ்சுகளை வலைவிரித்துப் பிடித்துவிட்டான். திரும்பிவந்த பெரிய புறாக்கள் தங்கள் குஞ்சுகள் வலையில் சிக்கியதைக் கண்டு தாங்களும் அதனுள் வீழ்ந்துவிட்டன. பந்த பாசத்தின் பலனாக ஏற்பட்ட அழிவை இந்தப் பறவைகள் உணர்த்துகின்றன. 

3. பிங்களா என்றொரு தாசி. அவளுக்கு ஒரு பேராசை. பெரும் செல்வந்தன் எவனாவது வந்து தனக்குப் பெரும் பொருளையும் செல்வத்தையும் தந்துவிடுவான் என்று கதவைத் திறந்து வைத்துக் கொண்டு இரவு முழுவதும் காத்திருந்தாள். எவனும் வருவதாகத் தெரியவில்லை. பொழுது விடியும் சமயம் அவளுக்கு ஞானம் தோன்றியது. கேவலம் இந்த அழியும் உடலைக் கொண்டு அழியும் செல்வத்துக்கு ஆசைப்படுவதைக் காட்டிலும் அழியாத ஞானவஸ்துவான பரம்பொருளை எண்ணி தவம் செய்வதே சிறப்பு என்பதை உணர்ந்தாள்.

4. வளை அணிந்த ஒரு அழகிய இளம் பெண். அவள் கையில் வளையல்கள் இருந்தன. அந்த வளையல்கள் அவள் அசையும்பொழுதெல்லாம் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. அவற்றைக் கழற்றிவிட்டு ஒரேயொரு வளையை மட்டும் அணிந்தாள். அப்போது ஓசையில்லை, தொல்லையில்லை. ஓசையின் காரணமாய் மனம் ஒருநிலைப் படாமல் இருப்பதினும் அமைதியாய் மனத்தை ஒருநிலைப் படுத்தி இறைவனை தியானித்தல் நலம்.

5. குளவியும் கூட்டுப் புழுவும். ஒரு குளவி தன்னுடைய புழுவை கூட்டில் அடைத்துவிட்டு அதை எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொண்டும் இருந்தது. தன் கூட்டையோ புழு உடம்பையோ தூக்கி எறிந்துவிடாமல் அது குளவியாக சிறிது சிறிதாக மாறியது. ஒருவன் தன் மனத்தை ஒருநிலைப் படுத்தி ஈடுபட்டு எதுவாக ஆக விரும்புகிறானோ அதுவாக ஆகிவிட முடியும் என்பதை விளக்குகிறது.
இந்த கருத்துக்கள் முதல் பகுதி நாட்டியத்தில் பாடல் வரிகளோடும், ஸ்லோகங்களோடும் இடைப்படும் ஸ்வரகதிகளோடும், ஜதிகளோடும் வழங்கப்பட்டது.

இரண்டாம் பகுதி:
முன்னொரு காலத்தில் ஹிரண்யகர்பரின் மக்களான சனகர்கள் தந்தையிடம் இறைவனைச் சென்றடையும் யோக மார்க்கம் எது என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து கொள்வதற்காக பிரம்மா கிருஷ்ணனை நோக்கித் தவம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ண பகவான் தன்னை ஒரு அன்னப்பறவையாக ஆக்கிக் கொண்டு சொன்னார். நான் ஒரு அன்னப் பறவை. அழியாத அழிக்க முடியாத ஞானத்தின் வடிவம். இதற்கு வேறு ஸ்தூல வடிவம் இல்லை. எனக்கு குணங்கள் இல்லை, அறிவினால் என்னை அளக்க முடியாது, பேச்சு மனம் சிந்தனை இவற்றுக்கு அப்பாற்பட்டவன். ஜீவன்முக்தராக வாழ்தல் வேண்டும். உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே முக்திப் பேற்றைப் பெறுதல் வேண்டும். இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் முக்தி பற்றி குறிப்பிட்டு, லோகாயதமான வாழ்க்கையும் பொருள்களின் மீது ஆசையும் விட்டு விடுதலை பெறுதல் வேண்டும் என்பதை விளக்கினார். 
மூன்றாம் பகுதி
ஸ்ரீ கிருஷ்ணரும் உத்தவரும் அன்போடு உரையாடிக் கொண்டிருந்த போது தன்னுடைய லீலைகளை உத்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணன் அவரை கோகுலத்துக்குப் போய் தன்னுடைய பிரிவால் வாடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களையும், கோபியர்களையும் பார்த்து வரச் சொன்னார். உத்தவரும் அப்படியே போய் பார்க்கையில் அங்கு தயிர் கடையும் கோபியர் கிருஷ்ணன் நினைவில் மூழ்கிக் கிடப்பதைக் காண்கிறார். அவன் நினைவு வருத்த கோபியர் வருந்துகின்றனர். அவர்களிடம் போய் உத்தவர் சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை விட்டுப் பிரியவில்லை. நீங்கள் அவனையே நினைத்துக் கொண்டிருங்கள், அவன் உங்களோடு இருப்பான் என்றார். கோபியர்கள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணன் நினைவில் திளைக்கும்போது பக்தி யோகம் என்பது என்ன என்பதை உத்தவர் உணர்கிறார். 

பரம்பொருளை அடைவது என்பது ஒரு குரு அல்லது சத்சங்கம் இல்லாமல் இயலாது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார், "ஓ என் குழந்தாய்! கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு பக்தி மார்க்கமும், இறை சிந்தனையுமே சிறந்தது. உத்தவா! பிரஹலாதனை எண்ணிப்பார்! ஹனுமான், கோபியர்கள், ராதா இவர்களெல்லாம் தங்கள் மனங்களை இறைவனின் தாமரைப் பாதங்களில் சதா ஈடுபடுத்திக் கொண்டவர்கள் அல்லவா? அவர்களைப் போல பக்தி செய்ய கற்றுக்கொள் என்றார். இதைக் கேட்ட உத்தவர் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதமலரை மனத்தில் ஏந்தி, கிருஷ்ணா என்னை எப்போது அனுக்கிரகிப்பாய் என்றார். கிருஷ்ணர் உத்தவரை பத்ரிகாஸ்ரமம் செல்லும்படி சொல்கிறார். 
உத்தவர் மன அமைதியடைந்து ஸ்ரீ கிருஷ்ணரின் நரநாராயண பீடமான பத்ரிகாஸ்ரமத்தை அடைகிறார். கிருஷ்ணனைப் பிரியும் வருத்தம் நீங்க அவன் பாதுகைகளைத் தன் தலைமீது தாங்கி எடுத்துச் செல்கிறார். ஸ்ரீ கிருஷ்ணா, முகுந்தா, முராரி, யதுகுல திலகா, பரிபூரணனே என்று பக்தி பூர்வமாகப் பாடிக் கொண்டே செல்கிறார். இந்தக் கருத்துக்களை சிறப்பாக அமைக்கப்பட்ட தில்லானாவில் ஆடிக்காட்டி பார்ப்போரை மனம் மகிழ வைத்தார் திருமதி பாலாதேவி சந்திரசேகர்.

இந்த நடன நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி திரு சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நடனக் கலைஞர் திருமதி பாலாதேவி சந்திரசேகரனுக்கு "நாட்டிய கலா பாரதி" எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. தமிழ்ப்பல்கலைக் கழக நாடகத்துறை பேரா. திரு ராமானுஜம், பாபநாசம் தணிக்கையாளர் திரு ஹரிஹரன், மெலட்டூர் பாகவத மேளா திரு மாலி எனும் மகாலிங்கம், திருவையாறு நாட்டியாஞ்சலிக் குழுத் தலைவர் வி.கோபாலன், தஞ்சை பிரஹன் நாட்டியாஞ்சலி செயலர் திரு முத்துக்குமார், நடனக் கலைஞர் ஆசிரியர் திருமதி அருணா சுப்பிரமணியன், நடனக் கலைஞர் திரு சுப்பிரமனியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடு கலைமாமணி திரு B.ஹேரம்பநாதன், தஞ்சை ஹெரிடேஜ் ஆர்ட்ஸ் அண்ட் கல்சுரல் 
அகாதமி, தஞ்சை.








1 comment:

துரை செல்வராஜூ said...

மனம் நிறைந்த பதிவு. உத்தவ கீதையின் தொடக்கப் புள்ளியை தாங்கள் எளிமையாக புரியும்படி விவரித்துள்ளீர்கள். ஸ்ரீகிருஷ்ணன் உத்தவருக்கு உபதேசித்த கீதையையும் அறிய ஆவல் உள்ளவனாக இருக்கின்றேன். நன்றி!..