பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 22, 2013

இரண்டாம் குலோத்துங்கன் (1133 முதல் 1150 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இரண்டாம் குலோத்துங்கன் (1133 முதல் 1150 வரை)

விக்கிரம சோழனின் மகனான இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு "ராஜகேசரி" எனும் விருது உண்டு. கங்கைகொண்ட சோழபுரம் இவன் தலைநகரம். இவனது ராணிமார்கள் தியாகவல்லி, முக்கோகிலம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலம் சோழ நாட்டின் பொற்காலம் என்று தெரிகிறது. இவன் காலத்தில்தான் மக்கள் சுகபோகத்தில் இருந்து கொண்டு வீண் பொழுது போக்கிக்கொண்டு ஜீவகசிந்தாமணியைப் புலவர்களைக் கொண்டு படிக்க வைத்துப் பொற்காசுகளைக் கொடுத்து வாழ்க்கையை அனுபவித்தனர். இதனைக் கண்டு வருந்திய மன்னன் மக்களை நல்வழிப்படுத்த நல்லதொரு நூலை இயற்றித்தரவேண்டுமென்று தன் அமைச்சர் சேக்கிழார் பெருமானை வேண்ட, அவரும் பெரியபுராணம் செய்தார்.

இவனுடைய தந்தை இருந்த காலத்திலேயே இந்த இரண்டாம் குலோத்துங்கன் இளவரசாகப் பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சியில் பங்குகொண்டான். 1135இல் விக்கிரமன் காலமானதும் இவன் முழுமையான மன்னனாக ஆனான். இவனுடைய ஆட்சிக் காலம் பொற்காலம் எனலாம். நாட்டில் அங்கும் அமைதி நிலவியது. இவனும் நல்லாட்சி வழங்கினான். கடவுள் பக்தி நிரம்பியவன் ஆதலாம் எங்கும், எவரிடமும் அன்போடு நடந்து கொண்டான். மக்கள் மதித்த நல்லதொரு ஆட்சியாளனாகத் திகழ்ந்தான் இரண்டாம் குலோத்துங்கன்.

இவன் காலத்தில் போர்கள் எதுவும் இல்லை. ஆனால் வேங்கியைக் காக்க இவன் சில போர்களை நடத்த வேண்டியிருந்தது. பெரிய புராணம் எனும் சேக்கிழார் சுவாமிகள் இயற்றிய இலக்கியம் இந்த பெருமகனாரின் புகழுக்கு ஒரு சாட்சி. இந்த குலோத்துங்கனுக்கு சிதம்பரம் என்றால் உயிர். இந்த சோழ மன்னர்கள் சிதம்பரத்திலும் ஒரு முறை முடிசூட்டிக் கொள்வது வழக்கம். அதுபோலவே இவனும் இங்கு முடிசூட்டிக் கொண்டான்.

சிதம்பரம் நடராஜப் பெருமான் மீது அளவிலா பக்தி கொண்டவன். இவன் காலத்தில் சிதம்பரம் ஆலயம் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. விக்கிரம சோழன் தொடங்கிய திருப்பணி இவன் காலத்தில் முடிந்து குடமுழுக்கு நடந்திருக்கலாம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சைவ வைணவ பூசல் தமிழகத்தில் நடந்திருக்கிறது. சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலை இவன் காலத்தில் அகற்றப்பட்டது என்றொரு செய்தியும் இருக்கிறது. சிவாலயத்தில் எதற்காக பெருமாள் சிலை என்பது இவன் கருத்தாக இருந்திருக்கலாம்.*

(*இது குறித்து ஒரு புராண செய்தி உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அவர் பள்ளிகொண்டிருந்த ஆதிசேஷன் போய் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைத் தான் பார்க்க விரும்புவதாகச் சொல்ல பெருமாள் அவரை அனுமதிக்கிறார். உடனே ஆதிசேஷன் பதஞ்சலி முனிவர் வடிவத்துடன் வியாக்கிரபாத முனிவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்று ஐயனின் ஆடலைக் காண்கிறார். அங்கு பாற்கடலில் மகாலக்ஷ்மி விஷ்ணுவிடம் ஆதிசேஷனும் போய்விட்டார் நாமும் போய் பார்த்தால் என்ன என்று சிதம்பரம் போய் கூட்டத்தோடு கூட்டமாய் நடராசரின் (சிவனின்) ஆட்டத்தைப் பார்த்தார்களாம். ஒருக்கால் இந்த நிகழ்ச்சியைக் காட்டும் விதத்தில் அங்கு ஒரு பெருமால் சந்நிதி இருந்ததோ என்னவோ?)

எது எப்படியோ? இரண்டாம் குலோத்துங்கனுக்கு அவன் காலத்தில் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பிய இராமானுஜரைப் பிடிக்கவில்லை. இராமானுஜரின் பல சீடர்களை இவன் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. ஒரு வைணவரைக் குருடாக்கிவிட்டதாகவும் செய்தி இருக்கிறது. இராமானுஜருக்குச் செய்ய வேண்டிய இந்த கொடுமையை அவருக்கு நேராமல் தடுக்க நினைத்த கூரத்தாழ்வான் என்பவருக்கு நடந்துவிட்டது இது.

ராஜாவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் வசிக்காமல் சிதம்பரத்திலேயே அதிகம் வாழ்ந்தான் இந்த இரண்டாம் குலோத்துங்கன். இவன் ராணி தியாகவில்லி. இன்னொரு மனைவி மலயமான் வம்சத்து ராணி. இந்த குலோத்துங்கனைத்தான் "அனபாய சோழன்" என்று அழைத்தனர். இந்தப் பெயர்தான் பல கல்வெட்டுகளிலும் புத்தகங்களிலும் குறிப்பிடப்படுகிறது.

இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு இவனது மகன் இரண்டாம் ராஜராஜன் என்பவன் 1150இல் ஆட்சிக்கு வந்தான்.


1 comment:

துரை செல்வராஜூ said...

அநபாய சோழனின் காலம், சேக்கிழார் பெருமானால் பெரிய புராணம் தொகுக்கப்பட்ட - பொற்காலம். சிதம்பரத்தில் சிவனடியின் கீழேயே வாழ்ந்து வந்த மன்னனின் மனதில் - உடையவரின் மீதும் வைணவ காழ்ப்பு ஏற்பட்டதும் விதியே போலும்!...