சுதந்திர இந்தியா இது வரை.......
1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். சுதந்திரம் அடைந்த பிறகு, நம்மை நாமே ஆளத் தொடங்கியபின் இந்திய அரசு, அரசின் கொள்கைகள், மக்களின் வாழ்க்கை, அரசியல் கட்சிகள் இவைகளின் நிலைமை பற்றி சிறிது திரும்பிப் பார்த்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல; நடந்தவற்றின் தொகுப்பு.
இந்தியா சுதந்திரமடைந்த நாள் இந்திய பாராளுமன்றத்தில் பேசிய ஜவஹர்லால் நேருவின் உரை இன்று வரை உயிரோட்டமுள்ள உரையாகக் கருதப்படுகிறது. "Tryst with destiny" எனும் அவரது கருத்தாழமிக்க உரை சிந்தித்துப் பாராட்டத்தக்கது. அன்றைய தினம் இந்திய அரசியலில் பல ஜாம்பவான்கள் இந்தியாவை வழிநடத்தக் காத்திருந்தார்கள். நேருவின் காலத்து தலைவர்களைப் போல தேசபக்தி, மக்களின் நல்வாழின்பால் நாட்டம், நேர்மை, கடமை உணர்வு, தியாகம் இவைகள் உடையவர்களைக் காண்பது அரிது.
சில பெயர்களைத்தான் சிந்தித்துப் பார்ப்போமே! வல்லபாய் படேல், ஆச்சார்யா கிருபளானி, ஜெயப்பிரகாஷ் நாராயண், கோவிந்த் வல்லப் பந்த், ரஃபி அகமத் கித்வாய், ராஜாஜி இன்னும் பல்லாயிரக்கணக்கான பேர். அத்தனை பேரையும் நினைவு கூர்வது அவசியம். போகட்டும், இனி வரலாற்றுக்குத் திரும்புவோம்.
இந்தியா சுதந்திரமடைந்து ஆறுமாத காலத்துக்குள் தேசப்பிதா என்றழைக்கப்பட்ட மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். 30 ஜனவரி 1848 அவர் மறைந்த நாள். சுதந்திர இந்தியா சந்தித்த முதல் அதிர்ச்சி இவரது மரணம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் தொடர்ச்சியாக பல நிகழ்வுகள். பாகிஸ்தான் படைகள் காஷ்மீரின் மீது படையெடுப்பு. மகாராஜா ஹரிசிங் முடிவெடுக்க முடியாமல் தனித்திருக்க முயன்றதன் விளைவு பல பகுதிகளை பாகிஸ்தான் கபளீகரம் செய்ய முடிந்தது. நேருவின் ஜனநாயப் பிடிப்பு இந்தப் பிரச்சினையை ராணுவத்திடம் விடாமல் ஐ.நா.சபையிடம் கொண்டு சென்றது. 1949இல் கராச்சி ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் ராணுவம் பிடித்துக் கொண்ட பகுதி அவர்கள் வசமே ஆயிற்று. ஐ.நா. அதிகாரிகள் மத்தியஸ்தம் செய்து பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு காண்பதாக ஒப்பந்தமானது.
அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவுக்கான அரசியல் சாசனத்தை முடிவு செய்தது. அது நிறைவேற்றப்பட்டது 1950 ஜனவரி 26இல். குடியரசு இந்தியாவுக்கு முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. இந்திய குடியரசு எப்படி இருக்கும் என்பதற்கு முதல் அடியெடுத்து வைத்தது இந்தத் தேர்தலில்தான். இதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. 489 இடங்களில் காங்கிரஸ் 249 இடங்களைப் பெற்றது. தென் இந்தியாவில் காங்கிரஸ் பெரிய சரிவை எதிர் கொண்டது. சென்னை மாகாணமும் அதில் ஒன்று. இங்கெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
1952 தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரியாக ஆன ஜவஹர்லால் நேரு இந்தியப் பிரிவினையின் பின் விளைவுகளால் ஏற்பட்ட நிலைமைகளை சமாளிக்கவும், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாடுபட வேண்டியிருந்தது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும், புதுமைகளைப் புகுத்தி உற்பத்தியைப் பெறுக்கவும் நேரு பாடுபட்டார். உணவு தானிய உற்பத்தியைப் பெறுக்க வேண்டி, பெரிய நீர் தேக்கங்கள் கட்டப்பட்டன. பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அணு ஆராய்ச்சித் துறை தோற்றுவிக்கப் பட்டது. நாட்டின் முன்னேற்றத்தைத் திட்டமிட்ட பாதையில் நடத்திச் செல்ல திட்டக் கமிஷன் தோற்றுவிக்கப் பட்டது. ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்தியாவை 'நவ நிர்மாண'த் திட்டங்களினால் வேகமாக முன்னேற்ற வேண்டிய ஏற்பாடுகளை நேரு தொடங்கி வைத்தார்.
1957இல் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. வழக்கம்போல நடந்த தேர்தல்தான் என்றாலும் ஒரு மாற்றாக கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆட்சி அமைக்கும் நிலைமைக்கு வந்து விட்டனர். இது அப்போது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. காரணம் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தனர் என்பதும், பின்னர் மனமாற்றம் அடைந்து தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியிருந்ததும்தான் காரணம். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு எனும் கம்யூனிஸ்ட் தலைவர் கேரளத்தில் முதலமைச்சர் ஆனார். ஆனால் அவரது ஆட்சியை நீண்ட நாட்கள் மத்திய அரசு நிலைக்க விடவில்லை. அவர்கள் அரசு கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியை 1959இல் கொண்டு வந்து விட்டனர்.
இந்த காலகட்டத்தில் நேருவின் மகள் இந்திரா காந்தி, அரசியல் உலகில் காலடியெடுத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் நம்பூதிரிபாடு அரசைக் கலைப்பதற்கும் முன்னணியில் இருந்தார். இவர் 1959இல் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தலைமுறை காங்கிரசை தலைமை தாங்க முன்வந்த பிறகு காங்கிரஸ் கலாசாரமும் மாறத் தொடங்கியது.
இரண்டாம் முறையாக நேரு பிரதமராக ஆன பின்னர், போர்த்துகீஸ் ஆதிக்கத்தில் இருந்த கோவா விடுவிக்கப்பட்டு இந்திய யூனியனுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து நேரு அணிசேரா நாடுகள் இயக்கத்துக்குத் தலைமை தாங்கி இந்தோனேஷியாவின் பாண்டுங் நகரில் நடந்த மாநாட்டில் அணிசேரா நாடுகளின் பெருந்தலைவர்களை அழைத்து உரையாற்றினார். அதில் சீனாவின் சூஎன்லாய், எகிப்தின் அப்துல் கமால் நாசர், யூகோஸ்லேவியாவின் மார்ஷல் டிட்டோ, இந்தோனேஷியாவின் சுகர்னோ, பர்மாவின் யூநு, கானாவின் க்வாமே என்க்ரூமா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். சீனாவுடனான உறவை மேம்படுத்த நினைத்தார் நேரு. அதற்காக சீன பிரதமரை இந்தியாவிலிருந்து பாண்டுங் நகருக்குத் தனி விமானத்தில் அழைத்துச் சென்றார். விமானத்தை ஓட்டிச் சென்றவர் ஒரிசாவைச் சேர்ந்த பிஜு பட்நாயக், இப்போதைய ஒரிசா முதல்வரின் தந்தை இவர்.
1962இல் துரோகம் என்பதன் பொருளை நேரு உணர நேர்ந்தது. பாண்டுங்கில் அணிசேரா நாடுகளில் பஞ்சஷீல் எனும் ஐந்து ஒழுக்கங்களைப் பிரகடனப்படுத்திய சூடு ஆறுவதற்கு முன்பாக, ஒருவரையொருவர் ஆக்கிரமிப்பு செய்தல், போர் தொடுத்தல் போன்றவை பஞ்ச ஷீல் மூலம் நிராகரிக்கப்பட்டிருந்த போதும் சீனாவின் சூஎன்லாய் இந்தியாவின் சீனப் படைகளை ஏவியதன் மூலம் நேரு ஏமாற்றப்பட்டார். சீனாவின் ராட்சஸ பலம் கொண்ட ராணுவம் இமய மலையின் பெரும் பகுதிகளை கபளீகரம் செய்து கொண்டு, தானாகவே போர் நிறுத்தம் செய்து ஓய்ந்து விட்டது. நேரு இதனைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. இதனால் அவர் உடலும், மனமும் சோர்வடைந்து போயிற்று. அவருக்கே உரிய களையும், மகிழ்ச்சியும், துள்ளலும் அடங்கிவிட்டன.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்ந்த தலைவராக இருந்த நேருவுக்கு அடுத்தடுத்து இறங்கு முகமாகவே அமைந்து விட்டது. எதிரில் நிற்கத் துணிவில்லாத தலைவர்கள் கூட இவரைக் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். கூட இருந்த அமைச்சர்கள் கூட இவர சொல்லை மீறத் தலைப்பட்டனர். இவரது மகள் இந்திரா காந்தி காங்கிரசின் தலைவராக ஆனபோது, குடும்ப வாரிசு என்று பலரும் தூற்றத் தொடங்கினர். இதனால் எல்லாம் மனம் தளர்ந்தார், வாடினார், வருந்தினார் நேரு.
இத்தகு சூழலில் 1962இல் தேர்தலைச் சந்தித்தார் நேரு. காங்கிரஸ் மீண்டும் வெற்றி வாகை சூடியது. மெஜாரிடி பலம் குறைந்த போதும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு காங்கிரசுக்கு பலம் அமைந்து விட்டது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை பலம் பொறுந்திய கட்சிகளாக அமைந்ததோடு, நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு சோதனைகளை உருவாக்கி வந்தார்கள்.
1964ஆம் ஆண்டு, காங்கிரசுக்கும் இந்திய நாட்டுக்கும் பேரிடியொன்று காத்திருந்தது. ஆசிய ஜோதி, தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர், மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு காலமானார். இந்திய நாடே அழுதது. ரோஜாவின் ராஜா என்றெல்லாம் பத்திரிகைகள் அவர் புகழைப் பாடின. குல்ஜாரிலால் நந்தா இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றார். முறையாக நடந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் லால் பகதூர் சாஸ்திரி அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் திருமதி இந்திரா காந்தி அமைச்சராக பதவியேற்றார். செய்தி ஒலிபரப்புத் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழி எனும் அறிவிப்பு தமிழகத்தில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. இந்திரா காந்தி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் சொல்லி அமைதி ஏற்படுத்த உதவினார். குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் கொடுத்த இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வகையில் ஆங்கிலம் நீடிக்கும் என்கிற அறிவிப்பு அமைதியை ஏற்படுத்தியது.
1965இல் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இந்தியா பாகிஸ்தான் போர் தொடங்கியது. காஷ்மீரை ராணுவ பலம் கொண்டு பிடித்துவிட வேண்டுமென்கிற வெறியில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதலைத் தொடுத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் பாகிஸ்தானியர்கள் ஆயுதமேந்தி நுழையத் தொடங்கினர். லால் பகதூர் இந்த சூழ்நிலையில் இரும்புக் கரம் கொண்டு ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்கவும் வெளியே விரட்டவும் ஆணையிட்டார். இந்தியாவின் அபார தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் தவிக்கத் தொடங்கியது. நல்லெண்ணம் கொண்ட சோவியத் யூனியன் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்திய பாகிஸ்தான் சமரச உடன்படிக்கைக்கு முயன்றது. தாஷ்கண்ட் எனும் இடத்தில் சமாதானப் பேச்சு வார்த்தை நடந்தது. பாகிஸ்தானின் அயூப் கானும், பாரதப் பிரதமர் லால் பகதூரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அன்று இரவே தாஷ்கண்டில் லால்பகதூர் தங்கியிருந்த இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு லால்பகதூர் காலமானார் எனும் சோகச் செய்தி இந்தியாவை உலுக்கியது. மக்கள் அன்போடு நேசித்த பிரதமர் லால்பகதூர். அவரது எளிமை, நேர்மை இவைகளை இன்று நினைத்தாலும் அவர் மீது நமக்கு அன்பு மிகும்.
இந்திய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. யார் தலைமை ஏற்பது என்பதில் போட்டா போட்டி. தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் வாதியாகத் திகழ்ந்த காங்கிரஸ் தலைவரான காமராஜ் இந்திரா காந்தி பிரதமராக வருவதற்கு வழிவகுத்தார். இந்திய குடியரசில் முதல் பெண் பிரதமராக இந்திரா பதவி ஏற்றார். 1967 தேர்தலில் காங்கிரஸ் குறைந்த பெரும்பான்மையோடுதான் வெற்றி பெற்றது. இந்திரா மீண்டும் பிரதமரானார். இவர் காலத்தில் காங்கிரசின் பலம் குறையத் தொடங்கியது. அரசியல், பொருளாதார காரணங்களால் இந்த போக்கு ஏற்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.
இந்திரா காந்தி பதவியேற்ற கால கட்டத்தில் உணவு பற்றாக்குறை, வறுமை, அறியாமை, பொருளாதார சீர்கேடு இவைகள் மலிந்து காணப்பட்டன. மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியில் நக்சல்பாரி இயக்கம் தோன்றி வளர்ந்தது. தெற்கே ஆந்திரப் பிரதேசத்துக்குள்ளும் அது ஊடுறுவியது. விவசாயிகளின் போராட்டமும், நிலப்பிரபுத்துவத்தின் ஆளுமையும்தான் இதுபோன்ற இயக்கம் வலுப்பெற காரணமாக இருந்தது. அப்போது வங்கத்தில் இருந்த இடதுசாரி அரசு இந்த நக்சல்பாரி இயக்கத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைத்ததன் பலனாக அந்த இயக்கம் வலுப்பெறத் தொடங்கி விட்டது.
இவருடைய ஆட்சிக் காலத்தில் வடக்கே உத்தரப் பிரதேசத்தில் பாரதிய கிரந்தி தள், தமிழகத்தில் தி.மு.க. ஆகிய கட்சிகலும், ஹர்யானாவில் விஷால் ஹர்யானா கட்சியும் வலுப்பெறத் தொடங்கிவிட்டது. இவைகள் அனைத்தும் பிராந்தியக் கட்சிகள். இவை வளர்வதற்கு மொழி, இனம் போன்ற பலவகைகளில் பலம் பெற்றன. இந்திரா காந்தியை எதிர்த்து காங்கிரசுக்குள் ஒரு பகுதியினர் இயங்கத் தொடங்கினர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிஜலிங்கப்பா காங்கிரஸ் தலைவராக இருந்த போது, காங்கிரஸ் 1969இல் இரண்டாகப் பிளந்தது. நிஜலிங்கப்பா தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் கட்சி இரண்டாக ஆனது.
1969இல் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகிர் உசேன் காலமானதையொட்டி அந்தப் பதவிக்கு இந்திரா காந்தி வி.வி.கிரியை நிறுத்தினார். ஸ்தாபன காங்கிரஸ் நீலம் சஞ்சீவி ரெட்டியை நிறுத்தியது. இந்திராவின் வேட்பாளரான வி.வி.கிரி வெற்றி வாகை சூடினார், அதனியொட்டி காங்கிரசில் இந்திராவின் பலம் ஓங்கியது. தனது பலத்தை அதிகரித்துக் கொள்ள இந்திரா காந்தி "வறுமையை ஒழிப்போம்" எனும் கோஷத்தை எழுப்பினார். வங்கிகளை தேசியமயமாக்கினார். ராஜமான்யத்தை ஒழித்தார். "இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா" எனும் கோஷம் வானைப் பிளந்தது. 1971 தேர்தலில் இந்திரா காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
திருமதி இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் பாகிஸ்தானின் கிழக்கு பாகிஸ்தான் என்று வழங்கப்பட்ட வங்க தேசத்தை விடுவிக்க அங்கு செயல்பட்டு வந்த முக்தி பாஹினி எனும் அமைப்புக்கு உதவி செய்யவும், வங்க தேசத்திலிருந்து பெருமளவில் அகதிகள் இந்தியாவுக்குள் புகுந்து இந்திய பொருளாதாரத்துக்குத் தொல்லை தருவதை தடுக்கவும், இந்தியப் படைகள் வங்க தேசத்துள் புகுந்து அந்த நாட்டை பாகிஸ்தானிலிருந்து பிரித்து புதிய "பங்களாதேஷ்" எனும் நாடாக அறிவிப்பதற்கு உதவியது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்காளதேசத்தின் பிரதமரானார்.
1971இல் நடந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற இந்தியா பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகார் அலி புட்டோவுடன் பேச்சு வார்த்தை நடத்தி சிம்லாவில் ஒரு உடன்படிக்கை கையெழுத்திட்டார். இந்த உடன்பாட்டின்படி இரு நாடுகளுக்குள் மோதலைத் தவிர்த்து, அவரவர்கள் அப்போது பிடித்துக் கொண்டிருந்த பகுதிகளை அவரவர்களே வைத்துக் கொள்வது, வருங்காலத்தில் எந்தப் பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வது என்றும் முடிவாகியது.
இவற்றால் எல்லாம் இந்திரா காந்தியின் செல்வாக்கு மிகுந்திருந்தது. உலக நாடுகளும் இந்திரா காந்தியை மரியாதையுடன் கவனிக்கத் தொடங்கியது. போதாதற்கு பொக்ரான் எனும் இடத்தில் 1974இல் ஒரு அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அமைதி வழிக்கான அணுகுண்டு சோதனை என்று சொல்லப்பட்ட இந்த சோதனையால் இந்தியா அணு ஆயுத நாடுகளுடன் ஒன்றாக ஆனது. இவை இந்திராவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்க உதவியது.
இதன்பிறகுதான் இந்திரா காந்திக்குச் சோதனை காலம் தொடங்கியது. 1975இல் அலஹாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தலை செல்லாது என்று தீர்ப்பளித்தது. அவரை நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து நீக்கியும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் அந்த தீர்ப்பில் இருந்தது. இதனை அடுத்து ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பையொட்டி எதிர்ப்பலைகள் அதிகரித்தன. அவர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. ஜெயப்பிரகாஷ் நாராயண் அரசியல் ஓய்விலிருந்து திரும்ப வந்து "ஜனநாயகத்தை மீட்டெடுக்க"ப் போராட்டம் துவக்கினார். எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. எதிரெதிரானவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜனதா கட்சியைத் துவக்கினர். ஃபக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நாட்டில் நெருக்கடி நிலை அறிவிப்பை வெளியிட்டார். இந்த அவசர நிலை காலம் சுமார் 19 மாத காலம் நீடித்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான அவசரகால சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர். எதிர்ப்பலைகள் அதிகரித்தன. பத்திரிகையில் செய்தி வெளியிட தணிக்கைகள் இருந்தன. அவற்றை எதிர்த்து பல பத்திரிகைகள் நின்று போயின. சிலர் எதிர்ப்பைக் காட்ட வெறும் காகிதப் பத்திரிகைகளை வெளியிட்டனர். இந்திராவின் செல்வாக்கு இந்த நடவடிக்கைகள் காரணமாக வேகமாகச் சரிந்து போயிற்று.
எதிர்ப்பு அதிகரித்துவிட்ட நிலையில், நாடெங்கும் போராட்டங்கள் நடந்து சிறைச்சாலைகள் நிரம்பத் தொடங்கியதும், வேறு வழியின்று இந்திரா காந்தி 1977இல் தேர்தலுக்கு உத்தரவிட்டார். அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தலில் இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்திரா காந்தியும் தோற்றார். உத்தரப் பிரதேசத்தில் ஒரு இடம்கூட காங்கிரசுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். அங்கு மட்டுமல்லாமல் பிஹார், பஞ்சாப், ஹர்யானா, டெல்லி ஆகிய இடங்களில் ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்றது.
இந்திராவை எதிர்த்த மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமரானார். ஜனதா கட்சியின் வேட்பாளர் அவர். எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். 1969இல் வி.வி.கிரியால் தோற்கடிக்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவர் ஆனார். நெடுங்காலமாக காங்கிரசில் இருந்த ஜகஜீவன்ராம் உட்பட பல காங்கிரசார் ஜனதா கட்சிக்குத் தாவினர்.
ஜனதா கட்சி என்பது பல கட்சிகளின் கூட்டு. அதனால் அது நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாத நிலை. ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுக்க உ.பி.யைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் சவுத்ரி சரன் சிங் (இப்போதைய அமைச்சர் அஜித் சிங்கின் தந்தை) இந்திரா காந்தியைக் கைது செய்ய உத்தரவிட்டார். இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தியையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனதா அரசு செய்த மிகப் பெரிய தவறு இது. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இந்திராவின் கைது அவர் மீது அனுதாப அலைகளை அதிகரிக்க உதவியது. முன்னாள் பிரதமரும், ஒரு பெண்ணுமான இந்திராவை இவ்விதம் கைது செய்து அவமானப் படுத்தியதை மக்கள் ஜீரணிக்கவில்லை. அவர் மீது அனுதாபம் ஏற்பட்டதோடு ஜனதாவுக்கு எதிரான அலையையும் அது ஏற்படுத்தி விட்டது. இதைத்தானே இந்திரா காந்தியும் எதிர்பார்த்தார். அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் வழியில் ஹர்யானாவில் நெடுஞ்சாலையில் ஒரு மதகின் மீது அமர்ந்து கொண்டு நகர மறுத்தா இந்திரா காந்தி. இந்தியா முழுவதும் அனுதாப ஒலி எழுப்பியதை அனைவரும் கேட்க முடிந்தது.
1979, ஜனதா அரசு அமைந்து இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் எத்தனைதான் அனுபவசாலியாகவும், நேர்மையாளராகவும் இருந்தாலும் உள்குத்து காரணமாக ராஜிநாமா செய்ய நேர்ந்தது. அடுத்து சவுத்ரி சரன் சிங் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் போய்விட்டது. உடனே அவர் இந்திரா காந்தியின் ஆதரவை எதிர்பார்த்து உதவிக் கரம் நீட்டினார். எதிரிகள் எக்காளமிட்டு கேலிபேசினர். இந்திரா தொடக்கத்தில் ஆதரவு தருவது போல நடந்து கொண்டுவிட்டுப் பின்னர் ஆதரவை விலக்கிக் கொண்டார். மறு தேர்தல் 1980இல் மீண்டும் வந்தது.
1977இல் ஏற்பட்ட காங்கிரசின் வீட்சிக்குப் பிறகு நடந்த ஜனதா அரசின் கூத்துக்களைக் கண்ட மக்கள் 1980இல் நடந்த தேர்தலில் மீண்டும் காங்கிரசுக்கும், இந்திரா காந்திக்கும் அபாரமான வெற்றியைக் கொடுத்தனர். வலுவான காங்கிரஸ் அரசு அமைந்தது. இந்திரா மீண்டும் பலம் பொருந்திய பிரதமராக ஆனார். அரசியல் வலுவும் நிரந்தரமும் ஏற்பட்ட பின்னும் அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அவருக்குத் தொல்லை தந்தன. காஷ்மீர் பிரச்சினையும் தலைவலி கொடுத்து வந்தது. இதனால் எல்லாம் முன்னேற்றம் தடைப்பட்டது.
பஞ்சாபில் 'காலிஸ்தான்" கேட்டு பஞ்சாப் இளைஞர்கள் போராடினர். பிந்தரன்வாலே என்பவர் வன்முறை அரசியலில் ஈடுபட்டு வந்தார். பஞ்சாபில் இந்த காலிஸ்தான் போராளிகள் வன்முறைகளில் ஈடுபட்டனர். அரசு நடவடிக்கை எடுக்க முயன்ற சமயம் அவர்கள் ஓடி பொற்கோயிலினுள் ஒளிந்து கொண்டனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற இந்திரா காந்தி "ஆப்பரேஷன் புளு ஸ்டார்" எனும் பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். ராணுவ நடவடிக்கையில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். பல வன்முறையாளர்களும் கொல்லப்பட்டனர். காலிஸ்தான் இயக்கம் வலுவிழந்து போயிற்று.
ஆனாலும் இந்த வெற்றி இந்திராவின் உயிருக்கு ஆபத்தில் முடிந்தது. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலினுள் ராணுவம் நுழைந்ததை எந்த சீக்கியரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சீக்கிய மக்கள் மத்தியில் ஆத்திரமும் பழிவாங்கும் எண்ணமும் அதிகரித்தது. இதன் விளைவாக 1984 அக்டோபர் 31 அன்று இந்திராவின் இல்லத்தில், அலுவலகம் செல்ல தோட்டத்தின் வழியாகச் சென்றபோது அவரது பாதுகாவல் அதிகாரியாக இருந்த பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் இந்திரா காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து டெல்லி நகரம் தீப்பற்றி எரிந்தது. சீக்கியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. டெல்லி நகரம் எரிந்து அணைய பல மாதங்கள் பிடித்தன.
இந்திரா காந்தி கொலையுண்ட செய்தி அறிந்து வெளிநாடு சென்ற தலைவர்களும், உள்நாட்டில் வெவ்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தவர்களும் டெல்லி திரும்பினர். அப்போது கல்கத்தாவிலிருந்து விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்த பிரணாப் முகர்ஜியிடம் அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, சீனியரான நான் பிரதமராக வாய்ப்பிருக்கிறது என்றார். ஆனால் அந்த வாய்ப்பு இந்திராவின் மூத்த மகனான விமானியாக இருந்த ராஜிவ் காந்திக்குச் சென்றது. அவரது இளைய மகன் அரசியலில் ஈடுபட்டிருந்த சஞ்சய் காந்தி ஏற்கனவே ஒரு விமான விபத்தில் இறந்து போயிருந்தார். ஆகவே ராஜிவ் காந்தி விமானமோட்டி பதவியை உதறிவிட்டு இந்தியப் பிரதமரானார்.
அடுத்து வந்த தேர்தலில் ராஜீவ் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 508 இடங்களில் 401 இடங்களை காங்கிரஸ் பெற்றது. இந்திரா மரணமடைந்ததால் ஏற்பட்ட அனுதாப அலையில் விளைவு இது. இவர் காலத்தில் தொலைத் தொடர்புத் துறை அபார வளர்ச்சி கண்டது. பொதுவாக மக்கள் நலப் பணிகளில் அதிகம் ஈடுபாடு காட்டினார் ராஜிவ். பஞ்சாயத்து ராஜ் எனும் அடிப்படி கிராம நிர்வாக முறையிலிருந்து சீர்திருத்தங்களைத் துவக்கினார். மக்களின் அன்பைப் படிப்படியாகப் பெறத் துவங்கினார்.
அவரது தவறுகளில் முதன்மையானதாக ஷா பானு வழக்கைச் சொல்லலாம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமியர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக இவர் சில நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அயோத்தியில் ராமர் கோயிலைத் திறக்க இவர் உத்தரவு இட்டார். அது 1948 முதல் மூடிக் கிடந்தது என்பதை நாடறியும். இந்துக்களின் மனதைக் குளிர்விப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இதுவும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதனால் வீணான குழப்பங்களும், மோதல்களும் ஏற்பட்டன. இவற்றையெல்லாம் விட இந்திய ராணுவத்துக்காக ஸ்விஸ் நாட்டிடமிருந்து வாங்கப்பட்ட போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ராஜிவின் பெயரும் அடிபட்டது. குட்டரோச்சி எனும் இத்தாலியர் இதில் பங்கு பெற்றதாக பெருமளவில் விவாதிக்கப்பட்டது. இந்த போஃபார்ஸ் ஊழல் ராஜிவின் நல்ல பெயரை பெருமளவில் கெடுத்துவிட்டது. மக்கள் அவர் மீது சாட்டப்பட்டக் குற்றச்சாட்டை நம்பினர்.
இலங்கை அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய போரில் அமைதி நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்தை ராஜிவ் இலங்கைக்கு அனுப்பினார். அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் இந்திய ராணுவம் பலத்த அடி வாங்கியது. இதனால் ராஜிவின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டது.
1989இல் நாடாளுமன்ற தேர்தல். ராஜீவுக்கு எதிராக எங்கு பார்த்தாலும் போஃபார்ஸ் பீரங்கி கட் அவுட்கள் வைத்து பிரச்சாரம் நடந்தது. தமிழ் நாட்டிலும் காங்கிரசுக்கு அப்போது எதிராகப் போட்டியிட்ட தி.மு.க.வும் பீரங்கிப் படங்கள் வைத்து பிரச்சாரம் செய்தது. தேர்தலில் ராஜிவ் படுதோல்வி அடைந்தார். 197 இடங்களை மட்டுமே காங்கிரசால் பெற முடிந்தது. இவர் எதிர்கட்சித் தலைவர் ஆனார். 1989ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய அரசியலில் ஒரு புது மாற்றத்தை உண்டாக்கி விட்டது. காங்கிரசின் ஏகபோக ஆதிக்கம் குறைந்தது. மற்ற எதிர்கட்சிகளின் செல்வாக்கு மிகுந்தது. பாரதிய ஜனதா கட்சி ஒரு அகில இந்திய கட்சியாக காங்கிரசுக்கு எதிராக உருவாகியது.
1989 முதல் இந்திய அரசியலில் கூட்டாட்சி என்பது தனிப்பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி ஆட்சிக்கு முடிவுக்குக் கொண்டு வந்தது. 1989இல் பா.ஜ.க., ஜனதா தளம், இடதுசாரிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தனர். வி.பி.சிங் பிரதம மந்திரியானார். பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வி.பி.சிங் முன்னிறுத்தப்பட்டார். அரச குடும்பத்தவரான இவர் ராஜிவை போஃபார்ஸ் விஷயத்தில் பகிரங்கமாக விமர்சித்து எதிர்த்தவர். இவர் பிற்பட்டவர் நலனுக்காக 'மண்டல் கமிஷன்' அமைத்தார். அந்த கமிஷனின் சிபாரிசுகளை அமல் படுத்துகையில் இவர் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. மண்டல் கமிஷன் சிபாரிசுகளின்படி பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 27% ஒதுக்கீடு செய்திட வேண்டும். ஆனால் இந்த முடிவுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பலை தோன்றியது. மாணவர்கள் மத்தியில் போராட்டங்களும், தங்களை மாய்த்துக் கொள்ளுதலும் அதிகரித்தது. வி.பி.சிங்கின் நோக்கம், பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவைப் பெற்று பலம் பொருந்திய கட்சியாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் பலத்தைக் குறைக்க இந்த சலுகைகள் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களை பா.ஜ.க.விடமிருந்து பிரித்து விடலாம் என்பது வி.பி.சிங்கின் நோக்கம். கூட்டணியில் ஒன்று சேர்ந்து கொண்டு, உள்குத்தில் ஈடுபட்ட வி.பி.சிங்கின் காலை பா.ஜ.க.வாரிவிட்டு விட்டது. தங்கள் ஆதரவை அது விலக்கிக் கொண்டது. அதன் காரணமாக ஓராண்டிலேயே வி.பி.சிங்கின் அரசு கவிழ்ந்தது.
1990ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பா.ஜ.க.தலைவர் எல்.கே.அத்வானி "ஸ்ரீ ராம் ரத யாத்திரை" எனும் பெயரில் குஜராத்தின் புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்திலிருந்து ஒரு ரத யாத்திரையைத் தொடங்கினார். தேச ஒற்றுமைக்காக இந்த யாத்திரை என்று சொல்லப்பட்டது. ஆனால் அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த யாத்திரை பயன்பட்டது. இவரது யாத்திரை எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக இருந்தது.
1991இல் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. ராஜிவ் காந்தி தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்ட அரங்கில் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலையுண்டு போனார். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சினை மீண்டும் தலையெடுத்தது. ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் ஒன்று கூடி ராமர் கோயிலைக் கட்டும் வேலையில் ஈடுபட அயோத்தி வந்தனர். அப்படி வந்து கூடிய கரசேவகர்களால் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கண் இமைக்கும் நேரத்தில் இடித்துத் தகர்க்கப்பட்டு விட்டது. 1992 டிசம்பர் 6இல் நடந்த நிகழ்ச்சி இது. உலகம் முழுதும் இந்த இடிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. இப்படி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் முயற்சியாக மும்பை நகரில் தாவுத் இப்ராஹிம் என்பவர் தலைமையில் 1993இல் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. பலர் இறந்தனர்.
அயோத்தி பாபர் மசூதி வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கும் வழக்கு. மும்பை வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
இந்திய அரசியலில் ஒரு விநோதமான நிகழ்வு 1996ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி விளங்கியது. அந்தக் கட்சிக்கு 161 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 140 இடங்கள் கிடைத்தன. ஆகையால் பா.ஜ.க.வை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையில் ஒரு கூட்டணி அரசு பதவி ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த அரசின் ஆயுட்காலம் வெறும் 13 நாட்களே. கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு இல்லாததால் 13 நாட்களில் பிரதமர் வாஜ்பாய் தன் ஆட்சியை இழந்த சோகமும் நிகழ்ந்தது.
வாஜ்பாய் அரசின் வீட்சியை அடுத்து மற்றொரு கூட்டணி அரசு பதவி ஏற்றுக் கொண்டது. இதில் காங்கிரஸ் அல்லாத பி.ஜே.பி. இல்லாத இதர கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசு அமைத்தன. இந்த அரசுக்கு காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தருவதாகக் கூறியிருந்தது. சிலகாலம் அப்படி ஒத்துழைப்பையும் இந்த அரசுக்கு அளித்து வந்தது. இந்த அரசில் இரண்டு பிரதமர்கள் அடுத்தடுத்து பதவி ஏற்றனர். ஒருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவ கெளடா மற்றொருவர் பஞ்சாபைச் சேர்ந்த ஐ.கே.குஜ்ரால். இந்த அரசு இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தது. இதற்குக் காரணமாக இருந்தது ஜெயின் கமிஷன் அறிக்கை. இந்த அறிக்கையில் ராஜிவ் காந்தி கொலைக்கு தி.மு.க.வில் சிலரின் பெயர்களை கமிஷன் குறிப்பிட்டதையடுத்து, இந்த அரசில் தி.மு.க. அங்கம் வகித்ததால் தனது ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. அரசும் கவிழ்ந்தது.
குஜ்ரால் அரசின் வீழ்ச்சியை அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) எனும் பெயரில் பி.ஜே.பி. தலைமையில் மற்றொரு கூட்டணி உருவானது. இந்த கூட்டணி 1998இல் 'சக்தி' எனும் பெயரில் ஒரு அணுகுண்டு சோதனையை நடத்தியதில் இந்தியாவின் அணுஆயுத சக்தி உலகுக்குத் தெரிய வந்து, இந்த கூட்டணி ஆட்சி பெருமை பெற்றது. இந்த கூட்டணி ஆட்சி அ.தி.மு.க. தன் ஒத்துழைப்பை விலக்கிக் கொண்டதால் ஒரு ஆண்டுக்குள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் 1999இல் ஒரு பொதுத் தேர்தல் வந்தது. இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி பா.ஜ.க தலைமையில் வெற்றி பெற்று முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது.
இந்த ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க. அரசின் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானின் லாகூருக்கு பஸ் பயணம் மேற்கொண்டு ஒரு நல்லிணக்க உறவைத் தொடங்கி வைத்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீபுடன் சமாதான பேச்சு வார்த்தைகளும் தொடங்கின. இதனையடுத்து இரண்டே மாதத்தில் இமயமலைச் சாரலில் இருக்கும் கார்கில் எனும் இடத்தில் பாகிஸ்தான் படைகள் ஊடுறுவி சமாதான முயற்சிகளுக்கு வேட்டு வைத்துவிட்டது. இந்த மோதலில் பல உயிர்களை பலிகொண்டபின் பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது.
கார்கில் போர் மட்டுமல்லாமல் வாஜ்பாய் அரசுக்கு மற்றொரு சோதனையும் இந்திய விமானம் IC-814 கடத்தப்பட்டதையடுத்து ஏற்பட்டுவிட்டது. இந்த விமானப் பயணிகளைக் காப்பதற்காக பாகிஸ்தான் பயங்கர வாதிகள் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் பயணிகளில் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டார்.
1947இல் இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும், அதன் பின் 1984இல் இந்திரா காந்தி கொலையுண்டபின் அவருடைய மருமகளும், ராஜிவ் காந்தியின் மனைவியுமான சோனியா இந்திய அரசியலில் தீவிரமாகப் பங்கு கொள்ளும்படி காங்கிரசார் வலியுறுத்தி, அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கி விட்டனர். இவர் 1997இல்தான் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அடுத்த ஆண்டே இவர் 1998இல் காங்கிரஸ் தலைவர் ஆனார். ஜவஹர்லால் நேருவின் சேவையையும், தியாகத்தையும் அடுத்து இந்திய மக்கள் நேருவின் மீதும், அவர் மகள் இந்திரா காந்தி மீதும் அபாரமான நம்பிக்கையையும் அன்பையும் வைத்திருந்தனர். இதனால் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் அவர்கள் மீது அன்பையும், நம்பிக்கையையும் வைக்கும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தனர். இந்தக் காரணங்களால் நேரு குடும்பத்தில் இந்திராவின் மருமகள் என்ற வகையில் இவரை காங்கிரஸ்காரர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இவருக்கு முன்பு சீத்தாராம் கேசரி என்பவர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
1999இல் உருவான பா.ஜ.க. அரசு காலத்தில் இவர் 13ஆவது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். மக்களவைத் தேர்தலின் போது இவரது வெளிநாட்டுப் பிரஜை எனும் சர்ச்சை பலமாக நடந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் ராஜீவைத் திருமணம் செய்து கொண்ட பின்னும் 15 ஆண்டுகாலம் இந்திய குடிமகள் உரிமையைப் பெறாதது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தி மொழியையோ அல்லது வேறு எந்த இந்திய மொழியையோ நன்றாகப் பேசத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சாட்டப்பட்டது. இவை அத்தனையும் தாண்டி இவர் இந்திய அரசியலில் காலூன்றியதோடு இந்தியாவை ஆட்டிப் படைக்கும் வல்லமை பொறுந்தியவராக உருவானார்.
இருபதாம் நூற்றாண்டு முடிவுக்கு வந்து இருபத்தியோராவது நூற்றாண்டு தொடங்கியபோது, இந்திய அரசியலில் வன்முறை, தீவிரவாதம், இயற்கை விபரீதங்கள் போன்ற பல இன்னல்கள் தோன்றின. 2000ஆவது ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா விஜயம் செய்தார். இந்திய அணுகுண்டு சோதனைக்குப் பிறகு சற்று பிணங்கியிருந்த அமெரிக்க உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் ஜார்கண்ட், உத்தர்கண்ட், சட்டிஸ்கர் எனும் மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முதல் இரண்டும் பிகாரிலிருந்தும் மூன்றாவது உ.பி.யிலிருந்தும் பிரிந்தது. 2001இல் பூஞ்ச் எனுமிடத்தில் பூமிஅதிர்ச்சி உண்டாயிற்று. இதனால் ஏற்பட்ட அழிவு பயங்கரமானதாக இருந்தது. இந்திய நாடு தாங்குமா என்ற நிலை ஏற்பட்டது. 2001 டிசம்பர் 13 அன்று ஐந்து பயங்கர வாதிகள் இந்திய பாராளுமன்றத்தைத் தாக்கி பல உயிர்களை பலிகொண்டு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தனர். நல்ல காலமாக இந்திய ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொன்று இந்தியாவின் ஜனநாயக உயர் பீடத்தைக் காப்பாற்றிவிட்டனர். இதில் விலைமதிக்க முடியாத ஐந்து இந்திய வீரர்கள் இறந்து போயினர்.
அடுத்த ஆண்டு, அதாவது 2002இல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா எனும் ரயில் நிலையத்தில் இந்து கரசேவகர்களைச் சுமந்து வந்த ரயில் தீக்கிரை ஆனதும், அதனைத் தொடர்ந்து நடந்த கொலை வெறித் தாக்குதலில் இஸ்லாமியர்கள் பலரும், இந்துக்கள் பலரும் கொல்லப்பட்டனர். அப்போதைய குஜராத்தின் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடி மீது பல குற்றச்சாட்டுகளும் சாட்டப்பட்டன. கோத்ரா ரயில் எரிப்பு சம்பந்தமாகவும் பலர் மீது வழக்கு நடைபெற்றது.
இதனையடுத்து அதே குஜராத்தில் அக்ஷர்தாம் ஆலயம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதில் 29 பேர் கொல்லப்பட்டனர். தமிழகத்தின் பெருமைக்குரிய பெருமகனார் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காலத்தில் அந்தப் பதவியின் பெருமை மேலும் உயர்ந்தது. எளிமை, அறிவு சான்ற தலைமை இவற்றை இவர் காலத்தில் காணமுடிந்தது. தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
மீண்டும் 2004இல் நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல். இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தது. 'ஆம் ஆத்மி' என்று இந்த நாட்டின் சாதாரண குடிமகனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கோஷத்துடன் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் வெற்றியை அடுத்து 15 கட்சி கூட்டணியொன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எனும் பெயரில் உருவாயிற்று. இதில் இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் இடம்பெற்றது ஒரு வரலாற்றுச் செய்தி.
இந்தக் கூட்டணி அமைந்த சூட்டோடு சோனியாதான் பிரதமர் என்று சொல்லப்பட்டது. அவர் சென்று தங்கள் கூட்டணியின் பெரும்பான்மையை ஜனாதிபதியிடம் சொல்வதற்காகவும், அரசு அமைக்கும் உரிமை வேண்டியும் போய்ப் பேசினார். ஆனால் திரும்ப வரும்போது மன்மோகன் சிங் பிரதமர் என்ற அறிவிப்பு வந்தது. இருந்தாலும் அந்தக் கூட்டணியின் தலைவர் என்ற பெரும் பொறுப்பு சோனியாவுக்குக் கிடைத்தது. இந்த நாட்டில் அதிக சக்திவாய்ந்த தலைவராக சோனியாவை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
இந்த ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவைத் தாக்கிய அதிர்ச்சியில் முதன்மையானது சுனாமி எனும் கடல் கொந்தளிப்பு. இந்தோனேஷியாவில் நடந்த பூகம்பத்தின் விளைவாக இந்திய கடற்கரைகளில் கடல் கொந்தளித்து உட்புகுந்து ஏராளமாக சேதங்களை விளைவித்தது. 10,000 பேருக்கும் மேல் இறந்தனர், பல லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். கார் நிகோபார் எனும் அந்தமான் தீவுகளில் ஒன்று இருந்த இடம் தெரியாமல் மூழ்கிப் போய்விட்டது.
2006இல் மும்பை நகரத்தில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு நாட்டை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. 187 பேர் கொல்லப்பட்டனர். இந்தனால் உலகமே அதிர்ந்தது எனலாம்.
இதன் பின் நடந்த பல நிகழ்வுகள் பற்றிய விரிவான கட்டுரையை விரைவில் காணலாம். அதில் நாட்டிக் குலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஏல ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மும்பை கார்கில் போர் நினைவு வீடுகட்டும் திட்ட ஊழல் போன்ற பலவற்றையும், வேறு பல ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் பார்க்கலாம். அதுவரை கடந்த 65 ஆண்டுகால இந்திய வரலாற்றை மீண்டுமொருமுறை அசைபோட்டுப் பார்க்கலாம். நன்றி.