பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 26, 2012

வைணவமும் வாழ்வியலும்

வைணவமும் வாழ்வியலும்
(கடந்த 23, 24-1-2012 ஆகிய தேதிகளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் படிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை)

இந்து மதம் என்பது அநாதியான வாழ்க்கை முறையென்றாலும், காலத்தால் இந்து மத வழிமுறைகளில் பற்பல பிரிவுகள் தோன்றத்தான் செய்தன. ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபனம் செய்வித்து அவரவர் விரும்பியபடி, அவரவர் வழிபடும் கடவுளை வணங்க வழிவகுத்துச் சென்றிருக்கிறார். சிவனை வழிபடுவோர் சைவமென்றும், பரம்பொருளான விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம் என்றும், முழுமுதற் கடவுளான கணபதியை வணங்குவோர் காணாபத்தியம் என்றும், அறுமுகக் கடவுளை வணங்குவோர் கெளமாரம் என்றும், சக்தியை வழிபடுவோர் சாக்தம் என்றும் தத்தமக்கு ஏற்ற வழிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இதில் எதுவும் எவராலும் தொடங்கப்பட்டு பெயரிடப்பட்டது இல்லை என்றாலும், அவரவர் கொள்கைகளுக்கேற்ப இந்தப் பிரிவுகள் காலத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. 

ஸ்ரீபெரும்புதூர் எனும் திருத்தலம். காஞ்சி மாநகருக்கு அருகில் அமைந்த ஊர். அங்கே ஒரு பெருமைமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீ ராமானுஜர். ஆதி சங்கரர் உபதேசித்தருளிய "அத்வைதம்" எனும் தத்துவம் பரம்பொருள் ஒன்றே, அதுதான் பரமாத்மா மற்ற உயிர்களெல்லாம் ஜீவாத்மாக்கள் என்றும், அவைகள் எல்லாம் பரம்பொருளின் துகள்கள் என்றும் சொல்வது அத்வைத சித்தாந்தம்.

ஸ்ரீ ராமானுஜர் கொண்ட கருத்து "த்வைதம்" என்பதாகும். அதில் பரம்பொருள் ஒன்று. அதனை அடைய வேண்டி மற்ற எல்லா உயிர்களும் அந்தப் பரம்பொருளின்பால் சரணாகதி அடைந்து ஜீவாத்மாக்கள் அந்தப் பரம்பொருளை அடைய முயற்சிக்க வேண்டுமென்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. 

ராமானுஜர் பரப்பிய இந்த த்வைதக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத சோழ மன்னன் அவரை சோழ நாட்டைவிட்டு ஓடிவிடும்படி செய்தான். ஆனாலும் அவர் வழிநெடுக தனது த்வைதக் கொள்கையைப் பரப்பிக் கொண்டு கர்நாடகத்திலிருந்த மைசூருக்கு அருகில் சென்று குடியமர்ந்து தனது கொள்கையை பரப்பினார். அதுவே வைணவம், எனும் விஷ்ணுவை வழிபடும் சித்தாந்தமாகக் கருதப் படுகிறது.

இந்த வைணவத்துக்கு வியாக்கியானம் எனும் பெயரில் பல மகான்கள் பல தத்துவங்களைத் தந்திருந்தாலும் இவற்றுக் கெல்லாம் உச்சமாக ஸ்ரீ கிருஷ்ணன் அருளித்தந்த பகவத் கீதையே உலகத்தாரின் போற்றுதலுக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு யுத்த களத்தில் போதித்ததாகக் கருதப்படும் கருத்துக்கள் மட்டுமே மனிதனுக்கு வாழ்வியலைக் கற்றுத்தரும் முதல் பாடமாக அமைந்திருப்பதை காணமுடியும்.

யுத்த களத்தில் தனக்கு எதிரில் தனது உறவினர்கள், ஆச்சாரியார்கள் அனைவரும் எதிர்த்து நின்றிருக்கும் தருணத்தில் கையிலிருந்த காண்டீபம் எனும் வில் நழுவ, அர்ஜுனன் சோர்ந்து தேர்த்தட்டில் சரிந்து போகிறான். அவனை எழுப்பி கண்ணன் தரும் உபதேசமே பகவத் கீதை எனப்படும் வாழ்வியல் பாடமாகும்.

உறவு என்பது என்ன? உண்மையையும் தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டிய க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அர்ஜுனன், இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தான் எதிர்க்க வேண்டியது தன் பாட்டனாரை, தன் உறவினர்களை, தனக்குப் பாடமும் வில்வித்தையும் போதித்த ஆச்சார்யார்களை என்று நினைத்து சோர்வு அடையக் கூடாது. பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணன் இந்த உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வந்து பிறந்தவன் என்பதால், தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் எதிர்ப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் செயல்பட வேண்டும் என்பதை கிருஷ்ணன் நிலைநாட்டுகிறார்.

உலக சமய இலக்கியங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது பகவத் கீதை எனலாம். வாழ்வின் சிக்கல்கள், பிரச்சனைகள் பற்றியெல்லாம் அர்ஜுனன் வினவிட அதற்கெல்லாம் விளக்கம் அளித்து அவனைத் தெளிவு பெறச் செய்கிறான் கண்ணன். வாழ்வியல் என்பதே கிருஷ்ணன் காட்டும் பாதைதான். லோகாயத வாழ்க்கையில் நாம் தினந்தினம் நல்லவைகளையும், தீயவைகளையும் கேட்டும் பார்த்தும் சந்தித்தும் வளர்கிறோம். அத்தகைய சந்தர்ப்பங்களில் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் எவை எவை எனும் அறிவை நாம் பெற்றிருத்தல் மிகவும் அவசியம்.

சில நேரங்களில் சந்தர்ப்ப வசத்தால் நேர்மைக்கு மாறான செயல்களை நாம் செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். அப்படிச் செய்தால் என்ன? அதனால் நமக்கு என்ன நேர்ந்துவிடப் போகிறது. நாம் செய்யும் தவறைப் பிறர் கண்டுகொள்ளாத நேரத்தில் நாம் செய்யும் தவறுக்கு யார் சாட்சி சொல்ல முடியும்? என்றெல்லாம் நாம் நினைக்கிறோம். ஆனால் மனித ஆன்மா என்பது இறைவனின் ஓர் அங்கமே. அது நாம் செய்யும் எந்த நல்ல செயலையும், தீய செயலையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆன்மாவை மீறி மனம் செயல்படும்போது ஆன்மா அந்த தவறை மன்னிக்காது என்பதுதான் கீதை தரும் உண்மை.

பரமாத்மா என்பவர் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் உள்ளடக்கி ஆள்பவராகவும், ஜீவன்கள் எனப்படுபவை அந்த பரமாத்மாவினால் ஆளப்படுபவர்களாகவும் உணர்ந்திருக்கிறோம். அப்படியானால் அந்த பரமாத்மா சொன்ன வழிமுறைகளிலிருந்து மாறுபடும் எந்த வாழ்வியல் செயலும் நமக்குச் சரியான தண்டனையைக் கொடுத்தே தீரும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை. உலகில் நடந்த பல கொடுமைகளையும், அந்தக் கொடுமைகளைச் செய்த மனிதர்களையும் நாம் அறிவோம். அத்தகைய கொடுமைக்காரர்களுக்கு மனிதன் தண்டனை கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அவன் மன்னிக்கப் படவில்லை. யாரால்? பரம்பொருளால் என்று சொன்னால், அது உனக்கு எப்படித் தெரியும் என்பீர்கள். சரி இவ்வுலகில் அந்தப் பரம்பொருளின் அம்சங்களாக உருப்பெற்றிருக்கும் ஜீவன்கள் எவையும் அந்தக் கொடுமைகளை அங்கீகரிக்கவில்லை என்பதே பரம்பொருள் அந்த கொடுமைக்காரர்களுக்குக் கொடுத்த தண்டனைதான்.

தவறு செய்தவன் எவனும் நாட்பட்டு சுகம் அடைந்ததில்லை. அந்தத் தவறுக்கு ஏற்ற தண்டனை அவனுக்குக் கிடைத்தே தீரும் என்னும் உண்மையை சமயம் நமக்கு வழிகாட்டுமானால், அந்த வழிமுறையிலிருந்து விடுபட்டு தவறிழைக்க எந்த ஜீவனும் துணியமாட்டான். 

வைணவ சம்பிரதாயங்களும் சரி, அதன் சாரங்களைத் தன்னுள் அடக்கிய பகவத் கீதையாகட்டும் எந்த ஒரு மனிதனும் சாதாரண உலக வாழ்க்கையில் தவறு செய்யாமல் வாழ்வதற்காக நாட்டை நீங்கி காட்டுக்குச் சென்று தவம் இரு என்று சொல்லவே இல்லை. மாறாக இந்த சமயக் கருத்துக்கள் கூறும் நல்வழி என்ன தெரியுமா? அவரவர்க்கு இட்ட தொழிலை அவரவர் செய்து கொண்டிருப்பதே தர்மம் என்கிறது வைணவம்.

செய்ய முடியாத அல்லது நடைமுறை சாத்தியமில்லாத எதையும் வைணவம் உபதேசிக்கவில்லை. கடவுள் தத்துவத்திலும் அப்படியொரு கருத்து இருக்க வில்லை. ஆன்மா வேறு, இந்த பெளதீக உடல் வேறு என்பதை அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மாவுக்கு சம்பந்தமில்லாத இந்த உடல் செய்யும் தவறும் அந்த ஆன்மாவைத்தான் சென்றடைகிறது என்கிறது சமயம்.

மனிதனாகப் பிறந்து விட்ட எந்த ஜீவனும் இந்த உடலெடுத்த பூமியில் தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்வது மட்டுமல்ல அதில் சிறந்து விளங்க வேண்டுமென்று எண்ணுவதும் இயல்பே. அப்படி இல்லாமல் மற்றவர்களைப் போல முன்னேற முடியாமல் தவறுகளையும், தர்மத்துக்கு எதிரான காரியங்களையும் ஒருவன் செய்வானேயானால் அவன் அந்தத் தவற்றுக்கான தண்டனையை இப்பிறவியிலேயே அடையும்படியான வழிமுறைகளை இறைவன் உண்டாக்கித் தந்திருக்கிறான்.

அப்படியொருக்கால் அவனுக்கு ஒரு பிறவியில் தண்டனை கொடுக்க முடியாமல் போய்விட்டாலும், அவன் இறுதி காலம் வரை தவறுகளையே செய்து கொண்டிருந்துவிட்டு மாய்ந்து போனாலும், அந்த ஜீவனுக்குக் கிடைக்கும் அடுத்த பிறவி அவன் செய்த பிழைகளுக்கெல்லாம் தண்டனையாகத்தான் இருக்கப் போகிறது. இந்த உண்மையை மட்டும் நமது சமயம், குறிப்பாக வைணவமும் பகவத் கீதையும் சொல்வதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்களானால் எவனும் நேர்மை தவறி நடக்க வாய்ப்பில்லை.

உலகில் ஜீவராசிகள் அனந்த கோடி உண்டு. புல் பூண்டு, புழு பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என்று இந்த ஜீவன்கள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும் பகுத்தறிவு படைத்த மனிதன் தங்கள் மனித ஜாதிக்கென்று சில வரைமுறைகளை, கட்டுப்பாடுகளை விதித்து வாழும் முறையைக் கடைப்பிடிக்கிறான்.

மிருகங்களும், பறவைகளும் தங்களுடைய இனப்பெருக்கத்துக்காக கூடுகின்றன. அதில் எந்த சட்ட நியதிகளோ, உறவின் முறைகளோ அவைகளுக்குக் கிடையாது. ஒரே மிருகம் பல அதே இனத்து மிருகங்கலுடன் கூடி இன விருத்தி செய்து கொள்கிறது. அதில் அவைகளுக்கு எந்த தர்ம விரோதமும் கிடையாது. இறைவன் விதிக்கவும் இல்லை. ஆனால் ஜீவன்களுக்குள் இருக்கும் உறவு, வாழ்வு, இவற்றை உத்தேசித்து மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொண்டு சில கட்டுப்பாடுகள் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகத்தான் நமது சமயங்கள் போதிக்கின்றன.

சில குறிப்பிட்ட உறவுகளில் ஒரு ஆண் பெண் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இறைவன் படைக்கும்போது அப்படிப்பட்ட சட்டம் எதையும் உருவாக்கி அனுப்பவில்லை என்றாலும், நாகரிக வாழ்க்கைக்காக மனிதன் தனக்குத் தானே இயற்றிக் கொண்ட சட்டம் அது. ஆனால் அதையும் மீறலாம் என்று தங்களைப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் மாற்ற முயலாலம். அப்படிச் செய்யவும் செய்யலாம். ஆனால் அதனால் எந்த பிரளயமும் ஏற்பட்டுவிடுவதில்லை. இறைவன் தண்டிப்பதும் இல்லை. ஆனால் சமயம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமயம் ஏற்றுக் கொள்ளாததை உலகம் ஏற்றுக் கொள்வதும் இல்லை.

எடுத்துக் காட்டாக சில உறவுகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பெரும்பாலும் இல்லை. குறிப்பாக தந்தையின் அண்ணன் அல்லது தம்பி மகள் ஒருவனுக்குத் தங்கை முறையாகிறது. அதே நிலை தாய் வழியில் கிடையாது. தாயின் அண்ணன் அல்லது தம்பி மகளை ஒருவன் திருமணம் செய்து கொள்கிறான். இந்த சமுதாயக் கொள்கையை இறைவன் நியமிக்கவில்லை. ஆனால் சமயம் நமக்கு அறிவுறுத்திச் சொல்கிறது. சிலவற்றைத் தவறுகள் என்று.

அறிவியல் வளர்ச்சியின் பயனாக மனிதன் நிலவை எட்டிப் பிடித்து விட்டான். ஆனால் ஜீவன்கள் சம்பந்தப்பட்ட ஆன்மீக வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள அத்தனை முயற்சிகளை செய்துவிடவில்லை. வாழ்நாளில் ஒருவன் இறை சிந்தனையோடு மட்டுமே இருப்பானால் இக வாழ்வில் அவனால் வாழ முடியாமல் போகலாம். வாழ்க்கைக்கு அவனுக்கு ஒரு வழி வேண்டும். பிழைக்க வேண்டும். ஆகவே ஒரு தொழிலை ஏற்றுக் கொள்கிறான். ஆனால் அந்தத் தொழிலை செய்கையில் அவன் சில தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்காமல் போவானேயானால் அவன் தர்மத்திலிருந்து பிறழ்ந்தவனாக ஆவான். இதை இறைவன் சொல்லவில்லை. இறைவன் பெயரால் உருவாகியிருக்கும் சமய தர்மம் சொல்கிறது.

சிவனை வழிபடுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவை வழிபடுவோர் வைஷ்ணவர்கள் என்றும் முதலில் குறிப்பிட்டேன். இவர்களில் வைஷ்ணவ சமயப் பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆச்சார்யார்கள் என்றும் இரு வகையாகக் குறிப்பிடுவர். இவர்களது பணி மக்களை நல்வழிப் படுத்தி, நல்ல ஆச்சாரங்களைச் சொல்லிக் கொடுத்து இந்த வையத்தில் வாழ்வாங்கு வாழச் செய்வதுதான்.

மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களாகச் சொல்லப்பட்டவை அன்பு, பணிவு, பாசம், கடமை, நட்பு இவை முக்கியமானவை. சமயம் என்பது ஏதோ தொடக்கூடாத தீட்டு அல்ல. சமயம் என்பது மனிதனை வாழ்வாங்கு வாழவைக்கும் பாதை. அதில் வைணவம் என்பது இந்த பாரத நாட்டில் பல இதிகாச புராணங்களைத் தந்திருக்கிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற தர்மங்களை உபதேசிக்கும் நூல்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே உருவானவை.

இந்த இதிகாசங்களில் மகாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். காரணம் இதில் வைணவத்தின் பிதா கண்ண பரமாத்மாதான் கதாநாயகன். இதில் வலியுறுத்தும் கருத்துக்களை வாழ்வியலில் யார் யார் எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை இந்த இதிகாசத்தில் காணலாம். குறிப்பாக மனித இயல்பில் நாம் கடைபிடிக்க வேண்டிய குணம் பொறுமை. இந்த பொறுமையை தருமன் மூலமாகக் காட்டுகிறார்கள். துடிதுடிப்பான செயலுக்கு பீமன், ஆண்மைக்கும் வீரத்துக்கும் அர்ஜுனன், மூத்தோரைப் பின்பற்றி நேர்வழியில் நடக்க நகுலனும் சகாதேவனும், பஞ்ச பூதங்களின் அரசியாகப் பரிமணிக்கும் பாஞ்சாலி, தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் தானம் செய்ய ஒரு கர்ணன், தீமைகளின் உருவகம் சகுனி, தாய்ப்பாசத்துக்கு ஒரு குந்தி, நேர்மையின் உருவகமாக ஒரு விதுரன், தீய எண்ணங்களின் காட்சியாக துரியோதனன், பாசத்தால் நெறி தவறும் திருதராஷ்டிரன், ராஜதந்திரியாக கண்ண பரமாத்மா என்று இந்தப் பாத்திரப் படைப்புகளில் பலரை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த இதிகாசங்கள் நமக்குச் சொல்லும் நீதிதான் என்ன? இப்படி வாழ வேண்டும் என்பதற்கு சில கதா பாத்திரங்கள், இப்படி வாழக்கூடாது என்பதற்குச் சில பாத்திரங்கள். புராணங்கள் கதைகள் தானே என்ற எண்ணம் எழலாம். ஆம் கதைகள்தான் ஆயினும் அவை சொல்லும் தர்மத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், புராணத்தில் காணப்படும் தேவையற்றவற்றை அன்னப் பறவை பாலை எடுத்து நீரை விட்டுவிடுவதைப் போல விட்டு விட வேண்டும்.

நமக்கு தர்மத்தை உபதேசிக்க இந்தந்த குணங்களை நீக்கிவிட வேண்டும். இந்த இந்த வழிகளில் வாழ வேண்டும் என்று சமயங்கள் உபதேசிக்குமானால் அதில் ஜீவன்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு. எனவேதான் அந்த நீதிகளை, தர்மங்களை கதை வடிவில் நமக்குக் கொடுத்திருக்கிறது சமயங்கள். வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் கண்ண பரமாத்மாவின் உபதேசங்களைத் தலைமேற்கொண்டு நடப்பார்களானால் அவர்களது வாழ்வியலில் எந்த தவறும் ஏற்பட வாய்ப்பே இல்லை.

மகாபாரதக் கதையில் வரும் குருக்ஷேத்திரப் போர் என்பது மனிதர் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படக்கூடிய போர்தான். இந்த பதினெட்டு நாள் போரின் இறுதியில் நாம் மேலே சொன்ன குணாதிசயங்களைக் கொண்டவர்கள் அடையும் கதி, அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நமக்கெல்லாம் வாழ்வியல் நெறிகளைக் காட்டும் விதமாக அமைந்திருப்பதைக் காண முடியும்.

பகவத் கீதையெனும் நீதி நூலை இடையில் புகுத்தி, இனிப்பான கதையை நமக்குக் கொடுத்திருக்கும் யுக்தியை நாம் பாராட்ட வேண்டும். கண்ணன் கடவுளா? தேவையில்லை. அப்படிக் கருதித்தான் ஆகவேண்டுமென்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அவன் மனிதனாகவே இருக்கட்டும். அவன் விஷ்ணுவின் அம்சமாகவோ அல்லது விஷ்ணுவைப் பின்பற்றும் ஒரு வைஷ்ணவனாகவோகூட இருக்கட்டும். அவன் எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்பது முக்கியமல்ல. அவன் சொன்னது என்ன என்பதுதான் இப்போது நமக்கு முக்கியம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர் பெருமான். அப்படி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவனை தெய்வத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதில் என்ன தவறு இருக்க முடியும்? பகவத் கீதை கடவுள் படைத்தது என்று ஒதுக்கத் தேவையில்லை. மனிதன் தனது சக ஜீவன்களுக்கு நல்வழிகாட்ட ஏற்படுத்திக் கொடுத்ததாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வைணவம் விரோதத்தையோ, வெறுப்பையோ, சண்டையையோ தூண்டவில்லை. மாறாக அந்த தீய செயல்களிலிருந்தெல்லாம் மக்களைக் காக்க எப்படி இருக்க வேண்டுமென்று போதிக்கிறது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்கிறது சமண சமய நூலான சிலப்பதிகாரம். அதே கருத்தைத்தானே வைணவமும் இந்த மகாபாரதம் மூலம் நமக்குத் தெளிவாக்குகிறது.

வாழ்வியலில் பல தடங்களை இந்த வைணவம் சில நீதிநூல்கள் மூலமாகக் குறிப்பாக மகாபாரதம் மூலம் தெளிவு படுத்துகிறது. தீமை புரிந்தால் தீமை நமக்கே வரும் எனும் நீதியைத் தெரிந்து கொள்ளலாம். விதையொன்று போட்டால் வேறொரு செடி முளைக்குமா, செஞ்சோற்றுக் கடன் என்பது என்ன எப்படிப்பட்ட தியாகத்தையும் அதற்காகச் செய்ய முடியுமா, பாரதம் பதில் சொல்லுகிறது. உறவு, பந்தம், பாசம் என்று மனம் அலை மோதுகிறதா, கடமையைச் செய்யும் போது அவற்றைத் தூக்கி எறிந்துவிடு என்கிறது மகாபாரதம்.

மகாபாரதம் மட்டுமல்ல, இராமாயண காப்பியமும் ஒரு வைணவக் காப்பியம்தான். அது றும் வாழ்வியல்தான் என்ன? காதலில் ஒன்றுபட்ட தம்பதியினரின் ஒற்றுமை இராமன் சீதையிடம் காணலாம். ஒரு நண்பன் எப்படியிருக்க வேண்டும்? பயன் எதிர்பார்க்காத தொண்டுள்ளம் கொண்ட குகனைப் பாருங்கள் என்கிறது இராமாயணம். ஒரு நல்ல ஊழியன் எப்படி இருக்க வேண்டும்? மகாகவி பாரதியின் "கண்ணன் என் சேவகன்" பாடலில் வரும் வேலைக்காரன் போலவா? அல்ல அல்ல. அனுமனைப் போல குறிப்பறிந்து செயல் புரியும் ஆற்றல் மிக்கவனாக இருக்க வேண்டும்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இராமனைப் பிரிந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் தன் கணவன் பெருமைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த சீதையைப் போல மனைவி அமைய வேண்டும்.

தீமைக்கும், அக்கிரமங்களுக்கும் இடையே வாழ்ந்த போதும் தர்ம நெறி தவறாமல் நடக்க வேண்டுமா? அப்படி நடக்க முடியுமா? ஏன் விபீஷணனைப் பாருங்கள். அநீதிக்கு அடிபணிய மறுத்த அவன் நேர்மையைப் பாருங்கள். இராமாயணம் சொல்லும் நீதி இது.

செஞ்சோற்றுக் கடன் கழிக்க பாரதத்து கர்ணன் போல இராமாயணத்தில் கும்பகர்ணன். தன் அண்ணனுக்காக அவன் செய்வது அநீதி என்ற போதிலும், தன்னை உறக்கத்திலும் காத்துவந்த அந்த மேன்மைக்காகத் தன் இன்னுயிரை ஈந்த அந்த மேன்மகனைப் போற்றலாம் இராமகாதையில்.

வைணவக் காப்பியங்களும், வைணவ நீதி நூல்களும் மனிதனை நல்வழிப்படுத்தவும், நேர்மை நியாயம் இவற்றிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்ந்திட நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். வைணவம் சமயம் மட்டுமல்ல, மனிதனை வாக்கையில் மேம்படுத்த வாய்த்த ஒரு வழிகாட்டி. மனித வாழ்வு மேன்மையுற வைணவம் செய்திருக்கும் பணி மகத்தானது என்ற எனது கருத்தை வலிறுத்தி என் உரையை நிறைவு செய்கிறேன்.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

வைணவக் காப்பியங்களும், வைணவ நீதி நூல்களும் மனிதனை நல்வழிப்படுத்தவும், நேர்மை நியாயம் இவற்றிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்ந்திட நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.

நிறைவான பகிர்வு. பாராட்டுக்கள்..

கா.ந.கல்யாணசுந்தரம் said...

சிறந்த பகிர்வுக்கு நன்றி. மனசுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது.

Unknown said...

மிகவும் அற்புதமான அழகான உண்மைகளை மிகவும் நேர்த்தியாக அதிலும் ரத்தினச் சுருக்கமாக கருத்துக்கள் ஒவ்வொன்றையும் முத்துக்களாய் கோர்த்து மிகவும் ரம்மியமான ஒரு உரையை அளித்துள்ளீர்கள் ஐயா! சமீபமாக அதாவது சில நாட்களாகவே இது போன்ற சிந்தனையே என்னுள் மிகுந்து காண்கிறது... அதைப் போலவே இவைகளே நான் திரும்பும் இடங்களில் எல்லாம் செய்திகளாகவே காணக் கிடைக்கிறது... இதே நினைவில் உலாவும் எனக்கு வானொலியைக் கேட்பது கூட அவ்வளவு இஷ்டமான காரியமாகத் தோன்றவில்லை... வெகுதூரம் தனியாக காரில் பயணம் செய்யும் போது கூட அமைதியாகவே செல்லத் தோன்றுகிறது..... அதிசயம் ஒன்றும் இல்லை இது போன்ற உயரியக் கருத்துக்களை கண்டு கேட்டு உணரும் பொது மனமே அமைதி கொள்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.. இது யாவருக்கும் வரும் இயல்பு எனவும் எண்ணிட அல்ல அனுபவித்து உணர, தோன்றுகிறது.... ஆழ் மனத்திலே ஓடும் / பதியும் சிந்தனை இந்த நிலையை உருவாக்குகிறது போலும்....

இது போன்ற உயரிய தத்துவங்களை உள்ளடக்கியக் கதைகள் கூறும் உண்மையை உணராமால் அதில் வரும் பாத்திர ஆராய்ச்சியிலே மூழ்கி காலத்தை வீணாக்கும் போக்குதான் அதிகம் நிகழும் இந்தக் காலக் கட்டத்திலே தங்களின் உரை ஒரு தெளிவான சிந்தனைக்கு உறை கல்லாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

இந்த மகபாரத்தைப் பற்றிய சிறு துணுக்கு... சோவியத் ரஷ்யாவிலே இந்த கதை மிகவும் பிரசத்திப் பெற்றது.... அவர்களை பெரிதும் அதிசயிக்க வைத்தது என்னவென்றால் ஒரு நானூறு கதை மாந்தர்களைக் கொண்டு அதிலும் மிகவும் அற்புதமாக உயரியக் கருத்துக்களை சொல்லிய இந்தக் கதையை எழுதியிருப்பதைத் தான் எண்ணி வியந்தார்களாம்... ஓரிரு நாளிலே லட்சக்கனக்கானப் பதிவுகள் விற்பனையான என்று சிறுவயதில் சோவியத்நாடு என்னும் சஞ்சிகையில் படித்த ஞாபகம். உண்மையில் அது கதியெனக் கொண்டாலும் இது போன்ற முனிவர்களால் அல்லாமல் வேறு யாரும் / சாதாரண மனிதர் யாரும் இப்படி ஒருக் கதையாக கொண்டாலும் கூட செய்திருக்க முடியாது என்பது தானே உண்மை.

கயிற்றைப் பார்த்து பாம்பு என்று புரிந்து கூறுபவர்களின் மனத்தில் தான் கோளாறு என்றெல்லாமல் வேறேன்னாக இருக்க முடியும்!

எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள் உங்களிடம்... பாஞ்சாலியைப் பற்றிய விசயங்களை மாத்திரம் பாரதத்திலே அவளின் உயரிய நிலையை... பாண்டவர்களின் குடும்ப விளக்காக / குல தெய்வமாக போற்றப் பெற்றவளைப் பற்றிய தகவல்களை, அவளைப் பற்றியக் கதையை அறிய விரும்புகிறேன்... அதை தங்களின் நேரத்தை செலவழித்து தயார் செய்ய ஹேது இருக்குமானால்.. அதை செய்ய வேண்டுகிறேன்..

அற்புதமான உரையை பதிவிட்ட தங்களுக்கு எனது நன்றிகள் ஐயா!.

Unknown said...

மிகவும் அற்புதமான அழகான உண்மைகளை மிகவும் நேர்த்தியாக அதிலும் ரத்தினச் சுருக்கமாக கருத்துக்கள் ஒவ்வொன்றையும் முத்துக்களாய் கோர்த்து மிகவும் ரம்மியமான ஒரு உரையை அளித்துள்ளீர்கள் ஐயா! சமீபமாக அதாவது சில நாட்களாகவே இது போன்ற சிந்தனையே என்னுள் மிகுந்து காண்கிறது... அதைப் போலவே இவைகளே நான் திரும்பும் இடங்களில் எல்லாம் செய்திகளாகவே காணக் கிடைக்கிறது... இதே நினைவில் உலாவும் எனக்கு வானொலியைக் கேட்பது கூட அவ்வளவு இஷ்டமான காரியமாகத் தோன்றவில்லை... வெகுதூரம் தனியாக காரில் பயணம் செய்யும் போது கூட அமைதியாகவே செல்லத் தோன்றுகிறது..... அதிசயம் ஒன்றும் இல்லை இது போன்ற உயரியக் கருத்துக்களை கண்டு கேட்டு உணரும் பொது மனமே அமைதி கொள்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.. இது யாவருக்கும் வரும் இயல்பு எனவும் எண்ணிட அல்ல அனுபவித்து உணர, தோன்றுகிறது.... ஆழ் மனத்திலே ஓடும் / பதியும் சிந்தனை இந்த நிலையை உருவாக்குகிறது போலும்....

இது போன்ற உயரிய தத்துவங்களை உள்ளடக்கியக் கதைகள் கூறும் உண்மையை உணராமால் அதில் வரும் பாத்திர ஆராய்ச்சியிலே மூழ்கி காலத்தை வீணாக்கும் போக்குதான் அதிகம் நிகழும் இந்தக் காலக் கட்டத்திலே தங்களின் உரை ஒரு தெளிவான சிந்தனைக்கு உறை கல்லாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

இந்த மகபாரத்தைப் பற்றிய சிறு துணுக்கு... சோவியத் ரஷ்யாவிலே இந்த கதை மிகவும் பிரசத்திப் பெற்றது.... அவர்களை பெரிதும் அதிசயிக்க வைத்தது என்னவென்றால் ஒரு நானூறு கதை மாந்தர்களைக் கொண்டு அதிலும் மிகவும் அற்புதமாக உயரியக் கருத்துக்களை சொல்லிய இந்தக் கதையை எழுதியிருப்பதைத் தான் எண்ணி வியந்தார்களாம்... ஓரிரு நாளிலே லட்சக்கனக்கானப் பதிவுகள் விற்பனையான என்று சிறுவயதில் சோவியத்நாடு என்னும் சஞ்சிகையில் படித்த ஞாபகம். உண்மையில் அது கதியெனக் கொண்டாலும் இது போன்ற முனிவர்களால் அல்லாமல் வேறு யாரும் / சாதாரண மனிதர் யாரும் இப்படி ஒருக் கதையாக கொண்டாலும் கூட செய்திருக்க முடியாது என்பது தானே உண்மை.

கயிற்றைப் பார்த்து பாம்பு என்று புரிந்து கூறுபவர்களின் மனத்தில் தான் கோளாறு என்றெல்லாமல் வேறேன்னாக இருக்க முடியும்!

எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள் உங்களிடம்... பாஞ்சாலியைப் பற்றிய விசயங்களை மாத்திரம் பாரதத்திலே அவளின் உயரிய நிலையை... பாண்டவர்களின் குடும்ப விளக்காக / குல தெய்வமாக போற்றப் பெற்றவளைப் பற்றிய தகவல்களை, அவளைப் பற்றியக் கதையை அறிய விரும்புகிறேன்... அதை தங்களின் நேரத்தை செலவழித்து தயார் செய்ய ஹேது இருக்குமானால்.. அதை செய்ய வேண்டுகிறேன்..

அற்புதமான உரையை பதிவிட்ட தங்களுக்கு எனது நன்றிகள் ஐயா!.