பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, January 6, 2012

ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி 2012, திருவையாறு


ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி 2012, திருவையாறு                            
                                10ஆம் ஆண்டு விழா

இடம்:   அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் ஆலயம்
நாள்:    2012 பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 21 வரை.
நேரம்:   தினம் மாலை 5 முதல்

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த
நாட்டியாஞ்சலி விழாவில் புகழ் பெற்ற பல பரத நாட்டியக் கலைஞர்கள் 
வந்து கலந்து கொள்கிறார்கள்.விழாவுக்கு பக்தர்களும், கலை ஆர்வலர்களும், 
பொதுமக்களும் திரளாக வரவேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்.

மூன்று நாளும் கீழ்கண்ட அட்டவணைப் படி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Dance during Maratha Period
மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா - 2012
19-2-2012 முதல் 21-2-2012 வரை

19-2-2012 ஞாயிறு   பிரதோஷம்
மாலை 6-05 மணி மங்கள இசை - திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்கள்
6-30 மணி திருவையாறு ஸ்ரீ ஆடவல்லான் நாட்டியாலயா, குரு: திரு  க.வஜ்ரவேல்,
7-00 மணி திருச்சி சகோதரிகள் கலைவளர்மணி உஷாநந்தினி, ஜெயசுஜிதா, திருச்சி
7-30 மணி பண்ருட்டி கலைச்சோலை நாட்டிய அகாதமி திரு சுரேஷ் குழுவினர் 
8-00 மணி சின்னமனூர் திருமதி சுஜாதா & திரு விஜய் கார்த்திகேயன் குழுவினர்
8-30 மணி மும்பை ந்ருத்யாஞ்சலி கலை இயக்குனர்திருமதி லதா ராஜேஷ் குழுவினர்.
9-00 மணி சென்னை முகப்பேர் ஸ்ரீ அபிநயவர்ஷினி நாட்டியப் பள்ளி மாணவியர்
9-30 மணி நாகை சிவாலயா நாட்டியப் பள்ளி,குரு: செல்வி ராஜமீனாட்சி, நாகப்பட்டினம்.
10-00 மணி தஞ்சை ஓம் சிவாலயா நாட்டியப் பள்ளி, குரு: திருமதி கே.பரமேஸ்வரி
10-30 மணி நாமக்கல் நிருத்திய நடேச கலாலயா திரு சி.ஜெயப்பிரகாஷ் நாராயண்

20-2-2012 திங்கள்- மகாசிவராத்திரி
மாலை 5-00 மணி திருவையாறு இசைக் கல்லூரி மாணவியர் நாட்டியம்.
5-30 மணி செல்வி வைஷ்ணவி M.கார்த்திகேயன், சென்னை
6-00 மணி சென்னை நூபுர்லயா டான்ஸ் அகாதமி மாணவியர்,  திருமதி லலிதா கணபதி
6-30 மணி கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமம் மாணவியர் நடனம்
                              குரு: திருமதி எஸ்.விஜயமாலதி
7-00 மணி திருநெல்வேலி இன்னிசை நாட்டிய மாமணி திருமதி இந்திரா கிருஷ்ணமூர்த்தி,
                               மாணவியர்
7-30 மணி பெங்களூர் விஸ்வபாரதி நாட்டியசாலா குரு: திருமதி அனுபமா ஜெயசிம்மா                      
8-00 மணி சென்னை வேம்பட்டி சிவக்குமார் மாணவியர் குரு: திரு வேம்பட்டி சிவக்குமார்.
8-30 மணி சிதம்பரம் & அரியலூர் தகதிமிதா நாட்டியப் பள்ளி குரு: திரு அகிலன்
9-00 மணி கும்பகோணம் ஸ்ரீ சிவசக்தி நடனப் பள்ளி, குரு: திருமதி கவிதா விஜயகுமார்,

9-30 மணி கும்பகோணம் அபிராமி ஜெயராமன் குரு: திருமதி கவிதா விஜயகுமார்
10-00 மணி கும்பகோணம் செல்வி ஆர். திவ்யா குரு: திருமதி கவிதா விஜயகுமார்
10-30 மணி கடலூர் அபிநயா நாட்டியாலயா முனைவர் சுமதி சுந்தர் குழுவினர்

21-2-2012 செவ்வாய்
மாலை 5-30 மணி திருவையாறு இசைக் கல்லூரி - குழு வீணையிசை.
6-00 மணி கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயா, திருமதி ஸ்ரீதரி குழுவினர்
6-30 மணி கும்பகோணம் ஆடல்வல்லான் நாட்டியப் பயிற்சிப் பள்ளி 
                        மாணவியர், குரு:ஜென்சி லாரன்ஸ் கும்பகோணம்.
7-00 மணி கரூர் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவியர், குரு: ம.சுகந்தப்பிரியா, கரூர்.
7-30 மணி சிதம்பரம் சிவசக்தி இசை நடனப் பள்ளி மாணவியர், குரு: 
                        நடனகலா சேவாமணி திருமதி V.N. கனகாம்புஜம்.
8-00 மணி பழையகூடலூர் டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் மெட். பள்ளி  மாணவியர்                 
8-30 மணி சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் மாணவியர், குரு: திரு பினேஷ் மஹாதேவன்
9-00 மணி டாக்டர் காயத்ரி வைத்தியநாதன், குரு: கிருபா பாஸ்கரன், 
                        Natyarppana Dance Company, Milwaukee, Wisconsin, USA
9-30 மணி சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ கிருஷ்ணா நாட்டியாலயா மாணவியர்,         
                        குரு: திருமதி கலா ஸ்ரீநிவாசன்,
10-00 மணி கும்பகோணம் கலாலயம் நாட்டியப் பள்ளி திருமதி கீதாஅஷோக் மாணவியர்


"நாட்டியாஞ்சலி"
தஞ்சை வெ.கோபாலன், தலைவர், ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழு, திருவையாறு &
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

இன்றைய அறிவியல் உலகத்தின் கண்டுபிடிப்புகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்கள் கண்டுபிடித்து அதற்கு உருவகங்களைக் கொண்டு விளக்கமும் அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளக்கங்களில் ஒன்றுதான் நடராஜப் பெருமானின் தாண்டவத்தின் தத்துவமும். சிவபெருமான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழித்தும் வருவதாக நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். இம்மூன்று செயல்களோடு மறைத்தல், வீடுபேறு அளித்தல் எனும் இரண்டும் அடங்கிய "பஞ்ச கிருத்தியங்கள்" எனப்படும் தொழிலைச் சிவபெருமானுக்கு அளித்து பெருமை பெற்றிருக்கிறார்கள்.

வான்வெளியில் கூட்டங்கூட்டமாக சக்தியின் வெளிப்பாடு வந்து கொண்டிருப்பதையும், அப்படிப்பட்ட சக்தியை உள்ளடக்கிய அணுவை பிளந்தால் அதிலிருந்து வெளிப்படும் சக்தி 'மாபெரும் சக்தியாக' உருவெடுப்பதையும் மேலை நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்த போது, இந்த கண்டுபிடிப்புகளை இந்தியாவில் ஆன்மீகமாகக் கண்டுபிடித்து, இப்பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, முதன்முதல் உருவான காற்று, அது எழுப்பிய ஓசை இவற்றை இறைவனின் தாண்டவமாகக் கருதி 'நடராஜர்' அதாவது நடனத்துக்கு அரசர் என்று சிவனை முன்னிருத்தி வணங்கி வந்ததைப் போற்றி பாராட்டி எழுதியிருக்கிறார்கள். 

இந்து புராணங்களின்படி சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார். எதற்கு? தான் அதிகம் படித்துவிட்டதாக ஆணவம் கொண்டு சில முனிவர்கள் இறைவனை மறந்த காரணத்தால், அவர்களுக்கு உண்மை விளங்கிட வேண்டுமென்பதற்காக இந்த ஆனந்த தாண்டவம் ஆடினார். நம் புராணங்களின்படி சிவபெருமான்தான் தாண்டவங்களுக்கு எல்லாம் முதல்வன். சிவனும் பார்வதியும் போட்டியிட்டு ஆடியதாக புராணம் கூறும். சிவன் ஆடிய ஆட்டம் 'தாண்டவம்'. இது பிரபஞ்சம் தோன்றிய போதும், அழிக்கப்படும் போதும் ஆடிய தாண்டவமாகும். முதலில் ஆடியது 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிவின் போது ஆடியது 'ருத்ர தாண்டவம்' என்றும் அறிகிறோம். பார்வதி ஆடிய ஆட்டத்துக்கு 'லாஸ்யம்' என்று பெயர். இது முன்னதைப் போல் வேகமும், துள்ளலும் கொண்டதல்ல. பார்வதியின் லாஸ்யம் நளினமானது, உணர்வைத் தூண்டவல்லது, இனிமையானது. பெண்கள் ஆடுவது லாஸ்யம் என்று கூறப்படுகிறது.

சிவனுடைய இந்த ஆட்டத்துக்கு ஓர் உருவம் கொடுத்து பஞ்சலோக விக்கிரகம் படைத்தது தமிழகத்தில்தான். கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கம் தோன்றியிருக்கிறது. அப்படி சிவபெருமான் ஆடிய தலங்களை ஐந்து இடங்களில் காணமுடிகிறது. அவற்றில் முதன்மையானது சிதம்பரம். இங்கு இருப்பது கனகசபை, மதுரையில் ரஜத சபை அதாவது வெள்ளி சபை, திருவாலங்காட்டில் ரத்தின சபை, திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, அவர் மகாலக்ஷ்மியிடம் பரமேஸ்வரனின் ஆனந்த தாண்டவத்தின் சிறப்பினை எடுத்தியம்பிக் கொண்டிருந்தார். அப்போது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிசேஷன் மகாவிஷ்ணுவிடம் தான் அந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறவும், அவரை பூமிக்கு அனுப்பி பதஞ்சலி முனிவர் என்ற பெயரோடு சென்று அந்த ஆட்டத்தைக் காணப் பணித்தார். அவருடன் வியாக்கிரபாத முனிவர் எனும் புலிக்கால் முனிவரும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் இறைவனின் ஆட்டத்தைக் காண்பதை மகாவிஷ்ணுவும் பார்த்துக் கொண்டிருந்தார். இதையொட்டியே சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் கோவிந்தராஜ பெருமாளுக்கும் ஒரு சந்நிதானம் அமைக்கப்பட்டதாகக் கூறுவர்.

இதே சிதம்பரத்தில்தான் நடராஜப் பெருமானுக்கும் காளிக்கும் போட்டி ஏற்பட்டு இருவரும் ஆட, ஆட்டத்தின் இடையே சிவபெருமான் தன் இடது காலை உயரே தூக்கி ஊர்த்துவ தாண்டவமாக ஆட, காளியால் அப்படி ஆட முடியாமல் தலை குனிந்து ஊரை விட்டு வெளியேறி கோயில் கொண்டாள் என்றும் வரலாறு உண்டு. 

சிவனுடைய தாண்டவம் பிரபஞ்சத்தின் தோற்றம் மட்டுமல்ல, உயிரினங்கள், புல், பூண்டுகள், மரம் செடிகொடிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள், மனிதர்கள் என்று இவை பிறப்பது, வாழ்வது, இறப்பது என்பதை தத்துவார்த்தமாகக் காட்டும் நோக்கில் ஆடப்பட்டது. இவை முன்பே கூறியதைப் போல பஞ்ச கிருத்தியங்களின் வெளிப்பாடுதான். 

நடராஜப் பெருமானுடைய விக்கிரகம் தமிழ்நாட்டில்தான் சுமார் ஆயிரம் ஆயிரத்தைனூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். சாதாரணமாக சிவன் கோயில்களில் லிங்க வழிபாடுதான் நடப்பதை நாம் அறிவோம். நடராஜர் சிவனுடைய வடிவம்தான் எனும்போது இந்த உருவத்துக்குக் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டாமா? நடராஜர் விக்கிரகம் வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை மடித்துக் கொண்டு ஆடுகிறார். சில இடங்களில் இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கியும் ஆடுவது போன்ற தோற்றமும் உண்டு. இந்த உருவத்துக்கு நான்கு கரங்கள், வலப்புறம் ஒரு கரத்தில் டமருகம் எனும் உடுக்கை வாத்தியமும், இடது கையில் சந்திரபிரபை போன்று வளைந்த உள்ளங்கையில் தீப்பிழம்புகளும், மற்றொரு வலக்கை அபயஹஸ்தமாகவும், இடக்கையை மார்புக்கு நேரே வளைத்தும் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். முதலில் காற்றுதான் தோன்றியது. அந்த காற்று ஓசை எழுப்பியது என்பதற்காக டமருகம். தீப்பிழம்பு, உலகை அழிப்பதைக் காட்டுவதற்கும், இடக்கை மடக்கி கால் நோக்கி வளைந்திருப்பது, இறைவனின் அடிபணிவதால், வலக்கரம் காட்டும் அபயஹஸ்தம் அனைவருக்கும் அடைக்கலமளிக்கும் என்பதையும் விளக்குவதாகக் கூறுகிறார்கள்.

இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. நடராஜர் காலை ஊன்றி நிற்குமிடத்தில் காலடியில் ஓர் உருவம் கிடப்பதைப் பார்க்கலாம். இந்த உருவம் அபஸ்மாரம் எனப்படுபவனின் உருவம். இந்த அபஸ்மாரம் உலகில் உள்ள தீமைகள், நோய்கள் இவற்றின் உருவகம். மனத்தின் வக்கிரம், கொடுமை இவற்றையும் இது எடுத்துக் காட்டுகிறது. இவற்றைக் காலில் போட்டு அழிப்பதுதான் சிவபெருமான் செய்யும் தாண்டவத்தின் நோக்கம். இப்படி ஒரு கடவுளின் உருவத்தைப் படைப்பதன் மூலம், அறிவியல், உலகின் தோற்றம், வளர்ச்சி, அழிவு இவ்வளவையும் இறைவன் அணுவளவும் பிசகாமல் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

'நடராஜா' எனும் சொல் 'நடனத்துக்கு அரசன்' எனும் பொருளில் வழங்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் இலக்கணப்படி இச்சொல் வழக்கில் வந்தது. இது மட்டுமல்லாமல் வெறு சில விளக்கங்களும் நடராஜர் சிலைக்குக் கொடுக்கப்படுகிறது. அவரது இடையிலும் கரங்களிலும் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள குண்டலினி சக்தியைப் பாம்பாகக் காட்டுகிறது என்கிறார்கள். இவரது உருவத்துக்கு சுற்றிலும் தீ வட்டத்தைக் காணலாம். இது இந்த பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படும் துன்பங்கள், மும்மலங்கள் இவற்றைக் குறிக்கிறது.

நாட்டியம் என்பது அதன் இயக்கத்தை, ஆட்டத்தை, அதனோடு தொடர்புடைய இசை, தாளம், பாவம் இவற்றைப் பார்த்து ரசிக்கக் கூடிய கலை. இது சமயம் சார்ந்த வழிபாடுமட்டுமல்லாமல், மனித வர்க்கத்தின் ஆளுமைக்குட்பட்ட, கோபம், காதல், அன்பு, வீரம், சோகம், இரக்கம் இவற்றையும் காட்டக்கூடிய கலை. அதனால்தான் நவரஸங்களும் அடங்கிய ராகம், அந்த ராகத்திற்கேற்ற பாடல் இவற்றைக் கொண்டு இந்த ஆட்டங்களை நடத்திக் காட்டுகிறோம். இதனால் இவ்வாட்டங்களுக்குள் அடங்கியுள்ள மனித உணர்வுகளை பலரும் அறியும் வண்ணம் இந்த நாட்டியங்கள் அமைக்கப்படுகின்றன. 

இவ்வகை நாட்டியங்களை மூன்று வகையாக வகுத்திருக்கிறார்கள். அவை 'நாட்டியம்', 'நிருத்தியம்', 'ந்ருத்தம்' என்பன. முதல் வகை நாட்டியம் என்பது ஒரு வரலாற்றை அல்லது கதையை வரிசையாகச் சொல்லும் ஆங்கில Opera போன்றது. இவற்றை நாட்டிய நாடகம் எனலாம். இதில் பாத்திரம் ஏற்றிருப்பவர்கள், தங்கள் பங்கை நடிப்பின் மூலமும், பாடல்கள் மூலமும், பாவங்கள் மூலமும் காட்டமுடியும். இரண்டாவது வகை நிருத்தியம். இது நவரஸங்களில் ஏதாவதொரு ரஸத்தில் அமைந்த பாடலுக்கு கருத்துக்கேற்ப பாவமும், ரஸம் வெளிப்படும்படியான ஆட்டமும் ஆடிக் காண்பது. மூன்றாவது வகையில் தாளக்கட்டும், உடல் அசைவும் இருக்கும் ஆனால் அவற்றுக்கு மேற்சொன்னவை போல எந்த பொருளும் கிடையாது. 

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் இப்போதெல்லாம் 'நாட்டியாஞ்சலி' எனும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் பரதம் பயின்ற நாட்டியக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அருமையாக நடனம் ஆடுகிறார்கள். எல்லா கலைகளுக்கும் முதன்மையானவரான சிவபெருமானுக்கு அவன் அளித்த நாட்டியம் மூலமாகவே அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சிகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. 

மற்றெல்லா நாடுகளிலும் கூட இசையும் நாட்டியமும் உண்டு. ஆனால் அவை பொழுது போக்குக்காகவும், அந்தந்தக் கலைகளில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதத்திலும் அமைந்திருக்கும். ஆனால் நம் பாரத புண்ணிய பூமியில் எல்லா கலைகளும் அந்த இறைவனுக்கே என்று அர்ப்பணிக்கும் உணர்வோடு இவற்றைக் கையாண்டு வருகிறார்கள். சிவபெருமான் நாட்டியத்தில் வல்லவர் என்றால், இசைக்குரிய வீணை சரஸ்வதியின் கையில் இருக்கிறது. நாரதருடைய கையில் தும்பூர் எனும் வாத்தியம் இருக்கிறது. நந்தி மத்தளம் வாசிக்கிறார். கண்ணன் குழல் ஊதுகின்றான். இப்படி இசையும் மற்ற கலைகளும் இறைவனுக்கே என்று அர்ப்பணம் செய்வதால்தான் இந்த கலைகளை நாம் பக்தியோடும், பரவசத்தோடும் பயில்கிறொம், கற்றுக்கொண்டு அவற்றில் நம் திறமைகளை வெளிக்கொணர்கிறோம். அப்படி சிவபெருமானுக்கு நாம் செலுத்தும் அஞ்சலிதான் "நாட்டியாஞ்சலி" எனும் நிகழ்ச்சி. 

நாட்டியம் என்பது பல செயல்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஒரு யோகம் எனலாம். தாளம் பிசகாமல் கால் தாளமிட வேண்டும். சொல்லும் கருத்துக் கேற்ற ரஸத்தை வெளிப்படுத்தும் ராகம் வேண்டும். அதற்கேற்ப முகமும் உணர்ச்சிகளையும், கைகளும், விரல்களும் முத்திரைகளையும் காட்ட வேண்டும். இவற்றுக்கு மனம் யோகத்தில் திளைத்தல் வேண்டும். அப்போதுதான் இவை அனைத்தும் சிறிதும் பிசகாமல் செய்து முடிக்க முடியும். எனவே நாட்டியம் என்பது ஒரு யோக சாதனை. இது சாதாரணமாக எல்லோராலும் செய்யமுடிவதல்ல. இதற்கென்று ஆர்வமும், விடாமுயற்சியும், நல்ல பயிற்சியும் எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல குருநாதர்களும் அமைய வேண்டும். குருபக்தி இந்த கலைகளில் மிகவும் அவசியம். 

இத்தகைய அற்புதமான "நாட்டியாஞ்சலி" நிகழ்ச்சிகள் சமீப காலமாகத் தமிழகத்தின் பல ஊர்களிலுள்ள சிவாலயங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த அரிய கலையைக் கற்றுக்கொண்ட நமது இளம் கலைஞர்கள் மக்கள் முன்பு ஆடவும், சிவபெருமான் அருளைப் பெறவும் இதுபோன்ற விழாக்களில் ஆர்வத்தோடும் தொண்டு உள்ளத்தோடும் வந்து கலந்து கொள்கிறார்கள். நாம் நடனத்தை ரசிப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும், நம்மால் முடியாத இந்த அரிய கலையைப் பொக்கிஷமாகப் போற்றி காத்து வரும் இந்த கலைஞர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய மரியாதை இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து, அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பது மட்டும்தான். இயன்றவரை உங்களுக்கு அருகாமையில் நடக்கும் எந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்காவது சென்று இருந்து அந்த நடனங்களைப் பார்த்து மனதார அந்தக் கலைஞர்களை வாழ்த்துங்கள். அதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் கைமாறு.

மகாசிவராத்திரியை யொட்டி இந்த நாட்டியாஞ்சலி விழாக்கள் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரியன்று சிவபெருமான் சந்நிதியில் அவர் சார்ந்த எண்ணத்தோடு, அவர் ஆடிய இந்த நடனங்களைக் கண்டு களிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்ததை எண்ணி நாம் பெருமைப் படவேண்டும்.

இந்த கலைகள் நம் பாரம்பரிய சொத்துக்கள். இவற்றை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கெல்லாம் இருக்கிறது. இந்தக் கடமையைச் செவ்வனே செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!


2 comments:

 1. என் போன்று "சிவபெருமான்"னின் பெருமைகளை அறிந்திடாதவர்களுக்கு மிகவும் பயனுள்ள அருமையான ஆக்கத்தை தந்த தங்களுக்கு எனது பணிவான நன்றிகளை உரித்தாக்குகின்றேன்...உங்கள் சேவை மேன்மேலும் தொடர வேண்டி சிவபெருமானிடம் பிரார்த்திக்கின்றேன்...

  ReplyDelete
 2. மிகவும் அற்புதமான விளக்கங்களுடனான உயரிய அர்த்தமுள்ளப் பதிவு...
  அழகான விளக்கங்களுடன், ஆடலரசனின் தத்துவத்தை விளக்கியதோடு...
  அதை ஆடுபவர் ஒரு யோக நிலையில் நிற்கும் போதே அது முழுமையாக
  அளிக்க முடியும் என்பதை விளக்கி இந்த தெவீகக் கலையை பயின்று
  படிப்பவர்களை யாவரும் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்பது உண்மையாயினும்
  வருங்காலத்தில் இது நம் இந்தியக் குழந்தைகள் யாவரும் அவசியம் பயிலும்
  நல்வழியும் ஆங்காங்கேக் காணவும் முடிகிறது...

  தங்களின் ஆக்கமும் அதனால் அறிந்துக் கொண்ட விசயங்களும் அருமை...

  நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here