பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 19, 2012

கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற சில மேதைகள்:--

கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற சில மேதைகள்:--

1.அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்.
அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரியக்குடி எனும் ஊரில் 1890ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி பிறந்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். புதுக்கோட்டை மலையப்ப ஐயர் என்பவரிடம் தொடக்க காலத்தில் இசை பயின்ற இவர் பிறகு நாமக்கல் நரசிம்ம ஐயங்காரிடம் இசை பயின்றார். இவரை ஒரு தலைசிறந்த இசைக் கலைஞராக உருவாக்கிய பெருமை பூச்சி ஐயங்கார் என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் ஸ்ரீனிவாச ஐயங்கார்தான்.


இவர் 1938ஆம் ஆண்டிலேயே மியுசிக் அகாதமியில் தலைமை வகித்து சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றவர். இவர் சுமார் அறுபது ஆண்டுகள் கர்நாடக இசையுலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர். இன்றைய சங்கீதக் கச்சேரிகளை நடத்தும் முறையை இவர் உருவாக்கித் தந்தார். புகழ்பெற்ற பக்க வாத்தியக்காரர்களும் இவருடன் வாசித்திருக்கின்றனர். இவர் திருவையாறு சற்குரு ஸ்ரீ தியாகபிரம்ம உத்ஸவத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்தியதோடு, ஆராதனையன்று நடக்கும் உஞ்சவிருத்தியிலும் பல பிரபல வித்வான்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். அவருடன் செம்மை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்பாலசுப்பிரமணியம், ஆலத்தூர் ஸ்ரீநிவாசய்யர் போன்ற மேதைகள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்துக் கொண்டு பாடிச்செல்லும் காட்சியைப் போல இப்போதெல்லாம் இன்றைய பிரபல வித்வான்கள் செய்வதில்லை. மகான் தியாகராஜருக்குச் செய்யும் அஞ்சலியாக அவர்கள் செய்ததைப் போல இன்றைய வித்வான்களும் தங்களது தகுதிகளை மறந்து உஞ்சவிருத்தியில் கலந்து கொள்வதுதான் ஸ்ரீ தியாகராஜருக்குச் செய்யும் முறையான அஞ்சலியாக இருக்க முடியும்.

2. முசிறி சுப்பிரமணிய ஐயர்


எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்து இசை மேடைகளில் இன்னிசை விருந்து அளித்து வந்தவர் முசிறி சுப்பிரமணிய ஐயர். சுமார் இருபது ஆண்டுகள் இவர் இடைவிடாது கச்சேரிகள் செய்து வந்தவர். இவருடைய காலத்தில் இவர் ஒவ்வோராண்டும் திருவையாறு ஆராதனையில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் அந்த நாளில் இருந்துவந்தது. 1940 வாக்கில் இவர் இசை விரும்பிகளுக்கு வழிகாட்டியாகவும், நல்ல இசை ஆசிரியராகவும் இருந்து வரத் தொடங்கிவிட்டார்.


இவர் திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகிலுள்ள பொம்மலபாளையம் எனுமிடத்தில் 1899 ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்தார். 1975 மார்சி 25இல் இவரது கடைசி மூச்சு வரை கர்நாடக இசையைப் பரப்பியவர். மிகச் சாதாரண குடும்பத்தில் தோன்றிய இவர் தனது 14ஆம் வயதில் நாகலக்ஷ்மி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்த நாளில் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாட்டுக்கள் இவரைப் பாட்டு கற்றுக்கொள்ளத் தூண்டியது. 


எஸ்.நாராயணஸ்வாமி அய்யர் என்பவர்தான் இவருடைய முதல் இசை ஆசிரியர். அதன் பின் சென்னைக்குச் சென்று அங்கிருந்த வயலின் மேதை கரூர் சின்னசாமி ஐயரிடம் பயின்றார். அவருடைய வழிகாட்டுதலின்படி டி.எஸ்.சபேச ஐயர் என்பவரிடம் இசை பயின்றார். 1920இல் இவருடைய முதல் கச்சேரி சென்னையில் நடந்தது. அப்போது பல சுப்பிரமணியர்கள் இருந்ததால் இவரை அடையாளம் காட்ட இவரது ஊரான முசிறி இவருடைய பெயருக்கு முன்பு சேர்க்கப்பட்டது. சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் இசைத்தட்டுக்கள் தயாரித்து வந்தனர். இவருடைய பாடல்கள் கிராமபோன் இசைத்தட்டுகள் மூலமும் பிரபலமாயின. இவருடைய உடல்நிலை சீர்கெட்டுவிட்ட படியால் ஒரு கட்டத்தில் கச்சேரிகள் செய்வதை நிறுத்திக் கொண்டார்.


இவர் திருவையாறு ஸ்ரீ தியாகபிரம்ம சபாவின் செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்திருக்கிறார். இவருடைய சிஷ்ய பரம்பரை பெரியது. மணி கிருஷ்ணசாமி, டி.கே.கோவிந்த ராவ், சுகுணா புருஷோத்தமன் போன்றவர்கள் இவரது இசை வாரிசுகள். இவருக்கு மியுசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி, தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், இந்தியன் ஃபைன் ஆர்ட்சின் சங்கீத கலா சிகாமணி ஆகிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. 1971இல் இவர் பத்ம பூஷன் விருதினைப் பெற்றார்.பட்டியல் தொடரும் .....

1 comment:

  1. இசை மேதைகளைப் பற்றிய நல்லப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete

You can give your comments here