"என் உயிரின் கீதம் நீ" என பல கவிதைகள் பல கவிஞர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் நண்பர் ஆலாசியம் அவர்களின் கவிதை இதோ! படித்தபின் அன்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறுமாறு வேண்டுகிறேன்.
கோ.ஆலாசியம்.
என் உயிரின் கீதம் நீ!
என் உணர்வுகளின் நாதம் நீ!
என் ஆனந்தத்தின் ஆரோஹனம் நீ!
என் ஆசைகளின் அவரோகணம் நீ!
சுருதி நீ! சுலோகம் நீ! சுரத்தோடு தாளம் நீ!
பெருகி ஓடும் இசையின் இனிமை நீ!
வீணையின் ஒலியில் வாழும் நீ!
வேணு கானம் நீ! வேதங்களின் சாரமும் நீ!
காலை மாலை கடும்பகல் யாவும் நீ!
இரவின் கருமை நீ! இரவியின் ஒளியும் நீ!
கடலின் ஆழம் நீ!
கவின்மிகு மலைமுகடும் நீ!
தேடல் நீ! பாடல் நீ!
தேனூறும் மலரும் நீ!
தில்லையின் அம்பலம் நீ!
திகட்டாத அமுதம் நீ
தேவாதி தேவன் நீ!
நடனம் நீ! நடராஜனும் நீ!
நடமாடும் நதியலையும் நீ!
நர்த்தனமாடும் கடலும் நீ!
நாரத கானமும் நீ!
தென்றல் நீ! திசையெல்லாம் நீ!
திங்கள் நீ! எனது கண்கள் நீ!
மங்கலப் பொருள்கள் யாவும் நீ!
மங்காத சங்கொலியும் நீ!
மணியோசை நீ!
மாணிக்கப் பேரொளியும் நீ!
உயிர்களின் மூலம் நீ!
உயர் பிரபஞ்ச சக்தி நீ!
அன்பின் வடிவினன் நீ!
ஆனந்த மயமானவன் நீ!
வானம் நீ! வான் மேகம் நீ!
நீரும் நீ! நெருப்பும் நீ!
நிஜமான இருப்பும் நீ!
இயக்கம் நீ! காட்சிகளில் மயக்கம் நீ!
அணுவும் நீ! அண்டமும் நீ!
காணும் யாவும் நீ!
இல்லாததும் நீ! இருப்பதுவும் நீ!
சொல்லில் நில்லாதவனும் நீ!
சொல்லின் அழகானவனும் நீ!
இடியும் மின்னலும் நீ!
அமைதியும் அதனாழமும் நீ!
எல்லாமும் நீ! எல்லாவற்றிலும் நீ!
எல்லையில்லாப் பிரபஞ்ச இதயம் நீ!
காரணம் நீ! காரியம் நீ! காலம் நீ!
காரண காரிய காலம் கடந்தவனும் நீ!
தாயும் நீ! சேயும் நீ!
தண்மையும் நீ! உண்மையும் நீ!
அன்பும் நீ! அறிவும் நீ!
பண்பும் நீ! பரிவும் நீ!
எல்லையில்லா பேருரு நீ!
என்னுள் உறையும் நீ!
என் உயிரோவியம் நீ!
என்னுள் ஒளிர்வாய் நீ!
என்னுயிரானவனே நீ!
என்னுயிரே நீ!
2 comments:
எனது கவிதையைப் பதிவிட்டதற்கு முதற்கண் நன்றிகள் ஐயா!
பிரபஞ்சத்தை பற்றியவைகளையும் அதன் ஒப்பில்லாத் தலைவனைப் பற்றியும் வாசிக்கும் போது கீதையிலே ஒரு இடத்தில்... பகவான் கூறுகிறார், இந்த பிரபஞ்சம் எனது சித்தியால் விளைத்தது அது எனது மேனியில் தாங்கப் படும் ஒருத் துளி என்று.
அப்பப்பா! ஆதியும் அந்தமும் இல்லாதவன் எங்கும் நிறைந்தவன், எல்லாமானவன், அப்பேரருள் தான்; இந்தப் பிரபஞ்ச உயிர்களின் மூளைகளை எல்லாம் ஒன்றாக்கி சிந்தித்தாலும் சிந்தைக்குள் முழுவதும் அறியப் பட முடியாதவன் போலும்.
'என் உயிரின் கீதம்' திடீரென்று எழுதத் தோன்றியது, அது அவனைப் பற்றி என்றதும் தானாக வந்தது....
இருந்தும் தாங்கள் கூறியது போல் இப்படி ஒருத் தலைப்பில் முன்பே பலரும் எழுதி இருக்கிறார்கள் என்பது உண்மையிலே இப்போது தான் நான் அறிக்றேன்... நன்றிகள் ஐயா!
அப்படி எழுதப் பட்ட மேன்மை பொருந்திய கவிஞர்களின் அமரக் கவிதைகளையும் வாசிக்க ஆவலாகவே இருக்கிறேன்... தங்கள் வசம் இருக்குமாயின் அதையும் பதிவிடும் படி வேண்டி பணிந்துக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றிகள் ஐயா!
அன்புடன் உங்கள்,
ஆலாசியம் கோ.
நீ நீ நீ எண்றே எங்கும் நிரைந்த்திருப்பவனை காட்டியவனே உன் கவி திறமையை
இத்தனை நாள் மறைத்தது ஏனோ, மறைத்திருந்ததேனோ.
நல்ல நடையில் உள்ளாது. தொடர்ந்த்து எழுதுங்கள்.
Post a Comment