பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 4, 2012

பராசக்தி கொடுத்த கவிதா சக்தி!


பராசக்தி கொடுத்த கவிதா சக்தி!

திருவரங்கத் திருத்தலத்தில் ஸ்ரீ அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் பரிசாரகனாக வரதன் என்பவர் இருந்தார். இவர் சிறு வயதில் வேலைதேடி பல ஊர்களுக்கும் சென்றவர், இறுதியில் திருவரங்கத்து ஆலயத்தைச் சென்றடைந்தார். அங்கு அவருக்குப் பரிசாரக வேலை கிடைத்தது. கோயில் மடப்பள்ளியில் பிரசாதம் தயார் செய்யும் சமையல் தொழில் இவருக்கு. கோயில் பிரசாதத்தையே உண்டு, அங்கேயே தங்கிக்கொண்டு இவரது காலம் அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

திருவரங்கத்தையொட்டி மற்றொரு சிறப்பு மிக்க சிவாலயம் உண்டு; அதுதான் திருவானைக்கா. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரரை தரிசிக்க பெருமளவில் பக்தர்கள் வந்து குவிவார்கள். இந்த ஆலயத்தில் இறைவன் சந்நிதியில் நடனமாடி பணிபுரியும் மரபில் வந்த தேவதாசிப் பெண்கள் இங்கு இருந்தனர். அவர்களுள் மோகனாங்கி என்பவர் நல்ல அழகி, நடனத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.

இளமையும், அழகும் கொண்ட இந்த மோகனாங்கி திருவானைக்கா ஆலயத்தில் ஆடுகிறார் என்றால் மக்கள் வெள்ளம்போல் கூடி ரசிப்பர். இப்படிப்பட்ட அழகியை அடைய பல செல்வந்தர்களும் முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டம் மடப்பள்ளி பரிஜாரகராக இருந்த வரதனுக்கு அடித்தது. இருவரும் ஒருவரையொருவர் மனதார விரும்பினர். இவ்விருவர் மனமும் ஒன்றாகியது. ஆனால் இவர்கள் காதலுக்கு ஒரு தடை இருந்தது.

வரதனோ ஸ்ரீவைஷ்ணவக் கோயிலில் பரிசாரகன். மோகனாங்கியோ சிவன் கோயிலில் நாட்டியப் பணி புரியும் ஒரு பெண். இவர்கள் உறவு சைவ வைணவ பூசலில் கொண்டு போய் விட்டுவிடாதோ? ஆம், அப்படித்தான் ஆகிவிட்டது நிலைமை. இப்படி இரு தரப்பிலும் வெறுப்பு எழுந்த போதிலும், இவர்களது அமரத்தன்மை வாய்ந்த காதல் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது.

ஒரு மார்கழி மாதம்; ஜம்புகேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயிலில் பணிபுரியும் நடனமாதர்கள் பலரும் கூடி இனிமையான குரலெடுத்துச் சிலர் பாடவும், அந்த திருவெம்பாவைப் பாடலுக்குச் சிலர் அபிநயம் பிடிக்கவுமாக மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவிக்கொண்டிருந்தது. ஒரு திருவெம்பாவைப் பாடலில் "எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க" என்ற அடி வருகிறது. அதாவது "சிவபெருமானுக்குப் பணிபுரியும் மங்கையராம் எமது கொங்கைகள், சைவரல்லாத எவரோடும் உறவு கொள்ளாமல் இருக்கட்டும்" என்பது அதன் பொருள். இந்தப் பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த மோகனாங்கிக்கு இந்த வரி வரும்போது அபிநயம் பிடிக்க முடியவில்லை. எப்படி முடியும்? சிவன் சந்நிதியில் சைவனல்லாத எவரோடும் எனக்கு உறவு இல்லாமலிருக்கட்டும் என்கிற வரியை வரதன் எனும் வைணவனோடு உறவு கொண்ட இவளுக்கு எப்படி அபிநயம் செய்ய முடியும்?

மோகனாங்கி நடனத்தை நிறுத்திவிட்டு சிலைபோல நின்றாள். கூடிநிற்கும் தோழியர் கூட்டம் இவளது நிலை அறிந்து எக்காளமிட்டுச் சிரித்து கேலி செய்தனர். அவர்களது குறும்புப் பேச்சுக்கள் மோகனாங்கியைத் துன்பப் படுத்தியது. தூய சிவபக்தியில் திளைத்த அந்த உத்தமான பெண் ஒரு வேலை செய்தாள். வைணவன் வரதனோடு ஊடல் கொண்டு அவனை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தாள். இவள் வீடு தேடி வந்த வரதனுக்குக் கதவு திறக்கவில்லை. கூவினான், கெஞ்சினான், ஆடினான், பாடினான், எதுவும் பலன் அளிக்கவில்லை. மோகனாங்கியின் உறுதி தளறவில்லை.

மறுநாள் காலை வரதன் ஒரு முடிவுக்கு வந்தான். நம் இருவருக்குமிடையே சமயம் அல்லவா குறுக்கிடுகிறது. நான் சைவ சமயத்துக்கு மாறிவிட்டால்? உடனே திருவரங்க வேலையை விட்டுவிட்டு, சைவ சமயத்தைத் தழுவி, திருவானைக்கா ஆலயத்து மடப்பள்ளியில் பணியில் சேர்ந்தான். காதலுக்காக இவன் வைணவ சமயத்தை நீத்து சைவம் சார்ந்து தினம் அந்த ஆலயத்தில் பணிபுரியத் தொடங்கினான்.

உடல் முழுவதும் பன்னிரெண்டு நாமங்கள் அலங்கரிக்க வலம் வந்த வரதன் இன்று முதல் உடலெங்கும் திருநீறு பூசிய சிவனடியானாகத் திகழ்ந்தான். மோகனாங்கி மனம் மகிழ்ந்தாள். மகிழ்ச்சியோடு வரதனுடன் வாழ்க்கை நடத்தினாள். தினமும் அவள் ஆலயத்துப் பணிக்காகப் போய் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து வரும் வரை இவன் கோயில் மண்டபமொன்றில் படுத்து நன்கு கண்ணயர்ந்து தூங்குவான். அவள் பணிமுடித்து போகும்போது எழுப்பிக்கொண்டு அழைத்துச் செல்வாள். இப்படிப் போய்க்கொண்டிருந்தது அவர்களது இனிய காதல் வாழ்க்கை.

திருவானைக்காவில் ஒரு தேவி உபாசகன். சக்தி உபாசனை செய்யும் ஒரு சாக்தன். அவன் திருவானைக்காவில் கோயில் கொண்டருளும் அகிலாண்டேஸ்வரி அம்மனிடம் தனக்கு எல்லா கலைகளிலும் புலமையைத் தரவேண்டி கடுமையான தவம் புரிந்து கொண்டிருந்தான். உணவோ, நீரோ இன்றி இரவு பகல் பாராமல் சதா சர்வகாலம் அம்மை பராசக்தியை வேண்டி கடுமையான தவம் புரிந்தான். இவனுடைய கடும் தவத்தைப் பாராட்டி தேவி அகிலாண்டேஸ்வரி ஒரு சிறு பெண் உருவம் தாங்கி, நடுச்சாம வேளையில் கண்மூடி அம்பிகையின் மூலமந்திரத்தைச் ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்த சாக்த பக்தனிடம் வந்தாள். அந்தச் சிறு பெண் வாய் நிறைய தாம்பூலம் தரித்து, மென்று வாயெல்லாம் செக்கச் செவேலென்று இருக்க அந்த பக்தன் முன்பு வந்து நின்றுகொண்டு, "அன்பனே! நின் வாயைத் திற! இதனை நின் வாயில் உமிழவேண்டும். நீ நினைத்த சக்தியை அடையப் பெறுவாய்" என்றாள் அன்னை பராசக்தி.

கண்விழித்துப் பார்த்தான் அந்த சாக்தன். எதிரில் நின்ற பெண்ணின் வடிவத்தையும், அவள் வாயில் மென்று தளும்பிக்கொண்டிருக்கும் தாம்பூலத்தையும் பார்த்தான். தன்னுடைய தவத்தைக் கலைக்க வந்த யாரோ ஒரு பெண் இவள் என்று நினைத்து அவளைப் போ போ இங்கிருந்து என்று கடிந்து விரட்டி, "ஏடீ! சிறு பெண்ணே! என்னிடம் வந்து என் தவத்தைக் கலைத்து என்னைக் கெடுக்கவா நினைத்தாய்? உடனே ஓடிவிடு இங்கிருந்து. இல்லையேல் நான் என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது" என்றான்.

இவன் வேண்டித் தவம் செய்யும் அந்த ஞானத்தை இவன் பெறும் நேரம் இன்னமும் வரவில்லை என்பதை அறிந்த தேவி அங்கிருந்து திரும்பிச் சென்றாள். அப்படிச் செல்லும் வழியில் ஒரு மண்டபத்தில் ஒரு மனிதன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். நல்ல குரட்டையொலியோடு உறங்கும் அந்த மனிதனிடம் சென்று அவனைத் தட்டி எழுப்பினாள்.

அந்த மனிதன் வேறு யாருமல்ல. நமது வரதன் தான். அன்றிரவு தனக்கு குடவரிசைப் பணி உள்ளதால் இரவு வீடு திரும்ப நேரமாகும், உன் பணி நிறைவடைந்த பின் மண்டபத்தில் தூங்கிக் கொண்டிருங்கள்; நான் வரும்போது உங்களை எழுப்பி அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாள் மோகனாங்கி. அவள் விரும்பியபடியே வரதனும் மடப்பள்ளியில் சாப்பிட்டுவிட்டு மண்டபத்தில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருந்தான்.

அந்த நிலையில்தான் அம்பிகை அவனைத் தட்டி எழுப்பி "வாயைத் திற" என்றாள். எந்த மறுப்பும் இல்லாமல் அவன் தன் வாயைப் பெரிய பிலம் போல "ஆ" என்று திறக்கவும், அந்தப் பெண் தன் வாய்த் தாம்பூலச் சாற்றை அவன் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள்.

அந்தக் கணமே, வரதன் எனும் பரிஜாரகன் உள்ளத்தில் பெரும் உத்வேகம் எழுந்தது. கடல்மடை திறந்தது போல கவிமழை பொழியலானான். அவன் திறமையும், பெருமையும் ஊருக்குத் தெரிந்தது. பரிஜாரக வரதன் கவி காளமேகமானான். அன்று முதல் அவன் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி எனும் நால்வகைக் கவிகளையும் நினைத்த மாத்திரத்தில் பொழியும் வல்லமை பெற்றான், அகிலாண்டேஸ்வரியின் கருணையால். அந்தக் கவி காளமேகம் பற்றி இதர தகவல்களை தொடர்ந்து பின்னர் காண்போம்.

1 comment:

 1. ஆம், நமது திருவாளர் பாலகுமாரன் அவர்களின் கதை ஒன்றில் படித்தேன்...
  இருந்தும் தங்களின் ஆக்கத்தை மீண்டும் விரும்பியே படிக்கும் படியே
  சிறப்பாக அமைத்துள்ளது... அன்னை அவள் அருளாலே வைஷ்ணவனை சைவனாக
  மாறச் செய்திருப்பாள் போலும்...

  அகிலாண்டேஸ்வரியின் அருளால் மடப்பள்ளியில் சமைத்தவன் மகத்தானக் கவிதை சமைக்க வாய்ப்புப் பெற்றான்.

  பதிவுக்கும் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா!
  வாழ்க!வளர்க!! பாரதியின் புகழ்!!!

  ReplyDelete

You can give your comments here