பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 13

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 13

பாமினி சுல்தான்கள் தெற்கே படையெடுப்பு.

இதற்கிடையே பீஜப்பூர், கோல்கொண்டா படைகள் செஞ்சியை முற்றுகையிட்டு அதனைப் பிடித்துக் கொண்டு அந்த வெற்றியின் சூடு ஆறுவதற்கு முன்பாக தஞ்சையின் மீதும் மதுரையின் மீதும் படையெடுத்து வந்தன. இதனால் திகைத்துப்போன விஜயராகவ நாயக்கர் தனது ராஜ்யத்தின் அடர்ந்த காட்டுக்குள் சென்று தங்கிக் கொண்டு நேரடியான மோதலில் இருந்து தப்பித்துக் கொண்டார். ஆனாலும் அவருடைய ராஜ்யத்தினுள் புகுந்த சுல்தான் படைகள் நாட்டை சூரையாடத் தொடங்கியபோது, மக்கள் நாலா புறமும் அச்சத்தோடு ஓடும்போது மக்களைக் காக்கும் பொருட்டு மறைவிலிருந்து விஜயராகவர் வெளிவர வேண்டியதாகி விட்டது. மன்னர் விஜயராகவ நாயக்கருக்கு வேறு வழியில்லை, ஏராளமான சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு எதிரியிடம் சரணாகதி அடைந்து அவர்கள் கேட்ட அளவுக்குப் பொன்னும் பொருளும் அவர்களுக்குக் கொடுத்து அமைதியை விலைகொடுத்து வாங்க நேர்ந்தது. 1646இல் ஏற்பட்ட இந்த தலைக்குனிவு தஞ்சைக்கும் விஜயராகவ நாயக்கருக்கும் பெருத்த இழப்பாக ஆகிப்போனது.

விஜயநகர சாம்ராஜ்யம் வலுவிழந்து போனது, மதுரையும் மைசூரும் எதிரிகளாக ஆகிப் போனது, தஞ்சை ராஜ்யம் கோல்கொண்டா சுல்தானுக்கு அடிமைப்பட்டுப் போய் அவமானப்பட்டது ஆகிய காரணங்களால் விஜயராகவ நாயக்கர் செய்வதறியாது திகைக்கவேண்டியதாகி விட்டது. இந்த காலகட்டத்தில் மதுரையில் 1659இல் திருமலை நாயக்கர் காலமாகி முத்து வீரப்ப நாயக்கர் பதவி ஏற்றார். இவர் தன்னுடைய ராஜ்யத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாத்திட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். சுல்தான்கள் படையெடுப்புகளை எதிர்த்திட ஆயத்தங்களைச் செய்துகொண்டார். அதற்காகத் திருச்சிராப்பள்ளி கோட்டையை நன்கு வலுப்படுத்திக் கொண்டார். பீஜப்பூர் சுல்தான் கப்பம் கட்டச் சொன்னபோது அப்படிச் செய்ய மறுத்துவிட்டார் முத்து வீரப்ப நாயக்கர். ஆயினும் தஞ்சைக்கும் மதுரைக்கும் இருந்த விரோதம் மட்டும் அப்படியே இருந்து கொண்டிருந்தது.

இப்படி தெற்கே இருந்த நாயக்க மன்னர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையின்றியும், போட்டி பொறாமை கொண்டு பிரிந்து கிடந்ததைப் பார்த்த பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்கள் சசோகி என அழைக்கப்பட்ட ஷாஜி, மூலா எனப்படும் முஸ்தாஃபாகான் ஆகிய இரு படைத் தலைவர்கள் தலைமையில் தங்கள் படைகளைத் தெற்கே அனுப்பி வைத்தனர். திருச்சிக்கு வந்த சுல்தான் படைகள் திருச்சி கோட்டை வலுவாகப் பாதுகாக்கப்பட்டு வருவதையும் அதனை வெல்வது அத்தனை சுலபமல்ல என்பதைப் புரிந்துகொண்டு அங்கு காத்திருந்து பயனில்லை என்று கிழக்கே திரும்பி தஞ்சையின் மீது படையெடுத்து வந்து தாக்கினார்கள்.

இப்படித் திடுதிப்பென்று சுல்தான் படைகள் தஞ்சை மீது படையெடுத்து வரும் என்பதை எதிர்பார்க்காத விஜயராகவ நாயக்கர் போரைத் தவிர்க்கும் பொருட்டு தன் மருமகனிடம் தஞ்சை கோட்டையை ஒப்புவித்துவிட்டு வல்லத்துக்குச் சென்று மறைந்து கொண்டுவிட்டார். இந்த நிகழ்ச்சி நடந்த காலம் 1659 மார்ச் மாதம் 19ஆம் தேதி. தஞ்சை கோட்டை முற்றுகைக்கு ஆளான விவரம் குறித்து சில சரித்திர ஆசிரியர்கள் கூறும் செய்திகள் மனதுக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கும் விதமாக இருக்கின்றன. 

தஞ்சாவூர் கோட்டை பல ஆண்டுகளாக மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. எதிரிகளின் படையெடுப்பையும் முற்றுகையையும் பல மாதங்கள் சமாளிக்கக்கூடிய வகையிலும், எதிரிகளால் சுலபமாக வெல்ல முடியாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு கோட்டைக் காவலுக்கு என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படை வீரர்கள் பலகாலம் பயிற்சி அளிக்கப்பட்டு எந்த சூழ்நிலையையும் எதிர்த்துப் போரிடும் வல்லமை பெற்றவர்களாகவும், மன உறுதி உள்ளவர்களாகவும் இருந்தனர். முற்றுகை இட்டிருக்கிற சுல்தான் படைகளிடம் ஒரு பீரங்கிகூட கிடையாது. அப்படியிருக்கும்போது இந்த முற்றுகையை பலம் பொருந்திய தஞ்சைப் படை மிக எளிதாக முறியடித்திருக்க முடியும். ஆனால்.... என்ன நடந்தது? 

கோட்டை முற்றுகையிட்டிருந்த சமயம் விஜயராகவ நாயக்கரின் மருமகன் அந்த கோட்டையின் தளபதி வீரமாக கோட்டையின் மீதேறி சுற்றிலும் நிற்கும் எதிரிகள் கூட்டத்தை ஒருமுறை பார்த்தார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு அம்பு அவர் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது. உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை, எனினும் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. அந்த அம்பைப் பிடுங்கி எறிந்துவிட்டுத் தன் படைகளுக்கு எதிரிகளைத் தாக்க உத்தரவு இடுவதற்கு பதிலாகத் தன்மீது அம்பு பாய்ந்தவுடன் அவரிடம் இருந்த வீரமெல்லாம் ஓடிப்போன நிலையில் அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்.

அங்கு போரிட கூடியிருந்த வீராதி வீரர்களும் சிற்றரசர்களும் இவரது செய்கையைக் கண்டு அவமானப் பட்டனர். கோட்டை காவலுக்கு இருந்த வீராதி வீரர்கள் அனைவருமே உள்ளூர் வாசிகள்; போரைக் கண்டு அஞ்சக்கூடியவர்கள் அல்ல; உயிரை திரணமாக மதித்து எப்பேற்பட்ட யுத்தத்திலும் வெற்றி கொள்ளும் உள்ளத் திண்மையுடையவர்கள். அவர்களுக்குக் கத்தி, கேடயம், வேல், அம்பு இவைகளைக் கையாளும் திறமை மிக்கவர்கள். அப்போதுதான் அறிமுகமாயிருந்த துப்பாக்கியையும் சுடத் தெரிந்தவர்கள். இப்படியிருக்கும்போது போரில் தலைமை தாங்கி நடத்துவோர் ஓடிப்போன பின்பு படைவீரர்கள் என்ன செய்வார்கள் பாவம். கோட்டை எதிரிகளின் வசம் வீழ்ந்தது. மிகச் சுலபமாக சுல்தான் படைகள் தஞ்சை கோட்டையைப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் பரிதாபம், தஞ்சைப் படையின் வீரமிக்க ஏராளமான உண்மையான வீரர்கள் செத்து வீழ்ந்தார்கள். சுல்தான்களின் படைகளுக்குத் தலைமை தாங்கி வந்த இரு தளபதிகளும் இந்த சுலபமான வெற்றியைக் கண்டு உத்சாகம் அடைந்தார்கள். இதோடு விட்டுவிடக் கூடாது என்று தஞ்சையிலிருந்து கிழக்கே சில கல் தூரத்திலிருந்த மன்னார்கோயில் (மன்னார்குடி) கோட்டையைத் தாக்கி அதனையும் பிடித்துக் கொண்டார்கள். இந்த வெற்றியால் மேலும் மனமகிழ்ச்சியடைந்த சுல்தான்கள் படைவீரர்கள் தஞ்சைக்கு தென்கிழக்கே இருந்த வல்லம் கோட்டையைச் சென்றடைந்து முற்றுகை இட்டார்கள். 

வல்லம் கோட்டை

இந்த வல்லம் கோட்டை சற்று மேட்டுப் பாங்கான பகுதியில் அமைந்திருந்தது. சிறிய குன்றுபோல காட்சியளித்த அந்த மேட்டின் மீது இருந்த கோட்டை பலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. அங்குதான் தஞ்சாவூர் ராஜா விஜயராகவ நாயக்கர் ஏராளமான செல்வங்களுடன் தனது மனைவிமார் குடும்பத்தார் சகிதம் வல்லம் அரண்மனையில் வந்து தங்கியிருக்கிறார் என்ற செய்தி சுல்தான் படைகளுக்குக் கிடைத்தது. இந்த கோட்டை அமைந்திருந்த இடம், அதனைச் சுற்றியிருந்த புலிவார்டு (அலங்கம்) பகுதிகள் இவை அத்தனை சுலபத்தில் பிடித்துவிடக் கூடியதாக இருக்கவில்லை. இதனை சுல்தான் படைகளும் நன்கு அறிந்திருந்தன. 

வல்லம் கோட்டையினுள் தங்கியிருந்த விஜயராகவ நாயக்கருக்கு வேறு வழியில்லை. எப்படியாவது இந்த கோட்டையைக் காப்பாற்றினால்தான் தன்னுடைய ராஜ்யமும், ஏராளமான செல்வமும், தனது பெண்டு பிள்ளைகளும் தப்பிக்க முடியும் என்பதால் வீரத்தோடு கோட்டையைக் காக்க போருக்குத் தயாரானார். ஆனால் போர் நெருங்கி வரும் நேரம் அவருடைய எண்ணம் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கவும், ஏராளமான பொன் பொருள் ஆகியவற்றைக் காக்கவும் விரும்பினார். தன்னை நம்பியிருந்த குடும்பத்துப் பெண்களும், உறவினரும், வல்லம் மக்களும் இந்தப் போரினால் அதிகமாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு வல்லத்தை விட்டு வெளியேறி அருகிலிருந்த காட்டுக்குள் சென்று விட்டார். (அந்த பகுதியைத் தாளவராயன் என்கின்றனர், அது எங்கு இருக்கிறது அதன் இப்போதைய பெயர் என்ன என்பது தெரியவில்லை). 

கோட்டையைக் காவல் காத்த வீரர்கள் தங்கள் தலைவர் கோட்டையைவிட்டுச் சென்றுவிட்ட பின் எப்படி போராடுவது என்று தயங்கியிருந்த நேரத்தில் சுல்தான் படைகள் அவர்களை வீழ்த்திவிட்டுக் கோட்டையையும் பிடித்துக் கொண்டனர். மீதமிருந்த வீரர்கள் மெல்ல மெல்ல தங்கள் இடத்திலிருந்து ஓசையின்றி விலகிச் சென்றுவிட்டனர். அணுவளவு எதிர்ப்புமின்றி வல்லம் கோட்டை சுல்தான் படைகள் வசம் வந்துவிட்டது. இதனால் தஞ்சைப் படைகளுக்கு தீராத அவமானமும் தோல்வியும் கிடைத்து விட்டது. கோட்டைக்குள் புகுந்த சுல்தான் படைத் தலைவர்களுக்கு தங்களை எதிர்க்க அங்கு எவரும் இல்லை என்பது தெரிய வந்தது. கோட்டையிலிருந்து வீரர்கள் தப்பி ஓடி விட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து மக்கள் ஓடிவந்து பொக்கிஷ அறையைத் திறந்து அதிலிருந்த தங்கம், முத்து, நவரத்தின கற்கள் பதித்த நகைகள் இவைகளை தூக்க முடிந்த அளவுக்குத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டனர். 

இப்படி வல்லம் கோட்டையிலிருந்து அளவற்ற செல்வத்தோடு அக்கம்பக்கத்து கிராம மக்கள் காட்டினுள் சென்று பதுங்கிக் கொண்ட செய்தியறிந்து சுல்தான் படைகளுக்குப் பெருத்த ஏமாற்றம். வல்லம் மக்கள் அரசாங்கத்தின் ஏராளமான சொத்துக்களை அந்நியர் கொள்ளை கொண்டு போய்விடாமல், அவற்றை எதிர்களின் கையில் சிக்காமல் மீட்டு விட்டனர்; செல்வத்தை மட்டுமல்ல, தஞ்சாவூரின் மானத்தையும் கூட.

சுல்தான் படைகள் கோட்டைக்கு வரும்போது அவர்களுக்கு வெறும் கோட்டை மட்டும்தான் இருந்தது. குவித்து வைக்கப்பட்ட செல்வம் அக்கம் பக்கத்து கிராம மக்களிடம் கிடைத்துவிடவே, அவர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நலமாக வாழ வழிவகுத்துவிட்டது. கோட்டையில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தபின் சுல்தான் தளபதிகள் ஒரு சிறு படையை மட்டும் அங்கு விட்டு வைத்தார்கள். வல்லம் வெற்றியை அடுத்து, இந்த படையெடுப்பால் பெரிய அளவில் செல்வம் எதுவும் கிடைக்காத நிலையில் சுல்தான் படைத்தளபதிகள் அங்கு தங்கினர்.

போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டதும், அவர்கள் உடல்கள் முறையாக அடக்கம் செய்யாததாலும், மழையின்றி வறட்சி, பஞ்சம் ஏற்பட்டதாலும் அந்தப் பகுதிகளில் தொற்று நோய்கள் பரவின. மழை பெய்யாமல் விவசாயம் நடக்காததால் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. இனியும் இங்கு இருந்தால் நோயால் மடிய நேரிடும் அல்லது பசி பட்டினியால் இறக்க நேரிடும் என்று முடிவு செய்தனர் சுல்தான் படையினர். சில நாட்களுக்குப் பின் சுல்தான் படை தஞ்சை ராஜ்யத்தை விட்டு மீண்டும் திரும்பிவிட ஏற்பாடுகள் செய்து கொண்டார்கள். காட்டில் மறைந்திருந்த விஜயராகவ நாயக்கருக்கு செய்தியொன்றை அனுப்பினார்கள். தாங்கள் தொடர்ந்து தஞ்சையில் இருக்க விரும்பவில்லை, தங்கள் நாட்டுக்குத் திரும்புவதாகவும், தங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான கப்பத் தொகையை மட்டும் கொடுத்தால் வாங்கிக் கொண்டு போய்விடுவதாகவும் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால் அனைத்தையும் இழந்து காட்டில் இருக்கும் தம்மிடம் எதுவும் இல்லை என்று சொல்லிவிட, சுல்தான் படைகள் இனியும் இந்த ராஜ்யத்தில் இருந்தால் பஞ்சத்திலும், தொற்று நோய்களாலும் உயிருக்கு ஆபத்து என்று பயந்துகொண்டு கிளம்பிவிட்டார்கள். போகும் வழியில் திருச்சி கோட்டையிலும் தங்கள் வேலையைக் காட்ட அங்கும் வீரர்கள் கடுமையாக எதிர்க்கவே, போதும் இந்த வம்பு என்று ஊர் போய்ச்சேர்ந்தார்கள். விஜயராகவ நாயக்கரும் காட்டைவிட்டு வெளிவந்து வெறுமையாகிப் போன தஞ்சாவூரை மீண்டும் அடைந்து ஆட்சியைத் தொடர்ந்தார். 

தஞ்சைக்கு மீண்டும் வந்து அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டு விஜயராகவருக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆபத்து காலத்தில் தங்களை விட்டுவிட்டுத் தன்னைக் காத்துக் கொள்ள காட்டுக்குள் சென்று விட்ட ராஜாவை இன்னமும் நம்ப அவர்கள் தயாராக இல்லை. படை வீரர்களும் சோர்ந்து போனார்கள். வீரத்தோடு தலைமை தாங்கி போரை நடத்த வேண்டிய தலைவர்கள் ஓடிப்போன பின்னர் தங்கள் வீரம் மட்டும் என்ன சாதித்துவிட முடியும், இவர்களால் தங்களுக்கும் தலைக்குனிவு என்று அவர்களுக்கும் உத்சாகம் குறைந்து போனது.

இத்தனைக்கும் மத்தியில் இறை நம்பிக்கையும், கடவுள் காப்பாற்றுவார் என்கிற மன உறுதியும் விஜயராகவருக்குச் சற்று மன ஆறுதலைக் கொடுத்தது. மன்னரின் இந்த பரிதாபகரமான நிலைமையை உணர்ந்த வல்லம் கிராமத்து மக்கள் தாங்கள் வல்லம் கோட்டையிலிருந்து எடுத்துச் சென்ற செல்வத்தில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொண்டு வந்து கொடுத்து, மீண்டும் ராஜ்யத்தை சரிவர பரிபாலனம் செய்து வருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சூழ்நிலையில் மன்னர் விஜயராகவ நாயக்கர் மீண்டும் தஞ்சையை ஆட்சி புரியலானார்.

No comments: