பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 10, 2021

பரண் ஏணிகள்! (சிறுகதை)

 

                                                                        

தலைநகரம் டெல்லியில் ராம்லீலா மைதானம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து மைதானம் நிறைந்து கூடியிருந்தார்கள். அவர்களில் பலரும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வந்தவர்களாகத் தெரிந்தார்கள்.

பலர் கட்டுச்சொறு கட்டிக் கொண்டு வந்து மைதானத்தின் ஓரத்தில் மரத்தடியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த மேடையில் ஒல்லியான உருவமும், தலையில் காந்திக் குல்லாயும் அணிந்த ஒரு மனிதர் பேசிக் கொண்டிருந்தார். அவர் இந்தியிலோ அல்லது மராத்தி மொழியிலோ பேசியிருக்க வேண்டும், அவ்விரண்டு மொழியும் தெரியாத எனக்கு அவர் பேசுவது என்ன என்பது புரியவில்லை. என்றாலும் அவ்வப்போது மக்கள் ஆரவாரம் செய்தும் கைதட்டியும் வந்ததைப் பார்த்தால் அவர் ஒரு வெகுஜனத் தலைவராக இருக்க வேண்டும். அங்கு கட்டப்பட்டிருந்த பற்பல விளம்பரப் பலகைகளிலும் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்ததால் அவைகளில் என்ன எழுதியிருக்கிறது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

            நான் பயணம் செய்த காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கு கூட்டத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஒருவரிடம் போய் ஆங்கிலத்தில் அங்கு என்ன நடக்கிறது, அதில்  பேசுபவர் யார், அங்கு நடப்பது என்ன கூட்டம் என்று விசாரித்தபோதுதான், அது ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம் என்றும், நாட்டில் நடக்கும் ஊழல்களையும், கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும் கள்ள மார்க்கெட், மதுவினால் மக்கள் படும் துயரம் இவற்றைக் களைய வேண்டுமென்ற கோரிக்கைகளோடு அந்த கூட்டம் நடைபெறுவதாகவும் அவர் சொன்னார்.

அங்கு எதற்குக் கூட்டம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, அங்கு பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு இந்தி படிக்கும் வாய்ப்பு பள்ளிக்கூடங்களில் மறுக்கப்பட்டதால் என்னால் அங்கு நடப்பதை அறிந்து கொள்ள இயலவில்லை. இப்படி ஒரு நாள் வட இந்தியாவுக்கு வந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தால், தனிநபர்களிடமாவது அல்லது இந்தி பிரச்சார சபா மூலமாவது நான் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்று இப்போதுதான் என் மனதில் உயதயமானது. என்ன செய்வது காலம் கடந்து விட்டது.

            நான் பேச்சுக் கொடுத்த மனிதர் டெல்லிக்காரர் போல தோன்றவில்லை. அவருடைய உடை, தலையில் அணிந்த தலைப்பாகை இவற்றிலிருந்து அவர் ஒரு மராத்திய மாநிலத்தவராக இருக்க வேண்டுமென்று நினைத்து அவரை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டேன்.

            அவர் சொன்னார் தான் மராத்திய மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்தவர் என்றும், அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட ராலேகான் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூக போராளிதான் அங்கு பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

            இவர் மராத்தியத்திலிருந்து இங்கு வந்து போராட என்ன காரணம், அவரது பின்னணி என்ன என்பதை விசாரித்தேன். அந்த மனிதர் சற்று பொறுமையாக எனக்கு அவரைப் பற்றியும், அவர் கடந்து வந்த பாதைகள், அவரால் அகமதுநகர் மாவட்டத்திலுள்ள அவர் கிராமம் எப்படி முன்னேறி தற்சார்புடையதாக ஆயிற்று என்பதையெல்லாம் பற்றி விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

            அப்போது ஒரு சாய்வாலா  டீ விற்றுக் கொண்டு வந்தார். அவரிடம் டீ வாங்கி இருவரும் அருந்திக் கொண்டே, அவர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கூட்டம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது, அவ்வப்போது கைதட்டலும் கோஷமிடலும் கேட்டுக் கொண்டிருந்தது.

            அவர் சொன்ன வரலாறு இது.

“இதோ பேசிக் கொண்டிருக்கிறாரே, இவர்  மராத்திய மாநிலத்தில், அகமதுநகர் மாவட்டம் ராலேகானைச் சேர்ந்தவர். அந்த கிராமம் மிகச் சிறிய கிராமம். அங்கு சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தனர். அங்கு மழைக்காலத்தில் மட்டும் மழைத் தண்ணீரைப் பயன்படுத்திச் சில புஞ்சைப் பயிர்களைப் பயிரிட்டு, மற்ற காலங்களில் வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு வறுமையில் காலம் கழித்து வந்தனர் மக்கள். அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தையும், கல்வி அறிவு அதிகமில்லாத சூழ்நிலையையும் பயன்படுத்தி அங்கு சில கள்ளச் சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்சும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வூர் மக்களும் பெரும்பாலும் அவர்கள் காய்ச்சும் கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தார்கள். திருட்டும் வழிப்பறியும் அந்தப் பகுதியில் அதிகமாக இருந்து வந்தது.

            அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளி மட்டுமே இருந்தது. அதில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அந்த ஊருக்கு எந்த ஆசிரியரும் வரத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ராலேகான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தற்செயலாக அகமதுநகர் சென்றிருந்த போது, அங்கே ராணுவத்துக்கு ஆள் எடுப்பதாக அறிந்து அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு இவர் உடல் தகுதியில் சற்று முன் பின்னாக இருந்த போதும் எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

            இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இவர் பயணம் செய்த லாரியில் பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் குண்டு வீசிப் பலரைக் கொன்றதை இவர் கண் முன்னால் பார்த்தவர். அதில் தப்பிப் பிழைத்த இவர் பணியிலிருந்து விடுபட்டுத் தன் கிராமத்துக்குத் திரும்பினார். அங்கு கிராமத்தில் இருந்த குடும்பங்களில் எவரும் வசதியுள்ளவர்களாகவோ, நன்கு படித்தவர்களாகவோ இல்லை என்பதால் கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதென்று முடிவெடுத்து அங்கிருந்த பல இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கினார். அதை அவர்கள் மொழியில் சொல்வதானால் “தருண் மண்டல்” ஆங்கிலத்தில் “யூத் கிளப்” என்ற பெயரோடு அது தொடங்கியது.

            அந்த இளைஞர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முதலில் ஒழிக்க அரும்பாடுபட்டு அரசாங்க அதிகாரிகளையெல்லாம் சென்று பார்த்து முறையிட்டு ஒருவழியாகச் சாராய தொழிலை ஒழித்தனர். தங்கள் ஊருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி வேண்டுமென்று பல காலம் மாவட்டத் தலைநகரத்துக்கும், மாநிலை தலைநகரான பம்பாய்க்கும் அலையாய் அலைந்தார்கள். கையில் காசில்லாமல், இருந்த காசில் ரயிலில் பயணம் செய்து, ரயில் நிலையங்களில் செய்தித் தாள்களை விரித்து அதில் படுத்திருந்து மேலதிகாரிகளைச் சந்தித்துத் தங்கள் கிராமத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டுகோள் விடுத்துப் பார்த்தனர். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.

            கடைசியில் கிராமத்து இளைஞர்கள் அனைவரும் தத்தமது குடும்பத்தோடு மாவட்டத் தலநகருக்குச் சென்று மாவட்ட உயரதிகாரிகளை முற்றுகை இட்டனர். ஒரு கிராமமே படையெடுத்து வந்து சூழ்ந்து கொண்ட பிறகுதான் அரசாங்க அதிகாரிகள் விழித்துக் கொண்டு, இவர்களது குறைகளைக் காதுகொடுத்துக் கேட்டனர்.

            இவர்கள் கேட்டதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயங்கள் அல்ல. படிப்பதற்கு நல்ல பள்ளிக்கூடம், உடல் நலத்தைப் பேண ஒரு மருத்துவ மனை இவகளோடு, மழைக் காலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க நீர்நிலைகள், விவசாயத்துக்கான உதவிகள் அவ்வளவே. எந்தவித நவீன வசதிகளுக் இல்லாத, அந்த கிராமத்துக்கு எவரும் ஆசிரியராக வர விருப்பப் படவில்லை என்பதைக் காரணமாகச் சொன்னார்கள். அதன் பிறகு கிராம மக்களே ஒன்று சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் கிராமத்தில் பணியாற்ற படித்த இளைஞர்கள் வந்தால், அவர்களுக்குத் தங்க இடமும், உணவுக்கு வசதிகளும் செய்து தருவதாகச் சொன்னதும் ஒருசிலர் வந்தனர். பள்ளிக்கூடம் நன்கு நடைபெறத் தொடங்கியது.

            எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் கிராமத்து மக்களே ஒருங்கிணைந்து அங்கிருந்த ஒரு பெரிய குளத்தைத் தூர் வாரி, மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கும்படி கரைகள் அமைத்து, பாசனத்துக்கு ஒரு வாய்க்காலையும் உருவாக்கி ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும்படி இவர்களே ஏற்பாடு செய்து கொண்டனர்.

            இப்படியொரு புரட்சி இந்த கிராமத்தில் நடைபெற்று வருவது செய்திகளில் பார்த்து பலரும் இவர்களுக்கு உதவி புரிய முன்வந்தனர்.  முழுமையான உயர்நிலைப் பள்ளியும் உருவாயிற்று. அதில் பணியாற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுக்கும் உதவாத கிராமமாகக் கிடந்த இடத்தை இப்போது எல்லோரும் திரும்பிப் பார்க்க வைத்த அந்த இளைஞர் மீது மக்களின் கவனம் சென்றது.

            அந்த கிராமத்தில் ஒரு பழைய கோயில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. கிராமத்து மக்கள் வழிபடவும், பொதுக்காரியங்களை விவாதிக்க ஒரு பொதுவிடமும் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் கோயிலைப் புனருத்தாரணம் செய்தனர். கிராம சங்கத்துக்கான ஒரு கட்டடமும் கட்டி பயன்பாட்டுக்கு வந்தது. சுதந்திரம் அடைந்த பின் நாடு அடைந்து வரும் முன்னேற்றத்துக்கும் அதன் வேகத்துக்கும் தக்கபடி இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு இந்த ராலேகான் கிராமமும் முன்னேறத் தொடங்கியது. மின்சாரமும், குடிநீர் மேல்தொட்டி கட்டி தண்ணீர் விநியோகமும் தொடங்கியது. காய்கறிகள் பயிரிட்டு அவற்றை வெளியிடங்களுக்குக் கொண்டு சென்று விற்றதில் நல்ல லாபம் பெறத் தொடங்கினர்.

            அப்படி ஒரு கிராமத்தை அடிமட்டத்திலிருந்து மேலே கொண்டு வந்து அனைவரும் ஆர்வத்தோடு பார்க்க வைத்த அந்த இளைஞன், ராணுவத்தில் பணியாற்றியிருந்த போதும், பார்ப்பதற்கு அப்படியொன்றும் வாட்ட சாட்டமான ஆள் இல்லை. சுமாரான உடலமைப்பு, மெல்லிய குரல் இவற்றோடு மனதில் மட்டும் இரும்பு போன்ற உறுதியைக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

            அவர்தான் இதோ இந்த ராம்லீலா மைதானத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் கிராமத்தை எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்தாரோ, எப்படி அரசாங்க அதிகாரிகளை திரும்பிப் பார்க்க வைத்தாரோ, எப்படி மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை விதைத்தாரோ, அதைப் போல இந்த நாடு முழுவதிலும் பரவிக்கிடக்கும் ஊழலை, லஞ்சத்தை ஒழித்து இங்கு ஒரு ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.

            “அது சரி! இவர் வந்து இங்கே டெல்லியில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாரே, இவருக்கு இங்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்ன?” என்றேன்.

            “அப்படிச் சொல்ல முடியாது. அவர் பெயர் வேண்டுமானால் இங்கு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அவர் செய்ய விரும்புகின்ற மாற்றங்கள் நியாயமானவை, ஊழல் நிறைந்த நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டுமென்கிற ஆர்வம், ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமுதாயம், இளைஞர்களுக்குத் தகுந்த வேலை வாய்ப்புகள் இவைகள் எல்லாம்தான் இவருடைய கோரிக்கை. இவைதான் மக்களை இவர் பக்கம் ஈர்க்கிறது என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

            “அவருடன் ஒரு இளைஞர் இருக்கிறாரே, அவர் யார்? அவருக்கும் இவரைப் போல நாட்டின் மீது அக்கறை இருப்பதால் தான் இங்கும் வந்து கலந்து கொண்டிருக்கிறாரா?” என்றேன்.

            “இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. பெரியவருடைய பணிகளையும், கடந்த கால சாதனைகளையும் அறிந்தவர்கள், இவர் சமூகத்தை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார், இவருடைய மாநிலத்தில் இவர் சாதித்தவைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் இவருக்காக இங்கே வந்திருக்கிறார்கள். இவருடன் இருப்பவர்கள் பற்றியெல்லாம் மக்களுக்கு அப்படியொரு எண்ணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெரியவருடைய நிழலில் தாங்களும் வளர நினைப்பவர்கள் இவர்கள். ஆகையால் இங்கு உரையாற்றும் அனைவருமே ஊழலுக்கு எதிரானவர்கள் என்றோ, ஒரு ஒளிமயமான வருங்காலத்தை விரும்புபவர்கள் என்றோ, அல்லது இவர்கள் அனைவருமே நேர்மையானவர்கள் என்றோ சொல்ல முடியாது” என்றார் அவர்.

            “அப்படியானால், இன்றைய நிலைமையில் பெரியவர் ஒரு கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சி புரிந்தால், அவர் விரும்புகின்ற மாற்றங்களையும், ஊழல் இல்லாத ஆட்சியையும் கொடுக்க முடியுமல்லவா? செய்வாரா?” என்றேன்.

            “என்னங்க இது! உலகம் புரியாத ஆளா இருக்கீங்களே! ஊருக்கு வெளிச்சம் போட்டு வேடமிடும் வேடதாரிகள்தான் பதவிகளைப் பெற முடியும். அப்படிப் பெற்ற பதவிகள் உங்களுக்கும் எனக்கும் சேவை செய்வதற்காக அல்ல, தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் வாழவைக்கத்தான். அதுதான் இன்றைய அரசியல் நிலைமை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.”

            “அப்படியென்றால், இந்தப் பெரியவர் இதனால் தனக்கு எந்தவித பயனும் இல்லை, எதிர்காலம் இல்லை, பதவிகள் இல்லை, எந்த ஆதாயமும் இல்லை என்பது தெரிந்தும் ஏன் இப்படி தன்னை வருத்திக் கொள்ள வேண்டும்?” என்றேன்.

            “நீங்கள் சொல்வது மிகவும் சரி. பிழைக்கத் தெரியாத மனிதன். தான் நேர்மையாக வாழ்ந்து, தனக்கென்று ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு, அதைத் தன் சொந்த ஊரில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியதுடன், இந்த நாட்டையே அதுபோல மாற்றிவிட முடியும் என்று நம்பிச் செயல்படும் இவரை புத்திசாலியாக - அல்ல அல்ல, இன்றைய அரசியலுக்கு ஏற்றவராகக் கருத முடியாது” என்றார் அவர்.

            “அப்படியானால், அவருடைய நிழலில் குளிர்காய வந்து அமர்ந்திருக்கும் இதரத் தலைவர்கள் நிலைமை என்ன? அவர்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்றேன்.

            “இவரைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் சாமர்த்தியத்தால் ஏதேனும் பதவிகளையோ, பலன்களையோ பெற்று சுகபோக வாழ்வுக்கு வழிவகுத்துக் கொள்வார்கள்” என்றார்.

            “அப்படியானால் இவர் நிலைமை?”

            “அவர் ஏமாளியாக இருந்து, அடுத்தவர்களை மேலே ஏற்றிவிடும் ஏணியாக இருந்து கொண்டிருக்கிறார் என்பதை இவர் உணராமல் போனால் என்ன செய்ய முடியும்? இவர் தலைவிதி அவ்வளவுதான். இவர் தோளின் மீது பயணம் செய்து மற்றவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கப் போகிறார்கள், இவர் பாவம், இருக்குமிடம் தெரியாமல் எங்கோ போய் மறைந்து கொள்வார், அதுதான் நடக்கப் போகிறது” என்று சொல்லிவிட்டுப் போனார் அந்த உள்ளூர்க்காரர்.

            எனக்கு தமிழ் நடிகர் பி.யு.சின்னப்பா பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அது “உலகோரை மேலேற்றும் அருள்ஞானி நான், தான் ஓர் முழம் ஏற முடியாத பரண் ஏணி நான்” எனும் ‘கிருஷ்ண பக்தி” படப்பாடல்.

            ஆம்! அவர் சொன்னது முற்றிலும் உண்மை. இந்த கதாநாயகன் வேறு யாரும் அல்ல! சாட்சாத் அண்ணா ஹசாரே எனும் போராளியே அவர்.

ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,                                                  28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை,                                                         தஞ்சாவூர் 613007. # 9487851885

Friday, December 25, 2020

தில்லையாடி வள்ளியம்மை (courtesy Malaichamy)

 

Malaichamy Chinna C

காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டிய தில்லையாடி வள்ளியம்மை!
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் உள்ள தில்லையாடியை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் முனுசாமி மங்கலம் தம்பதியினர். இவர்களுக்கு 1898 ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பார்க்கில் பிறந்தவர் வள்ளியம்மை.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களை வைத்து வேலை வாங்க முடியாத அங்குள்ள தோட்ட முதலாளிகள். பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் அப்பாவி கூலித்தொழிலாளர்கயை ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து சென்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்தே அதிகம் பேர் அடிமைகளாக சென்றனர். இங்கிருந்து சென்றவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் கிறிஸ்தவ சட்டப்படியும், திருமண பதிவாளர் சட்டப்படியும், நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என்றும் அப்படி நடக்காத திருமணங்கள் செல்லாது என்றும் அங்கு குடியேறிய இந்திய கூலிகளுக்கு எதிராக 1913 இல் ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதோடு கடுமையான வரி உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கு எதிராகவே அமைந்தது. திருமணமான இந்திய பெண்களின் சட்டப்பூர்வமான மனைவிகளின் தகுதி கேள்விகுறியாகியது. இந்த கொடுமையான சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் அங்கு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை கேள்விப்பட்ட காந்திஜியும் இந்தியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டத்திற்கு தலைமை ஏற்றுநடத்தினார். அந்த போராட்டங்களின் சொற்பொழிவு வள்ளியம்மையை ஈர்த்தது. அந்த போராட்டத்தின்போது பிரிட்டிஷார் காந்தியாரின் மீது துப்பாக்கியை நீட்டி முதலில் என்னை சுடு பிறகு அவரை சுடலாம் என துணிவோடு முன்னால் வந்து நின்றவர் வள்ளியம்மை.
‘‘பாவம்.... இந்தக் குழந்தை! இது, எதற்காகச் சிறைக்கு வரவேண்டும்’’ என்று சிறை அதிகாரி ஒருவர் சொன்னபோது... அதற்கு அந்தப் பெண், ‘‘நான் குழந்தையும் அல்ல... பாவமும் அல்ல’’ என்று சீறினார். அவர் வேறு யாருமல்ல... விடுதலைக்காக உழைத்த வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை.
பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, பார் போற்றும் மகாத்மா காந்தியாக மாற்றியது அந்த நொடிதான்!. இதுகுறித்து காந்தியடிகளே, ‘‘பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றிகண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்’’ என்று பெருமைபொங்கச் சொன்னார்.
‘‘நான் படிக்கிறேன்!’’
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த சமயம்... இந்தியாவிலிருந்து சென்று அங்கு வசித்தவர்களுக்கு எதிராகச் சில சட்டங்கள் இயற்றப்படுகிறது. அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள், இங்கிருந்து சென்றவர்கள். எதிர்த்து நின்ற இந்தியர்களுக்கு ஆதரவாய்க் குரல்கொடுத்துக் களத்தில் இறங்குகிறார் காந்தி. அவருக்குப் பின்னால், பெண்கள், குழந்தைகள் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் நிற்கின்றனர். தனக்கு முன் கூடியிருந்த அந்த மக்களிடம் ஓர் உறுதிமொழித் தாளை எடுக்கிறார், காந்தி. அதை, தான் படிப்பதற்கு முன்பு... அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, ‘‘இந்த உறுதிமொழித் தாளை யார் படிக்கிறீர்கள்’’ என்கிறார். ‘‘நான் படிக்கிறேன்’’ என்று ஓடி வருகிறார் சிறுமியான வள்ளியம்மை. அப்போது அவருக்கு வயது 15. ‘‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’’ என்ற வள்ளியம்மையின் முழக்கத்துடன் அந்தப் பயணம் புறப்படுகிறது. பயணத்தின்போது காந்தியைச் சுட்டுத்தள்ளத் திட்டமிட்ட தென்னாப்பிரிக்கப் போலீஸ், அதற்காகக் காத்திருக்கிறது. அதைக் கவனித்துவிட்ட வள்ளியம்மை, திடீரென காந்திக்கு முன் வந்து... ‘‘இப்போது அவரைச் சுடு பார்க்கலாம்’’ என்று சொல்லி அவரைக் காக்கிறார். அத்துடன், அங்கிருந்த மக்களையும் கவனித்துக்கொள்கிறார். ‘‘வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு என்னைச் சுடவந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிச் சென்றான்’’ என்று காந்தியே குறிப்பிடுகிறார்.
‘‘இதுதான் இந்தியாவின் கொடி!’’
நடைப்பயணத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். அதற்காக, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வள்ளியம்மையும் கைதுசெய்யப்பட்டு அவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. கைதான அனைவரும் ‘இந்தியர்கள்’ என்று பதிவு செய்வதைப் பார்த்த சிறை அதிகாரிகள், ‘‘ஆப்பிரிக்கர்கள் என்று பதிவுசெய்ய வேண்டியதுதானே’’ என்று நக்கலாய்க் கேள்வி கேட்கிறார்கள். வள்ளியம்மையிடம் ஓர் அதிகாரி, ‘‘இந்தியா என்ற ஒரு நாடே இல்லையே, உங்களுக்கு ஒரு கொடியும் கிடையாதே’’ என்று கேட்கிறார். உடனே வள்ளியம்மை, தான் அப்போது உடுத்தியிருந்த துணியின் ஓரத்தைக் கிழித்து, ‘‘இதுதான் இந்தியாவின் கொடி. இனி இதற்கு ஒரு நாடும் உண்டுதானே’’ என்று பதிலளிக்கிறார். முடிவில், வழக்குப் பதிவுக்குப் பிறகு அனைவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
வள்ளியம்மையும் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, சரியான சிகிச்சையும், நிம்மதியான தூக்கமும் இல்லாமல் அவதிப்படுகிறார். ‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டுச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்கிறார் சிறை அதிகாரி. அதற்கு வள்ளியம்மை, ‘‘அது சத்தியாக்கிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேயேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்கிறார்.
‘‘தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன்!’’
ஒருகட்டத்தில், காந்திக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக உடன்பாட்டின்படி போராளிகள் விடுவிக்கப்பட்டார்கள். வள்ளியம்மையும் விடுதலை கிடைத்து வீட்டுக்கு வருகிறார், ஒரு போர்வை சுற்றப்பட்ட உடம்புடன். வீட்டுக்கு வந்தும் எழமுடியாமல் படுக்கையிலேயே இருக்கிறார். அவரை நேரில் பார்த்து விசாரிக்கிறார் காந்தி. ‘‘சிறைதானே உன் உடம்பை இப்படியாக்கிவிட்டது. சிறை சென்றதற்காக நீ வருத்தப்படுகிறாயா’’ என்கிறார். அதற்கு வள்ளியம்மை, ‘‘எனக்கு வருத்தமா... நிச்சயமாக இல்லை. இப்போது இன்னொரு தடவை கைதுசெய்யப்பட்டால்கூடச் சிறைக்குச் செல்ல நான் தயார்’’ என்கிறார், அந்த நிலையிலும் துணிச்சலாக. காந்தி மீண்டும் விடாமல், ‘‘சிறை சென்று நீ இறந்துபோவதாக இருந்தால் என்ன செய்வாய்’’ என்கிறார். அதற்கும் அவர் சற்றும் தளைக்காமல், ‘‘அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்’’ என்கிறார்.
இறுதியில் அங்கிருந்து விடைபெறும் காந்தி, வள்ளியம்மையின் இறுதிமூச்சு விடைபெறும்போது அவர் அருகில் இல்லை. ஆனால், அவருடைய கல்லறைக்குச் சென்று இறுதியஞ்சலி செலுத்திய காந்தி, ‘‘இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் வள்ளியம்மை’’ என்றார் பெருமைபொங்க.
மேலும், ‘‘இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயரும் நீங்கா இடம்பெற்றிருக்கும்’’ என்றார். உண்மைதானே!
தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் தனது பூர்வீகம் தில்லையாடி கிராமம் என்பதால் தில்லையாடி வள்ளியம்மை என்று அன்று முதல் அழைக்கப்பட்டார். காந்தியும் தனது கூட்டங்களில் வள்ளியம்மையின் தியாகத்தை கூறி நெகிழந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து தில்லையாடிக்கு வந்திருந்த காந்தி அந்த மண்ணை அள்ளி கண்ணில் ஒத்திக்கொண்டார். அப்போது தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதலில் விடுதலை உணர்வை ஊட்டினார் என கூறியிருக்கிறார்
ஆனால் இந்திய சுதந்திர அரசு வள்ளியம்மையின் நினைவை மறந்துவிட்டது, வள்ளியம்மை தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் மறந்துவிட்டது. அவரது பிறந்தநாளில் மட்டும் கட்டாயத்தின் பெயரில் அரசு பூமாலை போடுகிறது. மற்றபடி ஆளில்லா, பாழான கட்டிடமாகவே கிடக்கிறது.

தஞ்சை பெரிய கோயிலில் காந்திஜி

 தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்று தனித்தன்மை வாய்ந்தது. காந்தியின் வரலாற்றிலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு செலுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இந்த உறவு, தொடர்பு தொடங்கிவிடுகிறது. தென்னாப்பிரிக்கப் போராட்ட வரலாற்றில் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகம், காந்தியடிகளால் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கிறது.

சென்னையில் 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு காந்தியடிகள் விடுத்த செய்தியில், ‘எனது தமிழறிவு சொல்பமே. ஆயினும் நான் தமிழின் அழகையும் வளத்தையும் அந்த அறிவிலும் உணருகிறேன். தமிழை அலட்சியம் செய்வது ஒரு பெருங்குற்றம் என்பது என்னுடைய அபிப்பிராயம்’ என்று தமிழ் மீதான தமது ஈடுபாட்டைக் குறிப்பிட்டார் (மணிக்கொடி 24.12.1933). திருக்குறள், கம்ப ராமாயணம் போன்றவற்றின் உயர்வை உணர்ந்திருந்த அவர் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஓய்வு கிடைத்தால் தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழ் படிக்க ஆசை என ஒருமுறை காந்தி கூறியிருக்கிறார். தம்மைச் சந்தித்த பாரதி விடைபெற்றதும், ‘இவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்று ராஜாஜி உள்ளிட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்த கோயில்களின் கதவுகள்

தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் காந்தியடிகள் வந்துசென்ற வரலாற்றை ஆவணமாக்கி விவரிக்கும் அரிய நூல் அ.இராமசாமியின் ‘தமிழ்நாட்டில் காந்தி’. இந்நூலில் காந்தி தஞ்சைக்கு வந்து சென்ற வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நூல் விவரிக்காத முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பயணம் குறித்த சில செய்திகள் இப்போது ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் வாயிலாகக் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று 24.03.1919-ல் தஞ்சைக்கு முதன்முறையாக வந்தபோது தஞ்சை பெரிய கோயிலுக்கு காந்தியடிகள் சென்ற நிகழ்வு. தஞ்சை பெரிய கோயிலுக்கும் காந்தியடிகளுக்குமான ஒரு தொடர்பை வெளிப்படுத்தும் அறிவிப்பு, பெரிய கோயிலில் இடம்பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 99 கோயில்களையும் தாழ்த்தப்பட்டவர்களின் வழிபாட்டுக்காகத் தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம் ராஜா திறந்து விட்டிருக்கிறார் என்பதை காந்தியடிகள் பாராட்டிய பதிவு இது. அப்பதிவு (29.07.1939) வருமாறு:

‘இராஜாஸ்ரீ இராஜாராம் இராஜா அவர்கள் மூத்த இளவரசரும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அரங்காவலரும் ஆவார்கள். புகழ்பெற்ற தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வர ஆலயம் உட்பட இவரது பொறுப்பில் 90 கோயில்கள் உள. எல்லாத் திருக்கோயில்களையும் அரிசனங்களின் வழிபாட்டிற்காக இவர் திறந்துவிட்டார். இது அரிசனங்களுக்கான தன்னிச்சையான திருத்தச்செயலாகும். இதுவே இந்து மதத்தினைத் தூய்மைப்படுத்துவதை விரைவுபடுத்தும். இது இராஜாசாஹேப் அவர்களின் ஒரு பெரிய நல்ல செயலாகும். எனவே, தீண்டாமை இந்து மதத்திலுள்ள களங்கம் என்று நம்புபவர்கள் அனைவரின் வாழ்த்துகளையும் இவர் பெறத் தகுதியானவர்.’

காந்தியடிகள் தொடர்பான வேறு பதிவு பெரிய கோயிலில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. 1919 மார்ச் 26 அன்று வெளிவந்த ‘சுதேசமித்திரன்’ இதழில் பெரிய கோயிலுக்கு காந்தி சென்ற நிகழ்வு விரிவாகப் பதிவுபெற்றுள்ளது. மார்ச் 24 அன்று தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில், நகரின் பல பிரமுகர்களும் கூடியிருந்தனர். வண்டியிலிருந்து காந்தி இறங்கியதும் அவருக்கென்று ஏற்படுத்தியிருந்த ஆசனத்தில் அமரவைத்தனர். தஞ்சையின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் தேசியவாதியும் ‘தமிழ் வரலாறு’ நூலை எழுதியவருமான கே.எஸ்.சீனிவாசம் பிள்ளை மாலை அணிவித்தார். வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவருக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த மோட்டார் வண்டியில் ஏறி சீனிவாசம் பிள்ளையின் பங்களாவுக்கு காந்தி சென்றார்.

காந்தியின் முதல் தமிழ் கையொப்பம்

அதன் பின் 10 மணிக்குத் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கே கோயில் அதிகாரிகள் செய்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கே வைக்கப்பட்டிருந்த வருகைதருவோர் கையொப்பம் இடுகிற புத்தகத்தில் தமது பெயரைத் தமிழில் காந்தியடிகள் கையொப்பமாக இட்டிருக்கிறார். காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதந்தபோதும் தமிழ் தொடர்பான சூழல்களிலும் தமிழிலேயே தம் பெயரை எழுதிக் கையொப்பமிட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் சில நடந்திருக்கின்றன. 1933-ல்

சென்னைக்கு வந்த மகாத்மா 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு ஆசி வழங்கி அனுப்பிய செய்தியில் ‘மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார். இதை, அந்தக் கூட்டத்தில் அறிவித்தபோது கூட்டத்தில் நீண்ட நேரம் கரகோஷம் எழுந்ததாம் (மணிக்கொடி 24.12.1933). பிற்காலத்தில், 1947-ல் கல்கி, ராஜாஜி ஆகியோர் மக்கள் ஆதரவோடு எட்டயபுரத்தில் மகாகவி பாரதி மணிமண்டபத்தை நிறுவிய விழாச் சூழலில் அதை வாழ்த்தித் தமது கைப்படத் தமிழில் எழுதிய செய்தியிலும் ‘பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம் - மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார்.

தமிழ்நாட்டளவில் தமிழில் கையொப்பமிடும் காந்தியின் முதற்பதிவாகத் தஞ்சை பெரிய கோயிலில் கையொப்பமிட்ட நிகழ்வு இருக்கக்கூடும். அவ்வாறு கையொப்பமிடும்போது, அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனா, அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்திருக்கிறது. அதைக் கண்ட காந்தி, சுதேசிய மயமாய் இருக்கும் நாணத்தட்டையால் எழுத வேண்டுமென்றும், சுதேசியத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அங்குதான் அத்தியாவசியம் என்றும், தர்மகர்த்தாக்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர்களிடத்தில் எடுத்துக் கூறியிருக்கிறார்.

தஞ்சையில் சத்யாகிரக உரை

அதன் பின்னர், பெரிய கோயிலிலிருந்து தஞ்சை நகர முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று ஆங்காங்கு பிரமுகர்களின் மரியாதை பெற்றுத் தமது இருப்பிடத்தை அடைந்தார். 12 மணி முதல் 2 மணி வரை திருவையாறு சாது கணபதி சாஸ்திரியார் குழுவினரால் நடத்தப்பட்ட வாய்ப்பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். 4 மணிக்கு நகரப் பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். மாலை 6 மணிக்கு தஞ்சை பெசன்ட் லாட்ஜில் சுமார் 10,000 மக்களின் முன் சத்யாகிரக விரதத்தைப் பற்றி உரையாற்றினார். அதில் காந்தியடிகள் எடுத்துரைத்த செய்திகளை சுதேசமித்திரன் (26.03.1919) பின்வருமாறு வெளியிட்டிருந்தது:

‘மகாத்மா தன்னுடைய பிரசங்கத்தில் சத்யாக்ரஹ விரதமென்றால் இன்னதென்றும் அவ்விரதத்தைக் கைக்கொண்டவர்களுக்கு விஷேச ஆத்ம சக்தி உண்டாகுமென்றும் அவ்வாத்ம சக்தியினால் பெரிய காரியங்களை நடத்தலாமென்றும் அதற்கு தற்சமயமே சரியான காலமென்றும் ஒருவனும் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியத்தைச் செய்யக் கூடாதென்றும் அநீதியான அதர்மமான கெட்ட சட்டங்களை அடியோடு ஒழித்துப் பொது நன்மைக்கும் பிரஜைகளின் முன்னேற்றத்திற்கும் நமது தேசத்தின் ஷேமத்திற்கும் சரியான வழியளிப்பது இந்த சத்யாக்ரஹ விரதமென்றும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் சத்யாக்ரஹிகளால் ஒருவருக்கும் எவ்விதத் தீங்கும் விளையாது என்றும் சத்யாக்ரஹிகள் சத்தியத்தைக் கைக்கொண்டு கோபமில்லாமலும் பழிக்குப்பழி வாங்குவதென்ற எண்ணமில்லாமலும் சண்டைச் சச்சரவில்லாமலும் விஷேசமான பரித்யாகங்களைச் செய்தும் மகத்தான கஷ்டங்களை அனுபவித்தும் தேசத்தின் நன்மையைத் தேட வேண்டுமென்றும் பிரஹல்லாதருடைய மகிமையைப் பற்றி விஸ்தரித்துச் சொல்லி சத்தியத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்சமயம் ஜனங்களின் பிரதிநிதிகளின் அபிப்ராயத்திற்கு நேர்விரோதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரௌலட் சட்டத்தை உடனே கவர்ன்மெண்டார் ரத்துசெய்யும்படிச் செய்ய வேண்டியது சத்யாக்கிரஹிகளின் முக்கியக் கடமையென்றும் ஜனங்களெல்லாம் பரவசமாகும்படி எடுத்துச்சொன்னார்.’

காந்தியின் சொற்பொழிவை டாக்டர் ராஜன் தமிழில் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்து, முஸ்லிம் பிரமுகர்கள் கூட்டத்தில் பேசினர். 75 பிரமுகர்கள் சத்தியாகிரக விரதத்தை அனுஷ்டிக்க ஒப்புக்கொண்டு அங்கே கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் காந்தியடிகள் தஞ்சை மேலவீதியில் குஜராத்தியரின் மடத்துக்குச் சென்றார். குஜராத்தியப் பிரமுகர்கள் காந்திக்கு நல்வரவுப் பத்திரிகை வாசித்து அளித்து மரியாதை செய்தனர். தமிழ் மண்ணில் தமது தாய்மண்ணைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து காந்தி மகிழ்ந்தார்.

இச்செய்திகள் பலவும் ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலில் இடம்பெறவில்லை. 1919-ல் முதன்முறை தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகைதந்த பதிவு, 1939-ல் தாழ்த்தப்பட்டவர்கள் தரிசனத்துக்குத் திறந்துவிடப்பட்டதையொட்டி எழுதிய பதிவு என இரு பதிவுகள் பெரிய கோயிலை மையமிட்டுக் கிடைக்கின்றன. இந்த நூற்றாண்டு தினத் தருணத்தை நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்வோம்!

Courtesy:- ய.மணிகண்டன், பேராசிரியர்,   தலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப்பல்கலைக்கழகம்.

Thursday, December 24, 2020

குடிப்பழக்கமும் மதுவிலக்கும்

 

 

                                                குடிப் பழக்கமும், மது விலக்கும்.

            நம் பூர்வகுடி மக்கள் உழைப்பில் அதிகம் நாட்டம் கொண்டு, காடு திருத்தி, கழனிகளை உருவாக்கி, நிலத்தை உழுது பயிரிட்டு உணவுக்கான தானியங்களை உற்பத்தி செய்து, உண்டு, உடுத்து பெருவாழ்வு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கிராமப் பகுடிகளில் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தென்னந்தோப்புக்கிடையில் ஒரு கீற்றுக் கொட்டகை பொட்டு அங்கு தென்னை மரத்துக் கள்ளை இறக்கி உழைக்கும் மக்கள் அங்கு வந்து கள் அருந்தும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.

அப்படி கள்ளுக் கடைகளுக்குப் போகும் வழி என்று ஒரு வழிகாட்டி பலகையைச் சாலையில் அமைத்து அங்கிருந்து தோப்புக்குள் சென்று குடித்து விட்டு வருவார்கள். கள் குடிப்பது போதை பழக்கம் தான் என்றாலும், இன்றைய சாராயம், கள்ளச் சாராயம் போல உயிருக்கு உலை வைக்கும் விஷத் தன்மையுடையது அல்ல. எனினும் அந்தக் குடிப் பழக்கத்தையும் மக்கள் அறவே மறந்து விடவேண்டும் என்பதற்காகத்தான் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்திய சுதேசி வீரர்கள் கள்ளுக்கடைகளுக்கு மக்கள் செல்வதைத் தடை செய்ய வேன்டுமென்று சொல்லி மறியல் செய்து, தடியடி பட்டு சிறை சென்று பற்பல தியாகங்களைச் செய்த பிறகு மதுவிலக்கு எனும் சட்டத்தை ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த போது கொண்டு வந்தார்.

மகாத்மா காந்தி தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் இந்திய சுதந்திரத்துக்கு அடுத்ததாக, நமது மக்களின் நலனைக் கருதி மதுபானங்களை ஒழித்தல் என்பதும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. குடியினால் மனிதனின் அறிவு மழுங்கிப் போய், சிந்தனை சக்தியை இழந்து, அடிதடி போன்ற தீயவழிகளில் மனத்தைச் செலுத்தி பாழாய்ப் போய்க் கொண்டிருந்த நிலைமை மாற வேன்டுமென்பதற்காக குடிப்பழக்கத்துக்கு எதிரான போராட்டத்தை காந்திஜி கையிலெடுத்தார்.

காந்திஜி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் போராடிக் கொண்டிருந்த சமயம் 1921இல் மது ஒழிப்பு கொள்கையை வகுத்து மக்கள் மத்தியில் குடியின் தீமைகளை எடுத்துரைத்து நல்வழிகாட்டத் தொடங்கினார். மதுவிலக்கு என்ற சொல் கள், சாராயம் இவற்றுக்கு எதிரானது மட்டுமல்லாமல் போதை தரும் எதையும் எதிர்க்கும் போர்க்களமாகவே மதுவிலக்கை அவர் போதித்து வந்தார்.

1936இல் முதன் முறையாக காங்கிரஸ் கட்சி தேர்தலில் நின்று சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் ஒரு ஆட்சி இங்கு பதவியேற்ற சமயம், காங்கிரசின் மதுவிலக்குக் கொள்கையை அமல் படுத்தும் நோக்கில், முதலில் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அறிமுகம் செய்யப்பட்டு அது வெற்றி கரமாக நடைபெறத் தொடங்கியதும், அதை இதர மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தும் எண்ணம் தோன்றியது.

இந்திய நாடு ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற 1947க்குப் பிறகு மதுவிலக்கு என்பது சென்னை மாகாணம் முழுவதும் அமல் படுத்தப்பட்டு ஒரு தலைமுறையினர் குடியை மறந்து, ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணம் சீரமைக்கப்பட்டு ஆந்திரா பிரிந்து சென்றதும், சில பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குப் போனதும், சிற்சில பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டதும் நடைபெற்றது. இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தமிழகமும் குடிப் பழக்கமற்ற ஒரு மதுவிலக்குள்ள மாநிலமாகத் திகழ்ந்து வந்தது.

இந்த நிலையில்தான் 1967 தேர்தலில் தி.மு.க. கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அரசின் வருமானத்தைப் பெருக்குவதாகச் சொல்லி மதுவிலக்கு சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ளப்பட்டு, சாராயக் கடைகளும், கள்ளுக் கடைகளும் எங்கும் பரவி தங்கள் ஆதிக்கத்தை மிகத் தீவிரமாக மக்கள் மீது காட்டத் தொடங்கியது. இதன் பயன், அரசாங்கத்துக்கு வருமானம் வந்தது என்னவோ உண்மைதான், ஆனால் உழைக்கும் மக்கள் போதைக்கு அடிமையாகிப் போனார்கள். புத்தி பேதலித்து, சுவாதீனம் இழந்து குடிகாரர்களாகப் பழி சுமந்து வாழும் கோடானு கோடி ஆண்கள், தங்களை நம்பியிருக்கும் மனைவி மக்களைச் சந்தியில் நிறுத்தத் தொடங்கிய காலம் அது. அரசாங்கத்துக்கு வருமானம் தான் பெரிதாகத் தோன்றியதே தவிர, மக்களின் மகத்தான் வாழ்வு பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டது.

எங்கு பார்த்தாலும் சாராயக் கடைகள், அரசாங்கமே சாராயக் கடைகளைத் தங்கள் மேற்பார்வையில் கண்ட இடங்களிலெல்லாம் வைத்து மக்களை, மக்களை என்ன? இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று எந்த தராதரமும் இல்லாமல் குடிக்கு அடிமையாக்கி வைத்து விட்டார்கள். பொதுவெளியில் நாம் பழகும்போது யார் குடித்துவிட்டு பொதையில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் ஆங்காங்கே பிரச்சினைகள். பெண்கள் குழந்தைகள் தனித்து வழிநடைப் பயணம் செய்ய அச்சம் தோன்றி தனிநபர் வாழ்க்கை  எனப்து எந்நேரத்திலும் ஆபத்துக்குள்ளாகும்படி இருந்தது.

எதனை யெத்தனை பெரிய தலைவர்கள், தங்கள் வாழ் நாளெல்லாம் குடிப் பழக்கத்துக்கு எதிராகப் பேசியி, எழுதியும் வந்து ஒரு வழியாக ஒரு தலைமுறை குடியை மறந்திருந்த சூழ்நிலையில் அவற்றைத் திறந்து வைத்து மக்கள் வாழ்வில் மண்ணைப் போட்ட காலம் நாட்டின் இருண்ட காலம் எனச் சொல்வது மிகையாகாது.

குடிய மறந்து நல்வாழ்வு வாழ்ந்து வந்த மக்களை மீண்டும் குடி எனும் அரக்கன் கையில் ஒப்படைத்த மகானுபாவர்கள் இந்த நாட்டை வாழ்விக்க வந்த மகான்களா அல்லது அழித்து ஒழித்துவிட சங்கல்ப்பம் செய்து கொண்டவர்களா என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் ஆகும் என்பதை தீர்க்க தரிசனத்தோடு கண்டு கொண்ட மகாத்மா காந்தி பல காலம் முன்னமேயே, இது குறித்து கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். 25-12-1924 ஆம் தேதியிட்ட “எங் இந்தியா” இதழில் அவர் எழுதியிருக்கும் செய்தி கவனிக்க வேண்டியதொன்று. அவர் சொல்கிறார். “இந்த அதர்மமான வழியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நம் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப் பயனடுத்துவது என்பது பெருமையளிக்கும் செயல் அன்று. கல்வி கற்பிக்கப் பொதுமான பணம் கிடைக்காமல் போவதானுலும் கூட, துணிந்து இந்த வருமானத்தை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். “ என்று சொல்லிவிட்டு, அப்படியானால் வருமானத்துக்கு என்ன வழி என்று சிலர் கேள்வி கேட்கக் கூடும் எனக் கருதி அவர் சொல்கிறார் “இதற்கு மாற்று நமது ராணுவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்பது.

ஆனால், அவர் சொன்னபடி ராணுவச் செலவைக் குறைத்துக் கொண்டிருந்தால் என்ன நடைபற்றிருக்கும் என்பதை நாம் இப்பொதுஇ சிந்தித்தால் அச்சம் தருகிறது.  நேரு காலத்தில் இந்தோனேஷியாவில் பாண்டூங் நகரில் நடந்த பன்னாட்டு மகாநாட்டில் “இந்தி சீனி பாய் பாய்” என்று உறவு கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய கையோடு, சீனாவின் செள என் லாய் இந்தியா மீது படையெடுத்து இமயத்தின் பல பகுதிகளைக் கபளீகரம் செய்த துரோகச் செயல் நடைபெற்ற போது படைபலமும், ஆயுத பலமும் இல்லாமல் இந்தியா பல இழப்புகளைச் சந்தித்தது போல மேலும் பல ஆபத்துக்களைச் சந்தித்திருக்க வேண்டும். நல்ல காலம், அப்படி அவர் சொன்ன முறையில் ராணுவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளாமல் வளர்த்துக் கொண்டமையால், இரண்டு பாக் போர்களையும், சீன ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்து நம் நாடு வெல்ல முடிந்தது. வங்காள தேசமென்றொரு நாட்டையும் உருவாக்கிக் கொடுக்க முடிந்தது. அப்படி ராணுவச் செல்வைக் குறைக்காமல், மதுவிலக்கை அமுல் படுத்தி தேசத்து வருமானத்துக்கு வேறு பல வழிகளைக் கண்டிபிடித்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.

எல்லா குடிப்பழக்கங்களுக்கும் வாய்ப்பும், வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அதன் மூலம் அரசாங்க கஜானா நிரம்பும் நிலைமையும் இங்கே நிலைத்துவிட்ட நிலைமையில் இனி எந்த அரசும் கள்ளுக்கடை, சாராயக் கடைகளை மூடுவதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையை நாம் எட்டிவிட்டோம். இந்த குடிப் பழக்கத்துக்குச் சமமாக போதைப் பொருட்கள் எங்கிருந்தெல்லாமோ இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு, குடிகாரர்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள், உழைக்கும் மக்கள், அலுவலகம் செல்வோர் என்று எல்லா மட்டத்திலும் இந்த பழக்கம் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. பள்ளிக்கூடம் போகும் மாணவன் சாராயக் கடை வரிசையில் நிற்கிறான்.

இன்ற யாராவது காந்திஜியின் அடியொற்றி குடிப்பழக்கத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளுக்கடை, சாராயக் கடைகளை ஒழிப்பதற்காகவும் பொராடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், என்ன ஆகும்? குடிக்கு அடிமையாகிப் போன குடிகாரனும், அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசியல் வாதிகளும், அப்படி போராடுபவர்களை ஒழித்துக் கட்டவே விரும்பு வார்கள்.

காந்திஜி நடத்திய கள்ளுக்கடை மறியலின் போது காங்கிரஸ் தொன்டர்கள் கள்ளுக்கடை வாசலில் கொடியைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பார்கள். அங்கு குடிக்க வரும் குடிகாரர்களைப் பார்த்து, ஐயா, தயவு செய்து குடித்து உங்கள் குடியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னால், அந்தக் கள்ளுக்கடை, சாராயக் கடைக்காரனும், குடிக்க வந்த குடிகாரனும் ஒன்று சேர்ந்து இந்த தொண்டனைச் சாத்துவார்கள். பாவம் குடியைத் தடுக்க வந்தவனுடைய குடும்பம் சந்தியில் நிற்கும்.

அப்படியெல்லாம் நடக்காது, அதீத கற்பனையில் எழுந்த விபரீதக் கருத்து இது என்று சொல்வொருக்கு பழைய நிகழ்ச்சிகளை இப்போது நினைவுபடுத்த வேண்டும்.

1924ஆம் ஆண்டு, காந்தி கள்ளுக்கடை மறியல் செய்த நேரம். சேலம் மாவட்டம் சிங்காரப்பேட்டை எனும் கிராமத்தில், அவ்வூர் மணியக்காரராக இருந்த பெருமாள் நாயுடு என்பவர் ஊரில் தண்டோரா பொட்டு, மக்களுக்கு ஒரு அறிவிப்பினைச் செய்தார். அது, “கிராமத்தில் உள்ள யாரும் இனி கள் குடிக்கக் கூடாது, அப்படி மீறி குடித்தது தெரிய வந்தால் ஊரிலிருந்து தள்ளி வைக்கப்படுவார்” என்பது.

ஒரு சில பகுதியினர் தாங்கள் இனி குடிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு மணியக்காரரிடம் எழுதியும் கொடுத்தார்கள். ம்றி குடிப்பழக்கத்துக்கு பலியானவர்களை சாதிக் கட்டுப்பாடு என்று ஒதுக்கி வைத்தும், அபராதம் விதித்தும் குடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார். அன்றைய ஆட்சியாளர்கள் இப்படியொரு தலைவரை விட்டு வைப்பார்களா? கள் குடித்த ஒருவனை அடித்தார் என்று குற்றச்சாட்டுக்களை சொல்லி அந்த மணியக்காரரைப் பதவி நீக்கம் செய்தார்கள். அவர் என்னவெல்லாமோ சொல்லி தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முயன்றபோதும், அதிகாரம் படைத்தொர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

போதாத குறைக்கு கள்ளுக் கடைக்காரர்களஒ விட்டுத் தங்களுக்கு வருமானம் இல்லாமல் செய்துவிட்டார் என்று அவர் மீது ஒரு வழக்கையும் தொடுத்தார்கள்.  இவரைப் போல மற்றவர்கள் எவரும் மதுவுக்கு எதிராகப் போராட வந்துவிடப் போகிறார்களே என்று அச்சத்தில் ஆள்வொர் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பு என்னவென்றால், “கள்ளுக்கடைகள் முன்பு மறியல் செய்யும்படியும், மற்றும் சட்ட விரோதமான காரியங்களைச் செய்யும்படியும் மக்களைத் தூண்டிவிட்டுப் பிரசங்கங்கள் செய்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. உங்களுடைய பேச்சுக்கள் அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் இருப்பதாலும், அரசாங்கத்தின் மீது வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் சொல்லி 1895ஆம் வருஷத்தில 4ஆவது சட்டத்தின் 26ஆவது பிரிவின் படி நீங்கள் எங்கும் சென்று பிரசங்கங்கள் செய்யக் கூடாது, மீறினால் தண்டனைக்கு உள்ளாவீர்கள்” என்று ஒரு நோட்டீஸ் பிறப்பித்து அச்சுறுத்தியது. ஆக மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்பது போல், ஒரு பக்கம் குடிகாரர்கள், மறுபக்கம் ஆட்சிபீடத்தில் இருப்போர், என்று இப்படி இருந்தால் யார் பூனைக்கு மணி கட்ட முற்படுவார்கள்?

பிறகு இதற்கு என்னதான் வழி? வழியா? விதிவிட்ட படி வழி, அவ்வளவுதான். மக்களாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. விழித்தெழுங்கள், எதிர்கொள்ளும் தீமையை மனதில் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். எழுமின்! விழிமின்! மக்கள் மனம் திருந்தும் வரை போராடுங்கள் குடிக்கு எதிராக! இதைத்தான் செய்ய வேண்டும்.

 

 

 

மகாகவி பாரதியின் வாழ்வில்

                                              

            மகாகவி பாரதியார் பற்றிய பல்வேறு செய்திகள் புத்தக வடிவிலும், கட்டுரைகளிலும் வந்தவண்ணம் இருக்கின்றன. 1921 செப்டம்பர் 11இல் தனது 39ஆம் வயதில் மறைந்த பாரதியின் பெருமை பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்களின் கவனத்துக்கு வந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இப்போதுள்ள அளவுக்கு மக்கள் போற்றவோ, புகழவோ, அவருடைய அருமையைப் புரிந்து கொள்ளவோ இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்திதான். பாரதியின் வாழ்க்கையை பல றிஞர் பெருமக்கள் ஆய்ந்து எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களில் ரா.அ.பத்மநாபன் அவர்களுடைய பங்கு போற்றுதற்குரியது. அவர் பாரதி வாழ்ந்த நாட்களில் நடந்த பல அரிய செய்திகளைப் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவைகள் தான் இன்றளவும் பாரதியை மக்கள் மத்தியில் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்து வருகிறது. அவற்றில் சில செய்திகளைப் பார்க்கலாம்.

            1902 முதல் 1904 வரையில் எட்டயபுரத்து சமஸ்தானத்தில் ஜகவீரராம வெங்கடேசுவர் எட்டப்ப நாயக்கர் என்பவர்தான் மன்னராக இருந்தார். அவருடன்  தான் காசி வாசம் முடிந்து எட்டயபுரம் திரும்பிய பாரதியார் நண்பராக பழகி வந்தார். தந்தை காலமான பின்பு தாயும் இல்லாத நிலமையில் பாரதிக்கு எட்டயபுரத்தில் எவரும் இல்லாமையால் காசியில் வாழ்ந்த அவருடைய அத்தையுடன் அவர் காசிக்குச் சென்று விட்டார். அங்கு இருந்த சமயம் எட்டயபுரம் மன்னர் டெல்லிக்குப் போய்விட்டுத் திரும்பும் சமயம் காசிக்கு விஜயம் செய்து, அங்கு பாரதியாரைப் பார்த்து அவரை எட்டயபுரம் வந்து விட அழைப்பு விடுத்ததனால் பாரதி மீண்டும் எட்டயபுரம் வந்து சேர்ந்தார்.

            அப்படி அவர் எட்டயபுரத்தில் ராஜாவுக்கு நண்பராக பழகி வந்த சமயம், ராஜாவினுடைய பழக்க வழக்கங்களுக்கும், பழைமை எண்ணங்களுக்கும், காசி சென்று விரிந்து பரந்த உலக அனுபவங்களை ஓரளவு புரிந்து கொண்டு வந்திருந்த பாரதியின் பரந்த விசாலமான எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை.

            பாரதிக்கு அந்த காலகட்டத்தில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி, மில்டன் ஆகியவர்கள் கவிதைகளில் ஈடுபாடு உண்டாயிற்று. அவர்களுடைய ஆங்கிலக் கவிகளில் மிளிர்ந்த அழகு, நயம், உயர்ந்த இலட்சியம், சமத்துவம் ஆகியவை அவர் மனதைக் கவர்ந்தன.

            எட்டயபுரம் ராஜா, பழமையில் ஊறியவர், தனது அதிகாரங்கள் பற்றிய அதீத பற்றுடையவராக இருந்தார். அவரைச் சுற்றியிருந்த புலவர்கள் அவரிடம் தரமுள்ள, நாட்டுக்கும், மக்களுக்கும் அவசியமான கருத்துக்களைப் பற்றி விவாதிக்காமலும், பொழுதுபோக்கும் விதமாகவே பல பழைய கொச்சையான பாடல்களின் மீது ஆர்வம் ஏற்படச் செய்து கொண்டிருந்தனர்.  விறலிவிடு தூது, கூளப்பநாயக்கன் காதல் போன்ற பல சிருங்கார ரசப் பாடல்களைச் சொல்லி மன்னரை மகிழ்ச்சியில் ஆழ்ந்தி வந்தனர். நேரடியாக மன்னரின் போக்கை விமர்சிக்க முடியாத சூழ்நிலைக் கைதியாக இருந்த பாரதி நேரம் கிடைத்த போதெல்லாம் மன்னருடைய போக்கைக் கேலி செய்தும், நையாண்டியாக எழுதியும் வந்திருக்கிறார். ஆனால் அப்படி அவர் பாடிய சில பாடல்கள் எதுவும் நமக்குக் கிடைக்க வழியில்லாமல் போயிற்று.

            பாரதியாருடைய தாய் மாமன் ஆர்.சாம்பசிவய்யர் என்பவரும், குருகுகதாசப் பிள்ளை என்பவரும், பாரதியின் உறவினர் கே.நடராஜன் என்பவரும் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்குத் தெரிவித்த சில கருத்துக்களின் படி பாரதியார் அந்த காலத்தில் மன்னரை கேலி செய்து எழுதிய ஒருசில பாடல்களைப் பார்க்கலாம். பாரதி பாடியதாகத் தெரியவரும் ஒரு பாடல்:

“நித்த நித்தம் துயின்றெழுந்து                                                                                     புத்தியில்லாப் புல்லருடன் போக்கி                                                                                  அத்தமித்தவுடன் விழு பணத்தை                                                                                   மண்ணைக் கல்லைத் தொழுதற்கோ                                                                        யான் பிறந்தேன்?”

இதை ரா.அ.பத்மநாபன் தன் நூலில் வெளியிட்டிருக்கிறார். அதே கட்டுரையில் ரா.அ.பத்மநாபன் குறிப்பிடும் இன்னொரு செய்தி. 1904இல் பாரதியார் ஒரு சிலேடை பாட்டைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் கிடைக்கவில்லையாயினும், அதன் கருத்தை பாரதியாரின் மாமா சாம்பசிவ ஐயர் சொன்னதாக எழுதுகிறார். சுடுகாட்டுச் சாம்பலுக்கும், மன்னனுக்கும் ஒப்புமை காட்டி எழுதப்பட்ட பாட்டாம் அது.

            இவை தவிர சில நிகழ்ச்சிகள் பாரதியாரின் நண்பர்கள், ஆர்வலர்கள் மூலம் தெரியவந்த செய்தியாகக் குறிப்பிடப்படுவை உண்டு. அதில் மன்னர் எட்டயபுரம் தெருவில் நகர்வலம் வருவாராம். அப்போது அவர் வாகனத்துக்கு முன்பாக ஒரு கொம்பு வாத்தியத்தை ஊதிக் கொண்டு ஒருவன் முன்னால் மன்னர் வருகையைப் பறை அறிவித்துச் செல்வானாம். இதைக் கேட்டு தெருவிலுள்ளோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்களாம். அப்படியொரு சமயம் மன்னர் வருகையை அறிவிக்க வாத்தியம் ஊதிக்கொண்டு வரும்போது, ஆங்கொரு நண்பர் வீட்டுத் திண்ணையில் பாரதி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாராம். வாத்தியத்தின் ஓசைகேட்டு அனைவரும் எழுந்து நின்றிருந்த போது, பாரதியார் மட்டும் அதனை கசப்போடு பார்த்து “முட்டாள்தனத்தின் முழக்கம்” எனும் பொருள்பட ஆங்கிலத்தில் “ Proclamation of Stupidity  என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டாராம்.

            இதை அங்கிருந்த யாரோ ஒருவர் மன்னரிடம் போட்டுக் கொடுத்து விட, இதனால் கோபம் அடைந்த மன்னர் உடனே பாரதியை வேலையிலிருந்து நீக்கி விட்டாராம். அன்றிரவு எட்டயபுரத்தில் யாரோ ஒருவருடைய வீடு தீப்பிடித்து எரிந்து போயிற்றாம். அதனைக் காண அங்கு சென்ற பாரதியாரிடம் ஒருவர் அவரை மன்னர் வேலையிலிருந்து நீக்கிவிட்ட செய்தியைக் கேட்டு துக்கம் விசாரித்திருக்கிறார். அதற்கு பாரதி சொன்னாராம், “ஆமாம். அன்று இலங்கையில் ஒரு ‘கவி’க்கு இராவணன் தீங்கி இழைத்தான், இலங்கையில் தீ மூண்டது. இன்று இங்கே ஒரு கவிக்கு எட்டயபுரம் ராஜா துன்பம் தந்தார், இங்கேயும் ஒரு தீ மூண்டது” என்று பதிலளித்தாராம். அனுமனைக் கவி என்று பாரதி சொல்லி தன்னுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

            1904இல் தான் பாரதியார் எட்டயபுரத்தை விட்டு நீங்கி மதுரை சென்று அங்கு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தற்காலிக பணியில் அமர்ந்தார்.  அப்படி அவர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அவர் “மூட சிகாமணிகள் நட்சத்திரமாலை” என்ற பெயரில் ஒரு பாட்டை இயற்றினாராம். பாட்டு அதில் இருந்த கிண்டலை ரசிக்கும்படி இருந்த போதிலும் நண்பர்கள் இதனால் துன்பம் வரும் என்று கருதியதால் அதை கிழித்து எறிந்துவிட்டதாகவும் செய்தி உண்டு.

            பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலகட்டத்தில் 1910-11 இல் பாரதி “சின்னச் சங்கரன் கதை” என்ற ஒரு கதையை எழுதினார். அது பின்னால் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காணாமல் போய்விட்டது. பிறகு ஒரு கடையில் பழைய பேப்பர் சாமான்கள் மடிக்கப் பயன்பட்ட காகிதத்தில் அவர் கதை இருந்து, அதன் ஒரு பகுதி மீட்கப்பட்டது என்றும், அந்தப் பகுதி வெளியிடப்பட்டு படிக்கக் கிடைக்கிறது என்றும் தெரிகிறது. அந்த சின்னச் சங்கரன் கதை அவருடைய சுயசரிதம் போலத்தான் இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள்.

           

                                                                                                                       

           

சுப்ரமணிய சிவா

                             

            சுப்ரமணிய சிவா, இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் தமிழகத்தில் முதன்மை வகித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் ஆகியோர் காலத்தில் வ.உ.சி.அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடி, சிறை சென்று, தொழுநோயுடன் வெளிவந்து, அந்த நிலையிலும் கடைசி மூச்சு வரை தேசத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகான் சுப்ரமணிய சிவா.

            இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் இந்தியா முழுவதிலுமுள்ள தலைவர்களில் பலர் தேசியத்தையும், தெய்விகத்தையும் தங்களது இரு கண்களாக பாவித்து போராடினார்கள். அப்படிப்பட்ட தலைவர்களில் தமிழகம் தந்த மாவீரர் சுப்ரமணிய சிவா.

            இவர் பிறந்த ஆண்டு 1884. வத்தலகுண்டு எனும் ஊரில் ராஜம் ஐயர் என்பவருக்கும் நாகம்மாள் எனும் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். சிவாவுக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்று இரு சகோதரிகள், சுப்ரமணியன், வைத்யநாதன் என்று இரு சகொதரர்கள் உண்டு.  இவர்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். சிவா மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்வாகவில்லை. தூத்துக்குடியில் போலீஸ் இலாகாவில் சாதாரண வேலையில் சேர்ந்தார். வேலையிலிருந்து இவரை நீக்கிவிட்டார்கள். அந்த வருத்தத்தில் இவர் துறவுக் கோலம் பூண்டு அரசியலுக்கு வந்தார். இவர் இளமை முதல் ஆன்மிக வாழ்வில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருவனந்தபுரத்தில் ஊட்டுப்புறை ஒன்றில் இவர் தங்கி படித்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அவருடைய இளம் வயதில் ஆன்மீக நாட்டம் மிகுந்து திருவனந்தபுரத்தில் சதானந்த சுவாமிகள் என்பவரிடம் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தார்.

            திருவனந்தபுரத்தில் இருந்த போது இவருக்குப் பல ஆன்மீகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள் ஆகியோருடைய சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பத்திரிகைகளின் வாயிலாக இந்தியா அடிமைப்பட்டுக் கிடப்பதையும், சொந்த நாட்டிலே நாம் அந்நியருக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருப்பதும் இவருக்கு தேசாவேசத்தை உண்டாக்கியது. சிவா தினந்தினம் பத்திரிகை படிக்கும் வழக்கமுடையவர். அதில் வரும் செய்திகளைப் படித்து அன்றாட நிகழ்வுகளைக் கவனித்து வந்தார்.. இவர் தர்மபரிபாலன சமாஜம் என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கி, அங்கு நண்பர்களை அழைத்து அரசியல் விவகாரங்களை அலசுவார்.  இப்படி உள்ளே தொடங்கிய இவரது பேச்சு, மெல்ல மெல்ல தெருவுக்கும் வந்தது. இவர் பேச்சு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து மேடைப் பேச்சின் மூலம் தேசபக்திப் பிரச்சாரம் மேற்கொண்டார்.  இப்படி இவருடைய பேச்சு மக்கள் மத்தியில் ஒரு சுதேசிய உணர்வைத் தூண்டிவிட்ட காரணத்தால், இவரை இப்படியே விட்டு வைத்தால் ஆபத்து என உணர்ந்த திருவனந்தபுரம் சமஸ்தானம் இவரை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டுவிட்டது.

            அன்றைய காலத்தில் திருவனந்தபுரம் சமஸ்தான மன்னர்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையால், இப்படியொரு தனி மனிதன் அரசுக்கு எதிராகப் பேச அனுமதித்து விட்டால், தங்களுக்கு ஆபத்து எனக் கருதி, அவர்கள் சிவாவை தங்கள் சமஸ்தானத்தை விட்டு நீங்கிவிடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அங்கிருந்து கால்நடையாகவே நடந்து வழிநெடுக மக்கள் மத்தியில் பேசி, தேசபக்தி உணர்வை ஆங்காங்கே விதைத்துக் கொண்டு வந்தார். அப்படியே நடைபயணத்தில் வருகின்ற வழியெங்கும் மக்களைச் சந்தித்து பேசிக் கொண்டே திருநெல்வேலியை வந்து அடைந்தார்.

            அப்போது தென் தமிழகத்தில் திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தலைமையில் தேசபக்தி ஊட்டப்பட்டு மக்கள் மத்தியில் ஒரு ஆவேச உணர்ச்சி பரவ ஆரம்பித்திருந்தது. தமிழகத்துக்கு திருநெல்வேலி தேசிய எழுச்சிக்கு வித்திட்டது எனக் கூட சொல்லலாம். தூத்துக்குடி வக்கீலாக இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்திய பொருளாதாரம் ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைக் கண்டு, ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கி இலங்கைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே கப்பல் போக்கு வரத்தைத் தொடங்கியிருந்தார்.

            1906இல் லார்ட் கர்சான் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்து வைத்தார். அந்தப் பிரிவினையை எதிர்த்து நாட்டில் அரசியல் எழுச்சி உருவாகியது. எங்கெங்கும் போராட்டங்கள் கர்சானின் முடிவை எதிர்த்து மக்கள் போராடி சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது மக்கள் எழுச்சி ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தீவிரமாக உருவாக்யது.  தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சென்னையில் சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகள் வாயிலாக சுப்ரமணிய பாரதியார் எழுத்துக்களும் மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கி இருந்தது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் தொடர்பினால், சென்னைக்கு பல தேசியத் தலைவர்கள் வந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். பால கங்காதர திலகம், பிபின் சந்த்ர பால், லாலா லஜபதிராய், அரவிந்த கோஷ் போன்ற மாபெரும் தலைவர்களை தமிழகத்துக்கு பாரதியார் அறிமுகம் செய்வித்தார். தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை பால கங்காதர திலகரை நேரில் சந்தித்து அவருடைய சுதந்திர எழுச்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அந்த காலகட்டத்தில் தேசபக்தர்கள் எழுப்பிய “வந்தேமாதரம்” எனும் கோஷம் எங்கெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. தென் இந்தியாவில் அந்த வந்தேமாதர மந்திரத்தை உபதேசித்த வ.உ.சிதம்பரம் பிள்ளையை “வந்தேமாதரம் பிள்ளை” என்றே அழைக்கத் தொடங்கினார்கள். அப்படி வ.உ.சி. நாட்டையே திரும்பிப் பார்க்கும்படி செய்திருந்த காலத்தில் சுப்ரமணிய சிவா திருநெல்வேலி வந்தபோது அவரைப் பற்றி அறிந்து அவருடன் நட்பு பூண்டார். அது முதல் இவ்விருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல மேடைகள் தோறும் சுதந்திர கோஷத்தை உரக்க முழங்கினார்கள். அவர்களால் மக்கள் மத்தியில் வந்தேமாதரம் எனும் மந்திரம் பிரபலமாயிற்று.

            இப்படி திருநெல்வேலி தமிழகத்திலேயே தேசிய உணர்வை மிக வேகமாக வெளிக்கொணர்ந்த பிரதேசமாக ஆவதற்கு வ.உ.சி., சிவா, பாரதியார் ஆகியோரே காரணமாக இருந்தனர். தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் வ.உ.சி. தொடங்கிய கப்பல் கம்பெனியை இல்லாமல் ஆக்கிவிட வேண்டி ஆங்கிலேய கப்பல் கம்பெனியார் பிரம்மப் பிரயத்தனங்களைச் செய்து வந்தனர். சுதேசிக் கப்பலுக்கு ஆகும் பயணச் செலவைக் காட்டிலும் தாங்கள் குறைத்துக் கொள்ளவும், ஒரு கட்டத்தில் இலவசமாக அழைத்துச் செல்லவும் கூட அவர்களது கப்பல் கெம்ப்னி முன்வந்தது. எப்படியாயினும், எவ்வகையாயினும் சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்தே தீருவது என்பது அவர்களுடைய சங்கல்பம்.

            இப்படி வ.உ.சி. தலைமையில் தென் தமிழ்நாட்டில் சுதந்திரக் கனல் பரவி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், சென்னையில் மகாகவி பாரதியார் ஏற்பாட்டில் வட இந்தியாவில் புரட்சிக்காரராகக் கருதப்பட்ட பிபின் சந்திரபால் எனும் தலைவரை சென்னைக்கு அழைத்து கடர்கரையில் பேசச் செய்தார். அவர் தொடர்ந்து ஏழெட்டு நாட்கள் தங்கி சென்னையில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்து நடந்தது 1907 மே மாதத்தில்.  இப்படி தெற்கில் வ.உ.சி. சிவா ஆகியொரின் சண்டமாருத நொற்பொழிவுகள் அதிகரிக்கத் தொடங்கவும், ஆங்கில ஏகாதிபத்தியம் இவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க ஏற்பாடுகளைச் செய்தது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பல பொதுக்கூட்டங்களில் தேசபக்திப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தேசத் துரொகமானது என்று ஆங்கில ஏகாதிபத்தியும் அவர்கள் மீது 1908 பிப்ரவரி மாதம் வழக்குகளைத் தொடுத்தது.

            1907ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசின் ஆண்டு மாநாடு சூரத் நகரில் நடந்தது. அந்த மகாநாட்டில் காங்கிரசில் தீவிரமாக இருந்த குழுவினருக்கும், மிதவாத காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டு மாநாடு நின்று போயிற்று. அதில் பங்கேற்றிருந்த தீவிரவாத காங்கிரஸ் தலைவர்கள் தனிக்கட்சி தொடங்கி அதற்கு ‘நேஷனலிஸ்ட் பார்ட்டி’ என்று பெயரிட்டனர். வ.உ.சி., சிவா, பாரதி இவர்களெல்லாம் அப்போது திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரசாராக விளங்கி வந்தனர்.

            1908இல் இந்த நேஷனலிஸ்ட் தீவிர வாத காங்கிரசார் தூத்துக்குடியில் மிகப் பெரிய கூட்டங்களைக் கூட்டிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அந்த கூட்டங்களில் எல்லாம் வ.உ.சி.யும் சிவாவும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் சொற்பொழிவுகள் ஆற்றினார்கள்.

             தூத்துக்குடியில் கோரல் மில் என்கிற நிறுவன தொழிலாளர்கள் ஆங்கில முதலாளிகளால் சுரண்டப்படுவதை எதிர்த்து ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது. வ.உ.சி. அவர்கள் தலைமை வகித்து நடத்திய அந்தப் போராட்டத்தில் சிவாவும் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருக்கிறார். இப்படி தெற்கே வெகு தூரத்தில் நடக்கும் இந்த போராட்டங்களை அன்றைய சுதேசமித்திரன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆதரித்து தன் பத்திரிகையிலும் எழுதியிருக்கிறார்.

            சிவா அந்தக் காலத்தில் நடத்தியது அந்நாளைய ஆன்மீக அரசியல்தான். இவர் பேசும்போது தொடக்கத்தில் எல்லா மதங்களின் கோஷங்களையும் எழுப்பி, அதாவது அல்லாஹு அக்பர், சர்வத்ர நாம சங்கீர்த்தனம், வந்தேமாதரம் என்றெல்லாம் கோஷம் எழுப்பிய பிறகுதான் பேசுவாராம். தேசபக்தியை தெய்வபக்திக்கு ஈடாக மதித்து அன்றைய தலைவர்கள் போராடியிருக்கிறார்கள்.

            இந்த கோரல் மில் போராட்டம் காரணமாக இவ்விரு தலைவர்களும் கூட்டங்களில் பேசிய பேச்சுக்களையெல்லாம் போலீசார் திரட்டி, இவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார்கள்.  இவர்கள் மீதான வழக்கு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதில் சாட்சி சொல்வதற்காக பாரதியாரையும், சுரேந்திரநாத் ஆர்யா வையும் திருநெல்வேலிக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பப் பட்டது.  ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்த சமயம் அவர்களைச் சாட்சி சொல்ல அனுமதிக்க வில்லையாம்.

            இந்த வழக்கில் 1908 ஜூலை 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிவாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. வ.உ.சிக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. இந்த கடுமையான தண்டனையை அப்போது டெல்லியில் இருந்த ஆங்கிலேய பிரதிநிதி மிண்டோ என்பவருக்கு லண்டனில் இருந்த இந்தியா மந்திரியான மார்லி கண்டித்து கடிதம் எழுதியிருக்கிறார். பிறகு மேல் முறையீட்டில் இவ்விருவர் தண்டனைகளும் குறைக்கப்பட்டாலும், வ.உ.சி. கோவை, கள்ளிக்கோட்டை ஆகிய சிறைகளில் அடைபட்டு செக்கு இழுத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டு அங்கே தொழுநோய் தாக்கி கடைசி வரை தொழு நோயால் துன்பப்பட்டு மாண்டு போன கொடுமையும் நடந்தது.

            இவ்விருவர் மேலும் வழக்கு தொடர்ந்து இவர்களை எப்படியாகினும் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று அயராது பாடுபட்ட ஆங்கிலேய அதிகாரிகள் நீதிபதியாக இருந்த விஞ்சு துரை என்பாரும், கலெக்டராக இருந்த பின்ஹே என்பாரும் பெரும் பாடு பட்டிருக்கிறார்கள்.

            தீரர் சுப்ரமணிய சிவா, இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட காரணத்துக்காக, அவர் பேசிய பேச்சுக்கள் தேசவிரோதப் பேச்சுக்கள் என்று சொல்லி பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் அவருக்கு மூன்று முறை சிறை தண்டனை விதித்துச் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. முதல் கட்டமாக 1908 ஜூலை 7 முதல் 1912 நவம்பர் 2 வரையிலான ஆறாண்டு கால சிறை முதலில் கிடைத்தது. சேலம் சிறையில் அடைபட்டிருந்த அந்த சிறைவாசத்தில்தான் அவருக்குத் தொழு நோய் பாதிப்பு ஏற்பட்டு அது மிஞ்சிய வாழ் நாள் முசுதும் துன்பத்தில் ஆழ்த்தியது.

            சிறையிலிருந்து வெளிவந்த அவர் மீண்டும் தான் தேச சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்து ஒரு கவிதையை எழுதினார். அதில் அவர் குறிப்பிடும் ஒரு வரியில் “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை படிப்பவர்கள் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

            முதல் சிறைவாசம் முடிந்து வெளிவந்த சிவா சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். அங்கு அவர் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு, ஒரு நாற்காலி இவற்றை எடுத்துக் கொண்டு போய் கடற்கரையில் போய் பாடி கூட்டத்தை வரவழைத்து அவர்களிடம் சுதந்திம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து பேசி வந்தார். அதோடு அவர் பத்திரிகை தொடங்கி அதில் ஆசிரியராகவும் இருந்து நடத்தினார்.

            சுப்ரமணிய சிவாவின் இரண்டாவது சிறை வாசம் இரண்டரை ஆண்டுகள். 1921 நவம்பர் 17 தொடங்கியது. முதல் சிறைவாசம் முடிந்து இரண்டாம் சிறைவாசம் தொடங்குமுன்னதாக சுமார் ஒன்பது ஆண்டுகளில் அவருடைய பணிகள் தேசத்தின் சுதந்திரம் பற்றியே அமைந்தன. சிவம் எழுத்தாளராகவும் உருவெடுத்தது இந்த கால கட்டத்தில்தான். இவருடைய முதல் நூல் “சச்சிதானந்த சிவம்” என்பது. இவரே சொந்தமாக 1912இல்  “ஞானபானு” எனும்  ஒரு மாத இதழைத் தோற்றுவித்தார். இந்த பத்திரிகை தொடங்கப்பட்டதன் நோக்கத்தை சிவா அந்தப் பத்திரிகையிலேயே வெளியிட்டிருந்தார். அது, “உறங்கிக் கிடக்கும் தமிழ் ஜாதியினரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டு பண்ணி அவர்களை மேநிலையில் கொண்டு வரவேண்டுமென்பதே இப்பத்திரிகையின் நோக்கம்”. இதை சிவா தன் பெயரில் தொடங்கினால் பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதிக்காது என்பதால் அதைத் தன் மனைவி மீனாட்சி அம்மாள் பெயரில் தொடங்கி நடத்தினார்.

            சுப்ரமண்ய சிவா பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு ஓர் ஆலய எழுப்ப விருப்பம் கொண்டு அதற்கான அஸ்திவாரமும் போடப்பட்டது. ஆனால் அவரால் மேற்கொண்டு அதை எழுப்ப முடியாமல் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். ஆனால் அவர் கண்ட கனவு பிற்காலத்தில் நிறைவேற்றப்பட்டு பாப்பாரப்பட்டியில் இப்பொது பாரதமாதா ஆலயம் எழுப்பப்பட்டு, அது சுப்ரமண்ய சிவாவின் நினைவிடமாகவும் திகழ்ந்து வருகிறது. தேசம் இவர் போன்ற தேசபக்தர்களை மறந்து விடக்கூடாது என்பதால் இவர் பொன்ற தியாகிகளை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவசியம், அப்போதுதான் எதிர்காலத்தில் சுயநலமற்ற தேசபக்தர்கள் இந்த நாட்டில் உருவாக முடியும். வாழ்க சுப்ரமணிய சிவா புகழ்!

கட்டுரை ஆக்கம்:-

தஞ்சை வெ.கோபாலன்,  இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. # 9487851885.