காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டிய தில்லையாடி வள்ளியம்மை!
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் உள்ள தில்லையாடியை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் முனுசாமி மங்கலம் தம்பதியினர். இவர்களுக்கு 1898 ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பார்க்கில் பிறந்தவர் வள்ளியம்மை.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களை வைத்து வேலை வாங்க முடியாத அங்குள்ள தோட்ட முதலாளிகள். பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் அப்பாவி கூலித்தொழிலாளர்கயை ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து சென்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்தே அதிகம் பேர் அடிமைகளாக சென்றனர். இங்கிருந்து சென்றவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் கிறிஸ்தவ சட்டப்படியும், திருமண பதிவாளர் சட்டப்படியும், நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என்றும் அப்படி நடக்காத திருமணங்கள் செல்லாது என்றும் அங்கு குடியேறிய இந்திய கூலிகளுக்கு எதிராக 1913 இல் ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதோடு கடுமையான வரி உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கு எதிராகவே அமைந்தது. திருமணமான இந்திய பெண்களின் சட்டப்பூர்வமான மனைவிகளின் தகுதி கேள்விகுறியாகியது. இந்த கொடுமையான சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் அங்கு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை கேள்விப்பட்ட காந்திஜியும் இந்தியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டத்திற்கு தலைமை ஏற்றுநடத்தினார். அந்த போராட்டங்களின் சொற்பொழிவு வள்ளியம்மையை ஈர்த்தது. அந்த போராட்டத்தின்போது பிரிட்டிஷார் காந்தியாரின் மீது துப்பாக்கியை நீட்டி முதலில் என்னை சுடு பிறகு அவரை சுடலாம் என துணிவோடு முன்னால் வந்து நின்றவர் வள்ளியம்மை.
‘‘பாவம்.... இந்தக் குழந்தை! இது, எதற்காகச் சிறைக்கு வரவேண்டும்’’ என்று சிறை அதிகாரி ஒருவர் சொன்னபோது... அதற்கு அந்தப் பெண், ‘‘நான் குழந்தையும் அல்ல... பாவமும் அல்ல’’ என்று சீறினார். அவர் வேறு யாருமல்ல... விடுதலைக்காக உழைத்த வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை.
பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, பார் போற்றும் மகாத்மா காந்தியாக மாற்றியது அந்த நொடிதான்!. இதுகுறித்து காந்தியடிகளே, ‘‘பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றிகண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்’’ என்று பெருமைபொங்கச் சொன்னார்.
‘‘நான் படிக்கிறேன்!’’
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த சமயம்... இந்தியாவிலிருந்து சென்று அங்கு வசித்தவர்களுக்கு எதிராகச் சில சட்டங்கள் இயற்றப்படுகிறது. அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள், இங்கிருந்து சென்றவர்கள். எதிர்த்து நின்ற இந்தியர்களுக்கு ஆதரவாய்க் குரல்கொடுத்துக் களத்தில் இறங்குகிறார் காந்தி. அவருக்குப் பின்னால், பெண்கள், குழந்தைகள் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் நிற்கின்றனர். தனக்கு முன் கூடியிருந்த அந்த மக்களிடம் ஓர் உறுதிமொழித் தாளை எடுக்கிறார், காந்தி. அதை, தான் படிப்பதற்கு முன்பு... அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, ‘‘இந்த உறுதிமொழித் தாளை யார் படிக்கிறீர்கள்’’ என்கிறார். ‘‘நான் படிக்கிறேன்’’ என்று ஓடி வருகிறார் சிறுமியான வள்ளியம்மை. அப்போது அவருக்கு வயது 15. ‘‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’’ என்ற வள்ளியம்மையின் முழக்கத்துடன் அந்தப் பயணம் புறப்படுகிறது. பயணத்தின்போது காந்தியைச் சுட்டுத்தள்ளத் திட்டமிட்ட தென்னாப்பிரிக்கப் போலீஸ், அதற்காகக் காத்திருக்கிறது. அதைக் கவனித்துவிட்ட வள்ளியம்மை, திடீரென காந்திக்கு முன் வந்து... ‘‘இப்போது அவரைச் சுடு பார்க்கலாம்’’ என்று சொல்லி அவரைக் காக்கிறார். அத்துடன், அங்கிருந்த மக்களையும் கவனித்துக்கொள்கிறார். ‘‘வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு என்னைச் சுடவந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிச் சென்றான்’’ என்று காந்தியே குறிப்பிடுகிறார்.
‘‘இதுதான் இந்தியாவின் கொடி!’’
நடைப்பயணத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். அதற்காக, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வள்ளியம்மையும் கைதுசெய்யப்பட்டு அவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. கைதான அனைவரும் ‘இந்தியர்கள்’ என்று பதிவு செய்வதைப் பார்த்த சிறை அதிகாரிகள், ‘‘ஆப்பிரிக்கர்கள் என்று பதிவுசெய்ய வேண்டியதுதானே’’ என்று நக்கலாய்க் கேள்வி கேட்கிறார்கள். வள்ளியம்மையிடம் ஓர் அதிகாரி, ‘‘இந்தியா என்ற ஒரு நாடே இல்லையே, உங்களுக்கு ஒரு கொடியும் கிடையாதே’’ என்று கேட்கிறார். உடனே வள்ளியம்மை, தான் அப்போது உடுத்தியிருந்த துணியின் ஓரத்தைக் கிழித்து, ‘‘இதுதான் இந்தியாவின் கொடி. இனி இதற்கு ஒரு நாடும் உண்டுதானே’’ என்று பதிலளிக்கிறார். முடிவில், வழக்குப் பதிவுக்குப் பிறகு அனைவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
வள்ளியம்மையும் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, சரியான சிகிச்சையும், நிம்மதியான தூக்கமும் இல்லாமல் அவதிப்படுகிறார். ‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டுச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்கிறார் சிறை அதிகாரி. அதற்கு வள்ளியம்மை, ‘‘அது சத்தியாக்கிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேயேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்கிறார்.
‘‘தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன்!’’
ஒருகட்டத்தில், காந்திக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக உடன்பாட்டின்படி போராளிகள் விடுவிக்கப்பட்டார்கள். வள்ளியம்மையும் விடுதலை கிடைத்து வீட்டுக்கு வருகிறார், ஒரு போர்வை சுற்றப்பட்ட உடம்புடன். வீட்டுக்கு வந்தும் எழமுடியாமல் படுக்கையிலேயே இருக்கிறார். அவரை நேரில் பார்த்து விசாரிக்கிறார் காந்தி. ‘‘சிறைதானே உன் உடம்பை இப்படியாக்கிவிட்டது. சிறை சென்றதற்காக நீ வருத்தப்படுகிறாயா’’ என்கிறார். அதற்கு வள்ளியம்மை, ‘‘எனக்கு வருத்தமா... நிச்சயமாக இல்லை. இப்போது இன்னொரு தடவை கைதுசெய்யப்பட்டால்கூடச் சிறைக்குச் செல்ல நான் தயார்’’ என்கிறார், அந்த நிலையிலும் துணிச்சலாக. காந்தி மீண்டும் விடாமல், ‘‘சிறை சென்று நீ இறந்துபோவதாக இருந்தால் என்ன செய்வாய்’’ என்கிறார். அதற்கும் அவர் சற்றும் தளைக்காமல், ‘‘அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்’’ என்கிறார்.
இறுதியில் அங்கிருந்து விடைபெறும் காந்தி, வள்ளியம்மையின் இறுதிமூச்சு விடைபெறும்போது அவர் அருகில் இல்லை. ஆனால், அவருடைய கல்லறைக்குச் சென்று இறுதியஞ்சலி செலுத்திய காந்தி, ‘‘இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் வள்ளியம்மை’’ என்றார் பெருமைபொங்க.
மேலும், ‘‘இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயரும் நீங்கா இடம்பெற்றிருக்கும்’’ என்றார். உண்மைதானே!
தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் தனது பூர்வீகம் தில்லையாடி கிராமம் என்பதால் தில்லையாடி வள்ளியம்மை என்று அன்று முதல் அழைக்கப்பட்டார். காந்தியும் தனது கூட்டங்களில் வள்ளியம்மையின் தியாகத்தை கூறி நெகிழந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து தில்லையாடிக்கு வந்திருந்த காந்தி அந்த மண்ணை அள்ளி கண்ணில் ஒத்திக்கொண்டார். அப்போது தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதலில் விடுதலை உணர்வை ஊட்டினார் என கூறியிருக்கிறார்
ஆனால் இந்திய சுதந்திர அரசு வள்ளியம்மையின் நினைவை மறந்துவிட்டது, வள்ளியம்மை தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் மறந்துவிட்டது. அவரது பிறந்தநாளில் மட்டும் கட்டாயத்தின் பெயரில் அரசு பூமாலை போடுகிறது. மற்றபடி ஆளில்லா, பாழான கட்டிடமாகவே கிடக்கிறது.
No comments:
Post a Comment