பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 10, 2021

பரண் ஏணிகள்! (சிறுகதை)

 

                                                                        

தலைநகரம் டெல்லியில் ராம்லீலா மைதானம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து மைதானம் நிறைந்து கூடியிருந்தார்கள். அவர்களில் பலரும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வந்தவர்களாகத் தெரிந்தார்கள்.

பலர் கட்டுச்சொறு கட்டிக் கொண்டு வந்து மைதானத்தின் ஓரத்தில் மரத்தடியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த மேடையில் ஒல்லியான உருவமும், தலையில் காந்திக் குல்லாயும் அணிந்த ஒரு மனிதர் பேசிக் கொண்டிருந்தார். அவர் இந்தியிலோ அல்லது மராத்தி மொழியிலோ பேசியிருக்க வேண்டும், அவ்விரண்டு மொழியும் தெரியாத எனக்கு அவர் பேசுவது என்ன என்பது புரியவில்லை. என்றாலும் அவ்வப்போது மக்கள் ஆரவாரம் செய்தும் கைதட்டியும் வந்ததைப் பார்த்தால் அவர் ஒரு வெகுஜனத் தலைவராக இருக்க வேண்டும். அங்கு கட்டப்பட்டிருந்த பற்பல விளம்பரப் பலகைகளிலும் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்ததால் அவைகளில் என்ன எழுதியிருக்கிறது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

            நான் பயணம் செய்த காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கு கூட்டத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஒருவரிடம் போய் ஆங்கிலத்தில் அங்கு என்ன நடக்கிறது, அதில்  பேசுபவர் யார், அங்கு நடப்பது என்ன கூட்டம் என்று விசாரித்தபோதுதான், அது ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம் என்றும், நாட்டில் நடக்கும் ஊழல்களையும், கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும் கள்ள மார்க்கெட், மதுவினால் மக்கள் படும் துயரம் இவற்றைக் களைய வேண்டுமென்ற கோரிக்கைகளோடு அந்த கூட்டம் நடைபெறுவதாகவும் அவர் சொன்னார்.

அங்கு எதற்குக் கூட்டம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, அங்கு பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு இந்தி படிக்கும் வாய்ப்பு பள்ளிக்கூடங்களில் மறுக்கப்பட்டதால் என்னால் அங்கு நடப்பதை அறிந்து கொள்ள இயலவில்லை. இப்படி ஒரு நாள் வட இந்தியாவுக்கு வந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தால், தனிநபர்களிடமாவது அல்லது இந்தி பிரச்சார சபா மூலமாவது நான் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்று இப்போதுதான் என் மனதில் உயதயமானது. என்ன செய்வது காலம் கடந்து விட்டது.

            நான் பேச்சுக் கொடுத்த மனிதர் டெல்லிக்காரர் போல தோன்றவில்லை. அவருடைய உடை, தலையில் அணிந்த தலைப்பாகை இவற்றிலிருந்து அவர் ஒரு மராத்திய மாநிலத்தவராக இருக்க வேண்டுமென்று நினைத்து அவரை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டேன்.

            அவர் சொன்னார் தான் மராத்திய மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்தவர் என்றும், அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட ராலேகான் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூக போராளிதான் அங்கு பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

            இவர் மராத்தியத்திலிருந்து இங்கு வந்து போராட என்ன காரணம், அவரது பின்னணி என்ன என்பதை விசாரித்தேன். அந்த மனிதர் சற்று பொறுமையாக எனக்கு அவரைப் பற்றியும், அவர் கடந்து வந்த பாதைகள், அவரால் அகமதுநகர் மாவட்டத்திலுள்ள அவர் கிராமம் எப்படி முன்னேறி தற்சார்புடையதாக ஆயிற்று என்பதையெல்லாம் பற்றி விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

            அப்போது ஒரு சாய்வாலா  டீ விற்றுக் கொண்டு வந்தார். அவரிடம் டீ வாங்கி இருவரும் அருந்திக் கொண்டே, அவர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கூட்டம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது, அவ்வப்போது கைதட்டலும் கோஷமிடலும் கேட்டுக் கொண்டிருந்தது.

            அவர் சொன்ன வரலாறு இது.

“இதோ பேசிக் கொண்டிருக்கிறாரே, இவர்  மராத்திய மாநிலத்தில், அகமதுநகர் மாவட்டம் ராலேகானைச் சேர்ந்தவர். அந்த கிராமம் மிகச் சிறிய கிராமம். அங்கு சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தனர். அங்கு மழைக்காலத்தில் மட்டும் மழைத் தண்ணீரைப் பயன்படுத்திச் சில புஞ்சைப் பயிர்களைப் பயிரிட்டு, மற்ற காலங்களில் வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு வறுமையில் காலம் கழித்து வந்தனர் மக்கள். அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தையும், கல்வி அறிவு அதிகமில்லாத சூழ்நிலையையும் பயன்படுத்தி அங்கு சில கள்ளச் சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்சும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வூர் மக்களும் பெரும்பாலும் அவர்கள் காய்ச்சும் கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தார்கள். திருட்டும் வழிப்பறியும் அந்தப் பகுதியில் அதிகமாக இருந்து வந்தது.

            அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளி மட்டுமே இருந்தது. அதில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அந்த ஊருக்கு எந்த ஆசிரியரும் வரத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ராலேகான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தற்செயலாக அகமதுநகர் சென்றிருந்த போது, அங்கே ராணுவத்துக்கு ஆள் எடுப்பதாக அறிந்து அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு இவர் உடல் தகுதியில் சற்று முன் பின்னாக இருந்த போதும் எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

            இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இவர் பயணம் செய்த லாரியில் பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் குண்டு வீசிப் பலரைக் கொன்றதை இவர் கண் முன்னால் பார்த்தவர். அதில் தப்பிப் பிழைத்த இவர் பணியிலிருந்து விடுபட்டுத் தன் கிராமத்துக்குத் திரும்பினார். அங்கு கிராமத்தில் இருந்த குடும்பங்களில் எவரும் வசதியுள்ளவர்களாகவோ, நன்கு படித்தவர்களாகவோ இல்லை என்பதால் கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதென்று முடிவெடுத்து அங்கிருந்த பல இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கினார். அதை அவர்கள் மொழியில் சொல்வதானால் “தருண் மண்டல்” ஆங்கிலத்தில் “யூத் கிளப்” என்ற பெயரோடு அது தொடங்கியது.

            அந்த இளைஞர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முதலில் ஒழிக்க அரும்பாடுபட்டு அரசாங்க அதிகாரிகளையெல்லாம் சென்று பார்த்து முறையிட்டு ஒருவழியாகச் சாராய தொழிலை ஒழித்தனர். தங்கள் ஊருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி வேண்டுமென்று பல காலம் மாவட்டத் தலைநகரத்துக்கும், மாநிலை தலைநகரான பம்பாய்க்கும் அலையாய் அலைந்தார்கள். கையில் காசில்லாமல், இருந்த காசில் ரயிலில் பயணம் செய்து, ரயில் நிலையங்களில் செய்தித் தாள்களை விரித்து அதில் படுத்திருந்து மேலதிகாரிகளைச் சந்தித்துத் தங்கள் கிராமத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டுகோள் விடுத்துப் பார்த்தனர். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.

            கடைசியில் கிராமத்து இளைஞர்கள் அனைவரும் தத்தமது குடும்பத்தோடு மாவட்டத் தலநகருக்குச் சென்று மாவட்ட உயரதிகாரிகளை முற்றுகை இட்டனர். ஒரு கிராமமே படையெடுத்து வந்து சூழ்ந்து கொண்ட பிறகுதான் அரசாங்க அதிகாரிகள் விழித்துக் கொண்டு, இவர்களது குறைகளைக் காதுகொடுத்துக் கேட்டனர்.

            இவர்கள் கேட்டதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயங்கள் அல்ல. படிப்பதற்கு நல்ல பள்ளிக்கூடம், உடல் நலத்தைப் பேண ஒரு மருத்துவ மனை இவகளோடு, மழைக் காலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க நீர்நிலைகள், விவசாயத்துக்கான உதவிகள் அவ்வளவே. எந்தவித நவீன வசதிகளுக் இல்லாத, அந்த கிராமத்துக்கு எவரும் ஆசிரியராக வர விருப்பப் படவில்லை என்பதைக் காரணமாகச் சொன்னார்கள். அதன் பிறகு கிராம மக்களே ஒன்று சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் கிராமத்தில் பணியாற்ற படித்த இளைஞர்கள் வந்தால், அவர்களுக்குத் தங்க இடமும், உணவுக்கு வசதிகளும் செய்து தருவதாகச் சொன்னதும் ஒருசிலர் வந்தனர். பள்ளிக்கூடம் நன்கு நடைபெறத் தொடங்கியது.

            எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் கிராமத்து மக்களே ஒருங்கிணைந்து அங்கிருந்த ஒரு பெரிய குளத்தைத் தூர் வாரி, மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கும்படி கரைகள் அமைத்து, பாசனத்துக்கு ஒரு வாய்க்காலையும் உருவாக்கி ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும்படி இவர்களே ஏற்பாடு செய்து கொண்டனர்.

            இப்படியொரு புரட்சி இந்த கிராமத்தில் நடைபெற்று வருவது செய்திகளில் பார்த்து பலரும் இவர்களுக்கு உதவி புரிய முன்வந்தனர்.  முழுமையான உயர்நிலைப் பள்ளியும் உருவாயிற்று. அதில் பணியாற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுக்கும் உதவாத கிராமமாகக் கிடந்த இடத்தை இப்போது எல்லோரும் திரும்பிப் பார்க்க வைத்த அந்த இளைஞர் மீது மக்களின் கவனம் சென்றது.

            அந்த கிராமத்தில் ஒரு பழைய கோயில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. கிராமத்து மக்கள் வழிபடவும், பொதுக்காரியங்களை விவாதிக்க ஒரு பொதுவிடமும் தேவை என்பதை உணர்ந்து அவர்கள் கோயிலைப் புனருத்தாரணம் செய்தனர். கிராம சங்கத்துக்கான ஒரு கட்டடமும் கட்டி பயன்பாட்டுக்கு வந்தது. சுதந்திரம் அடைந்த பின் நாடு அடைந்து வரும் முன்னேற்றத்துக்கும் அதன் வேகத்துக்கும் தக்கபடி இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு இந்த ராலேகான் கிராமமும் முன்னேறத் தொடங்கியது. மின்சாரமும், குடிநீர் மேல்தொட்டி கட்டி தண்ணீர் விநியோகமும் தொடங்கியது. காய்கறிகள் பயிரிட்டு அவற்றை வெளியிடங்களுக்குக் கொண்டு சென்று விற்றதில் நல்ல லாபம் பெறத் தொடங்கினர்.

            அப்படி ஒரு கிராமத்தை அடிமட்டத்திலிருந்து மேலே கொண்டு வந்து அனைவரும் ஆர்வத்தோடு பார்க்க வைத்த அந்த இளைஞன், ராணுவத்தில் பணியாற்றியிருந்த போதும், பார்ப்பதற்கு அப்படியொன்றும் வாட்ட சாட்டமான ஆள் இல்லை. சுமாரான உடலமைப்பு, மெல்லிய குரல் இவற்றோடு மனதில் மட்டும் இரும்பு போன்ற உறுதியைக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

            அவர்தான் இதோ இந்த ராம்லீலா மைதானத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் கிராமத்தை எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்தாரோ, எப்படி அரசாங்க அதிகாரிகளை திரும்பிப் பார்க்க வைத்தாரோ, எப்படி மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை விதைத்தாரோ, அதைப் போல இந்த நாடு முழுவதிலும் பரவிக்கிடக்கும் ஊழலை, லஞ்சத்தை ஒழித்து இங்கு ஒரு ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.

            “அது சரி! இவர் வந்து இங்கே டெல்லியில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாரே, இவருக்கு இங்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்ன?” என்றேன்.

            “அப்படிச் சொல்ல முடியாது. அவர் பெயர் வேண்டுமானால் இங்கு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அவர் செய்ய விரும்புகின்ற மாற்றங்கள் நியாயமானவை, ஊழல் நிறைந்த நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டுமென்கிற ஆர்வம், ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமுதாயம், இளைஞர்களுக்குத் தகுந்த வேலை வாய்ப்புகள் இவைகள் எல்லாம்தான் இவருடைய கோரிக்கை. இவைதான் மக்களை இவர் பக்கம் ஈர்க்கிறது என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

            “அவருடன் ஒரு இளைஞர் இருக்கிறாரே, அவர் யார்? அவருக்கும் இவரைப் போல நாட்டின் மீது அக்கறை இருப்பதால் தான் இங்கும் வந்து கலந்து கொண்டிருக்கிறாரா?” என்றேன்.

            “இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. பெரியவருடைய பணிகளையும், கடந்த கால சாதனைகளையும் அறிந்தவர்கள், இவர் சமூகத்தை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார், இவருடைய மாநிலத்தில் இவர் சாதித்தவைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் இவருக்காக இங்கே வந்திருக்கிறார்கள். இவருடன் இருப்பவர்கள் பற்றியெல்லாம் மக்களுக்கு அப்படியொரு எண்ணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெரியவருடைய நிழலில் தாங்களும் வளர நினைப்பவர்கள் இவர்கள். ஆகையால் இங்கு உரையாற்றும் அனைவருமே ஊழலுக்கு எதிரானவர்கள் என்றோ, ஒரு ஒளிமயமான வருங்காலத்தை விரும்புபவர்கள் என்றோ, அல்லது இவர்கள் அனைவருமே நேர்மையானவர்கள் என்றோ சொல்ல முடியாது” என்றார் அவர்.

            “அப்படியானால், இன்றைய நிலைமையில் பெரியவர் ஒரு கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சி புரிந்தால், அவர் விரும்புகின்ற மாற்றங்களையும், ஊழல் இல்லாத ஆட்சியையும் கொடுக்க முடியுமல்லவா? செய்வாரா?” என்றேன்.

            “என்னங்க இது! உலகம் புரியாத ஆளா இருக்கீங்களே! ஊருக்கு வெளிச்சம் போட்டு வேடமிடும் வேடதாரிகள்தான் பதவிகளைப் பெற முடியும். அப்படிப் பெற்ற பதவிகள் உங்களுக்கும் எனக்கும் சேவை செய்வதற்காக அல்ல, தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் வாழவைக்கத்தான். அதுதான் இன்றைய அரசியல் நிலைமை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.”

            “அப்படியென்றால், இந்தப் பெரியவர் இதனால் தனக்கு எந்தவித பயனும் இல்லை, எதிர்காலம் இல்லை, பதவிகள் இல்லை, எந்த ஆதாயமும் இல்லை என்பது தெரிந்தும் ஏன் இப்படி தன்னை வருத்திக் கொள்ள வேண்டும்?” என்றேன்.

            “நீங்கள் சொல்வது மிகவும் சரி. பிழைக்கத் தெரியாத மனிதன். தான் நேர்மையாக வாழ்ந்து, தனக்கென்று ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு, அதைத் தன் சொந்த ஊரில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியதுடன், இந்த நாட்டையே அதுபோல மாற்றிவிட முடியும் என்று நம்பிச் செயல்படும் இவரை புத்திசாலியாக - அல்ல அல்ல, இன்றைய அரசியலுக்கு ஏற்றவராகக் கருத முடியாது” என்றார் அவர்.

            “அப்படியானால், அவருடைய நிழலில் குளிர்காய வந்து அமர்ந்திருக்கும் இதரத் தலைவர்கள் நிலைமை என்ன? அவர்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்றேன்.

            “இவரைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் சாமர்த்தியத்தால் ஏதேனும் பதவிகளையோ, பலன்களையோ பெற்று சுகபோக வாழ்வுக்கு வழிவகுத்துக் கொள்வார்கள்” என்றார்.

            “அப்படியானால் இவர் நிலைமை?”

            “அவர் ஏமாளியாக இருந்து, அடுத்தவர்களை மேலே ஏற்றிவிடும் ஏணியாக இருந்து கொண்டிருக்கிறார் என்பதை இவர் உணராமல் போனால் என்ன செய்ய முடியும்? இவர் தலைவிதி அவ்வளவுதான். இவர் தோளின் மீது பயணம் செய்து மற்றவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கப் போகிறார்கள், இவர் பாவம், இருக்குமிடம் தெரியாமல் எங்கோ போய் மறைந்து கொள்வார், அதுதான் நடக்கப் போகிறது” என்று சொல்லிவிட்டுப் போனார் அந்த உள்ளூர்க்காரர்.

            எனக்கு தமிழ் நடிகர் பி.யு.சின்னப்பா பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அது “உலகோரை மேலேற்றும் அருள்ஞானி நான், தான் ஓர் முழம் ஏற முடியாத பரண் ஏணி நான்” எனும் ‘கிருஷ்ண பக்தி” படப்பாடல்.

            ஆம்! அவர் சொன்னது முற்றிலும் உண்மை. இந்த கதாநாயகன் வேறு யாரும் அல்ல! சாட்சாத் அண்ணா ஹசாரே எனும் போராளியே அவர்.

ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,                                                  28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை,                                                         தஞ்சாவூர் 613007. # 9487851885

No comments: