சுப்ரமணிய சிவா, இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் தமிழகத்தில் முதன்மை
வகித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் ஆகியோர் காலத்தில் வ.உ.சி.அவர்களுடன்
தோளோடு தோள் நின்று போராடி, சிறை சென்று, தொழுநோயுடன் வெளிவந்து, அந்த நிலையிலும் கடைசி
மூச்சு வரை தேசத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகான் சுப்ரமணிய சிவா.
இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் இந்தியா முழுவதிலுமுள்ள தலைவர்களில்
பலர் தேசியத்தையும், தெய்விகத்தையும் தங்களது இரு கண்களாக பாவித்து போராடினார்கள்.
அப்படிப்பட்ட தலைவர்களில் தமிழகம் தந்த மாவீரர் சுப்ரமணிய சிவா.
இவர் பிறந்த ஆண்டு 1884. வத்தலகுண்டு எனும் ஊரில் ராஜம் ஐயர் என்பவருக்கும் நாகம்மாள்
எனும் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். சிவாவுக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்று இரு
சகோதரிகள், சுப்ரமணியன், வைத்யநாதன் என்று இரு சகொதரர்கள் உண்டு. இவர்கள் குடும்பம்
ஏழ்மையான குடும்பம். சிவா மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்வாகவில்லை. தூத்துக்குடியில்
போலீஸ் இலாகாவில் சாதாரண வேலையில் சேர்ந்தார். வேலையிலிருந்து இவரை நீக்கிவிட்டார்கள்.
அந்த வருத்தத்தில் இவர் துறவுக் கோலம் பூண்டு அரசியலுக்கு வந்தார். இவர் இளமை முதல்
ஆன்மிக வாழ்வில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருவனந்தபுரத்தில் ஊட்டுப்புறை ஒன்றில் இவர்
தங்கி படித்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அவருடைய இளம் வயதில்
ஆன்மீக நாட்டம் மிகுந்து திருவனந்தபுரத்தில் சதானந்த சுவாமிகள் என்பவரிடம் ஈடுபாடு
கொண்டு வாழ்ந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்த போது இவருக்குப் பல ஆன்மீகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள்
ஆகியோருடைய சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பத்திரிகைகளின் வாயிலாக இந்தியா
அடிமைப்பட்டுக் கிடப்பதையும், சொந்த நாட்டிலே நாம் அந்நியருக்கு அடிமைச் சேவகம் செய்து
கொண்டிருப்பதும் இவருக்கு தேசாவேசத்தை உண்டாக்கியது. சிவா தினந்தினம் பத்திரிகை படிக்கும்
வழக்கமுடையவர். அதில் வரும் செய்திகளைப் படித்து அன்றாட நிகழ்வுகளைக் கவனித்து வந்தார்..
இவர் தர்மபரிபாலன சமாஜம் என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கி, அங்கு நண்பர்களை அழைத்து
அரசியல் விவகாரங்களை அலசுவார். இப்படி உள்ளே தொடங்கிய இவரது பேச்சு, மெல்ல மெல்ல
தெருவுக்கும் வந்தது. இவர் பேச்சு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து
மேடைப் பேச்சின் மூலம் தேசபக்திப் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படி இவருடைய பேச்சு
மக்கள் மத்தியில் ஒரு சுதேசிய உணர்வைத் தூண்டிவிட்ட காரணத்தால், இவரை இப்படியே விட்டு
வைத்தால் ஆபத்து என உணர்ந்த திருவனந்தபுரம் சமஸ்தானம் இவரை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டுவிட்டது.
அன்றைய காலத்தில் திருவனந்தபுரம் சமஸ்தான மன்னர்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக்குள்
இருந்தமையால், இப்படியொரு தனி மனிதன் அரசுக்கு எதிராகப் பேச அனுமதித்து விட்டால், தங்களுக்கு
ஆபத்து எனக் கருதி, அவர்கள் சிவாவை தங்கள் சமஸ்தானத்தை விட்டு நீங்கிவிடுமாறு உத்தரவு
பிறப்பித்தனர். அங்கிருந்து கால்நடையாகவே நடந்து வழிநெடுக மக்கள் மத்தியில் பேசி, தேசபக்தி
உணர்வை ஆங்காங்கே விதைத்துக் கொண்டு வந்தார். அப்படியே நடைபயணத்தில் வருகின்ற வழியெங்கும்
மக்களைச் சந்தித்து பேசிக் கொண்டே திருநெல்வேலியை வந்து அடைந்தார்.
அப்போது தென் தமிழகத்தில் திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தலைமையில் தேசபக்தி
ஊட்டப்பட்டு மக்கள் மத்தியில் ஒரு ஆவேச உணர்ச்சி பரவ ஆரம்பித்திருந்தது. தமிழகத்துக்கு
திருநெல்வேலி தேசிய எழுச்சிக்கு வித்திட்டது எனக் கூட சொல்லலாம். தூத்துக்குடி வக்கீலாக
இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்திய பொருளாதாரம் ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைக்
கண்டு, ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கி இலங்கைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே
கப்பல் போக்கு வரத்தைத் தொடங்கியிருந்தார்.
1906இல் லார்ட் கர்சான் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்து வைத்தார். அந்தப்
பிரிவினையை எதிர்த்து நாட்டில் அரசியல் எழுச்சி உருவாகியது. எங்கெங்கும் போராட்டங்கள்
கர்சானின் முடிவை எதிர்த்து மக்கள் போராடி சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது மக்கள்
எழுச்சி ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தீவிரமாக உருவாக்யது. தமிழ்நாட்டில்
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சென்னையில் சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகள்
வாயிலாக சுப்ரமணிய பாரதியார் எழுத்துக்களும் மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கி
இருந்தது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் தொடர்பினால், சென்னைக்கு பல தேசியத் தலைவர்கள்
வந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். பால கங்காதர திலகம், பிபின் சந்த்ர பால், லாலா
லஜபதிராய், அரவிந்த கோஷ் போன்ற மாபெரும் தலைவர்களை தமிழகத்துக்கு பாரதியார் அறிமுகம்
செய்வித்தார். தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை பால கங்காதர திலகரை நேரில் சந்தித்து
அவருடைய சுதந்திர எழுச்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அந்த காலகட்டத்தில்
தேசபக்தர்கள் எழுப்பிய “வந்தேமாதரம்” எனும் கோஷம் எங்கெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது.
தென் இந்தியாவில் அந்த வந்தேமாதர மந்திரத்தை உபதேசித்த வ.உ.சிதம்பரம் பிள்ளையை “வந்தேமாதரம்
பிள்ளை” என்றே அழைக்கத் தொடங்கினார்கள். அப்படி வ.உ.சி. நாட்டையே திரும்பிப் பார்க்கும்படி
செய்திருந்த காலத்தில் சுப்ரமணிய சிவா திருநெல்வேலி வந்தபோது அவரைப் பற்றி அறிந்து
அவருடன் நட்பு பூண்டார். அது முதல் இவ்விருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல மேடைகள்
தோறும் சுதந்திர கோஷத்தை உரக்க முழங்கினார்கள். அவர்களால் மக்கள் மத்தியில் வந்தேமாதரம்
எனும் மந்திரம் பிரபலமாயிற்று.
இப்படி திருநெல்வேலி தமிழகத்திலேயே தேசிய உணர்வை மிக வேகமாக வெளிக்கொணர்ந்த பிரதேசமாக
ஆவதற்கு வ.உ.சி., சிவா, பாரதியார் ஆகியோரே காரணமாக இருந்தனர். தூத்துக்குடியில் சுதேசி
ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் வ.உ.சி. தொடங்கிய கப்பல் கம்பெனியை இல்லாமல்
ஆக்கிவிட வேண்டி ஆங்கிலேய கப்பல் கம்பெனியார் பிரம்மப் பிரயத்தனங்களைச் செய்து வந்தனர்.
சுதேசிக் கப்பலுக்கு ஆகும் பயணச் செலவைக் காட்டிலும் தாங்கள் குறைத்துக் கொள்ளவும்,
ஒரு கட்டத்தில் இலவசமாக அழைத்துச் செல்லவும் கூட அவர்களது கப்பல் கெம்ப்னி முன்வந்தது.
எப்படியாயினும், எவ்வகையாயினும் சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்தே தீருவது என்பது
அவர்களுடைய சங்கல்பம்.
இப்படி வ.உ.சி. தலைமையில் தென் தமிழ்நாட்டில் சுதந்திரக் கனல் பரவி வந்து கொண்டிருக்கும்
நேரத்தில், சென்னையில் மகாகவி பாரதியார் ஏற்பாட்டில் வட இந்தியாவில் புரட்சிக்காரராகக்
கருதப்பட்ட பிபின் சந்திரபால் எனும் தலைவரை சென்னைக்கு அழைத்து கடர்கரையில் பேசச் செய்தார்.
அவர் தொடர்ந்து ஏழெட்டு நாட்கள் தங்கி சென்னையில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்து
நடந்தது 1907 மே மாதத்தில். இப்படி தெற்கில் வ.உ.சி. சிவா ஆகியொரின் சண்டமாருத
நொற்பொழிவுகள் அதிகரிக்கத் தொடங்கவும், ஆங்கில ஏகாதிபத்தியம் இவர்களைக் கைது செய்து
சிறையிலடைக்க ஏற்பாடுகளைச் செய்தது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பல பொதுக்கூட்டங்களில்
தேசபக்திப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தேசத் துரொகமானது என்று ஆங்கில ஏகாதிபத்தியும்
அவர்கள் மீது 1908 பிப்ரவரி மாதம் வழக்குகளைத் தொடுத்தது.
1907ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசின் ஆண்டு மாநாடு சூரத் நகரில் நடந்தது. அந்த
மகாநாட்டில் காங்கிரசில் தீவிரமாக இருந்த குழுவினருக்கும், மிதவாத காங்கிரசாருக்கும்
மோதல் ஏற்பட்டு மாநாடு நின்று போயிற்று. அதில் பங்கேற்றிருந்த தீவிரவாத காங்கிரஸ் தலைவர்கள்
தனிக்கட்சி தொடங்கி அதற்கு ‘நேஷனலிஸ்ட் பார்ட்டி’ என்று பெயரிட்டனர். வ.உ.சி., சிவா,
பாரதி இவர்களெல்லாம் அப்போது திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரசாராக விளங்கி வந்தனர்.
1908இல் இந்த நேஷனலிஸ்ட் தீவிர வாத காங்கிரசார் தூத்துக்குடியில் மிகப் பெரிய கூட்டங்களைக்
கூட்டிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அந்த கூட்டங்களில் எல்லாம் வ.உ.சி.யும் சிவாவும்
உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் சொற்பொழிவுகள் ஆற்றினார்கள்.
தூத்துக்குடியில் கோரல் மில் என்கிற நிறுவன தொழிலாளர்கள் ஆங்கில முதலாளிகளால்
சுரண்டப்படுவதை எதிர்த்து ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது. வ.உ.சி. அவர்கள் தலைமை வகித்து
நடத்திய அந்தப் போராட்டத்தில் சிவாவும் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துப்
பேசியிருக்கிறார். இப்படி தெற்கே வெகு தூரத்தில் நடக்கும் இந்த போராட்டங்களை அன்றைய
சுதேசமித்திரன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆதரித்து தன் பத்திரிகையிலும்
எழுதியிருக்கிறார்.
சிவா அந்தக் காலத்தில் நடத்தியது அந்நாளைய ஆன்மீக அரசியல்தான். இவர் பேசும்போது தொடக்கத்தில்
எல்லா மதங்களின் கோஷங்களையும் எழுப்பி, அதாவது அல்லாஹு அக்பர், சர்வத்ர நாம சங்கீர்த்தனம்,
வந்தேமாதரம் என்றெல்லாம் கோஷம் எழுப்பிய பிறகுதான் பேசுவாராம். தேசபக்தியை தெய்வபக்திக்கு
ஈடாக மதித்து அன்றைய தலைவர்கள் போராடியிருக்கிறார்கள்.
இந்த கோரல் மில் போராட்டம் காரணமாக இவ்விரு தலைவர்களும் கூட்டங்களில் பேசிய பேச்சுக்களையெல்லாம்
போலீசார் திரட்டி, இவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். இவர்கள்
மீதான வழக்கு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதில் சாட்சி சொல்வதற்காக பாரதியாரையும்,
சுரேந்திரநாத் ஆர்யா வையும் திருநெல்வேலிக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பப் பட்டது.
ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்த சமயம் அவர்களைச் சாட்சி சொல்ல அனுமதிக்க வில்லையாம்.
இந்த வழக்கில் 1908 ஜூலை 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிவாவிற்கு 10 ஆண்டுகள்
கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. வ.உ.சிக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. இந்த கடுமையான
தண்டனையை அப்போது டெல்லியில் இருந்த ஆங்கிலேய பிரதிநிதி மிண்டோ என்பவருக்கு லண்டனில்
இருந்த இந்தியா மந்திரியான மார்லி கண்டித்து கடிதம் எழுதியிருக்கிறார். பிறகு மேல்
முறையீட்டில் இவ்விருவர் தண்டனைகளும் குறைக்கப்பட்டாலும், வ.உ.சி. கோவை, கள்ளிக்கோட்டை
ஆகிய சிறைகளில் அடைபட்டு செக்கு இழுத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். சிவா சேலம் சிறையில்
அடைக்கப்பட்டு அங்கே தொழுநோய் தாக்கி கடைசி வரை தொழு நோயால் துன்பப்பட்டு மாண்டு போன
கொடுமையும் நடந்தது.
இவ்விருவர் மேலும் வழக்கு தொடர்ந்து இவர்களை எப்படியாகினும் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று
அயராது பாடுபட்ட ஆங்கிலேய அதிகாரிகள் நீதிபதியாக இருந்த விஞ்சு துரை என்பாரும், கலெக்டராக
இருந்த பின்ஹே என்பாரும் பெரும் பாடு பட்டிருக்கிறார்கள்.
தீரர் சுப்ரமணிய சிவா, இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட காரணத்துக்காக, அவர் பேசிய
பேச்சுக்கள் தேசவிரோதப் பேச்சுக்கள் என்று சொல்லி பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் அவருக்கு
மூன்று முறை சிறை தண்டனை விதித்துச் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. முதல் கட்டமாக
1908 ஜூலை 7 முதல் 1912 நவம்பர் 2 வரையிலான ஆறாண்டு கால சிறை முதலில் கிடைத்தது. சேலம்
சிறையில் அடைபட்டிருந்த அந்த சிறைவாசத்தில்தான் அவருக்குத் தொழு நோய் பாதிப்பு ஏற்பட்டு
அது மிஞ்சிய வாழ் நாள் முசுதும் துன்பத்தில் ஆழ்த்தியது.
சிறையிலிருந்து வெளிவந்த அவர் மீண்டும் தான் தேச சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போவதாக
அறிவித்து ஒரு கவிதையை எழுதினார். அதில் அவர் குறிப்பிடும் ஒரு வரியில் “கொடியதோர்
வியாதி கொல்லுது என்னை” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை படிப்பவர்கள் கண்ணீர் சிந்தாமல்
இருக்க முடியாது.
முதல் சிறைவாசம் முடிந்து வெளிவந்த சிவா சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். அங்கு
அவர் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு, ஒரு நாற்காலி இவற்றை எடுத்துக் கொண்டு போய் கடற்கரையில்
போய் பாடி கூட்டத்தை வரவழைத்து அவர்களிடம் சுதந்திம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து
பேசி வந்தார். அதோடு அவர் பத்திரிகை தொடங்கி அதில் ஆசிரியராகவும் இருந்து நடத்தினார்.
சுப்ரமணிய சிவாவின் இரண்டாவது சிறை வாசம் இரண்டரை ஆண்டுகள். 1921 நவம்பர் 17 தொடங்கியது.
முதல் சிறைவாசம் முடிந்து இரண்டாம் சிறைவாசம் தொடங்குமுன்னதாக சுமார் ஒன்பது ஆண்டுகளில்
அவருடைய பணிகள் தேசத்தின் சுதந்திரம் பற்றியே அமைந்தன. சிவம் எழுத்தாளராகவும் உருவெடுத்தது
இந்த கால கட்டத்தில்தான். இவருடைய முதல் நூல் “சச்சிதானந்த சிவம்” என்பது. இவரே சொந்தமாக
1912இல் “ஞானபானு” எனும் ஒரு மாத இதழைத் தோற்றுவித்தார். இந்த பத்திரிகை
தொடங்கப்பட்டதன் நோக்கத்தை சிவா அந்தப் பத்திரிகையிலேயே வெளியிட்டிருந்தார். அது, “உறங்கிக்
கிடக்கும் தமிழ் ஜாதியினரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும்,
உற்சாகத்தையும் உண்டு பண்ணி அவர்களை மேநிலையில் கொண்டு வரவேண்டுமென்பதே இப்பத்திரிகையின்
நோக்கம்”. இதை சிவா தன் பெயரில் தொடங்கினால் பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதிக்காது என்பதால்
அதைத் தன் மனைவி மீனாட்சி அம்மாள் பெயரில் தொடங்கி நடத்தினார்.
சுப்ரமண்ய சிவா பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு ஓர் ஆலய எழுப்ப விருப்பம் கொண்டு
அதற்கான அஸ்திவாரமும் போடப்பட்டது. ஆனால் அவரால் மேற்கொண்டு அதை எழுப்ப முடியாமல் அவர்
இவ்வுலக வாழ்வை நீத்தார். ஆனால் அவர் கண்ட கனவு பிற்காலத்தில் நிறைவேற்றப்பட்டு பாப்பாரப்பட்டியில்
இப்பொது பாரதமாதா ஆலயம் எழுப்பப்பட்டு, அது சுப்ரமண்ய சிவாவின் நினைவிடமாகவும் திகழ்ந்து
வருகிறது. தேசம் இவர் போன்ற தேசபக்தர்களை மறந்து விடக்கூடாது என்பதால் இவர் பொன்ற தியாகிகளை
அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவசியம், அப்போதுதான் எதிர்காலத்தில்
சுயநலமற்ற தேசபக்தர்கள் இந்த நாட்டில் உருவாக முடியும். வாழ்க சுப்ரமணிய சிவா புகழ்!
கட்டுரை
ஆக்கம்:-
தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக்
கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. # 9487851885.
No comments:
Post a Comment