குடிப் பழக்கமும், மது விலக்கும்.
நம் பூர்வகுடி மக்கள் உழைப்பில் அதிகம்
நாட்டம் கொண்டு, காடு திருத்தி, கழனிகளை உருவாக்கி, நிலத்தை உழுது பயிரிட்டு உணவுக்கான
தானியங்களை உற்பத்தி செய்து, உண்டு, உடுத்து பெருவாழ்வு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கிராமப் பகுடிகளில் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தென்னந்தோப்புக்கிடையில்
ஒரு கீற்றுக் கொட்டகை பொட்டு அங்கு தென்னை மரத்துக் கள்ளை இறக்கி உழைக்கும் மக்கள்
அங்கு வந்து கள் அருந்தும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
அப்படி
கள்ளுக் கடைகளுக்குப் போகும் வழி என்று ஒரு வழிகாட்டி பலகையைச் சாலையில் அமைத்து அங்கிருந்து
தோப்புக்குள் சென்று குடித்து விட்டு வருவார்கள். கள் குடிப்பது போதை பழக்கம் தான்
என்றாலும், இன்றைய சாராயம், கள்ளச் சாராயம் போல உயிருக்கு உலை வைக்கும் விஷத் தன்மையுடையது
அல்ல. எனினும் அந்தக் குடிப் பழக்கத்தையும் மக்கள் அறவே மறந்து விடவேண்டும் என்பதற்காகத்தான்
சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்திய சுதேசி வீரர்கள் கள்ளுக்கடைகளுக்கு மக்கள் செல்வதைத்
தடை செய்ய வேன்டுமென்று சொல்லி மறியல் செய்து, தடியடி பட்டு சிறை சென்று பற்பல தியாகங்களைச்
செய்த பிறகு மதுவிலக்கு எனும் சட்டத்தை ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த போது கொண்டு
வந்தார்.
மகாத்மா
காந்தி தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸ்
கட்சியின் கொள்கைகளில் இந்திய சுதந்திரத்துக்கு அடுத்ததாக, நமது மக்களின் நலனைக் கருதி
மதுபானங்களை ஒழித்தல் என்பதும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. குடியினால் மனிதனின் அறிவு
மழுங்கிப் போய், சிந்தனை சக்தியை இழந்து, அடிதடி போன்ற தீயவழிகளில் மனத்தைச் செலுத்தி
பாழாய்ப் போய்க் கொண்டிருந்த நிலைமை மாற வேன்டுமென்பதற்காக குடிப்பழக்கத்துக்கு எதிரான
போராட்டத்தை காந்திஜி கையிலெடுத்தார்.
காந்திஜி
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் போராடிக் கொண்டிருந்த சமயம்
1921இல் மது ஒழிப்பு கொள்கையை வகுத்து மக்கள் மத்தியில் குடியின் தீமைகளை எடுத்துரைத்து
நல்வழிகாட்டத் தொடங்கினார். மதுவிலக்கு என்ற சொல் கள், சாராயம் இவற்றுக்கு எதிரானது
மட்டுமல்லாமல் போதை தரும் எதையும் எதிர்க்கும் போர்க்களமாகவே மதுவிலக்கை அவர் போதித்து
வந்தார்.
1936இல்
முதன் முறையாக காங்கிரஸ் கட்சி தேர்தலில் நின்று சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று
ராஜாஜி தலைமையில் ஒரு ஆட்சி இங்கு பதவியேற்ற சமயம், காங்கிரசின் மதுவிலக்குக் கொள்கையை
அமல் படுத்தும் நோக்கில், முதலில் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அறிமுகம் செய்யப்பட்டு
அது வெற்றி கரமாக நடைபெறத் தொடங்கியதும், அதை இதர மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தும்
எண்ணம் தோன்றியது.
இந்திய
நாடு ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற 1947க்குப் பிறகு
மதுவிலக்கு என்பது சென்னை மாகாணம் முழுவதும் அமல் படுத்தப்பட்டு ஒரு தலைமுறையினர் குடியை
மறந்து, ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை
மாகாணம் சீரமைக்கப்பட்டு ஆந்திரா பிரிந்து சென்றதும், சில பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குப்
போனதும், சிற்சில பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டதும் நடைபெற்றது. இந்தியா
சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தமிழகமும் குடிப் பழக்கமற்ற
ஒரு மதுவிலக்குள்ள மாநிலமாகத் திகழ்ந்து வந்தது.
இந்த
நிலையில்தான் 1967 தேர்தலில் தி.மு.க. கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த
பிறகு அரசின் வருமானத்தைப் பெருக்குவதாகச் சொல்லி மதுவிலக்கு சிறிது சிறிதாக விலக்கிக்
கொள்ளப்பட்டு, சாராயக் கடைகளும், கள்ளுக் கடைகளும் எங்கும் பரவி தங்கள் ஆதிக்கத்தை
மிகத் தீவிரமாக மக்கள் மீது காட்டத் தொடங்கியது. இதன் பயன், அரசாங்கத்துக்கு வருமானம்
வந்தது என்னவோ உண்மைதான், ஆனால் உழைக்கும் மக்கள் போதைக்கு அடிமையாகிப் போனார்கள்.
புத்தி பேதலித்து, சுவாதீனம் இழந்து குடிகாரர்களாகப் பழி சுமந்து வாழும் கோடானு கோடி
ஆண்கள், தங்களை நம்பியிருக்கும் மனைவி மக்களைச் சந்தியில் நிறுத்தத் தொடங்கிய காலம்
அது. அரசாங்கத்துக்கு வருமானம் தான் பெரிதாகத் தோன்றியதே தவிர, மக்களின் மகத்தான் வாழ்வு
பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டது.
எங்கு
பார்த்தாலும் சாராயக் கடைகள், அரசாங்கமே சாராயக் கடைகளைத் தங்கள் மேற்பார்வையில் கண்ட
இடங்களிலெல்லாம் வைத்து மக்களை, மக்களை என்ன? இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று
எந்த தராதரமும் இல்லாமல் குடிக்கு அடிமையாக்கி வைத்து விட்டார்கள். பொதுவெளியில் நாம்
பழகும்போது யார் குடித்துவிட்டு பொதையில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் ஆங்காங்கே
பிரச்சினைகள். பெண்கள் குழந்தைகள் தனித்து வழிநடைப் பயணம் செய்ய அச்சம் தோன்றி தனிநபர்
வாழ்க்கை எனப்து எந்நேரத்திலும் ஆபத்துக்குள்ளாகும்படி
இருந்தது.
எதனை
யெத்தனை பெரிய தலைவர்கள், தங்கள் வாழ் நாளெல்லாம் குடிப் பழக்கத்துக்கு எதிராகப் பேசியி,
எழுதியும் வந்து ஒரு வழியாக ஒரு தலைமுறை குடியை மறந்திருந்த சூழ்நிலையில் அவற்றைத்
திறந்து வைத்து மக்கள் வாழ்வில் மண்ணைப் போட்ட காலம் நாட்டின் இருண்ட காலம் எனச் சொல்வது
மிகையாகாது.
குடிய
மறந்து நல்வாழ்வு வாழ்ந்து வந்த மக்களை மீண்டும் குடி எனும் அரக்கன் கையில் ஒப்படைத்த
மகானுபாவர்கள் இந்த நாட்டை வாழ்விக்க வந்த மகான்களா அல்லது அழித்து ஒழித்துவிட சங்கல்ப்பம்
செய்து கொண்டவர்களா என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம்
ஆகும் என்பதை தீர்க்க தரிசனத்தோடு கண்டு கொண்ட மகாத்மா காந்தி பல காலம் முன்னமேயே,
இது குறித்து கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். 25-12-1924 ஆம் தேதியிட்ட “எங் இந்தியா”
இதழில் அவர் எழுதியிருக்கும் செய்தி கவனிக்க வேண்டியதொன்று. அவர் சொல்கிறார். “இந்த
அதர்மமான வழியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நம் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப்
பயனடுத்துவது என்பது பெருமையளிக்கும் செயல் அன்று. கல்வி கற்பிக்கப் பொதுமான பணம் கிடைக்காமல்
போவதானுலும் கூட, துணிந்து இந்த வருமானத்தை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.
“ என்று சொல்லிவிட்டு, அப்படியானால் வருமானத்துக்கு என்ன வழி என்று சிலர் கேள்வி கேட்கக்
கூடும் எனக் கருதி அவர் சொல்கிறார் “இதற்கு மாற்று நமது ராணுவச் செலவுகளைக் குறைத்துக்
கொள்ள வேண்டும்” என்பது.
ஆனால்,
அவர் சொன்னபடி ராணுவச் செலவைக் குறைத்துக் கொண்டிருந்தால் என்ன நடைபற்றிருக்கும் என்பதை
நாம் இப்பொதுஇ சிந்தித்தால் அச்சம் தருகிறது.
நேரு காலத்தில் இந்தோனேஷியாவில் பாண்டூங் நகரில் நடந்த பன்னாட்டு மகாநாட்டில்
“இந்தி சீனி பாய் பாய்” என்று உறவு கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய கையோடு, சீனாவின்
செள என் லாய் இந்தியா மீது படையெடுத்து இமயத்தின் பல பகுதிகளைக் கபளீகரம் செய்த துரோகச்
செயல் நடைபெற்ற போது படைபலமும், ஆயுத பலமும் இல்லாமல் இந்தியா பல இழப்புகளைச் சந்தித்தது
போல மேலும் பல ஆபத்துக்களைச் சந்தித்திருக்க வேண்டும். நல்ல காலம், அப்படி அவர் சொன்ன
முறையில் ராணுவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளாமல் வளர்த்துக் கொண்டமையால், இரண்டு
பாக் போர்களையும், சீன ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்து நம் நாடு வெல்ல முடிந்தது. வங்காள
தேசமென்றொரு நாட்டையும் உருவாக்கிக் கொடுக்க முடிந்தது. அப்படி ராணுவச் செல்வைக் குறைக்காமல்,
மதுவிலக்கை அமுல் படுத்தி தேசத்து வருமானத்துக்கு வேறு பல வழிகளைக் கண்டிபிடித்திருந்தால்
அது சரியாக இருந்திருக்கும்.
எல்லா
குடிப்பழக்கங்களுக்கும் வாய்ப்பும், வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அதன் மூலம் அரசாங்க
கஜானா நிரம்பும் நிலைமையும் இங்கே நிலைத்துவிட்ட நிலைமையில் இனி எந்த அரசும் கள்ளுக்கடை,
சாராயக் கடைகளை மூடுவதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையை நாம் எட்டிவிட்டோம்.
இந்த குடிப் பழக்கத்துக்குச் சமமாக போதைப் பொருட்கள் எங்கிருந்தெல்லாமோ இந்தியாவுக்குள்
கொண்டு வரப்பட்டு, குடிகாரர்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள், உழைக்கும் மக்கள், அலுவலகம்
செல்வோர் என்று எல்லா மட்டத்திலும் இந்த பழக்கம் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. பள்ளிக்கூடம்
போகும் மாணவன் சாராயக் கடை வரிசையில் நிற்கிறான்.
இன்ற
யாராவது காந்திஜியின் அடியொற்றி குடிப்பழக்கத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளுக்கடை, சாராயக்
கடைகளை ஒழிப்பதற்காகவும் பொராடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், என்ன ஆகும்? குடிக்கு
அடிமையாகிப் போன குடிகாரனும், அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசியல் வாதிகளும்,
அப்படி போராடுபவர்களை ஒழித்துக் கட்டவே விரும்பு வார்கள்.
காந்திஜி
நடத்திய கள்ளுக்கடை மறியலின் போது காங்கிரஸ் தொன்டர்கள் கள்ளுக்கடை வாசலில் கொடியைப்
பிடித்துக் கொண்டு நின்றிருப்பார்கள். அங்கு குடிக்க வரும் குடிகாரர்களைப் பார்த்து,
ஐயா, தயவு செய்து குடித்து உங்கள் குடியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னால்,
அந்தக் கள்ளுக்கடை, சாராயக் கடைக்காரனும், குடிக்க வந்த குடிகாரனும் ஒன்று சேர்ந்து
இந்த தொண்டனைச் சாத்துவார்கள். பாவம் குடியைத் தடுக்க வந்தவனுடைய குடும்பம் சந்தியில்
நிற்கும்.
அப்படியெல்லாம்
நடக்காது, அதீத கற்பனையில் எழுந்த விபரீதக் கருத்து இது என்று சொல்வொருக்கு பழைய நிகழ்ச்சிகளை
இப்போது நினைவுபடுத்த வேண்டும்.
1924ஆம்
ஆண்டு, காந்தி கள்ளுக்கடை மறியல் செய்த நேரம். சேலம் மாவட்டம் சிங்காரப்பேட்டை எனும்
கிராமத்தில், அவ்வூர் மணியக்காரராக இருந்த பெருமாள் நாயுடு என்பவர் ஊரில் தண்டோரா பொட்டு,
மக்களுக்கு ஒரு அறிவிப்பினைச் செய்தார். அது, “கிராமத்தில் உள்ள யாரும் இனி கள் குடிக்கக்
கூடாது, அப்படி மீறி குடித்தது தெரிய வந்தால் ஊரிலிருந்து தள்ளி வைக்கப்படுவார்” என்பது.
ஒரு
சில பகுதியினர் தாங்கள் இனி குடிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு மணியக்காரரிடம்
எழுதியும் கொடுத்தார்கள். ம்றி குடிப்பழக்கத்துக்கு பலியானவர்களை சாதிக் கட்டுப்பாடு
என்று ஒதுக்கி வைத்தும், அபராதம் விதித்தும் குடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார்.
அன்றைய ஆட்சியாளர்கள் இப்படியொரு தலைவரை விட்டு வைப்பார்களா? கள் குடித்த ஒருவனை அடித்தார்
என்று குற்றச்சாட்டுக்களை சொல்லி அந்த மணியக்காரரைப் பதவி நீக்கம் செய்தார்கள். அவர்
என்னவெல்லாமோ சொல்லி தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முயன்றபோதும், அதிகாரம்
படைத்தொர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
போதாத
குறைக்கு கள்ளுக் கடைக்காரர்களஒ விட்டுத் தங்களுக்கு வருமானம் இல்லாமல் செய்துவிட்டார்
என்று அவர் மீது ஒரு வழக்கையும் தொடுத்தார்கள்.
இவரைப் போல மற்றவர்கள் எவரும் மதுவுக்கு எதிராகப் போராட வந்துவிடப் போகிறார்களே
என்று அச்சத்தில் ஆள்வொர் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.
அந்த
அறிவிப்பு என்னவென்றால், “கள்ளுக்கடைகள் முன்பு மறியல் செய்யும்படியும், மற்றும் சட்ட
விரோதமான காரியங்களைச் செய்யும்படியும் மக்களைத் தூண்டிவிட்டுப் பிரசங்கங்கள் செய்கிறீர்கள்
என்பது தெரிய வருகிறது. உங்களுடைய பேச்சுக்கள் அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில்
இருப்பதாலும், அரசாங்கத்தின் மீது வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் சொல்லி
1895ஆம் வருஷத்தில 4ஆவது சட்டத்தின் 26ஆவது பிரிவின் படி நீங்கள் எங்கும் சென்று பிரசங்கங்கள்
செய்யக் கூடாது, மீறினால் தண்டனைக்கு உள்ளாவீர்கள்” என்று ஒரு நோட்டீஸ் பிறப்பித்து
அச்சுறுத்தியது. ஆக மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்பது போல், ஒரு பக்கம் குடிகாரர்கள்,
மறுபக்கம் ஆட்சிபீடத்தில் இருப்போர், என்று இப்படி இருந்தால் யார் பூனைக்கு மணி கட்ட
முற்படுவார்கள்?
பிறகு
இதற்கு என்னதான் வழி? வழியா? விதிவிட்ட படி வழி, அவ்வளவுதான். மக்களாய்ப் பார்த்துத்
திருந்தாவிட்டால், இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. விழித்தெழுங்கள், எதிர்கொள்ளும்
தீமையை மனதில் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். எழுமின்!
விழிமின்! மக்கள் மனம் திருந்தும் வரை போராடுங்கள் குடிக்கு எதிராக! இதைத்தான் செய்ய
வேண்டும்.
No comments:
Post a Comment