பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, November 10, 2015

குச்சிப்புடி

                                                            குச்சிப்புடி
                                   நன்றி:   கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

Vempatti Sinna Sathyam garu

                            குச்சிப்புடி  (தெலுங்கு: కూచిపూడి) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசமாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும்கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.

Bhavana

கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.


Kuchipudi artist Achutha Manasa 

நெடுங்காலமாக  இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில்ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு இடைக்காலத்தில்  இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
                                                          Balathiripurasundari
தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது
இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்தநடனம்.
                                                               
நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது
. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம். 

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின்பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.
                                                           Manju Bhargavi
குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு.


Raja & Radha

ஆந்திரப் பிரதேசத்தில் மையமாகக் கொண்டு இந்த நடனக் கலை இந்தியா முழுவதும் ஆடப்பட்டு நடனக் கலையில் ஒரு சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. இந்த குச்சிபுடி நடனக் கலையில் தற்காலத்தில் சிறந்து விளங்கும் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் ஜீவன் நமது கலைகளில்தான் இன்னமும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த அற்புத நடனக் கலையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் அந்தக் கலைஞர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி எப்போதும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
வெம்பட்டி சின்ன சத்யாம் குச்சிபுடி நடன குருவாக மிகச் சிறப்பான பணிகளைச் செய்தவர். இவருடைய மாணவி மஞ்சு பார்கவி “சங்கராபரணம்” திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக நடித்தவர்.

 Few Kuchipudi Artists: 
எல்லூரு: திரு கே.வி.சத்யநாராயணா. 
குண்டூர்: கோக்கா விஜயலக்ஷ்மி, மகம்காளி சூர்ய நாராயண சர்மா, செளம்யாஸ்ரீ பாஸகர், ஐதராபாத் அச்சுத மனஸா, அஜய் ஸ்ரீநிவாஸ் சக்ரவர்த்தி, அலேக்யா புஞ்லா, ஆனந்த் ஷங்கர் ஜெயந்த், அனுபமா கைலாஷ், அனுராதா ஜோன்னலகட்டா, ஆதிநாரீஸ்வரம் வெங்கட், பாகவதலு சேதுராம், தேவரகொன்டா ஸ்ரீநிவாஸ், எக்கிரல வேதவதி, கீதா மாதுரி, ஜானகி, ஜ்வாலா ஸ்ரீகலா, கலா கிருஷ்ணா, கொத்தபள்ளி பத்மா, மடலி உஷா காயத்ரி, எஸ்.மாதவிமாலா, மதுரிமா நர்லா, நூபுரா ஜெய்ஸ்வால், வி.பத்மா கல்யாண், பசுமர்தி மிருத்ஞ்சய சர்மா, பசுமர்தி வெங்கடேஸ்வர சர்மா, பெரினி ரவி தேஜா, பிரதிமா சாகர், எம்.வி.ரமணி, ரேணுகா உதய், எம்.சந்தியா சந்தியா ராஜு, சஞ்சய்குமார் ஜோஷி, சாரதாம்பா கிள்ளி, சரளகுமாரி, சத்ய நரசிம்ம சாஸ்திரி, சிவராஜ் சுக்கா, எம்.எஸ்.சிவராஜு, ஷோபா நாயுடு, கே.சி.ஸ்ரீவாணி, கே.உமா ராம ராவ், டி.வருண், வேதாந்தம் சித்தேந்திர வரபிரசாத், விஜயலக்ஷ்மி பர்குலா, யசோதா தாகூர், எல்லேஸ்வரபு சலபதி சாஸ்திரி, 
கிருஷ்ணா மாவட்டம்: சிந்தா ரவி பாலகிருஷ்ணா, பசுமர்த்தி கேசவ பிரசாத், பசுமர்த்தி மிருத்யம் ஜயா சர்மா, சாம்பசிவராவ் டெகேலா, தாடேபள்ளி சத்யநாராயண சர்மா, வேதாந்தம் ராதே ஷ்யாம், வேதாந்தம் வெங்கட நாகசலபதி, வெம்பட்டி லக்ஷ்மண குமார், வெம்பட்டி சத்ய ப்ரசாத், எல்லேஸ்வரபு ஸ்ரீநிவாசலு, 
நெல்லூர்: ஆதர்ஷ், 
ராஜமுந்திரி: ஒய்.லலிதா சிந்தூரி, 
செகந்திராபாத்: ஜெட்டி மார்கண்டேய ஷர்மா, பசுமர்த்தி சாய் தீபிகா, பாவனி ஸ்ரீலதா, பி.ரமா தேவி, சரளா தேவி பெத்தடா, ஸ்வப்னா திருனாகரி, ஸ்வாதி சோம்நாத், உமா காத்யாயனி வீருபோத்லா, உமா வெங்கடேஸ்வரலு, 
விஜயவாடா: அஜய் குமார், பாகவதுலு ஸ்ரீநிவாச சர்மா, பி.கெளரி குமார், ஜோஷிலா சீதாராம சாஸ்திரி, லதா மன்சூஷா, மஞ்சுஷா வெங்கட ராமகிருஷ்ணன்,  பேரா கெளரி, கே.சாரதா ராமகிருஷ்ணா, பி.வி.என்.செளம்யா, பி.ஹெச்.ஸ்ரீநிவாச சர்மா, வேதாந்தம் வெங்கட நாகசலபதி ராவ், 
விசாகப்பட்டினம்: அடப கமலாஸ்ரீ, ஆதித்ய புல்லி பிரம்மம், வி.ஆர்.ஆர். அர்ஷிதா, பங்காரய்யா உப்புலுரி, வி.எஸ்.என்.எஸ்.காமேச்வர ராஒ, கே. நீலிம ராஜு, என்.என்.வி. சத்யபானு, சுவர்ண பாப்பு, எலமன்சிலி ஹனுமந்த ராவ் ஆகியோர் இவர்கள் தவிர வேறு பல கலைஞர்களும் உள்ளனர். 


Monday, November 9, 2015

தமிழகத்தின் வரலாற்றுப் பாதை....


கி.பி. 300 முதல் 590 வரை களப்பிரர் காலம்; சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம்.
கி.பி. 560 முதல் 580 வரை பல்லவன் சிம்மவிஷ்ணு களப்பிரர்களைத் தோற்கடித்து தொண்டை மண்டலத்தை ஆளத் துவங்கிய காலம்.
கி.பி. 590 முதல் 630 வரை காஞ்சியில் மகேந்திரவர்மனின் மகோன்னத ஆட்சி.
கி.பி. 610 திருநாவுக்கரசர் (அப்பர்) மகேந்திரவர்மனை சமணத்திலிருந்து மீட்டு சைவனாக்கிய காலம்..
கி.பி. 628 சாளுக்கிய மன்னன் 2ஆம் புலிகேசி காஞ்சிபுரத்தை முற்றுகையிட்ட காலம்.
கி.பி. 630 முதல் 668 வரை மாமல்லன் எனும் நரசிம்ம பல்லவன் தொண்டைமண்டலத்தை காஞ்சியிலிருந்து சிறப்பாக ஆட்சி புரிந்த காலம்.
கி.பி. 642 நரசிம்மவர்ம பல்லவன் வாதாபியின் மீது படையெடுத்து புலிகேசியைக் கொன்று மாபெரும் வெற்றி பெற்றது.
கி.பி. 670 முதல் 700 வரை மதுரையில் பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் சிறப்பாக ஆண்ட காலம்.
கி.பி. 700 முதல் 728 வரை காஞ்சியில் ஆண்ட பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியது.
கி.பி. 710 முதல் 730 வரை பாண்டியன் கோச்சடையான் ரணதீரன் பாண்டிய சாம்ராஜ்யத்தை கொங்கு நாடு வரை விரிவடையச் செய்தது.
கி.பி. 731 பல்லவ சாம்ராஜ்யத்தில் உரிமைப் போரில், அமைச்சர் குழு பல்லவமல்லன் எனும் இரண்டாம் நந்திவர்மனை அரியணையேற்றியது.
கி.பி. 731 முதல் 765 வரை பாண்டிய மன்னன் மாறவர்மன் சாளுக்கிய மன்னன் 2ஆம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டு பல்லவன் நந்திவர்மனை தாக்கியது.
கி.பி. 735 சாளுக்கியன் 2ஆம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தது.
கி.பி. 760 பல்லவன் இரண்டாம் நந்திவர்மன் கங்கைப்புரத்தின் மீது படையெடுத்தது.
கி.பி. 767 பாண்டிய படை பல்லவர்களை காவிரியின் தென்கரையில் வெற்றி கண்டது.
கி.பி. 768 முதல் 815 வரை பாண்டிய நாட்டை மதுரையில் பராந்தக நெடுஞ்செழியன் என்கிற வரகுண பாண்டியன் ஆட்சி புரிதல்.
கி.பி. 800 முதல் 830 வரை வரகுண பாண்டியன் பல்லவ மன்னன் தண்டிவர்மனைத் தோற்கடித்து திருச்சிராப்பள்ளி வரை பாண்டிய நாட்டை விரிவுபடுத்தியது.
கி.பி. 840 பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் இலங்கை மீது படையெடுத்து இலங்கையின் வடக்குப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
கி.பி. 846 முதல் 869 வரை பல்லவன் 3ஆம் நந்திவர்மன் பாண்டியர்களின் மீது படையெடுத்து வந்து தெற்கே தெள்ளாறு எனுமிடத்தில் நடந்த போரில் பாண்டியர்களைத் தோற்கடித்துவிட்டு தன் ஆளுமையை வைகை வரை விஸ்தரித்துக் கொண்டது.
கி.பி. 848 தஞ்சையை ஆண்டுவந்த முத்தரையர்களைத் தோற்கடித்துவிட்டு பழையாறையில் இருந்த விஜயாலயன் சோழ நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டது.
கி.பி. 859 பாண்டியன் ஸ்ரீவல்லபன் பல்லவர்களைத் தோற்கடித்தது.
கி.பி. 862 சிங்களப் படையினர் மதுரை மீது படையெடுத்து வந்து பாண்டியன் ஸ்ரீமாறனைக் கொன்றது.
கி.பி. 903 சோழர் படை பல்லவன் அபராஜிதவர்மனைத் தோற்கடித்தது.
கி.பி. 949 ராஷ்ட்ரகூட மன்னன் 3ஆம் கிருஷ்ணா வடக்கே பல்லவ சாம்ராஜ்யம் முழுவதையும் வென்று ஆண்டுகொண்டிருந்த சோழ தேசத்துப் படைகளை தக்கோலம் எனும் ஊரில் நடந்த போரில் வென்றது.
கி.பி. 985 கடைச்சோழர்கள் என வழங்கப்படும் விஜயாலயனின் வம்சத்தில் உத்தம சோழனை அடுத்து ராஜராஜ சோழன் பதவிக்கு வந்தது.
கி.பி. 1010 தஞ்சை ‘ராஜராஜேச்சரம்’ என வழங்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டி முடித்த ஆண்டு.
கி.பி.1012 தஞ்சையில் சோழ சாம்ராஜ்யத்தின் மகாசக்ரவர்த்தியாக முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியுரிமை பெற்ற ஆண்டு.
கி.பி.1023 ராஜேந்திர சோழன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கைக் கரை பிரதேசங்களை வென்ற ஆண்டு.
கி.பி. 1925 இல் ராஜேந்திர சோழன் கடல் கடந்து சென்று மாபெரும் கப்பற்படையுடன் ஸ்ரீவிஜயம் நாட்டை வென்று தூரக் கிழக்கில் சோழர் கொடியை நாட்டியது.
கி.பி. 1041 ராஜேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது.
கி.பி. 1054 ராஜேந்திர சோழனின் குமாரன் ராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக நடந்த போரில் கொல்லப்படுகிறான்.
கி.பி. 1970 சோழ தேசத்தில் ராஜேந்திர சோழனின் புத்திரர்கள் யுத்தத்தில் மாண்டுபோன நிலையில் தெலுங்கு சோழன் கீழைச் சாளுக்கிய நாட்டிலிருந்து வந்த குலோத்துங்க சோழன் அரியணை ஏறுகிறான்.
கி.பி. 1118 சோழ தேசத்தின் அரசனாக விக்கிரம சோழன் முடிசூடுதல்.
கி.பி. 1133 இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வருதல்.
கி.பி. 1146 இரண்டாம் ராஜராஜன் சோழ மன்னனாக பதவிக்கு வருதல்.
கி.பி. 1163 இரண்டாம் ராஜாதிராஜன் அரியணை யேறியது.
கி.பி. 1178 மூன்றாம் ராஜராஜன் பலமிழந்த கடைசி காலத்து சோழமன்னனானது.
கி.பி. 1246 மூன்றாம் ராஜேந்திர சோழன் சோழ வம்சத்தின் கடைசி மன்னனானது.
கி.பி. 1251 பாண்டிய நாட்டின் மதுரையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் அரசனானது.
கி.பி. 1279 3ஆம் ராஜேந்திர சோழனின் இறப்புக்குப் பின் சோழ வம்சம் முடிந்து போனது.
கி.பி. 1268 முதல் 1310 வரை மதுரையில் குலசேகர பாண்டியன் ஆட்சி புரிதல்.
கி.பி. 1308 வடக்கேயிருந்து அலாவுதின் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட வாரிசுச் சண்டையில் குலசேகர பாண்டியனின் மகன் வீரபாண்டியனுக்கு உதவுவதற்காக அவன் சகோதரன் சுந்தர பாண்டியனை எதிர்த்துப் போரிடுவதற்காக வரும் வழியில் தேவகிரியை தோற்கடித்துவிட்டு தமிழகத்தினுள் நுழைகிறான்.
கி.பி. 1310 பாண்டிய நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் குலசேகர பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்றுவிட்டு மன்னனாக முடிசூடுகிறான். அப்படி தந்தையைக் கொன்று பதவிக்கு வந்தவனை அவன் அண்ணன் வீரபாண்டியன் மாலிக்காபூரின் உதவியோடு போரிட்டு வீரபாண்டியனைத் தோற்கடிக்கிறான்.
கி.பி. 1311 பாண்டியர்களின் தாயாதிச் சண்டையில் தலையிட்டுப் போரிடவந்த மாலிக்காபூர் மதுரையையும் பாண்டிய நாட்டையும் சூறையாடி கொள்ளையடிக்கிறான்.
கி.பி. 1327 முதல் 1370 வரை மதுரை சுல்தான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம்.
கி.பி. 1370 வடக்கே விஜயநகர சாம்ராஜ்யம் ஹரிஹரர் புக்கர் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது. புக்கரின் மகன் குமர கம்பண்ணா தமிழகத்தின் மீது படையெடுத்து வென்றது.
கி.பி. 1370 முதல் 1500 வரை மதுரை, செஞ்சி ஆகிய பிரதேசங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளான நாயக்க வம்சத்து அரசர்கள் ஆளுகைக்கு உட்பட்ட காலம்.
கி.பி. 1518 ஐரோப்பியாவிலிருந்து வர்த்தகம் செய்ய போர்த்துகீசியர்கள் கப்பல்களில் வந்து கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்களில் வந்திறங்கிய காலம்.
கி.பி. 1532 முதல் 1580 வரை விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக சேவப்ப நாயக்கர் தஞ்சாவூரை ஆண்ட காலம்.
கி.பி. 1600 முதல் 1645 தஞ்சை நாயக்க வம்சத்தின் நட்சத்திரமாக விளங்கிய ரகுநாத நாயக்கர் தஞ்சையை ஆண்டு காலம்.
கி.பி. 1609 தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் டச்சுக்காரர்கள் காலடியெடுத்து வைத்த காலம்.
கிபி. 1623 முதல் 1659 வரை மதுரையில் திருமலை நாயக்கர் ஆண்ட காலம்.
கி.பி. 1639 இங்கிலாந்தில் 1600இல் தொடங்கிய கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு வந்து, வந்த இடத்தில் சென்னப்பட்டணத்தை விலைக்கு வாங்கி அங்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய காலம்.
கி.பி. 1652 தஞ்சை நாயக்க மன்னர்களுக்கும் மதுரை நாயக்க மன்னர்களுக்குமிடையே நடந்த தகறாறில் ஒரு பிரிவினர் பிஜப்பூர் சுல்தான் அலி அடில்ஷாவிடம் சென்று உதவி கேட்கிறார்.
கி.பி. 1656 மதுரை திருமலை நாயக்கருக்கு எதிராக மைசூர் படைகள் படையெடுத்து வந்து சேலம் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்கிறது.
கி.பி. 1676 பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவின் கட்டளைப்படி அவருடைய தளபதியும் சத்ரபதி சிவாஜி மகராஜின் தம்பியுமான ஏகோஜி என்கிற வெங்காஜியை படையுடன் தஞ்சைக்கு அனுப்ப, அவர் தஞ்சையை வென்று அரசராகிறார்.
கி.பி. 1692 வடக்கே டெல்லி முகலாய சக்ரவர்த்தியின் பிரதிநிதியாக ஆர்க்காடு நவாபாக சுல்பிகார் அலி கான் நியமிக்கப்படுகிறார்.
கி.பி. 1746 பிரான்ஸ் நாட்டிலிருந்து வர்த்தகம் புரிய இந்தியா வந்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி போரிட்டு சென்னை ஜார்ஜ் கோட்டையை ஆக்கிரமித்துக் கொள்வது.
கி.பி. 1749 ஐரோப்பாவில் நடந்த யுத்தத்தை அடுத்து இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஆஸ்திரியா நாட்டு வாரிசுரிமைப் போரின் முடிவில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி சென்னையில் ஜார்ஜ் கோட்டையை பிரான்சிடம் இழந்த இங்கிலாந்து மீண்டும் அந்த கோட்டையின் உரிமையைத் திரும்பப் பெற்றது.
கி.பி. 1751 இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியின் தளபதியாக இருந்த ராபர்ட் கிளைவ் ஆர்க்காட்டின் மீது படையெடுத்து வேலூரைப் பிடித்துக் கொள்கிறார்.
கி.பி. 1756 ஐரோப்பாவிலிருந்து இங்கு வர்த்தகம் புரிய வந்த இரு பிரிவினரான ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு முகமது அலி வாலாஜா என்பவரை ஆர்க்காடு நவாபாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தம் முதலாம் கர்நாட்டிக் ஒப்பந்தம் என்று பெயர்.
கி.பி. 1759 பிரெஞ்சுப் படைகள் தாமஸ் ஆர்தர், காம்டி லாலி என்பார் தலைமையில் படையெடுத்துச் சென்று சென்னை கோட்டையைத் தாக்குகிறார்கள்.
கி.பி. 1760 இதனையடுத்து ஆங்கிலேயர் படைகளுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் வந்தவாசியில் ஒரு யுத்தம் நடந்தது.
கி.பி. 1767 மைசூரின் உடையார் வம்சத்து அரசர்களிடம் பணிபுரிந்து தளபதியாக இருந்து பின்னர் அவர்களை ஒதுக்கிவிட்டு மைசூரை ஆளத் துவங்கிய ஹைதர் அலி என்பார் மைசூர் சுல்தான் என்ற முறையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக படையெடுத்து வந்து செங்கம் எனுமிடத்தில் ஒரு போரில் ஈடுபட்டார்.
கி.பி. 1773 இங்கிலாந்தில் அந்த நாட்டின் அரசு ஒரு சட்டத்தின் மூலம் சென்னையின் நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசு மேற்கொள்வது என்று முடிவு செய்தது.
கி.பி. 1777 முதல் 1832 தஞ்சையில் துளஜேந்திர மகாராஜாவின் மறைவுக்குப் பிறகு வாரிசு இல்லாமல் போய், பின்னர் சதாராவிலிருந்து ஒரு ராஜ குடும்பத்துச் சிறுவனைக் கொண்டு வந்து சுவீகாரம் எடுத்து அவரைப் படிக்க வைத்து தஞ்சை அரச பீடத்தில் உட்காரவைக்கப் படுகிறார். அவர்தான் இரண்டாம் சரபோஜி மன்னர். இவருக்குப் போட்டியாக துளஜாவின் மகன் என்று அமரசிம்மன் என்பாரும் போட்டியில் இருந்தார்.
கி.பி. 1799 சரபோஜி ஆட்சிக்கு வந்தபோது சிறுவன் என்பதால் பிரிட்டிஷ் தஞ்சை ராஜ்யத்தின் நிர்வாகத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டு அரசருக்கு தலைநகரை மட்டும் நிர்வாகம் செய்யும் உரிமையைக் கொடுத்து, கலை இலக்கியங்களில் ஈடுபட வசதி செய்து கொடுத்துவிட்டது.
கி.பி. 1800 முதல் 1805. இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் தெற்கே பாளையக்காரர்களுக்கும் யுத்தம் நடந்த காலம். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ஊமைத்துரை போன்ற பல பாளையக் காரர்கள் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1806 வேலூர் கோட்டைக்குள் ஒரு கலவரம் நடந்தது. அதில் கவர்னர் பென்டிக் என்பவருக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் கலகம் செய்தனர். அதில் 114 வெள்ளைக்கார அதிகாரிகளும் 19 இந்திய சிப்பாய்களும் மாண்டு போயினர். திப்பு சுல்தானின் மக்கள் அந்த சிறையில் அப்போது இருந்தனர். பின்னர் அவர்கள் கல்கத்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர்.
கி.பி. 1855 தஞ்சை மராத்திய மன்னன் இரண்டாம் சிவாஜியின் மரணத்துக்குப் பின் தஞ்சையை ஆங்கில அரசே மேற்கொண்டது.
கி.பி. 1857 வடக்கே சிப்பாய் கலவரம் எனும் முதல் சுதந்திரப் போர். ஒரு சில ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அரசே இந்தியாவின் நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து மேற்கொண்டது. விக்டோரியா மகாராணி ஒரு பிரகடனம் மூலம் இந்த முடிவை அறிவிக்கிறார்.
கி.பி. 1885 இந்தியர்களை பிரதிநிதித்துவப் படுத்த இந்திய தேசிய காங்கிரஸ் எனும் அமைப்பினை ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பார் தொடங்கினார்.
கி.பி. 1892 இங்கிலாந்து பார்லிமெண்டில் இந்தியன் கவுன்சில்ச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியாவை நிர்வகிப்பது குறித்து இங்கிலாந்து முடிவெடுக்கும்.
கி.பி. 1909 இந்தியாவில் பிரிட்டிஷ் சிறிது சிறிதாக தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி முழுவதுமாக இந்தியாவை ஆளத் தொடங்கிய நேரத்தில், இந்தியர்கள் தங்களுக்கும் சில உரிமைகள் வேண்டி போராடத் துவங்க, அவர்களுக்கு எத்தகைய பங்களிப்பு தரலாம் என்பதை முடிவு செய்ய மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டது.
கி.பி. 1909 சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சில் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
கி.பி. 1919 பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் எனுமிடத்தில் பிரிட்டிஷ் ஜெனரல் டயர் என்பான் செய்த கொடுமையால் பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
கி.பி. 1915 தென்னாப்பிரிக்காவில் போராடிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி இந்தியா திரும்பி இந்திய அரசியலில் ஈடுபட விரும்பினார்.
கி.பி. 1920 மகாத்மா காந்தி பிரிட்டிஷுக்கு எதிராக அமைதி சத்தியாக்கிரக போராட்டங்களைத் துவங்குகிறார்.
கி.பி. 1921 முதன் முதலில் சென்னை மாகாணத்தில் ஒரு சில பிரிவினர் மட்டும் பங்குபெறும் தேர்தலொன்று நடந்தது. அதில் ஜஸ்டிஸ் கட்சி வென்று ஆட்சி அமைத்தது.
கி.பி. 1927 அகில இந்திய காங்கிரஸ் பரிபுரண சுதந்திரம் எனும் தீர்மானம் நிறைவேற்றம்.
கி.பி. 1928 இந்தியர்களுக்கு சலுகைகள் வழங்க சிபாரிசு செய்ய சைமன் கமிஷன் இந்தியா வந்தது. அதை எதிர்த்து இந்தியர்கள் பலத்த போராட்டம்.
கி.பி. 1930 மகாத்மா காந்தி தலைமையில் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. தண்டியெனும் ஊர் வாரை நடந்தே சென்று காந்தியடிகள் உப்பு எடுத்து கைதானார். தெற்கே ராஜாஜி திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடந்து சென்று அகத்தியம்பள்ளியில் உப்பெடுத்து கைதாகி சிறை சென்றார்.
கி.பி. 1937 மாகாண சட்டமன்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி வென்று சி.ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது.
கி.பி. 1938 தமிழ்நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசிலிருந்து விலகி திராவிடர் இயக்கமொன்ற தொடங்கினார்.
கி.பி. 1939 இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. அரசியலில் ஒரு மாற்றம் தெரியலாயிற்று.
கி.பி. 1942 பம்பாயில் கூடிய காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானம் நிறைவேற்ற தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறை சென்றனர். மக்கள் கலவரம் செய்தனர். எங்கும் நிர்வாகம் நிலைகுலைந்து போயிற்று. ஆங்கிலேயர் இனியும் இந்த நாட்டில் காலந்தள்ள இயலாது என்பதை உணர்ந்தனர்.
கி.பி. 1944 ஈ.வே.ரா., அண்ணாதுரை ஆகியோர் திராவிடர் கழகம் தொடங்கினர்.
கி.பி. 1945 இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்திய சுதந்திரம் பற்றி வேகம் எடுத்தது.
கி.பி. 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரிந்து சுதந்திரம் பெற்றது.
இதன் பின்னர் நடந்ததனைத்தையும் நாமறிவோம்.









Sunday, November 8, 2015

                நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.

Saturday, October 31, 2015

நவரச நாயகன் டி.எஸ்.பாலையா

                                      
தனக்கென்று ஒரு தனி வகையான பேச்சு வழக்கு. இவர் வில்லனா, காமெடியனா, குணசித்திர நடிகனா எந்தவொரு தனிப் பிரிவிலும் சேர்க்க முடியாத தனித்திறமை கொண்ட நவரச நாயகன் டி.எஸ்.பாலையா. இவர் எந்த வயதில் நடிக்க வந்திருப்பார்? இன்றைய முதுபெரும் கிழவர்கள்கூட இவருடைய ஆரம்ப கால படங்களைப் பார்த்திருப்பதாகச் சொல்லுகிறார்கள் என்றால் திரைப்பட உலகில் இவர் எத்தனை ஆண்டுகள் சாதித்தார்? உண்மையில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தக்கூடிய சாதனை இந்த அபூர்வமான நடிகரின் சாதனை.

இவருடைய பல பங்களிப்புகளை மக்கள் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. குறிப்பாக “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் தவில் வித்வானாக இவரும் கே.சாரங்கபாணியும் அசல் தவில் வித்வான்களைக் கூட தோற்கடிக்கும் வகையில் அந்த உடலசைவுகள், வாசிக்கும் விதம் இவற்றால் மனம் கவர்ந்தவர்கள். 

தொடக்க காலம் இவரை வில்லனாக அறிமுகம் செய்தது. இடையில் காமெடியனாகவும், குணசித்திர நாயகனாகவும் காட்டியது. பாகப்பிரிவினையில் பாசக்கார பெரியப்பா, மனைவிக்கு பயந்துகிடக்கும் இவர் கடைசியில் புலிபோலப் பாய்ந்த குணசித்திரம் மணமகளில் தன்னிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண்ணிடம், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற வரிகள் சொல்லிக் கொடுக்கும் போது காட்டிய சரசம், காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்ல இவர் பயந்து போய் அரற்றும் காட்சிகள், பாமா விஜயத்தில் “வரவு எட்டணா, செலவு பத்தணா” என்று குடும்பத்தில் ஆடம்பரம் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய காட்சிகள் இவைகள் மறக்கக்கூடியவைகளா அந்தக் காட்சிகள்? 

கல்கியின் படைப்புகளில் வரலாற்று நாவலில் முதலில் வந்தது “பார்த்திபன் கனவு”. அதில் பார்த்திபனின் சேநாபதியாக இருந்து இளவரசனுக்கு இன்னல் விளைவிக்கும் வில்லன் இவர். படகோட்டியின் மனைவி வள்ளியிடம் வழிவதும், நரசிம்ம பல்லவரிடம் நெளிவதும், சோழ இளவரசனுக்கு வில்லத்தனம் செய்வதும் இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள்.

இந்த பாலையா பற்றி ஒருசில விவரங்களைத் தெரிந்து கொள்வோமே. திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இவர். 1914இல் பிறந்தவர். வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து, அங்கு சில காலம் இருந்துவிட்டு, ஜெகநாத ஐயர் என்பவரின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார். அந்த நிலையில் தான் இவருக்குத் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 

1936இல் தனது 22ஆம் வயதில் திரைத் துறையினுள் புகுந்தார். அந்த ஆண்டு வெளியான ‘சதி லீலாவதி’ எனும் படம்தான் இவருடைய முதல் படம். அதே படத்தில் அறிமுகமானவர் தான் எம்.ஜி.ஆரும். என்.எஸ்.கிருஷ்ணன், நாடக உலகில் சிறந்து விளங்கிய கந்தசாமி குடும்பத்து எம்.கே.ராதா ஆகியோரும் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் இவரது வில்லன் நடிப்பு மக்களுக்கு ஒரு புதுமை. நிஜவாழ்க்கையில் இவர் போன்ற வில்லன்கள் இருந்திருப்பார்களோ என்னவோ, இவர் அப்படியொரு கொடுமைக்கார வில்லனாக நடித்திருக்கிறார்.

‘அம்பிகாபதி’ படத்திலும், ‘மதுரை வீரன்’, ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ ஆகிய படங்களில் இவர்தான் வில்லன். ஏ.பி.நாகராஜன் எடுத்த திருவிளையாடலில் ஹேமநாத பாகவதராக வந்து இவர் பண்ணிய அலம்பலில் பாண்டிய நாடே திமிலோகப்பட்ட நேரத்தில் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலா, இவரது ஆணவம் அடக்கப்பட்ட வரலாற்றை, படத்தில் மிக அழகாகக் காட்டிய திறமையாளர். ராகங்களின் பெயர்களைக் கொண்ட அவருடைய கோமாளித்தனமான சீடர்களையும் இவருடைய தற்பெருமையையும் படம் அழகாக எடுத்துக் காட்டி இவரது திறமைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாலையா தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையில்லை.


திரையுலகின் ஒரு மறக்கமுடியாத சகாப்தமாக விளங்கிய இந்த அற்புத நடிகரின் வாழ்வு தனது 57ஆம் வயதில் (ஆம்! அது இளம் வயதுதான் அவருக்கு) 1972இல் மறைந்தார். வாழ்க டி.எஸ்.பாலையா புகழ்.

Thursday, October 29, 2015

உடுமலை நாராயண கவி

                               

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை ராமையாதாஸ் என்று இப்படி பல கவிஞர்கள் திரைத் துறையில் இருந்த காலத்துக்கு முன்பு உடுமலை நாராயண கவியின் பாடல்கள் திரைப்படங்களில் அதிகம் இடம் பெற்று வந்தன. இவரைப் பற்றி ஒரு சிறிது தெரிந்து கொள்வது நல்லதுதானே!
சினிமா வெகுஜன பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பாக நாடகங்கள் தான் தமிழகத்தில் அதிகம் மக்களை கவர்ந்திருந்தது. ஒரு காலத்தில் “கூத்து” என்று தொடங்கி, அது தெருக்கூத்தாக ஆகி, பின்னர் அது வசன நடையில் பேசும் நாடகங்களாம மாறின. கூத்து அமைப்பில் உரையாடல் பாடல்களாகத்தான் இருந்து வந்தது. அப்படி நாடகத் துறையில் காலூன்றி யிருந்த நாராயணசாமி என்பவர் திரையுலகுக்கு வந்ததும் தன் பெயரை உடுமலை நாராயண கவி என்று மாற்றிக் கொண்டார்.
நாடகத்திலிருந்து வந்தவர் என்பதாலும், கிராமப்புறத்திலிருந்து நாடகத்துக்கு வந்தவர் என்பதாலும், கிராம, நாடக அனுபவங்கள் இவருக்கு அந்தக் கால நடைமுறை வழக்கங்களை எளிமையான பாடல்களாகவும், இலக்கியத் தரத்தோடும் கொடுக்க முடிந்தது. டி.ஏ.மதுரம் பாடிய “நல்ல பெண்மணி, அவள் நல்ல பெண்மணி” என்றொரு பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதில் ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்கிற விஷயங்களை அழகாகச் சொல்லியிருப்பார் இவர்.
இதைவிட என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய படமொன்றில் நந்தனார் கதா காலக்ஷேபத்தைப் போல கிந்தனார் என்கிற கிராமத்துப் பையன் சென்னை நகருக்குப் படிக்கப் போகும் அழகை ஒரு ஹரிகதையாக ‘கிந்தனார்’ கதையைச் சொல்லியிருப்பார். அதையும் படைத்தவர் இவர்தான். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பல படங்களுக்கு இவருடைய பாடல்கள் தான்.
தேசிய சிந்தனை, கடவுள் பக்தி, நேர்மைத் திறன், சொல் வளம் ஆகிய அனைத்துத் தகுதிகளும் இவர் பெற்றிருந்தார். கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பூவிளைவாடி எனும் கிராமத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தில் கிருஷ்ணசாமி, முத்தம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார் இவர். நாடக வாழ்க்கையே தனக்கு உரியது என்றுணர்ந்து நாடகக் குழுவில் சேர்ந்து பல காலம் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சந்தர்ப்ப வசத்தால் என்.எஸ்.கே. தியாகராஜ பாகவதர் இருவரும் லட்சுமிகாந்தன் கொலை வழைக்கில் சிறை செல்ல நேர்ந்தது. அவர்கள் பிரிவி கவுன்சில் வரை சென்று விடுதலையாகி மீண்டும் திரைத் துறைக்குத் திரும்பினர். அந்த முயற்சியில் பாகவதருக்குத் தோல்வி கிடைத்தது. என்.எஸ்.கே. அப்போதுதான் வளரத் துவங்கியிருந்த திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதே நேரத்தில் திராவிட இயக்கத்தார் எழுதிய கதைகளை திரைப்படமாக எடுத்து மீண்டும் திரையில் காலூன்றினார். அப்போது என்.எஸ்.கே.யுடன் இவருக்கு நல்லுறவு இருந்து வந்தது. அத்துடன் அவர் கடைப்பிடித்த திராவிடப் பற்று இவரையும் வந்து ஒட்டிக் கொண்டது. சுதந்திரத்துக்கு தேசபக்தப் பாடல்கள் எழுதிய இவர் இப்போது திராவிட சிந்தனைகளுக்குப் பாட்டு எழுதலானார்.
திரையில் ஒலித்த இவருடைய பாடல்களில் குறிப்பாக மக்கள் மனங்களைக் கவர்ந்தவை என்று சிலவற்றைச் சொல்லலாம். அவை என்.எஸ்.கே.யின் நல்ல தம்பியில் “அது அந்தக் காலம், இது இந்தக் காலம் என்று பல செய்திகளைப் பழமை, புதுமை இவற்றைச் சுட்டிக் காட்டி எழுதிய பாடல். இவர் பாடல் எழுதிய பல படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்களாவன: சொர்க்கவாசல், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா (இவை அனைத்தும் திராவிட இயக்கத்தாரின் படம்) காவேரி., தூக்கு தூக்கி, தெய்வப் பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, ரத்தக்கண்ணீர், தேவதாஸ் போன்ற பல படங்கள்.
தமிழக அரசு இவருக்குக் “கலை மாமணி” விருது கொடுத்து கெளரவித்தது. 82 வயது வரை வாழ்ந்த இவர் 1981இல் காலமானார். இந்திய அஞ்சல் துறை இந்தக் கவிஞருக்கு ஒரு அஞ்சல் தலை வெளியிட்டு கெளரவம் செய்திருக்கிறது. உடுமலையில் இவருக்கு ஒரு மணிமண்டபம் இருக்கிறது. திரைத் துறை தந்த நல்லதொரு கவிஞர் இவர்.



கரூர் ஆநிலையப்பர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்


கரூர் ஆநிலையப்பர் ஆலயத்தில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பரதாஞ்சலி.
கரூருக்கு அழகு சேர்க்கும் வகையில் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஆநிலையப்பர் ஆலயம் எனப்படும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில். மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருப்பதும், தினந்தோறும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் கோயிலாகவும் இது திகழ்ந்து வருகிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த நாயனார், புகழ்ச்சோழ நாயனார் ஆகியோரின் வரலாற்றை உள்ளடக்கியது இவ்வாலயம். இங்கு கடந்த 26-10-2015 திங்கட்கிழமையன்று ஆநிலயப்பருக்கு அன்னாபிஷேகமும், ஆலய வளாகத்தில் பரதாஞ்சலி நிகழ்ச்சியும் மிக விமரிசையாக நடைபெற்றது.

ஐம்பசி மாதம் பெளர்ணமி திதியில் இதுபோன்ற அன்னாபிஷேகத்தை சிவபெருமானுக்குச் செய்து வழிபடுவார்கள். ஏராளமான பக்தர்கள் வந்து பசுபதீஸ்வரரை தரிசித்துச் சென்றதோடு, ஆலயத்தின் வளாகத்தில் நடைபெற்ற கரூர் ஆடல்வல்லான் நாட்டியப் பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்துச் சென்றனர்.

சந்நிதித் தெருவில் இயங்கி வரும் ஆடல்வல்லான் நாட்டியப் பள்ளியை அவ்வூரைச் சேர்ந்த திருமதி எம்.சுகந்தப் பிரியா அவர்களுடைய மாணவியர்களைக் கொண்டு பரதாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார். நால்வர் அரங்கம் எனும் பெயர் பெற்ற அந்த அரங்கம் இதுபோன்ற இறையுணர்வு மிக்க நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைந்த அரங்கம். கருவூர் சித்தர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. அங்கு அன்று நடந்த மாணவியரின் நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாகத் திருவையாறு பாரதி இயக்கத்தின் அறங்காவலர் திரு பி.ராஜராஜன் அவர்களும், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவர் திரு வெ.கோபாலன் அவர்களும் முன்னிலை வகித்தனர். “சக்தி தரிசனம்” எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் “நாட்டிய மயூரி” திருமதி எம்.சுகந்தப் பிரியா நட்டுவாங்கமும், பரத இசை மாமணி ஏ.சூசைராஜ் வாய்ப்பாட்டும், ராகரத்னா ஆத்தூர் என்.சோமசுந்தரம் வயலின் இசையும், கலைக்கோ மாமணி திருவேட்டக்குடி சி.சரவணன் மிருதங்கமும், கலைமாமணி திரு அழகு ராமசாமி முகர்சிங் வாசித்தனர்.

நிகழ்ச்சி கோவை ஆ.தண்டபாணி அவர்களின் தேவார இன்னிசையுடன் தொடங்கியது. கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் செயலர் திருமதி எம்.பத்மாவதி மோகனரங்கன், ஸ்ரீசங்கரா வித்யாலயாவின் நிறுவனர் திருமதி பி.சாமியாத்தாள் பழனிசாமி, ப்ரீத்தா நர்சிங் ஹோம் மருத்துவர் எம்.ஜெயம்மாள் மோகன்ராஜ், ஸ்ரீ அஞ்சனா நர்சிங் ஹோம் மருத்துவர் எம்.சுசரிதா நெடுஞ்செழியன், அம்மன் ஸ்கேன் செண்டர் மருத்துவர் எஸ்.கீதா குமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

கரூர் மக்களின் அமோக ஆதரவோடு அன்னாபிஷேகமும், பரதாஞ்சலியும் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆடல்வல்லான் நடனப் பள்ளியின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் விழா இனி நடைபெற்று முடிந்தது.

                                   


Sunday, October 25, 2015

நால்வர் நாகராஜன்

                                       
பிற்காலத்தில் பிரபல சினிமா இயக்குனராக அறிமுகமான ஏ.பி.நாகராஜன் முதன் முதலில் இந்தப் பெயரில்தான் சினிமாக்களில் அறிமுகமானார். காரணம் இவர் நடித்து வந்த “நால்வர்” என்ற நாடகம் பிரபலமானது. அதே பெயரில் அவர் ஒரு திரைப்படமும் எடுத்தார். ஆனால் அவர் பின்னாளில் எடுத்த பிரம்மாண்டமான படங்களுக்கு முன்னோடியாக இவர் சேலம் எம்.ஏ.வி.பிக்சர்ஸ் சார்பில் எடுத்த படங்களே இவர் திறமையை பறை சாற்றின. வில்லன் நடிகர் S.A. நடராஜன் எடுத்த “நல்ல தங்கை” எம்.ஏ.வேணுவின் “பெண்ணரசி”,“சம்பூர்ண ராமாயணம்” உள்ளிட்ட பல படங்கள் ஆகியன இவர் பெயரை உயர்த்திப் பிடித்தன. “தில்லானா மோகனாம்பாள்” இவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் என்பதன் சுருக்கம்தான் ஏ.பி.என். 1928இல் பிறந்த இவர் சிறுவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார். தன் ஏழு வயதில் இவர் டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். அங்கு இவர் கற்ற தமிழ், இலக்கண பூர்வமாகவும், இலக்கியத் தரமாகவும் இருந்த காரணத்தால்தான் இவரைப் போல தமிழை உச்சரிக்கவும், திரையில் பிறரை நல்ல தமிழ் பேசி நடிக்க வைக்கவும் முடிந்தது.

இவர் எழுதி நடித்து வந்த “நால்வர்” நாடகம் திரைப்படமாக உருவானது. அதன் கதை வசனம் நடிப்பு எல்லாமே இவர்தான். அதனால்தான் நால்வர் நாகராஜன் எனப் பெயர் பெற்றார். “மாங்கல்யம்”, பெண்ணரசி, ஆசை அண்ணா அருமைத் தம்பி, டவுன் பஸ், நல்ல தங்கை ஆகியவை இவர் புகழை வெளிக் கொணர்ந்தது. டவுன் பஸ் படத்தில் வந்த “ஏரிக் கரை மேலே” பாடலும், நல்ல தங்கையில் வந்த “புருசன் வீடு போகப்போற பெண்ணே, தங்கச்சி கண்ணே” என்ற பாடலும் இவரை அடையாளம் காட்டியவை..

சிவாஜியை கொங்கு தமிழ் பேச வைத்த “மக்களைப் பெற்ற மகராசி” அதில் வரும் பாடல்களும் அந்தக் காலத்தின் ஹிட். முன்பொரு முறை ஒரு பழைய திரைப்படத்தில் இவர் எழுதி புகுத்திய தருமி காட்சியை மீண்டும் திருவிளையாடலிலும் கொண்டு வந்து ஹிட் ஆக்கிக் காட்டினார். அதற்கு நாகேஷின் நடிப்பும் துணை புரிந்தது என்பதையும் மறுக்க முடியாது.

புராண படங்கள் இவர் எடுத்ததைப் போல வேறு யாரும் எடுக்க முடியாது என்பதுபோல “திருவிளையாடல்”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருமால் பெருமை” ஆகிய படங்களை எடுத்துப் புகழ் பெற்றார். இவை தவிர “தில்லானா மோகனாம்பாள்”, “நவராத்திரி” ஆகியவை வெற்றிப் படங்கள்.

“திருமலை தென்குமரி”, “மேல்நாட்டு மருமகள்” படம் இதில் உஷா உதூபின் ஆங்கிலப் பாடல், ஜி.உமாபதிக்காக எடுத்த “ராஜராஜசோழன்”, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரல் பாடல்களுடன் வந்த “அகத்தியர்”, பொழுது போக்குக்காக “கண்காட்சி”, திருவருட்செல்வர், குலமகள் ராதை, வடிவுக்கு வளைகாப்பு போன்ற இதர படங்களும் இவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

'திருவிளையாட'லில் நக்கீரனாக ஏ.பி.நாகராஜன்

தொடக்க காலத்தில் இவர் படங்களை கே.சோமுவும், பிறகு தானே இயக்கவும் தொடங்கினார். இசை கே.வி.மகாதேவன் அதிகமான படங்களுக்கு. திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் ஆகியவை விருதுகள் பெற்ற படங்கள்.

இவர் தொடக்க காலம் முதல் அரசியலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுடன் இருந்து வந்தார். முதன் முதலாக சேலத்தில் நடந்த இரண்டாவது தமிழரசுக் கழக மகாநாட்டின் போது ம.பொ.சி. அவர்களின் மணிவிழாவை ஒட்டி இவரும் இயக்குனர் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணுவும் சேர்ந்து ம.பொ.சி.க்கு ஒரு பியட் காரை வாங்கி பரிசளித்தார்கள். இவர் படங்களில் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த கவி கா.மு.ஷெரீப் அவர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார். இவ்விருவரும் பத்திரிகைத் துறையிலும் இணைந்து செயல்பட்டார்கள்.

கவி கா.மு.ஷெரீப் அவர்கள் “தமிழ் முழக்கம்” என்ற இருவார இதழையும், ஏ.பி.என். ஐ ஆசிரியராகக் கொண்ட “சாட்டை” வார இதழையும் நடத்தி வந்தார். அந்த காலகட்டத்தில் தி.மு.க.வில் தீவிரமாக இருந்த கவிஞர் கண்ணதாசன் சேலத்திலிருந்து வேறொரு புலவரை (புலவர் நாக.சண்முகம் என்று நினைவு) ஆசிரியராக வைத்து “சண்டமாருதம்” என்றொரு இதழை வெளியிட்டு வந்தார். அதில் ஏ.பி.என். ஐ அவர்கள் சண்டமாருதமாகத் தாக்கி எழுதி வந்தார்கள்.

ஏ.பி.என் எடுத்த “பெண்ணரசி” படம் வெளிவந்த போது இவர்கள் சொன்ன விமர்சனம் என்னவென்றால், அரசி என்றாலே பெண் தான், அதில் என்ன பெண்ணரசி? என்பதுதான். அதற்கு ஏ.பி.என். சாட்டையில் எழுதினார் (ஏ.பி.என். அல்லது கவி கா.மு.ஷெரீப் எழுதிய பதில்) அரசி என்பவள் அரசனின் மனைவி, அவள் ராஜ்யத்தை ஆள்வதில்லை, பெண்ணரசி என்பவள் பெண்ணாக இருந்துகொண்டு ராஜ்யத்தை ஆள்பவள் என்றார்கள். சண்டமாருதம் அடங்கிவிட்டது.

இப்படி திரைத் துறையிலும், பத்திரிகையுலகிலும் ஏ.பி.நாகராஜன் கொடிகட்டிப் பறந்த காலம் திரையுலகின் வசந்த காலம். வாழ்க ஏ.பி.என். புகழ்.