கரூருக்கு அழகு சேர்க்கும் வகையில் நகரத்தின்
மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஆநிலையப்பர் ஆலயம் எனப்படும் கல்யாண பசுபதீஸ்வரர்
கோயில். மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருப்பதும், தினந்தோறும் பக்தர்கள்
வந்து வழிபட்டுச் செல்லும் கோயிலாகவும் இது திகழ்ந்து வருகிறது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த
நாயனார், புகழ்ச்சோழ நாயனார் ஆகியோரின் வரலாற்றை உள்ளடக்கியது இவ்வாலயம். இங்கு கடந்த
26-10-2015 திங்கட்கிழமையன்று ஆநிலயப்பருக்கு அன்னாபிஷேகமும், ஆலய வளாகத்தில் பரதாஞ்சலி
நிகழ்ச்சியும் மிக விமரிசையாக நடைபெற்றது.
ஐம்பசி மாதம் பெளர்ணமி திதியில் இதுபோன்ற
அன்னாபிஷேகத்தை சிவபெருமானுக்குச் செய்து வழிபடுவார்கள். ஏராளமான பக்தர்கள் வந்து பசுபதீஸ்வரரை
தரிசித்துச் சென்றதோடு, ஆலயத்தின் வளாகத்தில் நடைபெற்ற கரூர் ஆடல்வல்லான் நாட்டியப்
பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்துச் சென்றனர்.
சந்நிதித் தெருவில் இயங்கி வரும் ஆடல்வல்லான்
நாட்டியப் பள்ளியை அவ்வூரைச் சேர்ந்த திருமதி எம்.சுகந்தப் பிரியா அவர்களுடைய மாணவியர்களைக்
கொண்டு பரதாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார். நால்வர் அரங்கம் எனும் பெயர் பெற்ற அந்த
அரங்கம் இதுபோன்ற இறையுணர்வு மிக்க நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைந்த அரங்கம். கருவூர்
சித்தர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. அங்கு அன்று நடந்த மாணவியரின்
நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாகத் திருவையாறு பாரதி இயக்கத்தின் அறங்காவலர்
திரு பி.ராஜராஜன் அவர்களும், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவர்
திரு வெ.கோபாலன் அவர்களும் முன்னிலை வகித்தனர். “சக்தி தரிசனம்” எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் “நாட்டிய
மயூரி” திருமதி எம்.சுகந்தப் பிரியா நட்டுவாங்கமும், பரத இசை
மாமணி ஏ.சூசைராஜ் வாய்ப்பாட்டும், ராகரத்னா ஆத்தூர் என்.சோமசுந்தரம் வயலின் இசையும்,
கலைக்கோ மாமணி திருவேட்டக்குடி சி.சரவணன் மிருதங்கமும், கலைமாமணி திரு அழகு ராமசாமி
முகர்சிங் வாசித்தனர்.
நிகழ்ச்சி கோவை ஆ.தண்டபாணி அவர்களின்
தேவார இன்னிசையுடன் தொடங்கியது. கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் செயலர் திருமதி
எம்.பத்மாவதி மோகனரங்கன், ஸ்ரீசங்கரா வித்யாலயாவின் நிறுவனர் திருமதி பி.சாமியாத்தாள்
பழனிசாமி, ப்ரீத்தா நர்சிங் ஹோம் மருத்துவர் எம்.ஜெயம்மாள் மோகன்ராஜ், ஸ்ரீ அஞ்சனா
நர்சிங் ஹோம் மருத்துவர் எம்.சுசரிதா நெடுஞ்செழியன், அம்மன் ஸ்கேன் செண்டர் மருத்துவர்
எஸ்.கீதா குமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
கரூர் மக்களின் அமோக ஆதரவோடு அன்னாபிஷேகமும்,
பரதாஞ்சலியும் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆடல்வல்லான் நடனப் பள்ளியின் உறுப்பினர்கள்,
பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் விழா இனி நடைபெற்று முடிந்தது.
No comments:
Post a Comment