பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 29, 2015

உடுமலை நாராயண கவி

                               

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை ராமையாதாஸ் என்று இப்படி பல கவிஞர்கள் திரைத் துறையில் இருந்த காலத்துக்கு முன்பு உடுமலை நாராயண கவியின் பாடல்கள் திரைப்படங்களில் அதிகம் இடம் பெற்று வந்தன. இவரைப் பற்றி ஒரு சிறிது தெரிந்து கொள்வது நல்லதுதானே!
சினிமா வெகுஜன பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பாக நாடகங்கள் தான் தமிழகத்தில் அதிகம் மக்களை கவர்ந்திருந்தது. ஒரு காலத்தில் “கூத்து” என்று தொடங்கி, அது தெருக்கூத்தாக ஆகி, பின்னர் அது வசன நடையில் பேசும் நாடகங்களாம மாறின. கூத்து அமைப்பில் உரையாடல் பாடல்களாகத்தான் இருந்து வந்தது. அப்படி நாடகத் துறையில் காலூன்றி யிருந்த நாராயணசாமி என்பவர் திரையுலகுக்கு வந்ததும் தன் பெயரை உடுமலை நாராயண கவி என்று மாற்றிக் கொண்டார்.
நாடகத்திலிருந்து வந்தவர் என்பதாலும், கிராமப்புறத்திலிருந்து நாடகத்துக்கு வந்தவர் என்பதாலும், கிராம, நாடக அனுபவங்கள் இவருக்கு அந்தக் கால நடைமுறை வழக்கங்களை எளிமையான பாடல்களாகவும், இலக்கியத் தரத்தோடும் கொடுக்க முடிந்தது. டி.ஏ.மதுரம் பாடிய “நல்ல பெண்மணி, அவள் நல்ல பெண்மணி” என்றொரு பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதில் ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்கிற விஷயங்களை அழகாகச் சொல்லியிருப்பார் இவர்.
இதைவிட என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய படமொன்றில் நந்தனார் கதா காலக்ஷேபத்தைப் போல கிந்தனார் என்கிற கிராமத்துப் பையன் சென்னை நகருக்குப் படிக்கப் போகும் அழகை ஒரு ஹரிகதையாக ‘கிந்தனார்’ கதையைச் சொல்லியிருப்பார். அதையும் படைத்தவர் இவர்தான். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பல படங்களுக்கு இவருடைய பாடல்கள் தான்.
தேசிய சிந்தனை, கடவுள் பக்தி, நேர்மைத் திறன், சொல் வளம் ஆகிய அனைத்துத் தகுதிகளும் இவர் பெற்றிருந்தார். கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பூவிளைவாடி எனும் கிராமத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தில் கிருஷ்ணசாமி, முத்தம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார் இவர். நாடக வாழ்க்கையே தனக்கு உரியது என்றுணர்ந்து நாடகக் குழுவில் சேர்ந்து பல காலம் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சந்தர்ப்ப வசத்தால் என்.எஸ்.கே. தியாகராஜ பாகவதர் இருவரும் லட்சுமிகாந்தன் கொலை வழைக்கில் சிறை செல்ல நேர்ந்தது. அவர்கள் பிரிவி கவுன்சில் வரை சென்று விடுதலையாகி மீண்டும் திரைத் துறைக்குத் திரும்பினர். அந்த முயற்சியில் பாகவதருக்குத் தோல்வி கிடைத்தது. என்.எஸ்.கே. அப்போதுதான் வளரத் துவங்கியிருந்த திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதே நேரத்தில் திராவிட இயக்கத்தார் எழுதிய கதைகளை திரைப்படமாக எடுத்து மீண்டும் திரையில் காலூன்றினார். அப்போது என்.எஸ்.கே.யுடன் இவருக்கு நல்லுறவு இருந்து வந்தது. அத்துடன் அவர் கடைப்பிடித்த திராவிடப் பற்று இவரையும் வந்து ஒட்டிக் கொண்டது. சுதந்திரத்துக்கு தேசபக்தப் பாடல்கள் எழுதிய இவர் இப்போது திராவிட சிந்தனைகளுக்குப் பாட்டு எழுதலானார்.
திரையில் ஒலித்த இவருடைய பாடல்களில் குறிப்பாக மக்கள் மனங்களைக் கவர்ந்தவை என்று சிலவற்றைச் சொல்லலாம். அவை என்.எஸ்.கே.யின் நல்ல தம்பியில் “அது அந்தக் காலம், இது இந்தக் காலம் என்று பல செய்திகளைப் பழமை, புதுமை இவற்றைச் சுட்டிக் காட்டி எழுதிய பாடல். இவர் பாடல் எழுதிய பல படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்களாவன: சொர்க்கவாசல், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா (இவை அனைத்தும் திராவிட இயக்கத்தாரின் படம்) காவேரி., தூக்கு தூக்கி, தெய்வப் பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, ரத்தக்கண்ணீர், தேவதாஸ் போன்ற பல படங்கள்.
தமிழக அரசு இவருக்குக் “கலை மாமணி” விருது கொடுத்து கெளரவித்தது. 82 வயது வரை வாழ்ந்த இவர் 1981இல் காலமானார். இந்திய அஞ்சல் துறை இந்தக் கவிஞருக்கு ஒரு அஞ்சல் தலை வெளியிட்டு கெளரவம் செய்திருக்கிறது. உடுமலையில் இவருக்கு ஒரு மணிமண்டபம் இருக்கிறது. திரைத் துறை தந்த நல்லதொரு கவிஞர் இவர்.



1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உடுமலை நாராயணக்கவி பற்றி அறிந்தேன். தங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் ஆவணங்களாக அமைகின்றன. நன்றி.