பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, October 25, 2015

நால்வர் நாகராஜன்

                                       
பிற்காலத்தில் பிரபல சினிமா இயக்குனராக அறிமுகமான ஏ.பி.நாகராஜன் முதன் முதலில் இந்தப் பெயரில்தான் சினிமாக்களில் அறிமுகமானார். காரணம் இவர் நடித்து வந்த “நால்வர்” என்ற நாடகம் பிரபலமானது. அதே பெயரில் அவர் ஒரு திரைப்படமும் எடுத்தார். ஆனால் அவர் பின்னாளில் எடுத்த பிரம்மாண்டமான படங்களுக்கு முன்னோடியாக இவர் சேலம் எம்.ஏ.வி.பிக்சர்ஸ் சார்பில் எடுத்த படங்களே இவர் திறமையை பறை சாற்றின. வில்லன் நடிகர் S.A. நடராஜன் எடுத்த “நல்ல தங்கை” எம்.ஏ.வேணுவின் “பெண்ணரசி”,“சம்பூர்ண ராமாயணம்” உள்ளிட்ட பல படங்கள் ஆகியன இவர் பெயரை உயர்த்திப் பிடித்தன. “தில்லானா மோகனாம்பாள்” இவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் என்பதன் சுருக்கம்தான் ஏ.பி.என். 1928இல் பிறந்த இவர் சிறுவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார். தன் ஏழு வயதில் இவர் டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். அங்கு இவர் கற்ற தமிழ், இலக்கண பூர்வமாகவும், இலக்கியத் தரமாகவும் இருந்த காரணத்தால்தான் இவரைப் போல தமிழை உச்சரிக்கவும், திரையில் பிறரை நல்ல தமிழ் பேசி நடிக்க வைக்கவும் முடிந்தது.

இவர் எழுதி நடித்து வந்த “நால்வர்” நாடகம் திரைப்படமாக உருவானது. அதன் கதை வசனம் நடிப்பு எல்லாமே இவர்தான். அதனால்தான் நால்வர் நாகராஜன் எனப் பெயர் பெற்றார். “மாங்கல்யம்”, பெண்ணரசி, ஆசை அண்ணா அருமைத் தம்பி, டவுன் பஸ், நல்ல தங்கை ஆகியவை இவர் புகழை வெளிக் கொணர்ந்தது. டவுன் பஸ் படத்தில் வந்த “ஏரிக் கரை மேலே” பாடலும், நல்ல தங்கையில் வந்த “புருசன் வீடு போகப்போற பெண்ணே, தங்கச்சி கண்ணே” என்ற பாடலும் இவரை அடையாளம் காட்டியவை..

சிவாஜியை கொங்கு தமிழ் பேச வைத்த “மக்களைப் பெற்ற மகராசி” அதில் வரும் பாடல்களும் அந்தக் காலத்தின் ஹிட். முன்பொரு முறை ஒரு பழைய திரைப்படத்தில் இவர் எழுதி புகுத்திய தருமி காட்சியை மீண்டும் திருவிளையாடலிலும் கொண்டு வந்து ஹிட் ஆக்கிக் காட்டினார். அதற்கு நாகேஷின் நடிப்பும் துணை புரிந்தது என்பதையும் மறுக்க முடியாது.

புராண படங்கள் இவர் எடுத்ததைப் போல வேறு யாரும் எடுக்க முடியாது என்பதுபோல “திருவிளையாடல்”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருமால் பெருமை” ஆகிய படங்களை எடுத்துப் புகழ் பெற்றார். இவை தவிர “தில்லானா மோகனாம்பாள்”, “நவராத்திரி” ஆகியவை வெற்றிப் படங்கள்.

“திருமலை தென்குமரி”, “மேல்நாட்டு மருமகள்” படம் இதில் உஷா உதூபின் ஆங்கிலப் பாடல், ஜி.உமாபதிக்காக எடுத்த “ராஜராஜசோழன்”, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரல் பாடல்களுடன் வந்த “அகத்தியர்”, பொழுது போக்குக்காக “கண்காட்சி”, திருவருட்செல்வர், குலமகள் ராதை, வடிவுக்கு வளைகாப்பு போன்ற இதர படங்களும் இவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

'திருவிளையாட'லில் நக்கீரனாக ஏ.பி.நாகராஜன்

தொடக்க காலத்தில் இவர் படங்களை கே.சோமுவும், பிறகு தானே இயக்கவும் தொடங்கினார். இசை கே.வி.மகாதேவன் அதிகமான படங்களுக்கு. திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் ஆகியவை விருதுகள் பெற்ற படங்கள்.

இவர் தொடக்க காலம் முதல் அரசியலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுடன் இருந்து வந்தார். முதன் முதலாக சேலத்தில் நடந்த இரண்டாவது தமிழரசுக் கழக மகாநாட்டின் போது ம.பொ.சி. அவர்களின் மணிவிழாவை ஒட்டி இவரும் இயக்குனர் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணுவும் சேர்ந்து ம.பொ.சி.க்கு ஒரு பியட் காரை வாங்கி பரிசளித்தார்கள். இவர் படங்களில் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த கவி கா.மு.ஷெரீப் அவர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார். இவ்விருவரும் பத்திரிகைத் துறையிலும் இணைந்து செயல்பட்டார்கள்.

கவி கா.மு.ஷெரீப் அவர்கள் “தமிழ் முழக்கம்” என்ற இருவார இதழையும், ஏ.பி.என். ஐ ஆசிரியராகக் கொண்ட “சாட்டை” வார இதழையும் நடத்தி வந்தார். அந்த காலகட்டத்தில் தி.மு.க.வில் தீவிரமாக இருந்த கவிஞர் கண்ணதாசன் சேலத்திலிருந்து வேறொரு புலவரை (புலவர் நாக.சண்முகம் என்று நினைவு) ஆசிரியராக வைத்து “சண்டமாருதம்” என்றொரு இதழை வெளியிட்டு வந்தார். அதில் ஏ.பி.என். ஐ அவர்கள் சண்டமாருதமாகத் தாக்கி எழுதி வந்தார்கள்.

ஏ.பி.என் எடுத்த “பெண்ணரசி” படம் வெளிவந்த போது இவர்கள் சொன்ன விமர்சனம் என்னவென்றால், அரசி என்றாலே பெண் தான், அதில் என்ன பெண்ணரசி? என்பதுதான். அதற்கு ஏ.பி.என். சாட்டையில் எழுதினார் (ஏ.பி.என். அல்லது கவி கா.மு.ஷெரீப் எழுதிய பதில்) அரசி என்பவள் அரசனின் மனைவி, அவள் ராஜ்யத்தை ஆள்வதில்லை, பெண்ணரசி என்பவள் பெண்ணாக இருந்துகொண்டு ராஜ்யத்தை ஆள்பவள் என்றார்கள். சண்டமாருதம் அடங்கிவிட்டது.

இப்படி திரைத் துறையிலும், பத்திரிகையுலகிலும் ஏ.பி.நாகராஜன் கொடிகட்டிப் பறந்த காலம் திரையுலகின் வசந்த காலம். வாழ்க ஏ.பி.என். புகழ்.


1 comment:

  1. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    http://www.ypvnpubs.com/2015/10/blog-post_24.html

    ReplyDelete

You can give your comments here