பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 15, 2013

இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1054 முதல் 1063)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)

இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப் பார்ப்போம். 


இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1054 முதல் 1063)

ராஜாதிராஜ சோழன் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அவனுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டவன் இந்த 2ஆம் ராஜேந்திரன். ராஜாதிராஜன் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சிய தேவன் எனும் பெருமையோடு மாண்டுபோன பின்பு அவனுடைய தம்பியான இவன் "ராஜகேசரி" எனும் பட்டப்பெயருடன் பட்டத்துக்கு வந்தான். இவனது தந்தை ராஜேந்திரன், அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோர் ஆட்சி நடத்திய கங்கை கொண்ட சோழபுரம் தான் இந்த மன்னனுக்கும் தலைநகராக விளங்கியது. வழக்கம் போல எல்லா மன்னர்களையும் போல இவனுக்கும் பல மனைவியர் இருந்தனர். அவர்கள் ராஜராஜ அருள்மொழியார் எனும் தென்னவன் மாதேவியார், உருத்திரன் அருள்மொழி எனும் பிருதிமாதேவியார், கோகிலனடிகள் ஆகியோராவர்.

2ஆம் ராஜேந்திர சோழன் தன்னுடைய மூத்த சகோதரனும் இவனுக்கு முந்திய சோழ அரசனாக இருந்தவனுமான ராஜாதிராஜனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன். இவனுடைய தமையனாரான ராஜாதிராஜன் கொப்பம் போர்க்களத்தில் யானைமேல் துஞ்சியபோது இவனும் அந்தப் போரில் ஈடுபட்டு வீரமாகப் போராடினான். இவனுடைய தீரமிக்க போரினால்தான் போரின் முடிவு சோழர்களுக்கு சாதகமாகவும் சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு அழிவாகவும் முடிந்தது.

சாளுக்கியன் சோமேஸ்வரனுக்கு எதிரான கொப்பம் யுத்தம்.

மேலைச் சாளுக்கிய மன்னர்களுக்கு எதிரான யுத்தம் சோழர்கள் நெடுநாட்களாக தொடர்ந்து வந்திருக்கின்றனர். முதலாம் ராஜேந்திர மன்னன் காலத்திலேயே சாளுக்கியன் சத்யாஸ்ரேயனுக்கு எதிராகப் போரிட்ட காலம் தொட்டு இந்த விரோதம் தொடர்ந்து வந்திருக்கிறது. அது தவிர ராஜராஜ சோழனுடைய மகளான குந்தவியை வேங்கிநாட்டு இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுத்து உறவு கொண்டதும், அவன் மகனுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் தன் மகள் அம்மங்கையாரைத் திருமண உறவு வைத்துக் கொண்டதும் சாளுக்கியர்களின் எரிச்சலை அதிகப்படுத்தியிருந்ததை முன் பதிவுகளில் பார்த்தோம். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அவன் மகன் ராஜாதிராஜன் காலத்தில் இந்த மேலைச் சாளுக்கியர்களோடு துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த ஊரான கொப்பம் எனும் இடத்தில் 1053-54இல் உக்கிரமான போர் நடந்தது. ராஜாதிராஜனே இந்தப் போரில் சோழர் படையை தலைமை வகித்து வழிநடத்திச் சென்று போரிட்டான். யானை மேல் இருந்து போரிட்ட ராஜாதிராஜனை குறிவைத்து சாளுக்கியர்கள் வேல் வீசித் தாக்கி அவன் மரணத்துக்குக் காரணமானார்கள். அதே நேரத்தில் அவன் தம்பி 2ஆம் ராஜேந்திரன் மற்றொரு சோழர் படைக்குத் தலைமை தாங்கி போர்புரிந்து கொண்டிருந்தான். அண்ணன் யானை மேல் இருந்து கொல்லப்பட்டான் எனும் செய்தி அறிந்து ஓடோடி வந்தான் 2ஆம் ராஜேந்திரன். வீரமாகப் போரிடும் தம்பியைக் குறிவைத்து சாளுக்கியர்கள் தாக்கத் தொடங்கினார்கள். ஆனால் தந்தைக்குச் சமமான வீரத்தோடு போரிட்ட 2ஆம் ராஜேந்திரனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

போர்க்களத்தில் ராஜாதிராஜன் மாண்ட செய்தி கேட்டு சோழர் படை மனம் தளர்ந்து பின்வாங்கிய நேரத்தில் தன்னை சோழ மன்னனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டு 2ஆம் ராஜேந்திரன் சோழர் படைக்கு தைரியக் கூறி அணிவகுத்து போரிடச் செய்தான். போர்க்களத்தில் நடந்த இந்த தீரமிக்க செயலால் சோழர் படை ஒன்று திரண்டு தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து சாளுக்கியர்களைத் தாக்கித் துவம்சம் செய்யத் தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்திலும் அவர் மகன் ராஜேந்திர சோழன் காலத்திலும் இருந்த பல சேனைத் தலைவர்கள் சோழர் படையில் இருந்ததாலும், தலைவன் மாண்டுபோன பின் அதே போர்க்களத்தில் அவன் தம்பி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இப்படியொரு தீரமான போரைச் செய்வான் என்று எதிர்பார்த்திராத சாளுக்கியர்கள் பயங்கரமான தோல்வியைச் சந்திந்தார்கள்.

ராஜாதிராஜன் கல்வெட்டுகளில் எல்லாம் அவன் போர்க்களத்தில் மாண்ட செய்தியையும், அவனோடு அவனது தம்பிகள் போரிட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் போரில் 2ஆம் ராஜேந்திரனும் காயமடைந்த போதிலும், அதனால் சோர்வடையாமல் போரிட்டிருக்கிறான் என்பது தெரிகிறது. போரின் முடிவில் சாளுக்கியர்கள் பல படைத் தலைவர்களை களபலி கொடுத்து தோல்வியுற்றார்கள்.

இந்த யுத்தம் பற்றி கர்நாடக மாநிலம் கோலாரில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் செய்தியின் சாரம் இது:

"கோப்பரிகேசரிவர்மன் எனும் ராஜேந்திர தேவரின் 3ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், இரட்டபாடி நாட்டை வென்றதைக் குறிக்கும் விதமாக கொல்லாபுரம் எனுமிடத்தில் எழுப்பப்பட்ட வெற்றித் தூணில் ஆதவமல்லனை புகழ்மிக்க ஆற்றங்கரையில் கொப்பம் எனுமிடத்தில் வீழ்த்தியதையும், அவனுடைய யானைகள், குதிரைகள் பலவற்றைக் கவர்ந்து கொண்டதையும், பெண்களையும் ஏராளமான செல்வங்களையும் அபகரித்துக் கொண்டதையும் அந்தப் போரில் மாபெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வெற்றிச் சிம்மாதனத்தில் அமரவைத்து எழுதப்பட்டது." என்று போகிறது அந்தக் கல்வெட்டு.

இந்த கொல்லாபுரம் எனும் இடம் கோலாப்பூர் எனத் தெரிகிறது. சோழர்கள் முன்பு பெற்ற வெற்றிக்கு ஒரு தூணும், இப்போது 2ஆம் ராஜேந்திரன் பெற்ற வெற்றியைக் குறிக்க மற்றொரு தூணும் நாட்டப்பட்டது என்பதாகத் தெரிகிறது.

இந்த கொப்பம் யுத்தம் பற்றியும் சாளுக்கியர்களின் தோல்வி, சோழர்களின் வெற்றி பற்றியெல்லாம் சோழர் வரலாறுகள் தான் தெரிவிக்கின்றன. சாளுக்கிய வரலாற்றில் இவை பற்றிய குறிப்புகள் இல்லை.

இவனுடைய அண்ணன் ராஜாதிராஜன் தனக்குப் பிள்ளைகள் இருந்த போதும், தனது தம்பியான இந்த இரண்டாம் ராஜேந்திரனைத்தான் போரிலும் துணையாக, தனக்குப் பின் ஆட்சிக்கும் வாரிசாக நியமித்தான். அவன் விருப்பப்படி போரில் அவன் மாண்டதும் தம்பி ராஜேந்திரன் அரசனாக அறிவித்துக் கொண்டு போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றியையும் பெற்றான். இந்தச் செய்திகளையும் சோழர்கள் கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன, சாளுக்கியர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. தமிழிலக்கியமான கலிங்கத்துப்பரணியிலும், விக்கிரமசோழன் உலாவிலும் இந்த குப்பம் யுத்தம் பற்றி சிறப்பாகப் பேசப்படுகிறது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய பிள்ளைகள் ராஜாதிராஜன் தொடங்கி வரிசையாக அவனது தம்பிமார்கள் அரசுக்கட்டிலில் ஏறிய செய்தி கவனிக்கத் தக்கது.

கூடல் சங்கம யுத்தம்.

கி.பி. 1062இல் நடந்த இந்த யுத்தம் சோழர்களுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த யுத்தம். சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனுக்கும் இரண்டாம் ராஜேந்திரனுக்குமிடையே நடந்த மிகக் கடுமையான யுத்தம் இது. இங்கு கூடல் எனக் குறிப்பிடுவதிலிருந்து இரண்டு நதிகள் சங்கமிக்குமிடம் என்பது தெரிகிறது. ஆனால் அவை எந்தெந்த நதிகள். துங்கபத்திரையும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம் இது. கொப்பம் யுத்தத்தில் சாளுக்கியர்கள் சோழர்களிடம் தோற்று ஓடிப்போனார்கள். சோழ மன்னன் ராஜாதிராஜன் யானைமேல் துஞ்சிய போதும் அவன் இளையவனான 2ஆம் ராஜேந்திரன் போரைத் தொடர்ந்து நடத்தினான். ஓடிப்போன மேலைச் சாளுக்கியனை வலிந்து போருக்கு இழுத்து நடத்திய யுத்தம் இந்த கூடல் யுத்தம். இதில் சாளுக்கியர்களின் மன்னன் முதலாம் சோமேஸ்வரன் தன்னுடைய தளபதி தண்டநாத வாலதேவன் தலைமையில் ஒரு பெரும்படையுடன் யுத்தம் செய்தான். சோழர் படைக்கு 2ஆம் ராஜேந்திரன் தலைமை வகித்து நடத்தினான். நடந்த இடம் துங்கபத்ரா நதியும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடம்.
சோழர்களுக்கு ராஜேந்திரன் (2)வின் தம்பி ராஜமமேந்திரனும் மற்றொரு தம்பியான வீரராஜேந்திரனும் துணையாக நின்றனர். போர் கடுமையாக நடந்தது. சோழர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சோமேஸ்வரனின் பிள்ளைகளான விக்கலன் என்பவனும் சிங்கணன் என்பவனும் தோற்று ஓடிப்போனார்கள். இந்தப் போர் சோழர்களின் பக்கம் சந்தேகத்துக்கு இடமின்றி வெற்றியாக முடிவடைந்தது.

வீரராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று இந்தப் போரைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம். சாளுக்கிய மன்னன் கங்கபாடியிலிருந்து துங்கபத்திரைக் கரைக்கு ஓடினான். அவனோடு வில்வித்தையில் தேர்ந்த அவனுடைய தளபதிகளும் கையிலிருந்து ஆயுதங்களைப் போட்டது போட்டபடி ஓடினார்கள். ஓடியவர்களுக்குத் தலைமை வகித்து ஓடியவன் விக்கலன் எனும் சாளுக்கிய படைத் தளபதி. இந்தப் போரில் மண்டனநாயகன் சாமுண்டராஜன் எனும் தளபதியின் தலை வெட்டப்பட்டது. அவனுடைய அழகிய மகளான நாகலை என்பவள் முகத்தில் மூக்கு சேதப்படுத்தப்பட்டது.

தோல்வியினால் ஏற்பட்ட கோபமும் ஆத்திரமுமாக சாளுக்கியர்கள் மூன்றாம் முறையாகவும் சோழர்களை எதிர்த்து வந்தார்கள். முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கிவிடத் துடித்தார்கள். ஆனால் அவர்களது வேகத்தை முறியடித்து சோழ இளவரசன் சாளுக்கிய ஆகவமல்லனின் இரண்டு மகன்களான விக்கலன், சிங்கணன் என்பவர்களைத் தோற்கடித்தான். கி.பி.1062இல் இந்தப் போர் நடைபெற்றது. மேலைச் சாளுக்கிய ராஜ்யம் வீழ்ந்த பின்னர் அவர்கள் வேங்கியை நோக்கிப் படைகொண்டு போனார்கள். அங்கும் சோழர்களிடம் பலத்த அடிவாங்கி ஓடினார்கள்.

2ஆம் ராஜேந்திரன் தன் அண்ணன் ராஜாதிராஜனுக்கு உற்ற துணையாக இருந்து வந்தான். அண்ணன் போரில் ஈடுபட்ட காலங்களில் நாட்டு நிர்வாகத்தை இவன் தான் கவனித்து வந்தான். இவன் யுத்தத்திலும் நிர்வாகத்திலும் மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், நாட்டியம், நாடகம் என்று ஆர்வம் காட்டினான். தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயிலில் நடந்த ராஜராஜேஸ்வர நாடகத்தைப் பாராட்டி அதனை நடத்தியவர்களுக்க் அரிய பரிசுகளை வழங்கி கெளரவித்தான். அந்த நாட்டிய நாடகத்தை நடத்திய நடனக் கலைஞருக்கு 120 கலம் அதாவது 60 மூட்டை நெல் கொடுத்ததோடு, ஒவ்வோராண்டும் இதுபோன்ற நாடகங்களை நடத்தவும் ஆதரவு கொடுத்தான்.

இவனுடைய தம்பி வீரசோழன் என்பான் உறையூரில் இருந்து வந்தான். அவனுக்கு இந்த ராஜேந்திரன் 2 கரிகால சோழன் எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்தான். இவனுடைய மகனான கடாரங்கொண்ட சோழனுக்கு சோழஜனகராஜன் எனும் பட்டத்தை வழங்கினான். இவனுடைய இன்னொரு மகன் இரட்டைபாடி கொண்ட சோழனையும் கெளரவித்தான்.

இந்த இரண்டாம் ராஜேந்திரன் தன்னுடைய முன்னோர்களைப் போலவே பாண்டிய நாட்டையும் தன்னுடைய நாட்டோடு இணைத்து நிர்வகித்து வந்தான். சாளுக்கியர்களை வென்று, வேங்கியைப் பாதுகாத்து அதன் பிறகு இவன் கலிங்கத்தின் மீதும் படையெடுத்தான். கலிங்கம் என்பது இப்போதைய ஒடிஷா பகுதிகள். இலங்கையும் இவனது படையெடுப்புக்குத் தப்பவில்லை, அங்கு நிகழ்ந்த கலவரங்களை அடக்க அங்கும் சென்று வெற்றி பெற்றான். இந்த படையெடுப்புகளுக்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகள் கலிங்கத்து மன்னன் வீர சலமேகன் இலங்கை அரசன் மனபரணனுக்கு உதவியாக இருந்து கலகத்துக்குத் துணை நின்றதுதான்.

இலங்கை, சாளுக்கியம், கலிங்கம் தவிர வடக்கே அயோத்தி, கன்யாகுப்ஜம், ரெட்டபாடி, கடாரம் ஆகிய பகுதிகளும் இவனுடைய ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கலிங்கத்துப் போரில் கலிங்க மன்னன் மனாபரணன் இறந்து போனான் அவன் இரண்டு மகன்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இப்படியொரு வீரமும், விவேகமும், நல்ல நிர்வாகமும், எதிரிகளை அடக்கி வைத்திருப்பதிலும் சிறந்து விளங்கிய 2ஆம் ராஜேந்திர சோழன் கி.பி. 1063இல் இறந்தான். இவனைத் தொடர்ந்து இவன் தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான்.


































Saturday, July 13, 2013

ராஜாதிராஜ சோழன். (கி.பி. 1018 முதல் 1054 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப் பார்ப்போம். 

மாமன்னன் ராஜராஜன் பற்றியும், அவருடைய மகன் ராஜேந்திர சோழன் தன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டு வடக்கே கங்கைக் கரை வரையிலும் சென்று பின் கடல்கடந்து பல நாடுகளையும் வென்று வெற்றிக் கொடி நாட்டியதையும், பின்னர் அவரவர்க்கே அவர்கள் நாட்டைத் திருப்பிக் கொடுத்து நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொண்டு, சோழப் பேரரசர்களிலேயே சிறந்த மன்னனாக இருந்ததை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இனி அந்த ராஜேந்திர சோழனையடுத்து சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சிபுரிந்த ராஜாதிராஜ சோழ மன்னனைப் பற்றி சிறிது பார்ப்போம். தன் தந்தை ராஜேந்திர சோழன் காலத்திலேயே பல படையெடுப்புகளை தானே முன் நின்று போரிட்டு வெற்றி பெற்ற வீராதிவீரனாகத் திகழ்ந்தான் இந்த ராஜாதிராஜன் என்பதை ராஜேந்திர சோழன் வரலாற்றிலேயே பார்த்தோம். இனி தனியாக இந்த மன்னனின் வாழ்க்கையை, ஆட்சியை, வெற்றிகளை, புகழை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இவருடைய வரலாற்றினுள் நுழையும் முன்பாக இவரைப் பற்றிய சில முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். இவருக்கு "பரகேசரி" எனும் பட்டப்பெயர் கிடைத்திருந்தது. இவருடைய தலைநகரம் தன் தந்தையைப் போலவே கங்கை கொண்ட சோழபுரம்தான். இவரை மணந்த மாதரசி ராணி திரைலோக்கியமாதேவியார். இவருக்கு நிறைய பிள்ளைகள். இவர் கி.பி. 1054இல் காலமானார். இவருடைய தந்தை ராஜேந்திர சோழன் கி.பி.1012 லிருந்து 1044 வரை இருந்திருக்கிறாரே, பின் இவர் எப்படி 1018இல் பதவிக்கு வந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இவர்கள் காலத்தில் தந்தை ஆட்சியில் இருக்கும்போதே தனயனை ஆட்சிப் பொறுப்பில் உட்காரவைத்து அவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுப்பது போல இளவரசுப் பட்டத்தோடும் பின்னர் முழுப் பொறுப்போடும் ஆட்சி செய்ய அனுமதித்திருந்தனர். நூறு வயது வாழ்ந்தாலும் கடைசிவரை நானே அரசன் என்று இருந்துகொண்டு மகனுக்கு எழுபது அல்லது எண்பது வயது வரை ஆட்சி கிடைக்காத ஏக்கத்தை உருவாக்கியதில்லை இந்த மன்னர்கள். அத்தனை பரந்த மனப்பான்மை. போகட்டும் இனி வரலாற்றுக்கு வருவோம்.

இந்த மன்னனுடைய பெயரை முழுமையாகப் பார்ப்போமா? கோப்பரகேசரிவர்மன் ராஜாதிராஜ சோழன் எனும் பெயரோடு கூடிய இந்த சோழன், மிகப் புகழ்வாய்ந்த தனது தாத்தா ராஜராஜசோழன், தந்தை ராஜேந்திர சோழன் இவர்களுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன். அப்படி தன் முன்னோர்களின் பெருமையைக் காத்திட வேண்டுமென்கிற பொறுப்புணர்வு இல்லாமலா போய்விடும், அதுவும் தந்தை காலத்திலேயே பல போர்களைக் கண்டும் வெற்றிகளை ஈட்டியும், நல்ல நிர்வாகியாகத் திகழ்ந்த இந்த ராஜாதிராஜனுக்கு. பாட்டனார் ராஜராஜனைப் போல, தந்தை ராஜேந்திரனைப் போல இவனும் தலைசிறந்த சோழ மன்னனாக வாழ்ந்து காட்டினான். தந்தை காலத்திலேயே இவன் வட இந்திய படையெடுப்பின் போது பல நாடுகளைப் பிடித்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவன். இலங்கை, வடக்கே வேங்கி, கலிங்கம் ஆகியவை இவன் வெற்றி கொண்ட பிரதேசங்கள். கடல்கடந்த நாடுகள் பலவற்றை இவன் கைப்பற்றியிருந்த நிலையில் அங்கெல்லாம் புரட்சிகள் ஏற்பட்டபோதும் அவற்றை மிக சாமர்த்தியமாகச் சமாளித்த பெருமை இந்த ராஜாதிராஜனுக்கு உண்டு. பெயரைச் சொல்லும்போதே நம் மனம் இனிக்கிறதி, இல்லையா?

இவன் அரசன் என்பதால் படைகளை போருக்கு அனுப்பிவிட்டு இவன் அரண்மனையில் இருக்கும் ராஜா அல்ல. இவனுடைய சோழ பெரும்படைகளுக்கு இவனே முன்னின்று தலைமை வகித்து போரில் தானே நேரில் பங்கு கொண்டு தன் வீரத்தை வரலாற்றில் பதிய வைத்த மாவீரன் இவன். தங்கள் ராஜாவே போர்க்களத்தில் முன்னின்று போரிடுகிறார் எனும்போது அவன் படை தளபதிகளுக்கும், வீரர்களுக்கும் கேட்கவா வேண்டும். மன்னன் எவ்வழி அவன் படை வீரர்கள் அவ்வழியென்று அவர்களும் தீரத்தோடு போரிட்டார்கள். இவனுடைய வீரதீர பராக்கிரமங்கள், செய்த வேள்விகள் இவற்றால் இவனை "ஜெயம்கொண்டசோழன்" என்று அழைத்தனர். இவனது தாத்தா ராஜராஜனுக்கும் இந்த விருது இருந்தது என்பதை நினைவுகூரலாம். "விஜய ராஜேந்திர சோழன்" என்றொரு பெயரும் இவனுக்கு உண்டு.

இவனுடைய இளம் வயதிலேயே தன் தந்தைக்கு உதவியாக அவர் ஆண்ட காலத்திலேயே பொறுப்புகளைச் சுமந்தவன் இந்த ராஜாதிராஜன். தந்தையும், தனயனும் இணைந்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டனர். ராஜேந்திர சோழன் காலத்தில் இவனைப் பெயருக்கு இளவரசனாக வைத்துக் கொண்டதாக நினைக்கக்கூடாது. முழு உரிமை பெற்ற ஒரு அரசனாகவே இவன் திகழ்ந்தான் என்பதை கவனிக்க வேண்டும். தந்தை நாட்டை நடத்திச் செல்லும்போது இவன் போர்க்களத்தில் யுத்தங்களை நடத்திக் கொண்டிருந்தான்.

இலங்கையில் போர்.

இலங்கை கி.பி. 993 முதல் 1077 வரையில் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது என்று வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது. இலங்கையில் முன்னமே சோழர் ஆட்சி முழுமையாக இல்லாமல் ஒருசில பகுதிகளில் மட்டுமே இருந்தது. ஆகையால் இலங்கை சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பான் அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தால், ராஜேந்திர சோழன் அங்கு படையெடுத்துச் சென்று கி.பி. 1017இல் மகிந்தனைத் தோற்கடித்து நாடுகடத்திவிட்டு சிங்கள நாட்டைக் கைப்பற்றியிருந்தான். சோழ நாட்டுக்குக் கொண்டு போய் விடப்பட்ட அந்த மகிந்தன் அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்த பின் இறந்து போனான். ஆனால், அதன் பிறகு சோழர் ஆட்சிக்கு எதிராக சிங்களர்கள் அடிக்கடி கலகம் விளைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் வைத்திருந்தனர். இந்த நிலைமையை மாற்ற எண்ணிய ராஜாதிராஜன் 95000 வீரர்களைக் கொண்ட சோழர் படையை அழைத்துச் சென்று கலகக்காரர்களை இலங்கையின் தெற்குப் பகுதியான ரோகணா வரை அடித்துத் துரத்திவிட்டார். பிறகு தான் பிடித்த இலங்கையின் சிங்களப் பகுதிகளுக்கு அரசரானார்.

சோழர்கள் போரிட்டுப் பிடித்த நாடுகளைத் தங்கள் வசமே வைத்துக் கொள்ளவில்லை. பிறகு அந்தந்த நாட்டு மக்களிடமே திரும்ப பொறுப்புகளை ஒப்படைத்து விட்டனர். இலங்கையில் ராஜாதிராஜன் தான் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் தன் பொறுப்பில் வைத்திருந்தார். சோழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த சிங்களர்களுக்கு பாண்டியர்கள் உதவி புரிந்து வந்தனர். என்ன கொடுமை? சிங்களருக்கும் பாண்டியருக்கும் சோழர்கள் பொது எதிரிகள் என்பதால் இப்படி ஒன்று சேர்ந்து கொண்டனர். சிங்கள அரச குடும்பத்தாரோடு பாண்டியர்கள் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டிருந்தனர்.

ராஜாதிராஜ சோழன் காலத்தில் சிங்கள பாண்டிய உறவு உச்ச கட்டத்தில் இருந்தது, காரணம் பொது எதிரியான சோழர்களை ஒழித்துவிட வேண்டுமென்பது இவ்விருவரின் எண்ணம். இலங்கை விக்கிரமபாகு அங்கு இருந்த சோழ படைகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தான். அவனுக்கு உறுதுணையாக இருந்தவன் பாண்டிய இளவரசன் விக்கிரம பாண்டியன். இவர்களோடு வடக்கே கன்னோஜியின் இளவரசன் ஒருவனும் துணைக்கு நின்றான். சோழர் படைகள் இந்த பொது எதிரிகளோடு தீரமாகப் போரிட்டு இந்த இளவரசர்களை இரக்கமின்று கொன்று போட்டார்கள். இவற்றையெல்லாம் சிங்கள பெளத்த நூலான மஹாவம்சம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த மஹாவம்சம் பெளத்தர்களுக்காக பெளத்தர்களால் எழுதப்பட்டதானதால் இதன் கூற்று அன்றைய வரலாற்றுச் செய்திகளை அப்படியே எடுத்துரைக்கிறது. நமக்குக் கிடைக்கும் செய்திகளின்படி சோழர் படைகள் சற்றும் கருணை காட்டாமல் இந்தக் கொடிய எதிரிகளை இரக்கமின்றி அழித்தொழித்தார்கள் என்பது தெரிகிறது. போர் என்றால் அதில் இரக்கத்துக்கோ, மனிதாபிமானம் கொண்டு எதிரிகளை விடுவித்து விடுவதோ சோழர் படைகளுக்குப் பழக்கம் இல்லை. அது எல்லா எதிரிகளிடமும் அப்படித்தான் நடந்து கொண்டது, அவர்கள் சாளுக்கியர்களாகட்டும், பாண்டியர்களாகட்டும் அல்லது இலங்கையின் சிங்கள அரசர்களாகட்டும் எங்கும் ஒரே நிலைதான். சோழர்களின் இந்த மனப்பான்மையை, செயலை மஹாவம்சம் கண்டிக்கிறது. இதை மனிதாபிமானமன்ற்ற செயலாக வர்ணிக்கிறது. வேறு எப்படி அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும் இல்லையா? யுத்தம் என்றால் எதிரியை அழிப்பதுதான் நோக்கம் எனும்போது, இரக்கம் காட்டி விடுவிக்கவா முடியும். இந்த யுத்தக் கோட்பாட்டை மஹாவம்சம் கண்டிக்கிறது, குறை கூறுகிறது.

அதே சமயம் இந்த பெளத்த நூல் தமிழ்நாட்டு கடல் வாணிபம் செய்ய வந்த வணிகர்களை சிங்களர்கள் ஈவு இரக்கமின்றி கொல்வதைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. அது போலவே இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்க்க வரும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அங்கு தாக்கப்படுவதையும் இந்த நூல் குறிப்பிடவில்லை எனும்போது அதன் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக வணிகர்களாகட்டும், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் சாதாரண மக்களாகட்டும் இவர்கள் அனைவரும் சிங்களவர்களால் வழிமறித்துத் தாக்கப்படுவது, வழிப்பறிக்கு ஆளாவது என்பது தொடர்ந்து நடந்து வந்தது. இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டுத்தான் ராஜேந்திர சோழன் காலத்திலிருந்து இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க இலங்கைக்குப் படைகொண்டு சென்று தீயவர்களுக்குப் பாடம் கற்பித்தார்கள். இவற்றைப் பற்றி சொல்லும் பல ஆதாரங்கள் தமிழர்களிடம் இருக்கின்றன.

இலங்கையில் சோழர்கள் ஆட்சிக்குட்பட்ட தமிழ்ப் பகுதிகள் தனியான தமிழ்ப் பிரதேசமாக நிர்வகிக்கப்பட்டன. தென்கோடி இலங்கை மட்டும் எப்போதும் சிங்களவர்களின் பிரதேசமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அவர்கள்தான் சோழர்கள் மீது அடிக்கடி வம்புக்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிங்கள எதிர்ப்புக் குழுவுக்கு சிங்கள அரசன் விக்கிரமபாகுவின் மகன் கிட்டி என்பவன் 1058இல் விஜயபாகு எனும் பெயரோடு சிங்களருக்குத் தலைமை ஏற்றான். சோழர் படைத் தளபதிகள் இந்த சிங்களர்களைப் பிடித்துத் தண்டித்து தமிழ்நாட்டு வணிகர்களைக் காப்பாற்றினர்.

சாளுக்கியர்களோடு போர்.

இலங்கைப் பிரச்சினை இப்படியிருக்க வடக்கே சாளுக்கியர்கள் எப்போதும் போல சோழர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். மேலைச் சாளுக்கியர்களை ஒரு கட்டுக்குள் அடக்கி வைக்கவேண்டுமென்று ராஜாதிராஜன் விரும்பினார். இப்படிச் செய்வதன் மூலம் சோழர்களோடு திருமண உறவுகள் கொண்ட வேங்கி நாட்டைக் காப்பாற்றும் கடமையையும் இவர்கள் செய்து வந்தனர். வேங்கிக்கு உதவவும், மேலைச் சாளுக்கியர்களுக்குப் பாடம் கற்பிக்கவும் 1046இல் ராஜாதிராஜன் வடக்கே படையெடுத்துச் சென்றான். கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த போரில் சாளுக்கியர்களைத் தோற்கடித்து அவர்கள் கோட்டைக்கும் தீ வைத்து அழித்தார்கள் சோழர்கள். இதைத் தொடர்ந்து சாளுக்கியர்கள் மீதும், அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பல சிற்றரசர்கள் மீதும் சோழர்கள் படையெடுத்து அவர்களையெல்லாம் தோற்கடித்தார்கள். அவர்கள் அரண்மனைகளை அழித்தார்கள். கிருஷ்ணா நதியைக் கடந்து சென்று அக்கரையில் தங்கள் வெற்றியைப் பறைசாற்றும் விதமாக ஒரு வெற்றி ஸ்தூபியையும் நாட்டி வைத்தார்கள்.

மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரமாக விளங்கிய கல்யாணி (தற்சமயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கல்யாண் எனும் இடம்) நகரைத் தாக்கி சோழர்கள் அழித்தார்கள். இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் கொல்லாபுரம் (இப்போதைய கோலாப்பூர்) எனும் இடத்தில் ஒரு வெற்றிக் கம்பத்தை நாட்டினார்கள். இந்தப் போரில் வென்ற ராஜாதிராஜன் வெற்றி வீரனாக சாளுக்கிய தலைநகருள் நுழைந்து அங்கு தன்னுடைய மகுடாபிஷேகத்தை நடத்திக் கொண்டு "விஜயராஜேந்திரன்" எனும் விருதினையும் பெற்றான்.

கி.பி.1050இல் சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் என்பான் சோழர்களுக்குத் தரவேண்டிய கப்பம் கட்டாமல் சோழர்களை எதிர்த்துக் கொண்டு அவர்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அறிவித்துவிட்டு இப்போதைய பசவகல்யாண் எனும் கல்யாண் எனும் இடத்தில் தன்னை சுதந்திர அரசனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டான். இதனை அடுத்து வேங்கி நாட்டுக்குத் தனது படைகளை அனுப்பி அதனையும் தன் வசப்படுத்திக் கொள்ள முயன்றான். சாளுக்கியர்களுக்க் வேங்கி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என்பது எண்ணம்.

ராஜாதிராஜன் தென் கர்நாடகப் பிரதேசங்களின் மீது படையெடுத்து சாளுக்கியர்களின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். உச்சங்கி, நுளம்பவாடி, கடம்பலிங்கே, கோகாலி போன்ற இடங்கள் அவை. இந்த வெற்றிகள் சோமேஸ்வரனைக் கலங்க அடித்தது. அவன் தனக்குத் தானே "திரைலோக்கியமல்லன்" எனும் விருதினைக் கொடுத்துக் கொண்டிருந்தான். வேங்கியில் சோழர்களின் உறவினர்களான வேங்கி அரசர்களை வென்று அங்கு தன் சார்பில் ஒரு பொம்மை அரசனை நியமித்துவிட்டு வந்திருந்தான் சோமேஸ்வரன். தன் தலைநகரை நோக்கி சோழர்கள் வருவதறிந்து தன் நாட்டைக் காத்துக்கொள்ள அவசரமாக சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பினான் அவன். சாளுக்கிய படைகளும், மாபெரும் சோழர் படைகளும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த கொப்பம் எனுமிடத்தில் சந்தித்தது.

ராஜாதிராஜனின் இறுதி நாட்கள்.

ராஜாதிராஜன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சில காலத்துக்குள் இரண்டாம் ராஜேந்திரனை இளவரசாக நியமித்து நிர்வாகத்திலும் போர்களிலும் தனக்கு உதவி செய்யும்படி நியமித்துக் கொண்டார். ராஜாதிராஜன் காலமானவுடன் இந்த இரண்டாம் ராஜேந்திரன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சோழ மண்டலத்தை ஆளத் தொடங்குகிறான். வடக்கே சாளுக்கியர்களோடு கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த யுத்தத்தில் பல போர்க்களங்களையும், பல வெற்றிகளையும் பெற்ற ராஜாதிராஜன் கொப்பம் போரில் தன்னந்தனியாகப் போரிட்டு மாண்டுபோனான். இந்த யுத்தத்தில் இவர் தன்னுடைய யானையின் மீதிருந்து போரிடுகையில் வேல் பாய்ந்து மாய்ந்து போனதால் இவருக்கு "யானைமேல் துஞ்சிய தேவர்" எனும் பட்டப்பெயர் கிடைத்தது. தன் தந்தையார் ராஜேந்திரனுக்காக போர்க்களங்களைத் தன் இளம் வயதில் கண்ட ராஜாதிராஜன் கடைசியில் தன் உயிரை ஒரு போர்க்களத்திலேயே விட்டதன் மூலம் அவன் ஒரு போர்வீரனாகவே வாழ்ந்தான் வீழ்ந்தான் எனும் பெருமைக்கு உரியவனாகிறான்.

பெரும் புகழ் கொண்ட சோழ வம்சத்தில் இந்த ராஜாதிராஜனுக்கு உரிய இடம் உண்டு. வாழ்க ராஜாதிராஜ சோழன் புகழ்!
































Thursday, July 11, 2013

மாமன்னன் ராஜேந்திர சோழன்.

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)

இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப் பார்ப்போம்.


மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன். தந்தை ராஜராஜன் 1014இல் காலமான பிறகு சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன். ஆனால் வரலாற்று ஏடுகளில் ராஜராஜனுக்குக் கிடைத்த அளவுக்கு இந்த ராஜேந்திரனுடைய புகழ் வெளிவரவில்லையே ஏன்?

ராஜேந்திரசோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரை பரந்து விரிந்து கிடந்தது. கடல் கடந்தும் இந்த மாமன்னனுடைய ஆட்சியின் அதிகாரம் பரவியிருந்தது. இப்படிச் சொன்னால் மட்டும் போதுமா? எதுவரையில் இவனுடைய ஆட்சியின் எல்லை விரிந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆம்! தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சோழ சாம்ராஜ்யம் பர்மா அதாவது இப்போதைய மியன்மார் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் இவைகளும் இவனது ஆட்சியின் கீழ் இருந்தன. அது மட்டுமா? ஸ்ரீவிஜய ராஜ்யங்களான சுமத்ரா, ஜாவா, மலேயா தீபகர்ப்பம் தவிர தூரக்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் இவனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவை தவிர சோழ கடற்படை வென்றெடுத்த நாடுகளும் பலப்பல. வங்கதேசம், இப்போதைய பிகார் மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன்.

ராஜராஜனின் மைந்தன் ராஜேந்திர சோழன். இவன் கி.பி.1012 முதல் 1044 வரை அரசாட்சியை நிர்வகித்து வந்தான். இவன் காலத்தில் சோழ் சாம்ராஜ்யம் பாரத வர்ஷம் முழுவதும், கடல் கடந்தும் பரவி நின்றது. இவனுக்குப் பரகேசரி எனும் பட்டப்பெயர் உண்டு. இவன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். இவனது ராணிமார்கள் திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார்.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்கினான். அந்த தலைநகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். அவன் வாழ்ந்த காலத்தில் கீழை ஆசிய கண்டத்தில் புகழ்வாய்ந்த சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது சோழ சாம்ராஜ்யமே. மாமன்னன் ராஜேந்திரனின் தமிழ்ப் படை பல நாடுகளிடமிருந்தும் கப்பம் வசூலித்தது. அவை இப்போதைய தாய்லாந்து, கம்போடியா ஆகியவைகளும் அடங்கும்.

பொதுவாக தமிழ் மன்னர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் பிற நாடுகளை வென்று ஆக்கிரமிப்பது கிடையாது. ஆனால் ஒருசில மன்னர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு இந்த ஆசை ஏற்பட்டு அதன் விளைவாகப் பல நாடுகளை வென்று ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ராஜராஜசோழனும் அவனுடைய மகன் ராஜேந்திரனும் கடல்கடந்தும் சென்று மேலும் பல நாடுகளை வென்று வெற்றியைக் குவித்து வந்தார்கள்.

ராஜேந்திர சோழன் மற்ற எவரைக் காட்டிலும் அதிகமான கடல்கடந்த நாடுகளை வென்றெடுத்தவன். குறிப்பாக இவன்காலத்தில்தான் அந்தமான், லட்சத்தீவுகள், இந்தோசைனா என வழங்கப்பட்ட தாய்லாந்து, மலேயா, லாவோஸ், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய பிரதேசங்களையும் பர்மாவையும் வென்று தன் சாம்ராஜ்யத்தினுள் இணைத்துக் கொண்டான்.

ராஜேந்திர சோழனுக்கு முன்பாக பல்லவ மன்னர்களும்கூட கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்திருக்கிறார்கள். ஆனால் ராஜேந்திர சோழந்தான் பர்மா இந்தோசைனா பகுதிகளையும் வென்று வெற்றிக் கொடி நாட்டியவன். இந்த நாடுகள் அனைத்துமே ராஜேந்திர சோழன் காலத்தில் மட்டுமல்ல, அவனைத் தொடர்ந்து வந்த பல சோழ அரசர்கள் காலம் வரை அதாவது முதலாம் குலோத்துங்கன் காலம் வரை இவர்கள் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றன.


பல்லவர்கள் காலத்தைவிட ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுத்துச் சென்ற அன்னிய மண்ணில் நமது கலாச்சாரத்தைப் பரப்பி, பல சிவாலயங்களை ஆங்காங்கே கட்டி வைத்தான். இன்றும்கூட தாய்லாந்து போன்ற இடங்களில் இவன் காலத்திய பழமையான உலக அதிசயங்களுக்கு ஈடான சிவாலயங்களைக் காண முடிகிறது.

தஞ்சையில் அதிசயிக்கத்தக்க வகையில் தந்தை ராஜராஜன் கட்டிய ராஜராஜேச்சரம் கோயிலைப் போல தன்னுடைய புதிய தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோயிலைப் போன்றதொரு கோயிலைத் தானும் கட்டிவைத்தான். தன்னுடைய சாதனைகளின் காரணமாக இவன் பரகேசரி என்றும்
யுத்தமல்லன் என்றும் விருதுகளைப் பெற்றான்.

ராஜராஜ சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜேந்திரனை யுவராஜாவாக அங்கீகரித்து 1012இல் முடிசூட்டினான். ராஜராஜனுடைய இறுதிக் காலத்தில் இவ்விருவரும் செய்த சாதனைகள் அளப்பரியவை. மன்னன் ராஜராஜசோழன் சார்பாக தனையன் ராஜேந்திரன் சோழர் படைகளுக்குத் தலைமை தாங்கி வேங்கி, கலிங்கம் ஆகிய பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

1012இல் யுவராஜாவாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும் ராஜேந்திரன் 1014இல்தான் அரசுரிமை பெற்று மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். தன்னுடைய தந்தை தன்னை யுவராஜாவாக அங்கீகரித்ததைப் போல ராஜேந்திரனும் 1018இல் தன்னுடைய மகனான ராஜாதிராஜனை சோழ இளவரசனாக அங்கீகரித்தான். அது தொடங்கி தன் தந்தைக்கு உதவியாக யுவராஜாவாக இருந்து அரசாட்சியைத் திறம்பட அடுத்த 26 ஆண்டுகளுக்கு நடத்தி வந்தான் ராஜாதிராஜன். மன்னனுக்குரிய அனைத்து அதிகாரங்களும் கொண்ட யுவராஜாவாக இவர்கள் ஆட்சிபுரிந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. மன்னன் மரணமடைந்த பின்னர் யார் பட்டத்துக்கு வருவது என்ற வாரிசுரிமைப் போர் இதுபோன்ற நேரங்களில் வருவதற்கு வாய்ப்பு இல்லை அல்லவா?

தொடக்க கால ராணுவ படையெடுப்புகளும் வெற்றிகளும்.

ராஜேந்திர சோழ மன்னனுடைய காலத்திய கல்வெட்டுகளிலிருந்து போர்களில் அவன் பெற்ற வெற்றிகள் குறித்த பல செய்திகள் கிடைக்கின்றன. கி.பி.1002ஆம் ஆண்டு முதல் தன் தந்தையின் காலத்திலேயே அவன் பல போர்களில் வெற்றி பெற்றிருக்கிறான். அப்படி அவன் படையெடுத்துச் சென்ற பெற்ற வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுத்துச் சென்று வென்றதும் ஒன்று. அது தவிர தற்போதைய கர்நாடக மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் இருந்த மேலச் சாளுக்கியர்கள் நாடும், தென் கர்நாடகத்தில் கோலாப்பூர், பண்டரிபுரம் ஆகிய பகுதிகளும் இவன் வெற்றி பெற்ற பகுதிகள்.

மேலைச் சாளுக்கிய மன்னனான சத்யாசிரியன் அவனுடைய வாரிசு 2ஆம் ஜெயசிம்மா ஆகிய இடங்களையும் வெற்றி கொண்டான். துங்கபத்திரை நதியைத் தாண்டி இந்த நாட்டினை அடைந்து போரிட்டான். சாளுக்கியர்களின் தலைநகரமும் ராஜேந்திரன் வசம் வந்தது. சாளுக்கியர்களின் பரந்து விரிந்து கிடந்த நாட்டில் ரெய்ச்சூர் பகுதிகளையும் கிருஷ்ணா துங்கபத்ரா ஆகிய நதிகளைக் கடந்து சென்று போரிட்டு வெற்றியடைந்திருக்கிறான். மைசூருக்கு வடமேற்கில் இருந்த பிரதேசங்களையும் அங்கிருந்த அரசர்களைத் தோற்கடித்து மலைப்பகுதிகளுக்கு விரட்டிவிட்டு ராஜேந்திரன் பிடித்துக் கொண்டான். வெற்றி பெற்று பிடித்துக் கொண்ட பகுதிகளில் தனது வெற்றியைக் குறிக்கச் சில இடங்களில் சிவாலயங்களையும் எழுப்பினான். தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் ஐதராபாத்துக்கு வடக்கே இருந்த பகுதிகளையும், கர்நாடகப் பகுதிகளான கோலாரையும் பிடித்துக் கொண்டான். கோலாரில் தமிழில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டுப் பகுதியும் காணக் கிடைக்கிறது.

இலங்கைப் படையெடுப்பு.

ராஜேந்திர சோழனின் தந்தையார் ராஜராஜ சோழன் காலத்தில் இலங்கையை முழுமையாகப் பிடிக்க வில்லை. மேலும் சில பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்படாமலே இருந்தன. அதை பூர்த்தி செய்து விட்டுப்போன பகுதிகளையும் பிடித்துவிட வேண்டுமென ராஜேந்திரன் இலங்கைக்குப் படையெடுத்தான். கி.பி.1018ஆம் ஆண்டு இந்தப் படையெடுப்பைத் துவக்கினான் ராஜேந்திரன். முன்பு பாண்டிய மன்னர்களின் செல்வங்களையும், பொன்னாபரணங்களையும் கவர்ந்து வைத்திருந்த இலங்கை அரசர்களிடமிருந்து ராஜேந்திரன் அவற்றை மீட்டதாகத் தெரிகிறது. இலங்கை அரசனின் தலைக் கிரீடத்தையும், ராணியையும் அவரது மகளையும் கூட ராஜேந்திரன் பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது. சிங்கள ராஜா மகிந்தன் சிறைபிடிக்கப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பப்பட்டான். அந்த மகிந்தனுடைய துரதிர்ஷ்டம் அவன் சோழ மன்னன் சிறையில் பன்னிரெண்டு ஆண்டு காலம் சிறைப்பட்டுக் கிடந்து அங்கேயே மாண்டு போனான். இலங்கையின் "மகாவம்சமும்" இந்தச் செய்திகளை உறுதி செய்கின்றன. எதற்காக இப்படி சோழ மன்னன் இலங்கை மீது படையெடுத்து, அந்த ராஜாவைச் சிறைப்பிடித்து, ராணியையும், மகளையும் சோழ நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்? இந்தக் கேள்வி நமக்கு எழத்தானே செய்யும். சோழ நாட்டு வணிகர்கள் தங்கள் கப்பல்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்கும், தூரக்கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் வழியில் (இப்போது மீனவர்களைத் துன்புறுத்துவது போலவே) அப்போதும் அந்த வியாபாரக் கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தும், வியாபாரிகளை சிறையில் அடைத்தும் துன்புறுத்தியும் கொன்றும் வந்திருக்கின்றனர். இந்த அநியாயத்தை (இப்போது போல்) தட்டிக் கேட்காமல் இருக்க முடியுமா? சோழ தேசத்தை ஆளும் மன்னன் எனும் முறையில் ராஜேந்திரன் தன் படைகளை அழைத்துச் சென்று இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்டினான். இது பற்றி கோலார் கல்வெட்டு செய்திகளும் கிடைத்திருக்கின்றன.

ராஜேந்திரனின் சிங்கள நாட்டு வெற்றியை அடுத்து அங்கு சிறைப்பிடிக்கப்பட்ட மகிந்தனுடைய மகன் ஒருவன் தமிழ் மன்னர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டான். தமிழர் படைகளுக்கும் சிங்கள படைகளுக்கு மிடையே பெரும் யுத்தமொன்று இலங்கையில் நடந்தது. அந்த யுத்தத்தில் மிச்சமிருந்த சிங்கள எதிர்ப்புகளையும் முறியடித்துவிட்டு இலங்கை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கையில் தமிழர் ஆட்சி 2ஆம் குலோத்துங்கன் ஆட்சிக் காலம் வரை தொடர்ந்தது.

கி.பி.1041இல் மறுபடியும் ராஜேந்திர சோழன் இலங்கைக்குச் சென்று அங்கு தமிழர் படைகளுக்கு எதிராக உருவாகியிருந்த கலகத்தை ஒடுக்கினான். சிங்களர்களைத் தூண்டிவிட்டு தமிழர்களுக்கு எதிராகப் போரிட்டவன் பெயர் விக்கிரமபாகு என்பவன். இந்த விக்கிரமபாகுவும் சில நாட்களுக்குப் பிறகு கலவரத்தில் மாண்டுபோனான். தமிழ் மன்னருக்கு எதிராக இலங்கையில் சிங்களர் தவிர வேறு சிலரும் கலகங்களில் ஈடுபட்டு வந்தனர். சிங்களர்களுக்கு உதவியாக பாண்டிய நாட்டிலிருந்து ஓடிவந்து புகலிடம் தேடிக்கொண்ட பாண்டிய நாட்டு இளவரசர்களும், வடக்கே கன்னோஜ் பகுதிகளிலிருந்து வந்த சிற்றரசன் ஒருவனும் இருந்தனர். இவர்கள் அனைவரையும் சோழர் படைகள் வெற்றி கண்டன. ராஜராஜன் காலத்தில் நிறைவேறாமல் போன இலங்கையை முழுமையாகப் பிடித்துக் கொள்ளும் திட்டம் அவர் மகன் ராஜேந்திரன் காலத்தில் நிறைவு பெற்றது.

பாண்டியர்களும் சேரர்களும்.

கி.பி.1018இல் ராஜேந்திர சோழன் தன்னுடைய பிரம்மாண்டமான சோழர் படையுடன் அதற்குத் தலைமை ஏற்று பாண்டிய, சேர நாடுகளுக்குச் சென்றான். அப்படி படையெடுத்துச் சென்ற ராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டின் நன்முத்துக்களையும், முத்துக்குளிக்கும் துறைமுகங்களையும் பிடித்துக் கொண்டதோடு மேற்கில் இருந்த மலைகளைத் தாண்டிச் சென்று சேர நாட்டினுள் நுழைந்து அந்த நாட்டை வெற்றி கொண்டான். இந்த பாண்டிய, சேர நாட்டுப் பகுதிகள் ஏற்கனவே ராஜராஜ சோழன் காலத்தில் சோழ மண்டலத்துக்குட்பட்டவைகளாக இருந்தும், ராஜேந்திரன் மறுமுறையும் அங்கெல்லாம் சென்று தங்கள் ஆட்சியை உறுதி செய்துகொண்டார். அப்படி ராஜேந்திரன் பிடித்துக் கொண்ட பாண்டிய மண்டலத்து அதிபதியாகத் தன்னுடைய மகனை ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனும் பட்டப்பெயருடன் நியமித்தார் நிர்வாகியாக நியமித்தார்.

மேலைச் சாளுக்கிய யுத்தங்கள்.

கி.பி.1021 ராஜேந்திர சோழன் தனது கவனத்தை மேலைச் சாளுக்கியர்கள் பக்கம் திருப்பினார். 1015இல் 2ஆம் ஜெயசிம்மா என்பவன் மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் ஆட்சிக்கு வந்ததும் தனக்கு முந்தைய அரசனான சத்யாஸ்ரயன் இழந்தவற்றை மீட்டெடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தான். அந்த சத்யாஸ்ரயன் சோழர்களோடு நடந்த யுத்தத்தில் தோற்று ஓடியவன். ஆனால் எப்படியோ ராஜராஜ சோழனின் அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு ராஜ்யத்தை மீண்டும் பெற்றுவிட்டான். இந்த 2ஆம் ஜெயசிம்மா ஆட்சிக்கு வந்தவுடன் தானே சுயமாக செயல்படத் தொடங்கினான்; காரணம் ராஜேந்திர சோழன் அப்போது தனது கவனத்தை இலங்கை மீதும், பாண்டிய சேரர்கள் மீதும் செலுத்திக் கொண்டிருந்தான். இந்த சமயம் பார்த்து ஜெயசிம்மா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்தான்.

மேலைச் சாளுக்கியர்கள் கர்நாடகத்தின் வடக்கு, மராட்டியத்தின் பகுதிகளைக் கொண்டது. கீழைச் சாளுக்கியர்கள் என்பவர்கள் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் ஆட்சி செய்தவர்கள். மேலைச் சாளுக்கிய ராஜ்யத்தை ஆண்ட இந்த ஜெயசிம்மாவுக்குக் கீழைச் சாளுக்கியர் ஆட்சியிலும் தலையிட்டுக் குழப்பம் விளைக்க எண்ணினான். அந்த வேங்கியில் விமலாதித்தன் என்பவன் அரசனாக இருந்தான். அவன் காலமான பிறகு அவனது மகனும் சோழ மன்னர்களின் ஆதரவு பெற்றவனுமான ராஜராஜ நரேந்திரன் என்பான் ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் ஜெயசிம்மா என்ன செய்தான் இவனுக்கு எதிராக அவன் சகோதரன் விஜயாதித்தன் என்பவனை ஆதரிக்கத் தொடங்கினான். விமலாதித்தன் ராஜராஜ சோழனின் மகளான குந்தவையை திருமணம் செய்து கொண்டவன். மாமன்னனின் மாப்பிள்ளை. விமலாதித்தனின் இரண்டு மகன்களில் ஒருவன்தான் இப்போது வேங்கி ஆட்சிக்கு வரும் ராஜராஜ நரேந்திரன். மற்றொருவனை ஜெயசிம்மா ஆதரித்தான். இந்த நிலையில் சோழ மன்னர்கள் யாரை ஆதரிப்பார்கள்? ராஜேந்திரன் ராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான். இந்தப் போட்டியில் வேங்கி நாட்டில் உள்நாட்டுக் கலகம் உருவானது. அண்ணன் தம்பிக்கிடையே பனிப்போர். ராஜேந்திர சோழனின் ஆதரவு பெற்ற ராஜராஜ நரேந்திரன் உள்நாட்டுப் போரில் வென்றான். வேங்கி அவன் வசம் வந்ததோடு, சோழர்களின் கரங்களும் வலுப்படுத்தப்பட்டன.

ராஜேந்திர சோழன் தன்னுடைய படைகளை இரண்டாகப் பிரித்து ஒன்றை மேலைச் சாளுக்கிய ராஜ்யத்துக்கும், மற்றொன்றை வேங்கிக்கும் அனுப்பி வைத்தான். மேற்கே ஜெயசிம்மாவை எதிர்கொள்ள சென்ற படைகள் மாஸ்கி எனுமிடத்தில் நடந்த போரில் அவனைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து சாளுக்கிய நாட்டின் தலைநகருக்கும் சென்று அங்கு அங்கிருந்த மற்ற சாளுக்கியர்களையும் தோற்கடித்தது. இந்தப் போரில் ஜெயசிம்மாவின் பெரிய தளபதிகள் பலரை சோழர் படைகள் போரில் கொன்றுவிட்டன. மகாசமந்தா என்றும் தண்டநாயகா என்றும் புகழ்பெற்ற தளபதிகள் கொல்லப்பட்டனர். ஜெயசிம்மாவின் பேராசைக்காகத் தங்கள் உயிரை ஈந்தனர் இந்த வீரம் செறிந்த தளபதிகள். இந்த போரின் மூலம் இரட்டைபாடி நாடு எனப்படும் மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில் வீழ்ந்தது. இந்த சகோதர யுத்தத்தில் வெற்றிபெற்ற ராஜராஜ நரேந்திரனை, ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டித்திரும்ப வரும்போது வேங்கிநாட்டின் பட்டாபிஷேகத்தைச் செய்த கையோடு தன் மகளான அம்மங்கா என்பவரையும் அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

கி.பி.1031இல் இரட்டைபாடி நாட்டார் (மேலைச் சாளுக்கியர்) மீண்டும் வேங்கி மீது படையெடுத்து வந்தனர். அந்தப் போரில் ராஜேந்திர சோழனின் மருமகனும் வேங்கியின் மன்னனாக இருந்தவனுமான ராஜராஜ நரேந்திரன் தோற்று ஓடிப்போனான். சாளுக்கியர்களின் ஆதரவோடு விஜயாதித்தன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். தோற்றுப் போன ராஜராஜ நரேந்திரன் தன் மாமனாருக்கு மீண்டும் உதவி கேட்டு ஆளனுப்பினான். இந்த முறை ராஜேந்திர சோழன் தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜாதிராஜனை பெரும் படையோடு வேங்கிக்கு அனுப்பினான். அப்போது நிகழ்ந்த பெரும் போரில் சோழர் படைகள் வெற்றி பெற்றன. நரேந்திரன் மீண்டும் கி.பி.1035இல் அரசனானான். விஜயாதித்தன் இரட்டைபாடி நாட்டுக்குப் போய் அடைக்கலமானான்.


ராஜேந்திர சோழன் காலத்தில் மேலைச் சாளுக்கியர்கள் பெரும் தொல்லையாகவே இருந்திருக்கிறார்கள். சத்யாஸ்ரயன் அவன் மகன் ஜெயசிம்மா ஆகியோர் தவிர அவர்களுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களான கடம்பர்கள், ஹொய்சாளர்கள், பாணர்கள், வைதும்பர்கள், கங்கர்கள் என அனைவருமே தமிழ் சாம்ராஜ்யத்துக்கு எதிரிகளாக இருந்தார்கள். இவற்களையெல்லாம் வென்று ராஜேந்திரன் பெட்ட பட்டங்கள் "முடிகொண்ட சோழன்", "ஜெயசிம்ம சரபன்", "மன்னைகொண்ட சோழன்" மன்னை என்பது சாளுக்கிய தலைநகர் மான்யகேட்டாவைக் குறிக்கும். தமிழில் இதை மன்னைகடகம் என்றழைப்பர், "இரட்டைபாடி கொண்ட சோழன்", "நிரூபதிவாகரன்" (நிரூபதுங்கன் எனும் ஹொய்சாளனை வெற்றி கொண்டதால்) இப்படிப் பல.

இப்படிப் போர்க்களங்களைக் கண்டே ராஜேந்திரனுக்கு வயது முதிர்ந்து விட்டது. தன்னுடைய வயதான காலத்திலும் சாளுக்கியர்கள் மீது படையெடுத்துச் செல்ல நேர்ந்தது. காரணம் சாளுக்கிய 2ஆம் ஜெயசிம்மாவும் அவனுடைய மகனான சோமேஸ்வரனும் சோழ நாட்டு எல்லைப் பிரதேசங்களில் நுளம்பவாடி, கங்கவாடி எனும் கன்னட நாட்டுப் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தி வழிப்போக்கர்களிடமிருந்து சுங்கம் வசூல் செய்யத் தொடங்கினர்.

ராஜேந்திர சோழனும், அவனுடைய மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜ சோழனும் அவர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று ஜெயசிம்மாவைப் போர்க்களத்தில் கொன்று, பல தளபதிகளைக் கொன்றும், சாளுக்கிய தலைநகரை வசப்படுத்திக் கொண்டு சித்ரதுர்கம் எனுமிடத்தில் நடந்த போரில் மாபெரும் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிக்கு ராஜேந்திரனின் மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜன் காட்டிய வீரமும், போர்த்திறனும் மன்னன் ராஜேந்திரனுக்குத் திருப்தி அளித்தது. இதுதான் யுவராஜா ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தம். யுத்தத்தில் தான் பெற்ற வெற்றிப் பரிசாக இவன் தன் தந்தைக்கு இரண்டு துவாரபாலகர் சிலைகளைக் கொடுத்தனுப்பினான். அதில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வாயிலில் வைக்கப்பட்டது. இன்னொன்று திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் இருக்கிறது. இந்த கோயில் பின்னாளில் 3ஆம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த துவாரபாலகர் தற்போது தஞ்சை பெரிய கோயில் கலைப்பொருள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோயில் ராஜேந்திர சோழன் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டன.

சோழர்களிடம் தோற்ற சாளுக்கியர்கள் தொடர்ந்து சோழர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் இவ்விரு சாம்ராஜ்யங்களுக்குள் யுத்தம் நடைபெறும் போதெல்லாம் சாளுக்கியர்களுக்குத் தோல்வியும், சோழர்களுக்கு ஏராளமான செல்வங்களும், பொன், நகைகள், குதிரைகள், யானைகள் மற்ற யுத்த தளவாடங்கள் இவைகள் அதிக அளவில் கிடைத்தன. இது தவிர சாளுக்கியர்கள் சோழர்களுக்கு பெரும் தொகையை கப்பமாகக் கட்டவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. சோழர்களும் ஒவ்வொரு முறையும் அவர்கள் பால் இரக்கப்பட்ட ராஜ்யத்தையும், மனைவி பிள்ளை குட்டிகளையும் அவர்களோடு சேர்ந்து கொள்ள அனுமதித்திருக்கின்றனர்.

தன் தந்தையார் கட்டிஆண்ட தஞ்சை சாம்ராஜ்யத்தின் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டாராயினும், ராஜேந்திர சோழன் தன் தந்தையுடையதும் மற்ற அவர்களது முன்னோர்களின் சாதனைகளைப் போற்றி மதித்து வந்திருக்கிறார். தன் தந்தையுடையதும், தன்னுடையதுமான போர் வெற்றிச் சாசனங்களை தஞ்சைக் கோயிலில்தான் அவர் வெட்டிவைத்திருக்கிறாரே தவிர கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் இல்லை. அவருக்குப் பின் வந்த சோழ மன்னர்களும் தங்கள் தலைநகரத்தையும், முடிசூட்டிக் கொண்டதையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் வைத்துக் கொண்டாலும், கல்வெட்டுகளை மட்டும் தஞ்சை கோயிலில்தான் எழுதி வைத்தார்கள். ராஜேந்திர சோழன் கங்கை, கடாரம் முதலிய நாடுகளை வென்றதன் விளைவாக அவருக்கு "பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன்" எனும் பட்டப் பெயரைப் பெற்றார்.

கங்கை படையெடுப்பு.

மேலை சாளுக்கியர்களையும், கிழக்கில் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும், பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன் படைகளை அனுப்பி வைத்தான். கி.பி.1019இல் சோழப் படைகள் கலிங்க நாட்டின் வழியாக (இப்போதைய ஒடிஷா) கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது. அந்தப் படைக்குத் தலைமை தாங்கி ராஜேந்திர சோழ மன்னனே தெற்கே தொடங்கி கோதாவரி நதிக்கரையில் வந்தார். முன்னேறிச் செல்லும் சோழப் படையைப் பின்னாலிருந்து வேறு எந்த நாட்டுப் படையாவது வந்து தாக்கிவிடாமல் இருக்க மன்னர் இப்படி ஏற்பாடு செய்துகொண்டு வந்தார். வங்காள தேசத்தை அடைந்த சோழர் படைகள் அங்கு மன்னன் மகிபாலனை எதிர்கொண்டு போரிட்டு வென்றனர்.

இந்தப் படையெடுப்பு பற்றி திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதன்படி இந்தப் படையெடுப்பு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றதாகவும், இந்தப் படை செல்லும் வழிகளில் எல்லாம் பல நாடுகள் சோழர் படையின் வலிமையை உணர்ந்து சரணடைந்ததாகவும் தெரிகிறது. இந்தப் படையெடுப்பில்தான் சோழர்கள் ரணசூரன் என்பவனைத் தோற்கடித்து கங்கை நீரை அவனைவிட்டுச் சுமக்கச் செய்து சோழ நாட்டுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது.

வடக்கே படையெடுத்துச் சென்று, அங்கெல்லாம் வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசனுக்கு அங்கிருந்து மேலும் பல புதிய நாடுகளுக்கு வழி தெரிந்து அங்கெல்லாம் செல்லத் தொடங்கினான். அப்படி அவன் செல்லும் வழியில் கலிங்கம் அதாவது இப்போதைய ஒடிஷா, வங்கதேசம், அசாம் முதலான பகுதிகளைத் தாண்டி பர்மா வரை சென்றான். அப்படி இவன் சென்ற வழியில் இருந்த வடமதுரை, கன்யாகுப்ஜம், சிந்து ஆகிய பிரதேசங்களும் சோழர் வசமாயின. சோழர் படையில் தரைப்படை எத்தனை வலிமையானதோ, அதே அளவுக்கு கடற்படையும் வலிமையானதாக இருந்ததால், கடல்கடந்து மட்டுமல்ல, நாட்டின் கிழக்கு மேற்குப் பகுதிகளும் சோழர் வசமாயின. சோழர்களிடம் தோற்ற அரசர்கள் வரிசை மிக நீண்ட வரிசை.

ராஜேந்திரனின் சோழர்படை வென்ற பகுதிகள் அனைத்தும் முதலில் சோழப் பேரரசோடு இணைத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் அவைகள் சோழர்களுக்கு அடங்கிய கப்பம் கட்டும் சிற்றரசர்களாக அங்கீகரிக்கப்பட்டுத் தனித்து அரசாள அனுமதிக்கப்பட்டனர். சோழர்களின் அன்னிய நாட்டு வணிகங்களில் இந்த சிற்றரசுகளும் பங்கு பெற்றன. ராஜேந்திரனுக்குப் பிறகும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தன.

தென்னாட்டில் சோழர்களின் வலிமை என்ன என்பது இவர் காலத்தில்தான் வடக்குப் பகுதி ராஜ்யங்களுக்குப் புரிந்தது. இத்தனை வலிமை பெற்றிருந்தும் சோழர்கள் தாங்கள் வென்ற பகுதிகளைத் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ளாமல் சிறிது காலத்தில் அவர்களிடமே திரும்பக் கொடுத்து தங்கள் ஆளுமையின் கீழ் சுதந்திரமாக ஆள வழிவகுத்துக் கொடுத்த பெருந்தன்மையை புரிந்து கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புகள்.

மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கி.பி.1025இல் சோழ கடற்படையைக் கொண்டு கடல்கடந்து சென்று ஸ்ரீவிஜய ராஜ்யம், கடாரம் முதலிய நாடுகளை வெற்றி கொண்டிருக்கிறான். தவிர சுமத்ரா, மலாயா வளைகுடா, இப்போது மலேயாவில் உள்ள கேடா ஆகிய பகுதிகளையும் வெற்றி கொண்டார். இதில் ஸ்ரீவிஜய ராஜ்யம் முன்பு சோழர்களோடு நல்ல உறவில் இருந்திருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்தில் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மன்னராக இருந்த விஜயதுங்கவர்மன் என்பவனை நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் எனும் புத்த ஆலயத்தைக் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தார். அப்படி இருந்தும் அந்த ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மீதும் ராஜேந்திரன் படையெடுத்து அதனைப் பிடித்துக் கொண்டது ஏன் என்பது தெரியவில்லை.

ராஜேந்திர சோழனின் இறுதி நாட்கள்.

ராஜேந்திர சோழனின் வாழ்நாட்கள் முழுவதும் போரும், போர்க்களமுமாகக் கடந்து போயிற்று. அப்படி அவன் படையெடுத்துச் சென்ற இடங்களில் எல்லாம் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சரிந்து சோழர் வசமாயின. மன்னனுக்கு வயது அதிகமாகி மூப்பு அடைந்த போது அவனுடைய பிள்ளைகள் படையெடுப்புகளைத் தாங்களே தலைமை வகித்து முன்னின்று நடத்தலாயினர். தன் மக்கள் போரில் சூரர்களாக இருந்து வெற்றிகளைக் குவித்து வருவது கண்டு வயது முதிர்ந்த ராஜேந்திரன் மனமகிழ்ச்சியடைந்தான். மன்னனின் மூப்பு கண்டு பாண்டியர்களும், சேரர்களும் கலகம் விளவிக்க முயன்றனர். ஆனால் மன்னன் தானே இவற்றை முன்னின்று அடக்கினான். இலங்கையிலும் உருவான கலகத்தைத் தன் பலம் கொண்டு மன்னன் அடக்கி வைத்தான்.


ராஜேந்திர சோழன் விட்டுச் சென்றவை.

மாமன்னன் ராஜேந்திரனின் இறுதி நாட்கள் மகத்தானவை. அவன் காலத்தில்தான் சோழ நாடு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பரந்து விரிந்து கிடந்தது. சக்கரவர்த்திக்கு அவனுடைய மகன்கள் உற்ற துணையாக இருந்து அவற்றை காத்து வந்தனர். இரக்கம், இறையுணர்வு, பிறர்க்கு உதவுதல், மக்களின் நலன் பேணுதல் என்று இவர்கள் காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது. எல்லவற்றையும் விட ராஜேந்திரனின் பெருமைமிக்க குணமாக விளங்கியது அவன் வென்ற நாடுகளைத் தோற்ற அரசர்களிடமே பின்னர் ஒப்படைத்ததுதான். என்ன பெருந்தன்மை ராஜேந்திரனுக்கு. தமிழகத்தில் பஞ்சபூதத் தலங்களில் வாயுவின் தலமாகக் கருதப்படுவது காளஹஸ்தி. 12ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயம் இன்றும் தலை நிமிருந்து நின்று தமிழனின் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

ராஜேந்திர சோழனின் காலம் தமிழரின் பொற்காலம், தமிழகத்தின் பொற்காலம், மக்கள் நலனுக்கு பொற்காலம், என்றும் மக்களால் மறக்கமுடியாத பொற்காலம் எனலாம். வாழ்க மாவீரன் ராஜேந்திரன் புகழ்!































































Tuesday, July 9, 2013

மனிதாபிமானம்



ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளை அடைவதைத் தவிர இந்த சமூகத்துக்காக செய்ய வேண்டிய கடமைகள் சில உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்படி வெளியுலக உறவே இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு, தன் வருமானம், தன் குடும்பம் என்று வாழ முடியாதா என்றால் முடியும். ஆனால் அப்படி வாழ்பவன் வெறும் புழு, பூச்சிகளைப் போல வாழ்ந்து மடிபவன். தானும் வாழ்ந்து நம்மைச் சுற்றியுள்ள இந்த சமூகத்துக்காகவும் சில பணிகளை, உதவிகளை, விட்டுக் கொடுத்தலை தன் சொந்தப் பணியாகக் கருதி செய்பவன் உண்மையான இந்த மண்ணின் பிரஜையாகக் கருதப்படுவான். அப்படி என்ன தனியொரு மனிதன் செய்துவிட முடியும் என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. பின்னர் அனுபவம் காரணமாக நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒத்துழைப்பு தரமுடியும், அனுசரித்து வாழமுடியும், சுக துக்கங்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியும் என்றெல்லாம் புரியத் தொடங்கியது. எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவம் இரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். மேற்சொன்ன கருத்துக்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கருத்தையொட்டி சிந்தித்தபோது என் நினைவுக்கு வந்தது இந்த நிகழ்ச்சிகள் இவை, அவ்வளவே!

சில வருடங்களுக்கு முன்பு (ஆண்டு நினைவில் இல்லை) நானும் என் குடும்பத்தாரும் திருப்பதி சென்றிருந்தோம். அங்கு ஒரு குடில் வாடகைக்கு எடுத்துக் கொண்டு போன அன்றே சந்நிதிக்கு வரிசையில் சென்று இரவுக்குள் தரிசனம் முடித்துக் கொண்டு குடிலுக்கு வந்தோம். மறுநாள் விடியற்காலையில் மூன்று மணிக்கு எழுந்து அங்குள்ள புஷ்கரணியில் குளித்துவிட்டு ஈரத் துணியோடு உள்ளே சென்று அங்கப்பிரதட்சணம் செய்யலாம், சென்று அங்கப்பிரதட்சணம் முடிந்தவுடன் நேராக சந்நிதிக்கு அழைத்துச் செல்வார்கள், அப்போதும் தரிசனம் செய்யலாம் என்றார்கள்.

அப்போது இளம் வயது. மூன்று மணிக்கு எழுந்திருப்பதோ, குளிரில் புஷ்கரணியில் குளித்தெழுவதோ சிரமமாகத் தெரியவில்லை. அனைவரும் சென்று ஸ்நானம் செய்து அங்கப்பிரதட்சணம் செய்யும் இடம் சென்றோம். அங்கு அப்போதே வரிசையில் பலரும் அங்கப்பிரதட்சணம் தொடங்கும் நேரத்துக்காகக் காத்துக் கொண்டு பிரகாரத்தில் படுத்திருந்தனர். அந்த வரிசையில் இடமில்லாமல் நெருக்கியடித்துக் கொண்டு அனைவரும் நீளநெடுகப் படுத்துக் காத்துக் கிடந்தனர்.

ஒரு இடத்தில் சில இளைஞர்கள், அவர்களோடு வந்திருந்த சில பெரிசுகள் என்று நிறைய பேர் வரிசையாகப் படுத்திருந்தனர். அந்த இடத்தின் இடையில் இருவர் சேர்ந்து கொள்ளும் அளவுக்கு இடைவெளி இருந்தது. நான் சென்று அந்தவொரு இடத்தில் சேர்ந்துகொள்ள முயன்றேன். ஆனால் என்னை அங்கு அருகில் படுத்திருந்த பலரது கரங்கள் பிடித்துத் தள்ளிவிட்டன. ஏன் என்றேன். இங்கு ஆள் வருகிறார், நீ போய் வேறு இடம் பார் என்றது அந்தத் தமிழ்க் குரல்.

அப்படி குரல்கொடுத்த இளைஞனைப் பார்த்தேன். இடையில் வேட்டி, மேலே வெறும் உடம்பு, வேட்டிக்கு மேல் கட்டிய துண்டு. மார்பில் பூணூல், நெற்றியில் நாமம். சென்னையிலிருந்து பெருமாள் தரிசனத்துக்கு வந்த கூட்டமென்று புரிந்தது. மேலும் எங்காவது இடம் கிடைக்குமா, அந்த வரிசையில் சேர்ந்துகொள்ளலாம் என்று தவித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடி அலைந்தேன். ஆங்காங்கே சில இடங்கள் இருந்த போதும், அங்கெல்லாம் என்னை உள்ளே நுழைய அருகிலிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் ஒரு இடத்தில் தைரியமாகப் போய் படுத்தேன். அவ்வளவுதான், அடுத்த விநாடி நான் பிடித்துத் தூக்கி வரிசைக்கு வெளியே எறியப்பட்டேன். மனத்தில் கோபம், வருத்தம், நெஞ்சை அடைப்பது போல துக்கம், அழுகை வருவது போல கண்களில் கண்ணீர். இறைவன் சந்நிதியில் அவன் தரிசனத்துக்கு வந்தவனுக்கு இப்படியொரு வரவேற்பா. புரியவில்லை. நான் செய்தது என்ன தவறு? முன்கூட்டியே வந்து இரவே படுத்து இடம் பிடித்திருக்க வேண்டுமோ? அல்லது இவர்களைப் போல கூட்டமாக வந்து சினிமா தியேட்டரில் இடம்பிடிப்பதைப் போல துண்டு விரித்து இடம் பிடித்திருக்க வேண்டுமோ, புரியவில்லை.

வேண்டாம், இந்த அங்கப்பிரதட்சணம் செய்யவில்லை என்று பெருமாள் கோபித்துக் கொள்ளமாட்டார். அவருக்குத் தெரியும். தன்னை தரிசிக்க வந்து அங்கப்பிரதட்சணம் செய்ய காத்துக் கொண்டு பிரகாரத்தில் அடுத்தவனுக்கு இடம் கொடாமல் பிடித்துத் தள்ளூம் முரட்டு பக்தர்களுக்கு மட்டும் அவர் அருள் புரிந்து கொள்ளட்டும் என்று போன காரியத்தைச் செய்யாமல் திரும்பினேன். அதுதான் திருப்பதி சென்று வழிபட்ட கடைசி நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். இருபது வருடங்களாவது ஓடியிருக்கும் இப்போது.

சோத்துக்கு இப்படி அடித்துக் கொண்டால் பரவாயில்லை; அல்லது ரயிலில் அல்லது பஸ்சில் இடம் பிடிக்க இப்படி அடித்துப் பிடித்து இடம் பிடித்தாலும் சரி. ஆனால் இங்கு கடவுள் தரிசனத்துக்கும், பக்தி செலுத்துவதற்கும் கூடவா நெருக்கடி, சுயநலம். பாவம் அவர்களாவது வைகுண்டம் போகட்டும், என்னைப் போன்றவர்கள் பூமியோ, நரகமோ எங்களுக்கு ஏற்ற இடத்திலேயே இருந்து கொள்கிறோம், பரவாயில்லை.

இதைச் சொல்லும்போது இன்னொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. டெல்லியிலிருந்து கிளம்பி பேருந்தில் பத்ரிநாத் பயணம் சென்றோம். ஒரு பஸ்சில் 35 பேர். ஏற்பாடு செய்தவர்கள் பஸ்சிலேயே உணவு தயாரிக்கும் ஆட்களையும் அழைத்து வந்திருந்ததால் அந்த ஒரு வாரப் பயணத்தில் தங்கும் ஒவ்வொரு இடத்திலும் உணவு தயாரித்து வழங்கினர். இருப்பதோ 35 பேர். ஒவ்வொரு இடத்திலும் உணவு தயாரானதும் ஒவ்வொருவர் கையிலும் தைத்த இலையைக் கொடுத்து சாப்பாடு தயார் என்றதும், எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப்போய் ஒவ்வொரு சாதமாக இலையில் வாங்கி மடக் மடக்கென்று விழுங்கிவிட்டு மீண்டும் வந்து இலையைக் காட்டி மறுபடியும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். என்னையும் சேர்த்து ஐந்து பேர் மட்டும் வயதில் இளையவர்களாக (அப்போது) இருந்த காரணத்தால் மற்றவர்கள் சாப்பிட்டபின் கடைசியில் சாப்பிடலாம் என்று இருந்தோம். அடித்துப் பிடித்து பலமுறை வாங்கி சாப்பிட்டவர்கள் ஒருவழியாக முடித்தபின் எங்கள் ஐந்து பேருக்கும் அதிகமாகவே உணவு பாக்கியிருந்தது. ஆனால் என்னை உறுத்திய விஷயம் என்னவென்றால், ஒருமுறை சாப்பிட்டு அடுத்த முறை உணவை இலையில் வாங்கும்போது அடுத்தவன் இலையைத் தள்ளிவிட்டு தான் முந்தி நீ முந்தியென்று அடித்துக் கொண்டது கல்யாண வீட்டு வாயிலில் விட்டெறிந்த இலைக்குப் பறக்கும் ஜீவன்கள் நினைவு வந்தது.

என்னுடன் இருந்த அந்த ஐந்து பயணிகளில் ஒருவர் புளு ஸ்டார் நிறுவனத்தில் பொறியாளர். மற்றொருவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர். மற்றொருவர் ஸ்டேட் வங்கி ஊழியர், இன்னொருவர் மதுரையில் கல்லூரி பேராசிரியர், கடைசி மனிதர் கனரா வங்கி அதிகாரி. இவர்களில் புளு ஸ்டார் பொறியாளர் இளையவர். அவர் சொன்னார், அடுத்த இடத்திலிருந்து இவர்களை வரிசையில் உட்காரவைத்து நாம் ஐந்து பேரும் இவர்களுக்குப் பரிமாறிவிடுவோம். இவர்கள் கூட்டத்தை இடித்துக் கொண்டு எச்சில் இலையை நீட்டி உணவு வாங்குவது நன்றாக இல்லை, நாம் இறுதியில் சாப்பிடுவோம் என்றார். பின்னர் அதனை செயல்படுத்தினோம். கார்வால் ஜில்லா தலைநகரான ஸ்ரீநகர் எனும் ஊரிலிருந்து இந்த ஏற்பாடு. மிக அற்புதமாக பிரச்சினையின்று உணவு வழங்கல் நடந்தது. எங்களது முயற்சி வெற்றி பெற்றது. சாப்பிடுவதிலும் தள்ளுமுள்ளூ நின்று போனது.

மனிதனின் அடிப்படையான உணர்வு தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்பதுதான். அதை முறைப்படி செய்தால் நன்றாகவே நடக்கும், அடித்துப் பிடித்துக்கொண்டு முந்துவதால் கசப்புதான் மிஞ்சும். மனிதப் பிறவியின் நோக்கமும் அடித்துப் பிடித்துக் காரியமாற்றுவது அல்ல. இதுதான் நான் புரிந்து கொண்டது.

கேதார்நாத் பேரழிவுக்கு முன்பும் பின்பும்.

கேதார்நாத் பேரழிவுக்கு முன்பும் பின்பும்.


உத்தர்கண்டில் வெள்ளம் வருவதற்கு முன்பு அந்தப் பகுதிகள் எத்தனை அழகாகவும் கண்களுக்கு ரம்மியமாகவும் இருந்தது என்பதை இங்கு கொடுத்திருக்கும் முதல் சில படங்களில் பாருங்கள். தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரளயத்தையடுத்து அந்தப் பகுதிகள் எவ்வாறு அழிவின் பிடியில் சிக்கிக் கிடக்கிறது என்பதையும் பாருங்கள். மனிதனுடைய சக்திக்கும், சாமர்த்தியத்துக்கும் மேலே, ஒரு மகா சக்தி மனிதனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கப் பயன்படுத்தும் ஆயுதம் போலும் இந்த வெள்ளமும் அழிவும். இதன் பிறகாவது இறைவனின் சக்தியை உணர்ந்து மனிதன் நடந்து கொள்வது நல்லது அல்லவா? உணர்ந்தவர்களுக்குச் சரி!

Courtesy:  Venkatachalam Dothathiri (Mintamil group)








இனி இயற்கையின் சீற்றத்தால் சீரழிந்து கிடக்கும் கேதார்நாத்தைப் பாருங்கள். இவற்றைப் பார்த்துக் கண்ணீர் விடாத தேசபக்தர்கள் இருக்க முடியுமா? இவற்றைச் சீரமைக்க நமது இந்திய ராணுவம் செய்யும் சேவைகளை முந்தைய பதிவுகளில் பார்த்தீர்கள். ஜெய் ஹிந்த்!














வெள்ள நிவாரணப் பணி 3


We Salute Indian Army  
Indian army and paramilitary troupes has done a commendable Job in rescuing more than 80,000 People ,This was one of the worst disaster world has seen in such High altitude and worst and difficult terrain,it is their dedication and love for country has made it possible ,even no one to guide or no idea of the land scape made them as most dangerous operation as there is no place to land even helicopters

Kudos to squadron leader Radhakrishnan Nair of Indian Air Force, Lt general Anil Chait for coordinating such a task in a place where they have no previous experience and it was Like we are in war with some unknown enemy
This was one of the tragedy never before any of the army personal has seen in their whole service Life.

With Warm Regards Holy Pranams..., 
HV Kamdar
Associated Press photos


உத்தர்கண்ட் மாநில வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாடுகளைக் கடந்த இரு பதிவுகளில் பார்த்தீர்கள். இனி மூன்றாவது நிறைவுப் பகுதில் உள்ள 13 படங்களைப் பாருங்கள். படங்களை வெளியிட்டவர்களுக்கு நமது நன்றிகள்.


வெள்ள நிவாரணப் பணி 2

We Salute Indian Army  
Indian army and paramilitary troupes has done a commendable Job in rescuing more than 80,000 People ,This was one of the worst disaster world has seen in such High altitude and worst and difficult terrain,it is their dedication and love for country has made it possible ,even no one to guide or no idea of the land scape made them as most dangerous operation as there is no place to land even helicopters

Kudos to squadron leader Radhakrishnan Nair of Indian Air Force, Lt general Anil Chait for coordinating such a task in a place where they have no previous experience and it was Like we are in war with some unknown enemy
 
This was one of the tragedy never before any of the army personal has seen in their whole service Life.

With Warm Regards Holy Pranams..., 
HV Kamdar
 
Associated Press photos

உத்தர்கண்ட் மாநில வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை இந்த இரண்டாவது படத் தொகுப்பில் பாருங்கள்.


    Many more pictures will be given in the next part.