பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 7, 2018

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 4


மானுட உருவினின்று மாறுபட்ட இவளிடம்
காணேன் இராமன்பால் கொண்ட காதலை!
‘சானகி’யென நான் நினைத்தது மிகையே! – இவள்
துன்புறும் நாள் மிக அண்மையே! – எண்ணினான்.                 63

              அநுமன் இராவணன் மனையிற் புகுதல்

‘எக்குலங்களில் யாவரே ஆயினும், அவரை
நல்வினை, தீவினை ஒக்கும்’ எனும்படி,
இந்நகரின் திருவும், உருவும், செறிவும்
இவன் பொருட்டு அழியும்’! என்பதாக,!                            64

மேருமலை போலுயர்ந்த மாளிகையாம்
இராவணனின் அரண்மனையுள் நுழைந்தான் - அவ்வமையம்
நிலந்துடித்தது; நெடுவரைகள் துடித்தன;
வலப்புருவம் துடித்தது; மதிவானும் துடித்தது.                     65

                 அநுமன் இராவணனைக் காண்டல்

கருங்கடல் போலுடல் நிறத்துடனும்,
பெரும் கிரிபோல் விரிந்த மார்புடனும்,
ஆரத்து மணிகள் கதிர்போல் மின்னிட,
உறங்கும் இராவண அரக்கனைப் பார்த்தான்.                      66

                          கொல்ல நினைத்தல்

திண்தலை பத்தும், தோள்கள் இருபதும்,
கண்டதும் உணர்ந்தான் இராவணன் இவனென,
வாமன உருவினும் சிறுவுரு கொண்டவனின்,
கண்ணிமைகள் துடிதுடித்து, செந்தீ வடிந்ததுவாம்.                 67

‘வாள்விழி பிராட்டியை, வஞ்சித் தவனை,
தாளால் இடித்து, தலைபத்தும் தகர்த்து,
ஆளாற்றல் காட்டேனெனில் எந்தன்
தோளாற்றலால் யாது பயன்?’ – சினந்தான்                        68

ஒன்று செய்ய ஒன்று இழைத்தல்
அறிவுடைமைக் குரியதன்று; - இஃது
இராமனின் அருளு மன்று
எனத்தெளிந்து, சினம்குறைந்து; கடந்தான்.                        69

                அநுமன் பிராட்டியைக் காணமைக்கு வருந்துதல்

‘அந்தோ! ஈ நெடு நகரில்,
எங்கிருக்கிறாள் எம் பிராட்டி
என்றறியா தலைகிறேனே!
என்னவென்று நானுரைப்பேன்?                                   70

பொன்போன்ற அக்குலமகளைக்
கொன்றானோ இப் பேரரக்கன்? – அன்றி
தின்றானோ? எங்காகிலும் சிறை வைத்தானோ
என்றறிய இயலவில்லை’ எனப் பொருமினான்.                    71

                அநுமன் அசோக வனத்தைக் காண்டல்

எள்முனையும் விட்டிடாமல்,
எங்கங்கோ தேடியவன்,
புள் தங்கும் சத்திரம் போன்றதொரு
சோலைக்குள் புகுந்து சென்றான்.                                 72

                      
                               காட்சிப் படலம்
                     அநுமன் அசோகவனத்தில் புகுதல்

இச்சோலைவனத்தில் பிராட்டி கண்டால் – என்
சோகங்களனைத்தும் சோர்ந்து போய்விடும்!
‘கண்டிலேன் இங்கும்’ யென்றாயின்
என்செய்வேன் நானெக் கலங்கினான்                             73

அவ்வாறாயின்-
இம்மாநகர் முழுவதையும் அழித்திடுவேன்! – பின்
இம்மானிட உயிரையும் துறந்திடுவேன்’னென
அசோகவனந்தனில் அநுமன் நுழைந்ததும்,
அகமகிழ்ந்தனர் தேவர்கள் வான்வெளியில்.                    74
   
                அநுமன் கண்ட பிராட்டி துயர் நிலை
மயிலனைய சாயல் பெற்றவளும்,
குயிலனைய இன்குரல் கொண்டவளும்,
இடை துவண்டு மெல்லியளாய் அங்கே  
இமை விரிய வீற்றிருந்தாள்.                                     75

இடைவிடாது வருத்தும் அரக்கரிடையே,
இடைவெளியின்றி இருந்தவ ளின்று
புலிக் கூட்டத்தால் பிடிக்கப்பட்ட
பெண்மானைப் போன்றிருந்தாள்.                                 76

அமிர்த மெடுத்து மன்மதன் வடித்த
அழகுச் சிலையாய் அவதரித் தவளிங்கு,
பொங்கும் கண்ணீர் அருவியினிடையே
புகை படிந்த ஓவியம் போலானாள்.                              77

விதிவலி கடத்தல் அரிதென உணர்ந்தவள்,
குலப்பழி களைந்திடக் கருதியே யாகினும்,
சடுதியில் இராகவன் வருவா னெனவே,
திசைகள் எட்டையும் சுற்றியே பார்த்தாள்.                        78

‘மான் பின்னம் சென்ற இராமபிரானை,
இலக்குவன் இன்னும் கண்டிலன் போலும்!
ஒலிக்கும் கடலின் இடையினில் இலங்கை
இருப்பதை இருவரும் அறிந்திலர் போலும்!                       79

உலகை வருத்தும் இராவணன் என்னைக்
கவர்ந்து வந்ததை அறியாரோ? - அன்றி
விவரமுரைத்திடும் ‘சடாயு’ இன்று இறந்தானோ?வென
புண்ணில் புகுந்த கனலாய்ப் புகைந்தாள்.                          80

                 பிராட்டி திரிசடையிடம் கூறுதல்

திருந்திய சொற்களில் சிறந்தவளான
‘திரிசடை’ யென்பாள் தவிர்த்து ஏனைய,
அரும் திறல் அரக்கிய ரனைவருமே நல்
உறக்கத்தில் இருக்கையில், உரைத்தனள் பிராட்டி.                 81

‘தூய நீ கேட்டி!
மிதிலையில் முனியுடன் ராமன் நுழைகையில்,
புருவமும், நாட்டமும் இடப்புறம் துடித்தது.
ஆட்சியை இராகவன் பரதன் வசம்தந்து
காட்டிடை செல்கையில் வலப்புறம் துடித்தது.                     82

to be continued....................

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 3


‘அடே! நீ யார்? யாரனுப்ப இங்கு வந்தாய்? – உன்
உயிர் சிந்தும்வரை ஓயமாட்டாய் போலும்” என்ன
“இவ்வூர் புகுதல் அன்றி போகமாட்டேன்!”
சூளுரைத்தான் அநுமன் இலங்கிணியிடம்                         43

              இலங்கா தேவி அநுமனோடு போர்புரிதல்

‘இவனைக் கொல்லாமல் விட்டோ மெனில்
இந்நகரை இல்லாமல் ஆக்கிடுவான்’ யென்றெண்ணி, - “நீ
வெல்வாயெனில் வென்று கொள்” ளென்று தன்
முத்தலைச் சூலத்தை முகம் நோக்கியெறிந்தாள்.                  44

மின்னலாய் எதிர்ப்பட்ட தழல் வேலை,
துல்லியமாய்க் கைப்பற்றி, பற்களால் கடித்தான்;
கருடன் நாகத்தைக் கவர்ந்து வந்து
கடிப்பது போலதை ஒடித்தான்.                                   45

ஏனைய ஆயுதம் அனைத்தையும் பிடுங்கி,
எறிந்தான் வீசி விண் மீது! – அவளோ
குரலெழுப்பினாள் மழை மேகம் போல்.
கரம் உயர்த்தினாள் அவனை அறைவதற்கு!                       46

                இலங்காதேவி தோல்வியுற்று விழுதல்

அடியாமுன் அவள் கைகள் எட்டினையும்
எட்டிப் பிடித்தான் தன்னிரு கையால் – பின்
விட்டான் ஓர்குத்து அவள் நெஞ்சில்
விழுந்தாள் மண்மேல் நிலைகுலைந்து.                           47

                 இலங்கா தேவி தன் வரலாறு கூறுதல்

விழுந்தவள் மனம் வருந்திக் கலங்கினாள்.
அழுந்தினாள் செங்குருதி வெள்ளத்தில் – பின்
எழுந்தாள் பிரமனின் ஆணையை யெண்ணி
மொழிந்தாள் இராமதூதன் அநுமனிடம்.                           48

‘ஐயனே!
நான்முகன் அருளினால் இம் மூதூரின்
நகர்க்காவல் புரிந்தேன்நான் பலகாலம்.
செய்ததொழிலில் தவறு நேர்ந்திட வினவினேன்
“எத்தனை நாள் இவ்வூர் காப்பேன் நானெ’ன                       49

கூறினான் பிரம்மன்:
‘வித்தகக் குரங்கொன்று ஓர்நாள்
கைத்தலம் தன்னால் தீண்டும் – இச்
சித்திர நகர் முழுதும் அன்று
சிதிலமாய் போவது திண்ணம்’                                   50

அவ்வாறே நிகழ்ந்த தின்று!
“அறம் வெல்லும்! பாவம் தோற்கும்!’
இவ்வுண்மை உலகெங்கும் இயம்ப வேண்டும்!
நுழைந்திடுவாய் இந்நகருள்’ இறைஞ்சினாள்                      51

                    அநுமன் கும்பகருணனைக் காண்டல்

சுய உருவத்தில் செல்வது சரியாகாதென
சிறிய உருகொண்டு நகர்புகுந்த அநுமன்,
இயக்கியர், அரக்கியர் பலரையும் ஆய்கையில்
துயிலும் கும்பகர்ண மலையினைக் கண்டான்                     52


அதிசேடன் போலவும், ஆழ்கடல் போலவும்,
நெருங்கிய இருள் திரண்டது போலவும்,
உருகொண்ட தீவினை போலவும், உறங்குவானின்
உயிர்காற்று தம்மீது படுமோவென பயந்தான்.                     53

‘அரக்கர் மூவரில் இவனெவன்?’
யாரிவன்? உரத்து யோசித்தவன்,
‘இரக்கமற்ற அரக்கர் மன்னனாம்
இராவணன் இவன் தானெ’னக் கருதினான்.                        54

ஆனால்-
பத்துத் தலைகள் இவனுக் கில்லை;
இருபது கரங்களும் கொண்டானில்லை; - அதனால்
இராவணன் என்பான் இவனில்லை;
இருக்கட்டும் உறக்கத்தில் இவனெனக் கடந்தான்.                  55

                அநுமன் மேலும் பல இடங்களில் தேடல்

மாடகூடங்கள், மாளிகை ஒளிகள்,
ஆடலரங்குகள், தேவ ராலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபமெனத்,
தேடியலைந்தவன்,வீடணனின் மாளிகையுட் புகுந்தான்.            56

                   அநுமன் வீடணனைக் காணல்

அரக்கர் கூட்டத்திடையே, வெண்ணிறம் கொள்ளாமல்,
கரிய நிறம்கொண்ட தருமனாம் விபீடணனை
‘குற்றமற்ற குணத்தினன் இவனெ’னத் தமது
ஆற்றலால் அறிந்தான் நொடிப் பொழுதில்.                        57

                 அநுமன் இந்திரசித்தை அணுகல்

இந்திர சித்தினால் பிடிக்கப்பட்டு, முன்னம்
இந்திரன் இருந்தான் சிறை தன்னில் - அச்
சிறையின் வாயிலை எதிர்கொண்ட அநுமன்,
உறுவலி காவல் அரக்கரைக் கடந்தான்.                           58

அறுமுகன் ஒத்த ஒருமகன் அங்கு,
உறக்கத்தில் இருப்பதை அவன் கண்டான்.
பற்கள் வளைந்த அரக்கரி லொருவனோ?
மழுவென்னும் படைகொண்ட சிவனின் மகனோ?                  59

அறிகிலான் அந்தமிலான் – ஆனால்
உணர்ந்தான் ஓர் உண்மையினை!
இளவலும், ஏந்தலும் இவனுடன் புரிந்திடும்
நெடும்போர் இருந்திடும் நெடுநாளெனப் புரிந்தான்.                 60

                    அநுமன் இடை நகருட் புகுந்து தேடல்

ஏழு கடல்கள் இணைந்தாற் போல்
இடைநகரில் இடப்பட்ட பெரும் அகழி
கடப்பதற்காய் மேலழும்பிப் பறந்தவன்,
அகநக ரடைந்து, அலைந்து தேடினான்.                           61

அங்கே,
எரிமணி விளக்கெல்லாம் தத்தம்
எழில் குறைந்தாற்போல் தோன்ற,
துயில் கொண்ட ‘மண்டோதரி’ கண்டு
‘சானகி’யோ வென கண் கலங்கினான்.  – பின்                     62

to be continued..................

லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 2


அங்காரதாரை

கடல்தாவுங்கால் எதிர்ப்பட்ட மூன்றாம் தடையாக
ஆலகால விடமாய், தணலின் கொழுந்தாய்’
கடலினிடையெழுந்த கடலான ‘அங்காரதாரை’ – ‘எனைக்
கடந்து செல்வார் யாரெ’னக் கடிந்தாள்.                            22

‘நிழல்பற்றி எனை ஈர்த்த அரக்கியே!
உரைத்தீ நீ யாரெ’ன அநுமன் வினவ,
‘அரிதே உனையான் உண்பது ஒழித்தல்’ என
வழியடைத்தாள் அவள்தன் நீள்வாய் பிளந்தே!                    23

திறந்த வாய்வழி விரைந்தவன் புகுந்திட,
தருமதேவதையே ஸ்தம்பித்துப் போனதுவாம்.
இறந்தனனோ வென தேவர்கள் மிரண்டிட - அவனோ
பிறந்தானென வயிறு கிழித்து வெளிப்பெயர்ந்தான்.                24

சாகா வரம்பெற்ற சிரஞ் சீவிகளுள்
தலையாய் திகழ்ந்த அன்னான் – அரக்கிதன்
குடலுருவி, மேலெழும்பி,
காட்டிடையே பறக்கலானான்.                                     25

தேவர்கள் ஆர்ப்பரிக்க; அசுரர்கள் வியர்த்திருக்க;
பிரம்மன் வியந்திருக்க; மடிந்தனள் அங்காரதாரை!
மேருமலை தாழ பேருரு கொண்டவன்
விரைந்திட்டான் இராமநாமம் ஜெபித்தபடி!                        26

                     பவழ மலையில் பாய்தல்

தேவருலகின் பக்கத்தில் பறக்கையிலே,
பொற்குடங்களுடை கோட்டையையும்,
காவல் மதிலையும் கீழே கண்டதும்,
பவழமால் மலைசூழ் சோலையிலே பாய்ந்தனன்.                 27

புயலொடு பொதிந்த பெருங்காற்றால்
சாய்ந்திடும் கலனாய் அம்மலை தகர்ந்திட,
வானொத்த அழகுடைய இலங்கா புரியின்
வதனத்தை அங்கிருந்து நேரே பார்த்தான்.                         28

இந்நகரை,
பொன்னகராம் அமராவதிக்கு நிகரென்பார் – அல்ல அல்ல
அண்டம் ஆண்டிடும் இராவணனோ
இங்கிருந்தபடி ஆட்சி செய்வதால் இந்நகர்
பொன்னகரினும் சிறந்த நன்னகர் போலுமென்றான்.                29


                            ஊர்தேடு படலம்

மாடங்களின் உயர்ச்சியையும், மாட்சியையும்,
வீதிகளின் நீட்சியையும், காட்சியையும்,
மாளிகையின் ஆட்சியையும், நேர்த்தியையும்,
மலைப்புடனே அவன் பார்த்தான்.                                 30

செந்நிறக் கூந்தலும், கரிய உருவமும்,
கொண்டிருந்த அரக்கியர்க்குப்,
பணிப்பெண்கள் தேவமாந்தர்!
குற்றேவல் புரிபவரோ தேவர்கள்!                                 31

இராவணன் செய்திட்ட மாதவத்தால் அங்கே
திருமால், சிவபிரான் தவிர்த்து ஏனைய
தேவர்கள் அனைவரும் ஏவலராயினர் – அம்
மாதவ முயற்சியை பிரமிப்புடன் நோக்கினான்.                    32

இந்நகரை .வடிவமைத்த தெய்வத் தச்சன்,
விசுவகருமன் திறமையைத் தான் வியப்பத்தா? – அன்றி
உடல் வருத்தி தவம் புரிந்த அரக்கன்
இராவணனின் பெருமையைத் தான் புகழ்வதா?                    33

அங்கே.
பாடுவார் பலர்; ஆடுவார் பலர்; - ஸ்ருதி
கூட்டுவார் பலர்; மத்தளம் கொட்டுவார் பலர்;
போட்டி போடுவார் பலர்; வீணை மீட்டுவார் பலர் - ஆனால்
வாட்டமாய் வருந்துவோர் ஒருவரையும் காணவில்லை.           34

அரக்கர்கள் –
உருவ அளவிலே மிகப் பெரியர்;
வீரமோ கணக்கு இலர்;
வரத் தன்மை அளவற்றோர்;
அறிய வொண்ணா சூழ்ச்சி கற்றோர்.                             35

வீரக்கழலுடைக் கால்களும், வேலுடைக் கைகளும்,
கனல் கக்கும் கண்களும் கொண்டிருந்த அரக்கர்கள்
நடமாட இவ்வண்டம் இடம் கொடுத்ததும்,
மிகுதியினால் கிழிபடா திருப்பதும் வியப்பென்றான்.               36

விற்படை பெரிதென்றால்; வேற்படையோ மிகுந்து,
மல்படையும், வாள்படையும் மலிந்ததைக் கண்டு,
நாயகனாம் இராமன் உரைத்தவை யெல்லாம்
உண்மையே யென்றுணர்ந்தான் அந்தமிலான்.                     37

             கதிரவன் மறைதலும், இருள் பரவலும்
பவழமலை யிருந்தபடி இலங்கையினைப் பார்க்கையிலே
காவலரக்கர் வந்திடலாம் யென்றெண்ணித் தன்னுடைய
உருசுருக்கி குன்றிடையே அநுமன் சார்கையில்
கதிரவனும் கடல்கலந்து மறையலானான்.                        38

               அநுமன் இலங்கையுள்ளே புக எண்ணுதல்
கருங்கடல் கடந்திட்டாலும், இந்நகர்க்காவல்
பெருங்கடல் கடப்பது அரிதே! - ஆயினும்,
அருங்கடனை எம்பிரான் இராமனுக்கு
ஆற்றுதல்தான் சிறப்பென் றுணர்ந்தவன்,                          39

வாயில் வழி உட்புகுதல்
வலியவர்க்கு அழகன்று! - அதனால்
மதில்தாவி கடந்து சென்று,
மாநகர் புக முடிவு செய்தான்.                                    40

அப்போது,
“இலை, தழை தின்னும் வானரமே!
எதிர்ப்பட்ட காவலுக்கு அஞ்சினா யில்லை! – பொன்
மதில் தாவிச்சென்று, என்னோடு பகையாதே!”
வழிமறித்து வினவினாள் .இலங்கா தேவி                        41

பொங்கி யெழுந்த கோபக் கனலை
பொய்யாக மறைத்தபடி அவன் கேட்டான்,
‘இவ்வூர் காணும் ஆசையினால் வந்தேன்
அவ்வாறு வந்ததில் நட்டம் முண்டோ?”                          42

to be continued................

லக்ஷ்மி ராமாயணம்--சுந்தர காண்டம் - 1


லக்ஷ்மி ராமாயணம் (கம்ப ராமாயணத்தை யொட்டி இயற்றியது)          
 சுந்தர காண்டம்
                        கடல் தாவு படலம்
சுந்தரரின் சாகசங்கள் நிறைந்திருக்கும்
‘சுந்தர காண்டம்’ துவங்கும் முன் கம்ப நாடர்,
தென்தீவாம் இலங்கையிலே வில்லேந்தி,
வென்றானைப் பரம் பொருளாய்ப் பாடுகின்றார்.
                  
                     அநுமன் துறக்க நாடு காண்டல்
             அநுமன் இலங்கையைக் கண்டு ஆரவாரித்தல்

பேருருகொண்டு பறக்கையில், வான்வெளி யிருந்தே
கோட்டைச் சுவரையும், கொற்றம் வாயிலையும்,
கொண்டிருந்த இலங்கா புரி கண்டு
அண்டமதிர  தோள்கொட்டி ஆர்ப்பரித்தான்.                                                                   2  

             அநுமன் தாளால் அழுந்திய மகேந்திர மலையில் நிகழ்ந்தவை

நின்றான் அந்தமிலான் மகேந்திரக் குன்றின்மேல்.
நொருங்கி, நெரிந்து அமுங்கிய தக்குன்று!
கடலிலிட்ட உறுமத்து போலதுவும் சுழன்றிட,
தேவரும், முனிவரும் ஒருங்கே கூடினர்!                          3

‘வித்தக! வாழ்க! வென்றிட செல்க’வென
கொத்து மலர்களை, சுண்ணம் சந்தனத்தை,
முத்து மணிகளையும் தூவி வாழ்த்திட,
விரைந்தனன் அநுமன் இலங்கையை நோக்கி.                      4 

அவனெடுத்த பேருருவின் உயர்ச்சியும்,
அவனழுத்திய மேருவின் தாழ்ச்சியும்,
இலங்கை யடையினும், ஒடுங்காது என்றெண்ணி,
வியந்து நோக்கினர் விண்ணவர் யாவரும்.                         5

அவனோ..
வாலினை வீசினான்; காலினை நீட்டினான்;
மார்பினை ஒடுக்கினான்; தோளினைப் பரத்தினான்.
கழுத்தினை உள்ளிழுத்துக் காற்றாய் வேகம் கூட்டி
குன்றினின் றெழும்பி, விண்ணில் பறந்தான்.                       6
    
                   அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை
குன்றுகளும், மரங்களும், அவற்றோடு,
களிறுகளும், பல்லுயிர்கள் பலவுமாய்
நாயகனாம் இராமனின் பணி இஃதென
பாய்ந்தனவாம் கடல்சூழ்ந்த நகர் நோக்கி.                          7

கடல்நீர் பிளந்ததினால், நாகருலகு தெரிந்ததுவாம்.
துள்ளுகின்ற மகர மீன்கள் துள்ளிக்குதித்ததாம்.
தள்ளுகின்ற அலைகளெல்லாம் இலங்கை மீது
பேரிரைச்சல் போட்டபடி மோதிப் பாய்ந்ததாம்.                     8

                      மைந்நாக மலையின் தோற்றம்

விரைந்து, பறந்த அநுமனுக் கெதிரினில்,
விண்ணும், மண்ணுமே ஒன்றாகும் வண்ணம்
குன்றொன்று மேலெழும்பி வந்து நின்றதும்,
உதைத்துத் தள்ளினன்! உருண்டதது தலைகீழாய்!                  9

நிலைகுலைந்த அம் மைந்நாகமலை
வலிபட்டு, மனத்தில் துயிருற்று – பின்
மானுட உருக்கொண்டு சொன்னதாம்.
‘அநுமனே! இச்சொல்லைக் கேட்டுச் செல்!                        10
                           
முன்பொரு நாள்,
சிறகுகள் பெற்றிருந்த மலைகளெல்லாம்
ஊறு விளைத்தன இடம் பெயர்ந்தபடி
சினந்த இந்திரன் சிறகுகளை அரிகையில் – எனை
கடலினுள் தள்ளி காத்தனன் வாயுதேவன்.                        11

அன்னாரின் அருமைந்தன் நீயதனால்
உன்மீது அன்பு வைத்தேன் இந்நடுக்கடலில்.
என்னாலே செயத்தக்க செயலாக - எந்தன்
பொன்னான சிகரத்தில் இளைப்பாறிச் செல்’ என்ன                12

பதிலுரைத்தான் அநுமன்.
‘நுகர்ந்திட்டேன் உன் அன்புடைமையை
உணர்ந்திட்டேன் இதற்குமேல் ஈவது யாது?– ஆனால்
அமர்ந்திடேன் இராமன்பால் கொண்ட காதலினால்.
சோர்வடையேன் அவனாணை முடியும்முன். - அதனால்           13

விரைவாய் இலங்கா புரியடைந்து,
கருத்தாய் என் பணி முடித்து மீண்டால்,
விருப்பாய் நீதரும் விருந்து ஏற்பேன்.
பொறுப்பாய் அதுவரைநீ!’ புறப்பட்டான் அநுமன்.                   14

                       சுரசை தோன்றுதல்

‘உலகங்கள் மூன்றி னின்றும் முற்றிய துன்பங்களை,
விலக்கி யழித்திட வந்துள்ள அநுமனின்,
வலிமை இன்னதென்று விளக்கிடு நீ’யென
‘சுரசை’ யிடம் தேவர்கள் கோரினராம்! – அவளும்                 15

பகைமை உருகொண்டு அவனெதிர் வந்து
‘யமனும் அஞ்சிடும் என் பசிப்பிணிக்கு
உரிய உணவாக நீயாக வந்தனையோ..? - என்
வாயினுள் புகுதலன்றி வழியேயில்லை’ என்ன,                   16

அநுமன் பதிலுரைத்தான்:
‘பசிதீர எனைப் புசிக்கவந்த பெண்ணே! - இன்று
விசையாக உள்ளேன் ராமனின் ஏவலுக்கு!
சரியாக அதை முடித்து, நானே வந்து
இசைவேன் உன் பசியினுக் கிலக்காக.                           17

கூறிய அநுமன்பால் கோபத்தைக் காட்டி,
‘உன்னுடல் தின்றுதான் என்பசி தீர்வே’னென
அண்டம் நுழைகினும் நிரம்பா பெருவாய் திறந்தாள்.
நீண்டானவன்! நெடிதாகிப் பேருரு கொண்டான் - பின்             18

நொடிப்பொழுதில் நெட்டுரு சுருக்கி – அவள்
மூச்சு விடுமுன் நீள்வாய்ப் புகுந்து
மீண்டு வந்தவனைக் கண்டு ஆர்த்தனர்.
‘ஆண்டான் இவனெ’ன விண்ணோர் வாழ்த்தினர்.                  19

தன்னுரு கொண்டாள் சுரசையும்.
‘உன்னால் முடியா செயல் உண்டோ?! வென
அன்பாய் அன்னைபோல் வினவி நின்றாள் – அவளுக்கு
ஆசிகூறி புறப்பட்டான் அஞ்சனை மைந்தன்.                      20

கீதங்கள் இசைத்தனராம் கின்னரர்!
பேதங்கள் இயம்பினராம் பேதையர்!
வேதங்கள் பாடினராம் அந்தணர்!

விருந் தளித்ததாம் அந்த வீசிதென்றல்.                           21

to be continued.............