பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 26, 2018

பாரதியின் கவிதைகள் பிறந்த விதம்


                                                  
பண்டைய தமிழ்நாட்டில் ஏராளமான தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள் இருந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பெருமையும் புகழும் உண்டு. உலக மறை நூலாம் திருக்குறளை போற்றி வணங்கும் ஒரு நீதிநூலாக இவ்வுலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. திருக்குறள் எழுதியதால் திருவள்ளூவர் போற்றப்படுகிறார். வான்மீகத்தைக் கரைத்துக் குடித்துத் தமிழில் அழியாப் புகழ்வாய்ந்த “இராமகாதை”யை வடித்துக் கொடுத்தார் கம்பெர் பெருமான். இப்படியே சிலப்பதிகாரம் இயற்றி பெருமை கொண்ட இளங்கோவடிகள், பாரதம் இயற்றிய வில்லிபுத்தூரார் இப்படி மாபெரும் புலவர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் அந்த வரிசையில் வந்தவர் மகாகவி பாரதியார். மேற்சொன்ன புலவர்களைப் போல ஏதொவொரு தலைப்பில் நூலெழுதி பெயர் பெற்றவரல்ல. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தை இலக்கியமாக்கினார். அவர் வாழ்ந்த நாட்களைத் தன் கவிதைகளில் வடித்தார். சமகாலத்தின் கண்ணாடியாக விளங்கியதால் பாரதி போற்றப்படுகிறார். அவர் கவிதை எழுதிய சம்பவங்களுக்குப் பின்புலத்தில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கவிதை புனையும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு அதன் மூலம் புதிய புதிய கவிதைகளைப் படைத்து வைத்ததனால் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு தனியொரு காப்பியத்தைப் படைக்கவில்லை. ஆனாலும் அவருடைய முப்பெருங் காப்பியங்களான, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு இன்றும் உயிர்ப்போடு மக்கள் மத்தியில் நடைபோடுகிறது.
மகாகவி பாரதி பாடிய சில பாடல்களின் சந்தர்ப்பம், சூழ்நிலை குறித்து சில குறிப்புகளைக் கீழே காணலாம்.      
           
                  மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

1.    மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலம்; மதுரைத் தமிழ்ச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில் தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பற்றிய தமிழ்ப் பாடல்கள் எழுதி அனுப்பினால் அதற்குரிய பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாரதியுடன் இருந்த நண்பர்கள் அவரை ஒரு பாடல் எழுதி மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கு பாரதியார் சொன்னார், “நம் கவிதை நன்றாக இருந்தாலும் சங்கத்தார் அதை சரியில்லை என்று ஒதுக்கி விடுவார்கள். அவர்களாக அதைச் செய்யாவிட்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பயந்து அவர்கள் தயவினை எதிர்பார்த்து என் கவிதையை நிராகரித்து விடுவார்கள். ஆகையால் அவர்களுக்குக் கவிதை அனுப்பும் எண்ணம் இல்லை. வேண்டுமானால் உங்களுக்காகத் தமிழ்நாட்டின் சிறப்புகளை விளக்கி ஒரு கவிதை புனைந்து தருகிறேன்” என்றார். நண்பர்களும் “ஆகா! எங்களுக்காக அப்படியொரு கவிதையைத் தாருங்கள்!” என வேண்டிக் கொள்ள பாரதியும் ஒரு பாட்டைப் பாடுகிறார். அந்தப் பாடல்தான் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்கிற பாடல்.
அது இதோ:
            “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
            தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
            தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
            சக்தி பிறக்குது மூச்சினிலே – எங்கள்                          (செந்தமிழ்) 1.

            வேதம் நிறைந்த தமிழ் நாடு – உயர்
            வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
            காதல் புரியும் அரம்பையர் போலிளங்
            கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு.                                      (செந்தமிழ்) 2.

            காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
            கண்டதொர் வையை பொருனை நதி – யென
            மேவிய யாறு பல வோடத் – திரு
            மேனி செழித்த தமிழ்நாடு.                                         (செந்தமிழ்) 3.

            முத்தமிழ் மாமுனி நீள் வரையே நின்று
            மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
            எத்தனை யுண்டு புவிமீதே – அவை
            யாவும் படைத்த தமிழ்நாடு.                                      (செந்தமிழ்) 4.
            நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
            நித்தந் தவஞ்செய் குமரி யெல்லை – வட
            மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
            மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு.                                  (செந்தமிழ்) 5.

            கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
            கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
            பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
            பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.                                    (செந்தமிழ்) 6.

            வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
            வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
            அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
            யாரம் படைத்த தமிழ்நாடு.                                     (செந்தமிழ்) 7.
           
            சிங்களம் புட்பகம் சாவக மாதிய
            தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
            தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
            சால்புறக் கண்டவர் தாய்நாடு.                               (செந்தமிழ்) 8.

            விண்ணை யிடிக்கும் தலை யிமயம் – எனும்
            வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
            பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார் தமிழ்ப்
            பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.                                  (செந்தமிழ்) 9.

            சீன மிசிரம் யவன ரகம் – இன்னும்
            தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை
            ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக
            நன்று வளர்த்த தமிழ்நாடு.                                      (செந்தமிழ்) 10.
           

         மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

2.    மார்கழி மாதத்தில் ஒரு நாள் விடியற்காலைப் பொழுது. இருள் பிரியா முன் மகாகவி பாரதியாரும், அவருடைய நண்பர்களும் புறப்பட்டுப்போய் அருகிலுள்ள தோப்பிலிருக்கும் மடுவில் நீராடிவிட்டுத் திரும்புவர். பாரதியாரைக் குவளைக் கண்ணன் எனும் அவரது சீடரொருவர் சென்று எழுப்பி அழைத்து வருவார். ஒருநாள் பாரதியாரை எழுப்ப சீடன் வராததால் பாரதியாரே எழுந்து குவளைக் கண்ணன் வீட்டுக்கு வந்து அவனை எழுப்பினார். அப்போது குவளைக் கண்ணனின் தாயார், பாரதியாரைப் பார்த்து “பாரதி! நீதான் நன்றாகப் பாடுவாயாமே! எங்கே ஒரு சுப்ரபாதம் பாடேன்” என்கிறார்.

பாரதி அவரிடம் “ஆகா! பாடலாமே. என்று நண்பர்களுடன் ஸ்நானம் பண்ண மடுவுக்குக் கிளம்பிவிட்டார். அங்கு போய் ஸ்நானம் முடிந்து திரும்பும் வழியெல்லாம், இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்த சோலைபோன்ற சாலையில் குதித்துக் கைத்தாளம் போட்டுக் கொண்டு நண்பர்களும் உடன் ஆட ஒரு சுப்ரபாதம் எனும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல் எழுந்தது. அதை குவளையின் தாயாரிடம் பாடிக் காண்பித்தாரா என்பது தெரியவில்லை. பாடல் பிறந்து விட்டது. வழக்கமாக இறைவனைத் துயில் எழுப்புவதாகத் தான் சுப்ரபாதம் அமைந்திருக்கும் மகாகவியின் திருப்பள்ளி எழுச்சி பாரத தேவியைத் துயிலெழுப்பிப் பாடுவதாக அமைந்தது. இதோ அந்தப் பாட்டு:

                           பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

            “பொழுது புலர்ந்தது, யாஞ்செய்த தவத்தால்
                        புன்மை யிருட்கணம் போயின யாவும்;
            எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
                        யெழுந்து விளங்கிய தறிவெனும் இரவி;
            தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன்
                        தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்,
            விழிதுயில் கின்றனை யின்னுமெந் தாயே,
                        வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!                      1.

            புள்ளினம் ஆர்த்தன, ஆர்த்தன முரசம்;
                        பொங்கின தெங்குஞ் சுதந்திர நாதம்;
            வெள்ளிய சங்க முழங்கின கேளாய்;
                        வீதியெ லாமணு குற்றனர் மாதர்!
            தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
                        சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
            அள்ளிய தெள்ளமு தன்னையெ மன்னை
                        ஆருயி ரேபள்ளி யெழுந்தரு ளாயே!                                   2.

            பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்
                        பார்மிசை நின்னொளி காணுதற் கலந்தோம்
            கருதிநின் சேவடி யணிவதற் கென்றே
                        கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
            சுருதிகள் பயந்தனை! சாத்திரங் கோடி
                        சொல்லரு மாண்பின ஈன்றனை யம்மே!
            நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத் தேற்றாய்
                        நிர்மலை யேபள்ளி யெழுந்தரு ளாயே!                              3.

            நின்னெழில் விழியருள் காண்பதற் கெங்கள
                        நெஞ்சகத் தாவலை நீயறி யாயோ?
            பொன்னனை யாய்வெண் பனிமுடி ய்மயப்
                        பொருப்பின னீந்த பெருந்தவப் பொருளே!
            என்ன தவங்கள்செய் தெத்தனை காலம்
                        ஏங்குவம் நின்னருட் கேழையம் யாமே?
            இன்னமும் துயிலுதி யேலிது நன்றோ?
                        இன்னுயி ரேபள்ளி யெழுந்தரு ளாயே!                              4.

            மதலைய ரெழுப்பவுந் தாய்துயில் வாயோ?
                        மாநிலம் பெற்றவ ளிஃதுண ராயோ?
            குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
                        கோமக ளேபெரும் பாரதர்க் கரசே!
            விதமுறு நின்மொழி பதினெட்டுங் கூறி
                        வேண்டிய வாறுனைப் பாடுதுங் காணாய்!
            இதமுற வந்தெமை யாண்டருள் செய்வாய்
                        ஈன்றவ ளேபள்ளி யெழுந்தரு ளாயே!”                               5.

        மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

3.    1916ஆம் வருஷம், நள வருஷம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி இரவு புதுச்சேரியில் வீசிய கடுமையான புயல்காற்றில் வீடுகள் தகர்ந்தன, மரங்கள் விழுந்தன, குடிசைகள் எல்லாம் நீரில் மூழ்கின அந்த கடுமையான புயல் வீசிய மறுநால் வ.வெ.சு.ஐயரும், பாரதியாரும் குடிசை வாழ் மக்களுக்கு உதவிகளைச் செய்தனர்.

அந்தப் புயல் வீசுவதற்கு முந்தைய தினம் தான் பாரதியார் முன்பிருந்த பழைய வீட்டிலிருந்து எதிரில் இருந்த இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தார். மழையும், காற்றும், புயலும் மிகக் கடுமையாக வீசிக் கொண்டிருந்த போது அவர் மனதில் ஓர் எண்ணம். நேற்று இருந்த அந்த பழைய வீடு இன்று புயலில் இடிந்து விழுகிறது. அடடா! அந்த வீட்டில் நாம் இருந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருப்போம் எனும் எண்ணம் அவர் மனதில் தோன்றி ஒரு பாட்டாக உருவாகிறது.

புயலின் கடுமையைக் கண்டு அவர் பாடிய பாடல். இது 27-11-1916ஆம் ஆண்டு “சுதேசமித்திரனில்” வெளியானது. “புயல் காற்று என்பது அதன் தலைப்பு”, அது இதோ:
                                                 புயல் காற்று

            மனைவி சொல்கிறாள்.
“காற்ற டிக்குது கடல் குமுறுது
            கண்ணை விழிப்பாய் நாயகனே
            தூற்றல் கதவு சாளரம் எல்லாம்
            தொளைத் தடிக்குது கூடத்திலே – மழை
            தொளைத் தடிக்குது பள்ளியிலே.

            கணவன் சொல்:       
            வானம் சினந்தது வையம் நடுங்குது
            வாழி பராசக்தி காத்திடவே
            தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
            தேவி அருள் செய்ய வேண்டுகின்றோம்.

            மனைவி சொல்:       
            நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே யிந்த
            நேர மிருந்தா லென்படுவோம்?
            காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக்
            காத்தது தெய்வ வலிமையன்றோ?


           மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

4.    பாரதியார் இல்லத்தில் அம்மாக்கண்ணு எனும் பெண்மணி வீட்டு வேலைகள் செய்து வந்தார். அவருடைய மகன் தான் பாரதி தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடும் வேணு முதலி. இவன் உடற்பயிற்சிகளில் தேர்ந்தவன். இந்த வேணு முதலியைத் தன் கட்டுரைகளில் பலவிடங்களில் பாரதியார் குறிப்பிடுகிறார். அம்மாக்கண்ணு பாரதியாரிடம் பணம் காசு எதையும் எதிர்பார்த்து வேலைபார்த்தவரல்ல. அவர் மீதிருந்த பாசத்தின் காரணமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். சில நேரங்களில் பாரதியார் மனைவி சம்பளம் கொடுப்பார், அதை அவர்களுக்கே பணத் தட்டுப்பாடு நேரும்போது அம்மாக்கண்ணு அவர்களுக்கே செலவும் செய்து விடுவார்.

செல்லம்மா பாரதியார் தன் மகள் சகுந்தலாவுடன் பிறந்த வீட்டுக்குக் கடையம் சென்று விட்டார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மாவுக்குத் திருமணம் பேசப்படும் விஷயம் பாரதிக்குத் தெரிவிக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன பாரதி தாடி மீசை வளர்த்துக் கொண்டு ஒழுங்காக உணவு உண்ணாமல், மனம் போனபடி திரிந்து வந்தார். அப்படியொருநாள் இவர் வீடு திரும்பாததால் பலரும் பல இடங்களுக்குச் சென்று தேடினார்கள். இவர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருப்பதாகச் செய்தியறிந்து இவரைத் தேடிக் கொண்டு அம்மாக்கண்ணு சென்றார். இவரைத் தேடப் புறப்படும் முன்பாக ‘ஐயர்” (பாரதி) பசி தாங்கமாட்டாரே அவர் காணவில்லையென்றால் பசியால் வருந்துவாரே என்று ஒரு தூக்கில் தயிர் சோறு எடுத்துக் கொண்டு இவரைத் தேடி அம்மாக்கண்ணு செல்கிறார். ரயில் நிலையத்தில் இவரைக் கண்டு முதலில் இந்த உணவை சாப்பிடுங்கள் என்று அவருக்குக் கொடுத்துத் தாயினும் சாலப் பரிந்தூட்டி பசியாற்றுகிறார். அந்தத் தாயின் மீது பாடப்பட்ட ஒரு பாடல் இதோ. பாரதி வீட்டைப் பூட்டிக் கொண்டு எங்கோ வெளியில் போய்விட்டு வந்து வாசல் பூட்டைத் திறக்க முயல்கிறார். சாவி கிடைக்கவில்லை. உடனே அம்மாக்கண்ணு ஓடி வந்து அந்தப் பூட்டைத் தன் கையால் அசைத்துத் திறந்து விடுகிறார். உடனே பாரதி அந்த அம்மையார் மீது ஒரு பாடலைப் பாடி அதற்கு “அம்மாக்கண்ணு பாட்டு” என்று பெயரிடுகிறார். அது:

                                      அம்மாக்கண்ணு பாட்டு.
            “பூட்டைத் திறப்பது கையாலே – நல்ல
                        மனந் திறப்பது மதியாலே
            பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப
                        வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

            ஏட்டைத் துடைப்பது கையாலே – மன
                        வீட்டைத் துடைப்பது மெய்யாலே
            வேட்டை அடிப்பது வில்லாலே – அன்புக்
                        கோட்டை பிடிப்பது சொல்லாலே.

            காற்றை அடைப்பது மனதாலே – இந்தக்
                        காயத்தைக் காப்பது செய்கையிலே
            சோற்றைப் புசிப்பது வாயாலே – உயிர்
                        தணி வுறுவது தாயாலே!

           
     மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்.

5.    புதுச்சேரியில் உப்பளம் என்றொரு இடமுண்டு. அந்தப் பகுதியிலிருந்து ‘புஷ் வண்டி’ ஓட்டும் ஒருவர் பாரதியாருக்கு வழக்கமாக வண்டி ஓட்டுவார். அவர் ஒரு நாள் பாரதியாரிடம் “சாமி! நீங்க ஒரு நாள் எங்க உப்பளத்திலுள்ள மாரியம்மா கோயிலுக்கு வரவேணும்ங்க” என்கிறார். உடனே பாரதியார் அதற்கென்ன நாளைக்கே வந்தால் போச்சு என்றார். மறுநாள் காலையில் அந்த புஷ் வண்டிக்காரர் பாரதியின் வீட்டுக்கு வந்து உப்பளம் செல்லலாம் என்று அழைக்கிறார். பாரதியாரும் தன் இளைய மகள் சகுந்தலாவை அழைத்துக் கொண்டு அந்த புஷ் வண்டியில் உப்பளம் செல்கிறார். அங்கு இருந்த தேசமுத்து மாரி எனும் அந்த மாரியம்மன் கோயிலுக்கு புஷ் வண்டிக்காரர் அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு வள்ளுவ இளைஞன் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டுகிறான். அப்போது பாரதி தன் மகள் சகுந்தலாவிடம் “பாப்பா! அதோ பார் அந்த இளைஞன் அந்தணத் தொழிலை எத்தனை அழகாகச் செய்கிறான் பார்!” என்று சொல்லி வியந்து போகிறார். பிறகு அந்த இளைஞன் தீபாராதனை தட்டுடன் இவர்கள் இருக்குமிடம் வந்தபோது அவனைப் பாராட்டிவிட்டு, “தம்பீ! நீ அடிக்கடி நம் வீட்டுக்கு வரவேண்டும்” என்கிறார்.

திரும்பி வரும்போது புஷ் வண்டிக்காரன் சொல்கிறான், “சாமி, நீங்க வந்தது எங்க சேரி ஜனங்களுக்கு தெரியாமப் போச்சு. அவுங்க ஒங்களை மறுபடியும் ஒரு நாள் வரவேணும்னு கேட்கிறாங்க. அத்தோடு எங்க மாரியம்மா மேல நீங்க ஒரு பாட்டுக் கட்டி பாடணுங்க” என்கிறான். அவரும் சம்மதித்து அடுத்த நாளே அந்த புஷ் வண்டிக்காரனுடனும் மகள் சகுந்தலாவுடனும் உப்பளம் செல்கிறார். அங்கு மக்கள் வாசல் தெளித்து, கோலங்கள் போட்டு தோரணங்கள் கட்டி வரவேற்கின்றனர். பாரதி அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது “ சாமி எங்க அம்மா மேல ஒரு பாட்டு பாடணுங்க” என்கின்றனர். உடனே பாரதி பாடத் துவங்க, அந்த மக்கள் தாரை, தப்பட்டையுடன் தாளமிட்டு ஆடத் துவங்குகிறார்கள். அங்கு ஒரே அல்லோலப் பட்டது. அந்தப் பாடல் இதோ:

உலகத்து நாயகியே! - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

கலகத் தரக்கர் பலர், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

நிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

துணிவெளுக்க மண்ணுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

அணிகளுக்கொ ரெல்லையில்லை - எங்கள் முத்து
மாரியம்மா,எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம் - எங்கள் முத்து
மாரியம்மா. எங்கள் முத்து மாரி!
--
 தேச முத்துமாரி 

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.
எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.
ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,
இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.
நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,
அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம். 

             மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்
6.    உப்பளம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு புஷ் வண்டியில் வீடு திரும்பும் போது அவர்கள் குடியிருந்த ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருத் திருப்பத்தில் இருந்த தர்மராஜா கோயில் வந்ததும் இருவரும் இறங்கிக் கொள்கிறார்கள். சகுந்தலாவை அழைத்துக் கொண்டு கோயிலினுள் போகிறார். அங்குள்ள சிலைகளையெல்லாம் பார்த்து அதிசயித்த பாப்பாவுக்கு பாரதி விளக்கம் தருகிறார். அங்கிருந்த குண்டான ஆண் ஒருவரின் சிலையைக் காட்டி இது யார்? என்கிறாள் குழந்தை. பாரதி சொல்கிறார் இது பாண்டவர்களுக்கான கோயில், இந்த குண்டு ஆசாமிதான் பீமன் என்கிறார். இப்படியே மற்ற சிலைகளின் விவரங்களைக் கேட்டு அறிந்தபின் அங்கிருந்த பெண் சிலையைக் காட்டி இது யார் என்கிறாள் சகுந்தலா. பாரதி இதுதான் திரெளபதி. பாண்டவர்களின் பத்தினி. மகாபாரதக் கதையின் நாயகி என்கிறார். “இவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் எனக்குக் கதை சொல்லவே இல்லையே!” என்கிறாள் குழந்தை. “அதுவா! சொல்கிறேன்” என்று ஆழ்ந்த மெளனத்தில் ஆழ்ந்து விடுகிறார் பாரதி. தந்தை மெளனமாகி விட்டால் மனதில் ஏதோ கவிதை தோன்றுகிறது என்று குழந்தை அவருக்குத் தொல்லை தருவதில்லை, அமைதியாகி விட்டாள். அன்று வீடு போய்ச்சேர்ந்த பிறகும் பாரதி குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், காலைத் தரையில் ஓங்கு உதைப்பதும் ஏதோ சிந்தனை வசப்பட்டிருப்பது கண்டு மற்றவர்கள் ஒதுங்கி விட்டார்கள். ஆம்! பாரதியின் சிந்தனையில் அப்போது இருந்தது ஈஸ்வரன் தர்மராஜா கோயிலில் கண்ட கதாபாத்திரங்கள் தான். அவர் மனதில் “பாஞ்சாலி சபதம்” உருவாகி விட்டது. மகாபாரதத்தில் பாஞ்சாலியை மையமாக வைத்து சூதாட்டத்தையும், பாண்டவர்கள் செய்த சபதங்களையும், நிறைவாக பாஞ்சாலியின் சபதத்தையும் சாகாவரம் பெற்ற காப்பியமாக பாரதி படைத்து வைத்தார். அந்த காப்பியத்தின் சில வரிகள்.

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்
தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
நாமமும் உருவும் அற்றே-மனம்
நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்;

நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த
நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;
நன்றுசெய் தவம் யோகம்-சிவ
ஞானமும் பக்தியும் நணுகிட வே,
வென்றி கொள்சிவ சக்தி-எனை
மேவுற வே,இருள் சாவுற வே,
இன்றமிழ் நூலிது தான்-புகழ்
     ஏய்ந்தினி தாயென்றும் இலகிடவே.

என்று பாஞ்சாலி சபதத்தைத் தொடங்கிவிட்டு, கடைசியில் வீமன் தொடங்கி பாண்டவர் செய்த சபதத்தையும், இறுதியில் பாஞ்சாலியின் சபதத்தோடு இந்த அரிய இலக்கியத்தை எழுதி முடிக்கிறார். சபதக் காட்சி இதோ.



கோயிற் பூசை செய்வோர் -- சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் -- வீட்டை
வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான -- நீதி
யவைஉ ணர்ந்த தருமண்
தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ!
சிறியர் செய்கை செய்தான்.


‘நாட்டு மாந்த ரெல்லாம் -- தம்போல்
நரர்களென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென்’ -- றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் -- பலதாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி -- மனிதர்
நன்கு செய்ய வில்லை.


ஓரஞ் செய்திடாமே, -- தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, -- பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை -- உலகில்
ஓர்புறத்து மில்லை.
சார மற்ற வார்த்தை! -- மேலே
சரிதை சொல்லு கின்றோம்.




‘சூதர் மனைகளிலே -- அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே -- அங்கோர்
தொண்டச்சி போவதில்லை.

‘ஏது கருதிவைத்தாய்? -- அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை -- அன்பே
வாய்ந்த வடிவழகை.

‘பூமி யரசரெல்லாங் -- கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே -- வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன்.

‘அவன் சுடர்மகளை, -- அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; -- அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய்.

‘சோரத்திற் கொண்டதில்லை; -- அண்ணே
, சூதிற் படைத்ததில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; -- வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம்;




‘சக்கரவர்த்தி யென்றே -- மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே -- எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய்.

‘நாட்டையெல்லாந் தொலைத்தாய்; -- அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை -- செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம்.

‘துருபதன் மகளைத் -- திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, --
இருபகடை யென்றாய், -- ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்!

‘இதுபொறுப்ப தில்லை, -- தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் -- அண்ணன்
கையை எரித்திடுவோம்.’



எனவீமன் சகதேவ னிடத்தே சொன்னான்.
இதைக்கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
‘மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சினமான தீஅறிவைப் புகைத்த லாலே,
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்.


‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான்.

வீமனெழுந்துரை செய்வான்; -- ‘இங்கு
விண்ணவ ராணை, பராசக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான் -- மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் -- எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன்பதத் தாணை;
காமனைக் கண்ணழ லாலே -- சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடி மீதில்



‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்: -- இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள் -- எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி “வந்திரு” என்றான் -- இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, -- என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,



‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் -- தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -- அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! -- இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, -- இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான்.









                                   

அர்ஜுனன் சபதம் 


பார்த்த னெழுந்துரை செய்வான்: -- ‘இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு -- எங்கள்
சீரிய நண்பன் கண்ணன்கழலாணை;
கார்த்தடங் கண்ணிஎந்தேவி -- அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -- ஹே!
பூதலமே! அந்தப் போதினில்’ என்றான்.


                                               

பாஞ்சாலி சபதம் 



தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள்.
103


ஓமென் றுரைத்தனர் தேவர்; -- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு. -- விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -- என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்.
நாமுங் கதையை முடித்தோம். -- இந்த
நானில முற்றும்நல்லின்பத்தில் வாழ்க.



              மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்
7.    மகாகவி பாரதியாருக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் எனும் குவளைக் கண்ணன். பாரதியாரை யானை ஒதுக்கித் தள்ளியபோது கம்பிவேலியைத் தாண்டிக் குதித்து பாரதியாரை மீட்டு வந்தவர் இந்த குவளையார். பாரதியின் பாடல்களை ஸ்ருதி இல்லாமல் பாடிக்கொண்டிருந்தவர். எப்போதும் பாரதியுடனே இருந்து பணியாற்றியவர். உடல் நிறைய நாமங்களை அணிந்து காணப்படும் ஒரு தீவிர வைணவர்.

அவரிடம் ஒரு நாள் பாரதியார் “கிருஷ்ணா, இந்த நாலாயிரம் இருக்கிறதே, இது எத்தனை ஆழ்வார்கள் பாடியவை?” என்கிறார். அதற்கு அவர் “பதினொரு ஆழ்வார்களும், ஆண்டாலும், திருவரங்கத்து அமுதனாரும் சேர்ந்து பாடியவை. இவை அத்தனைக்குமாகச் சேர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று பெயர் என்றார் கண்ணன்.

பாரதி சொன்னார், “பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா? நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!” என்றார்.

“பாரதியார் ஆறாயிரம்” என்று தலைப்பிட்டு பாரடியார் எழுதத் தொடங்கினார். இதனிடையே குடும்பத்தில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், கவலை, சச்சரவு, வறுமை இவை வாட்டத் தொடங்கின. இவைகளைத் தொடர்ந்து தன் 39ஆம் வயதில் இறந்தும் போய்விட்டார். ஆகவே அவர் சொன்ன ஆறாயிரம் பாடல்கள் முற்றுப்பெறவில்லை. வெறும் அறுபத்தாறு பாடல்கள் மட்டுமே பூர்த்தியாகியிருந்தன. ஆனால் அவர் பாடவிரும்பிய ஆறாயிரம் பாடல்களின் சாரம் இந்த அறுபத்தியாறில் அடங்கிவிட்டதாகக் கூறுவார்கள். அந்த “பாரதி அறுபத்தாறு” பற்றி இங்கு சிறு பகுதியைப் பார்ப்போம்.

                                    “பாரதி அறுபத்தாறு”

இந்நூலின் முதற் காண்டம் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. அது பராசக்தி துதி. அதில் அவர் சொல்வதாவது.

            “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
            யானும் வந்தேனொரு சித்தன் இந்த நாட்டில்
            மனத்தினிலே நின்றிதனை யெழுதுகின்றாள்
            மனோன்மணி யென் மாசக்தி வையத் தேவி,
            தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
            செய்ய மணித் தாமரை நேர்முகத்தாள், காதல்
            வனத்தினிலே தன்னை யொரு மலரைப் போலும்
            வண்டினைப் போலெனையும் உரு மாற்றிவிட்டாள்.
            மாகாளி பராசக்தி உமையா ளன்னை
            வைரவி, கங்காளி, மனோன்மணி, மாமாயி
            பாகார்ந்த தேமொழியாள் படருஞ் செந்தீ
            பாய்ந்திடுமோர் விழியுடையாள் பரம சக்தி
            ஆகார மளித்திடுவாள், அறிவு தந்தாள்
            ஆதி பராசக்தி யென தமிர்தப் பொய்கை
            சோகாட விக்குளெனைப் புகவொட்டாமல்
            துய்ய செழுந் தேன்போலே கவிதை தந்தாள்.

இப்படி போகிறது இந்த பாடல். இதன் ஒரு பகுதியில் சொல்கிறார்.

            சென்றதினி மீளாது மூடரே, நீர்
            எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
            கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து
            குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா
            இன்று புதிதாப் பிறந்தோம் என்று நெஞ்சில்
            எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
            தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!
            அஃதின்றி சென்றதையே மீட்டு மீட்டும்
            மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா”


      மகாகவி பாரதியின் பாடல்கள் பிறந்த விதம்

8.    புதுச்சேரியில் மகாகவி பாரதியாரிடம் அவர் படித்த திருநெல்வேலி எம்.டி.டி. இந்து உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் வந்து, பாரதியார் படித்த அந்த கலாசாலை மூடப்பட விருப்பதாகவும், அதனை மீண்டும் திறந்து நடத்த நிதி தேவைப்படுகிறதென்றும் சொன்னார். அதற்குத் தான் என்ன செய்ய வேண்டுமென்று பாரதியார் கேட்க அவர் சொன்னார், நீங்கள் ஒரு பாடல் எழுதிக் கொடுத்து, அதில் கல்விப் பணிக்காக நிதி கேட்டு வேண்டுகோள் விடுத்து எழுதித் தரும்படி கேட்டார். பாரதியாரும் உடனே எழுதித் தருவதாகச் சொல்லி அவரை அனுப்பினார். அன்றே உட்கார்ந்து கல்வியின் சிறப்பையெல்லாம் சொல்லி, கலைமகளின் அருமை பெருமைகளைச் சொல்லி அத்தகைய கல்வியை போதிக்கும் இந்த செயலுக்கு நிதி தரும்படியாக ஒரு வேண்டுகோளுடன் கவிதையொன்றை எழுதி அவரே சென்று அந்த நண்பரிடம் கொடுத்து விட்டு வந்தார். அந்தக் கவிதை இதோ:

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
      வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
      கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே
      ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
      கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
      மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
      கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
      குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
      இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
      வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
      வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
      வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
      தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
      தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
      உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
      செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
      கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
      சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
      வாழி யஃதிங் கெளிதென்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
      வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
      சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
      வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
      நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
      தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
      கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
      உதய ஞாயிற் றொளி பெறு நாடு;
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
      செல்வப் பார சிகப்பழத் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
      சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
      கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
      நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்,
      ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்,
மான மற்று விலங்குக ளொப்ப
      மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
      புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
      இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
      ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
      பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
      ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
. (வெள்ளைத்)

நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்;
      நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
      ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
      வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
      இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!
(வெள்ளைத்) 



பெண்ணுரிமை காத்த பாஞ்சாலி.


                                   
மகாகவி பாரதியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் நம் மனதில் தோன்றுகின்ற எண்ணம், அவனது தேசபக்தி, இறையுணர்வு, இலக்கியத் தேடல், சுதந்திரத்தில் நாட்டம், இவற்றோடு தனது மானசீக குருவாகப் போற்றிய சகோதரி நிவேதிதா தேவியின் சந்திப்பால் ஏற்பட்ட பெண் சமத்துவம் ஆகிய உணர்வுகளாம். தேச சுதந்திரம் அவன் வாழ்ந்த காலகட்டத்தில் எல்லா சுதேசிகளுக்கும் உண்டான இயல்பான உந்துதல். இறையுணர்வு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணில் உதித்து இறைவனைத் துதித்துப் போற்றிய பெரியோர்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சி. இலக்கியத் தேடல் அவனுடைய இயற்கையோடு ஒன்றிய இயல்பான வாழ்க்கை. பெண் சுதந்திரம் என்பது சகோதரி நிவேதிதா அம்மையார் அவன் மனதில் இட்ட ஒரு சிறு தீப்பொறி. அவன் பாடிய அந்த அக்னிக் குஞ்சை அவன் மனதில் விதைக்கக் காரணமாக இருந்தவர் சகோதரி நிவேதிதை. இந்தத் தாக்கத்தால்தான் பாரதியாரின் பாடல்களில் பெரும்பாலும் பெண்களை உயர்வு செய்யும் எண்ணங்களே பிரதிபலிக்கின்றன. அவன் எழுப்ப விரும்பிய பெருந்தீக்குத் தொடக்கமாக அவன் வைத்த அக்கினிக் குஞ்சுதான் அவனுடைய புதிய ஆத்திசூடி. அதில் “தையலை உயர்வு செய்” என்று அவன் விடுத்த செய்தி பெரியவர்களுக்கு அல்ல, குழந்தைகளுக்கு. பயிரை விதைக்க வேண்டிய இடம் பார்த்து விதைத்தான், எதிர்காலம் தையலர்க்குப் பெருமை சேர்க்கும் என்ற அவனது உள்ளுணர்வினால். “தையல் சொல் கேளேல்” எனும் அறிவுரை நிலவி வந்த காலத்தில் “தையலை உயர்வு செய்” என உரக்கக் குரல் கொடுக்கத் துணிந்தவன் மகாகவி பாரதி.

மகாகவியின் பெண்ணிய சிந்தனைகளை உற்று நோக்கினோமானால், அன்றைய காலகட்டத்தில் அடிமைகள் போலும், விலைப்படும் விலங்கினங்களைப் போலும் அடக்கி ஆளப்பட்ட மாதர்தம் விடுதலையில் அவன் காட்டிய ஆர்வம் புலப்படுகின்றது. மனதில் உறுதி வேண்டும் என்று பராசக்தியை வேண்டி பாடுகின்றபோதும், அவன் உள்ளத்தில் தோன்றிய கருத்து “பெண் விடுதலை வேண்டும்” என்பதும் அப்படி நிகழும் விடுதலையினால் இந்த மண் பயனுற வேண்டும், உண்மை நின்றிட வேண்டுமென்பதும் தான்.

அதோடு நிற்காமல் அவன் சொன்ன கருத்து நம் அறிவுக் கண்களைத் திறக்க வல்லதாக இருக்கிறது. ‘பெண்மை” எனும் தலைப்பில் அவன் சொல்கிறான் “பெண்மை அறிவு உயர பீடு ஓங்கும், அந்தப் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு” என்பது அவன் எண்ணம். “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா” என்று பொங்கி மகிழ்ந்தவன் பாரதி. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்றால், இவ்வுலகம் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்பது அவன் முடிவு. நிமர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு இவைகள் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என உறுதிபட எடுத்துரைக்கிறான் பாரதி.

பெண் கல்வி உயர்ந்தால், அவர் சாத்திரங்கள் பற்பல கற்பர், சவுரியங்கள் பற்பல செய்வர், மூத்த பொய்மைகள் யாவையும் அழிப்பர், மூடக் கட்டுகள் யாவையும் தகர்ப்பர், இப்பூமியில் ஆண் மக்கள் போற்றிட வாழ்வராம் என்பது பாரதியின் முடிபு. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று சொல்லி வந்த பழமையைச் சாடிப் பாடினான்.  வீட்டினுள் பெண்களைப் பூட்டி வைத்திடும் விந்தை மனிதரைத் தலைகுனிய வைத்தான்.

            கற்பு என்று சொல்லி அதைப் பெண்களுக்கு மாத்திரமே உரித்தானதாகச் சித்தரித்த போலி உலகில், அந்த கற்பினை இரு சாராருக்கும் பொதுவில் வைக்கக் குரல் கொடுத்தவன் பாரதி. பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை மாட்டை விற்பதைப் போல் கட்டிக் கொடுத்து அனுப்பும் வழக்கத்தையும் சாடியவன் பாரதி. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், எட்டும் அறிவினில் ஆணுக்கு நிகராக சிறந்து விளங்கவும் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கொக்கரித்தான்.

இந்த பெண் விடுதலை எண்ணங்கள் அவன் மனதில் தோன்றியபோது நமது புராண இதிகாசங்களில் சிறந்து விளங்கிய பெண் பாத்திரங்கள் அவன் மனத்தைக் கவ்வின. அதில் குறிப்பிடத் தக்கவள் மாபாரதத்தின் பாஞ்சாலி. அந்த பாஞ்சாலி ஒரு யுகப் புரட்சியைச் செய்து காட்டினாள். ஆம் துவாபர யுகம் முடிந்து, கலியுகம் தோன்ற காரணமாக இருந்தது மகாபாரத யுத்தம்; அந்த மாபாரத யுத்தத்துக்குக் காரணமாக விளங்கியவள் பாஞ்சாலி, ஆகவே பாஞ்சாலி செய்தது ஒரு யுகப் புரட்சிதான்.

மகாபாரதக் கதையின் உயிர்நாடி பாஞ்சாலி செய்த சபதம் தான். அண்ணன் தம்பிகளான திருதராட்டிரன், பாண்டு ஆகியோரின் மக்களிடையே ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் மகாபாரதப் போர். திருதராட்டிரனின் மகன் துரியோதனின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிந்த பொறாமைத் தீ, சகுனி எனும் தீயவனின் சாமர்த்தியத்தால் தூண்டிவிடப்பட்டது. அதன் விளைவு சூதாட்டப் போர். சூதில், சூதினால் வென்ற சகுனி தர்மனின் செல்வம், சொந்தம், உரிமை அனைத்தையும் பறித்துக் கொண்டான். விளைவு பாண்டவர்கள் காடாளவும், தலைமறைவாய் வாழ்ந்திடவும் கடமைப் பட்டார்கள்.

ஐவரின் பத்தினியாய், சூதர்களின் வாழ்வுக்கு அக்கினியாய் வந்து வாய்த்தவள்தான் பாஞ்சாலி. தருமன் சூதில் அவன் விருப்பத்துக்கு மாறாக பங்கேற்கிறான். பணயம் வைத்த அனைத்தையும் இழந்து போகிறான். நாட்டை வைத்திழந்தான்; செல்வங்கள் அனைத்தையும் வைத்திழந்தான்,. அப்போதும் தீமனம் படைத்த சகுனி அவனை விட்டுவிட மனமின்றி, தருமனைத் தூண்டுகிறான். “தருமா! செல்வம் முற்றும் இழந்து விட்டாய், தேசமும் குடிகளும் சேர்ந்து இழந்தாய். புவிக்கெலாம் பார்த்திபன் இந்த தருமன் எனும் புகழையும் சேர்ந்தே இழந்தாய். நான் சொல்வதைக் கேள். எல்லாம் இழந்த பின்னர் நீயும், நின் இளைஞரும் எப்படிப் பிழைப்பீர்? தீங்கு தரும் சூதில் தோற்று நீங்கள் அனைவரும் பிச்சை புக விடுவதை நான் விரும்பவில்லை, எனவே சூதில் பணயம் என்று தகுதியான நின் இளைஞரைச் சூதில் பணயம் வை” என்கிறான்.

பாண்டவர் இளைத்த நிலை கண்டு கர்ணன் சிரிக்கிறான், அவையோர் கண்ணீர் சிந்தினர். அரவக்கொடியுடைய வேந்தன் துரியன் கெக்கெலி கொட்டிச் சிரிக்கிறான். தம்பிமார்களை வைத்து நீ வென்று விட்டால், முன்பு சூதில் நீ வைத்து இழந்ததனைத்தையும் திரும்பப் பெறலாம் என்று ஆசை வார்த்தைகள் புகன்றான். அது மட்டும் போதுமா? தருமனின் சுயமரியாதையையும் சுட்டிக் காட்டுகிறான். “தருமா! நாட்டை இழந்த பின்னர் உங்கள் ஐவரின் பத்தினி அந்த அம்பினொத்த விழியாள், அவள் இகழ்ந்திட மாட்டாளா? உன் கவலையைத் தீர்த்து வைப்போம் தருமா! உன் தம்பியரை வைத்து ஆடு” என்கிறான்.

பீமன் புற்றினில் சிக்கிய நாகம் போல சீருகிறான். பார்த்தன் முகக் களை இழந்து நிற்கிறான். ஏனையோர் ஊமைகளாயினர். தம்பியர் ஒவ்வொருவராய் சூதில் வைத்து தருமன் இழக்கிறான். ஒவ்வொருவனையும் இழக்கும்போது சூதர் கூட்டம் ஆர்ப்பரித்து முழங்குகிறது. அத்தனையும் இழந்த பின்னரும் சகுனி சளைக்கவில்லை. தருமா! இன்னும் பணயம் வைத்து ஆடுவோம், இன்னமும் நீ வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. சோர்வடைந்து விடாதே என்று தூண்டிவிடுகிறான்.

“தருமா, மின்னலைப் போன்றவள், அமுதம்போன்ற பேச்சையுடையவள், நின் தேவியாம் திரெளபதியை வைத்து ஆடினால், அவள் மிகுந்த அதிர்ஷ்டமுடையவள் அல்லவா? அவளால் நீ இழந்ததனைத்தையும் மீட்கலாம், ஆடு!” என்கிறான் சகுனி.

அதுவரை இந்த உலகம் காணாத துயர நிகழ்வு, வேள்விக்குரிய பொருளைத் தெரு நாய் முன் வைப்பதைப் போல, பொன்னால் மாளிகை கட்டி அதில் பேய்களைக் குடியமர்த்துவது போல, ஆளை விற்றுப் பொன் வாங்கி அதில் பூண் செய்து ஆந்தைக்குப் பூட்டுவது போல, தடுத்து நிறுத்த ஆளில்லாத நிலையில் தருமன் திரெளபதியைப் பணயமென்று சூதில் வைத்தான்.

தன் சொந்தக் குழந்தையைக் கொன்று அதன் தோலில் காலுக்குச் செருப்பு தைத்து அணிவரோ? வையகம் போற்றும் பாஞ்சாலியைக் கேவலம் சூதில் பணயமென்று வைப்பரோ? வைத்து விட்டான் தருமன். சகுனியின் சூட்சியால் அவன் கேட்ட பகடை விழுந்தது, அரக்கர் கூட்டம் ஆர்த்தெழுந்து ஆர்ப்பரித்தது. திக்குக் குலுங்கிடவே எழுந்தாடுகிறது தீயோர் கூட்டம்.

இந்த கேடுகெட்ட செய்தி பரவியதும், இயற்கை தனது செயல் இழந்ததாம். தருமம் அழிந்தது, சத்தியம் பொய்யாக மாறியது, பெருமை தரும் தவங்கள் பெயர் கெட்டு மண்ணாய் ஆகிப்போனது. மோன முனிவர்கள் வயிற்றில் தீப்பாய்ந்தாற்போல் இத்தீய செய்தி எட்டியது. வேதம் பொருளின்றி வெற்றுரையாகிப் போனது. நான்முகனார் பிரம்மன் நாவடைத்துப் போக, கலைமகளாம் நாமகள் புத்தி கெட, ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்த திருமாலும் அறிதுயில் போய் (யோக நித்திரை) ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்துவிட இவ்வுலகம் தலைகீழாய் மாறிப்போனதாய் காட்சியளித்தது.

சூதில் வைத்து இழந்த பாஞ்சாலியைத் தன் அவைக்கு அழைத்துவர ஆள் அனுப்பினான் துரியோதனன். அவள் பலசொல்லி மறுத்தாள். தூதுவன் அஞ்சினான். அன்னையின் கோபத்துக்கு ஆளாக விரும்பாமல் அழுது பிரற்றினான். கோழையவன் தூதை விடுத்துத் தன் கொடுமை நிறைந்த தம்பியாம் துச்சாதனனை அனுப்பினான், கோதையவளைக் கொண்டு வந்து அவையில் சேர்க்க. அண்ணனின் ஆணையைக் கேட்டு மகிழ்ந்து கிளம்பினான் துச்சாதனன் எனும் அரக்க குணம் படைத்தோன். அவன் புத்தி விவேகமில்லாதவன், புலி போல் உடல் வலியுள்ளவன், சிவசக்தி வலி உணராதவன், விரும்பியே தவறுகள் செய்பவன், அவன் சென்று அன்னையை அவைக்குக் கொணர வெறி கொண்டு சென்றான்.

அரண்மனை சென்று பாஞ்சாலியை அவைக்குக் கொணர முயன்றான் துச்சாதனன். மறுத்தாள் அன்னை. அரக்கன் சொல்கிறான், “ஆடி விலைப்பட்ட தாதி நீ, உன்னை இப்போது ஆள்பவன் என் அண்ணன் சுயோதனன். மன்னர்கள் கூடி நிற்கும் சபைதனில் உன்னை கொண்டு செல்வேன் இப்போதே என்று இழுக்க முயல, அவள் “அச்சா, கேள், மாதவிலக்காதலால் ஒற்றை ஆடையில் இருக்கிறேன். தார் வேந்தர் சபை முன்னால் வந்து நிற்பது முறையில்லை” என்கிறாள் பாஞ்சாலி.

அது கேட்ட துச்சாதனன், கக் கக் கவென்று கனைத்தே அந்தப் பெரு மூடன், பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்துக் கையினால் பற்றிக் கர கரவென்று இழுத்தான். ஐயகோ என்று அலறி உணர்விழந்தாள் அன்னை. நீசன், அன்னையின் நீண்ட குழல் பற்றி, பாதி உயிரோடு தவித்து நிற்க, முன் இழுத்துச் செல்கிறான் தெருவோடு.

அப்போது தெருவெங்கும் வேடிக்கை பார்த்து நிற்கும் வீணர் கூட்டம், இன்று போல் அன்றும் இருந்தார் போலும். அத்தகையோர் கீழ்மை சொல்லத் தகுமாமோ? வீரமிலா நாய்கள் அன்னையின் சிகை பிடித்திழுக்கும் அரக்கனை அடித்து மிதித்துத் தரையில் வீழ்த்தி, அன்னையவளை அரண்மனைக்குக் கொண்டு சேர்க்காமல், நெட்டை மரங்கள் என பெட்டைப் புலம்பல் புலம்பிக் கொண்டு, “ஐயோ என்ன அநியாயம் இது!” என்று செயலற்று நின்று கொண்டிருந்தார்.

அன்னை விம்மி அழுதாள், “விதியோ, கணவரே, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து என்னை வேதச்சுடர் முன்னால் வேண்டி மணம் புரிந்து இன்று இப்பாதகர் முன்பாக நான் பரிசழிதல் காண்பீரோ?” என்று கதறினாள்.

கல்மனம் படைத்த அரக்கர்கள் “தாதியடி, நீ தாதி” என்று கெக்கலித்தார். பெரியோர்கள் பார்த்திருந்தார், யாரும் எதிர்க்கவில்லை. இதையெல்லாம் இன்றைய தர்மம் ஏற்குமென்கிறார்கள் வீட்டுமன் முதலான பெரியவர்கள்.  அத்தனை பெரிய கூட்டத்தில் அன்னைக்கு ஆதரவாய் எழுந்தது ஒரேயொரு குரல். அது பாண்டவர் பக்கமிருந்தல்ல. துரியோதனின் தம்பியரில் ஒருவனான விகர்ணன் என்பான் இந்த செயலை எதிர்த்துப் பேசுகிறான்.

விகர்ணன் பேச்சைக் கேட்டு வில்வலான் கர்ணன் “தகுமடா, சிறியோய், அத்தனை தார்வேந்தரும் மெளனமாய் வீற்றிருக்க, சிறுவன் நீ, அதிகப் பிரசங்கம் செய்கிறாய். உனக்கு வீரமும் இல்லை, விவேகமும் இல்லை என்று பழித்துரைக்கிறான். செய்வதறியாராய் பாண்டவர் ஐவரும் திகைத்து நிற்கின்றார்.

அடிமையாய் ஆனவர்க்கு மார்பில் துணியைத் தாங்கும் வழக்கமில்லை என்று சொல்லி பணியாளை அழைத்துப் பாண்டவர் மார்பில் ஏந்தும் துணிதனைக் களைவாய் என்கிறான் துரியன். இவற்றையெல்லாம் கண்டு பாஞ்சாலி அச்சத்தில் உரைந்து போனாள்.

துச்சாதனன் எழுந்தான், அன்னையின் துகிலினை மன்றில் உரிதலுற்றான். பாஞ்சாலி எவ்வழி உய்வோம் என்று தியங்கினாள். கைகளைக் குவித்து அச்சோ தேவர்களே என்று மயங்கிச் சாய்ந்தாள். அந்தப் பேயன் துச்சாதனன் அன்னையின் துகிலில் கைவைத்தபோது அன்னையின் நினைவு உட்ஜோதியில் கலந்தது, உலகை மறந்தது, ஒருமையுற்று பேரொளியில் ஐக்கியமானாள். ஹரி! ஹரி! ஹரி! என்று அன்னையின் வாய் அலறியது. அபயம், அபயம் உனக்கு அபயம் என்றாள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பொய்யர்களுக்கு அடுக்கடுக்காக வரும் துன்பம் போல, புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் அளவற்ற புகழைப் போல, தையலார்க்கெல்லாம் இருக்கும் அளவற்ற கருணையைப் போல, கடலில் ஓயாமல் மோதும் அலைகளைப் போல, பெண்மையைப் போற்றுவார்க்குக் கிடைக்கும் செல்வத்தைப் போல, கண்ணபிரான் அருளால் அந்த கொடியோன் கழற்றிடக் கழற்றிட வளர்ந்தன சேலைகள். அன்னையின் மானம் காப்பாற்றப்பட்டது. காணுதற்கரிய இக்காட்சியைக் கண்டு தேவர்கள் பூமாரிச் சொரிந்தனர். பீஷ்மன் எழுந்து கைகூப்பி அன்னையைத் தொழுதான். கூடியிருந்தோர் அனைவரும் ஓம் சக்தி! ஓம் சக்தி! என்றோதி கரம் குவித்து வணங்கினர்.

நடந்ததெல்லாம் பார்த்து அரவுயர்த்த வேந்தன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தான். அப்போது பீமன் எழுந்து சபதம் செய்கிறான். “நாய் மகனாம் இந்த துரியோதனின் தொடையைப் பிளந்து அவன் உயிரை மாய்ப்பேன், என்றும், துச்சாதனன் கடைப்பட்ட தோள்களைப் பிய்ப்பேன், அதில் ஊறும் குறுதியைக் குடிப்பேன் என்கிறான். கண்மூடி தியானம் செய்தபின் பராசக்தியை அழைத்து, “பராசக்தி! இது சாதனை செய்” என்கிறான்.

பார்த்தன் எழுந்து சபதமேற்கிறான். “இந்தப் பாதகனாம் கர்ணனைப் போரில் கொல்வேன். இது நான் வணங்கும் மகாவிஷ்ணு கண்ணன் கழலடி ஆணை” கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும், காண்டீப வில்லின் மீதாணை என்கிறான்.

அத்தனை கூட்டத்தின் மத்தியில் அவமானப்பட்ட அன்னை பாஞ்சாலி சபதம் செய்கிறாள். “ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் தோள்களை பீமன் பிய்த்ததும் பீச்சியடிக்கும் அவன் செந்நீரையும், பாழ்பட்ட துரியோதனின் தொடையைப் பிளந்ததால் பொங்கும் அவன் ஆக்கை ரத்தமும் மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி நறுநெய் குளித்த பின்பே சீவிக் குழல் முடிப்பேன்” என்கிறாள்.

ஆற்றாது அல்லல் பட்ட அவ்வன்னையின் சபதம் பராசக்தி செய்த சபதமல்லவா. ஓம்! ஓம்! என்று தேவர்கள் கோஷமிட்டனர். ஓம்! ஓம்! என்று உறுமியது வானம். அப்போது உலகெங்கும் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று. விண்ணைப் பூழிப்படுத்தியது பெரும் சுழற் காற்று.” அன்னையின் சபதம் நிறைவேறியது, பாரதப் போரின் இறுதி நாளில். அன்று அவ்வரக்கர்களின் ஆக்கை ரத்தம் கலந்து நெய்பூசிக் குளித்துத் தன் சபதத்தை நிறைவேற்றுகிறாள் பாரத அன்னையாம் பாஞ்சாலி.

பாஞ்சாலியின் கதையைச் சொல்லவந்த பாரதி இப்பார் மீதில் பெண்மையின் பெருமையையும் சேர்ந்தே சொன்னார். பெண்மையைப் போற்றி பெருமை சேர்த்தது நமது பாரத தேசம், அதை வந்தே மாதரம் என்று சொல்லி வணங்குவோம்.








           

Friday, March 23, 2018

சுதந்திரப் போரில் சென்னை சதி வழக்கு!


               
காத்மா காந்தி அடிகள் தண்டியிலும், ராஜதந்திரி ராஜாஜி வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளியிலும் உப்பு எடுத்து சிறை சென்ற போராட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன. சட்ட மறுப்பு இயக்கம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. சுதந்திர ஆவேசம் கொண்ட தேசபக்தர்கள் விரைவில் நாடு சுதந்திரம் அடைந்திட என்ன வழி என்பதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம். ஆண்டு 1932.
சென்னையில் ஒரு இரகசிய இடத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அதில் பல முகங்கள் நமக்கு அறிமுகமான முகங்கள்தான். மதுரை சீனிவாசவரதன், பத்மாசனி அம்மாள், தஞ்சை ஹனுமந்த ராவ், பி.கே.நாராயணன், மாணவர் எஸ்.ரங்கராஜன் ஆகியோர் அதில் இருந்தனர்.

இவர்களது பணி, மக்கள் கூடுமிடங்களில் சுதந்திரம் வேண்டி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவது; தடைசெய்யப்பட்ட நூல்களைக் குறிப்பாக வீர சாவர்க்கரின் “முதல் இந்திய சுதந்திரப் போர்” போன்ற நூல்களை வினியோகம் செய்வது ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தனர். சாவர்க்கரின் ஆங்கில மூல நூலை தமிழில் மொழி பெயர்த்திருந்தவர் டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் மகள் டாக்டர் செளந்தரம் அவர்கள். அப்போது நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட தியாகிகளை திருச்சி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த சமயம் வடக்கே லாகூரில் லாலா லஜபதி ராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சாண்டர்சை சுட்டுக் கொன்று தூக்கில் மாண்ட பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோருடைய கூட்டாளிகள் சிலரையும் திருச்சி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். தமிழ்நாட்டு சுதந்திரப் போர் கைதிகளுடன் அந்தப் புரட்சிக்காரர்களுக்கு நட்பு ஏற்பட்டு தங்களுடைய புரட்சி வித்தை அவர்கள் மனங்களிலும் விதைத்து விட்டனர் அவர்கள். அவர்கள் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வரலாற்றையும், வேறு சில புரட்சி நூல்களையும் தமிழ்நாட்டு தியாகிகளிடம் கொடுத்துப் படிக்கச் செய்தனர். விளைவு, இங்கும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது.

சிறைக்குள்ளே இந்த அரசியல் கைதிகள் கூடி விவாதிக்கத் தொடங்கினர். அவர்களில் சிலர், கம்யூனிஸ்ட் ப.ஜீவானந்தம், நெல்லை வீரபாகு பிள்ளை, தூத்துக்குடி சங்கரநாராயணன் (இவரும் கம்யூனிஸ்ட்) கொடுமுடி ராஜகோபாலன், கே. அருணாசலம் ஆகியோர் முக்கியமானவர்கள். சிறையிலிருந்த புரட்சிக் காரர்கள் இவர்களுக்கு வெடிகுண்டு செய்யும் விதத்தையும் சொல்லிக் கொடுத்தனர். அந்த சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சென்னை சிறையில் தங்கி உடல் நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி பல புரட்சிக்காரர்களின் கூட்டுறவால் சில இளைஞர்கள் சென்னை தங்கசாலைத் தெருவில் ஒரு வீட்டில் இரகசியமாகக் கூடித் தங்கள் எதிர்கால திட்டங்களைத் தயார் செய்து கொண்டார்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட காவல்துறையினர் ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த மூர் மார்க்கெட்டில் ஒரு தொண்டனை கைது செய்து விட்டனர். இந்தப் புரட்சிக் கூட்டத்தின் துரதிருஷ்டம், அப்போது அந்த இளைஞன் வசம் ஒரு துப்பாக்கி இருந்தது, ஆகையால் மொத்த கூட்டத்துக்கும் வலை விரிக்கப்பட்டது.

அப்போதைய போலீஸ் வழக்கப்படி மாட்டிக் கொண்டவனை நன்றாகத் துவைத்தெடுத்து பலரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்து விட்டனர். மொத்தம் பத்தொன்பது பேர், அதில் புரட்சிக்காரர் முகுந்தலால் சர்க்கார் என்பாரும் அடக்கம்.

ஏராளமான புரட்சிக்காரர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டனர். ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு நீதிபதியாக டி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பார் இருந்தார். சிந்தாதரிப்பேட்டையில் இருந்த ஒரு நூலகம் தற்காலிக நீதிமன்றமாகச் செயல்பட்டது.  இதில் இரண்டு பேர் அப்ரூவராக மாறினர்; இல்லை இல்லை மாறும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர். குற்றவாளிகளுக்கு பல தேசபக்த வக்கீல்கள் வாதாடினர். குற்றவாளிகளுக்கு வழக்கு நடத்தவென்று ஒரு குழு அமைக்கப்பட்டது, அதன் செயலாளர் பின்னாளில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான பி.ராமமூர்த்தி.
வழக்கில் சுமார் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றியது. 1934 ஜனவரி 8ஆம் நாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி பர்க்கென்ஹாம் வால்ஷ் என்பார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ராஜாங்க பிராசிகியூட்டர் கே.பி.எம்.மேனன் என்பார். எதிரிகள் சார்பில் ஆந்திர கேசரி டி.பிரகாசம், பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ப.ராஜகோபாலாச்சாரியார், பி.நாராயண குரூப் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போதெல்லாம் ஜூரிகள் முறை நடைமுறையில் இருந்தது. அதன்படி இந்த வழக்கில் ஜூரிகள் எதிரிகள் அனைவரும் குற்றவாளிகளே என்று கூறினர். நீதிபதி ஜூரிகளின் கருத்தை ஏற்றுக்கொண்டு அனைவரையும் குற்றவாளிகள் என்று கருதி தீர்ப்பளித்துவிட்டார். பலருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுத்து, ஒரு சிலரை விடுவித்து விட்டார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் பலரும் பல சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் பட்ட துன்பம் சொல்லும் தரமன்று. கோபால சாஸ்திரி என்பார் சிறையில் இறந்தே போனார். பயில்வான் போலிருந்த அவர் வேலூர் சிறையில் கடுமையான வயிற்றுப் போக்கினால் இறந்தார். அதற்கு முன்பு வியாதியின் கொடுமை தாங்காமல் தற்கொலைக்கும் முயன்றார்.

கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூட இயலாத நிலையில் தனித்து விடப்பட்டனர். வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் என்ற குற்றத்துக்காக ரங்கராஜன் என்பார் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை அதிகப்படியாகப் பெற்றார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயம் மகாத்மா காந்தி சென்னைக்கு விஜயம் செய்தார். இந்த வழக்கு விவரங்களை அவர் சேத் ஜெகந்நாத தாஸ் என்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த நேரத்தில் வங்கத்தைச் சேர்ந்த மிட்னாப்பூரில் ஒரு கொலை வழக்கில் ஆஜராகி வாதாடிக் கொண்டிருந்த பிரபலமான பாரிஸ்டர் ஒருவரை இந்த வழக்கில் வாதாடும்படி தான் ஏற்பாடு செய்வதாக காந்திஜி உறுதியளித்தார்.

மகாத்மா காந்தி அகிம்சை முறையில் போராடி வந்தவர். இந்த வழக்கில் கைதான இளைஞர்களோ, அகிம்சை முறைக்கு மாறாக புரட்சிக்காரர்களாக செயல்பட்டார்கள். புரட்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் மீதுதான் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார்கள். இருந்தாலும் அவர்களது நோக்கம் இந்திய சுதந்திரம், அவர்களிடம் இருந்தது தேசபக்தி, ஆகையால் அவர்கள் வழிமுறை எத்தகையதாக இருந்த போதிலும் அவர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று காந்திஜி செயலாற்றினார்.

ஆனாலும், மிட்னாப்பூர் கொலை வழக்கில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த இளைஞனைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் கருதி, தங்களுக்கு அந்த பாரிஸ்டரை அனுப்ப வேண்டாம், ஆந்திர கேசரி தலைமையிலான வழக்கறிஞர் குழு மீது தங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று குற்றவாளி இளைஞர்கள் மறுத்து விட்டனர்.

தண்டனை பெற்ற அனைவரும் அவரவர்க்குக் கிடைத்த தண்டனை காலத்தை சிறைக் கொடுமைகளுக்கிடையில் தாங்கிக் கொண்டு, சிலர் உயிர் தியாகம் செய்தும், சிலர் உடல் நலம் கெட்டும், இறுதியில் தண்டனைக் காலம் முடிந்து 1937ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுதலையாகினர். பின்னரும் இந்த தேச சேவையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். இந்த வழக்கு “சென்னை சதி வழக்கு” என்ற பெயரால் அந்த காலகட்டத்தில் பிரபலமாகப் பேசப்பட்டது. இந்த வழக்கில் சிறைப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி சிலர் தண்டனை பெற்றும், ஒரு சிலர் விடுதலை பெற்றும் தங்கள் பெயர்களை இந்திய சுதந்திரப் போர் தியாகிகள் பட்டியலில் இடம் பெற்று விட்டனர். அவர்கள் அத்தனைக் பேரையும் நாம் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவர்களது பெயர்களையாவது ஒரு முறை உச்சரித்துப் பெருமை கொள்வோம். அவர்கள்:
முகுந்தலால் சர்க்கார், கே.அருணாசலம் (இவர் திருமுல்லைவாயில் சதிவழக்கிலும் பங்கெடுத்தவர், பிந்நாளில் ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதியவர்), டி.கோபால சாஸ்திரி (சிறையில் இறந்து போனவர்), டி.ஆர்.சுப்ரமணியம், பி.ஜோசப், ஜி.லோகநாதன், டி.கண்ணன், சபாபதி, கண்ணாயிரம், எஸ்.ரங்கராஜன், டி.ராமச்சந்திரா, கே.நாராயண நம்பியார், பலராம ரெட்டி, தசரதராம ரெட்டி, ஜி.பாலகிருஷ்ண ரெட்டி, ஜி.காலய்யா ரெட்டி, பட்டணம் பாலி ரெட்டி, பி.பாபிராஜு, சி.ஜகந்நாதன், கானூர் ராமானந்த சவுத்திரி ஆகியோர். வாழ்க இந்தத் தியாகிகளின் புகழ்!


(ஆதாரம்: அரியலூர் சபாபதி எழுதிய திருச்சி மாவட்ட சுதந்திரப் பொன்விழா மலர், கைதிகளில் ஒருவரான எஸ்.ரங்கராஜன் சொல்ல கொடுமுடி ராஜகோபாலன் அவர்களால் எழுதப்பட்டது)



பாஞ்சாலி சபதம்.


                               
          

                        
    (மகாபாரதத்தில் ஒரு காட்சி மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் சாரம்)

(துரியோதனன் அவையில் திரெளபதியை துச்சாதனன் கொண்டு வந்து நிறுத்துகிறான். அப்போது அவள் நிலை)

அறிமுகக் குரல்
திருதராஷ்டிரன் அவையில் ஐவரின் பத்தினி பாஞ்சாலி கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறாள். அவள் ஆடை குலைவுற்று நிற்கிறாள்; அழுது கண்ணீர் வடிக்கிறாள்: ஆவென்று பதறித் துடிக்கிறாள். மாடு போன்ற துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான். கதறி அழுகின்ற அம் மாதரசியின் ஆடையைப் பிடித்து இழுக்கிறான். இதைக் கண்டு பீமனுக்கு வெஞ்சினம் உண்டானது. துயர் மிகுந்து அண்ணன் தருமனை நோக்கிச் சொல்கிறான்)

                                   காட்சி 1.

         (பாத்திரங்கள்:  திரெளபதி, பீமன், தருமன், சகாதேவன், அர்ச்சுனன்)

பீமன்: 
(தருமனைப் பார்த்து) அண்ணே! சூதாட்டம் என்பது நம் சமூகத்தில் இருக்கும் ஒரு தீமைதான். அப்படி சூதாட்டம் நடக்கும் விடுதிகளில் பணிபுரிய பல பெண்கள் இருப்பதுண்டு. ஆனால் சூதாட்டத்தில் பணயப் பொருளாக ஒரு பெண்ணை வைத்ததுண்டா? பெண்களை வைத்துச் சூதாடும் வழக்கம் இங்கே உண்டா? சொல்.
என்ன கருதி திரெளபதியைச் சூதில் பணயமென்று வைத்தாய்? அண்ணே! யாரைப் பணயம் வைத்தாய் தெரிகிறதா? மாதர் குல விளக்கு, அன்பே வாய்ந்த வடிவழகு, பூமி அரசரெலாம் போற்றி வணங்கும் திறலுடையாள்; போரில் புலி போன்ற பாஞ்சால மன்னனின் சுடர் மகளை அண்ணே! நீ சூதில் ஆடி இழந்து விட்டாய்.
அண்ணே! நீ தவறு செய்துவிட்டாய், தர்மத்தைக் கொன்று விட்டாய்.

தருமன்:  
பீமா நான் சொல்வதைச் சற்று கேள்!

பீமன்:  
இந்த மாதரசியை நாம் எப்படிப் பெற்றோம் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? பிறர் அறியாமல் நாம் கவர்ந்து கொண்டு வரவில்லை. சூதாடி இவளை நாம் பெறவில்லை. மாறாக நம் வீரத்தினால் பெற்றோம். கடும் போரில் வெற்றி பெற்று இவளை அடைந்தோம்.

தருமன்:  
எனக்குப் புரிகிறது, பீமா, சற்று அமைதியாக நான் சொல்வதைக் கேள்!
பீமன்: கேட்க இனி என்ன இருக்கிறது. நாம் சக்கரவர்த்திகளாக வாழ்ந்தோம். அந்த பெருமையையும், செல்வாக்கையும் ஒரு கணத்தில் பொக்கென இழந்து நிற்கின்றோம்.
தருமன்: பீமா! உன் கோபம் சரிதான், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேள்.
பீமான்: கேட்க இனி என்ன இருக்கிறது. நாட்டையெல்லாம் சூதில் தொலைத்தாய், அண்ணே! நாங்கள் பொறுத்திருந்தோம், மீட்டும் எமை அடிமைகளாக ஆக்கினாய், அதையும் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அண்ணே! ஒன்றை மட்டும் நாங்கள் மறக்கவில்லை. துருபத ராஜாவின் மகளை, திருஷ்டத்யும்னன் உடன் பிறப்பை சூதாட்டத்தில் இரு பகடையென்று பணயம் வைத்தாய். ஐயோ! இந்த தீயவருக்கு அடிமை என்றாய். அதைப் பொறுப்பது என்னால் இயலாது.

(தம்பி சகாதேவனை நோக்கி:)  
தம்பி! சகாதேவா, எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்து இழந்த நம் அண்ணன் கையை எரித்திடுவோம்.

               (அப்போது இதனைக் கேட்டு அர்ச்சுனன் சொல்கிறான்)

அர்ச்சுனன்: 
பீமா! நீ சொன்ன சொற்களை மனமாரச் சொன்னாயோ? என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? கனமாரும் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்றமென்றாய். உன் மனதில் உருவான கோபம் உன் அறிவைப் புகைத்துவிட்டதோ, திரிலோக நாயகனாம் நம் அண்ணன் தருமனிடம் சினம் கொள்ளல் முறையோ? உனக்கு ஒன்று சொல்வேன். கேள்! நன்றாக நினைவில் வைத்துக் கொள். வாழ்க்கை நெறி இதுதான். “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்” எனும் மருமத்தை நம்மாலே இவ்வுலகம் கற்கும். வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலும் காண்போம். இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

(தன் கை வில்லைக் காட்டி பீமா! இது என்ன தெரியுமா” தனு. வில். இதன் பெயர் காண்டீபம், உனக்குத் தெரியாதா?
                         
                                      காட்சி 2.

                    துரியோதனனின் தம்பி விகர்ணன் சொல்கிறான்:

விகர்ணன்:  
பெண்ணரசி பாஞ்சாலியை சூதில் இழந்தது சரிதான் என்கிறார் பாட்டனார் பீஷ்மர். பெண்ணை அடிமைப்படுத்தலாம் என்ற பாட்டன் பீஷ்மன் கருத்தை நான் ஏற்கமுடியாது. நம் மன்னர் பரம்பரையில் மனைவியரை விலைக்கு எவரும் விற்றதுண்டோ? அல்லது சூதில்தான் எவரும் இழந்ததுண்டோ? விலைமாதர்க்குரிய நீதியை தெய்வத்துக்குப் பொருத்தி பேசுதல் வேண்டா.

கர்ணன்: 
(விகர்ணனை கோபமாகப் பார்த்து) ஏய்! சின்னப் பயலே! உனக்குத்தான் எத்தனைத் துணிச்சல். விவேகம் இல்லாதவனே, அறிவிழந்து பேசுகிறாய். மன்னர் முன்னே எப்படிப் பேசவேண்டுமென்பதைப் புரிந்து கொள்.

கர்ணன்: 
(யாரங்கே! சேவர்களே. அடிமைகள் மார்பில் துணி போர்த்தியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. வந்து பாண்டவர்கள் மேல் அணிந்த அங்கிகளை நீக்குங்கள். தையலாள் பாஞ்சாலி சேலையையும் களைந்திடுவாய் உடனே.

(உடனே பாண்டவர்கள் தங்கள் மேலங்கிகளைக் கீழே போட்டனர். துச்சாதனன் பாஞ்சாலியின் சேலையைப் பிடித்து இழுக்கிறான்.)

பாஞ்சலி: 
தீயவனே! என்ன காரியம் செயிறாய். இதற்கான தண்டனையை நீ நிச்சயம் பெறுவாய். (கண்ணனை நினைத்து கைகூப்பி) ஹரி, ஹரி ஹரி கண்ணா அபயம் அபயம் உனக்கு, என் மானத்தைக் காத்து அருள்புரி.

கண்ணா! காளிங்கன் தலைமீது நடனம் புரிந்த கிருஷ்ணா! வேதப் பொருளே! கையில் சக்கரம் ஏந்திய வீரனே, என் கண்ணீரைத் துடைத்திடுவாய். கண்ணா, விண்ணகப் பொருளே, சோதிக்கெல்லாம் ஜோதியே என் சொல்லைக் கேள், வா என் மானத்தைக் காப்பாற்று. ஹரி, ஹரி, ஹரி, ஹரி.

(துச்சாதனன் துகில் உரிய உரிய அவள் சேலை வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவன் கை சோர்ந்து மயக்கமடைகிறான்) 

தேவர்கள் பூமாரி சொரிந்தார். ஓம் ஓம் ஜய ஜய பாரத சக்தி ஜய ஜய பாரத சக்தி என்ற ஒலி கேட்கிறது.
                               காட்சி 3.
                        திருதராஷ்டிரன் அவை

பீமன்: 
தேவர்களே! கேளுங்கள். உங்கள் மீது ஆணை. பராசக்தி மீது ஆணை, தாமரைப் பூவில் வாழும் பிரம்ம தேவன் மீதாணை. எங்கள் தேவன் கண்ணன் மீது ஆணை. காமனைக் கண்ணால் எரித்த சிவபெருமான் கழல் மீதாணையிட்டுச் சொல்கிறேன்.
எங்கள் பெருமைக்குரிய திரெளபதி தேவியைத் தன் தொடை மீது வந்து இரு சொன்னானே துரியோதனன் அந்த நாய் மகனை இந்த அவையில் இருக்கும் மன்னர்கள் முன்னிலையில் என் தோள் வலியால் யுத்த ரங்கில் அவன் தொடையைப் பிளந்து கொல்வேன்.

அவன் தம்பி சூரத் துச்சாதனன் கடைப்பட்ட தோள்களைப் பிய்ப்பேன். அங்கு பீச்சியடிக்கும் அவன் ரத்தத்தைக் குடிப்பேன். உலகோரே, இவை நடக்கும் காண்பீர்! இது நான் சொல்லும் வார்த்தை இல்லை. தடையற்ற தெய்வத்தின் வார்த்தை. தேவீ! இதனை சாதனை செய்க பராசக்தீ!

அர்ச்சுனன்:  
தேவர்கள் சாட்சியாக நான் செய்யும் சபதம் கேட்பீர் அவையோரே. இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் கொல்வேன். இது விஷ்ணு மேல் ஆணை. எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலடி ஆணை. கார்த்தடங் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும், என் காண்டீப வில்லின் மீதும் ஆணை. ஹே! பூதலமே அப்போது போர்த்தொழில் விந்தைகள் அனைத்தையும் காண்பாய்! இது சத்தியம்.

திரெளபதி:  
(ஓம்! ஓம்! ஓம்! ஒலி பரவிட)  
பராசக்தி மீது ஆணையிட்டு உரைப்பேன். என் துகில் உரிய முயன்ற அந்தப் பாவி துச்சாதனன் உடலினின்றும் பீச்சியடிக்கும் செந்நீர், அந்தப் பாழ் துரியோதனன் தொடை பிளந்து ஊற்றும் குருதி இவை இரண்டையும் கலந்து நெய்யாக என் குழலில் பூசி நறுநெய் குளித்தபின்னேதான் என் குழலை முடிப்பேன், அதுவரை என் கூந்தலை முடியேன் நான். கண்ணன் மீது ஆணை இது.

பின்னணிக் குரல்:  ஓம் ஓம் என்கின்றனர் தேவர். வானமும் ஓம் ஓம் என்று உறுமியது. பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியதாம் சுழற்காற்று. தொடர்ந்து நிகழ்ந்த பல காரியங்களால் பாரதப் போர் நிகழ்ந்தது. தீயோர் மாள, நல்லோர் வாழ, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அருள் கிட்டிய பாண்டவர் நாட்டை பலகாலம் மகிழ்வோடு ஆண்டனர்.
                 பாஞ்சாலி சபதக் காட்சி நிறைவு பெற்றது.



மனோரா கோட்டை.


                       

        

       தஞ்சாவூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் வங்கக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது மனோரா எனும் கோட்டை வடிவ நினைவுச் சின்னம். 1814-15இல் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் 2ஆம் சரபோஜி கட்டிய நினைவுச் சின்னம் இது. ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டுக்கும் இடையே நடந்த கடற்படைப் போரில் இங்கிலாந்தின் நெல்சன் தன் உயிரை பலிகொடுத்து நெப்போலியனைத் தோற்கடித்ததை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் சரபோஜி இதைக் கட்டி முடித்தார். அந்த போர் ஸ்பெயினின் கடற்கரைப் பகுதியான டிரஃபால்கர் எனுமிடத்தில் நடந்தது. அந்தப் போரில் 33 கப்பல்கள் கொண்ட இங்கிலாந்து பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கப்பல் படையுடன் போரிட, போரில் இங்கிலாந்து வெற்றி பெறும் தருணத்தில் ஒரு பீரங்கிக் குண்டு தாக்கி நெல்சன் வீரமரணம் அடைந்தார். எனினும் அவருடைய இங்கிலாந்து படை வெற்றி பெற்றது. அதன் விவரங்கள் இதோ:

        21 அக்டோபர் 1805. இந்த நாள் ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்றுதான் வரலாற்றில் மிக முக்கியமான யுத்தம் இங்கிலாந்தின் கடற்படை தளபதி நெல்சன் தலைமையில் இங்கிலாந்தின் கப்பற்படை பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கூட்டுக் கடற்படைகளை ஸ்பெயின் கடற்கரையோரமுள்ள டிரஃபால்கர் எனுமிடத்தில் போரில் வெற்றி கண்ட நாள்.

       நெப்போலியன் போனபார்ட் பிரான்சின் மாவீரனாகத் திகழ்ந்தவர். இவரை எதிர்த்து ஆங்கிலக் கடற்படை லார்டு நெல்சன் என்பார் தலைமையில் பலமுறை வெற்றி பெற்றது. நெப்போலியன் பிரான்சின் சார்பில் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர். இங்கிலாந்தின் நெல்சன் அடைந்த கடைசி வெற்றி இந்த டிரபால்கர் யுத்த வெற்றிதான். வரலாற்றில் மிகவும் சிறப்பாகப் பேசப்படும் யுத்தம் டிரபால்கர் யுத்தம்.  ஐரோப்பிய கடல் பகுதியில் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குச் சொந்தமான 33 கப்பல்களை நெப்போலியன் பார்த்துவிட்டார். இந்த மாபெரும் கப்பல் அணிவகுப்பைத் தாக்குவதற்குத் திட்டமிட்டு அவர் அக்டோபர் 21ஆம் தேதி தன்னுடைய 27 கப்பல்களை இரு பிரிவுகளாகப் பிரித்து வீரர்களுக்குத் தன் தலைமை கப்பலில் இருந்து ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். அது வரலாற்றில் பிரபலமாக ஆன வரி அது. “ஒவ்வொரு வீரனும் தன் கடமையைச் செய்ய வேண்டுமென்று இங்கிலாந்து எதிர்பார்க்கிறது” என்பதுதான் அது. (England expects that every man will do his duty)

       யுத்தம் தொடங்கியது. ஐந்து மணி நேர போராட்டத்தின் முடிவில் எதிரிகளின் கப்பல் படைகளில் 19 முழுவதுமாக அழிக்கப்பட்டது. ஒரு பிரிட்டிஷ் கப்பல்கூட சேதமடையவில்லை. ஆனால் பிரிட்டிஷ் கடற்படை வீரர்களில் 1500 பேர் யுத்தத்தில் காயமடைந்தோ அல்லது மாண்டு போனார்கள். வெற்றி கட்டத்தை அடையும் நேரத்தில் யுத்தம் கடுமையாக நடந்தது. பிரெஞ்சுக்காரர்களின் பீரங்கிக் குண்டுகளின் துண்டுகள் நெல்சனின் தோள்பட்டையிலும் மார்பிலும் பாய்ந்தன.  உடனடியாக அவரைக் கப்பலின் கீழ்த்தளத்துக்குக் கொண்டு போனார்கள்; அங்கு அரை மணி நேரம் கழித்து போர் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது. அவர் இறக்கும் தருவாயில் தளபதிகள் அவரிடம் தங்கள் படை வெற்றியை நெருங்கிவிட்டது, விரைவில் தங்கள் படை வெற்றியடைந்து விடும் என்று சொன்னார்கள். அதனைக் கேட்டு நெல்சன் சொன்னார்: “இப்போது நாம் திருப்தியடைகிறேன். இறைவன் சித்தம், நான் என் கடமையைச் செய்து விட்டேன்”.

        டிரபால்கர் யுத்தத்தின் முடிவில் இனி நெப்போலியனால் இங்கிலாந்தின் மீது படையெடுக்க முடியாது என்கிற நிலைமை உருவானது. நெல்சனை மாவீரனாகவும், இங்கிலாந்தின் மானத்தைக் காப்பாற்றியவராகவும் மக்கள் புகழாரம் சூட்டினார்கள். அவருடைய சவ ஊர்வலம் லண்டனில் உள்ள செயிண்ட் பால் கதீட்ரலில் நடந்தது. பிரம்மாண்டமான அணிவகுப்பு அது. இங்கிலாந்தில் லண்டன் மாநகரின் மத்தியில் ஒரு முக்கியமான இடத்துக்கு “டிரபால்கர் ஸ்கொயர்” (டிரபால்கர் சதுக்கம்) என்று பெயரிடப்பட்டது. அது தவிர இங்கிலாந்து எங்கும் பல தெருக்களுக்கு அவருடைய பெயர் இடப்பட்டது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகத்தான், பிரிட்டிஷ் விசுவாசியான மன்னர் சரபோஜி நம் தென்னிந்திய கடற்கரையில் மனோரா எனும் கட்டடக் கோட்டையைக் கட்டி நினைவுத் தலமாக உருவாக்கினார். 

       இந்த மனோரா கோட்டை எட்டடுக்கு கொண்ட அறுகோண வடிவ கோபுரம். இதன் உயரம் 23 மீட்டர். வங்கக் கடலின் அலைகளுக்கிடையில் கரையில் இந்த கோட்டை பசுமை நிறைந்த கடற்கரையில் நிமிர்ந்து நிற்கிறது. காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் அழகான சூழ்நிலை. மனோரா எனும் பெயர் “மினரெட்” எனும் சொல்லில் இருந்து வந்தது. மினரெட் (Minaraet) என்றால் மசூதியின் மெல்லிய உயர்ந்த கோபுரம் அல்லது ஸ்தூபி என்பதாகும். அந்த வடிவத்தில் இது அமைந்திருப்பதால் இதனை “மனோரா” என்றனர்.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஏன், தென்னகத்து சுதேச சமஸ்தானாதிபதிகள் அனைவருமே ஆங்கிலேயர்களின் பக்தர்கள். அவர்கள் வெற்றியை இவர்கள் கொண்டாடுவதும், தோல்விகளைக் கண்டு இவர்கள் துவண்டு போவதும் வழக்கமான செயல்பாடுகள் தான். அப்படிப்பட்ட நிலையில் ஆங்கிலேயர்கள் வலிமை மிக்க பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டைத் தோற்கடித்தார்கள் என்றால் தஞ்சை மராத்தியர்களும் அந்த வெற்றியைக் கொண்டாடமல் இருக்க முடியுமா. அவர்களுக்குப் பாராட்டாக, அல்லது நன்றிக்கடனாக இவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு உட்பட்ட இந்த கடற்பகுதியில் இப்படிப்பட்டதொரு கோபுரத்தை நிர்மாணித்தார்கள்.

       2004ஆம் வருஷம் அடித்த சுனாமியில் கடற்கரையோரமிருந்த பல இடங்கள் அழிந்து போயின. அப்போது இந்த மனோராவும் சேதமடைந்து போயிற்று. 2007இல் சுற்றுலாத் துறை இந்த நினைவுச் சின்னத்தை சீர்படுத்தி மேம்படுத்தவும், சில அதிகப்படியான வசதிகள், குறிப்பாக பூங்கா, குழந்தைகள் விளையாடுமிடம் ஆகியவைகளை இங்கே அமைத்திட தீர்மானித்தார்கள். அதன்படி இப்போது மேம்பாடு அடைந்த மனோராவை நீங்கள் பார்க்கிறீர்கள். தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் 1814-15 காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் நெப்போலியனைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். ஆண்டு 1815. இந்த கட்டடத்தில் மராத்திய மன்னர் வந்தால் வந்து தங்கவும், கடற்கரை ஓரத்தில் ஒரு லைட் ஹவுசாகவும் பயன்பட்டது. இங்குள்ள கல்வெட்டில் இந்த வீர தீர வெற்றியைக் கொண்டாடும் வாசகங்கள் உள்ளன.
இந்த நினைவுச் சின்னம் இருக்குமிடம் மல்லிப்பட்டினம். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. சரபேந்திரராஜபட்டினம் என்பது. மினார் அல்லது மினரட் எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் கோபுரம் எனலாம். இந்த கோபுர அமைப்பைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும் அதற்கடுத்து அகழியும் அமைந்து ஒரு கோட்டையைப் போல தோற்றமளிக் கிறது. இங்கு வளைந்த மேற்பகுதியுடன் கூடிய ஜன்னல்கள், வட்டமாய் சுற்றி ஏறும் மாடிப்படி, ஒரு தளத்துக்கும் மறு தளத்துக்குமிடையே தாழ்வாரம் ஆகியவை உண்டு.

        இதன் புனரமைப்பு 2000இல் தொடங்கி 2003இல் முடிந்தது. சுற்றுலாப் பயணிகள் முதல் இரு தளங்கள் வரைதான் செல்லலாம். தஞ்சை மாவட்டத்தில் இரு ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது.


Thursday, March 22, 2018

காஞ்சி சுவாமிகளின் மறைவுக்கு இரங்கல்


                            
                (தஞ்சை வடக்கு வீதி ஜெயேந்திரர் பள்ளியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசியது)

       ஆச்சார்யாளைப் பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தபோது ஒன்று நினைவுக்கு வந்தது. நம் ஊரில் ஸ்ரீவாஞ்சிநாத ஐயர் என்பவர் “தஞ்சை வைதீகஸ்ரீ” என்றொரு மாதப்பத்திரிகை நடத்தி வந்தார். அதில் நான் காஞ்சி மடத்தை அலங்கரித்த பெரியோர்கள் வரலாற்றை “காஞ்சி மடத்தை அலங்கரித்த மகான்கள்” என்ற தலைப்பில் 70 பேரைப் பற்றியும் எழுதியது நினைவுக்கு வந்தது. இங்கு இரங்கல் கூட்டத்தில் பேசவும் வந்துவிட்டேன். 

        நான் சிறந்த பக்திமான் அல்ல. ஆச்சார்யாளிடம் அதீத பக்தி கொண்ட மடத்தின் தீவிரமான சீடனுமல்ல. ஆனால் விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் காஞ்சி மடாதிபதியாக இருப்பவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதைகளைத் தவறாமல் செய்துகொண்டு, திருமண பத்திரிகைகளில் அவர்கள் ஆசியோடு என்றும் போட்டுக் கொண்டு செயல்படும் ஒரு சாதாரணன் – சாமானியன். ஒரு சாமானியனால்தான் எதார்த்த நிலையைக் காணவோ, கண்டதை விண்டுரைக்கவோ முடியும். இதில் விருப்பு வெறுப்பு இருக்காது; உள்ளதை உள்ளபடி சொல்ல முடியும். அந்த நிலையில்தான் காஞ்சி மடத்தின் 69ஆம் ஆச்சார்யாரான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஒரு பாமரனின் பார்வையில் நான் கண்டவற்றைச் சொல்ல விழைகிறேன்.

      காஞ்சி ஆச்சார்யார் 69ஆவது மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊரின் பெயர் “இருள்நீக்கி”. இவர் வாழ்க்கையில் பிறருக்கு இருள் நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைந்த பகுதிக்கு வழிகாட்டவிருக்கிறார் என்பதை உணர்ந்தே இறைவன் இவரை அந்தப் பெயர் உடைய ஊரில் பிறக்க வைத்தாரோ என்னவோ? இருக்கலாம். இறைவன் லீலைகளை யாரே உணர்வார்!

      1935 ஜூலை 18இல் அவதரித்த இவருடைய மாவட்டத்திலேயே 1937 ஜூலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த எனக்கு இவரது 19ஆம் வயதில் மகாபெரியவர் சந்நியாசம் வழங்கி காஞ்சி மடத்தின் வாரிசாக நியமித்த நாளில் இருந்து இவரைப் பற்றி ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் சொல்வார்கள், இவரது இளமைப் பருவத்தில் இவருக்கு தீக்ஷை கொடுக்குமுன்பாக மகாபெரியவர் இவரிடம் இருந்த மூன்று சக்திகளை உணர்ந்திருந்தார் என்று, அவை ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம், ஜல ஆகர்ஷணம் என்பார்கள். ஜன ஆகர்ஷணம் என்பது மக்களைக் கவரும் சக்தி, தன ஆகர்ஷணம் என்பது மடத்தின் சொத்துக்களைக் காவந்து செய்து அதனை மேலும் வளரச் செய்வது, ஜல ஆகர்ஷணம் என்பது, மழை பெய்யாத இடங்களுக்கு இவர் சென்றால் அங்கெல்லாம் மழை பெய்யும் என்பது. இந்த மழை ராசி பலருக்கு உண்டு. நம் வரலாற்றில் மராத்திய ராஜா சரபோஜிக்குப் போட்டியாக பதவிக்கு வந்த அமரசிம்மனுக்கு இந்த ராசி உண்டு. மழை இல்லாத இடங்களுக்கு அவர் போனால் அங்கு போதும் போதும் என்கிற அளவுக்கு மழை பெய்யும் என்கிறது மராத்தியர் வரலாறு.

      மடாதிபதிகள் கால்நடையாக ஊர் ஊராகச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், இவருக்கிருந்த அதிக பணிகள் காரணமாக இவர் காரில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதை சிலர் விமர்சனம் செய்த போதும், வளர்ந்து வரும் நமது சமுதாய அமைப்பில் கார்ப்பயணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. கால் நடையில் செல்வதாக இருந்தால் இவர் பயணம் செய்திருக்கும் தூரத்தில் நூற்றில் ஒரு பங்குகூட பயணம் செய்திருக்க முடியாது. இவர் புகழுக்கு ஆசைப்பட்டவர் இல்லை; ஆனால் இவர் ஆற்றிய தொண்டுகள் காரணமாக புகழ் இவர் இருக்குமிடம் தேடி வந்து அடைந்தது என்று சொல்வது சரியாக இருக்கும்.

      மொழிப் பிரச்சனையில் இவரது வெளிப்படையான அறிவிப்பு வியந்து பாராட்டத் தக்கது. பன்மொழி பேசும் மக்கள் மத்தியில் பழகவேண்டிய சூழல் அமைந்த இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு, உரக்கச் சொன்னார், சம்ஸ்கிருதம் என் தந்தை மொழி, தமிழ் என் தாய் மொழி என்று. இதையெல்லாம் நாம் கூர்ந்து கவனித்திருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை.

      1994 மார்ச் 22ஆம் நாள் இவர் 69ஆவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இமயம் போன்ற புகழின் மலையாக பெரியவர் இருந்த இடத்தில் இவர் பீடத்தில் அமர்ந்தபோது இவரது செயல்பாடுகள் எப்படியிருக்கும், பெரியவரின் நிழலில் இவர் ஒளி மங்கித்தான் தெரிவாரோ என்றெல்லாம் சிலர் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சற்றும் குறைவின்று இவரும் அந்த பீடத்தின் பெருமைகளைக் கட்டிக் காப்பாற்றியதோடு, அதன் வீச்சையும் அதிக மக்களுக்கு, அதிகமான இடங்களுக்கு, அதிகமான துறைகளுக்கு விரிவடையச் செய்ததைக் கண்டோம்.

      மடம் என்பது ஆன்மீகத்தோடு நின்றுவிடுவதல்ல; மக்களின் ஆதாரப் பிரச்சினையான சமூக சூழல் இவருக்கு முக்கியமாகப் பட்டது. அங்குதான் இவர் மடத்தையும் சமூகத்தையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டார். ஜன் கல்யாண், ஜன் ஜாக்ரன் எனும் அமைப்புகளை ஏற்படுத்தி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உதவிக் கரம் நீட்டத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் நான் நேரில் பார்த்த ஒரு நிகழ்ச்சியை சமீபத்தில் அவர் அமரரான அன்று “முகநூலில்” பதிவிட்டிருந்தேன். பலர் படித்தனர். அது: சுவாமிகள் பட்டுக்கோட்டை விஜயம் என்ற செய்தி கேட்டு, நானும் இன்னும் சில நண்பர்களும் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை சென்றடைந்தோம். அங்கு சின்னக்கடைத்தெருவில் இருந்த மணிக்கூண்டு அருகே மக்கட்கூட்டம் பூர்ணகும்பம் ஆகியவைகளோடு காத்திருந்தார்கள். விசாரித்ததில் சுவாமிகள் மதுக்கூரிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். நாங்கள் கண்டியன் தெரு வழியாக மதுக்கூர் சாலையில் நடந்து சென்றோம். எதிரில் ஒரு வண்டியில் சுவாமிகளை உட்காரவைத்து சீடர்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த கூட்டத்தோடு சேர்ந்து வந்தோம். ஊரின் எல்லையில் கண்டியன் தெருவுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக சாலையில் பெருங்கூட்டம் கூடி தாரை தப்பட்டை வாத்திய முழக்கத்தோடு காத்திருந்தார்கள். அதில் “நாடிமுத்து” என்பவர் நிறைய திருநீறு பூசி, மேல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பயபக்தியோடு சுவாமிகளை எதிர்கொண்டு வரவேற்றார். அது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி. அந்த நாடிமுத்துவை எனக்கு முன்பே தெரியும். அவர் சுவாமிகளின் பரிவாரத்தை நிறுத்திவிட்டு அவரை வணங்கி “சாமி, எங்க தெருவுக்கு வந்து ஆசி வழங்கணும். நாங்க கட்டப்போகிற பிள்ளையார் கோயில் வேலைய தொடங்கி வைக்கணும்” என்று வேண்ட, சுவாமிகள், ஆகா, பேஷா செய்யலாமே என்று விறுவிறுவென்று அங்கு செல்லத் தொடங்கினார். நாங்களும் சென்றோம். அங்கு தெருவெல்லாம் நீர் தெளித்து கோலம் போட்டு, தோரணங்கள் கட்டி, பெண்கள் தலைக்கு நீராடி தலையில் துண்டால் கட்டியிருந்ததைக் கண்டோம். தெருக்கோடியில் ஓரிடத்தில் பிள்ளையார் கோயில் கட்ட செங்கற்கள். ஜன் கல்யாண் இயக்கத்தில் அங்கெல்லாம் சுவாமியை யார் வேண்டுமானாலும் தொட்டு பூஜை செய்யவும், தீப ஆரத்தி எடுக்கவும் அனுமதி உண்டு. அதை சுவாமிகள் தொடங்கி வைத்துவிட்டு, அவ்வூரின் பெரிய தலைவரான நாடிமுத்துப் பிள்ளை அவர்களின் எஸ்டேட் பங்களா எனுமிடத்தில் தங்குவதற்கு சுவாமிகள் சென்றார். அப்போது சுவாமிகளின் இந்த செயல் ஒரு புரட்சியாகவே பட்டது.

      2000ஆம் ஆண்டில் நான் குடும்பத்தோடு காசிக்குச் சென்றிருந்தேன். அங்கு அனுமான்காட் எனுமிடத்தில் ஒரு கணபாடிகள் இல்லத்தில் தங்கி இருந்தோம். அருகிலுள்ள சங்கர மடத்துக்கு ஸ்ரீசுவாமிகள் வந்திருப்பதாக அறிந்தேன். அங்கு வடநாட்டு மக்கள் அளித்த வரவேற்பையும், மரியாதையும் நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கும் ஒரு காமாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

      1987இல் இவர் சமுதாயப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமென்கிற எண்ணத்தில் மடத்தின் பணிகள் தன்னைக் கட்டிப்போட்டு விடும் என்று எண்ணியோ என்னவோ, மடத்தை விட்டு நீங்கிச் சென்றார். அவரை தலைக்காவேரியில் கண்டு அவரை மீண்டும் காஞ்சி மடத்துக்கு அழைத்து வந்தவர் என்னுடைய தாய்மாமா அரக்கோணம் ராஜகோபால ஐயர் என்பார், அவர் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்தார்.

      2004இல் சுவாமிகளுக்கு ஒரு மிகப்பெரிய சோதனை நேர்ந்தது. ஒரு வழக்கில் இவர் கைதான சமயம் இந்து சமுதாயமே அச்சத்தில் உறைந்து போனது. ஆனால் முகத்தில் எந்தவித சலனமோ, அச்சமோ, முணுமுணுப்போ இல்லாமல் சிறைப்பட்ட போதுமட்டுமல்ல, அதன் பிறகு தீர்ப்பு வரும் வரையிலும், அவர் இருந்த காட்சி அவரது நிலைத்த ஆழ்மனத்தின் வெளிப்பாடகவும், மன உறுதியின் எடுத்துக் காட்டாகவும் பார்க்க முடிந்தது.

      1980இல் சென்னை தாம்பரத்தில் இந்து மிஷன் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது இவருடைய சமுதாயப் பணிகள் அதுமுதல் விரிவடையத் தொடங்கியது. இப்போது இதன் கீழ் 44 மருத்துவ மனைகள், சாதாரணமான விஷயமா? ஒரு அரசு செய்யவேண்டிய செயல், அல்லது ஒரு கார்ப்போரேட் நிறுவனம் செய்யவேண்டிய செயலை ஒரு இந்து மடம் செய்கிறது என்றால் அது நமக்குத்தான் பெருமை. இது தவிர Child Trust Hospital, ஆயுர்வேத டீம்டு யுனிவர்சிட்டி, ஐம்பதுக்கும் மேற்பட்ட வேத பாடசாலைகள் இவைகள் எல்லாம் அசாதரணமான செயல்பாடுகள். அத்தனையும் இவருடைய Brain Child என்று சொல்லலாம். எத்தனை இசைக் கலைஞர்கள் காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் அவரவர் தொழிலில் முன்னேற்றத்துக்கான வழிமுறைகள்.

      பொதுவாக மதத் தலைவர்கள் உள்ளுணர்வில் ஆழ்ந்திருப்பார்கள், இவரோ மக்கள் மனங்களில் வாழ்ந்திருந்தார். ஆன்மீகவாதிகள் ஸ்பிரிச்சுவல் வாழ்வில் ஆழ்ந்திருப்பார்கள், இவரோ சமுதாய நல்வாழ்வில் ஆர்வம் காட்டி செயல்பட்டார். யாரும் தொடத் தயங்கும் அயோத்யா பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு பேச்சு நடத்தினார்.  ஆதி சங்கரருக்குப் பிற்கு வேறு எவரும் செய்திராதபடி இவர் கைலாஷ், மானசரோவர் யாத்திரை செய்து வந்தார்.    
 
      அவருடைய மறைவு இந்து சமுதாயத்துக்கு, கீழ்தட்டு மக்களுக்கு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பின்தங்கியிருக்கும் பிரிவினர்களுக்கு, அத்தனை ஏன் நம் எல்லோருக்குமே பேரிழப்பு என்று சொல்லி அவருடைய நினைவுக்கு மனமாற அஞ்சலி செய்து என் உரையை நிறைவு செய்கிறேன்.