பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, March 22, 2018

காஞ்சி சுவாமிகளின் மறைவுக்கு இரங்கல்


                            
                (தஞ்சை வடக்கு வீதி ஜெயேந்திரர் பள்ளியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசியது)

       ஆச்சார்யாளைப் பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தபோது ஒன்று நினைவுக்கு வந்தது. நம் ஊரில் ஸ்ரீவாஞ்சிநாத ஐயர் என்பவர் “தஞ்சை வைதீகஸ்ரீ” என்றொரு மாதப்பத்திரிகை நடத்தி வந்தார். அதில் நான் காஞ்சி மடத்தை அலங்கரித்த பெரியோர்கள் வரலாற்றை “காஞ்சி மடத்தை அலங்கரித்த மகான்கள்” என்ற தலைப்பில் 70 பேரைப் பற்றியும் எழுதியது நினைவுக்கு வந்தது. இங்கு இரங்கல் கூட்டத்தில் பேசவும் வந்துவிட்டேன். 

        நான் சிறந்த பக்திமான் அல்ல. ஆச்சார்யாளிடம் அதீத பக்தி கொண்ட மடத்தின் தீவிரமான சீடனுமல்ல. ஆனால் விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் காஞ்சி மடாதிபதியாக இருப்பவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதைகளைத் தவறாமல் செய்துகொண்டு, திருமண பத்திரிகைகளில் அவர்கள் ஆசியோடு என்றும் போட்டுக் கொண்டு செயல்படும் ஒரு சாதாரணன் – சாமானியன். ஒரு சாமானியனால்தான் எதார்த்த நிலையைக் காணவோ, கண்டதை விண்டுரைக்கவோ முடியும். இதில் விருப்பு வெறுப்பு இருக்காது; உள்ளதை உள்ளபடி சொல்ல முடியும். அந்த நிலையில்தான் காஞ்சி மடத்தின் 69ஆம் ஆச்சார்யாரான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஒரு பாமரனின் பார்வையில் நான் கண்டவற்றைச் சொல்ல விழைகிறேன்.

      காஞ்சி ஆச்சார்யார் 69ஆவது மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊரின் பெயர் “இருள்நீக்கி”. இவர் வாழ்க்கையில் பிறருக்கு இருள் நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைந்த பகுதிக்கு வழிகாட்டவிருக்கிறார் என்பதை உணர்ந்தே இறைவன் இவரை அந்தப் பெயர் உடைய ஊரில் பிறக்க வைத்தாரோ என்னவோ? இருக்கலாம். இறைவன் லீலைகளை யாரே உணர்வார்!

      1935 ஜூலை 18இல் அவதரித்த இவருடைய மாவட்டத்திலேயே 1937 ஜூலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த எனக்கு இவரது 19ஆம் வயதில் மகாபெரியவர் சந்நியாசம் வழங்கி காஞ்சி மடத்தின் வாரிசாக நியமித்த நாளில் இருந்து இவரைப் பற்றி ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் சொல்வார்கள், இவரது இளமைப் பருவத்தில் இவருக்கு தீக்ஷை கொடுக்குமுன்பாக மகாபெரியவர் இவரிடம் இருந்த மூன்று சக்திகளை உணர்ந்திருந்தார் என்று, அவை ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம், ஜல ஆகர்ஷணம் என்பார்கள். ஜன ஆகர்ஷணம் என்பது மக்களைக் கவரும் சக்தி, தன ஆகர்ஷணம் என்பது மடத்தின் சொத்துக்களைக் காவந்து செய்து அதனை மேலும் வளரச் செய்வது, ஜல ஆகர்ஷணம் என்பது, மழை பெய்யாத இடங்களுக்கு இவர் சென்றால் அங்கெல்லாம் மழை பெய்யும் என்பது. இந்த மழை ராசி பலருக்கு உண்டு. நம் வரலாற்றில் மராத்திய ராஜா சரபோஜிக்குப் போட்டியாக பதவிக்கு வந்த அமரசிம்மனுக்கு இந்த ராசி உண்டு. மழை இல்லாத இடங்களுக்கு அவர் போனால் அங்கு போதும் போதும் என்கிற அளவுக்கு மழை பெய்யும் என்கிறது மராத்தியர் வரலாறு.

      மடாதிபதிகள் கால்நடையாக ஊர் ஊராகச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், இவருக்கிருந்த அதிக பணிகள் காரணமாக இவர் காரில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதை சிலர் விமர்சனம் செய்த போதும், வளர்ந்து வரும் நமது சமுதாய அமைப்பில் கார்ப்பயணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. கால் நடையில் செல்வதாக இருந்தால் இவர் பயணம் செய்திருக்கும் தூரத்தில் நூற்றில் ஒரு பங்குகூட பயணம் செய்திருக்க முடியாது. இவர் புகழுக்கு ஆசைப்பட்டவர் இல்லை; ஆனால் இவர் ஆற்றிய தொண்டுகள் காரணமாக புகழ் இவர் இருக்குமிடம் தேடி வந்து அடைந்தது என்று சொல்வது சரியாக இருக்கும்.

      மொழிப் பிரச்சனையில் இவரது வெளிப்படையான அறிவிப்பு வியந்து பாராட்டத் தக்கது. பன்மொழி பேசும் மக்கள் மத்தியில் பழகவேண்டிய சூழல் அமைந்த இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு, உரக்கச் சொன்னார், சம்ஸ்கிருதம் என் தந்தை மொழி, தமிழ் என் தாய் மொழி என்று. இதையெல்லாம் நாம் கூர்ந்து கவனித்திருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை.

      1994 மார்ச் 22ஆம் நாள் இவர் 69ஆவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இமயம் போன்ற புகழின் மலையாக பெரியவர் இருந்த இடத்தில் இவர் பீடத்தில் அமர்ந்தபோது இவரது செயல்பாடுகள் எப்படியிருக்கும், பெரியவரின் நிழலில் இவர் ஒளி மங்கித்தான் தெரிவாரோ என்றெல்லாம் சிலர் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சற்றும் குறைவின்று இவரும் அந்த பீடத்தின் பெருமைகளைக் கட்டிக் காப்பாற்றியதோடு, அதன் வீச்சையும் அதிக மக்களுக்கு, அதிகமான இடங்களுக்கு, அதிகமான துறைகளுக்கு விரிவடையச் செய்ததைக் கண்டோம்.

      மடம் என்பது ஆன்மீகத்தோடு நின்றுவிடுவதல்ல; மக்களின் ஆதாரப் பிரச்சினையான சமூக சூழல் இவருக்கு முக்கியமாகப் பட்டது. அங்குதான் இவர் மடத்தையும் சமூகத்தையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டார். ஜன் கல்யாண், ஜன் ஜாக்ரன் எனும் அமைப்புகளை ஏற்படுத்தி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உதவிக் கரம் நீட்டத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் நான் நேரில் பார்த்த ஒரு நிகழ்ச்சியை சமீபத்தில் அவர் அமரரான அன்று “முகநூலில்” பதிவிட்டிருந்தேன். பலர் படித்தனர். அது: சுவாமிகள் பட்டுக்கோட்டை விஜயம் என்ற செய்தி கேட்டு, நானும் இன்னும் சில நண்பர்களும் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை சென்றடைந்தோம். அங்கு சின்னக்கடைத்தெருவில் இருந்த மணிக்கூண்டு அருகே மக்கட்கூட்டம் பூர்ணகும்பம் ஆகியவைகளோடு காத்திருந்தார்கள். விசாரித்ததில் சுவாமிகள் மதுக்கூரிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். நாங்கள் கண்டியன் தெரு வழியாக மதுக்கூர் சாலையில் நடந்து சென்றோம். எதிரில் ஒரு வண்டியில் சுவாமிகளை உட்காரவைத்து சீடர்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த கூட்டத்தோடு சேர்ந்து வந்தோம். ஊரின் எல்லையில் கண்டியன் தெருவுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக சாலையில் பெருங்கூட்டம் கூடி தாரை தப்பட்டை வாத்திய முழக்கத்தோடு காத்திருந்தார்கள். அதில் “நாடிமுத்து” என்பவர் நிறைய திருநீறு பூசி, மேல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பயபக்தியோடு சுவாமிகளை எதிர்கொண்டு வரவேற்றார். அது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி. அந்த நாடிமுத்துவை எனக்கு முன்பே தெரியும். அவர் சுவாமிகளின் பரிவாரத்தை நிறுத்திவிட்டு அவரை வணங்கி “சாமி, எங்க தெருவுக்கு வந்து ஆசி வழங்கணும். நாங்க கட்டப்போகிற பிள்ளையார் கோயில் வேலைய தொடங்கி வைக்கணும்” என்று வேண்ட, சுவாமிகள், ஆகா, பேஷா செய்யலாமே என்று விறுவிறுவென்று அங்கு செல்லத் தொடங்கினார். நாங்களும் சென்றோம். அங்கு தெருவெல்லாம் நீர் தெளித்து கோலம் போட்டு, தோரணங்கள் கட்டி, பெண்கள் தலைக்கு நீராடி தலையில் துண்டால் கட்டியிருந்ததைக் கண்டோம். தெருக்கோடியில் ஓரிடத்தில் பிள்ளையார் கோயில் கட்ட செங்கற்கள். ஜன் கல்யாண் இயக்கத்தில் அங்கெல்லாம் சுவாமியை யார் வேண்டுமானாலும் தொட்டு பூஜை செய்யவும், தீப ஆரத்தி எடுக்கவும் அனுமதி உண்டு. அதை சுவாமிகள் தொடங்கி வைத்துவிட்டு, அவ்வூரின் பெரிய தலைவரான நாடிமுத்துப் பிள்ளை அவர்களின் எஸ்டேட் பங்களா எனுமிடத்தில் தங்குவதற்கு சுவாமிகள் சென்றார். அப்போது சுவாமிகளின் இந்த செயல் ஒரு புரட்சியாகவே பட்டது.

      2000ஆம் ஆண்டில் நான் குடும்பத்தோடு காசிக்குச் சென்றிருந்தேன். அங்கு அனுமான்காட் எனுமிடத்தில் ஒரு கணபாடிகள் இல்லத்தில் தங்கி இருந்தோம். அருகிலுள்ள சங்கர மடத்துக்கு ஸ்ரீசுவாமிகள் வந்திருப்பதாக அறிந்தேன். அங்கு வடநாட்டு மக்கள் அளித்த வரவேற்பையும், மரியாதையும் நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கும் ஒரு காமாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

      1987இல் இவர் சமுதாயப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமென்கிற எண்ணத்தில் மடத்தின் பணிகள் தன்னைக் கட்டிப்போட்டு விடும் என்று எண்ணியோ என்னவோ, மடத்தை விட்டு நீங்கிச் சென்றார். அவரை தலைக்காவேரியில் கண்டு அவரை மீண்டும் காஞ்சி மடத்துக்கு அழைத்து வந்தவர் என்னுடைய தாய்மாமா அரக்கோணம் ராஜகோபால ஐயர் என்பார், அவர் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்தார்.

      2004இல் சுவாமிகளுக்கு ஒரு மிகப்பெரிய சோதனை நேர்ந்தது. ஒரு வழக்கில் இவர் கைதான சமயம் இந்து சமுதாயமே அச்சத்தில் உறைந்து போனது. ஆனால் முகத்தில் எந்தவித சலனமோ, அச்சமோ, முணுமுணுப்போ இல்லாமல் சிறைப்பட்ட போதுமட்டுமல்ல, அதன் பிறகு தீர்ப்பு வரும் வரையிலும், அவர் இருந்த காட்சி அவரது நிலைத்த ஆழ்மனத்தின் வெளிப்பாடகவும், மன உறுதியின் எடுத்துக் காட்டாகவும் பார்க்க முடிந்தது.

      1980இல் சென்னை தாம்பரத்தில் இந்து மிஷன் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது இவருடைய சமுதாயப் பணிகள் அதுமுதல் விரிவடையத் தொடங்கியது. இப்போது இதன் கீழ் 44 மருத்துவ மனைகள், சாதாரணமான விஷயமா? ஒரு அரசு செய்யவேண்டிய செயல், அல்லது ஒரு கார்ப்போரேட் நிறுவனம் செய்யவேண்டிய செயலை ஒரு இந்து மடம் செய்கிறது என்றால் அது நமக்குத்தான் பெருமை. இது தவிர Child Trust Hospital, ஆயுர்வேத டீம்டு யுனிவர்சிட்டி, ஐம்பதுக்கும் மேற்பட்ட வேத பாடசாலைகள் இவைகள் எல்லாம் அசாதரணமான செயல்பாடுகள். அத்தனையும் இவருடைய Brain Child என்று சொல்லலாம். எத்தனை இசைக் கலைஞர்கள் காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் அவரவர் தொழிலில் முன்னேற்றத்துக்கான வழிமுறைகள்.

      பொதுவாக மதத் தலைவர்கள் உள்ளுணர்வில் ஆழ்ந்திருப்பார்கள், இவரோ மக்கள் மனங்களில் வாழ்ந்திருந்தார். ஆன்மீகவாதிகள் ஸ்பிரிச்சுவல் வாழ்வில் ஆழ்ந்திருப்பார்கள், இவரோ சமுதாய நல்வாழ்வில் ஆர்வம் காட்டி செயல்பட்டார். யாரும் தொடத் தயங்கும் அயோத்யா பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு பேச்சு நடத்தினார்.  ஆதி சங்கரருக்குப் பிற்கு வேறு எவரும் செய்திராதபடி இவர் கைலாஷ், மானசரோவர் யாத்திரை செய்து வந்தார்.    
 
      அவருடைய மறைவு இந்து சமுதாயத்துக்கு, கீழ்தட்டு மக்களுக்கு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பின்தங்கியிருக்கும் பிரிவினர்களுக்கு, அத்தனை ஏன் நம் எல்லோருக்குமே பேரிழப்பு என்று சொல்லி அவருடைய நினைவுக்கு மனமாற அஞ்சலி செய்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
     
     
     


No comments: