பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 26, 2018

பெண்ணுரிமை காத்த பாஞ்சாலி.


                                   
மகாகவி பாரதியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் நம் மனதில் தோன்றுகின்ற எண்ணம், அவனது தேசபக்தி, இறையுணர்வு, இலக்கியத் தேடல், சுதந்திரத்தில் நாட்டம், இவற்றோடு தனது மானசீக குருவாகப் போற்றிய சகோதரி நிவேதிதா தேவியின் சந்திப்பால் ஏற்பட்ட பெண் சமத்துவம் ஆகிய உணர்வுகளாம். தேச சுதந்திரம் அவன் வாழ்ந்த காலகட்டத்தில் எல்லா சுதேசிகளுக்கும் உண்டான இயல்பான உந்துதல். இறையுணர்வு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணில் உதித்து இறைவனைத் துதித்துப் போற்றிய பெரியோர்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சி. இலக்கியத் தேடல் அவனுடைய இயற்கையோடு ஒன்றிய இயல்பான வாழ்க்கை. பெண் சுதந்திரம் என்பது சகோதரி நிவேதிதா அம்மையார் அவன் மனதில் இட்ட ஒரு சிறு தீப்பொறி. அவன் பாடிய அந்த அக்னிக் குஞ்சை அவன் மனதில் விதைக்கக் காரணமாக இருந்தவர் சகோதரி நிவேதிதை. இந்தத் தாக்கத்தால்தான் பாரதியாரின் பாடல்களில் பெரும்பாலும் பெண்களை உயர்வு செய்யும் எண்ணங்களே பிரதிபலிக்கின்றன. அவன் எழுப்ப விரும்பிய பெருந்தீக்குத் தொடக்கமாக அவன் வைத்த அக்கினிக் குஞ்சுதான் அவனுடைய புதிய ஆத்திசூடி. அதில் “தையலை உயர்வு செய்” என்று அவன் விடுத்த செய்தி பெரியவர்களுக்கு அல்ல, குழந்தைகளுக்கு. பயிரை விதைக்க வேண்டிய இடம் பார்த்து விதைத்தான், எதிர்காலம் தையலர்க்குப் பெருமை சேர்க்கும் என்ற அவனது உள்ளுணர்வினால். “தையல் சொல் கேளேல்” எனும் அறிவுரை நிலவி வந்த காலத்தில் “தையலை உயர்வு செய்” என உரக்கக் குரல் கொடுக்கத் துணிந்தவன் மகாகவி பாரதி.

மகாகவியின் பெண்ணிய சிந்தனைகளை உற்று நோக்கினோமானால், அன்றைய காலகட்டத்தில் அடிமைகள் போலும், விலைப்படும் விலங்கினங்களைப் போலும் அடக்கி ஆளப்பட்ட மாதர்தம் விடுதலையில் அவன் காட்டிய ஆர்வம் புலப்படுகின்றது. மனதில் உறுதி வேண்டும் என்று பராசக்தியை வேண்டி பாடுகின்றபோதும், அவன் உள்ளத்தில் தோன்றிய கருத்து “பெண் விடுதலை வேண்டும்” என்பதும் அப்படி நிகழும் விடுதலையினால் இந்த மண் பயனுற வேண்டும், உண்மை நின்றிட வேண்டுமென்பதும் தான்.

அதோடு நிற்காமல் அவன் சொன்ன கருத்து நம் அறிவுக் கண்களைத் திறக்க வல்லதாக இருக்கிறது. ‘பெண்மை” எனும் தலைப்பில் அவன் சொல்கிறான் “பெண்மை அறிவு உயர பீடு ஓங்கும், அந்தப் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு” என்பது அவன் எண்ணம். “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா” என்று பொங்கி மகிழ்ந்தவன் பாரதி. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்றால், இவ்வுலகம் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்பது அவன் முடிவு. நிமர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு இவைகள் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என உறுதிபட எடுத்துரைக்கிறான் பாரதி.

பெண் கல்வி உயர்ந்தால், அவர் சாத்திரங்கள் பற்பல கற்பர், சவுரியங்கள் பற்பல செய்வர், மூத்த பொய்மைகள் யாவையும் அழிப்பர், மூடக் கட்டுகள் யாவையும் தகர்ப்பர், இப்பூமியில் ஆண் மக்கள் போற்றிட வாழ்வராம் என்பது பாரதியின் முடிபு. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று சொல்லி வந்த பழமையைச் சாடிப் பாடினான்.  வீட்டினுள் பெண்களைப் பூட்டி வைத்திடும் விந்தை மனிதரைத் தலைகுனிய வைத்தான்.

            கற்பு என்று சொல்லி அதைப் பெண்களுக்கு மாத்திரமே உரித்தானதாகச் சித்தரித்த போலி உலகில், அந்த கற்பினை இரு சாராருக்கும் பொதுவில் வைக்கக் குரல் கொடுத்தவன் பாரதி. பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை மாட்டை விற்பதைப் போல் கட்டிக் கொடுத்து அனுப்பும் வழக்கத்தையும் சாடியவன் பாரதி. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், எட்டும் அறிவினில் ஆணுக்கு நிகராக சிறந்து விளங்கவும் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கொக்கரித்தான்.

இந்த பெண் விடுதலை எண்ணங்கள் அவன் மனதில் தோன்றியபோது நமது புராண இதிகாசங்களில் சிறந்து விளங்கிய பெண் பாத்திரங்கள் அவன் மனத்தைக் கவ்வின. அதில் குறிப்பிடத் தக்கவள் மாபாரதத்தின் பாஞ்சாலி. அந்த பாஞ்சாலி ஒரு யுகப் புரட்சியைச் செய்து காட்டினாள். ஆம் துவாபர யுகம் முடிந்து, கலியுகம் தோன்ற காரணமாக இருந்தது மகாபாரத யுத்தம்; அந்த மாபாரத யுத்தத்துக்குக் காரணமாக விளங்கியவள் பாஞ்சாலி, ஆகவே பாஞ்சாலி செய்தது ஒரு யுகப் புரட்சிதான்.

மகாபாரதக் கதையின் உயிர்நாடி பாஞ்சாலி செய்த சபதம் தான். அண்ணன் தம்பிகளான திருதராட்டிரன், பாண்டு ஆகியோரின் மக்களிடையே ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் மகாபாரதப் போர். திருதராட்டிரனின் மகன் துரியோதனின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிந்த பொறாமைத் தீ, சகுனி எனும் தீயவனின் சாமர்த்தியத்தால் தூண்டிவிடப்பட்டது. அதன் விளைவு சூதாட்டப் போர். சூதில், சூதினால் வென்ற சகுனி தர்மனின் செல்வம், சொந்தம், உரிமை அனைத்தையும் பறித்துக் கொண்டான். விளைவு பாண்டவர்கள் காடாளவும், தலைமறைவாய் வாழ்ந்திடவும் கடமைப் பட்டார்கள்.

ஐவரின் பத்தினியாய், சூதர்களின் வாழ்வுக்கு அக்கினியாய் வந்து வாய்த்தவள்தான் பாஞ்சாலி. தருமன் சூதில் அவன் விருப்பத்துக்கு மாறாக பங்கேற்கிறான். பணயம் வைத்த அனைத்தையும் இழந்து போகிறான். நாட்டை வைத்திழந்தான்; செல்வங்கள் அனைத்தையும் வைத்திழந்தான்,. அப்போதும் தீமனம் படைத்த சகுனி அவனை விட்டுவிட மனமின்றி, தருமனைத் தூண்டுகிறான். “தருமா! செல்வம் முற்றும் இழந்து விட்டாய், தேசமும் குடிகளும் சேர்ந்து இழந்தாய். புவிக்கெலாம் பார்த்திபன் இந்த தருமன் எனும் புகழையும் சேர்ந்தே இழந்தாய். நான் சொல்வதைக் கேள். எல்லாம் இழந்த பின்னர் நீயும், நின் இளைஞரும் எப்படிப் பிழைப்பீர்? தீங்கு தரும் சூதில் தோற்று நீங்கள் அனைவரும் பிச்சை புக விடுவதை நான் விரும்பவில்லை, எனவே சூதில் பணயம் என்று தகுதியான நின் இளைஞரைச் சூதில் பணயம் வை” என்கிறான்.

பாண்டவர் இளைத்த நிலை கண்டு கர்ணன் சிரிக்கிறான், அவையோர் கண்ணீர் சிந்தினர். அரவக்கொடியுடைய வேந்தன் துரியன் கெக்கெலி கொட்டிச் சிரிக்கிறான். தம்பிமார்களை வைத்து நீ வென்று விட்டால், முன்பு சூதில் நீ வைத்து இழந்ததனைத்தையும் திரும்பப் பெறலாம் என்று ஆசை வார்த்தைகள் புகன்றான். அது மட்டும் போதுமா? தருமனின் சுயமரியாதையையும் சுட்டிக் காட்டுகிறான். “தருமா! நாட்டை இழந்த பின்னர் உங்கள் ஐவரின் பத்தினி அந்த அம்பினொத்த விழியாள், அவள் இகழ்ந்திட மாட்டாளா? உன் கவலையைத் தீர்த்து வைப்போம் தருமா! உன் தம்பியரை வைத்து ஆடு” என்கிறான்.

பீமன் புற்றினில் சிக்கிய நாகம் போல சீருகிறான். பார்த்தன் முகக் களை இழந்து நிற்கிறான். ஏனையோர் ஊமைகளாயினர். தம்பியர் ஒவ்வொருவராய் சூதில் வைத்து தருமன் இழக்கிறான். ஒவ்வொருவனையும் இழக்கும்போது சூதர் கூட்டம் ஆர்ப்பரித்து முழங்குகிறது. அத்தனையும் இழந்த பின்னரும் சகுனி சளைக்கவில்லை. தருமா! இன்னும் பணயம் வைத்து ஆடுவோம், இன்னமும் நீ வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. சோர்வடைந்து விடாதே என்று தூண்டிவிடுகிறான்.

“தருமா, மின்னலைப் போன்றவள், அமுதம்போன்ற பேச்சையுடையவள், நின் தேவியாம் திரெளபதியை வைத்து ஆடினால், அவள் மிகுந்த அதிர்ஷ்டமுடையவள் அல்லவா? அவளால் நீ இழந்ததனைத்தையும் மீட்கலாம், ஆடு!” என்கிறான் சகுனி.

அதுவரை இந்த உலகம் காணாத துயர நிகழ்வு, வேள்விக்குரிய பொருளைத் தெரு நாய் முன் வைப்பதைப் போல, பொன்னால் மாளிகை கட்டி அதில் பேய்களைக் குடியமர்த்துவது போல, ஆளை விற்றுப் பொன் வாங்கி அதில் பூண் செய்து ஆந்தைக்குப் பூட்டுவது போல, தடுத்து நிறுத்த ஆளில்லாத நிலையில் தருமன் திரெளபதியைப் பணயமென்று சூதில் வைத்தான்.

தன் சொந்தக் குழந்தையைக் கொன்று அதன் தோலில் காலுக்குச் செருப்பு தைத்து அணிவரோ? வையகம் போற்றும் பாஞ்சாலியைக் கேவலம் சூதில் பணயமென்று வைப்பரோ? வைத்து விட்டான் தருமன். சகுனியின் சூட்சியால் அவன் கேட்ட பகடை விழுந்தது, அரக்கர் கூட்டம் ஆர்த்தெழுந்து ஆர்ப்பரித்தது. திக்குக் குலுங்கிடவே எழுந்தாடுகிறது தீயோர் கூட்டம்.

இந்த கேடுகெட்ட செய்தி பரவியதும், இயற்கை தனது செயல் இழந்ததாம். தருமம் அழிந்தது, சத்தியம் பொய்யாக மாறியது, பெருமை தரும் தவங்கள் பெயர் கெட்டு மண்ணாய் ஆகிப்போனது. மோன முனிவர்கள் வயிற்றில் தீப்பாய்ந்தாற்போல் இத்தீய செய்தி எட்டியது. வேதம் பொருளின்றி வெற்றுரையாகிப் போனது. நான்முகனார் பிரம்மன் நாவடைத்துப் போக, கலைமகளாம் நாமகள் புத்தி கெட, ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்த திருமாலும் அறிதுயில் போய் (யோக நித்திரை) ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்துவிட இவ்வுலகம் தலைகீழாய் மாறிப்போனதாய் காட்சியளித்தது.

சூதில் வைத்து இழந்த பாஞ்சாலியைத் தன் அவைக்கு அழைத்துவர ஆள் அனுப்பினான் துரியோதனன். அவள் பலசொல்லி மறுத்தாள். தூதுவன் அஞ்சினான். அன்னையின் கோபத்துக்கு ஆளாக விரும்பாமல் அழுது பிரற்றினான். கோழையவன் தூதை விடுத்துத் தன் கொடுமை நிறைந்த தம்பியாம் துச்சாதனனை அனுப்பினான், கோதையவளைக் கொண்டு வந்து அவையில் சேர்க்க. அண்ணனின் ஆணையைக் கேட்டு மகிழ்ந்து கிளம்பினான் துச்சாதனன் எனும் அரக்க குணம் படைத்தோன். அவன் புத்தி விவேகமில்லாதவன், புலி போல் உடல் வலியுள்ளவன், சிவசக்தி வலி உணராதவன், விரும்பியே தவறுகள் செய்பவன், அவன் சென்று அன்னையை அவைக்குக் கொணர வெறி கொண்டு சென்றான்.

அரண்மனை சென்று பாஞ்சாலியை அவைக்குக் கொணர முயன்றான் துச்சாதனன். மறுத்தாள் அன்னை. அரக்கன் சொல்கிறான், “ஆடி விலைப்பட்ட தாதி நீ, உன்னை இப்போது ஆள்பவன் என் அண்ணன் சுயோதனன். மன்னர்கள் கூடி நிற்கும் சபைதனில் உன்னை கொண்டு செல்வேன் இப்போதே என்று இழுக்க முயல, அவள் “அச்சா, கேள், மாதவிலக்காதலால் ஒற்றை ஆடையில் இருக்கிறேன். தார் வேந்தர் சபை முன்னால் வந்து நிற்பது முறையில்லை” என்கிறாள் பாஞ்சாலி.

அது கேட்ட துச்சாதனன், கக் கக் கவென்று கனைத்தே அந்தப் பெரு மூடன், பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்துக் கையினால் பற்றிக் கர கரவென்று இழுத்தான். ஐயகோ என்று அலறி உணர்விழந்தாள் அன்னை. நீசன், அன்னையின் நீண்ட குழல் பற்றி, பாதி உயிரோடு தவித்து நிற்க, முன் இழுத்துச் செல்கிறான் தெருவோடு.

அப்போது தெருவெங்கும் வேடிக்கை பார்த்து நிற்கும் வீணர் கூட்டம், இன்று போல் அன்றும் இருந்தார் போலும். அத்தகையோர் கீழ்மை சொல்லத் தகுமாமோ? வீரமிலா நாய்கள் அன்னையின் சிகை பிடித்திழுக்கும் அரக்கனை அடித்து மிதித்துத் தரையில் வீழ்த்தி, அன்னையவளை அரண்மனைக்குக் கொண்டு சேர்க்காமல், நெட்டை மரங்கள் என பெட்டைப் புலம்பல் புலம்பிக் கொண்டு, “ஐயோ என்ன அநியாயம் இது!” என்று செயலற்று நின்று கொண்டிருந்தார்.

அன்னை விம்மி அழுதாள், “விதியோ, கணவரே, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து என்னை வேதச்சுடர் முன்னால் வேண்டி மணம் புரிந்து இன்று இப்பாதகர் முன்பாக நான் பரிசழிதல் காண்பீரோ?” என்று கதறினாள்.

கல்மனம் படைத்த அரக்கர்கள் “தாதியடி, நீ தாதி” என்று கெக்கலித்தார். பெரியோர்கள் பார்த்திருந்தார், யாரும் எதிர்க்கவில்லை. இதையெல்லாம் இன்றைய தர்மம் ஏற்குமென்கிறார்கள் வீட்டுமன் முதலான பெரியவர்கள்.  அத்தனை பெரிய கூட்டத்தில் அன்னைக்கு ஆதரவாய் எழுந்தது ஒரேயொரு குரல். அது பாண்டவர் பக்கமிருந்தல்ல. துரியோதனின் தம்பியரில் ஒருவனான விகர்ணன் என்பான் இந்த செயலை எதிர்த்துப் பேசுகிறான்.

விகர்ணன் பேச்சைக் கேட்டு வில்வலான் கர்ணன் “தகுமடா, சிறியோய், அத்தனை தார்வேந்தரும் மெளனமாய் வீற்றிருக்க, சிறுவன் நீ, அதிகப் பிரசங்கம் செய்கிறாய். உனக்கு வீரமும் இல்லை, விவேகமும் இல்லை என்று பழித்துரைக்கிறான். செய்வதறியாராய் பாண்டவர் ஐவரும் திகைத்து நிற்கின்றார்.

அடிமையாய் ஆனவர்க்கு மார்பில் துணியைத் தாங்கும் வழக்கமில்லை என்று சொல்லி பணியாளை அழைத்துப் பாண்டவர் மார்பில் ஏந்தும் துணிதனைக் களைவாய் என்கிறான் துரியன். இவற்றையெல்லாம் கண்டு பாஞ்சாலி அச்சத்தில் உரைந்து போனாள்.

துச்சாதனன் எழுந்தான், அன்னையின் துகிலினை மன்றில் உரிதலுற்றான். பாஞ்சாலி எவ்வழி உய்வோம் என்று தியங்கினாள். கைகளைக் குவித்து அச்சோ தேவர்களே என்று மயங்கிச் சாய்ந்தாள். அந்தப் பேயன் துச்சாதனன் அன்னையின் துகிலில் கைவைத்தபோது அன்னையின் நினைவு உட்ஜோதியில் கலந்தது, உலகை மறந்தது, ஒருமையுற்று பேரொளியில் ஐக்கியமானாள். ஹரி! ஹரி! ஹரி! என்று அன்னையின் வாய் அலறியது. அபயம், அபயம் உனக்கு அபயம் என்றாள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பொய்யர்களுக்கு அடுக்கடுக்காக வரும் துன்பம் போல, புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் அளவற்ற புகழைப் போல, தையலார்க்கெல்லாம் இருக்கும் அளவற்ற கருணையைப் போல, கடலில் ஓயாமல் மோதும் அலைகளைப் போல, பெண்மையைப் போற்றுவார்க்குக் கிடைக்கும் செல்வத்தைப் போல, கண்ணபிரான் அருளால் அந்த கொடியோன் கழற்றிடக் கழற்றிட வளர்ந்தன சேலைகள். அன்னையின் மானம் காப்பாற்றப்பட்டது. காணுதற்கரிய இக்காட்சியைக் கண்டு தேவர்கள் பூமாரிச் சொரிந்தனர். பீஷ்மன் எழுந்து கைகூப்பி அன்னையைத் தொழுதான். கூடியிருந்தோர் அனைவரும் ஓம் சக்தி! ஓம் சக்தி! என்றோதி கரம் குவித்து வணங்கினர்.

நடந்ததெல்லாம் பார்த்து அரவுயர்த்த வேந்தன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தான். அப்போது பீமன் எழுந்து சபதம் செய்கிறான். “நாய் மகனாம் இந்த துரியோதனின் தொடையைப் பிளந்து அவன் உயிரை மாய்ப்பேன், என்றும், துச்சாதனன் கடைப்பட்ட தோள்களைப் பிய்ப்பேன், அதில் ஊறும் குறுதியைக் குடிப்பேன் என்கிறான். கண்மூடி தியானம் செய்தபின் பராசக்தியை அழைத்து, “பராசக்தி! இது சாதனை செய்” என்கிறான்.

பார்த்தன் எழுந்து சபதமேற்கிறான். “இந்தப் பாதகனாம் கர்ணனைப் போரில் கொல்வேன். இது நான் வணங்கும் மகாவிஷ்ணு கண்ணன் கழலடி ஆணை” கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும், காண்டீப வில்லின் மீதாணை என்கிறான்.

அத்தனை கூட்டத்தின் மத்தியில் அவமானப்பட்ட அன்னை பாஞ்சாலி சபதம் செய்கிறாள். “ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் தோள்களை பீமன் பிய்த்ததும் பீச்சியடிக்கும் அவன் செந்நீரையும், பாழ்பட்ட துரியோதனின் தொடையைப் பிளந்ததால் பொங்கும் அவன் ஆக்கை ரத்தமும் மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி நறுநெய் குளித்த பின்பே சீவிக் குழல் முடிப்பேன்” என்கிறாள்.

ஆற்றாது அல்லல் பட்ட அவ்வன்னையின் சபதம் பராசக்தி செய்த சபதமல்லவா. ஓம்! ஓம்! என்று தேவர்கள் கோஷமிட்டனர். ஓம்! ஓம்! என்று உறுமியது வானம். அப்போது உலகெங்கும் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று. விண்ணைப் பூழிப்படுத்தியது பெரும் சுழற் காற்று.” அன்னையின் சபதம் நிறைவேறியது, பாரதப் போரின் இறுதி நாளில். அன்று அவ்வரக்கர்களின் ஆக்கை ரத்தம் கலந்து நெய்பூசிக் குளித்துத் தன் சபதத்தை நிறைவேற்றுகிறாள் பாரத அன்னையாம் பாஞ்சாலி.

பாஞ்சாலியின் கதையைச் சொல்லவந்த பாரதி இப்பார் மீதில் பெண்மையின் பெருமையையும் சேர்ந்தே சொன்னார். பெண்மையைப் போற்றி பெருமை சேர்த்தது நமது பாரத தேசம், அதை வந்தே மாதரம் என்று சொல்லி வணங்குவோம்.








           

No comments: