பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, March 23, 2018

சுதந்திரப் போரில் சென்னை சதி வழக்கு!


               
காத்மா காந்தி அடிகள் தண்டியிலும், ராஜதந்திரி ராஜாஜி வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளியிலும் உப்பு எடுத்து சிறை சென்ற போராட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன. சட்ட மறுப்பு இயக்கம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. சுதந்திர ஆவேசம் கொண்ட தேசபக்தர்கள் விரைவில் நாடு சுதந்திரம் அடைந்திட என்ன வழி என்பதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம். ஆண்டு 1932.
சென்னையில் ஒரு இரகசிய இடத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அதில் பல முகங்கள் நமக்கு அறிமுகமான முகங்கள்தான். மதுரை சீனிவாசவரதன், பத்மாசனி அம்மாள், தஞ்சை ஹனுமந்த ராவ், பி.கே.நாராயணன், மாணவர் எஸ்.ரங்கராஜன் ஆகியோர் அதில் இருந்தனர்.

இவர்களது பணி, மக்கள் கூடுமிடங்களில் சுதந்திரம் வேண்டி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவது; தடைசெய்யப்பட்ட நூல்களைக் குறிப்பாக வீர சாவர்க்கரின் “முதல் இந்திய சுதந்திரப் போர்” போன்ற நூல்களை வினியோகம் செய்வது ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தனர். சாவர்க்கரின் ஆங்கில மூல நூலை தமிழில் மொழி பெயர்த்திருந்தவர் டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் மகள் டாக்டர் செளந்தரம் அவர்கள். அப்போது நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட தியாகிகளை திருச்சி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த சமயம் வடக்கே லாகூரில் லாலா லஜபதி ராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சாண்டர்சை சுட்டுக் கொன்று தூக்கில் மாண்ட பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோருடைய கூட்டாளிகள் சிலரையும் திருச்சி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். தமிழ்நாட்டு சுதந்திரப் போர் கைதிகளுடன் அந்தப் புரட்சிக்காரர்களுக்கு நட்பு ஏற்பட்டு தங்களுடைய புரட்சி வித்தை அவர்கள் மனங்களிலும் விதைத்து விட்டனர் அவர்கள். அவர்கள் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வரலாற்றையும், வேறு சில புரட்சி நூல்களையும் தமிழ்நாட்டு தியாகிகளிடம் கொடுத்துப் படிக்கச் செய்தனர். விளைவு, இங்கும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது.

சிறைக்குள்ளே இந்த அரசியல் கைதிகள் கூடி விவாதிக்கத் தொடங்கினர். அவர்களில் சிலர், கம்யூனிஸ்ட் ப.ஜீவானந்தம், நெல்லை வீரபாகு பிள்ளை, தூத்துக்குடி சங்கரநாராயணன் (இவரும் கம்யூனிஸ்ட்) கொடுமுடி ராஜகோபாலன், கே. அருணாசலம் ஆகியோர் முக்கியமானவர்கள். சிறையிலிருந்த புரட்சிக் காரர்கள் இவர்களுக்கு வெடிகுண்டு செய்யும் விதத்தையும் சொல்லிக் கொடுத்தனர். அந்த சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சென்னை சிறையில் தங்கி உடல் நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி பல புரட்சிக்காரர்களின் கூட்டுறவால் சில இளைஞர்கள் சென்னை தங்கசாலைத் தெருவில் ஒரு வீட்டில் இரகசியமாகக் கூடித் தங்கள் எதிர்கால திட்டங்களைத் தயார் செய்து கொண்டார்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட காவல்துறையினர் ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த மூர் மார்க்கெட்டில் ஒரு தொண்டனை கைது செய்து விட்டனர். இந்தப் புரட்சிக் கூட்டத்தின் துரதிருஷ்டம், அப்போது அந்த இளைஞன் வசம் ஒரு துப்பாக்கி இருந்தது, ஆகையால் மொத்த கூட்டத்துக்கும் வலை விரிக்கப்பட்டது.

அப்போதைய போலீஸ் வழக்கப்படி மாட்டிக் கொண்டவனை நன்றாகத் துவைத்தெடுத்து பலரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்து விட்டனர். மொத்தம் பத்தொன்பது பேர், அதில் புரட்சிக்காரர் முகுந்தலால் சர்க்கார் என்பாரும் அடக்கம்.

ஏராளமான புரட்சிக்காரர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டனர். ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு நீதிபதியாக டி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பார் இருந்தார். சிந்தாதரிப்பேட்டையில் இருந்த ஒரு நூலகம் தற்காலிக நீதிமன்றமாகச் செயல்பட்டது.  இதில் இரண்டு பேர் அப்ரூவராக மாறினர்; இல்லை இல்லை மாறும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர். குற்றவாளிகளுக்கு பல தேசபக்த வக்கீல்கள் வாதாடினர். குற்றவாளிகளுக்கு வழக்கு நடத்தவென்று ஒரு குழு அமைக்கப்பட்டது, அதன் செயலாளர் பின்னாளில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான பி.ராமமூர்த்தி.
வழக்கில் சுமார் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றியது. 1934 ஜனவரி 8ஆம் நாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி பர்க்கென்ஹாம் வால்ஷ் என்பார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ராஜாங்க பிராசிகியூட்டர் கே.பி.எம்.மேனன் என்பார். எதிரிகள் சார்பில் ஆந்திர கேசரி டி.பிரகாசம், பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ப.ராஜகோபாலாச்சாரியார், பி.நாராயண குரூப் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போதெல்லாம் ஜூரிகள் முறை நடைமுறையில் இருந்தது. அதன்படி இந்த வழக்கில் ஜூரிகள் எதிரிகள் அனைவரும் குற்றவாளிகளே என்று கூறினர். நீதிபதி ஜூரிகளின் கருத்தை ஏற்றுக்கொண்டு அனைவரையும் குற்றவாளிகள் என்று கருதி தீர்ப்பளித்துவிட்டார். பலருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுத்து, ஒரு சிலரை விடுவித்து விட்டார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் பலரும் பல சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் பட்ட துன்பம் சொல்லும் தரமன்று. கோபால சாஸ்திரி என்பார் சிறையில் இறந்தே போனார். பயில்வான் போலிருந்த அவர் வேலூர் சிறையில் கடுமையான வயிற்றுப் போக்கினால் இறந்தார். அதற்கு முன்பு வியாதியின் கொடுமை தாங்காமல் தற்கொலைக்கும் முயன்றார்.

கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூட இயலாத நிலையில் தனித்து விடப்பட்டனர். வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் என்ற குற்றத்துக்காக ரங்கராஜன் என்பார் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை அதிகப்படியாகப் பெற்றார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயம் மகாத்மா காந்தி சென்னைக்கு விஜயம் செய்தார். இந்த வழக்கு விவரங்களை அவர் சேத் ஜெகந்நாத தாஸ் என்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த நேரத்தில் வங்கத்தைச் சேர்ந்த மிட்னாப்பூரில் ஒரு கொலை வழக்கில் ஆஜராகி வாதாடிக் கொண்டிருந்த பிரபலமான பாரிஸ்டர் ஒருவரை இந்த வழக்கில் வாதாடும்படி தான் ஏற்பாடு செய்வதாக காந்திஜி உறுதியளித்தார்.

மகாத்மா காந்தி அகிம்சை முறையில் போராடி வந்தவர். இந்த வழக்கில் கைதான இளைஞர்களோ, அகிம்சை முறைக்கு மாறாக புரட்சிக்காரர்களாக செயல்பட்டார்கள். புரட்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் மீதுதான் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார்கள். இருந்தாலும் அவர்களது நோக்கம் இந்திய சுதந்திரம், அவர்களிடம் இருந்தது தேசபக்தி, ஆகையால் அவர்கள் வழிமுறை எத்தகையதாக இருந்த போதிலும் அவர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று காந்திஜி செயலாற்றினார்.

ஆனாலும், மிட்னாப்பூர் கொலை வழக்கில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த இளைஞனைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் கருதி, தங்களுக்கு அந்த பாரிஸ்டரை அனுப்ப வேண்டாம், ஆந்திர கேசரி தலைமையிலான வழக்கறிஞர் குழு மீது தங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று குற்றவாளி இளைஞர்கள் மறுத்து விட்டனர்.

தண்டனை பெற்ற அனைவரும் அவரவர்க்குக் கிடைத்த தண்டனை காலத்தை சிறைக் கொடுமைகளுக்கிடையில் தாங்கிக் கொண்டு, சிலர் உயிர் தியாகம் செய்தும், சிலர் உடல் நலம் கெட்டும், இறுதியில் தண்டனைக் காலம் முடிந்து 1937ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுதலையாகினர். பின்னரும் இந்த தேச சேவையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். இந்த வழக்கு “சென்னை சதி வழக்கு” என்ற பெயரால் அந்த காலகட்டத்தில் பிரபலமாகப் பேசப்பட்டது. இந்த வழக்கில் சிறைப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி சிலர் தண்டனை பெற்றும், ஒரு சிலர் விடுதலை பெற்றும் தங்கள் பெயர்களை இந்திய சுதந்திரப் போர் தியாகிகள் பட்டியலில் இடம் பெற்று விட்டனர். அவர்கள் அத்தனைக் பேரையும் நாம் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவர்களது பெயர்களையாவது ஒரு முறை உச்சரித்துப் பெருமை கொள்வோம். அவர்கள்:
முகுந்தலால் சர்க்கார், கே.அருணாசலம் (இவர் திருமுல்லைவாயில் சதிவழக்கிலும் பங்கெடுத்தவர், பிந்நாளில் ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதியவர்), டி.கோபால சாஸ்திரி (சிறையில் இறந்து போனவர்), டி.ஆர்.சுப்ரமணியம், பி.ஜோசப், ஜி.லோகநாதன், டி.கண்ணன், சபாபதி, கண்ணாயிரம், எஸ்.ரங்கராஜன், டி.ராமச்சந்திரா, கே.நாராயண நம்பியார், பலராம ரெட்டி, தசரதராம ரெட்டி, ஜி.பாலகிருஷ்ண ரெட்டி, ஜி.காலய்யா ரெட்டி, பட்டணம் பாலி ரெட்டி, பி.பாபிராஜு, சி.ஜகந்நாதன், கானூர் ராமானந்த சவுத்திரி ஆகியோர். வாழ்க இந்தத் தியாகிகளின் புகழ்!


(ஆதாரம்: அரியலூர் சபாபதி எழுதிய திருச்சி மாவட்ட சுதந்திரப் பொன்விழா மலர், கைதிகளில் ஒருவரான எஸ்.ரங்கராஜன் சொல்ல கொடுமுடி ராஜகோபாலன் அவர்களால் எழுதப்பட்டது)



No comments: