பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 19, 2016

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின்
“மருமக்கள்வழி மான்மியம்” தொகுப்பில்.

பொய்கள் அடைக்கல புகுமிட மாகியும்
குதர்க்கம் கடிகொளும் குகையிட மாகியும்
திருஅவ தாரம் செய்தன் றிருந்தவோர்
அண்டப் புரட்டன் வக்கீல் ஆபீசில்
ஆனைப் பொய்யன் குமஸ்தனை அறிந்து
காரியம் சொன்னார், கதைகளும் சொன்னார்
காரண வனைப்பல காரணத் தாலே
மாற்றும் படிக்கு வந்தோம்என்றார்
புற்றை விட்டுப் புறம்போ காமல்
பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில்
தேரை குதித்துச் சென்று விழுவது
நாகம் முன்செய்த நல்வினைப் பயனோ?
தேரை முன்செய்த தீவினைப் பயனோ?
ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்?
செல்லும் செலவு செய்திட, ரூபாய்
நூற்றைம் பதுக்கோர் நோட்டு, வக்கீல்
மைத்துனன் முத்து வாத்தியார் பேர்க்கு
எழுதி முடித்தார், எடுத்து வந்த
ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்,
இவரிவர் சாட்சிகள் என்றும் சொன்னார்;
வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும்
மூத்த பிள்ளையே முதலாம் சாட்சி;
மாத்தால் கணக்கு மகாரா சன்மகன்
பிச்சைக் காரன் பின்னொரு சாட்சி;
இருக ணில்லா இருளப் பன்மகன்
முத்தொளி மறவன் மூன்றாம் சாட்சி,
ஐயம் பிள்ளை அண்ணாவி புதல்வன்
நல்ல பிள்ளை நாலாம் சாட்சி;
பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி
யாடும் பெருமாள் ஐந்தாம் சாட்சி;
நம்பர் பதித்த நாலாம் மாதம்
ஒருநாள் காலை உறக்கப் பாயில்
எழுந்(து)என் கணவர் இருக்கும் பொழுது
கருப்பன் கட்டையன் கப்படா மீசைக்
காரன் ஒருவன் காலனைப் போல
கோர்ட்டு சம்மனைக் கொண்டு வந்தான்!
நச்சுவா யண்ணன் நாச காலன்
வீர பத்திரன், வெட்டையாய்ப் போவான்,
எண்ணியது போல எல்லாம் ஆச்சுதே,
நினைத்தது போல நேரம் விடிந்ததே!
இந்நாள் இங்கு யான்படும் பாடெலாம்
நாளை
அவரும் மக்களும் அனுபவிப் பார்கள்
யாதும் தடையிலை, யாதும் தடையிலை;
பத்தினி என்சொல் பழுதா காது,
உத்தமி யென்சொல் ஊரையும் சுடுமே!
கேட்கும் கேட்கும், தெய்வம் கேட்கும்!
சேவகன் வந்த காரியம் தெரிந்தோ,
இயல்பாய்த் தானோ, (யாதோ அறியேன்)
மேல வீட்டிருந்து வெள்ளையம் பிள்ளை
அண்ணனும் அப்பொழு(து) அங்கு வந்து,
யார்இவன்என்றனர், ‘இன்னார்
சம்மனைப் படித்துச் சங்கதி யறிந்துஎன்
புருஷனை நோக்கி, “போன தெல்லாம்
போகட்டும் ஐயா! பொய்கைப் பற்றில்
ஆறு தடியும் அணஞ்சி விளையும்
துலுக்கன் தோப்பும, தொட்டிச்சி மேடும்
மேலத் தெருவில் மேடை வீடும்,
ஈரணை ஏரும் ஏழு பசுவும்,
யாதொரு கடனும் இல்லா மல்நீர்
இருக்கு மட்டும் யாப்பிய மாகவும்
அப்பால் அவற்றைஉம் அருமை மக்கள்
ஒன்று விடா(து)உகந் துடைமை யாகவும்
எடுத்துக் கொள்ள ஓர்ஓலை யெழுதி
உம்மை மக்களோடு ஒதுக்கி விடுவரேல்
வாங்கிக் கொண்டு வழக்கில் லாமல்
சும்மா இருப்பது மெத்தச் சுகமாம்
இப்படி ராஜி எழுதிக் கொடுக்க
உமக்குச் சம்மத முண்டோ? சொல்லும்.
வியாச்சிய மென்னும் சுழியில் விழுந்து
கறகற வென்று கறங்கி மயங்கி
கைப்பொருள் இழந்து கடனும் வாங்கி
வீணாய்த் துன்பம் விளைத்திட வேண்டாம்!
அல்லலை விருந்துக்கு அழைத்திட வேண்டாம்!
தொல்லைக்குத் தூது சொல்லிட வேண்டாம்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
பண்டொரு நீதி பதிதம் கோர்ட்டு
வாயிலின் வந்த மனித ரெல்லாம்
உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி
வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும்
தாட்பொதி யொன்று தலையிற் சுமந்து
வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும்
கண்களால் கண்டு, கண்டு நாளும்
நல்லறிவு எய்திட நடைநடை தோறும்
இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள்
செய்து வைத்த கதைதெரி யாதோ?
இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும்
இவைக ளன்றிவே(று) எவையும் உண்டோ?
புத்தி யில்லாஇரு பூனைகள் பண்டு (140)
வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி
உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி
வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய்
நாம்,
பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ?
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்.
அரையடிச் சுவருக் காகஐக் கோர்ட்டு
வரையிலும் ஏறி, வழக்குப் பேசி
அந்தி புரத்து மந்திரம் பிள்ளை
அடியொடு கெட்டது அறியமாட் டீரோ?
வடக்கு வீட்டு மச்சம் பியும்அவர்
மருமக் களுமாய் வருசம்எட் டாக
மாறி மாறி வாதம் செய்து,
யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம்
கண்ணால் இன்று காண வில்லையோ?
வேலுப்பிள்ளை வீட்டு நம்பரில்
ஐந்தாம் சாட்சி ஆண்டி அவனை
அழஅழப் படுத்தி, அறுபது ரூபாய்
வாங்கிக் கொண்டு, மேல்வாயிதாத் தோறும்
வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்
பானையி லேபத் தரிசி இல்லை!
உப்போ புளியோ ஒன்று மில்லை!
உச்சிக்கு எண்ணெய் ஒருதுளி யில்லை!
தொட்டில் கட்டத் துணியு மில்லை,
காந்தி மதிக்குக் கண்டாங்கி இல்லை,
எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை,
இப்படி யிருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழிநான் கொடுக்க வருவே?’
என்று சொல்லி, எத்தனை பணத்தைத்
தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா!
முளைய நல்லூர் முதல்பிடிப் பிள்ளை
அண்ணனும் இப்படி யாகக் காரணம்,
விளாத்திக் கோண விவகார மல்லவோ?
எத்தனை வகையை இழந்தார், அப்பா!
மூக்கறை யன்விளை மூலையில் நிற்கும்
பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம்
தாங்கி,மீதியும் தருமே, அப்பா!
அந்த,
மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர
எல்லா நகையும் இறக்கிவிட் டாளே!
ஒவ்வொரு காதிலும் உழக்குழக் குப்பொன்
இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே!
ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே!
கருந்தாளி உலக்கை கையில் எடுத்(து)அவள்
கோவில் நெல்லைக் குத்துவாள் என்று
யாவ ராயினும் எண்ணினது உண்டா?
என்ன செய்வாள், ஏழை! பாவம்!
நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய்
ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்?
கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்?
இதுவும்செய்யும் மேலே எதுவும் செய்யும்;
கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும்
வல்லம் வல்லமாய் மாம்பழம் அனுப்பவும்
பானை பானையாய்ப் பால்நெய் யனுப்பவும்
மந்தை மந்தையாய் மாடுகள் அனுப்பவும்
வண்டி வண்டியாய் வைக்கோல் அனுப்பவும்
யாரால் முடியும்? யாரால் முடியும்?
எந்தக் குடும்பம் ஈடு நிற்கும்? ஐயா,
வழக்கும் இழந்து, வகையும் இழந்து
யாவும் இழந்து உளம்ஏங்கி யிருக்கும்
கைலாசம் பிள்ளைக் கரையாளன் வீட்டை
வக்கீல் பீஸு பாக்கி வகையில்
எழுபது ரூபாய்க்கு ஏலம் கூறிக்
கொட்டிக் கொட்டிக் கொண்டு போனதும்
நேற்றுத் தானே, நினைவு மில்லையோ?
இந்த மாசம் எட்டாந் தேதி
மேலத் தெருவில் .... வீட்டில்
ஜப்திக்கு வந்த தலைவன், ஐயோ
எள்ளள வேனும் இரக்கமில் லாமல்
அந்தக்
கிழவனைத் தூக்கிக் கீழே போட்டுக்
கட்டிலை வெளியில் கடத்தச் சொன்னதும்,
தண்ணீர் குடிக்கும் சமயம் பார்த்துப்
பிள்ளைக் கெண்டியைப் பிடுங்கச் செய்ததும்
சருவப் பானை சட்டுவம் அகப்பை
குட்டுவம் செம்பு குழியல் முதலாய்
உப்பொடு சிரட்டை ஒன்றுமில் லாமல்
எல்லாம் வண்டியில் ஏற்றிச் சென்றதும்
நாம்
கண்ணாற் கண்டதோ? கனவோ? ஐயா!
நாமெலாம் சேர்ந்து நடத்தின கட்சிக்
கொடையில், மாடன் கொண்டாடி நம்பி
சந்தனம் பூசிச் சல்லடம் கட்டிப்
பூவை யெடுக்கப் போன பொழுது
வாரண்டுக் காரன் வந்ததை யறிந்து
குட்டிச் சுவரெலாம் குதித்துச் சாடி,
வாய்க்கால் வழியே வடக்கே யோடி
ஒருவரும் காணாது, ஓச்சன் குளத்து
மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும்
சாமி சுடலைச்சாம்பலி லாடி
விளையா டுதற்கு வேகமாய்ப் போகிறார்
என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம்
எழுந்து போனதும், எங்கும் தேடிக்
காணா தானதும், கடைசியில் உண்மை
தெரிய வந்ததும், செலவோடு செலவென்று
ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து
வாரண்டை அன்று மடக்கி விட்டதும்
நடந்த காரியமோ? நாடகந் தானோ?
வியாச்சியம் வேண்டாம் வியாச்சியம் வேண்டாம்,
தேடின முதலைத் தெருவில் வாரி
இறைக்க வேண்டாம், இறைக்க வேண்டாம்.
அல்லும் பகலும் அலுப்பில் லாமல்
ஆஆ என்(று)அலை ஆமீன் வாயில்
அகப்பட் டார்வெளி யாவது முண்டோ?
சுறா மீனையுமே தூக்கி விழுங்கும்
பொல்லா மீன்இது போலொரு மீனைக்
கடலிலும் கூடக் கண்டவ ரில்லை.
எவரினும் பெரியவன் யானே ஆவேன்,
எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்
இம்மிருகத் தையும் எடுத்தொரு நொடியில்
வானெலாம் சுற்றி வருவதற் குள்ள
ஆற்றலு முடையேன், ஆனால், அத்திறம்
அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட
அற்பமும் ஆசை எனக்கிலை, அன்றியும்
உருவமோ, நீளமோ, உயரமோ கண்டே
மூட உலகம் மோசம் போகும்;
ஆதலால் ஒருவரும் அறியா திருந்(து)இந்
நாலுகை யானை நடத்து கின்றேன்
என்றுதன் முதுகி லிருக்கும் ஈயொன்று
எண்ணா(து) டம்பம் எடுத்துரைப் பதுபோல்,
இரவும் பகலும் இடைவிடாமல்
பற்பல வருசம் படித்து பீ.எல்
எம்.எல் பட்டம் எல்லாம் பெற்று
வந்திடும் பெரிய வக்கீல் மாரும்
யாங்க ளில்லையேல் என்செய் வார்?’எனப்
புத்தி யில்லாது புலம்பித் திரியும்
குமாஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக்
குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
இன்ன படியென்று எழுதி விட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன்,
விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்,
வருகிற வழியாய் வந்(து)எனைக் கண்டால்
சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்
தருவேன்என்று சற்றும்வாய் கூசாது
உரைக்கும் அந்த உத்தம புருசன்
நிறையா வயிற்றை நிறைந்திடக் கடலைத்
திறந்துவிட் டாலும் திகையுமோ? ஐயா!
வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும்
சாட்சிப் படிகளும் சமன்சுப் படிகளும்
கணக்கி லடங்காக் கமிசன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப் படிகளும்
வாரண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட ஆளும் நீரோ? ஐயா!
கோர்ட்டுப் பீசு குமாஸ்தாப் பீசு
கூடிக் காப்பி குடிக்கப் பீசு
வெற்றிலை வாங்கிட வேறொரு பீசு
வக்கீல் பீசு மகைமைப் பீசு
வக்கா லத்து வகைக்கொரு பீசு
எழுதப் பீசு சொல்லப் பீசு
எழுதிய தாளை எடுக்கப் பீசு  
நிற்கப் பீசு, இருக்கப் பீசு
நீட்டின கையை மடக்கப் பீசு
பாரப் பீசு கீரப் பீசு
பார இழவு பயிற்றுப் பீசு
கண்டு பீசு, காணாப் பீசு
முண்டுத் துணிக்கொரு முழுமல் பீசு
அந்தப் பீசு, இந்தப் பீசு
ஆனைப் பீசு, பூனைப் பீசு
ஏறப் பீசு இறங்கப் பீசு
இப்படி யாக என்றென் றைக்கும்
பீசு பீசாகப் பிச்சி எடுக்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!

குதித்துக் குடியை முடித்திட வேண்டாம்!

Tuesday, July 5, 2016

விலாசினி நாட்டியம் அல்லது சின்ன மேளம்.

          
விலாசினி நாட்டியம் என்றும் சின்ன மேளம் என்றும் வழங்கப்படும் நாட்டியப் பிரிவு தெலுங்கு மொழி பேசும் இப்போதைய ஆந்திர மாநிலப் பகுதிகளில் உருவானது.
தெலுங்கு மொழி பேசும் பகுதியில் விஜயநகர சாம்ராஜ்யம் தழைத்தோங்கியிருந்த காலத்தில் அங்கு அஷ்டதிக்கஜங்கள் என்று அமைச்சர்கள் இருந்ததும், அங்கு கலை, இலக்கியம், நடனம் போன்ற நளின கலைகள் சிறந்து விளங்கின என்பதையும் நாம் வரலாற்றிலிருந்து அறிகிறோம். அப்படி அங்கு நிலவிவந்த இரு நாட்டியப் பிரிவுகளில் ஒன்று ஆண்களுக்கான “புருஷ சம்ப்ரதாயம்”, மற்றொன்று பெண்களுக்கான “ஸ்த்ரீ சம்ப்ரதாயம்”.

ஆந்திரப் பிரதேச பழைய கல்வெட்டுகள், ஆவணங்கள், இலக்கிய ஆதாரங்கள் இவைகள் மூலமாக நமக்குத் தெரிய வருகின்ற செய்தி அங்கிருந்த ஆலயங்களில் பெண் பாடகர்களும், நாட்டியக் கலைஞர்களும் கலைப்பணியாற்றி வந்தமையும்; இவர்கள் அரசவைகளிலும், பொதுமக்கள் கூடும் அரங்கங்களிலும் பங்கேற்று வந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவர்களுடைய பங்களிப்பு நமக்குக் கிடைக்கிறது.

இத்தகைய கலைஞர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர்; குறிப்பாக விலாசினி, ஸ்வாமினி, போகினி எனும் பெயர்கள் இவர்களுக்கு இருந்தது தெரியவருகிறது. இவர்கள் உள்ள குழுவினரை “சின்ன மேளம்” என்றும் “நட்டுவ மேளம்” என்று அழைத்தனர்.

சென்ற நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இவர்களைத் தெலுங்கு மொழியில் “கலாவந்துலு” என்று அழைத்தனர். இந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தது ஒரு பெண். அவர் இசை நடனக் கலையில் சிறந்து விளங்கிய கலாவதி எனும் பெண்மணி. 1946இல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு ஆலயங்களில் தேவதாசிகளுக்கிருந்த நடனம், இசை வழிபாடுகளுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டன.  தொடர்ந்து “கலாவந்துலு” கலை களையிழக்கத் தொடங்கியது. விலாசினி, ஸ்வாமினி, போகினி ஆகியோரின் கலைப்பணிகள் பொதுமக்களிடமிருந்தும் சமூக அமைப்புகளிலிருந்தும் மெல்ல மறையத் தொடங்கின.

விலாசினி நடனம் என்பது கோயில்களில் நடைபெறும் பூஜா விதிகளைப் போல இசை நடனக் கலை மூலம் செய்யப்படும் வழிபாட்டு முறை. அது மெல்ல மறையத் தொடங்கிய போதும் ஆங்காங்கே ஒருசிலர் இதனைப் போற்றி பாதுகாத்து வந்திருக்கின்றனர். தற்போதைய “குச்சிபுடி” நடன வகை புருஷ சம்ப்ரதாய வகையினைச் சார்ந்தது. விலாசினி நடனம் ஸ்திரீசம்ப்ரதாய வகையினைச் சார்ந்தது போல தோற்றமளிக்கும். இதில் அடங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அடவுகளும், தாண்டவ, லாஸ்ய முத்திரைகளும் அதனை உறுதி செய்யும். விலாசினி நடன அபிநயங்கள் பெரிதும் மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும். இவை அனைத்தும் ஆலய வழிபாட்டு முறையாகவே இருக்கும். அரசவை ஆட்டங்களும், பொதுமக்கள் பார்க்கும்படி ஆடப்படும் பொது நடனங்களும்கூட இவற்றில் அடங்கும். இவ்வகை ஆட்டங்களைத்தான் ஆங்கிலத்தில் “கிளாசிகல்” நடனங்கள் (classical dances) என்று சொல்லுகிறார்கள்.
தெலுங்கு தேசத்து ‘தேவதாசி’கள் ஆடுகின்ற விலாசினி நடனத்தின் நிருத்தியம், அபிநயம் ஆகியவை பெருமளவில் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தின் விளைவாக இசை நடன ஆலய வழிபாட்டு முறை இல்லாமல் போனதால், இவ்வகை நடனங்கள் மறையத் தொடங்கின. இப்போது இவை விலாசினி நடனம் மூலம் புத்துயிர் பெற்று பலராலும் இன்று ஆடப்படுகின்றன.
விலாசினி நடனம் ஆலயங்களில் ஆடப்படும் வகை என்றும், அரசவைகளில் ஆடப்படும் வகை என்றும், பாகவத புராணங்கள் நடைபெறும்போது ஆடப்படும் நடன வகை என்றும் பலவிதங்களில் ஆடப்படுகின்றன.

தெலுங்கு பேசும் பகுதிகளில் விலாசினி நடனம் எனும் பெயரால் ஆடப்பட்டு வந்ததைப் போல தமிழகத்தில் சோழ மன்னர்கள் காலத்திலிருந்து ஆலய வழிபாட்டு முறையில் ‘சதிர்’ என்றும் ‘தாசியாட்டம்’ எனும் பெயரால் ஆடப்பட்டு வந்த நாட்டியங்கள் சிறப்பாக விளங்கி வந்திருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் மற்றும் தமிழகத்தின் பற்பல கோயில்களுக்கும் நடன மாதர்கள் ஆலய ஊழியர்களாக இருந்து பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களது நடனமும் கும்ப ஆரத்தி எனப்படும் முக்கிய திபாராதனையும் இவர்களது உரிமையாக இருந்திருக்கிறது. இவை “சின்ன மேளம்” எனும் பெயரால் நடத்தப்பட்டு வந்தது.

“சின்ன மேளம்” என்றால் என்ன? தற்போது தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழாவில் இருபது நாட்கள் சின்னமேளம் நடன விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தஞ்சையின் பாரம்பரியமிக்க தஞ்சை நால்வர் எனப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோருக்கும், அவர் வழியில் வந்த கிட்டப்பா பிள்ளை எனும் புகழ்பெற்ற நட்டுவனாருக்கும் மரியாதை செய்யும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்தி வருபவர் தஞ்சை புகழ்பெற்ற நட்டுவனார் கலைமாமணி ஹேரம்பநாதனும் அவரது கலையுலக வாரிசுகளுமாவர்.

பண்டைய தமிழக ஆலயங்களில் குறிப்பாக சோழநாட்டு ஆலயங்களில் கோயில் வழிபாட்டு முறையில் நாட்டியம் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. பூஜையில் இசையும் பாடப்படும். மாமன்னன் இராஜராஜன் காலத்தில் ஆலய வழிபாட்டின்போது தமிழில் பாசுரம் இசைக்கவும், வடமொழியில் பாடல்கள் பாடவும், நடனங்கள் ஆடவும் ஆட்களை நியமித்திருந்தார். கோயில் பூஜையில் ஆகவிதி முறைகள்படி நடக்கும் பூஜைகளைத் தவிர, நடன மாதர்களின் சதிர் எனும் நாட்டியமும் அங்கம் வகித்திருந்தது.  இதில் பெரிய மேளம், சின்ன மேளம் எனும் இரு வகையான அமைப்புகள் இருந்தன.
பெரிய மேளம் என்பது நாதஸ்வரம், தவில், சுருதி, தாளம் ஆகியவைகள் கொண்டு இசைக்கப்படும் வாத்திய இசை.

சின்ன மேளம் என்பது நடன மாதர்கள், அதற்கான இசை, முட்டுக்காரர் எனப்படும் தாளவாத்தியக் கலைஞர் (மிருதங்கம்) குழல், திட்டிக்காரர் எனப்படுபவர் ஆகியோர் அடங்கிய குழுவாகும். இவர்கள் ஆலயத்தின் ஒவ்வொரு கால பூஜையின் போதும் சந்நிதிகளில் ஆடுவதோடு, இரவு அர்த்தஜாமம் முடிந்து பள்ளியறை செல்லும் வரை இவர்கள் நாட்டியம் உண்டு. திருவிழா காலங்களில் சுவாமி வீதிவலம் வரும்போது, சுவாமி ஆலயத்தைவிட்டு வெளிவரும்போது தொடங்கப்படும் ‘மல்லாரி’ தொடங்கி வழிநெடுக ஆடல்மகளிர் சதிர் ஆடிக்கொண்டு வருவர்.

மேற்படி வழக்கங்கள் மறையத் தொடங்கிய பிறகு, சுந்தந்திரத்துக்குப் பிறகு இந்தக் கலையை அதற்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடமிருந்து பொதுமக்கள் கைக்கு வந்து சேர்ந்தபின் ஏராளமானோர் இந்த அற்புதக் கலையைப் பயின்று நன்கு தேர்ச்சி பெற்று “பரதநாட்டியம்” ‘நிருத்தியம்’ எனும் பெயர்களால் ஆடத் தொடங்கி விட்டனர். தஞ்சை நால்வர் தோற்றுவித்த இந்த நடனக் கலை மெல்ல திருமதி பாலசரஸ்வதி மூலம் சென்னை கலாக்ஷேத்ராவுக்குச் சென்று அங்கிருந்து நாடு முழுவதும் ஆடத் தொடங்கி விட்டார்கள். இன்றைய தினம் தமிழ்நாட்டில் பரதநாட்டியப் பயிற்சிக் கூடங்கள் இல்லாத ஊரே இல்லையெனும்படி ஆகிவிட்டது. ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் இந்தக் கலையைப் பயின்று ஒப்புயர்வற்ற வகையில் ஆடிவருகின்றனர்.

அந்தக் காலத்தில் ஆலயவழிபாட்டு முறையில் சுவாமிக்கு கும்ப ஆரத்தி என்ற வழிபாடு உண்டு. அதனைச் செய்யும் உரிமை பெற்றவர்கள் ஆலயத்தின் ஆஸ்தான நடன மாதர்கள் மட்டுமே. இவர்களை “குடமுக தாசி” என்றழைத்தனர். தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்தப் பணியில் ஈடுபட்டு நடனக் கலையையும் ஜீவனுடன் காப்பாற்றி வந்தனர். இவர்களில் பலர் இறைவனுக்கு உரிமையானவர் என்பதால் ‘பொட்டுக் கட்டுதல்’ எனும் சடங்குடன் தங்களை இறைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். இவர்களில் பலர் சமூக அந்தஸ்தும், நன்மதிப்பும் பெற்று விளங்கியிருக்கின்றனர். இசையும், நாட்டியமும் இன்றும் உயிர்ப்போடு நம்மிடையே இருக்கிறது என்றால் அதற்கு இவர்கள் பல காலம் இந்தக் கலைகளைக் காப்பாற்றி இன்று பொதுமக்கள் கையில் கொடுத்த காரணத்தினால்தான் என்பது மிகையன்று. இந்த விஷயத்தில் இவர்களது பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

உலக வரலாற்றின்படி உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு தனிப்பட்ட இனமோ, குழுவோ முழுமையாக ஒழிக்கப்பட்டு விடுவதில்லை. அவை உயிர்ப்புடன் மீண்டு வருவதைக் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களை வேரறுக்க முயன்றும் அவர்கள் இன்று வீரமுள்ள இனமாக ஆகிவிட்டனர். தேவதாசி முறை ஒழிந்ததால் நடனம் இசை முடிந்து போய்விடவில்லை. இன்று அவை மக்களின் கரங்களில் வந்து சேர்ந்து மேலும் பெருமையுடன் செயல்படத் தொடங்கிவிட்டன.
தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறும் “சின்ன மேளம்” நிகழ்ச்சி நமது பாரம்பரிய பெருமைகளையும், இசை நாட்டியத் துறைகளின் மேன்மையையும் பறை சாற்றுவதோடு, இன்று நாடெங்கும் தலைசிறந்து விளங்கும் நடனக் கலைஞர்களை இறைவன் சந்நிதியில் வந்து ஆடி இந்தக் கலையை மேலும் சிறப்புறச் செய்து கொண்டிருக்கிறார்கள். இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் இவர்களது பணியோடு இதுபோன்ற விழாக்களில் பங்குபெறும் பல்வேறு தொழிலாளர்களும் இவற்றால் பயன் பெறுகிறார்கள். மக்கள் இதுபோன்ற அரிய கலைகளுக்கு ஆதரவு நல்கினால்தான் பிற்காலச் சந்ததியினருக்கு இவற்றை நாம் விட்டுச் செல்ல முடியும்.
கட்டுரை ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன்,


“காதம்பரி” வெங்கட்ராமன்

            
“காதம்பரி” எனும் புனைபெயரில் எழுதி வந்த இவரது இயற்பெயர் வெங்கட்ராமன்.

இவர் கருவூலத் துறையில் பல காலம் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இவர் சிதம்பரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் பணியாற்றியிருக்கிறார்.

இளமைக் காலத்தில் இவர் எழுத்திலும், படிப்பிலும் அதிகமாக கவனம் செலுத்தினார். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் பேசவும், எழுதவும் நல்ல திறமை பெற்றவர்.

ஆங்கிலத்தில் SPRINGS என்ற பெயரிலும் BLOSSOM என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் மட்டுமே அடங்கிய பத்திரிகைகளை நடத்தி யிருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளை இயற்றுவதில் வல்லவர்.

கோவையிலிருந்து மரபின் மைந்தன் முத்தையா நடத்தும் “ரசனை” இதழ்களில் இவருடைய கட்டுரைகள், பெரும்பாலும், தமிழ், ஆங்கில எழுத்தாளர்களையும், சிறப்பு வாய்ந்த நூல்கள் பற்றியும் எழுதியவை வெளியாகியது. மூன்று வருஷங்கள் தொடர்ந்து இவர் எழுதினார். அதனைத் தொகுத்து திரிசக்தி பதிப்பகம் அவற்றை நூல்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இவருக்கு பழம்பெரும் எழுத்தாளர்களையும், அவர்கள் வரலாறுகளும் நன்கு தெரியும். பலரோடு நல்ல பழக்கமும் இவருக்கு இருந்திருக்கிறது.
திரைப்படத் துறையில் தொடக்க காலத்தில் பெரும் புகழ் பெறாத நேரத்தில் இயக்குனர் ஸ்ரீதர், கே.பாலசந்தர் ஆகியோருடனும் கவிஞர் கண்ணதாசன் ஆகியோரிடம் இவருக்குப் பழக்கம் இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீதர் படமெடுக்கத் தொடங்கிய காலத்தில் தன் படமான “எதிர்பாராதது” படத்திற்காக, புதுமையான பாடல் வேண்டுமென்று அறிவிப்பு செய்தபோது இவர் ஒரு பாடலை எழுதி அனுப்பினார். அது அந்தப் படத்தில் வந்தது ஆனால் அதில் இவர் பெயர் இல்லை. எனினும் அந்தப் பாடலுக்கான பணத்தை மட்டும் இவருக்கு அனுப்பி விட்டார். அந்தப் பாடல் “சிற்பி செதுக்காத பொற்சிலையே” என்ற பெரும் புகழ் பெற்ற பாட்டு.

இவருடைய அனுபவங்கள் பெரும்பாலும் சிறுகதைகளுக்கான கரு அமைந்தவைகளாகவே இருக்கும். அப்படி இவரோடு பழகியவர்கள் இவர் சொல்லும் சொந்த அனுபவங்களைச் சிறுகதைகளாக ஆக்கி, வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் இவர் அதிகமாக யாருடனும் பழகவோ, பேசவோ மாட்டார். ஆனால் அவருடைய எழுத்துலக ஆர்வத்துக்கு ஈடுகொடுப்பவர்கள் யாராயினும் அவர்களோடு நெருங்கிப் பழகி, பல அனுபவங்களை எடுத்துச் சொல்வார்.


தஞ்சை ப்ரகாஷ் போன்ற நமது ஊர் எழுத்தாளர்களோடு இவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. சென்ற சில மாதங்களுக்கு முன்பு அவர் கீழே விழுந்து இடுப்பில் அடிபட்டதன் பலனாக நடக்க முடியாத நிலையில் இருந்தார். அன்பும் அடக்கமும் கொண்ட இந்த திறமைசாலி கடந்த மாதம் தஞ்சையில் அவர் இல்லத்தில் காலமானார்.

ஆனந்த தாண்டவ தரிசனம்.

                  
பாற்கடலில் மகாவிஷ்ணு பாம்பணைமேல் பள்ளி கொண்டிருந்தார். அருகில் மகாலட்சுமி ஐயனுக்கு சேவை புரிந்து கொண்டிருந்தார். உலகில் அதர்மம் ஓங்கி தர்மம் அழியத் தொடங்கும்போதெல்லாம் ஆங்கு அவதாரம் செய்து தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்டும் பணியைத் திரும்பத் திரும்பச் செய்து வந்த களைப்பு. ஆதிசேஷனின் பட்டுப் பாம்புப் படுக்கையில் சிரம பரிகாரம் செய்து படுத்திருந்தார்.
அப்போது வழக்கம் போல கலகக்கார நாரதர் தன்னுடைய தம்பூரை மீட்டிக் கொண்டு, “நாராயணா, நமோ நாராயணா” என்று இசைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். நாராயணனுக்குத் தெரியும் இன்று புதிதாக ஏதோவொரு கலகம் இங்கு உருவாகப் போகிறது என்று. அதை நினைத்து அவர் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை தோன்றி மறைந்தது. இதனை கவனித்துவிட்ட மகாலட்சுமி பிறர் பார்க்கா வண்ணம் ஜாடையில் ஐயனை நோக்கி என்ன என்று கேள்வி எழுப்பினாள்.

மகாவிஷ்ணு மீண்டும் சிரித்துக் கொண்டு, “வாருங்கள் நாரதரே! இன்று என்ன விசேஷம். எங்கெங்கும் திரிந்து கலகத்துக்கு ஆள் கிடைக்காததால் இவ்விடம் வந்து சேர்ந்தீர் போலிருக்கிறது” என்றார்.

லட்சுமி இடை மறித்து நாரதரிடம் “ஐயனே! நீங்கள் நன்றாக இருங்கள். உங்களது வழக்கமான பணியை எங்களிடம் காட்டி விடாதீர்கள். ஐயன் இப்போதுதான் அவதாரங்களை முடித்துவிட்டுச் சற்று ஓய்வில் இருக்கிறார். அவர் அமைதியை ஏதேனும் வம்பு செய்து கெடுத்து விடாதீர்கள்” என்றாள்.

நாரதர் விடுவாரா “அன்னையே! ஐயனின் அமைதியைக் குலைக்க அடியவனால் முடியுமா? ஏதோ, இருவரும் பணிகளையெல்லாம் நன்றாக நிறைவேற்றி விட்ட ஆனந்தத்தில் ஏகாந்தமாக வீற்றிருக்கிறீர்களே, இந்த சந்தர்ப்பத்தில் இருவரையும் கண்டு வணங்கிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நீங்கள் என்னவென்றால், என் மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறீர்களே” என்றார்.

அப்போது பாற்கடலில் தன் பிரம்மாண்டமான உடலை சுருட்டிப் படுக்கையாக்கி அண்ணலையும், அன்னையையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷன் இவர்கள் பேச்சில் குறுக்கிட்டான்.
“ஐயனே! தங்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள்” என்றான் நாராயணனைப் பார்த்து.

“சொல்லு, உனக்கில்லாததா, என்ன வேண்டுமோ கேள். நீயும் ஒவ்வொரு அவதாரத்திலும் வந்து எனக்கு உதவியாக இருந்து கொண்டிருக்கிறாய். இப்போது நமக்கு வேறு எந்த அவசரப் பணியும் இல்லாத நேரத்தில் உன் வேண்டுகோளை நிறைவேற்ற நிச்சயம் வரமளிக்கிறேன்” என்றார் நாராயணன்.

நாரதர் குறுக்கிட்டார், “பெருமானே! ஆதிசேஷன் என்ன சொல்ல வருகிறான் என்று எனக்குத் தெரியும். அவன் எப்போதும் தங்களுக்குப் பணியாற்றுவதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதால், அவனுக்கென்று தனிப்பட்ட எந்த ஆசையோ, பற்றோ கிடையாது. இப்போது எல்லாம் அமைதியாக இருந்து கொண்டிருப்பதால் அவன் மனதில் ஏதோ வொரு ஆசை இருக்கிறது, அதை நிறைவேற்றிக் கொள்ள விரும்பியிருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.

மகாவிஷ்ணுவின் முகத்தில் புன்னகை தவழ ஆதிசேஷனைப் பார்த்துச் சொன்னார், “சேடா! சொல், உன் மனதிலுள்ள ஆசையை நான் நிச்சயம் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார்.

லட்சுமியும் மகிழ்ந்து “ நமக்கு இப்படியொரு சேவகன் வந்து அமைந்ததே பெரும் பாக்கியம். அப்படிப்பட்ட பாக்கியவான் ஏதோவொரு பிரதிபலனை எதிர்பார்க்கிறான் என்றால் நாம் நிச்சயம் அவனுக்காக செய்ய வேண்டும்” என்று சிபாரிசு செய்தாள்.

நாம் தனிமையில் இரகசியமாகத் தன் எஜமானரிடம் கேட்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்க, இந்த நாரதர் வந்து விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டு குரலைக் கனைத்துக் கொண்டு மிகவும் பவ்யமாக நாராயணனிடம் சொல்லத் தொடங்கினான்.

“ஐயனே! இந்த பூமி இப்போது சற்று அமைதியாக இருக்கிறது. தங்கள் கடைசி அவதாரமான கிருஷ்ணாவதாரத்தின் முக்கியத்துவம் முடிந்து போய் யாதவ குலம் முழுவதும் அழிந்து போனது. கிருஷ்ணி குலமும் தங்கள் பிரிவுக்குப் பிறகு சாபத்தால் பாதிக்கப்பட்டு விட்டது. இனி அடுத்துத் தங்களுக்கு எவ்வகை பணி வந்து சேருமோ தெரியாது. அதற்குள் என் மனதில் நீண்ட நெடு நாட்களாக இருக்கும் ஒரு ஆசையை இப்போது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதற்காகச் சில நாட்கள் தங்களிடமிருந்து பிரிந்து சென்று பூலோகத்தில் தில்லையம்பலம் எனுமிடத்தில் புது யுகம் தொடங்கிய ஆனந்தத்தில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போகிறாராம். அதைப் போய் பார்த்துவிட்டு வரத் தாங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும். நாட்டியத்தைப் பார்த்து முடித்ததும் உடனே நான் தங்கள் பணிக்குத் திரும்பி விடுகிறேன்” என்றான் ஆதிசேஷன்.

அப்போது நாரதர் குறுக்கிட்டு, “சேடா! நீ இப்படி உன் சுய உருவத்தில் போனால் அங்கு சிவன் ஆடமாட்டார், உன்னைப் பார்த்த பயத்தில் அங்கு வேடிக்கை பார்க்கும் மக்கள் எல்லாம் ஆடத் தொடங்கி விடுவார்கள்” என்றார்.

நாராயணன் சிரித்துக் கொண்டு சொன்னார், “ஆதி சேடா! உன் விருப்பப்படி நீ பூலோகம் சென்று பொன்னம்பலத்தில் சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைப் போய் கண் குளிர பார்த்துவிட்டு வா. அதுவரை நானும் மகாலட்சுமியும் சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறோம்” என்றார்.
ஆதி சேஷன் குறுக்கிட்டான். “ஐயனே, இந்த நாரதர் பெருமான் சொல்வதைப் பார்த்தால் நான் என்னுடைய இந்த உடலோடு அங்கு சென்றால் பூலோகத்து மக்கள் அச்சம் கொள்வார்களாமே, என்ன செய்வது? என்றான்.

மகாலட்சுமி சொன்னாள், “ஆதிசேஷா! கவலைப் படாதே. நீ ஒரு முனிவர் உருவத்தில் போ, நானே உன்னை அப்படியொரு முனிவராக ஆக்கி விடுகிறேன். நீ தனியாகப் போக வேண்டாம். தினமும் இறைவருக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து கொண்டு ஒரு முனிவர் இருக்கிறார். அவர் மரங்கள் மீதேறி புஷ்பங்களைச் சேகரிக்க மிகவும் சிரமப் படுகிறார் என்பதற்காக அவருக்கு மனிதக் கால்களுக்குப் பதிலாக புலியின் காலைக் கொடுத்து, சிரமமின்றி மரமேறி புஷ்பங்களைப் பறிக்கும்படியான வசதி செய்து கொடுத்திருக்கிறேன். அவர் பெயர் புலிக்கால் முனிவர் எனப்படும் வியாக்கிரபாத முனிவர். நீங்கள் இருவரும் சென்று ஆடலை தரிசித்து விட்டு வாருங்கள்” என்றாள் லட்சுமி.

“அப்படியென்றால் முனிவராக நான் எந்தப் பெயரில் போவது?” என்றார் ஆதிசேஷன்.

லட்சுமி சொன்னாள் “உனக்குப் பதஞ்சலி முனிவர் என்று பெயர் சூட்டுகிறேன். நீயும் வியாக்கிரபாதரும் சென்று நடராசப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பொன்னம்பலத்தில் கண்டு தரிசித்துவிட்டு திரும்ப வந்து எங்களிடம் ஆட்டம் எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டும்” என்றாள்.

உடனே நாரத முன்வர், “நாராயண, நாராயண, நான் வந்த காரியும் முடிந்து போயிற்று. ஆதிசேஷனுடன் நானும் பொன்னம்பலம் சென்று நடராசப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் காண வேண்டும், சென்று வருகிறேன்” என்று புறப்பட்டு விட்டார்.

அங்கிருந்து அனைவரும் பிரிந்து சென்ற பிறகு நாராயணனும், மகாலட்சுமியும் மட்டும் தனித்து விடப்பட்டனர். வசதியாகப் படுத்துறங்க இருந்த ஆதிசேஷனும் இப்போது இல்லை. என்ன செய்யலாம்? அப்போது லட்சுமி கேட்டாள், “ஐயனே, நமக்கோ இப்போது பணி ஒன்றுமில்லை, கலியுகம் தொடங்கி மக்கள் ஆனந்த மயமாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாமும் ஆதிசேஷனைப் பின் தொடர்ந்து மாறு வேடத்தில் சிதம்பரம் சென்று அங்கு சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?” என்றாள்.

“நல்ல யோசனை! அப்படியே செய்வோம். இப்போதே கிளம்புவோம், நான் முனிவராகவும், நீ ஒரு முனிபத்தினியாகவும் சென்று தில்லை நடராஜனின் நடனத்தைக் காண்போம். எப்போதோவொரு முறை கிடைக்கக் கூடிய அரிய நடனம் இது. வா, புறப்படலாம்” என்றார்.
நாராயணனும் மகாலட்சுமியும் முனிவராகவும், முனிபத்தினியாகவும் வான் வழியாகச் சென்று தில்லையம்பலம் எனப் புகழ்பெற்ற சிதம்பரத்தை அதாவது ஆகாயத் தலத்தைச் சென்றடைந்தனர்.

பொன்னம்பலத்தில் கூட்டம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. தாங்கள் சுய உருவில் வந்திருந்தால் இந்நேரம் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு வந்து கலியுகத்தில் திரையுலக நட்சத்திரங்களை மொய்த்துக் கொள்வது போல மொய்த்துக் கொண்டு விடுவார்கள். ஆகையால் நாம் ஒருவரும் அறியாத வண்ணம் உள்ளே சென்று ஓரமாக ஒரு தூணின் பின்னால் நின்றுகொண்டு நடனத்தை ரசித்துவிட்டு வரலாம் என்றார் நாராயணன்.
பொன்னம்பல அரங்கைச் சுற்றி கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. நந்தி மத்தளம் வாசிக்கத் தொடங்கினார். தேவ கணங்கள் இசை வாத்தியங்களையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தனர். ‘தேம் தாம்” என்று நட்டுவாங்கம் தொடங்க, நடராஜப் பெருமான் தங்கம் போல ஒளிவீசும் ஜோதி மயமான உடலோடு புலித்தோலை அரைக்கு அணிந்து, பாம்பை இடுப்பில் சுற்றிக் கொண்டு, ஒரு கையில் தீயையும், இன்னொரு கையில் உடுக்கை எனும் ஒலிவாத்தியக் கருவியையும் ஏந்திக் கொண்டு ஆடத் தொடங்கினார்.

மெல்லத் தொடங்கிய ஆட்டம், போகப்போக உக்கிரமாகத் தொடங்கியது. உலகின் தீமைகள் எல்லாம் ஓர் உருக்கொண்டு அருவருக்கத் தக்க உருவத் தோற்றத்தோடு அங்கு வந்து நிற்க அதை இழுத்துத் தான் காலடியில் வீழ்த்தி அதன் மீதேறி ஐயன் ஆடத் தொடங்கினார்.
இப்போதாக இருந்தால் யாராவது ஒருவர் “யார் ஆடினார், இனி யார் ஆடுவார், தில்லை நடராசனைப் போல பொன்னம்பலத்தில் இனி யார் ஆடுவார்” என்று பல்லவியைத் தொடங்கி ஒரு அழகான பாடலைப் பாடியிருப்பார்.

அப்போதும் பாடினார்கள், தேவகணங்கள் இசை அமைக்க தெய்வீகப் பாடல்களை முழங்க உலகோர் வியந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, பூமிப்பந்தின் மேலே இறைவன் சுற்றிச் சுற்றி ஆடினார். சுழன்று சுழன்று ஆடினார். அவர் ஆடிய ஆட்டத்தில் எங்கும் சுழற் காற்று பேய்க்காற்றாக வீசத் தொடங்கியது. பூமியில் பொந்தில் இருந்த நாகங்கள் தங்கள் தலைக்கு மேல் ஏதோ பெரும் ஓசை கேட்டு வெளியில் வந்து ஆட்டத்தைப் பார்த்த வண்ணம் படுத்துக் கிடந்தன. நாராயணனின் மாற்று வாகனமான கருடாழ்வார் வானத்தில் சுற்றிப் பறந்து வந்து இந்த ஆனந்தக் காட்சியைக் கண் இமைக்காமல் பார்த்து ரசித்தார்.

சரஸ்வதி தேவி தன் யாழை மீட்டி இசைக்கு இனிமை சேர்த்தார். பிரம்மன் வரமுடியவில்லை, படைப்புத் தொழிலில் மிகவும் தீவிரமாக இருந்ததால் அவருக்கு மனைவியோடு வந்து ஆட்டம் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

ஆட்டம் பல்வேறு தாளகதியில் நடந்து கொண்டிருந்தது. பூமி தன் சுழற்சியைச் சற்று நிறுத்திவிட்டு ஆட்டத்தைக் கண்டு களித்தது. வானம் கண்கள் பனிக்க ஆனந்தக் கண்ணீரை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. இடியும் மின்னலுமாக இந்திரன் தன் பரிவாரங்களுடன் வந்து இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தான்.

இப்படி கோலாகலமாக பொன்னம்பலத்தில் நடராசப் பெருமானின் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். நெடு நாட்கள் நடந்த இந்த நடனத் திருவிழா முடிந்து அவரவர் ஊருக்குத் திரும்பினர். ஆதிசேஷனும் பணிக்குத் திரும்ப பெருமாள் அவன் மீது சயனம் கொண்டார். லட்சுமி வழக்கம் போல் சேவை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, பூமியில் பொன்னம்பலமாம் சிதம்பரத்தில் ஒரு சோழமன்னன் அற்புதமான ஓர் ஆலயத்தை நடராசப் பெருமானுக்காக உருவாக்கிக் கொண்டிருந்தான். அந்த ஆலயத்தில் சிவபெருமான் லிங்க வடிவிலும், நடராஜப் பெருமான் ஆடல்வல்லானாகவும் கோயில் கொண்டனர். ஆலயம் எழுப்பிக் கொண்டிருந்த சோழ மன்னனுக்கு அமைச்சர்கள் இந்த இடத்தில் ஆடல்வல்லான் ஆடிக் கொண்டிருந்த போது ஆதிசேஷனும், வியாக்கிரபாதரும் முனிவர் வடிவில் வந்து தரிசித்ததையும், அவர்கள் அறியாமல் நாராயணனும், மகாலட்சுமியும் பாற்கடலை நீங்கி பொன்னம்பலம் வந்து அங்கு ஐயனின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தார்கள் என்ற விவரத்தையும் சொன்னதும், மன்னன் வியந்து போற்றி, பாராட்டி அப்படியானால் நான் சிதம்பரத்தில் உருவாக்குகின்ற இந்த ஆலயத்தில் நடராஜருடைய ஆட்டத்தை ரசிக்கும் பாங்கில் நாராயணனுக்கு ஓர் சந்நிதியை உருவாக்கி அவருக்கு கோவிந்தராசப் பெருமாள் என்ற நாமகரணத்தையும் சூட்டுவதாகச் சொன்னதும் அமைச்சர்களும், பிரதானிகளும், பொதுமக்களும் கேட்டு ஆனந்த மடைந்தார்கள்.
ஆலயம் உருவாகியது. சிவாலயமாக உருவெடுத்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ளேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உருவானது. இப்படியே காலம் ஓடிக் கொண்டிருந்தபோது கலியுகம் பல லட்சம் ஆண்டுகள் ஓடி நாகரிகம் முற்றிப் போய், இறை நம்பிக்கைக் குறைந்து மக்கள் புராணங்களையும், இறைவனையும் பொய் என்று சொல்லி நம்ப மறுத்த போது, அப்போது மக்களை மயக்கிக் கொண்டிருந்த ஒரு திரையில் நிழலாகத் தோன்றும் ஒரு கலை உருவானது. 

அப்படிப்பட்ட திரையில் நிழலாடும் ஒரு கதையில் தில்லை அம்பலத்தில் இருந்த நடராஜரின் சிவாலயத்தில் பெருமாளுக்கு எதற்கு சந்நிதி என்று வீர சைவனாக இருந்த ஒரு மன்னன் கோவிந்தராஜப் பெருமாள் சிலையையும், அவரை வழிபட்ட பட்டரையும் சங்கிலியால் கட்டு கடலில் போட்டுவிட்டதாகச் சொல்லி சைவ வைணவப் பூசலைக் கிளப்பி விட்டனர்.

நல்ல காலம் அப்போதெல்லாம் இதுபோன்ற சில்லரை காரணங்களுக்காக ஆறாம், ஏழாம் நூற்றாண்டு போல சைவ வைணவ கலகம் எதுவும் உருவாகி விடவில்லை. இந்த காலத்துக்கு ஏற்ப வேறு விதமான மதக் கலவரங்கள் வந்து விட்டதால் இது எடுபடாமல் போய்விட்டது.
இப்படியாக நாரத முனிவர் உருவாக்கிய கலகம் சிதம்பரத்தில் நல்லவிதமாக முடிந்து போனது. 
கதை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தலைவர், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழு, 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885






வீர சாவர்க்கர் செய்த சாகசம்.

                                     
வீர சாவர்க்கர் லண்டனில் இருந்த போது இந்தியா ஹவுசில் புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்தார் என்று வழக்கு நடந்தது. அவரை இந்தியாவுக்கு பலத்த காவலுடன் கப்பலில் அனுப்ப வேண்டுமென்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி ஏராளமான காவலர்கள் புடைசூழ சாவர்க்கர் இந்தியா செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டார்.

இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் ஒரு வார காலம் பயணம் செய்திருக்கும். அப்போது அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்சேல்ஸ் எனும் பிரபலமான துறைமுக நகரில் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்றது. அங்கு ஒரு விடியற்காலை நேரம், சாவர்க்கர் கழிவரைக்குப் போகவேண்டுமென்று சொன்னதும், பலத்த காவலுடன் அவரை அங்கு செல்ல அனுமதித்தனர். காவலர்கள் கழிவரை வாயிலில் நின்று காவல் காத்தனர். உள்ளே நுழைந்த சாவர்க்கர் அந்த அறையின் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டார். அங்கு எதிரில் சுவற்றில் காற்று வெளியேறுவதற்கென்று ஒரு வட்டமான துவாரம் காணப்பட்டது. மெல்ல அதனுள் நுழைய முயற்சி செய்தார் அவர் உடல் அதனுள் நுழைய முடியவில்லை. உடனே தன்னுடைய ஐரோப்பிய பாணி உடைகளையெல்லாம் களைந்துவிட்டு நிழைந்து பார்த்தார். அவர்கள் உடை ஏராளமானவை என்பதால், அவைகளைக் களைந்தவுடன் அவர் உடல் அந்த துவாரத்தினுள் நுழைந்தது. இந்த சந்தர்ப்பத்திற்காக அவர் பல நாட்கள் பட்டினி இருந்து உடலை இளைக்க வைத்திருந்தார்.

அந்த துவாரத்தினுள் நுழைந்து வெளிப்புறம் வெளியேறி கடல் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். அப்படி உடைகளை நீக்கிய நிலையில் நிர்வாண கோலத்தில் இவர் கடல் நீரில் நீந்துவதைக் கண்டு மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டனர். உடனே கழிப்பறை வாயிலில் காவல் இருந்த காவலர்கள் ஒடிவந்து பார்த்தபோது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியக் கைதி கடலில் நீந்திச் செல்வதைக் கண்டனர்.
உடனே இரு காவலர்கள் கடலில் குதித்து “திருடன், திருடன், கைதி தப்பியோடுகிறான்” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்து நீந்திச் சென்றார்கள். இப்படி தப்பியோடும் சாவர்க்கரின் முயற்சிக்கும், அவரைப் பிடிக்க கடமை உந்தப் பின்தொடரும் காவலர்களின் முயற்சிக்கும் வித்தியாசம் உண்டல்லவா? எப்படியும் தப்பிவிட வேண்டுமென்கிற வாழ்வா சாவா போராட்டத்தில் நீந்திய சாவர்க்கரே முதலில் கரை சேர்ந்தார். இங்கு கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்பியோடி வருவார் என்பது தெரிந்திருந்த மேடம் காமா அம்மையாரும், வேறு சிலரும் இவரது வரவுக்காகக் ஒரு காரோடு கரையில் காத்திருந்தனர். கடற்கரைக்கும் கார் நின்ற இடத்துக்குமிடையே சற்று தூரம் அதிகம் இருந்தது.

நிர்வாணமாக கரையேறிய சாவர்க்கர் காரை நோக்கி ஓடத் துவங்கினார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த பிரெஞ்சு காவலன்  ஒருவன் இவர் காரை நெருங்கும் முன்னரே அவரைப் பிடித்துவிட்டான். அதற்குள் கப்பலில் இருந்து இறங்கி வந்த சில காவலர்களும் தங்கள் கைதி தப்பி ஓடிவருகிறான், அவனைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்று பிரெஞ்சு காவலரிடம் கேட்டனர். அந்த நேரத்தில் வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சில இந்திய புரட்சிக்காரர்கள் அங்கு வந்து, இந்த இடம் பிரெஞ்சு பிரதேசம், இங்கு ஆங்கில அதிகாரிகள் யாரையும் கைது செய்ய உரிமையில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், அவர்களுடைய வாதம் எடுபடாமல் போனது. அந்தப் பிரெஞ்சு அதிகாரி சாவர்க்கரை கப்பலில் வந்த ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் ஆங்கில அதிகாரிகளிடம் கைதியாக மாட்டிக் கொண்டு கப்பலில் ஏற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மறுநாள் பிரெஞ்சு பத்திரிகைகள் இப்படி தங்கள் பிரதேசத்தினுள் நுழைந்து ஆங்கில அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்ததை கண்டித்து எழுதின. பிரெஞ்சு அரசாங்கமும் தங்கள் ஆட்சேபணையை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் அப்போது தி ஹேக் எனுமிடத்தில் இருந்த சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரிட்டிஷ் போலீசார் நியாயம் தவறவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இப்படி நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தேசபக்தர்களையும் அவர்களுடைய தியாகங்களையும் புரியாமல் சிலர் பிற்காலத்தில் இவர் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவரை அவமரியாதை செய்தனர் என்பதை அறியும்போது, நம் இந்திய தேசத்தில் தேசபக்திக்கு இதுதானா மரியாதை என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

நாட்டியத்தைப் பற்றி.........வழுவூர் ராமையா பிள்ளை

                                      
(சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆசிரியராக இருந்த “தமிழன் குரல்” எனும் பத்திரிகையில் 1955ஆம் வருஷம் ஐயா வழுவூர் ராமையா பிள்ளை அவர்கள் எழுதியுள்ள கட்டுரை)

ம் தமிழ் நாட்டில் நாட்டியக்கலை ஐம்பது வருடங்களுக்குப் பின்னால், சுமார் பத்து வருடங்களாக (அவர் சொல்வது 1955இல்) முன்னேறத் தொடங்கி தற்காலம் உன்னத ஸ்தானத்தை அடைந்திருக்கிறது. பரத நாட்டியக் கலையின் பெருமை உலகில் எல்லோருக்கும் ஓரளவு தெரிந்து, உலகம் முழுவதும் நமது நாட்டியக் கலைக்கு நல்ல வரவேற்பும் உயர்ந்த மதிப்பும் இருந்து வருகிறது. இது மென்மேலும் நல்ல முறையில் அபிவிருத்தியாகி கலையின் தரம் குறையாமல் தெய்வீகமான நமது பரத நாட்டியக்கலை உலகெங்கும் என்றென்றும் சிறப்பாக வியாபித்து நிலைத்திருக்க வேண்டும்.

கலையின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், கலைஞர்களும், ரஸிகர்களும் இக்கலையின் பெருமையையும், கலையின் நுணுக்கங்களை யும் ஓரளவிற்கு அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். கலைஞர்களாக உள்ளவர்கள் புத்தகங்களைப் படிப்பதனாலும், கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்ப தனாலும் மாத்திரம் கலைஞர்களாகிவிட முடியாது. அநேக வருடங்கள் நல்ல குருகுலவாசம் செய்து சிறந்த குருபக்தியும், ஈச்வர பக்தியும் உள்ள வர்கள்தான் உண்மைக் கலைஞர்களாக விளங்க முடியும். குருபக்தி உள்ள வர்களுக்குத்தான் ஈச்வர அநுக்கிரகம் ஏற்படும். அவர்களால் செய்விக்கப் படும் நாட்டியம், நாடகம், கவிதை, சங்கீதம், சித்திரம், சிற்பம் முதலியவை கள்தான் உலகத்தில் போற்றப்பட்டுப் பிரகாசிக்க முடியும். இது அனுபவ பூர்வமான விஷயமாகும்.

உலகத்தில், மனிதர்களிடத்திலும் சகல ஜீவராசிகளிடத்திலும் இயற்கையாக ஏற்படக்கூடிய பல செயல்களில் ஏற்படும் விசேஷமான அம்சங்களை யெல்லாம் ஒன்று திரட்டி வரையறுத்து நமது முன்னோர்களாகிய அநேக மஹானுபாவர்கள் பரத சாஸ்திரங்களை எழுதியிருக்கிறார்கள். பசுவின் கன்றானது தன் தாயிடம் பால் அருந்தி உற்சாக மிகுதியால் குதித்து விளையாடி ஓடும்போது அதனிடம் எத்தனை விதமான அசைவு, நெளிவு, பாய்தல், குதித்தல் முதலிய அழகு நிலைகளைக் காண்கிறோம். இதைப் போலவே தோகையை விரித்து ஆடும் மயிலினிடத்திலும் எவ்வளவு அழகிய தோற்றங்களை நாம் காண நேரிடுகிறது! இவ்விதமான இயற்கை நிகழ்ச்சிகளைக் கண்ட சிவபக்தர்கள் பாடிய தேவாரத்தில் ‘வண்டு பாட, மயில் ஆட, மான் கன்று துள்ள, வரிக்கெண்டை பாய’ என்று பாடியிருப்பதைக் காண்கிறோம்.

அகஸ்தியர் பரத சூத்திரத்தில் அகக்கூத்து, புறக்கூத்து, பொதுக்கூத்து என்று மூன்று விதமாகக் கூறப்படுகிறது. அகக்கூத்து மகான்கள் த்யான நிஷ்டை யில் அவர்கள் மனக்கண்ணால் காணக்கூடியது. புறக்கூத்து அறுபத்து நான்கு, பொதுக்கூத்து பன்னிரெண்டு. இவைகளில் நவரசத்தை அநுசரித்த ஆனந்த செளசியா தாண்டவம், அற்புதத் தாண்டவம், அகோர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், சதாத் தாண்டவம், பிரளய தாண்டவம், சண்டத் தாண்டவம், சந்தியா தாண்டவம், சாந்தித் தாண்டவம் என நவதாண்டவ விவரமும், ஆனந்த நடனம், கெளரி தாண்டவம், சந்தியா நடனம், திரிபுர நடனம், காளி நடனம், முனி நடனம், சங்கர நடனம் என்ற சப்த (ஏழு) தாண்டவங்களைப் பற்றியும் இன்னும் பல சாஸ்திரங்கள் விரிவாகக் கூறுகின்றன. புறக்கூத்தாகிய 64-ம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆடப்பட்ட வையாகும். அவைகளில் பாண்டரெங்கம் என்பது திரிபுராதிகளை எரித்த போது ஆடியது. கொடுகொட்டி என்பது திரிபுராதிகளை எரித்த சுடலையில் ஈஸ்வரன் கைகொட்டி ஆடியது. கபாலம் என்பது ப்ரம்மனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கிள்ளிக் கபாலம் ஏந்தி ஆடியது*. பதஞ்சலி வியாகிர பாதருக்காக சித்தரஹாசம் என்னும் சிதம்பரத்தில் ஆடியது ஆனந்த தாண்டவம் ஆகும். எனது ஜனன பூமியாகிய வழுவூரில் கரிஉரி (யானையின் தோல்) போர்த்தி – தாருகவன ரிஷிகளுக்கு ஏற்பட்டிருந்த மமதை, அகங்காரம் என்னும் மாயையான இருள் நீங்கி ஞானோதயமான சுடர் விளங்க ஆடியது நவதாண்டவமாகும். மூர்த்தியை ஞானமூர்த்தி என்றும், சபையை ஞானசபை என்றும் அவ்வூரை ஞானபூமி என்றும் சொல்வதுண்டு.

இவைகள் தவிர, ப்பாவப் பிரகாச ரசமஞ்சரி, அமர சதகம், முதலிய நூல்களிலும் நந்திகேஸ்வரர், பரதர் முதலியவர்களின் பரத சாஸ்திரத் திலும் ப்பாவங்கள் அதனால் ஏற்படும் நவரசங்கள், நாயகா நாயகி விதங்கள் பற்றியும் ராகம், தாளம், கீதம், வாத்யம் முதலியவற்றிற்கு லக்ஷணங்கள் முதலியவையும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. ஆங்கிகம், வாசிகம், ஆகார்யம், சாந்திகம் என்னும் நான்குவித ப்பாவங் களினால் ஏற்படும் ஸ்ருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், பயாதிகம், பீபத்ஸம், ரெளத்ரம், சாந்தம் முதலிய நவரசங்களில் ஸ்ருங்காரம், சம்போக ஸ்ருங்காரம், விப்ரலம்ப ஸ்ருங்காரம் என்று இரு வகையாகும். இதில் சம்போக ஸ்ருங்காரம் காதலர்கள் எண்ணம் கை கூடுவதால் ஏற்படுவது. விப்ரலம்பம் காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரிவதால் ஏற்படுவது அல்லது உத்தம நாயகி ஒருத்தி தான் நேரில் அல்லது கனவில் கண்டோ அல்லது குணாதி விசேஷங்களைக் கேள்வி யுற்றோ, காதலித்த கணவனை அடைய முடியாமல் இருக்கும் தருணத்திலோ, ஏற்படும் விரகதாபங்களை விப்ரலம்ப ஸ்ருங்காரம் என்று கூறுவர். உதாரணமாக ருக்மணிதேவி கிருஷ்ணனுடைய குணாதி விசேஷங்களைக் கேள்வியுற்று காதல் கொள்கிறாள். இதற்கு ‘ஸ்ருத்வாகுணான் புவன சுந்தரஸ்ருண்மதாந்தே’ எனும் ஸ்லோகப் பூர்வமாகத் தெரிகிறது. பாணாசுரனின் பெண் உஷாதேவி, அநிருத்தனைக் கனவில் கண்டு காதல் கொள்ளுகிறாள். சீதாதேவி ராமனை நேரில் கண்டு காதல் கொள்ளுகிறாள்.

இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரம் – விரகம், அயோகம், மானம், ப்ரபாசம், சாந்தம் என ஐந்து வகையாகும். இதில் விரக விப்ரலம்ப ஸ்ருங்காரத்திற்கு இதிகாச புராணங்களில் எவ்வளவோ சம்பவங்களும் விசேஷங்களும் காணக் கிடைக்கின்றன.

பழைய பதங்கள் என்னும் காரணத்தினால் ஆபாசமான கருத்துக்கள் உள்ள அநேக பதங்களையும், ஸ்லோகங்களையும் தற்காலம் அநேகர் கையாளுவதைப் பார்த்து வருந்தத்தான் வேண்டியிருக்கிறது. பழைய பதங்களாய் இருந்த போதிலும் ஆபாசமான கருத்துக்கள் இல்லாமல் உயர்ந்த கருத்துக்கள் உள்ளதாய்த் தேர்ந்தெடுத்துக் கையாளப்படுவதுதான் அறிவுடைமையாகும். பொதுவாக விரக விப்ரலம்ப ஸ்ருங்காரத்தால் ஒரு நாயகிக்கு ஏற்படும் விரக தாபத்தின் செயல்களை, பல நூல்களில் முன்னோர்களால் கூறப்பட்டிருப்பதைக் கீழே எழுதுகிறேன். அன்னம், பால், பழங்கள் முதலிய உணவுகளையும், ஆடை ஆபரணம் முதலிய அலங்காரங்களையும் அன்பாக வளர்க்கும் கிளி, மான், குயில், அன்புக்குரிய தோழிகள், தாய் முதலியோரையும் கூட வெறுக்கும்படி நேரிடும். தேகம் இளைத்துப் போகும். வெட்கம் நீங்கிப் போகும். நெஞ்சம் புண்ணாய் இருக்கும். கண்ணீர் பெருகும், பெருமூச்சு, அதிகமான சிந்தனை, நடுக்கம், சோகம் முதலியவைகள் உண்டாகும். ஒரு நிமிஷம் ஒரு யுகம்போல் தோன்றும். கழுத்தில் அணிந்திருக்கும் முத்தாரங்கள் நீற்றுப் போகும். அதரம் வெடித்துப் போகும். கை வளையல்களும், இடுப்பு ஒட்டியாணமும் நழுவிவிடும். தனிமையில் இருக்கப் பிரியம் உண்டாகும். நாயகன் வரும் காலத்தைக் குறி பார்ப்பாள். அவன் பிரிந்த நாளை எண்ணி வருந்துவாள். இனி எப்பொழுது வருவானோ என்று ஏங்குவாள். சொப்பனத்தில் நாயகன் வந்ததாகக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுவாள். ஜாக்ரதாவஸ்தையில் அவள் பார்க்கும் பொருள்கள் எல்லாம் நாயகன் போலத் தோன்றும். நாயகன் பேச்சு என்றால் சந்தோஷமும் மற்ற விஷயங்கள் பேசினால் அருவருப்பும் உண்டாகும். நாயகனால் செய்யப்படும் செய்கைகளையும் அவனுடைய படங்களையும் ஆடை ஆபரணங்களையும் தானும் நாயகனும் கூடியிருந்த இடங்களையும் கண்டு மலைப்பாள். தன் விதியை நினைத்து உருகுவாள். இனியேனும் இவ்வித சங்கடம் நேராமல் இருக்கவும் துயரங்கள் தீரவும் தெய்வத்தைக் கோருவாள். இதுபோல் இன்னும் அநேக விதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த விதமானப் ப்பாவங்களுக்குத் தகுந்ததாய்த் தெலுங்கு, சம்ஸ்கிருதம், தமிழ் முதலியவற்றில் அநேக பழைய பதங்கள் இருந்தாலும், சமீப காலத்தில் கவி சிரேஷ்டர்களாய் விளங்கியவர்களில் அமரகவி பாரதியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் இயற்றிய பாடல்களில் இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரத்திற்குப் பொருத்தமான அநேக பாடல்கள் இருக்கின்றன. அமரகவி பாரதியார் இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை எவ்வளவு தெளிவாக “தூண்டில் புழுவினைப் போல்” என்ற பாடலில் வர்ணிக்கிறார்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
(சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆசிரியராக இருந்து வெளியிட்ட “தமிழன் குரல்” எனும் பத்திரிகையில் பிப்ரவரி 1955இல் வெளியான கட்டுரை இதை நூல்வடிவம் ஆக்கியது ம.பொ.சி. அவர்களின் பெயர்த்தி தி.பரமேஸ்வரி, நூல் வெளியீடு நர்மதா பதிப்பகம், சென்னை 600083.)

*கரி உரி’ என்று வழுவூர் புராணத்தைப் பற்றிச் சொல்கிறார். அங்கு சிவன் கஜமுகாசுரனை வதம் செய்து அந்த யானை சிவனை விழுங்கிவிட்டதால், அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு சிவபெருமான் வெளிவருகிறார். ஆகையால் அந்த யானையின் தோலையே ஆடையாக அங்கு சிவன் அணிந்திருப்பதைக் குறிப்பது.

*ப்ரம்மனின் ஐந்து சிரங்களில் ஒன்றை சிவபெருமான் கொய்த வரலாற்றை இங்கு குறிப்பிடுகிறார். இந்த புராணம் நமது திருக்கண்டியூர் சிவபெருமானைப் பற்றியது. அதனால்தான் இங்கு சிவனுக்கு பிரம்ம சிரக் கண்டீசர் என்று பெயர். இவருடைய ப்ரம்மஹத்தி தோஷத்தை அங்குள்ள பெருமாள் நீக்கியதால், அவருக்கு “ஹரசாப விமோசன பெருமாள்” என்று பெயர்.

திருவையாற்றுத் தேவாரத்தில் திருஞான்சம்பந்தரும், திருநாவுக்கரசரும் நாட்டியம் இசை பற்றி அதிகம் குறிப்பிடுகிறார்கள். (விவரங்களுக்குத் திருவையாறு தேவாரங்களைப் பார்க்கலாம்)



Thursday, May 5, 2016

திருச்செங்கோடு ஆசிரமம்.



நாட்டில் விளம்பரமில்லாமல் பல நல்ல செயல்களை நம் முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள். சுதந்திர இயக்கம் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கள் குடிப்பதிலும், படிப்பறிவில்லாமல் அறியாமை இருளிலும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டு பல இழிவுகளைத் தாங்கிக் கொண்டும் இருக்கும் நிலைமையை மாற்றி மனிதர் அனைவரும் சமம் எனும் நிலைமையைக் கொண்டு வரவேண்டுமென்று அன்றைய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் எண்ணினார்கள்.


இதையெல்லாம் அவர்கள் எண்ணத்தில் மட்டும் இருந்தால் போதுமா? இன்றைய நிலை அன்றிருந்தால் மேடை போட்டு நான் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன் என்று வாய்ப்பந்தல் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஆனால் அன்றைய தமிழ் நாடு இருந்த பிற்போக்கான நிலைமையில் தாழ்த்தப்பட்டவர்களை மீட்டு சமுதாயத்தில் கெளரவமான இடத்தில் வைக்க வேண்டுமென்று சுதந்திரப் போராளிகள் நினைத்தனர்.
விளைவு? 1925ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அதாவது ராஜாஜி தான் பிறந்து வளர்ந்த அப்போதைய சேலம் மாவட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில், சில நல்ல மனிதர்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில் ஓர் ஆசிரமத்தைத் தொடங்கினார். அதுதான் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என்ற பெயரோடு இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
                        ஆசிரமத்தில் ராஜாஜி வாழ்ந்த வீடு

ராஜாஜிக்கு அப்போதிருந்த ஒரே கவலை கிராமப் பகுதிகளில் இருக்கும் உழைக்கும் மக்கள் குடி போதைக்கு ஆளாகியிருப்பதை மாற்றி அவர்களை மற்றவர்கள் போல நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்பதுதான். மகாத்மா காந்தியடிகள் அறிமுகம் செய்த சர்வோதயமும், கிராமப்புற மேம்பாடும், வேலைவாய்ப்புகளை அளிக்கவும் இந்த ஆசிரமம் தோற்றுவிக்கப்பட்டது. கிராமப் பொருளாதர வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும், அதற்கு பேசினால் மட்டும் போதாது கிராமப் பகுதிகளிலேயே வந்து ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கி அந்த மக்களுக்கு அங்கு இருக்கும் வசதிகளைக் கொண்டு என்னென்ன தொழில்களைத் தொடங்க முடியுமோ அவற்றைத் தொடங்கி அவர்களுக்கு ஒரு நிரந்தர வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பது குறிக்கோள்.

அந்த மகான்களுடைய கனவு இன்று நனவாகி ஓரளவுக்கு அந்த கிராமப் புற மக்கள் முழுவதுமாக மாறியதோடு இல்லாமல் 2013 மதிப்பீட்டின்படி இது மிகச் சிறந்த கிராம காதி கைத்தொழில் விருதினைப் பெற்றதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
                             வீட்டினுள் ராஜாஜி

இப்போது இங்கு 116 நிரந்தரமான ஊழியர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தொழில் கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்து பல்வேறு காதி கிராமப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு காந்தியடிகளின் கொள்கைகள் கற்றுக் கொடுப்பதினும் நடைமுறைப் படுத்தப்படுவதை கடைபிடிக் கிறார்கள். இந்த ஆசிரமத்தை ராஜாஜி 1925இல் தொடங்கும் போது இந்தப் பகுதி வாழ் பெண்மணிகளுக்கு நூல் நூற்றல் கற்றுக் கொடுத்தார். ஏன் என்றால் அந்த கால கட்டத்தில் இங்கிருந்தெல்லாம் இலங்கைக்குக் கூலி களாக நமது பெண்மணிகளை கங்காணிகள் எனப்படுவோர் அழைத்துச் சென்று குடியேற்றிக் கொண்டிருந்தனர். இங்கு மழை இல்லை, விவசாயம் இல்லை, வேலை இல்லை, எனவே இவர்கள் பிழைப்பு தேடி இலங்கைக்குக் கூலிகளாகச் சென்று துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இங்கு உற்பத்தியாகும் பஞ்சைக் கொண்டு போய் வீடு வீடாக பெண்களிடம் கொடுத்து அவர்களை நூல் நூற்க வைத்து, அந்த நூலைக் கொண்டு தறி போட்டு துணி நெய்து இந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை இங்கேயே மகிழ்ச்சியோடு வாழ வழி செய்தது இந்த ஆசிரமம். அதோடு உடல் ஊனமுற்ற பெண்கள், ஆண்கள் உட்பட இவர்களை ஆசிரமத்திலேயே வைத்துக் கொண்டு அவர்களை நூல் நூற்கச் செய்து அவர்களையும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைத்தனர் இவர்கள். இவர்களைப் போன்ற பலரும் இந்த ஆசிரமத்தில் இருக்கின்றனர். சாதாரண ஊழியருக்குக் கொடுப்பதை விட இவர்களுக்கு அதிகப்படியான கூலியும் உண்டு.
                   ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வருகை புரிந்தபோது

இன்றைய தினம் இங்கு மரச் சாமான்கள், கைத்தறி சேலைகள், மற்ற பல வகையான தினசரி தேவைக்கான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று நவீன தொழிற்சாலைகளில் இதுபோன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப் பட்டாலும், இவர்களது பொருட்களுக்கு ஆதரவு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஆசிரமம் உருவாக்கிட 1925இல் நான்கு ஏக்கர் நிலத்தை ரத்தினசபாபதி கவுண்டர் எனும் நல்ல உள்ளம் கொண்டவர் தானமாகக் கொடுத்தார். இவர் இந்தப் பகுதியில் ஒரு வசதி படைத்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கொடுக்க மனம் வந்ததே, அதுதான் காந்தியடிகளின் மகிமை. எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் முதலில் ராஜாஜியுடன் இந்த ஆசிரமத்தில்தான் இருந்தார்.
திருச்செங்கோடு ஊரிலிருந்து சுமார் பதினொரு கி.மீ. தூரத்திலுள்ள புதுப்பாளையம் எனும் இடத்தில்தான் இந்த ஆசிரமம் இருக்கிறது. நுழை வாயிலில் ஆசிரமத்தின் பெயரும் அடர்ந்த ஆல மரமும் படத்தில் பார்க்கலாம். கவுண்டர் கொடுத்த நான்கு ஏக்கர் நிலப்பரப்பு இப்போது இருபத்தி நான்கு ஏக்கருக்கு விரிவடைந்து காணப்படுகிறது.

ஆசிரமத்தில் பெண்கள் ஆங்காங்கே பல பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் அங்கு எந்தவித பேச்சோ, ஆரவாரமோ இன்றி அமைதியாக இருக்கும். ராஜாஜி இங்கு தங்கிக் கொண்டுதான் மதுவிலக்குப் பிரசாரம் செய்து வந்தார். ராஜாஜி சேலம் ஜில்லாவைச் சேர்ந்தவர். ஆகையால் இவரது கொள்கையான மதுவிலக்கை முதன்முதலில் 1930இல் இவர் திருச்செங்கோடு, ராசிபுரம், சங்ககிரி ஆகிய தாலுக்காக்களில் அறிமுகம் செய்து கள்ளுக் கடைகளை மூடும்படி செய்தார். இதில் அதிசயம் என்னவென்றால் இவர் கொள்கையைத்தான் சொன்னார், ஆனால் மக்களோ தாங்களே முன்வந்து இந்தக் கடைகளை மூடினார்கள்.
இன்றும் புதுப்பாளையம் செல்வோர் காந்தி ஆசிரமத்தைப் பாருங்கள். அங்கு நடைபெறும் கிராம முன்னேற்றத் திட்டங்களைப் பாருங்கள், காந்திய சிந்தனைகள் புத்தகங்களில் மட்டுமல்ல, செயல் வடிவத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை உலகுக்குக் காட்டுவோம் வாரீர்!!