பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 5, 2016

திருச்செங்கோடு ஆசிரமம்.நாட்டில் விளம்பரமில்லாமல் பல நல்ல செயல்களை நம் முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள். சுதந்திர இயக்கம் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கள் குடிப்பதிலும், படிப்பறிவில்லாமல் அறியாமை இருளிலும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டு பல இழிவுகளைத் தாங்கிக் கொண்டும் இருக்கும் நிலைமையை மாற்றி மனிதர் அனைவரும் சமம் எனும் நிலைமையைக் கொண்டு வரவேண்டுமென்று அன்றைய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் எண்ணினார்கள்.


இதையெல்லாம் அவர்கள் எண்ணத்தில் மட்டும் இருந்தால் போதுமா? இன்றைய நிலை அன்றிருந்தால் மேடை போட்டு நான் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன் என்று வாய்ப்பந்தல் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஆனால் அன்றைய தமிழ் நாடு இருந்த பிற்போக்கான நிலைமையில் தாழ்த்தப்பட்டவர்களை மீட்டு சமுதாயத்தில் கெளரவமான இடத்தில் வைக்க வேண்டுமென்று சுதந்திரப் போராளிகள் நினைத்தனர்.
விளைவு? 1925ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அதாவது ராஜாஜி தான் பிறந்து வளர்ந்த அப்போதைய சேலம் மாவட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில், சில நல்ல மனிதர்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில் ஓர் ஆசிரமத்தைத் தொடங்கினார். அதுதான் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என்ற பெயரோடு இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
                        ஆசிரமத்தில் ராஜாஜி வாழ்ந்த வீடு

ராஜாஜிக்கு அப்போதிருந்த ஒரே கவலை கிராமப் பகுதிகளில் இருக்கும் உழைக்கும் மக்கள் குடி போதைக்கு ஆளாகியிருப்பதை மாற்றி அவர்களை மற்றவர்கள் போல நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்பதுதான். மகாத்மா காந்தியடிகள் அறிமுகம் செய்த சர்வோதயமும், கிராமப்புற மேம்பாடும், வேலைவாய்ப்புகளை அளிக்கவும் இந்த ஆசிரமம் தோற்றுவிக்கப்பட்டது. கிராமப் பொருளாதர வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும், அதற்கு பேசினால் மட்டும் போதாது கிராமப் பகுதிகளிலேயே வந்து ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கி அந்த மக்களுக்கு அங்கு இருக்கும் வசதிகளைக் கொண்டு என்னென்ன தொழில்களைத் தொடங்க முடியுமோ அவற்றைத் தொடங்கி அவர்களுக்கு ஒரு நிரந்தர வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பது குறிக்கோள்.

அந்த மகான்களுடைய கனவு இன்று நனவாகி ஓரளவுக்கு அந்த கிராமப் புற மக்கள் முழுவதுமாக மாறியதோடு இல்லாமல் 2013 மதிப்பீட்டின்படி இது மிகச் சிறந்த கிராம காதி கைத்தொழில் விருதினைப் பெற்றதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
                             வீட்டினுள் ராஜாஜி

இப்போது இங்கு 116 நிரந்தரமான ஊழியர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தொழில் கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்து பல்வேறு காதி கிராமப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு காந்தியடிகளின் கொள்கைகள் கற்றுக் கொடுப்பதினும் நடைமுறைப் படுத்தப்படுவதை கடைபிடிக் கிறார்கள். இந்த ஆசிரமத்தை ராஜாஜி 1925இல் தொடங்கும் போது இந்தப் பகுதி வாழ் பெண்மணிகளுக்கு நூல் நூற்றல் கற்றுக் கொடுத்தார். ஏன் என்றால் அந்த கால கட்டத்தில் இங்கிருந்தெல்லாம் இலங்கைக்குக் கூலி களாக நமது பெண்மணிகளை கங்காணிகள் எனப்படுவோர் அழைத்துச் சென்று குடியேற்றிக் கொண்டிருந்தனர். இங்கு மழை இல்லை, விவசாயம் இல்லை, வேலை இல்லை, எனவே இவர்கள் பிழைப்பு தேடி இலங்கைக்குக் கூலிகளாகச் சென்று துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இங்கு உற்பத்தியாகும் பஞ்சைக் கொண்டு போய் வீடு வீடாக பெண்களிடம் கொடுத்து அவர்களை நூல் நூற்க வைத்து, அந்த நூலைக் கொண்டு தறி போட்டு துணி நெய்து இந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை இங்கேயே மகிழ்ச்சியோடு வாழ வழி செய்தது இந்த ஆசிரமம். அதோடு உடல் ஊனமுற்ற பெண்கள், ஆண்கள் உட்பட இவர்களை ஆசிரமத்திலேயே வைத்துக் கொண்டு அவர்களை நூல் நூற்கச் செய்து அவர்களையும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைத்தனர் இவர்கள். இவர்களைப் போன்ற பலரும் இந்த ஆசிரமத்தில் இருக்கின்றனர். சாதாரண ஊழியருக்குக் கொடுப்பதை விட இவர்களுக்கு அதிகப்படியான கூலியும் உண்டு.
                   ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வருகை புரிந்தபோது

இன்றைய தினம் இங்கு மரச் சாமான்கள், கைத்தறி சேலைகள், மற்ற பல வகையான தினசரி தேவைக்கான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று நவீன தொழிற்சாலைகளில் இதுபோன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப் பட்டாலும், இவர்களது பொருட்களுக்கு ஆதரவு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஆசிரமம் உருவாக்கிட 1925இல் நான்கு ஏக்கர் நிலத்தை ரத்தினசபாபதி கவுண்டர் எனும் நல்ல உள்ளம் கொண்டவர் தானமாகக் கொடுத்தார். இவர் இந்தப் பகுதியில் ஒரு வசதி படைத்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கொடுக்க மனம் வந்ததே, அதுதான் காந்தியடிகளின் மகிமை. எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் முதலில் ராஜாஜியுடன் இந்த ஆசிரமத்தில்தான் இருந்தார்.
திருச்செங்கோடு ஊரிலிருந்து சுமார் பதினொரு கி.மீ. தூரத்திலுள்ள புதுப்பாளையம் எனும் இடத்தில்தான் இந்த ஆசிரமம் இருக்கிறது. நுழை வாயிலில் ஆசிரமத்தின் பெயரும் அடர்ந்த ஆல மரமும் படத்தில் பார்க்கலாம். கவுண்டர் கொடுத்த நான்கு ஏக்கர் நிலப்பரப்பு இப்போது இருபத்தி நான்கு ஏக்கருக்கு விரிவடைந்து காணப்படுகிறது.

ஆசிரமத்தில் பெண்கள் ஆங்காங்கே பல பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் அங்கு எந்தவித பேச்சோ, ஆரவாரமோ இன்றி அமைதியாக இருக்கும். ராஜாஜி இங்கு தங்கிக் கொண்டுதான் மதுவிலக்குப் பிரசாரம் செய்து வந்தார். ராஜாஜி சேலம் ஜில்லாவைச் சேர்ந்தவர். ஆகையால் இவரது கொள்கையான மதுவிலக்கை முதன்முதலில் 1930இல் இவர் திருச்செங்கோடு, ராசிபுரம், சங்ககிரி ஆகிய தாலுக்காக்களில் அறிமுகம் செய்து கள்ளுக் கடைகளை மூடும்படி செய்தார். இதில் அதிசயம் என்னவென்றால் இவர் கொள்கையைத்தான் சொன்னார், ஆனால் மக்களோ தாங்களே முன்வந்து இந்தக் கடைகளை மூடினார்கள்.
இன்றும் புதுப்பாளையம் செல்வோர் காந்தி ஆசிரமத்தைப் பாருங்கள். அங்கு நடைபெறும் கிராம முன்னேற்றத் திட்டங்களைப் பாருங்கள், காந்திய சிந்தனைகள் புத்தகங்களில் மட்டுமல்ல, செயல் வடிவத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை உலகுக்குக் காட்டுவோம் வாரீர்!!


1 comment:

  1. I am proud my father was an employee of this ashram from 1930 to 1970.He was closely attached to Rajaji and Kalki.

    ReplyDelete

You can give your comments here