பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 5, 2016

ஆனந்த தாண்டவ தரிசனம்.

                  
பாற்கடலில் மகாவிஷ்ணு பாம்பணைமேல் பள்ளி கொண்டிருந்தார். அருகில் மகாலட்சுமி ஐயனுக்கு சேவை புரிந்து கொண்டிருந்தார். உலகில் அதர்மம் ஓங்கி தர்மம் அழியத் தொடங்கும்போதெல்லாம் ஆங்கு அவதாரம் செய்து தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்டும் பணியைத் திரும்பத் திரும்பச் செய்து வந்த களைப்பு. ஆதிசேஷனின் பட்டுப் பாம்புப் படுக்கையில் சிரம பரிகாரம் செய்து படுத்திருந்தார்.
அப்போது வழக்கம் போல கலகக்கார நாரதர் தன்னுடைய தம்பூரை மீட்டிக் கொண்டு, “நாராயணா, நமோ நாராயணா” என்று இசைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். நாராயணனுக்குத் தெரியும் இன்று புதிதாக ஏதோவொரு கலகம் இங்கு உருவாகப் போகிறது என்று. அதை நினைத்து அவர் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை தோன்றி மறைந்தது. இதனை கவனித்துவிட்ட மகாலட்சுமி பிறர் பார்க்கா வண்ணம் ஜாடையில் ஐயனை நோக்கி என்ன என்று கேள்வி எழுப்பினாள்.

மகாவிஷ்ணு மீண்டும் சிரித்துக் கொண்டு, “வாருங்கள் நாரதரே! இன்று என்ன விசேஷம். எங்கெங்கும் திரிந்து கலகத்துக்கு ஆள் கிடைக்காததால் இவ்விடம் வந்து சேர்ந்தீர் போலிருக்கிறது” என்றார்.

லட்சுமி இடை மறித்து நாரதரிடம் “ஐயனே! நீங்கள் நன்றாக இருங்கள். உங்களது வழக்கமான பணியை எங்களிடம் காட்டி விடாதீர்கள். ஐயன் இப்போதுதான் அவதாரங்களை முடித்துவிட்டுச் சற்று ஓய்வில் இருக்கிறார். அவர் அமைதியை ஏதேனும் வம்பு செய்து கெடுத்து விடாதீர்கள்” என்றாள்.

நாரதர் விடுவாரா “அன்னையே! ஐயனின் அமைதியைக் குலைக்க அடியவனால் முடியுமா? ஏதோ, இருவரும் பணிகளையெல்லாம் நன்றாக நிறைவேற்றி விட்ட ஆனந்தத்தில் ஏகாந்தமாக வீற்றிருக்கிறீர்களே, இந்த சந்தர்ப்பத்தில் இருவரையும் கண்டு வணங்கிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நீங்கள் என்னவென்றால், என் மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறீர்களே” என்றார்.

அப்போது பாற்கடலில் தன் பிரம்மாண்டமான உடலை சுருட்டிப் படுக்கையாக்கி அண்ணலையும், அன்னையையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷன் இவர்கள் பேச்சில் குறுக்கிட்டான்.
“ஐயனே! தங்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள்” என்றான் நாராயணனைப் பார்த்து.

“சொல்லு, உனக்கில்லாததா, என்ன வேண்டுமோ கேள். நீயும் ஒவ்வொரு அவதாரத்திலும் வந்து எனக்கு உதவியாக இருந்து கொண்டிருக்கிறாய். இப்போது நமக்கு வேறு எந்த அவசரப் பணியும் இல்லாத நேரத்தில் உன் வேண்டுகோளை நிறைவேற்ற நிச்சயம் வரமளிக்கிறேன்” என்றார் நாராயணன்.

நாரதர் குறுக்கிட்டார், “பெருமானே! ஆதிசேஷன் என்ன சொல்ல வருகிறான் என்று எனக்குத் தெரியும். அவன் எப்போதும் தங்களுக்குப் பணியாற்றுவதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதால், அவனுக்கென்று தனிப்பட்ட எந்த ஆசையோ, பற்றோ கிடையாது. இப்போது எல்லாம் அமைதியாக இருந்து கொண்டிருப்பதால் அவன் மனதில் ஏதோ வொரு ஆசை இருக்கிறது, அதை நிறைவேற்றிக் கொள்ள விரும்பியிருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.

மகாவிஷ்ணுவின் முகத்தில் புன்னகை தவழ ஆதிசேஷனைப் பார்த்துச் சொன்னார், “சேடா! சொல், உன் மனதிலுள்ள ஆசையை நான் நிச்சயம் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார்.

லட்சுமியும் மகிழ்ந்து “ நமக்கு இப்படியொரு சேவகன் வந்து அமைந்ததே பெரும் பாக்கியம். அப்படிப்பட்ட பாக்கியவான் ஏதோவொரு பிரதிபலனை எதிர்பார்க்கிறான் என்றால் நாம் நிச்சயம் அவனுக்காக செய்ய வேண்டும்” என்று சிபாரிசு செய்தாள்.

நாம் தனிமையில் இரகசியமாகத் தன் எஜமானரிடம் கேட்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்க, இந்த நாரதர் வந்து விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டு குரலைக் கனைத்துக் கொண்டு மிகவும் பவ்யமாக நாராயணனிடம் சொல்லத் தொடங்கினான்.

“ஐயனே! இந்த பூமி இப்போது சற்று அமைதியாக இருக்கிறது. தங்கள் கடைசி அவதாரமான கிருஷ்ணாவதாரத்தின் முக்கியத்துவம் முடிந்து போய் யாதவ குலம் முழுவதும் அழிந்து போனது. கிருஷ்ணி குலமும் தங்கள் பிரிவுக்குப் பிறகு சாபத்தால் பாதிக்கப்பட்டு விட்டது. இனி அடுத்துத் தங்களுக்கு எவ்வகை பணி வந்து சேருமோ தெரியாது. அதற்குள் என் மனதில் நீண்ட நெடு நாட்களாக இருக்கும் ஒரு ஆசையை இப்போது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதற்காகச் சில நாட்கள் தங்களிடமிருந்து பிரிந்து சென்று பூலோகத்தில் தில்லையம்பலம் எனுமிடத்தில் புது யுகம் தொடங்கிய ஆனந்தத்தில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போகிறாராம். அதைப் போய் பார்த்துவிட்டு வரத் தாங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும். நாட்டியத்தைப் பார்த்து முடித்ததும் உடனே நான் தங்கள் பணிக்குத் திரும்பி விடுகிறேன்” என்றான் ஆதிசேஷன்.

அப்போது நாரதர் குறுக்கிட்டு, “சேடா! நீ இப்படி உன் சுய உருவத்தில் போனால் அங்கு சிவன் ஆடமாட்டார், உன்னைப் பார்த்த பயத்தில் அங்கு வேடிக்கை பார்க்கும் மக்கள் எல்லாம் ஆடத் தொடங்கி விடுவார்கள்” என்றார்.

நாராயணன் சிரித்துக் கொண்டு சொன்னார், “ஆதி சேடா! உன் விருப்பப்படி நீ பூலோகம் சென்று பொன்னம்பலத்தில் சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைப் போய் கண் குளிர பார்த்துவிட்டு வா. அதுவரை நானும் மகாலட்சுமியும் சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறோம்” என்றார்.
ஆதி சேஷன் குறுக்கிட்டான். “ஐயனே, இந்த நாரதர் பெருமான் சொல்வதைப் பார்த்தால் நான் என்னுடைய இந்த உடலோடு அங்கு சென்றால் பூலோகத்து மக்கள் அச்சம் கொள்வார்களாமே, என்ன செய்வது? என்றான்.

மகாலட்சுமி சொன்னாள், “ஆதிசேஷா! கவலைப் படாதே. நீ ஒரு முனிவர் உருவத்தில் போ, நானே உன்னை அப்படியொரு முனிவராக ஆக்கி விடுகிறேன். நீ தனியாகப் போக வேண்டாம். தினமும் இறைவருக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து கொண்டு ஒரு முனிவர் இருக்கிறார். அவர் மரங்கள் மீதேறி புஷ்பங்களைச் சேகரிக்க மிகவும் சிரமப் படுகிறார் என்பதற்காக அவருக்கு மனிதக் கால்களுக்குப் பதிலாக புலியின் காலைக் கொடுத்து, சிரமமின்றி மரமேறி புஷ்பங்களைப் பறிக்கும்படியான வசதி செய்து கொடுத்திருக்கிறேன். அவர் பெயர் புலிக்கால் முனிவர் எனப்படும் வியாக்கிரபாத முனிவர். நீங்கள் இருவரும் சென்று ஆடலை தரிசித்து விட்டு வாருங்கள்” என்றாள் லட்சுமி.

“அப்படியென்றால் முனிவராக நான் எந்தப் பெயரில் போவது?” என்றார் ஆதிசேஷன்.

லட்சுமி சொன்னாள் “உனக்குப் பதஞ்சலி முனிவர் என்று பெயர் சூட்டுகிறேன். நீயும் வியாக்கிரபாதரும் சென்று நடராசப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பொன்னம்பலத்தில் கண்டு தரிசித்துவிட்டு திரும்ப வந்து எங்களிடம் ஆட்டம் எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டும்” என்றாள்.

உடனே நாரத முன்வர், “நாராயண, நாராயண, நான் வந்த காரியும் முடிந்து போயிற்று. ஆதிசேஷனுடன் நானும் பொன்னம்பலம் சென்று நடராசப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் காண வேண்டும், சென்று வருகிறேன்” என்று புறப்பட்டு விட்டார்.

அங்கிருந்து அனைவரும் பிரிந்து சென்ற பிறகு நாராயணனும், மகாலட்சுமியும் மட்டும் தனித்து விடப்பட்டனர். வசதியாகப் படுத்துறங்க இருந்த ஆதிசேஷனும் இப்போது இல்லை. என்ன செய்யலாம்? அப்போது லட்சுமி கேட்டாள், “ஐயனே, நமக்கோ இப்போது பணி ஒன்றுமில்லை, கலியுகம் தொடங்கி மக்கள் ஆனந்த மயமாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாமும் ஆதிசேஷனைப் பின் தொடர்ந்து மாறு வேடத்தில் சிதம்பரம் சென்று அங்கு சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?” என்றாள்.

“நல்ல யோசனை! அப்படியே செய்வோம். இப்போதே கிளம்புவோம், நான் முனிவராகவும், நீ ஒரு முனிபத்தினியாகவும் சென்று தில்லை நடராஜனின் நடனத்தைக் காண்போம். எப்போதோவொரு முறை கிடைக்கக் கூடிய அரிய நடனம் இது. வா, புறப்படலாம்” என்றார்.
நாராயணனும் மகாலட்சுமியும் முனிவராகவும், முனிபத்தினியாகவும் வான் வழியாகச் சென்று தில்லையம்பலம் எனப் புகழ்பெற்ற சிதம்பரத்தை அதாவது ஆகாயத் தலத்தைச் சென்றடைந்தனர்.

பொன்னம்பலத்தில் கூட்டம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. தாங்கள் சுய உருவில் வந்திருந்தால் இந்நேரம் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு வந்து கலியுகத்தில் திரையுலக நட்சத்திரங்களை மொய்த்துக் கொள்வது போல மொய்த்துக் கொண்டு விடுவார்கள். ஆகையால் நாம் ஒருவரும் அறியாத வண்ணம் உள்ளே சென்று ஓரமாக ஒரு தூணின் பின்னால் நின்றுகொண்டு நடனத்தை ரசித்துவிட்டு வரலாம் என்றார் நாராயணன்.
பொன்னம்பல அரங்கைச் சுற்றி கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. நந்தி மத்தளம் வாசிக்கத் தொடங்கினார். தேவ கணங்கள் இசை வாத்தியங்களையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தனர். ‘தேம் தாம்” என்று நட்டுவாங்கம் தொடங்க, நடராஜப் பெருமான் தங்கம் போல ஒளிவீசும் ஜோதி மயமான உடலோடு புலித்தோலை அரைக்கு அணிந்து, பாம்பை இடுப்பில் சுற்றிக் கொண்டு, ஒரு கையில் தீயையும், இன்னொரு கையில் உடுக்கை எனும் ஒலிவாத்தியக் கருவியையும் ஏந்திக் கொண்டு ஆடத் தொடங்கினார்.

மெல்லத் தொடங்கிய ஆட்டம், போகப்போக உக்கிரமாகத் தொடங்கியது. உலகின் தீமைகள் எல்லாம் ஓர் உருக்கொண்டு அருவருக்கத் தக்க உருவத் தோற்றத்தோடு அங்கு வந்து நிற்க அதை இழுத்துத் தான் காலடியில் வீழ்த்தி அதன் மீதேறி ஐயன் ஆடத் தொடங்கினார்.
இப்போதாக இருந்தால் யாராவது ஒருவர் “யார் ஆடினார், இனி யார் ஆடுவார், தில்லை நடராசனைப் போல பொன்னம்பலத்தில் இனி யார் ஆடுவார்” என்று பல்லவியைத் தொடங்கி ஒரு அழகான பாடலைப் பாடியிருப்பார்.

அப்போதும் பாடினார்கள், தேவகணங்கள் இசை அமைக்க தெய்வீகப் பாடல்களை முழங்க உலகோர் வியந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, பூமிப்பந்தின் மேலே இறைவன் சுற்றிச் சுற்றி ஆடினார். சுழன்று சுழன்று ஆடினார். அவர் ஆடிய ஆட்டத்தில் எங்கும் சுழற் காற்று பேய்க்காற்றாக வீசத் தொடங்கியது. பூமியில் பொந்தில் இருந்த நாகங்கள் தங்கள் தலைக்கு மேல் ஏதோ பெரும் ஓசை கேட்டு வெளியில் வந்து ஆட்டத்தைப் பார்த்த வண்ணம் படுத்துக் கிடந்தன. நாராயணனின் மாற்று வாகனமான கருடாழ்வார் வானத்தில் சுற்றிப் பறந்து வந்து இந்த ஆனந்தக் காட்சியைக் கண் இமைக்காமல் பார்த்து ரசித்தார்.

சரஸ்வதி தேவி தன் யாழை மீட்டி இசைக்கு இனிமை சேர்த்தார். பிரம்மன் வரமுடியவில்லை, படைப்புத் தொழிலில் மிகவும் தீவிரமாக இருந்ததால் அவருக்கு மனைவியோடு வந்து ஆட்டம் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

ஆட்டம் பல்வேறு தாளகதியில் நடந்து கொண்டிருந்தது. பூமி தன் சுழற்சியைச் சற்று நிறுத்திவிட்டு ஆட்டத்தைக் கண்டு களித்தது. வானம் கண்கள் பனிக்க ஆனந்தக் கண்ணீரை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. இடியும் மின்னலுமாக இந்திரன் தன் பரிவாரங்களுடன் வந்து இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தான்.

இப்படி கோலாகலமாக பொன்னம்பலத்தில் நடராசப் பெருமானின் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். நெடு நாட்கள் நடந்த இந்த நடனத் திருவிழா முடிந்து அவரவர் ஊருக்குத் திரும்பினர். ஆதிசேஷனும் பணிக்குத் திரும்ப பெருமாள் அவன் மீது சயனம் கொண்டார். லட்சுமி வழக்கம் போல் சேவை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, பூமியில் பொன்னம்பலமாம் சிதம்பரத்தில் ஒரு சோழமன்னன் அற்புதமான ஓர் ஆலயத்தை நடராசப் பெருமானுக்காக உருவாக்கிக் கொண்டிருந்தான். அந்த ஆலயத்தில் சிவபெருமான் லிங்க வடிவிலும், நடராஜப் பெருமான் ஆடல்வல்லானாகவும் கோயில் கொண்டனர். ஆலயம் எழுப்பிக் கொண்டிருந்த சோழ மன்னனுக்கு அமைச்சர்கள் இந்த இடத்தில் ஆடல்வல்லான் ஆடிக் கொண்டிருந்த போது ஆதிசேஷனும், வியாக்கிரபாதரும் முனிவர் வடிவில் வந்து தரிசித்ததையும், அவர்கள் அறியாமல் நாராயணனும், மகாலட்சுமியும் பாற்கடலை நீங்கி பொன்னம்பலம் வந்து அங்கு ஐயனின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தார்கள் என்ற விவரத்தையும் சொன்னதும், மன்னன் வியந்து போற்றி, பாராட்டி அப்படியானால் நான் சிதம்பரத்தில் உருவாக்குகின்ற இந்த ஆலயத்தில் நடராஜருடைய ஆட்டத்தை ரசிக்கும் பாங்கில் நாராயணனுக்கு ஓர் சந்நிதியை உருவாக்கி அவருக்கு கோவிந்தராசப் பெருமாள் என்ற நாமகரணத்தையும் சூட்டுவதாகச் சொன்னதும் அமைச்சர்களும், பிரதானிகளும், பொதுமக்களும் கேட்டு ஆனந்த மடைந்தார்கள்.
ஆலயம் உருவாகியது. சிவாலயமாக உருவெடுத்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ளேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உருவானது. இப்படியே காலம் ஓடிக் கொண்டிருந்தபோது கலியுகம் பல லட்சம் ஆண்டுகள் ஓடி நாகரிகம் முற்றிப் போய், இறை நம்பிக்கைக் குறைந்து மக்கள் புராணங்களையும், இறைவனையும் பொய் என்று சொல்லி நம்ப மறுத்த போது, அப்போது மக்களை மயக்கிக் கொண்டிருந்த ஒரு திரையில் நிழலாகத் தோன்றும் ஒரு கலை உருவானது. 

அப்படிப்பட்ட திரையில் நிழலாடும் ஒரு கதையில் தில்லை அம்பலத்தில் இருந்த நடராஜரின் சிவாலயத்தில் பெருமாளுக்கு எதற்கு சந்நிதி என்று வீர சைவனாக இருந்த ஒரு மன்னன் கோவிந்தராஜப் பெருமாள் சிலையையும், அவரை வழிபட்ட பட்டரையும் சங்கிலியால் கட்டு கடலில் போட்டுவிட்டதாகச் சொல்லி சைவ வைணவப் பூசலைக் கிளப்பி விட்டனர்.

நல்ல காலம் அப்போதெல்லாம் இதுபோன்ற சில்லரை காரணங்களுக்காக ஆறாம், ஏழாம் நூற்றாண்டு போல சைவ வைணவ கலகம் எதுவும் உருவாகி விடவில்லை. இந்த காலத்துக்கு ஏற்ப வேறு விதமான மதக் கலவரங்கள் வந்து விட்டதால் இது எடுபடாமல் போய்விட்டது.
இப்படியாக நாரத முனிவர் உருவாக்கிய கலகம் சிதம்பரத்தில் நல்லவிதமாக முடிந்து போனது. 
கதை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தலைவர், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழு, 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885


No comments:

Post a Comment

You can give your comments here