பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 11, 2015

மகாகவி பாரதியும் இசையும்.










மகாகவி பாரதியாருக்கு இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் மிகுந்த பற்று உண்டு. பரத நாட்டியம் குறித்து அவருடைய கருத்துக்களை அவருடைய மகள் சகுந்தலா "என் தந்தை" எனும் நூலில் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார் என் தந்தை பரத நாட்டியத்தில் மிகுந்த ஆவல் கொண்டவர். கோபாலகிருஷ்ண பாரதியாரின் "ஆனந்த நடனம் ஆடினார்" எனும் பாடலை அவர் அடிக்கடி பாடிப்பாடிப் பரவசமடைவார். அவரே பாடிய "தகதகத் தகதக வென்றாடோமோ?" போன்ற பாடல்களில் அவருடைய நாட்டிய பரவசம் வெளிப்படும்.

மேலும் பரதநாட்டியக் கலை பொதுமக்கள் கையில் வராமல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தார் வசம் இருப்பதனால் அதை வெளிப்படையாகப் பார்க்கவோ, ரசிக்கவோ முடியாமல் போனதைக் குறித்து பாரதியின் கருத்தையும் சகுந்தலா விவரிக்கிறார். அவர் சொல்கிறார், "பரதநாட்டியம் என்ற மாபெரும் கலை, தற்காலத்தில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒரு வகுப்பினரால் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அதன் மேன்மையைச் சகலரும் கண்டு ஆனந்தமடையத் தக்கதாக இருந்தும் நம்முள் நாமே வெட்கப்பட்டுக்கொண்டு இலை மறைவு காய் மறைவாக ரகசியமாகப் பார்த்து ரசிக்க வேண்டியிருக்கிறது. அந்த தெய்வீகக் கலையை நம் வீட்டில் தாய்மார்களும், சகோதரிகளும் நடத்தினால், நாம் பகிரங்கமாகக் கண்டு ஆனந்தப்படலாம்". இப்படிச் சொல்வதன் மூலம் பரதக் கலை எல்லோராலும் அந்தக் காலத்தில் கற்கவோ, பொது மேடைகளில் ஆடவோ இயலாமல் இருந்திருக்கிறது. ஆலயங்களில் அதற்கென்று குறிப்பிட்டவர்கள் அதை 'சதிர்' எனும் பெயரால் ஆடி அந்த அற்புதமான கலையை உயிர்ப்புடன் காத்து நம் கையில் கொடுத்துச் சென்றிருக்கின்றனர்.

பாரதியாருக்கு இசையில் தணியாத ஆர்வம் உண்டு. இயற்கையிலேயே தனக்கிருக்கும் இந்த இசை ஞானத்தை மேலும் விருத்தி செய்துகொள்ள முடியாமல் தவித்தார். ஒரு நல்ல இசைக் கலைஞரை அணுகி அவருக்கு குரு தட்சிணை கொடுத்துக் கற்றுக்கொள்ள அவரிடம் வசதி இல்லாமல் போயிற்று. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக இருந்த நிலையில் ஊரைவிட்டு ஓடிப்போய் புதுச்சேரியில் வாழவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இசையை எங்கே போய் கற்றுக் கொள்வது. இருந்தாலும் அவரால் ஒரு தேர்ந்த இசைக் கலைஞரைப் போல பாட முடிந்தது, அதற்கான ஞானமும் அவரிடம் இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கில அரசின் எடுபிடிகளான ரகசிய போலீசார் அவரிடம் இசை கற்றுக் கொள்ள வேண்டி வந்திருப்பதாகவும், சிலர் தமிழ் கற்க வந்திருப்பதாகவும், சிலர் வேத, உபநிஷதங்                  

களைக் கற்க வந்ததாகவும் பொய்சொல்லி வேவு பார்த்தார்கள். அவர்களை இனங்கண்டுகொண்டு பாரதியார் அத்தகைய சூது நிரம்பியவர்களைத் தன்னை அண்டவிடாமல் பார்த்துக் கொண்டார்.

சகுந்தலா மேலும் சில அரிய தகவல்களைக் கூறுகிறார். பாரதியாரிடம் ஸீ.ஆர்.சீனிவாச ஐயங்கார் என்பார் தியாகராஜ கீர்த்தனைகளுக்கு ஸ்வரம் போட்ட புத்தகம் ஒன்று இருந்தது என்கிறார் அவர். அந்த புத்தகத்தில் உள்ள ஸ்வரங்களைப் பயன்படுத்தித் தானே பாட முயற்சிகள் செய்வாராம். தியாகராஜ சுவாமிகளின் 'நகுமோமு', 'மாருபல்க', 'நிதிசால சுகமா' போன்ற கீர்த்தனைகள் மீது அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம். 

மகாகவிக்கு தெலுங்கு மொழியும் நன்கு தெரியும். இது அவருடைய 'சந்திரிகையின் கதை'யைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதில் சந்திரிகையும் பந்துலுவும் தெலுங்கில் பேசிக்கொள்ளும் பகுதிகள் சுவாரசியமானவை, அவை நல்ல தெலுங்கில் அமைந்தவை. தெலுங்கு மொழி தெரிந்த காரணத்தால் பாரதியார் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளில் உள்ள சொற்களின் பொருளையும் அவற்றின் நயத்தையும், பாவத்தையும் ரசித்து மகிழ்வாராம். 'மாருபல்க' கீர்த்தனை இவருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு இவர் 'சந்திரிகையின் கதையின்' நாயகி விசாலாட்சி இந்தப் பாடலைப் பாடுவதாக எழுதியிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பாரதியின் தமிழ்மொழிப் பற்று உலகம் அறிந்தவொன்று. தமிழே உயர்ந்த மொழி என்றும் தமிழிலே எண்ணி, தமிழிலே பேசு, ஆங்கிலத்தில் எண்ணி பின் தமிழில் மொழிபெயர்க்காதே என்றெல்லாம் அவர் சொல்வதுண்டு. அப்படிப்பட்டவர் இசையில் மொழி பேதம் பார்த்ததில்லை. அவரைப் பொறுத்தவரை சங்கீதம் என்பது வேறு, அதற்கு மொழி ஒரு தடை இல்லை என்பார் அவர். 

"சங்கீத விஷயம்" என்ற அவருடைய கட்டுரையில் பாரதியார் தியாகராஜ சுவாமிகள் தன்னுடைய கீர்த்தனங்களில் அந்தந்தப் பாடலின் கருத்துக்கேற்ப பாவம் வெளிப்படும் வகையில் ராகங்கள் அமைந்திருப்பதை வெகுவாகப் பாராட்டி எழுதியிருக்கிறார். ஆனால் அவர் காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட தெலுங்கு கீர்த்தனைகள் அப்படி அமையவில்லை என்பது அவர் கருத்து. அவர் தியாகராஜரின் ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அது "நன்னு ப்ரோவ நீகு இந்த தாசமா?" எனும் கீர்த்தனை. அதில் பாடலின் பொருளுக்கேற்ப அமைக்கப்பட்ட ராகம் பொருந்தி வருவதைச் சுட்டிக் காட்டி, அதைப் போல பட்டணம் சுப்பிரமணிய ஐயர் இயற்றிய 'வரமுலொசகி" எனும் பாடலில் இல்லை என்றும் சொல்லுகிறார். பின்னதில் இசை சண்டைத் தாளம் போடுகிறது என்று எழுதுகிறார். 

அவருடைய புகழ்பெற்ற பாடலான "சிந்துநதியின் மிசை நிலவினிலே, சேரநன் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்" எனும் பாடலைக் குறிப்பிட்டு சகுந்தலா தன் தந்தையிடம் "ஏன் அப்பா தெலுங்கில் பாட வேண்டும்? தமிழில் நல்ல பாடல் இல்லையா?" என்று கேட்டிருக்கிறாள். அதற்கு பாரதியார் சொன்ன பதில்: "பாப்பா! தமிழ்ப் பாட்டும் பாடலாம்; இந்துஸ்தானியிலும் பாடலாம். பெரிய பெரிய கவிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாடுவதற்குரிய முறையில் பாடலை இயற்றி, அதற்கேற்ற இசையுடன் பொருத்தி சுவையுடன் பாடும் சங்கீத வித்வான்கள் நம் தமிழுலகில் அதிகம் இல்லாமல் போய்விட்டனர். சங்கீதத்தில் தெலுங்கு என்றும் உருது என்றும் பேதம் கிடையாது. ஆங்கிலேயர் தேசாபிமானம் அதிகம் உடையவர்கள். மொழிப்பற்றிலும் அவர்களுக்கு இணை கிடையாது. ஆனால் சங்கீதத்தில் ஜெர்மன் சங்கீதமும், இத்தாலிய சங்கீதமும் உயர்ந்தவை என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் வடதேசத்தில் இருக்கிற சிந்து நதியின் மீது, தென் தேசத்தில் உள்ள அழகிய சேரநாட்டுப் பெண்களுடன் தமிழ் நாட்டவர்களாகிய நாம், சங்கீதத்துக்கு அழகு தரும் தெலுங்கு மொழியில் பாடி மகிழ்வோம் என்று சொன்ன கருத்து, நம் இந்திய தேசம் முழுவதையும் ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக்குவதுதான்." என்று பதில் சொன்னார் பாரதியார்.

பாரதியார் தான் இயற்றிய "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்" எனும் பாடலை அவரே பாடும்போது கமாஸ் ராகத்தில் பல சங்கதிகளுடன் பாடுவாராம். அவருடைய எல்லா பாடல்களையும் இசையோடு பாடுவதற்கேற்ப அவற்றை ஸ்வரப்படுத்தி ஒரு புத்தகம் வெளியிட ஆவல் கொண்டிருந்தாராம். பாவம், அவர் ஆசைப்பட்டது எதுதான் நடந்தது? அவர் பாடலை பலர் அறிய பாடுவதற்கே தமிழ் மக்கள் பயந்த காலம் அது.

பாரதியார் ஒரு பாட்டை இயற்றுகிறார் என்றால் அந்தப் பாடலுக்கு ராகம், மெட்டு இவை அமைக்க எந்த உதவியையும் யாரிடமும் நாடியதில்லையாம். ஏதோ அவர் மனதுக்குத் தோன்றிய ஒரு மெட்டில் அவரே பாடிப் பார்ப்பாராம். அந்த மெட்டு அவருக்குப் பிடித்துப் போய்விட்டால் அந்த மெட்டு எந்த ராகத்தின் ஸ்வரங்களோடு பொருந்துகிறதோ அந்த ராகத்தின் பெயரை மட்டும் எழுதி வைத்து விடுவாராம். அதற்குரிய தாளம் தானாக அமைந்து விடுமாம்.

பாரதியார் தான் இயற்றிய பாடல்களைத் தனக்கு நெருக்கமாக உள்ள நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். அப்படிப்பட்ட நண்பர்களில் ஒருவர்தான் வ.வெ.சு.ஐயர். பாரதியாரின் கண்ணன் பாட்டுக்கு வ.வெ.சு.ஐயர் முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி பாரதியின் இசைத் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவர் சொல்கிறார் "பாரதி தன் கற்பனா பாவத்தோடும், சிருஷ்டி உற்சாகத்தோடும் தனது பாடல்களைப் பாடும்போது அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அட்சர லட்சம் பெற்றதாக‌ மதிப்பர்". 

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவையாற்றுக்கு வந்து ஐயாறப்பனைத் தரிசித்து மகிழும்போது "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" என்கிறார். உலகின் இயக்கங்கள் அனைத்திலும் ஒளிர்பவன் இறைவன், அந்த இயக்கம் எழுப்பும் ஒலி, ஓசை அனைத்துமே இறைவன் தந்தவையாகும் என்பதை அப்பர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இறைவனை நாதப்பிரம்மம் என அழைக்கிறார்கள்.

கண்ணபிரானை பல்வேறு வடிவங்களில் கண்டு ரசித்துத் தன் கண்ணன் பாட்டில் அழகுற வடித்துத் தந்திருக்கிறான். அவை அத்தனையும் பல்வேறு ராகங்களில் இசையோடு பாடக்கூடிய பாடல்கள் என்பதிலிருந்தே அவன் கண்ணனை இசை வடிவில் தரிசித்திருக்கிறான் என்பது விளங்கும். இசையை ஆராதித்த பாரதி அந்த இசையே துன்பம் தருவதாகவும் தொல்லை தருவதாகவும் இருக்கக்கூடாது என்பதையும் தெரிவிக்கிறான். தன்னுடைய "சங்கீத விஷயம்" எனும் கட்டுரையில் பாரதி சொல்லும் கருத்துக்கள் இன்றளவும் உண்மை என்பதை நாம் காண முடிகிறது.

அவர் சொல்லுகிறார், எந்த ஊருக்குப் போ, யாருடைய கச்சேரியை வேண்டுமானாலும் கேள்! அங்கெல்லாம் அவர்கள் நமக்குப் புரியாத மொழியில் பாடிக் கொண்டிருப்பார்கள். அவர் சொல்வதை அப்படியே பார்க்கலாமே! "நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம் பஜே' என்று ஆரம்பஞ் செய்கிறார். தொடர்ந்து 'ராமநீ ஸமான மெவரு', 'மரியாதை காதுரா', 'வரமு லொஸகி' ... ஐயையோ, ஐயையோ, எங்கும் ஒரே கதை!."

"எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்துக்குப் போ எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாடல்களை வருஷக் கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்."

பாரதியின் இந்தக் கருத்துத் தெலுங்கிலும், சம்ஸ்கிருத மொழியிலும் பாடிய வித்வான்களை குறைவாக மதிப்பிட்டார் என்பது இல்லை. அவர்களை அவர் மிகவும் உயர்வாகவும், மரியாதையுடனும் மதித்துப் போற்றியிருக்கிறார். ஆயினும் ஒரே பாடல்களைப் பாடி கேட்போர் உள்ளங்களை சோர்வடையச் செய்யாதீர்கள்; புதிது புதிதாக கீர்த்தனைகளை உருவாக்குங்கள்; புதிய பாடகர்களை அறிமுகம் செய்யுங்கள் என்கிறார். அப்படியானால் பழம்பெரும் மகான்களை உதாசீனம் செய்யலாமா என்று யாராவது கேட்டால், அவர்களுக்கும் அவர் பதில் சொல்கிறார். தியாகராஜர் பிறவியிலேயே பெரிய மகான். அவருடைய உயர்வை குறைத்து மதிப்பிடவில்லை. இப்படிச் சொல்லிவிட்டு அவர் தன் கருத்தையும் தெரிவிக்கிறார். அது "பூர்வீக மகான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டுமென்பது என்னுடைய கட்சியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமல் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்து விடக்கூடாது".

இப்படிச் சொல்லியதோடு பாரதி நிறுத்திக் கொள்ளவில்லை, இந்த நிலைமை மாற என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர் சொல்கிறார். "புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டு வரவேண்டும். இப்போது சங்கீத வித்வான்களில் தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும்". பாரதியார் இப்படிச் சொன்னால் அதற்கு வித்வான்கள் சொல்கிறார்கள் "பூர்வ காலத்து மகான்களுக்குத் தெய்வ பிரசாதமிருந்தது. எங்களுக்கு இல்லையே என்ன செய்வோம். இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா? இப்போதைய வித்வான்கள் புதிய கீர்த்தனைகளை அமைப்பதில் பின் வாங்கக்கூடாது, தெய்வங்கள் இறந்து போய்விடவில்லை, அவைகள் இவர்களுக்கு அந்த சாதனையை நிகழ்த்த அனுக்கிரகம் செய்வார்கள்" என்கிறார்.
அவருடைய குயில் பாட்டில் இசை அனுபவத்தை எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர் அனுபவித்தார் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார். இயற்கையோடு ஒன்றிய அவருடைய மனப்பாங்கு அவரைச் சுற்றிலும் எழுகின்ற ஓசைகள் அனைத்திலும் இசையை ரசிப்பதாக இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. இதோ 'குயில் பாட்டின்' வரிகள்:

"கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்
நீலப் பெருங்கடல் எந்நேரமுமே தானிசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்
கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப்பார் தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சம் பறிகொடுத்தேன் பாவியேன்"

பாரதியாரின் கூற்றின்படி அவர் ரசித்து நெஞ்சைப் பறிகொடுத்த இசை அத்தனையும் மனிதர் பாடும் அல்லது வாசிக்கும் இசைகளில் மட்டுமல்ல, தாவரங்கள் முதல் மானுடர் வரையிலான அத்தனை உயிர்களிலும் எழும் ஓசையை அவர் நல்ல இசையாக ரசித்திருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. வாழ்வை இசைவிப்பது இசை; அந்த இசைக்கு உருகாதார் யார்? பாரதி மட்டும் விதிவிலக்கா என்ன?






மகாகவி பாரதியார் சில நினைவுகள்....


இன்றைக்கு 94 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார் மகாகவி பாரதியார். இளமையின் உச்சத்தில் இன்னும் எவ்வளவோ அரிய கவிதைகளைக் கவி காளிதாசன் போல், கவியரசர் கம்பன் போல் அளிக்க வாய்ப்பிருந்த நிலையில் தன் முப்பத்தி ஒன்பதாம் அகவையில் அமரர் ஆனார் அவர். அவரது நினைவுகள் என்றென்றும் மக்கள் மனங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

சொற்களைக் கோர்த்து பொழுது போக்காகக் கவிதைகள் புனைந்தவனில்லை மகாகவி. ஒவ்வொரு கவிதையின் பின்னாலும் ஒரு பெருங்கதை மறைந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அதன் சிறப்பினை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

புதுச்சேரியில் அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்தது புஷ் வண்டி எனப்படும் பயண சாதனம். அதில் புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்த ஒரு புஷ்வண்டியோட்டி மகாகவிக்கு அடிக்கடி சவாரி வருவது வழக்கம். அப்படியொரு நாள் அந்த மனிதர் பாரதியிடம், ஐயா நான் உப்பளம் பகுதியில் வசிக்கிறேன். தாங்கள் ஒருநாள் எங்கள் பகுதிக்கு வரவேண்டும். வந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் முத்துமாரியம்மனை தரிசித்து அங்கு ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். இவனைப் போல உள்ளத்தில் உண்மை அன்பு கொண்ட ஏழைகள் யார் அழைத்தாலும் மறுக்காமல் போகும் குணமுடைய பாரதி அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார். மறுநாளே தன் இளைய மகள் சகுந்தலாவையும் அழைத்துக் கொண்டு அந்த புஷ்வண்டிக்காரனின் வண்டியிலேயே பயணம் செய்து உப்பளம் சென்றார்.

அங்கு தேசமுத்துமாரி எனும் பெயரால் ஒரு ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வந்தவன் ஒரு வள்ளுவ இளைஞன். அந்த இளைஞன் மாரியம்மனுக்கு முறைப்படி வழிபாடுகள் நடத்தி தீபாராதனை செய்து வைத்தபோது, அதனைக் கண்டு பரவசமடைந்த பாரதியார் அருகிலிருந்த தன் மகளிடம் "பாப்பா! அதோ பார், அந்த இளைஞன் அந்தணத் தொழிலை எத்தனை அழகாகச் செய்கிறான் பார்!" என்று சொல்லி வியந்து போனார். அவனுடைய அந்த ஈடுபாட்டைக் கண்டு அவனைத் தன் இல்லத்துக்கு அடிக்கடி வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, அவனுக்கும் கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்ததைப் போன்றே பூணுல் அணிவித்தார். இவர் செய்யும் காரியத்தை அதிசயமாகப் பார்த்தவர்களிடம் பாரதி சொன்னார், அவன் செய்யும் அந்தணத் தொழிலுக்கு இது தேவை என்றார். அந்த ஒருநாள் உப்பளம் விஜயம் அந்தப் பகுதி மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டது. பாரதி தங்கள் ஆலயத்துக்கு வந்ததைப் பலரும் அறியவில்லை என்பதால் அதே புஷ் வண்டிக்காரன் பாரதியை மீண்டும் ஒருமுறை தங்கள் ஆலயத்துக்கு வரவேண்டுமென்றும், அந்தப் பகுதி மக்கள் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அவன் வேண்டுகோளை ஏற்று பாரதி மீண்டும் மறுநாளே உப்பளம் சென்றார். அங்கு வாழுகின்ற மக்கள் தங்கள் வீதிகளை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலமிட்டு, தோரணங்கள் கட்டி அவர்களும் தலை முழுகி ஈரத் தலையுடன் இவரை வரவேற்றனர். ஆலயத்தில் வழிபாடு முடிந்ததும் பாரதியை ஒரு பாட்டுப் பாடவேண்டுமென்று கேட்க, அவரும் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்து விட்டு "உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா" எனும் பாடலையும் "தேடியுனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி" எனும் பாடலையும் உரத்த குரலில் பாடினார். உடனே அருகிலிருந்த அந்தப் பகுதி ஆண்கள் தாரை தப்பட்டை ஒலியோடு தாளமிட்டுக் கொண்டு ஆடத் துவங்க, பாரதியும் ஆடிக்கொண்டே அந்தப் பாடலைப் பாடி முடிக்கிறார். தன்னை மறந்து தேசமுத்து மாரி மீது பாடிய அந்தப் பாடலின் இந்தப் பின்னணியைத் தெரிந்து பாடினால் தான் அதே உணர்வு நமக்கும் ஏற்படும்.

உப்பளம் சென்று வீடு திரும்பும்போது தந்தையும் மகளும் ஈஸ்வரன் தர்மராஜா கோயிலினுள் நுழைகின்றனர். அங்கிருந்த சிலைகளையெல்லாம் காட்டி இவர் யார், இது என்ன என்று பாப்பா எனும் சகுந்தலா கேள்வி கேட்டுக் கொண்டு வருகிறாள். அது தருமன், இது பீமன், இது அர்ஜுனன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்த பாரதி, திரெளபதியின் உருவச்சிலையைக் காட்டி இவர் யார் என்று கேட்டதும் மெளனமாகிவிட்டார். மகளும் தந்தையின் மனநிலையைப் புரிந்து கொண்டு மவுனமாக வீடு திரும்பிவிட்டனர். வீடு திரும்பிய பாரதி யாருடன் பேசாமல் அங்கும் இங்குமாக நடந்து நிறைவில் காலைத் தரையில் உதைத்துக் கொண்டு தன் கவிதை வரிகளை உதிர்க்கத் தொடங்கினார். அப்போது பிறந்ததுதான் அழியாக் காவியமான "பாஞ்சாலி சபதம்".

மற்றுமொரு சிறிய பாடல், 'அம்மாக்கண்ணு பாட்டு" என்பது அதன் தலைப்பு. அதில் 'பூட்டைத் திறப்பதுங் கையாலே, நல்ல மனந் திறப்பது மதியாலே, பாட்டைத் திறப்பது பண்ணாலே, இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே' எனும் வரிகளுடன் தொடங்கும். அந்தப் பாடல் தோன்றிய விதம் என்ன தெரியுமா? ஒரு சமயம் செல்லம்மாவும் சகுந்தலாவும் கடையத்துக்குப் போயிருந்தார்கள். பாரதி புதுவையில் தன் இல்லத்தின் வாயிலை ஒரு பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தான் வைத்திருந்த பூட்டின் சாவி இல்லாதது கண்டு திகைத்துப் போனார். எங்கெல்லாமோ தேடி அலுத்துப் போய் நின்று கொண்டிருந்த சமயம் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த (சம்பளம் எதையும் எதிர்பார்க்காமல் அன்புக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த மூதாட்டி அவர்) அம்மாக்கண்ணு எனும் பெண்மணி தற்செயலாக அந்தப் பக்கம் வந்தவர், பாரதியார் பூட்டைத் திறக்க சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு தானே கையால் அசைத்து அந்தப் பூட்டைத் திறந்து விட்டாள். இதைக் கண்டு மகிழ்ந்து போய் பாரதி அந்த அம்மாக்கண்ணுவின் பெயரால் இந்தப் பாட்டைப் பாடினாராம்.

புதுவை வாசத்தின் போது பாரதியார் குவளைக்கண்ணன் போன்ற நண்பர்களுடன் வெல்லச்சுச் செட்டியார் என்று அழைக்கப்பட்ட பாரதியாரின் நண்பருடைய மாந்தோப்புக்குச் சென்று அங்குள்ள மடு ஒன்றில் குளித்துவிட்டு வருவார். அங்கு சென்று குளிப்பதற்காக குவளை பாரதியைப் போய் அழைத்து வருவது வழக்கம். ஒரு நாள் பாரதியே சீக்கிரமாக எழுந்து வந்து குவளையின் வீட்டுக்கு வந்து அவரை அழைக்கிறார். அப்போது குவளையின் தாயார் பாரதியாரிடம், "அப்பா! பாரதி நீதான் பாட்டெல்லாம் நன்றாகப் பாடுவாயாமே! ஒரு சுப்ரபாதம் பாடேன்" என்கிறாள். ஆகா! அதற்கென்ன பாடினால் போச்சு என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் மடுவில் பாரதி குளிக்கச் சென்று விடுகிறார். போகும் வழியில் சுப்ரபாதம் என்றால் இறைவனை எழுப்பப் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சி என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, குளித்துவிட்டு வரும் வழியில் உரத்த குரலில் பாரத நாட்டையே தெய்வமாக வைத்து "பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி" என்று இப்போது நமக்கெல்லாம் அறிமுகமாகியிருக்கும் பாடலான "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" எனும் பாடலைப் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும் வந்தாராம். இதனை பாரதிதாசன் நன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மகாகவி பாரதியாரின் நாவில் கலைமகள் குடிகொண்டிருந்தார் என்பது உண்மையான சத்திய வாக்கு. பொய்யே பேசாதவர், அவர் சொல்லும் வாக்கு ஒவ்வொன்றும் அருள் வாக்கு என்பதை பல நேரங்களில் அவர் நிரூபித்திருக்கிறார். பாரதி புதுவையில் குடியிருந்த ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெருவில் அடுத்த வீட்டில் வசித்தவர் செல்வந்தர் பொன்னு முருகேசம் பிள்ளை. பாரதியார் குடும்பத்தின் தேவையறிந்து அவ்வப்போது பல உதவிகளைச் செய்து வந்தவர்கள் பிள்ளையும் அவரது மனைவியும். யாரும் வந்து உதவி செய்கிறேன் என்று சொல்லி செய்தால் அதை சுயமரியாதை காரணமாக பாரதி நிராகரித்து விடுவது வழக்கம். அவருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் அவர் அறியாமல் அந்த உதவிப் பொருட்களை அவர் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும்.

நெசவுத் தொழில் செய்துவந்த அவருடைய நண்பரும், பாரதி குயில் பாட்டைப் பாடிய மாந்தோப்புக்குச் சொந்தக்காரரும், பாரதியால் வெல்லச்சுச் செட்டியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட நண்பர்கூட பாரதிக்குப் பண உதவி செய்யும்போது அவர் அறியாமல் பணத்தை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்து விடும் வழக்கமுடையவர். பாரதியார் வீட்டில் சமையலுக்கு அரிசியோ, காய்கறிகளோ ஒரு பையில் போட்டு ஒருவரும் அறியாமல் அவர் வீட்டு சமையல் அறையில் வைத்து விடுவாராம் பொன்னு முருகேசம்பிள்ளையின் மனைவி. அப்படிப்பட்டவரின் மகன் ராஜாபாதர் என்பவர் படிப்பதற்காக பிரான்சு நாட்டிற்குச் சென்றார். அப்போது முதல் உலக யுத்தம் முடியும் தருவாயில் இருந்தது. வெகுகாலம் ஆகிவிட்டபடியால் தன் மகனைப் பார்க்க தந்தை முருகேசம் பிள்ளையின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. மகனுடைய பிரிவு அவரை மிகவும் துன்புறுத்தியது. அப்போது ராஜாபாதர் ஊர் திரும்புவதாக ஒரு செய்தி வந்தது, தந்தைக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. தொடர்ந்து சில நாட்களுக்குள் ராஜாபாதர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் உடைந்துவிட்டது என்ற செய்தி இடிபோல வந்து பிள்ளையைத் தாக்கியது. மனம் பேதலித்த பொன்னு முருகேசம் பிள்ளை நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாக தன் மகன் நினைவோடு கிடந்தார். பலரும் பல விதங்களில் அவரைத் தேற்ற முயன்றும் ஒன்றும் பயனளிக்கவில்லை. மகன் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கவில்லை என்றொரு பொய்த் தந்தியைத் தயார் செய்து கொண்டு வந்து காட்டியும் பார்த்துவிட்டனர். ஒன்றுக்கும் அவர் மனம் தேறவில்லை. கடைசியில் பாரதியார் வந்து சொல்லட்டும் நான் நம்புகிறேன் என்றார் பொன்னு முருகேசம் பிள்ளை.

அவர் உடல் நலம் தேறவேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் சுற்றத்தார் பாரதியாரிடம் வந்து ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேரவில்லை என்று பிள்ளையிடம் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர். செய்வதறியாது திகைத்த பாரதி எப்படி இப்படியொரு பொய்யைச் சொல்லி ஒரு நல்ல மனிதரை ஏமாற்றுவது என்று தயங்கினார். இதுபோன்ற இக்கட்டான சந்தர்ப்பங்களில் பொய் சொல்வது தவறில்லை; மகாபாரதத்தில்கூட தர்மரை 'அஸ்வத்தாமன்' இறந்து விட்டதாகப் பொய் சொல்லச் சொன்னபோது தயக்கத்துடன் அவர் "அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:" (அஸ்வத்தாமன் எனும் யானை இறந்தது) என்று குஞ்சர: எனும் சொல்லை மெல்லச் சொல்லிவிடவில்லையா. ஆகவே முருகேசம் பிள்ளையின் உயிரைக் காக்கவேண்டுமானால் அப்படியொரு பொய்யைச் சொல்வதில் தவறில்லை என்று கருதி, அவரிடம் சென்று "ஐயா! கப்பலே கவிழ்ந்தாலும் பராசக்தியருளால் நம் ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேராது. அதற்கு நான் ஜவாப்தாரி" என்று ஆறுதல் கூறினாராம். எனினும் மனத் துன்பம் காரணமாக பிள்ளை ஓரிரு நாட்களில் உயிர் துறந்து விட்டார். அப்படியானால் கவியின் வாக்கு பொய்த்து விட்டதா? இல்லை, கப்பல் உடைந்த போதும் ராஜாபாதர் உயிர் பிழைத்து புதுவைக்கு வந்து சேர்ந்தார். மகாகவி சொன்ன வாக்கு "ஐயா! நாம் ஜவாப்தாரி; பராசக்தி காப்பாற்றுவாள்" என்று அவர் சொன்னதை பராசக்தி நிறைவேற்றி விட்டாள். இந்த அதிசயத்தைச் சொல்லிச்சொல்லி அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.

மற்றுமொரு தெய்வீக அனுபவத்தை பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி சொல்லுகிறார். புதுச்சேரியில் அவர்கள் குடியிருந்த வீடு விளக்கெண்ணெய் செட்டியார் என்று பாரதியாரால் பெயரிடப்பட்ட ஒருவரின் பழைய இல்லம். இன்றோ நாளையோ இடிந்து தலையில் விழக்கூடிய நிலையில் இருந்தது அந்த வீடு. முழுவதும் இடித்துவிட்டுக் கட்டினாலொழிய அந்த வீட்டில் வாழ்வது என்பது முடியாத நிலை. அதற்கு நேர் எதிரில் கெட்டியான ஒரு மச்சுவீடு. அந்த வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதாகத் தகவல் இருந்தது. பாரதியாரை வேவு பார்க்க ஏராளமான போலீஸார் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் நேரெதிர் வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரி குடிவருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் குடிவருவதைத் தடுக்க வேண்டுமானால் இவர்கள் அந்த வீட்டுக்குக் குடி போக வேண்டும், அந்தப் போலீஸ் அதிகாரி இந்த பழைய வீட்டுக்குக் குடி வரமாட்டார். வேறு வழியில்லை அந்த மச்சுவீட்டுக்கு பன்னிரெண்டு ரூபாய் வாடகை என்றபோதும், அது அதிகம் தான் என்றாலும் அங்கு குடி போனார்கள். 

அது கார்த்திகை மாதம். இவர்கள் புதிய வீட்டுக்குக் குடிபோன மறுநாள் இரவு கடுமையான மழை, அதனைத் தொடர்ந்து பேய்க்காற்று வீசத் தொடங்கியது. ஆம்! புயல்காற்று தொடங்கிவிட்டது. பாரதியாரின் இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் அறையில் படுத்துவிட்டனர். பாரதியும் செல்லம்மாவும் விடிய விடிய கண்விழித்து இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். நடு இரவில் சுற்றுப் புறங்களில் மரங்கள் 'மடேர் மடேர்' என்று ஒடிந்து விழும் ஓசை. ஓசைகேட்டு எழுந்த சகுந்தலாவை பாரதியார் ஆறுதல் சொல்லி "காற்றும் மழையும் பெரிதாக இருக்கிறது பாப்பா, பயப்படாதே" என்று ஆறுதல் சொன்னார். விடியற்காலையில் மகளை அழைத்துக் கொண்டு பாரதி வெளியே வந்தார். அப்போது வாயுதேவனின் விளையாட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாலை மரங்களெல்லாம் வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தன. ஏராளமான காக்கைகளும் ஏனைய பறவையினங்களும் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன. தந்தி மரங்கள் அறுந்து விழுந்து கிடந்தன. வரிசையாக தென்னை மரங்கள் அனைத்துமே வீழ்ந்து கிடந்தன. அப்போது பாரதி பாடிய பாடல்தான்: "காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே!" எனத் தொடங்கும் பாடல். அதில் வரும் சில வரிகள் அவருடைய அனுபவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. அது, "நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இந்த நேரமிருந்தால் என்படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக் காத்தது தெய்வ வலிமையன்றோ" என்ற பாடல்.

நிறைவாக வங்கத்தில் தோன்றிய "வந்தேமாதரம்" எனும் சொல் தமிழகத்தில் வ.உ.சி., சுப்பிரமனிய சிவா, பாரதி ஆகியோரால் முழங்கப்பட்டு அந்த முழக்கங்களே முதல் இருவரையும் சிறையில் அடைத்ததையும் வரலாறு சொல்லுகிறது. அந்த வந்தேமாதரம் எனும் மந்திரச்சொல்லை நாம் சொல்ல வேண்டிய, இல்லை இல்லை முழங்கவேண்டியதன் அவசியத்தை பாரதி ஒரு கவிதையில் சொல்லுகிறார். இந்த பாரத புண்ணிய பூமி பழம்பெரும் பூமி; நாமதன் மக்கள் இந்நினைவகற்றாதீர் என்று மக்களுக்கு உரைத்தவர் பாரதி. அந்த பாரத பூமியின் மண் எத்தகையது தெரியுமா? இந்த புனிதமான மண்ணில்தான் நம் தந்தையும் தாயும், அவர்களது முன்னோர்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தனர். அந்தப் புனித மண்ணில் அவர்கள் சிறு பிள்ளைகளாக ஓடியாடி விளையாடியதையும், அறிவிலே தேர்ச்சி பெற்று வளர்ந்து நின்றதையும், திருமணமாகி இன்புற்று வாழ்ந்ததையும், பின்னர் முதுமையடைந்து மாண்டுபோன பின்பு இதே மண்ணில் அவர்கள் பூந்துகளாக மாறி மண்ணோடு மண்ணாகக் கலந்து கிடப்பதையும், அத்தகைய புனிதமான மண்ணை சிந்தையில் இருத்தி வந்தனை கூறி வாயுற வாழ்த்தேனோ, இதை "வந்தேமாதரம்" "வந்தேமாதரம்" என்று வணங்கேனோ என்கிறார். உலகிலே கர்மபூமி எனப் புகழ்பெற்று புனித நதிகளால் வளமூட்டி, வானுயர்ந்த மலைகளும், காடுகளும், வனங்களும், நதி தீரங்களும், புண்ணியத் தலங்களும் சூழ்ந்து கிடக்கும் இந்த புண்ணிய நாட்டை வணங்குவோம் என்று உரக்கக் குரல் கொடுத்த அந்த மகாகவியை இந்த நினைவு நாளில் வணங்கி அவன் வழி நடப்போம்.
                                               வந்தேமாதரம்.


Wednesday, September 9, 2015

பாரதியாரின் 94ஆவது நினைவு நாள்.



மகாகவி பாரதியாரின் 94ஆவது நினைவு நாள்.
11 செப்டம்பர் 2015
மகாகவிக்கு இரண்டு பெண்கள் மட்டுமே. மகன் இல்லாத குறை நீங்க 'சிவாஜி' பத்திரிகாசிரியராக இருந்த திருலோக சீதாரம் அவர்கள் திருச்சியில் பாரதியாரின் இறந்த திதியில் அவருக்கு ஸ்ரார்த்தம் செய்து வந்தார் என்பது முதல் செய்தி.
பாரதியார் மகாகவியா என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாரதிதாசன் எழுதிய கவிதை.
"ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?
புதிய நெறி பாஞ்சாலிசபதம் போலே
தேன் இனிப்பில் தருபவர் யார்? மற்றும் இந்நாள்
ஜேய பேரிகை கொட்டடா என்றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்!"
இவ்விரு செய்திகளோடு மகாகவியின் 94ஆவது நினைவு நாளில் அவர் சிந்தனையில் ஆழ்வோம்! வாழ்க மகாகவி பாரதி புகழ்!!

வேதாந்த சிரோமணி, 'ஹரிகதா' தஞ்சாவூர் என்.சீனிவாசன்

 

தஞ்சாவூரில் சரஸ்வதி மகால் நூலகத்தில் சம்ஸ்கிருத மொழித்துறையில் பணியாற்றிய வரும், இசை, ஹரிகதை போன்ற பல்துறைகளில் சிறந்து விளங்கியவரும், பணி நிறைவு பெற்ற பிறகு மெலட்டூர் பாகவத மேளாவில் பாடல்களைப் பாடிவருபவரு மான என்.சீனிவாசன் இந்த ஹரிகதா துறையில் தலைசிறந்து விளங்கிய விற்பன்னர்கள் ஏராளமானவர்களுடைய வரலாறுகளைத் திரட்டி நூல்வடிவம் கொடுத்திருக்கிறார். இப்போதும் ஆண்டுதோறும் மெலட்டூரில் நடக்கும் இரண்டு பாகவத மேளா நிகழ்ச்சிகளில் திரு மகாலிங்கம் என்பார் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு இவர்தான் ஆஸ்தான பாடகர். இவர் சம்ஸ்கிருத மொழியில் சிறந்த பண்டிதருமாவார். அவர் ஹரிகதை கலைஞரும் கூட. இவர் இந்த ஹரிகதா விற்பன்னர்களைப் பற்றி எழுதிய நூலுக்கு முன்னுரையாக 'ஹரிகதை' வரலாற்றை மிக அழகாக எழுதியிருக்கிறார்.

ஹரிகதை என்பது ஓர் ஒப்பற்ற கலை என்கிறார் இவர். ஹரிகதைக்கு கருப்பொருளாக எடுத்துக் கொள்ள ஏராளமான கதைகள் உண்டு. இதில் திறமை பெற்று தலைசிறந்த கலைஞராக விளங்கவேண்டுமானால், ஹரிகதா கலைஞருக்கு தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் நல்ல புலமை இருக்க வேண்டுமாம். இசையில் வல்லவராகவும் இருத்தல் அவசியம். இசை இல்லையேல் ஹரிகதை சொல்ல முடியாது. இவை தவிர சாஸ்திர, இதிகாச, புராணங்களில் நல்ல தேர்ச்சி வேண்டும். கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஏதேனும் வாய் தவறி தவறான செய்தியைச் சொல்லி விட்டால் அதனை மிக சாமர்த்தியமாக மெழுகி சமாளிக்க வாக்கு சாமர்த்தியம் அவசியம். மேற்படி திறமைகள் இல்லாமல் யாரேனும் இந்த ஹரிகதை சொல்கிறேன் என்று வந்தால், பாவம் அவர்களால் சமாளிக்க இயலாது.

எடுத்துக் காட்டாக இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற புராணக் கதைகள் இருக்கின்றன. இவற்றைச் சொல்கிறேன் என்று சொதப்பிவிட்டால் சுவாரசியமில்லாமல் போய்விடும். அதனால் மூலக்கதையை வைத்துக் கொண்டு, வெவ்வேறு விதமான பாடல்கள், கற்பனை செறிந்த மேற்கோள்கள், இடையிடையே கலகலப்பூட்டும் நகைச்சுவை இத்தனையும் வைத்துக் கொண்டு கதை சொன்னால்தான் மக்களைத் திருப்தி படுத்த முடியும் என்கிறார் இவர். 

ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உதாரணத்துக்கு இராமாயணக் கதையை ஒருவர் ஹரிகதையாகச் சொல்கிறார். அவர் எங்கு போனாலும் அதே கதையைத் தானே திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டும். அப்படியானால் அவர் கதையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு என்ன தோன்றும்? அட என்னப்பா இது! தசரதன் எத்தனை முறை புத்திரகாமேஷ்டி யாகம் செய்வான்; ராமன் எத்தனை முறை பிறப்பான்; எத்தனை முறை சீதைக்குத் திருமணம் நடக்கும்; எத்தனை முறை இராவணன் மடிவான் இப்படி எண்ணத்தான் தோன்றும் இல்லையா? ஆனால் இந்த ஹரிகதா துறையில் இருந்த எம்பார் விஜயராகவாச்சாரியார் என்கிற மகாவித்வான் சொல்லும்போது மட்டும் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு வைபவங்களோடு ராமன் பிறப்பானாம்; அதே போலவே மற்ற காட்சிகளும் ஒவ்வொரு முறையும் புதுமைகளோடு சொல்லப்படுமாம். இது அந்த மகாவித்வானின் கற்பனைத் திறன், இசைத் திறமை, அனுபவம் இவைகளின் வெளிப்பாடு இல்லையா?

இந்த ஹரிகதை தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல; அது நம்மில் பலருக்கும் தெரியும். மராத்திய மன்னர்கள் தஞ்சை மண்ணை ஆண்ட காலத்தில் இங்கு இறக்குமதியான சில கலைகளில் ஹரிகதையும் ஒன்று. மற்றொன்று "லாவணி" எனப்படும் இருவர் உட்கார்ந்து எதிரெதிரான கருத்துக்களை வைத்து கதை சொல்லுதல். இதில் "எரிந்த கட்சி, எரியாத கட்சி" என்பது சிறப்பானது. அதில் சிவபெருமான் மன்மதனைத் தன் மூன்றாவது கண்ணால் எரித்தார் என்பது ஒரு கட்சி, இல்லை என்று மறுப்பது இன்னொரு கட்சி. இந்த லாவணியை ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார்கள். அதில் ஒரு சுவையான கேள்வி. உலகத்திலே மிக ஆபத்தான ஆயுதம் எது? என்பார் என்.எஸ்.கே. தரங்கெட்டுப் போன மனிதனின் நாக்குதான் அது என்பதாக ஒரு பதிலை எம்.ஜி.ஆர். சொல்வார். இதுபோன்ற பல சுவையான கேள்வி பதில்களை லாவணியில் கேட்க முடியும். தொலைக்காட்சி உலகில் இந்த அரிய கலைகள் எல்லாம் மறைந்தே போய்விட்டன. இவை தவிர கிராம தேவதைகள் கோயில்களில் அந்த காலத்தில் 'அரவான் கதை' சொல்வதுண்டு. நள்ளிரவில் உடுக்கு எனும் தோல் வாத்தியக் கருவியை அடித்துக் கொண்டு பாடும் ஓசையைக் கேட்கும்போதே ஒரு பயத்தை உண்டு பண்ணும். ஊ....ம், அதெல்லாம் பழைய கதை.

இனி ஹரிகதைக்கு வருவோம். வேதாந்த சிரோமணி, 'ஹரிகதா' தஞ்சாவூர் என்.சீனிவாசன் என்பார் தஞ்சை ஜில்லா பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள பேராவூரணி எனும் ஊரில் 6-5-1944இல் பிறந்தவர். தந்தையார் நடராஜ ஐயர், தாயார் நாகலட்சுமி அம்மையார். அவர்களும் ஹரிகதை பற்றிய அருமை பெருமைகள் தெரிந்தவர்கள், அடிக்கடி அவர்கள் ஹரிகதை பற்றியெல்லாம் பேசுவதைக் கேட்டே சீனிவாசன் அவர்களுக்கும் அந்த கலையின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. இவர் சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் படித்து 1967இல் "வேதாந்த சிரோமணி"யாக வெளியே வந்தார். வடமொழிப் புலமையோடு இவர் திருத்தருமையாதீனத்தில் தமிழும் கற்று 1969இல் 'வித்வான்' பட்டம் பெற்றார்.

என்.சீனிவாசனுடைய அதிர்ஷ்டம் அவருடைய மூத்த சகோதரியை ஒரு ஹரிகதை செய்பவர் ராமசுப்ரமண்ய சர்மா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவரிடமும் இவர் ஹரிகதை முறைகளை வழுவற கற்றார். மெல்ல அவருடைய நிகழ்ச்சிகளில் பின்பாட்டும் பாடத் தொடங்கினார். சென்னையில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. நூலகத்தில் இவருக்கு வேலை கிடைத்தது. விடுவாரா, அங்கிருந்த பண்டைய தமிழ் நூல்களையெல்லாம் படிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 1969 தொடங்கி 1974 வரை இவர் அங்கு பணியாற்றினார். 1979இல் இவர் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் பணிக்கு அமர்ந்தார். அங்கு பணியாற்றிய காலத்தில் இவர் பதினேழு ஆய்வு நூல்களை எழுதி பதிப்பித்திருக்கிறார்.

1980 முதல் இவர் முழு நேர ஹரிகதைக் கலைஞராக உருவெடுத்தார். காஞ்சி சங்கர மடம் இவரைத் தங்கள் ஆஸ்தான வித்வானாக நியமித்து கெளரவமளித்தனர். சிலருக்குத்தான் தாங்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்குள் இயல்பாக இருக்கும் துறை பற்றிய செய்திகள் கிடைக்கும். அதுபோல இவருக்கு ஹரிகதை பற்றிய பல செய்திகள், முந்தைய தலைமுறை ஹரிகதா பாகவதர்கள் வரலாறு இவையெல்லாம் கிடைத்தன. இந்த ஆர்வத்துக்கு தூபமிட்டு, தூண்டியவர் திரு பி.எம்.சுந்தரம். இவர் தஞ்சாவூர் தந்த ஒரு கலைஞர். ஆய்வறிஞர், எழுத்தாளர், அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். இசைத்துறை பற்றிய பல அரிய தகவல்களைச் சேகரித்து வைத்திருப்பவர். இப்போதும் புதுச்சேரியில் வாசம் செய்து வரும் இந்த இசைத்துறை ஆய்வாளர் இவருக்கு உறுதுணையாக இருந்தார். அவர் அளித்த ஊக்கம், அவர் பண்டைய ஹரிகதா பாகவதர்களைப் பற்றிய வரலாறுகளைக் கொடுத்து மேலும் பலவற்றைச் சேர்த்து இவற்றை ஒரு நூலாக வெளியிடும்படிச் செய்தார். நமக்கு ஓர் அரிய நூல் கிடைத்தது அதுதான் "கதாகாலட்சேபக் கலையும் கலைஞர்களும்" என்ற நூல். 

இந்த அரிய நூலில் அவர் சுமார் நூறு ஹரிகதா கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறார். மேலும் சிலருடைய பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் பற்றிய தகவல்கள் திரட்ட முடியவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். இந்த நூறு கலைஞர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், அடுத்து வரும் ஒரு கட்டுரையில் இந்த நூறுபேரின் பெயர்களைக் கொடுக்க முயற்சிக்கிறேன். இந்த நூல் ஒரு மாபெரும் சாதனை, இந்தவொரு சாதனைக்காக மட்டுமே திரு என்.சீனிவாசன் பாராட்டுகளுக்கு உரியவர். வாழ்க சீனிவாசன், வளர்க அவரது இந்தச் சீரிய பணி.


From The Hindu dated 29 Jan. 2010.

PRADEEP CHAKRAVARTHY
Sanskrit and Tamil are N. Srinivasan's twin passions. And his job at Thanjavur's Sarasvati Mahal Library fostered that interest.
A mong the many treasures of this State is Thanjavur Serfoji Maharaja's Sarasvati Mahal Library. The core of the library dates back to the 16 and 17 {+t} {+h} centuries, which has many rare manuscripts on topics ranging from philosophy, religion and astrology to literature, magic, medicine and horticulture.
The scholars whose works are housed here are just as important as those who preserved these priceless treasures, and painstakingly converted the manuscripts into books that can be accessed by the public.
One such person is N. Srinivasan. He worked with the library as a Sanskrit pundit from 1979 to 2002.
Srinivasan's father was a school teacher who loved Sanskrit and Tamil, and persuaded him to study Sanskrit at the Thiruvaiyaru College. After this, he went to the Madras Sanskrit College.
Srinivasan wanted to follow in the footsteps of his uncle Thanjavur Ramasubramania Sharma, a well known Harikatha performer. He did work with him but family circumstances forced him to look for a job. He joined the U Ve Saminatha Iyer Library and had his first exposure to palm leaf manuscripts.
Soon, his expertise in Sanskrit was matched by his expertise in Tamil. The intricacies of Tamil grammar were not easy, he recalls, but he learnt them by reading many genres such as Thoothu and Ula. He remembers, “By then, I needed a full time job and when the Sarasvati Mahal began recruiting, I applied. I was selected… the first out of 33 applicants.”
One leisurely Sunday afternoon, Srinivasan is happy sharing some of his experiences. “After I got the job, I worked in the library with the determination that I would help bring credit to great people such as Dr.V. Raghavan, who headed the selection committee. Many scholars including Padmanabha Sharma, Navalpakkam Devanathachariar and Telugu pundit N. Viswanathan inspired me a lot.”
Manuscript hunting
Srinivasan has 35 publications to his credit, mostly in Sanskrit. He always chose ancient manuscripts that combined literature and history and tended to delve deep into the intricacies rather than gloss over details; that has been his passion, and something that the library is also famous for.
Among his interesting publications is ‘Veda Sara Shiva Sahasram', a work from the time of Shahaji (1684-1712) that is a compilation of all the instances where Siva is mentioned in the Vedas. This is authored by Paramashivendra Saraswati, a pontiff of the Kanchi Math. The only other copy of this paper manuscript is in London!
“Even today when I think of the book, I feel proud and honoured,” he says. He adds, “My knowledge of Tamil and Sanskrit has helped me immensely in my translation work.”
He lists some of his works. “‘Surya Sathakam' is a set of 100 verses on Surya that was popular even during the Pallava times. I translated the Sanskrit original into simple Tamil. Then I did one with my late colleague N. Viswanathan from Telugu to Tamil -- ‘ ‘Vipranarayana Charitram', a story of Thondaradipodi Azhwar where Srirangam is substituted with Mannargudi, authored by Vijayaraghava Nayaka in the 17th century. This was done specifically keeping in mind the Bhagavatha Mela. I also worked on ‘Mohini Vilasa Kuravanji,' a unique Kuravanji drama authored by the Maratha King Shahaji where the text is in Sanskrit but the meter is Tamil. My interest in Harikatha prompted me to work on ‘Sita Kalyanam,' ‘Markandeya Charitram' and Tyagaraja's ‘Nauka Charitram.' My interest in music prompted me to do a detailed study of the veena, tracing its history since the ancient times.”
He continues, “Among the Tamil publications, an interesting one that I did was ‘Thaathu Varusha Karippu Kummi', a dance that reflects the plight of the people of South Arcot who were hit by famine in the 19th Century.”
Besides being a Sanskrit scholar, Srinivasan is also a Harikatha performer and has given many performances. He recollects, “Despite my hectic schedule at the library, I managed to to present more than 2000 Harikatha performances. I have also brought out a book in Tamil on important Harikatha exponents of the State, many of whom were from Thanjavur.
Honours
He continues, “Among the honours I treasure the most is an award I received from The Music Academy for a Sanskrit Harikatha I presented in 2000. I am also the recipient of a Senior Fellowship for Harikatha from New Delhi. I help the Melattur Bhagavatha Mela for their performances.”
Srinivasan who has “not lost touch with Sanskrit”, is currently working on ‘Amarakosham,' a thesaurus and dictionary of sorts for Sanskrit, and offers his services at the Siddha Medicine Research Institute.
The contented scholar remarks, “Today, I keep myself busy with work I enjoy and have ample time to spend time with my family.”
He then laments, “However, the growing apathy that youngsters show towards heritage in general and manuscripts and languages in specific, distresses me. We know nothing about so many scholars whose works have become famous. Surely that is reason enough for us to do our bit in preserving and propagating the country's heritage at least on a part-time basis, if not full time,” are his parting words as he bids me goodbye.
(The author is at present engaged in writing a book on the cultural history of Thanjavur, to be released later this year.)


ஹரிகதா விற்பன்னர் தஞ்சை டி.ஆர்.கமலா மூர்த்தி

                   

        ஹரிகதை என்றதும் தஞ்சை வாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் திருவையாறு அண்ணாசாமி பாகவதர். சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் புகழை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த நாகரத்தினம்மாளின் பிரதம சிஷ்ய பன்னிபாய் என்பவர் நெடுநாட்கள் தியாகராஜர் ஆராதனையின்போது ஹரிகதை செய்து கொண்டிருந்தவர். அண்ணாசாமி பாகவதரின் சீடர்களில் குறிப்பிடத் தகுந்தவர் தஞ்சை டி.ஆர்.கமலாமூர்த்தி அவர்கள். தனது முதிய வயதிலும் அந்தக் கலையை பலருக்கும் சொல்லிக் கொடுத்து, அவர்கள் புகழின் உச்சிக்குச் செல்வதைக் கண்டு மனமகிழ்ச்சியில் திளைத்திருப்பவர் திருமதி கமலாமூர்த்தி. அவருடைய சொந்த பேத்தி திருமதி சுசித்ரா இன்று இந்தக் கலையில் சிறந்து விளங்குவதையும் அவர் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

தஞ்சை டி.ஆர்.கமலாமூர்த்தி ஹரிகதையில் சிறந்து விளங்கிய காலத்தைப் பார்ப்பதற்கு முன்பு அவருடைய பிறப்பு, வளர்ப்பு பற்றியும் சிறிது பார்க்கலாம். சிதம்பரத்துக்கு அருகில் லட்சுமிகுடி எனும் சின்னஞ்சிறிய கிராமம். அங்கு வாழ்ந்த ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக 9-4-1932இல் பிறந்தவர் இவர். இவருக்குப் பிறகு தர்மசம்வர்த்தினி என்ற தங்கையும் நடராஜன் எனும் தம்பியும் இவருக்கு உண்டு. பிறந்தது சிறு கிராமம் என்பதால் இவர் இளம் வயதில் சிதம்பரத்தில் இருந்த தன் தாய்மாமன் இல்லத்தில் தங்கிப் படித்தார். இளம் வயதிலேயே நல்ல குரல் வளமும், இசை ஞானமும் இவருக்கு இருந்ததால் இவரை சிதம்பரத்தில் இருந்த ராஜா பாகவதர் என்பவரிடம் முதலில் ஹரிகதை கற்க அனுப்பப்பட்டார்.

ஹரிகதை என்பது மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் மராத்திய மாநிலத்திலிருந்து இங்கு வந்தது. அப்போதெல்லாம் ஹரிகதையை சொல்பவர் மேடையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டு கையில் சப்பளாக் கட்டையை வைத்துக் கொண்டு பாடி, ஆடி, கதை சொல்லும் வழக்கம் இருந்தது. இவருக்குப் பின்பாட்டுப் பாடுபவர்கள் பின்னால் நின்றுகொண்டு பாடியும் தாளங்கள் இசைத்துக் கொண்டும் இருப்பார்கள். இந்தக் கலை தஞ்சைக்கு வந்த பின் கிருஷ்ண ஐயர் என்பவரால் முறைப்படுத்தப்பட்டு இன்றைய பாணி வகுத்துத் தரப்பட்டது.

ஓரளவு ஹரிகதையைப் பாடவும், கதை சொல்லவும் தெரிந்த வயதில் கமலா முதன் முதலாக சிதம்பரத்தில் நடராஜ தீட்சிதர் என்பவரின் வீட்டில் "வத்சலா கல்யாணம்" எனும் தலைப்பில் ஹரிகதை செய்தார். சிதம்பரத்தில் இவருடைய குருவாக இருந்த ராஜா பாகவதர் காலமாகிவிட்ட படியால் மேலும் இவரால் இந்தக் கலையைக் கற்பதில் தடங்கல்கள் ஏற்பட்டன. சில மாதங்கள் கழிந்தபின் ராமச்சந்திர ஐயர் தன் மகள் கமலா உட்பட அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து தஞ்சையை அடுத்த திருவையாற்றில் வசிக்கத் தொடங்கினார். அவ்வூரின் மண்வாசனை கலைகளுக்கு உறைவிடமாக இருந்ததால் அங்கு இவரது இசை, ஹரிகதை பயிற்சியும் நன்கு நடைபெற்றது.

அப்போது திருவையாற்றில் ஹரிகதா விற்பன்னராக விளங்கிய அண்ணாசாமி பாகவதர் வசித்து வந்தார். அவரிடம் சென்று கமலா ஹரிகதை கற்கத் தொடங்கினார். குறிப்பாக இராமாயண காப்பியத்தையும், பெரிய புராண கதைகளையும் இவர் அண்ணாசாமி பாகவதரிடம் கற்றுக்கொண்டு சிறந்து விளங்கினார். இவருக்கு 1948இல் திருமணம் நடந்தது. கணவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. கணவரின் ஆதரவும் உதவியும் இவருக்கு இருந்ததால் ஹரிகதா கலையில் தடையின்றி கமலாவால் கவனம் செலுத்த முடிந்தது.

ஹரிகதை எனும் கலையில் பல்வேறு வரலாறுகள், கதைகள், அதன் நுணுக்கங்கள் இவைகளையெல்லாம் புகழ்பெற்ற ஹரிகதா கலைஞர் எம்பார் விஜயராகவாச்சாரியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கமலாவுக்குக் கிடைத்தது. அவரைப் போலவே தஞ்சையில் வாழ்ந்த தலைசிறந்த எழுத்தாளரும் அறிஞருமான சுவாமிநாத ஆத்ரேயர், என்.வி.வெங்கடசுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆகியோரிடமும் இந்தக் கலை சம்பந்தமான பல அரிய வழிகாட்டுதல்களை கமலா பெற்று வளர்ந்தார்.

நல்ல குரல் வளமும், இசையில் நல்ல தேர்ச்சியும் இருந்ததால் கமலாவால் ஹரிகதையில் நல்ல சங்கீதத்தைக் கொடுக்க முடிந்தது. இசை நடுவினில் சுவாரசியமான புராண, இதிகாச கதைகளை இவர் சொல்லும்போது அவற்றை நேரில் பார்த்து ரசிப்பது போன்ற உணர்வு கேட்போருக்கு ஏற்படும் விதமாக அமைந்திருக்கும் அவருடைய கதை சொல்லும் பாணி. வீட்டில் ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசுவது போன்ற சொல் நடை இருந்ததால், குறிப்பாக பெண்கள் இவர் கதைகளை விரும்பிக் கேட்கத் துவங்கினார்கள். ஒரு ராகத்தைத் துவங்கும் போதே அந்த ராகத்தின் லட்சணங்கள் வெளிப்படும் வகையில் அவர் பாடுவதும், அவர் இசையின் மேன்மையும் கேட்போர் மனங்களை அதில் ஈடுபட வைத்துவிடும். இவருடைய குருநாதர் அண்ணாசாமி பாகவதரின் லாவகமும், இசை லட்சணமும் சிஷ்யையான இவருக்கும் அப்படியே வந்துவிட்டதாகவே கேட்பவர்கள் நினைத்தார்கள்.

பின்பாட்டுக்கென்று தனியாக யாரையும் இவர் வைத்துக் கொள்ளாவிட்டாலும், தனக்கு ஆர்மோனிய வாத்தியத்தை வாசிக்க கலைஞர்களை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இவருக்கு மிருந்தங்கம் வாசிப்பவர்கள் பலரும் தஞ்சைக் கலைஞர்கள். குருவப்பா, ஜனார்தனன், மகர்நோம்புச்சாவடி சம்பங்கி கோபால பாகவதர், தஞ்சை என்.ராஜம் ஐயர் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழ்நாடு அரசின் "கலைமாமணி" விருது, 1978இல் சென்னை சங்கீத வித்வத்சபையின் டி.டி.கே.விருது, 1996இல் ஒரு விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். இவருக்கு மேலும் சில விருதுகள் கிடைத்தன. அவை "ஸங்கீதாம்ருதவர்ஷிணி", "ஹரிகதாவாணி", "ஸம்ப்ரதாய ரத்னா" ஆகியவை குறிப்பிடத் தக்கவை. 2001இல் புது டெல்லி சங்கீத நாடக அகாதமி இவருக்கு விருது அளித்து கெளரவித்திருக்கிறது.

இவருடைய பெயரைச் சொல்ல இன்று இளம் தலைமுறையினரில் பலர் இவருடைய பாதையில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களும் இவரைப் போலவே சிறந்த கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள். அவர்களும் இவரைப் போல தலை சிறந்த கலைஞர்களாக வர இறைவன் அருள் புரிவாராக.

Monday, August 31, 2015

அன்னை சாரதா தேவியார்.


நமது தேசத்தில் பண்டைய காலந்தொட்டு பெண்களில் பல யோகியர் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். ஒளவையார், இராமாயணத்தில் சபரி, சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள், திருத்தொண்டர் புராணத்தில் மங்கையர்க் கரசியார், காரைக்கால் அம்மையார் போன்ற எத்தனையோ பெண் அடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் இந்த தேசத்தின் பெண்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கு இலக்கணமாகவே வாழ்ந்து வழிகாட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 

அந்த மாதரசிகளின் வழியில் நாம் இப்போது பார்க்கப்போவது, அன்னை சாரதா தேவியைப் பற்றிதான். கல்கத்தாவில் காளிகோயில் பூசாரியாக இருந்த இராம கிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்க்கையையே இறையுணர்வில் ஆழ்த்தி, தன்னை மறந்து உலகத்துக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவர். அவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்குத் திருமணம் ஆனது. அப்படி அந்த மகானைத் திருமணம் செய்து கொண்ட மங்கையோ, இந்த உலக வாழ்க்கைக்கு என பிறந்தவர் அல்ல, மனிதர்களை உய்விக்க வந்த மகாத்மா என்பதை திருமணமாகியும் துறவியாக வாழ்ந்து காட்டி மறைந்தவர் அன்னை சாரதா தேவியார். 

மக்கள் மனங்களை மயக்கி மாயா ஜாலங்களையோ, மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களையோ செய்து பிறர் மனங்களை கவர்ந்தவர் அல்ல இந்த தாய். உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் ஒரு அன்னை இவர்தான் என்று நினைக்கும் வகையில், அன்பே ஒரு தாயின் உருவெடுத்தது போல, பிறரது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, ஆறுதல் வழங்கி, வழிகாட்டிக் கொண்டு வாழ்ந்தவர் அன்னை. அந்த அன்னை சாரதா தேவியாரின் வாழ்க்கைச் சரிதத்தையும், அவர் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளையும் இப்போது பார்க்கலாம்.

பாரத தேசத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த வங்காள தேசம்; அங்கு கல்கத்தா நகரத்துக்கு அருகில் அமைந்த ஜெயராம்பாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 1853 டிசம்பர் 22ஆம் நாள் அன்னை சாரதா தேவியார் அவதரித்தார். தந்தையார் பெயர் ராமச்சந்திர முகர்ஜி, தாயார் ஷ்யாமாசுந்தரி தேவி. பெற்றோருக்கு இவர்தான் முதல் குழந்தை.

கிராமத்தில் பிறந்த பெண் குழந்தை, அதுவும் பிற்போக்கான பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த இந்தப் பெண்ணின் இளம் வயது எப்படி இருந்திருக்கும்? கிராமத்தில் இதர குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல், ஆடு, மாடுகளை மேய்த்து, குளிப்பாட்டி அவற்றுக்கு தீனி கொடுத்து கவனித்துக் கொள்ளுதல், வீட்டில் மற்றவர்களுக்கு உதவியாக இருத்தல், அக்கம்பக்கத்தாருக்குத் தேவையான பணிகளைச் செய்தல் என்று மிகச்சாதாரண கிராமத்துப் பெண் குழந்தைகளைப் போலத்தான் இவரும் வளர்ந்தார். 

அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் படிக்க பள்ளிக்கூடம் செல்ல அனுமதிப்பதில்லை. அத்தனை பிற்போக்கான காலம். அன்னையும் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பள்ளிக்கூடப் பாடம்தான் படிக்கவில்லையே தவிர, தாய் தந்தை யரிடமும், அக்கம் பக்கத்தாரிடமும் வாழ்க்கைக் கல்வியை மிக நன்றாகப் பயின்றவர். இளமையில் கல்வியைத் தவறவிட்ட அன்னை, பின்னர் வயது வந்ததும் தானாகவே முயன்று கற்று, படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். பண்பாட்டில் சிறந்த குடும்பச் சூழ்நிலை, மிக உயர்ந்த ஜீவனாக விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மனைவியாக அமைந்த சூழ்நிலை, இயல்பாகவே பண்பாட்டில் தோய்ந்த உயர்ந்த உள்ளம் ஆகியவற்றால் அன்னை தொடக்கம் முதலே மிக உயர்ந்த ஆன்மீக வாழ்க்கையைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றார். 

அந்தக் காலத்தில் பிறந்த ஒருசில ஆண்டுகளுக்குள்ளாகவே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. அன்றைய பெரியவர்கள் அதற்கும் ஒரு காரணம் அழகாகச் சொல்லி வந்தார்கள். கொடி இளசாக இருக்கும்போதுதான் கொழுகொம்பில் ஒட்டி உறவாடி வளருமாம்; முதிர்ந்து போனால் கொழுகொம்பில் அது ஒட்டாதாம். குழந்தைப் பருவத்திலேயே கணவன் வீட்டாரைத் தன் உறவாகக் கருதும் எண்ணம் வளருமாம்; இல்லையேல் அவர்களை அன்னியமாகப் பார்க்கும் குணம் வந்துவிடுமாம். அன்றைய நிலைமை அப்படி! குழந்தைகள் மண்வீடு கட்டி விளையாடும் பருவத்தில் மணமேடை கண்டு, அருகில் ஒரு சிறுவனைக் காட்டி இவன் தான் உன் கணவன் என்றால், அந்தக் குழந்தை விளையாட்டை நினைப்பாளா, கணவன் மனைவி என்ற உறவை உணர்வாளா? ஆம்! சாரதா தேவியாருக்கு ஐந்து வயதாகும்போதே குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அவரைத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் அவருக்குக் கணவராக அமைந்த ராமகிருஷ்ணருக்கோ அப்போது வயது இருபத்தி மூன்று. பதினெட்டு வயது வித்தியாசத்தில் திருமணம். அன்றைய இந்தியாவின் நிலைமை அது! என்ன செய்ய முடியும்?

ஐந்து வயது குழந்தைக்குத் திருமணம் ஆயிற்றே தவிர, பெண் அவள் பெற்றோருடன் தான் இருந்தாள். அவருக்கு 19 வயது ஆனபோதுதான் விவரம் புரிந்து, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது, கணவர் இருக்கிறார், அவருக்கு அப்போது வயது 37 என்பதையெல்லாம் உணர முடிந்தது. பெற்றோர்கள் பெண்ணை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஐந்து வயதில் திருமணம் ஆன காலம் முதல், 19 வயதில் கணவன் இல்லம் சென்றது வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஓரிரு முறை குடும்ப நிகழ்ச்சிகளையொட்டி அன்னை ஜெயராம்பாடியிலிருந்து புறப்பட்டு குருதேவரின் ஊரான காமார்புகூருக்குச் செல்ல நேர்ந்திருக்கிறது. 

1872இல் கணவன் வீடு வந்த அன்னை அதன் பிறகு 13 ஆண்டுகள் அதாவது 1885 வரையில் கணவனை சிறிதுகூட பிரியாமல் தட்சணேஸ்வரத்திலேயே கணவனுடன் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் அன்னையின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருந்திருக்கிறது. கணவனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளை முறையாச் செய்வார். கணவனுக்கு மட்டுமல்லாமல், அவரைக் காண வருகின்ற பக்தர்களுக்கெல்லாம் உணவு தயாரிப்பது, பரிமாறுவது, இல்லற தர்மம் குறைவு படாமல் ஒரு ஆதர்ச இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார் அன்னை. கணவன் ஒரு சக்தி உபாசகன் என்பதால் அவருக்கு சேவை செய்யும் அன்னையும் தன்னை ஒரு தலைசிறந்த ஆன்மீக சாதனையாளராக ஆக்கிக் கொண்டார்.

கல்கத்தா நகரத்தின் ஒரு பகுதியில் இருந்தது தட்சணேஸ்வரம். அங்கு இருந்த காளி கோயிலில் பகவான் ராமகிருஷ்ணர் பூசாரியாக இருந்தார். அவருக்கு அந்த ஆலயத்திலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அறையிலிருந்து சிறிது தூரத்தில் நகபத் என்றொரு கட்டடம். மிகச் சிறிதான அந்த இடத்தில் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் அன்னை சாரதா தேவியார். மிகச் சிறிய அந்த இடத்தில்தான் உணவு தயாரித்தல், விருந்தினர்களை உபசரித்தல் போன்ற அனைத்தையும் பொறுமையும், புன்னகையுமாக செய்து வந்தார் அன்னை.

மற்ற பெண்களைப் போல வண்ண வண்ண ஆடைகள், விலை உயர்ந்த பட்டாடைகள், தங்க அணிகலன்கள் போன்ற எதையும் அணியாமல், அன்னை துறவு நிலைக்கேற்ப அகலமான சிவப்பு நிறக் கரையுடன் கூடிய வெண்ணிற ஆடை அணிவார். இப்போதெல்லாம் நம் தமிழ்நாட்டுப் பெண்களும் நெற்றியில் தலைமுடியை வகிடு எடுக்கும் இடத்தில் பெரிய குங்குமப் பொட்டு அணிவதைப் பார்க்கிறோமல்லவா? அது தமிழ் நாட்டு வழக்கம் அல்ல. அது வங்காளத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது நம் பெண்களும் அதை பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். அன்னை தன்னுடைய தலை வகிட்டில் மிகப் பெரிதான் குங்குமப் பொட்டை அணிவார்.

அவர் தலையில் நீண்ட கூந்தல், பிரித்து விட்டால் தரையைத் தொடுமளவுக்கு நீளம். அதை இன்றைய நாகரிக மங்கையர் தலைமுடியை அப்படியே பிரித்து விட்டுக் கொண்டிருக்கிறார்களே அது போல முடியைப் பின்னாமல், கொண்டையிடாமல் பிரித்துப் பின்புறமாக விட்டு, தன் புடவையால் தலையை மூடிக் கொண்டிருப்பார்கள். காதிலும், கழுத்திலும் கைகளிலும் ஒருசில தங்க நகைகளும் மின்னும்.

அன்னை தினமும் காலையில் மூன்று மணிக்கு எழுந்து விடுவார். சூரியோதயத்துக்கு முன்னமேயே குளித்து முடித்து பளிச்சென்று நெற்றியில் குங்குமத்தோடு மங்களகரமாக விளங்குவார். அதன் பின்னர் தியானத்தில் அமர்ந்து நன்றாக பொழுது விடியும் வரை இறைவனை தியானித்து கண்ணை மூடிக்கொண்டிருப்பார். அதன் பிறகுதான் குடும்ப வேலைகள், உணவு தயாரித்தல் போன்றவை. பிற்பகல் ஒரு மணி வரை அவருடைய பணிகளை அவரே செய்து முடிப்பார். அந்த வெயில் நேரத்தில் வீட்டுக்கு வெளியே மக்கள் நடமாட்டமே இருக்காது. வீட்டின் வாயிலில் வந்து தன்னுடைய நீண்ட முடியை வெயிலில் உலர்த்திக் கொள்வார். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சிலர், இந்தப் பகுதியில் சாரதாமணி தேவியார் வாழ்வதாகச் சொல்லுகிறார்களே, ஆனால் நாங்கள் அவரை இதுவரை கண்ணால் கண்டதே இல்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு அன்னை பிறர் கண்களில் படாமலே தனித்து வாழ்ந்து வந்தார்.

குருதேவர் இருப்பதோ தட்சணேஸ்வரம் காளி கோயிலில். அங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டமும், அவர்கள் பேச்சும், பாட்டும் ஆனந்த பரவசமாய் குருதேவருடன் இருப்பார்கள். அன்னை அந்தப் பக்கம் போகவே மாட்டார். தான் வசித்த நகபத் இல்லத்திலிருந்தபடியே தட்சணேஸ்வரத்தைப் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பார். அப்படி அவர் ஒரே யிடத்தில் இருந்தபடியால் காலில் கீல் வாத நோய் வந்துவிட்டது. அதன் காரணமாக ஒருசில அக்கம்பக்கத்துப் பெண்களோடு பழகும் வாய்ப்பும் அன்னைக்கு ஏற்பட்டது.

குருதேவர் உணவுப் பிரியர் அல்ல. பசிக்கு உணவு அவ்வளவுதான். ஆனால் காளிகோயில் பிரசாதம் அவர் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகையால் ராமகிருஷ்ணருக்கு அன்னையே உணவு தயாரித்து பரிமாறுவார். கணவருடைய அறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த அறையை சுத்தம் செய்து, துணிமணிகளைச் சரிசெய்து வைத்துவிட்டு வருவார். குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தாய் தனது இறுதிக் காலத்தில் மகனுடைய அறையில் வந்து தங்கினார். மாமியாருக்கும் பணிவிடைகளை அன்னை அன்போடு செய்தார். குருதேவரை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடவே அவர்களுக்கெல்லாம் உணவு தயாரிக்கும் பணி அன்னைக்கு அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நாளும் நாலைந்து கிலோ கோதுமை மாவு பிசைந்து சப்பாத்தியும் அதற்கான சப்ஜியும் செய்வார். உணவு உண்டபின் விருந்தினர்களுக்கு தேவையான வெற்றிலைச் சுருள்களையும் தயாரித்து வைத்திருப்பார்.

ராமகிருஷ்ண பரமஹம்சரை தரிசிக்க வரும் பெண் பக்தர்கள் அன்னையுடன் வந்து தங்கிக் கொள்வார்கள். அப்படி வரும் பக்தைகளுக்கு வேண்டிய செளகரியங்களை அன்னை செய்து தருவார்; உணவு பரிமாறுவார். அப்படி அன்னையோடு வந்து தங்கும் பக்தைகளில் சிலர் கடைசி வரையில் அன்னையுடன் நல்ல நட்போடு பழகினார்கள். அவர்களில் கோலாப்மா, யோகின்மா என்ற இரு பெண்மணிகளைக் குறிப்பிடலாம்.

1874இல் அன்னையின் தந்தை காலமானார். தாயும், சகோதரர்களும் வறுமையின் பிடியில் துன்புற்றனர். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பும் அன்னைக்கே வந்து சேர்ந்தது. அன்னையின் தாயார் ஷ்யாமாசுந்தரி, நெல் குத்தி புடைத்துக் கொடுத்து அதில் வரும் கூலியில் வாழ்ந்து வந்தார். அவர் இப்போது அன்னையுடன் வந்த பின்னர், அன்னையும் தன் தாயாருக்கு உதவியாக நெல் குத்துதல் புடைத்தல் ஆகிய பணிகளைச் செய்யலானார். செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ன? பிறருக்குப் பயன்படும் செயல் என்றால் அதில் அன்னை ஏற்றத் தாழ்வு பார்த்ததில்லை. 

அன்னை சொல்லுவார்: "பிறரை நேசிப்பதும், பிறருக்காக சேவை செய்வதும், மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று. அவற்றையே, பிரதிபலன் எதிர்பார்க்காமல் இறைவனுக்குச் செய்யும்போது, அது ஒரு அற்புதமான ஆன்மீக சாதனையாக ஆகிறது. தமக்கென்று ஏற்பட்ட பிறருக்கு உழைத்தல் என்னும் தர்மத்தை அன்னையும் தன்னுடைய தர்மமாக ஏற்று நடத்தி வந்தார்.

அன்னையின் வாழ்க்கையில் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், விருந்தினர்களைப் பேணி உபசரித்தல், உணவு பரிமாறுதல், குடும்பத்தை அனுசரித்து பாதுகாத்தல் இவைகளைத் தவிர அவருடைய இதர வேலைகள், குணங்கள் பற்றியெல்லாம் எதுவும் தெரியவில்லை. ஆனால் இவர் காலையில் நெடு நேரமும், இரவில் அதிக நேரமும் ஆழ்ந்த தியான நிலையில் இருந்து இறைவனை வழிபட்ட செய்தி மட்டும் நமக்குக் கிடைக்கிறது.

ஒரு முறை, இவர் தன்னுடைய தம்பி மகளிடம் சொன்னார்: "குழந்தாய்! எனக்கு உன் வயதிருக்கும்போது நான் எவ்வளவு வேலைகள் செய்வேன் தெரியுமா? இருப்பினும் அத்தனை வேலைக்கிடையிலும் நான் தினமும் ஒரு லட்சம் நாம ஜபம் செய்யும் பணியையும் செய்து வந்தேன்" என்றார். இதிலிருந்து இவர் வாழ்க்கை எப்பதியிருந்திருக்கிறது என்பது தெரிகிறது அல்லவா?

அன்னைக்கு யோகப் பயிற்சியும் இருந்திருக்கிறது. ஆறு சக்கரங்கள், குண்டலினி போன்றவற்றை தானே வரைந்து அன்னைக்கு பயிற்சி அளித்தார் குருதேவர். ஆகவே தட்சணேஸ்வரத்தில் அன்னை குருதேவருடன் இருந்த காலம் முழுவதும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன், தியாக வேள்வியை செய்துகொண்டு துறவறத்தில் வாழ்ந்தார் என்பது தெரிகிறது.

1886 ஆகஸ்ட் 16இல் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜீவன்முக்தி சமாதியடைந்தார். அதுமுதல் அன்னை தன் உடலில் இருந்த மங்கல நாண்களை நீக்கினார். புடவையில் இருந்த சிவப்புக் கரையை நீக்க முற்பட்டபோது, குருதேவரின் ஆன்மா பேசுவதைப் போல உணர்ந்தார். அவர் சொன்னார், "என்ன செய்கிறாய்? நான் எங்கே போய்விட்டேன். ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்குப் போவது போலத்தானே நான் போயிருக்கிறேன்" என்றாராம். ஆகையால் அவர் விதவைக் கோலம் பூணாமல் விட்டு விட்டார். 

கணவரின் குரல் சொன்ன செய்தியின்படி அவர் நித்திய ஜீவனாக இருக்கிறார் என்பதை உணர்ந்த அன்னை அதுமுதல் விதவைக் கோலம் பூணாமல், தான் நித்திய சுமங்கலி என்பதை உணர்த்த மெல்லிய கரையுடைய புடவை, தங்க வளையல் ஆகியவற்றை அணிந்திருந்தார்.

குருதேவர் சமாதியடைந்த பின்னர் அன்னை சில உறவினர்கள், பக்தர்கள் புடைசூழ பிருந்தாவனம் சென்றார். அங்கிருந்து அயோத்தி போன்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று அங்கெல்லாம் சிலகாலம் தங்கினார்.

குருதேவரின் வழிகாட்டுதல்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது இறுதிக் காலத்தில் அன்னைக்குச் செய்த உபதேசம் முக்கியமானது. அவர் சொன்னார்: "என் காலத்துக்குப் பிறகு நீ காமார்புகூருக்குச் சென்று விடு. எப்போதும் சாதமும் கீரையும் மட்டுமே கிடைத்தாலும் அதை உண்டு வாழ்க்கையை நடத்து. சதா சர்வ காலமும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டே இரு." என்று சொல்லியிருந்தார். பிருந்தாவனத்திலிருந்து திரும்பியபின் காமார்புகூருக்குச் சென்று அங்கிருந்த நெல்லைக் குத்தி, தோட்டத்தில் தானே பயிரிட்ட கீரையைப் பறித்து உண்டு வாழ்ந்தார். உணவுக்கு உப்பு வாங்கக்கூட அன்னையிடம் பணம் இருந்ததில்லை. அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் குருதேவர் சொன்னபடி கைக்குத்தல் அரிசியோடு வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரையைச் சேர்த்து உப்பு இல்லாமல் உணவருந்தும் யோகினியாகவே வாழ்ந்தார் அன்னை.

குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் குடும்பத்தார் அல்லவோ அன்னையைப் பாதுகாத்து வரவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. குருதேவரின் பணிக்காக தட்சணேஸ்வரம் கோயிலில் இருந்து மாதாமாதம் ரூ.7 அளித்து வந்தனர். அதை இப்போது அன்னையிடம் கொடுத்து வரத் தொடங்கினர். ஆனால் குருதேவரின் அண்ணன் மகனான ராம்லால் என்பவர் அதை அன்னைக்குக் கொடுக்க விடாமல் தடுத்து விட்டார். தங்கள் வீட்டிலேயே ஒரு தடுப்பு அமைத்து அன்னை வாழும் பகுதியைத் துண்டித்து எந்த உதவியையும் செய்யாமல் ஒதுங்கிவிட்டார் அந்த ராம்லால். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் கூட அன்னைக்கு எந்த உதவியையும் செய்வதில்லை. குருதேவரின் அண்ணன் மகன் ராம்லால் தட்சணேச்வரம் கோயிலில் இப்போது அர்ச்சகராக ஆகிவிட்டதால், அனைவரும் அவருடன் சென்றுவிட, அன்னை மட்டும் தனிக்குடிசையில் தனித்துவிடப்பட்டார்.

குடும்பத்தாரின் நிந்தனை ஒரு பக்கம் இருந்த நிலையில், அந்த கிராமத்தாரும் இவரை கேலி செய்தும், தூற்றிக்கொண்டும் அவர் மனதை புண்படுத்தி வந்தனர். கணவனை இழந்த பெண் விதவைக் கோலம் பூண்டு வெள்ளாடை உடுத்துவதற்கு பதிலாக சிவப்பு கரை உள்ள புடவை அணிந்து கொண்டு, கையில் வளையல் அணிவதை கிராமத்தார் ஏற்கவில்லை. அன்றைய சமுதாய அமைப்பு அத்தனை பிற்போக்கானது. அப்படியிருக்க அறியாமையில் மூழ்கிய அந்த கிராமத்து மக்களை நொந்து என்ன பயன்?

ஆனால் இவைகள் பற்றியெல்லாம் அன்னை கவலைப்படவில்லை; மனம் வாடவும் இல்லை. யாரையும் அவர் குறை சொல்லவுமில்லை. இப்படி ஆகிவிட்டோமே என்று தன் விதியையும் நொந்து கொள்ளவில்லை. கடவுள் மீது பழிபோடவுமில்லை. யாரிடமும் போய் தன் நிலைமையைச் சொல்லி வருந்தவுமில்லை. பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் தான் ஒரு தவசி, ஏனையோரைப் போல தானும் ஒரு சாதாரண பெண் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தார் அன்னை. 

இத்தனைக்கும் இடையில் ஒரே ஒரு பெண், பெயர் பிரசன்னமயி என்பது; அவர் மட்டும் அன்னையிடம் பரிவும் ஆறுதலும் காட்டி அரவணைத்து வந்தார். தாங்கமுடியாத துயரம் அன்னையின் மனத்தை வாட்டும் போதெல்லாம், குருதேவரின் காட்சி அவருக்குக் கிடைத்தது, ஆறுதல் தந்தது.

அன்னை தனித்து கிராமத்துச் சூழ்நிலையில் படும் பாட்டை அறிந்த குருதேவரின் பக்தர்கள் அவரை கல்கத்தா வந்து தங்கும்படி வேண்டினர். ஆனால் அதற்கு முதலில் இணங்காத அன்னை, பின்னர் வேறு வழியின்றி பக்தர்கள் தரும் ஆதரவில் கல்கத்தா நகரம் வந்து தங்கத் தொடங்கினார்.

கல்கத்தாவில் ஆன்மீகப் பணி.

குருதேவருடன் தட்சணேஸ்வரத்தில் இருந்த காலத்திலேயே குருதேவரைச் சந்திக்க வரும் பெண்கள் பலரும் வந்து அன்னையுடன் தங்குவது வழக்கம் அல்லவா? அப்ப்டிப்பட்ட பக்தர்கள் இப்போதும் அன்னையை நாடி வரத் தொடங்கினர். குருதேவரின் புகழ் பரவப் பரவ அன்னையை நாடி வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது. அவரை நாடி வரும் பக்தைகளுக்கெல்லாம் அன்னை மந்திர தீட்சை கொடுத்து வரத் தொடங்கினார். இந்த மந்திர தீட்சை எனும் அருட்பிரசாதத்தை துறவிகள் என்றில்லை இல்லறத்தில் இருப்போரும் பெறும் வழக்கம் உண்டு. இப்போதும் ராமகிருஷ்ண மடத்தில் மந்திர தீட்சை பெற்ற இல்லறத்தார் ஏராளம்.

அன்னையின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இடங்கள் நான்கு மட்டுமே. அவை தட்சணேஸ்வரம், உத்போதன், ஜெயராம்பாடி, கோயல்பாரா ஆகிய ஊர்கள். தட்சணேஸ்வரத்தில் இருந்த காலம் வரை அன்னையை எவரும் அறியவில்லை. குருதேவரின் நெருக்கமான சீடர்களுக்கு மட்டுமே இப்படியொருவர் இருப்பது தெரியும். 

அன்னை மிகக் குறைந்த அளவே ஆகாரம் உட்கொள்வார். அதுபோலவே அளவோடுதான் உறக்கமும். இரவு 11 மணிக்குப் படுக்கச் சென்றால், மூன்று மணிக்கு எழுந்து விடுவார். மாலை வேளைகளில் ஆண் பக்தர்கள் அன்னையை தரிசிக்க வருவது வழக்கம். ஒரு கட்டிலும் அமர்ந்த வண்ணம் உடல் முழுதும் போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பார் அன்னை. மிகத் தாழ்ந்த குரலில் பேசுவார். சில சமயங்களில் சைகைகள் மூலம் சொல்ல வந்ததை உணர்த்துவார். 

இப்படி அவர் மக்களுக்காக அருள் பாலித்து வரும் காலகட்டத்தில் 1919ஆம் ஆண்டின் இறுதியில் உடல் நலம் குன்றத் தொடங்கியது. அது தொடங்கி 1920 ஜூலை 20 வரை அவர் நோயினால் சிரமப்பட்டார். 

அன்னை தன் பக்தர்களைப் பார்த்து சொன்னார்: "உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறரது குற்றங்களைப் பார்க்காதீர்கள். அதற்கு பதிலாக உங்களிடம் உள்ள குற்றங்களைப் பாருங்கள். உலகம் முழுவதையுமே உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். உலகில் யாருமே உங்களுக்கு அன்னியர் இல்லை. உலகம் முழுதும் உங்களுக்கு சொந்தம்" என்றார்.

1920 ஜூலி 20 நள்ளிரவு 1.30 மணிக்கு அன்னை மகாசமாதி அடைந்தார். மறுநாள் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கங்கைக் கரையில் தகனம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒரு அழகிய சிறு கோயில் அமைக்கப்பட்டது. 





















Sunday, August 30, 2015

அன்னை அபிராமியின் அருள் பெருக்கு

                                 
உலகத்து நாயகி அவள். தன்னை நாடி வருவபவர்களுக்கெல்லாம் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருகிறாள். கேட்டவற்றையெல்லாம் தரும் கற்பகமாக அவள் விளங்குகிறாள். ராஜராஜேஸ்வரியான பராசக்தி ஒவ்வோர் ஊரிலே ஒவ்வொரு பெயருடன் தன் மெய்யடியார் துயர்தீர்க்க, தன் குழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அபய வரத ஹஸ்தங்களால் தன் கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நின்று, அருள் செய்கிறான்.

தேவி பராசக்தி ஏன் நிற்க வேண்டும்? ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எல்லா ஆலயங்களிலும் அமர்ந்த திருக்கோலத்திலேதான் காண்கிறோம். அவள் செல்வத் திருமகள்: சஞ்சலை என்று பெயர் பெற்றவள். ஆகவே நொடியிலே வேறெங்கும் சென்றுவிடப் போகிறோமே என்ற கருத்துடன் அமர்ந்து அருள் செய்கிறாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அன்னை மட்டும் ஏன் நிற்க வேண்டும்? காஞ்சிமா நகரிலே உள்ள காமாட்சி மட்டுமே அமர்ந்த கோலம். மற்ற எல்லாத் தலங்களிலும் நின்ற நிலையிலே அருள்பவர் ஆடவல்லவ னாகிய அம்பல வாணன் மட்டும். மற்ற உத்ஸவ மூர்த்திகளான சிவபெருமான் அமர்ந்த திருக்கோலமாக சோமாஸ்கந்தராகவேதான் காட்சி தருகிறார். அன்னை மட்டும் ஏன் நிற்க வேண்டும்? திருமயிலையில் எழுந்தருளியுள்ள அன்னை கற்பகத்தை ஒரு கவிஞர், ‘மங்கலமாய் எங்கும் நின்றவளாம், மயில்போல உருவம் எடுத்தவளாம்’ என்று போற்றுகிறார்.‘உட்கார்ந்தவன் எழுவதன் முன்னே நின்றவன் நெடுந்தூரம் போவான்’ என்பது முதுமொழி. தன் அடியார் அழைக்குமுன்னே ஓடிவந்து அருள் செய்தற்காகவே விழிப்புடன் நின்றுகொண்டே இருக்கிறாளாம்! 

அன்னையின் அருள் பெருக்கு எத்தகையது என்பதற்கு எத்தனை எத்தனையோ சான்றுகள் கூறலாம். திருக்கடையூரில் வாழ்ந்த அபிராமி பட்டரை அறியாத தமிழ்ப் பெருமக்கள் இருக்க முடியாது. இவர்மீது அன்னை அருள்மாரி பொழிந்தது, அற்புதமான கவிதை மலர்களாக மலர்ந்து, நம்மை வசீகரிக்கும் தன்மை பெற்றது. அன்னை தன் அடியாரைத் தடுத்து ஆட்கொண்டது பற்றி நினைக்கும்பொழுதெல்லாம், எத்தனையோ மகான்களின் கவிதைகள் நம் கண்முன்னே விரிகின்றன. வடமொழி, தென்மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய எந்த மொழியை எடுத்துகொண்டாலும் அவளது பேராற்றல் அருள்வாரிதி நம்மைத் திகைக்கச் செய்யும். அவர்களுள் மிகமிகச் சமீபகாலத்தில் சோழமண்டலத்தில் வாழ்ந்த பெரியார் அபிராமி பட்டர். பிரசித்தி பெற்ற மூககவியைப் போலவே இவரது இயற்பெயரும் யாருக்கும் தெரியாது. அபிராமியையே வழிபட்டதனால் அபிராமி பட்டர் என்ற பெயர் நிலைத்து நின்று விட்டது. இவருடைய அற்புதமான ஒலிமாலைகளை, ‘சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து’ என்று போற்றுகிறது அடியார்களது நெஞ்சம். ஒரு பாட்டின் கடைச் சொல்லே தொடக்கமாக உள்ள நூறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதி அது. சிவநேகச் செல்வரும், அன்னையின் மெய்யடியார்களும் திருமுறைகளைப் போலவே இதையும் பாராயணம் செய்து பயன் பெறுவர். 

பூர்ணிமையின் பொலிவிலே, முழு வடிவிலே தாயின் அற்புத வடிவை அமர்த்திப் பூசனை, மானஸிக பூஜை செய்துகொண்டிருந்த பட்டரை உலகம் பித்தன் என்று இகழ்ந்தது; பேயன் என்று பரிகசித்தது; எள்ளி நகையாடியது. ஆனால் தஞ்சையை ஆண்டுவந்த அரசர் சரபோஜி மன்னர் கண்டதென்ன? மகாதேஜஸ்வியாக ஒளி வீசுகின்றார் இந்தப் பெரியார். அரையிலே கந்தைதான்; ஆயினுமென்ன? உலக சிந்தையே சிறிதுமில்லாத மெய்ஞ்ஞானி போல் அல்லவா தோன்றுகிறார் என்று நினைக்கிறார். மக்கள் உன்மத்தன், பித்தன் என்று சொல்லுவதைப் பொருட்படுத்தாமல் அருகில் சென்று, “ஸ்வாமி, இன்று என்ன திதி?” என்று வினவுகிறார். பட்டர் சந்த்ரமண்டல நடுவிலே வீற்றிருக்கும் அன்னையின் திருவுருவுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த சமயம். “தாரா-காந்திதிரஸ்காரிநாஸாபரணபாஸுரா| கதம்பமஞ்ஜரீக்லுப்தகர்ணபூரமநோஹரா ||” என்று மலர்களைத் திருவடி களிலே தூவும் சமயம். அரை குறையான ஒலியில் இன்று என்ன இதி என்று யாரோ கேட்பது தெரிகிறது. “பெளர்ணமிதான்” என்ற சொல் அர்ச்சனைகளுக்கு இடையே அவர் வாயினின்றும் எழுகிறது. 

அன்று அமாவாஸ்யை, கடலாடச் சென்று மீளும் நடுவழியில் அமிருத கடேசுவரப் பெருமானை, காலனைக் காலால் உதைத்த காலஸம்ஹார மூர்த்தியை வழிபட வந்த அரசர், ‘அல்லாத காலனைமுன் அடர்த்தான் தன்னை’ச் சேவித்துப் பின் அபிராமசுந்தரியைச் சேவிக்க வந்து நிற்கும் சமயம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க இறைவியின் முன்னே நின்றார் சரபோஜி மன்னர். கூடியிருந்த மக்கள், ‘பார்த்தீரா! நாங்கள் பித்தன் என்றோம்; நீர் ஏற்கவில்லை’ என்று சொல்வது போல, பயத்துடன் கூடிய மெல்லிய நகையொலி மண்டபம் முழுவதும் நிறைந்தது. அரசர் திகைத்தார். 

நிஷ்டை கலைந்தது. அபிராமி பட்டர் கண்களை மலரவிழித்துச் சுற்றும் ஒரு முறை பார்த்தார். துறவிக்கு வேந்தன் துரும்பு என்றாலும், தாம் பூர்ணிமை என்று சொன்னத்தை நினைத்து வெட்கினார். உடனே கடல்மடை திறந்தது போல அமுதவெள்ளமாக வெளிவந்தது கவிதை. தாய் அபிராமவல்லி தன் குழந்தை அபிராமி பட்டரின் வாக்கை மெய்யாக்குவதற்குத் தன் காற் சிலம்பைக் கழற்றி வானில் வீசி, ‘அதோ பார் முழுமதி’ என்று சரபோஜி மன்னனுக்குக் காண்பித்தாள். அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழையையும் பொறுத்து மூடி மறைத்துக் காக்கும் பேரன்புதான் தாயின் திருவருள். ஆகவேதான் இறைவனது பெருமையைப் பற்றிப் பேசும் பொழுதுகூட, ‘தாயினும் சாலப்பரிந்து’ என்று பேசுகிறது தமிழ்மறை. 

அந்த அருட்பெருக்கிலே பிறந்த அற்புதக் காட்சிகளை நூறு பாடல்களில் காட்டுகிறார் பட்டர்பெருமான். தாயின் அற்புதாமன ரூபஸெளந்தர்யம் எப்படித் தெரிகிறது, பாருங்கள் . அவளது எல்லையற்ற பேரெழில் அவர் கண்ணுக்குப் புலனாகிறது. ‘ஸிந்தூராருணவிக்ரஹாம்’ என்று செல்லுவது போல, அன்னை சிவந்த நிறமாகத் தோன்றவில்லை; பச்சைப் பசுங்கிளிபோல் பசுமையாக, மரகதவல்லியாகத் தோன்றுகிறாள். பசும்பொன் அணிகள் அழகுக்கு அழகு செய்கின்றன. நெற்றித் திலகம் பளிச்சென்று பொன்னிறமாகத் தெரிகிறது சின்னஞ்சிறு நுதலிலே. 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது மலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயமென்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே !

தாயே! கதிரவன் உன் நெற்றியில் திலகமாகக் காட்சிதருகிறான். உன் பேரெழிலின் முன் அவனது ஒளி மங்கி மழுங்கிவிடுகிறது. உன் நிறம் அருணவர்ணமா? பசுமையா? மாணிக்கமா? மாதுளம்பூ உன் எதிரே நிற்க முடியாமல் உன் நிற அழகில் தோற்றுவிடுகிறதோ? அப்படியானால் ஏன் உன் அடியார்கள், ‘தாடிமீகுஸுமப்ரபா, அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம், என்று பேசுகின்றனர்? கருணை அலைவீசும் கண்கள் என்கிறார்களே. தாயே, உன் நிறம்தான் என்ன? சிவப்பா? பசுமையா? பாலபாஸ்கரன் நுதல்திலகமா? ஆம், திலகம்தான், இதே காட்சியைத்தான் புதுமைக் கவிஞர், “முற்றிய ஆழியிலே அலைவந்து மோதிஎறிகையிலே, கற்றைக்கதிர் எழவே உமை திருக்காட்சி வியப்பேனடி” என்கிறார்.
அது மட்டுமா? மலர்க்கமலை துதிக்கின்ற மென்கொடி, மின்னற்கொடி, வித்யுல்லதா. “கடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிஸேவிதா” என்று பேசுகிறது ஸஹஸ்ரநாமம். இத்தகைய பெருமைகளை உடைய உன்னைத் துதிப்பவர்களுக்கு எதுதான் கிட்டாது? 

முதலில் திருமுக மண்டலத்தையும் திலகத்தையும் கண்ட அவர் தாயின் திவ்ய ஸெளந்தர்யத்தை ஏற இறங்க ஒரு முறை பார்க்கிறார். மரகதாங்கியா? அல்ல, மதிக்கின்ற, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாகச் சிவந்த நிறத்தவளாகக் காட்சி தருகிறாள்.
இப்படிக் காட்சி தருகிற அன்னையை நோக்கி, “அம்மா, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமல்லவா நீ?” என்கிறார். உணர்வு என்பது எதைக் குறிக்கிறது? நுண் உணர்வின்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் என்றல்லவா கூறுகிறார், உன்னைப் பிள்ளைத் தமிழாலே வழிபட்ட குமரகுருபார்? அன்பு, பக்தி, வாத்ஸல்யம் இவற்றையே அவர் நுண்ணுணர்வு என்று குறிக்கிறார். அத்தகைய மெய்யடியார்களால் எப்போதும் முப்போதும் மதிக்கப்பெறும் மாணிக்கம் அல்லவா நீ? உன்னையன்றி எனக்கு வேறு யார் துணை? நீயே எனக்கு எல்லாம். ஸர்வஸ்வமும் நீயே. பல பாடல்கள்-நூறு பாடல்கள்- பாடியும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. ‘எல்லோரும் வாருங்கள், சுகமிருக்குது பாருங்கள்’ என்று நந்தன் கூவி அழைத்தது போல, ‘அன்னையைத் தொழுபவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?’ என்று ஆசைகாட்டி அழைக்கிறார் பட்டர். 

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா 
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 

நாம் முதலில் எதை வேண்டுகிறோம்? பொருள்செல்வம்தான்; சந்தேகமென்ன? நம்மை வசீகரிக்கும் முறை அந்த மெய்யடியாருக்குத் தெரியாதா? ஆகவே முதல்முதலாகத் தனம் தரும் என்றார். செல்வதை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா நலன்களையும் அடைந்துவிட முடியுமா? அறிவில்லாத மூர்க்கரிடம் செல்வம் இருந்து பயனென்ன? ஆகவேதான் கல்வி தரும். கல்வியும் அறிவும் கிட்டிவிடுகின்றன. கோழையாகவும், எடுத்த செயலைச் செய்து முடிக்கும் ஆற்றல் இல்லாத சந்தேகப் பிராணியாகவும் ஒருவன் இருந்தால் பயனென்ன? அவனால் யாருக்கு நம்மை? நாட்டுக்குத்தான் நன்மையா? வீட்டுக்குத்தான் நன்மையா? ஆகவேதான் நல்ல மனம் தரும் என்று சொல்லவில்லை; ‘ஒருநாளும் தளர்வு அறியா மனம்,. வாழ்க்கைப் போராட்டத்தில் எதுதான் வந்து எதிர்த்தபோதும் தளர்ந்து பின்வாங்கிச் சோர்ந்து போக மாட்டேன். அர்ஜுனன் சோர்ந்தபொழுது இறைவன் கீதோபதேசம் செய்தான். இங்கே இவனது சோர்வுக்கு எது மருந்து? அன்னையின் பேரருள். இதைத்தான் ‘ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்’ என்கிறார். அது போதுமா? 

நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும். பிறருக்குத் தீங்கு நினைத்தல், பகைமை, காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் என்ற அறுவகைப் பகைமையும் இல்லாத மனம் தருவாள். வையத்துள் வாழ்வாங்கு வாழ வேறு என்ன தேவை என்றே கேட்கிறார் பட்டர். குருபியாகவோ நோயுற்ற வனாகவோ இருந்துவிட்டால் பிறர் இவன் சொல்லை மதிக்க வேண்டாமா? அதற்குத் தாய் என்ன கொடுக்கிறாள்? ‘தெய்வ வடிவம் தரும்.’ குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து அலங்கரிப்பதிலே இன்பம் காண்பவள் தாய். ஆஹாரத்திலும் சரி, அணிகளிலும் சரி, நல்லுரைகள் கூறுவதிலும் சரி. இங்கே ஒவ்வொன் றாகக் கொடுத்துவிட்டு அழகிய வடிவையும் கொடுக்கிறாளாம். ‘அம்மா! தாயே! அபிராம சுந்தரி!’ என்று ஒரு முறை அழைத்தால் போதுமாம்; ஓடிவந்து வாரி எடுத்து அணைத்து வேண்டுவதை எல்லாம் தருகிறாளாம். ‘வேண்டுவார் வேண்டுவன ஈவான் கண்டாய்” என்று சிவபெருமானைப் பேசுகிறது அப்பர் திருத்தாண்டகம்.
இங்கே பட்டர் அவ்வளவோடு திருப்தி அடையவில்லை. எனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன். இது மட்டுமல்ல, இன்னும் என்ன என்ன நல்லன உண்டோ அவை எல்லாவற்றையும் ஒருங்கே தாவல்லது இவளது பேரருள். ஆகவே, ‘நல்லன எல்லாம் தரும்’. யாருக்கு? அவளுடைய மெய்யடியாருக்கு. அன்பர் என்பவர்க்கே. கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே. அவள் கண்களை மலரவிழித்து நோக்க வேண்டும் என்பதில்லை. கடைக்கண் பார்வை ஒன்றே அருள்மாரியாகிப் பொழிந்து நம்மை வாழ்விக்கும். நலன்கள் எல்லாம் தாமே நம்மைத் தேடி ஓடி வரும். இப்படிப்பட்ட தாயின் புகழைச் சிறுசிறு காட்சிகளாகக் காட்டுகிறார். அவற்றில் இரண்டை இதோ பார்ப்போம். ஒன்று-கேள்வி; மற்றொன்று காட்சி. கேட்கிறார்.

உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ? 
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம் 
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ, என் நெஞ்சகமோ? 
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்களையே! 

தாயே, நின் உறைவிடம் எது? இறைவனது வாமபாகம் மட்டும்தானா? வேதத்தின் அடியோ? வேதாந்தமோ? அல்லது அமுதுடன் பிறந்தானே, அந்தப் பூர்ணசந்திரனா? பின் ஏன் உன்னைச் சந்திரமண்டலத்தில் தியானிக்க வேண்டும்? அல்லது தாமரை மலரா? ஏழையேனது இதயகமலமா? மறைகின்ற வாரிதி. அமுதம் நிறைந்த கடலா? ‘ஸதாஸாகராந்தே மணித்வீபமத்யே’ என்று ஏன் சொல்லுகிறார்கள்? “இப்படிப் பலவிதமாகச் சொன்னால் என் போன்ற குழந்தைகளுக்கு எப்படிப் புரியும், நீயே சொல்லம்மா!” என்கிறார். இதன் பின் அற்புதமான காட்சி கண்முன்னே விரிகிறது. அம்மா இதோ தெரிகிறாள். மேலும் மேலும் கேள்விகளும் விடைகளும் எதற்கு? 

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் 
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த 
கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்தே 
தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவம் இல்லையே! 

வேறு தவமும் வேண்டுமா என்று கேட்கிறார் பட்டர். இந்த அற்புதமான அந்தாதியைப் படிக்கக் கொடுத்துவைத்த தமிழ் மக்களாகிய நாம் பாக்கியசாலிகள். பொருளையே விரும்பாத இவருக்குத் களத்துக்குக் குறுணிமானியமாகச் சரபோஜி மன்னர் அளித்த செப்புப் பட்டயம் பட்டரின் ஸந்ததியாரிடம் இருக்கிறது. இவரைப் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் பல உண்டு.