பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 8, 2013

வெற்றிவேற்கை (4)

வெற்றிவேற்கை (4)

முப்பது வரை சென்ற பகுதிகளில் பார்த்தோம். இனி முப்பத்தியொன்று முதல் நாற்பது வரையிலான வரிகளைப் பார்க்கலாம்.

31. சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்
பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.

பொதுவாக வயதிலும் அனுபவத்திலும் குறைவாக இருப்பவர்கள் சிறியோராகத் தான் இருப்பார்கள். இவர்கள் அனுபவமின்மையாலும், அறியாமையாலும் சின்னஞ்சிறு தவறுகளைச் செய்து விடுவார்கள். அவைகள் குற்றம் எனக் கொள்ள முடியாது, அறியாமையால் செய்ததால் தவறு என்று கருதி அனுபவத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கும் பெரியோர்கள் அவற்றை மன்னித்துவிடுதல் முறையானதாக இருக்கும். அதை விடுத்து சிறியோர்களுக்குச் சமமாக பூசலிட்டுக் கொண்டிருக்கலாமா? சிறியவர்கள் தவறிழைத்தால் பெரியோர்கள் அதனை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுதலே சிறப்பு.

32. சிறியோர் பெரும்பிழை செய்தனர் ஆயின்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே.

சிறியவர்கள் செய்யும் சிறுபிழைகளைப் பெரியோர்கள் மன்னித்து மறந்து விடுகிறார்கள் என்பதால், சிறியவர்கள் துணிச்சல் கொண்டு பெரும் தவறுகளைத் தெரிந்தே செய்வார்களானால், பெரியோர்கள் அதனை எப்படி மன்னிப்பார்கள். தவறு செய்தவன் மன்னிக்கப்படலாம், தெரிந்தே தப்பைச் செய்தவன் தண்டனை அடைந்தே தீரவேண்டும், பெரியோர்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் எனும் பயம் இருந்தாக வேண்டும். பெரியோர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் தானே என்று உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் இப்படித் தெரிந்தே செய்யும் குற்றங்களுக்குத் தண்டனை அளித்தே தீருவார்கள்.

33. நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே.

பல காலம் தேங்கிக் கிடக்கும் நீர் நிலைகளில் மேல் மட்டத்தில் பாசி படர்ந்து பச்சை பசேலென்று பரவிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். அப்படி நீர் நிலைகளின் மேல்மட்டம் முழுவதும் பாசி படர்ந்திருந்தாலும் அதன் வேர் நீரினுள் பாய்ந்து அடிவரை செல்வது கிடையாது. நாம் பலரோடு பழகுகிறோம், நட்பு கொள்கிறோம். பழகும் நட்பு அனைவரும் ஒரே மாதிரியான குணங்கள் அமைந்தவர்கள் இல்லை. நல்லவர்கள் நட்பும் கிடைக்கும், நல்லவர் அல்லாத மூர்க்க மனிதர்கள் நட்பும் கிடைக்கும். நல்லவர்கள் நட்பு நிலைத்திருப்பதைப் போல மூர்க்கர்களுடைய நட்பு நிலைப்பதில்லை, நீரின் மேல் மிதக்கும் பாசியின் வேர் நீரினுள் படிவது இல்லையல்லவா, அதைப் போல.

34. ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே.

பெரிய மரங்கள் தரையில் வேர்விட்டு ஆழமாகப் பதிந்து எத்தனை காற்று, மழை, புயலுக்கும் சாயாமல் உறுதியாக நிற்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா. அதைப் போல மேன்மை குணங்கள் கொண்ட பெரியோரிடம் பழகினால், அவர்கள் ஒரே ஒரு நாள் மட்டும் நம்மிடம் பழகினால்கூட, அவர்களது நட்பு ஆழ வேர்விட்டு வளர்ந்த பெரிய மரத்தினைப் போல் உறுதியாக நம்மிடம் நட்பு கொண்டிருப்பர்.

35. கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.

இறைவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளில் மனித இனம் மட்டுமே ஆறாம் அறிவு கொண்டவை. அப்படி பகுத்தறியவும், நல்லவை கெட்டவை இவற்றை அறிந்து கொள்ளவும் ஆற்றல் படைத்த மனிதன் தன் அறிவை வளர்த்துக் கொள்ள, நல்வழியில் நடக்க கல்வி கற்பது அவசியம். அப்படி கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு இவ்வுலகில் எந்த மரியாதையும், முன்னேற்றமும், கெளரவமும் கிடைக்காது. ஆகையால் ஒவ்வொருவரும் இளமையில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கல்விக்கு கரை கிடையாது என்பர். எத்தனை கற்றாலும் அதற்கு எல்லையும் இல்லை. போதுமென்று திகட்டவும் செய்யாது. ஆகையால் கற்றல் என்பது வாழ்க்கைக்கு நன்று. ஒருவன் ஏழ்மையின் காரணமாகப் பிறரிடம் கையேந்தி உணவு உண்ணும் நிலைமை இருந்தாலும், கற்றலை மட்டும் விட்டுவிடக் கூடாது. அந்த ஏழ்மையைக்கூட மாற்றி அவனை உயர்த்தும் சக்தி கல்விக்கு உண்டு. ஆகவே வாழ்நாள் முழுவதும் ஒருவன் கல்வி கற்றலை கைவிடக் கூடாது.

36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லின் உள் பிறந்த பதர் ஆகும்மே.

தான் பெற்ற கல்விச் செல்வத்தினால்தான் ஒருவனுக்குப் பெருமை. கல்வி கற்றவன் எந்த சபையிலும் தலை நிமிர்ந்து நிற்கலாம். கல்வி கற்கவேண்டிய பருவத்தில் ஊர் சுற்றிவிட்டு, படிக்காமல் காலத்தை ஓட்டிவிட்டு பின்னால் மற்றவர்களையெல்லாம் பார்த்து தான் அப்படி கல்வி கற்றவனாக ஆகமுடியவில்லையே எனும் ஆற்றாமையை மறைக்க தன் தாத்தா எப்படி செல்வாக்கோடு வாழ்ந்தார், தன் தந்தை எப்படி புலவர்களுக் கெல்லாம் பெரும் புலவராக இருந்தார் என்றெல்லாம் தன் முன்னோர்களுடைய பெருமைகளைப் பேசித் திரிவதால் இவன் நிலைமை மாறவா போகிறது. அப்படிப்பட்டவன் நல்ல நெல்லுக்கிடையே, உள்ளே அரிசி இல்லாத வெற்றுப் பதர் போன்றவனாகவே கருதப் படுவான். ஒருவனுக்குப் பெருமை தான் கற்ற கல்வியினால்தானே தவிர முன்னோர் பெருமைகளினால் அல்ல.

37. நாற்பால் குலத்தில் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே.

அந்தக் காலத்தில் மனிதர் செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு குலத்தவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு பிரிவினர். தொழிலால் ஏற்றத் தாழ்வு இல்லை என்று அனைவருமே உறுதியாக இருந்த காலம் அது. பின்னர் சந்தர்ப்ப, சூழ்நிலை, அன்னியர் படையெடுப்பு, நம் அடிமை வாழ்வு, ஆள்வோருக்கு ஆலவட்டம் போட அடிமைகள் தேவைப்பட்ட நிலையில் அவர்களுக்குச் சேவகம் செய்யச் சென்ற காலத்துக்குப் பிறகு சீராகப் போய்க்கொண்டிருந்த பிரிவுகளில் குழப்பம். தங்களை உயர்ந்தோர், தாழ்ந்தோர் என பாகுபாடு செய்து பேசி வரத் தொடங்கினர். தொழில் அடிப்படையில் வாழ்ந்தவர்கள் அவரவர்க்கு ஏற்ற தொழிலை விட்டுவிட்டு, வேறுபட்ட தொழிலுக்கு மாற்றிக் கொண்ட நிலைமை ஏற்பட்டது. அப்படி உரிய பாதையில் செல்லாமல் பாதையை மாற்றிக்கொண்ட ஒருவன் தன்னை உயர்ந்தோன் என்று கூறிக்கொள்ளும் பிரிவினரில் ஒருவன் கல்வி கற்று, தகுதியோடு வாழவில்லையென்றால் அவன் அப்போதும் உயர்ந்தவனா என்ன? இல்லை தாழ்ந்தவனே! கல்வியாலும், திறமையாலும்தான் உயர முடியுமே தவிர பிறப்பினால் அல்ல. ஆகவே கல்வி கற்றலே ஒருவனை உயர்ந்தவனாக ஆக்கும் தன்மை உடையது.

38. எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.

நான்கு வர்ணத்தில் எதில் பிறந்திருந்தாலும், வயதில் இளையவரோ, மூத்தவரோ எப்படியிருந்தாலும், நல்ல கல்வி கற்று சிறப்புடையவனாக இருந்தால் போதும், மற்றவர்கள் அவனுக்குரிய கெளரவத்தைக் கொடுத்து மேல் நிலைக்குக் கொண்டு வருவர். கல்வி அறிவு இல்லாதவன் எந்தக் குலத்தவனாயினும் அவனைப் பெரியோர்கள் கண்டு கொள்வதில்லை.

39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
தன் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானவன் அரசன். அவனுக்கு இன்னார் இனியர், இன்னார் வேண்டாதவர் எனும் பாகுபாடு கிடையாது; அப்படி வைத்துக் கொள்ளவும் முடியாது. ஒரு குடும்பத்தில் தாயோ, தந்தையோ தன் மகன் அசடனாக இருந்தாலும் அவனைத் தன் மகன் என்பதால் விரும்பி ஏற்றுக் கொள்வர், தள்ளிவிடவா முடியும்? அது பாசத்தின் காரணமாக உண்டானது. ஆனால் ஒரு அரசன் அத்தகைய பாசத்தை குடிமக்கள் யார்மீதும் வைத்துக் கொள்ள முடியாதே, அவன் அன்பு செலுத்தவோ, மரியாதை செலுத்தவோ, விரும்பவோ செய்ய வேண்டுமானால் பாசத்தினால் அது இயலாது. ஆனால் அவர்கள் அறிவுடையவனாக, கல்வி கற்றவனாக, நாட்டுக்கு அவனால் பயன் உண்டு என்று தெரிந்தால் மன்னன் கூட அந்த அறிஞனை விரும்புவான்.

40. அச்சம் உள்ளடக்கி அறிவு அகத்து இல்லா
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்றே.

மனிதரில்தான் எத்தனை விதம்? அறிவுடையோன், அசடன், சுயநலம் பேணுபவன், பிறருக்கு இன்னா புரிபவன், குடிகேடன் இப்படி எத்தனை விதம். குணத்திலும் மாறுபட்டவர்கள் இருக்கிறார்கள். இன்னல் வந்துற்றபோதும் மனம் கலங்காதவர் உண்டு. சின்னஞ்சிறு இடையூறுகளையும் கண்டு மனம் அயர்ந்து போவோர் உண்டு. எதிலும் தன் சொந்த நலனை மட்டும் கருத்தில் கொள்வோர் உண்டு. கொள் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றதும் வாயை மூடிக் கொள்வதுமான குணமுடையோரும் உண்டு. அச்சம் எனும் மடமையைக் கைக்கொண்டவர்களும், அறிவின் ஒளி சிறிதும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை என்னவென்று அழைப்பது. நல்ல குணம் உடையோர், இழி குணம் உடையோர் என பகுத்துப் பார்ப்பது அறிவுடைமை. ஒரு குடும்பத்தில் இழி குணமுடையோர் மட்டுமே இருப்பாராயின் அத்தகைய குடும்பத்துக்குச் சந்ததியே இல்லாமல் போய், அவர்களை ஏங்க வைப்பதே நன்மை பயக்கும். வீரமும், விவேகமும், அறிவும் அற்ற மக்கட்பேறைப் பெறுவதைவிட, மக்கட்பேறே இல்லாமல் இருப்பது நன்று என்கிறது இந்தப் பாடல்.



அன்பு உள்ளங்களே!  வெற்றி வேற்கை மூன்று பதிவுகள் முடிந்துவிட்டன இதுவரை படித்தது உங்களுக்குப் பிடித்திருந்தால் எழுதுங்கள். மாற்றம் தேவையென்றாலும் எழுதுங்கள். தொடர்வோம் 

வெற்றிவேற்கை (3)

வெற்றிவேற்கை (3)

21. உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்.
ஒவ்வொருவருக்கும் தாய் வழியில் தந்தை வழியில், உடன் பிறந்தோர் வழியில், அவர்கள் திருமணம் செய்து கொண்ட வழியில் என்று உறவு தொடர்கதையாக வளர்ந்து கொண்டே போகும். ஒரு சிலருக்கு வாய் வைத்த இடமெல்லாம் உறவு என்று கூட சொல்வார்கள். அப்படி அருகம்புல் வேரோடுதல் போல உறவுகள் வேரோடிக் கிடக்கும். அப்படிப்பட்ட உறவினர்கள் எல்லோருமே ஒருவனுக்குத் தேவை ஏற்படும் போது ஒடிவந்து உதவுபவர்களாக இருந்து விடுவார்களா? இல்லையே. அப்படியானால் உறவு என்பது யாருக்குப் பொருந்தும்? நட்புக்கு இலக்கணம் தந்திருக்கிறார் திருவள்ளுவர். 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்கிறார்'. 'முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்பது மற்றொரு குறள். இந்த குறள் சொல்லும் நட்பை உறவாக மாற்றிப் பாருங்கள். அப்போது தெரியும் உறவு என்பது எப்படி இருக்க வேண்டுமென்று. சில நேரங்களில் நட்பு உறவைக் காட்டிலும் அதிகமான உதவிகளை நமக்குச் செய்யும். ஆகவே உறவு என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் உறவு அல்ல.

22. கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நம் மானுட வர்க்கத்தில் திருமணம் என்றொரு சடங்கு உண்டு. அந்தத் திருமண பந்தத்தால் ஒவ்வொருவருக்கும் மனைவி என்பவள் ஒருத்தி வாய்க்கிறாள். ஒருவனுக்கு வாய்த்த மனைவியைப் போல மற்றொருவனுக்கு வாய்த்திருப்பதை எங்கேயாவது கண்டிருக்கிறோமா? அடுத்தவன் மனைவி கணவனுக்கு எப்படியெல்லாம் சேவை புரிகிறாள், எப்படி கணவனின் வேலைப் பளுவினைத் தானும் தாங்கிக் கொள்கிறாள். குடும்பத்தில் நல்லவை, கெட்டவை அனைத்திலும் அவள் பங்கு கொண்டு கணவனின் மனச்சுமையை குறைத்திட பாடுபடுகிறாள். தனக்கு வாய்த்தவள் அப்படி இல்லையே. தான் தன் பெற்றோர் என்று பிறந்த இடத்துப் பெருமை மட்டும் பேசிக்கொண்டு தன்னையோ, தன்னைச் சார்ந்தவர்களையோ அவள் கவனிக்கவே இல்லையென்று வருந்துவோர் பலர் உண்டு. அவரவர்க்கு வாய்த்த மனைவி எப்படி இருக்கிறாளோ அவ்வளவுதான், அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். பிறரோடு ஒப்பிடுவது துன்பத்தைத்தான் தரும்.

23. அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது:
சமையற்கலை உயர்ந்த கலை. ஆண்களில் பலருக்கு அந்தக் கலையின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மனைவியோ, தாயாரோ உணவு சமைத்து வேளாவேளைக்கு பரிமாறி விடுகிறார்கள். சாப்பிட்டு விட்டு நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டு போய்விடுகிறோம். ஆனால் ஒருவன் தானே முயன்று அக்கறையோடு உணவு சமைத்து உண்பானானால் அந்த உணவு உண்மையில் சுவை இல்லாமல் இருந்தாலும் அவனுக்குச் சுவையுள்ள உணவைப் போல தெரியும். அது மனம் செய்யும் வினை. போகட்டும், அதுவல்ல இந்த வரிகளின் கருத்து. சில பொருட்களை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தோ, சுடப்பண்ணியோ சமையல் செய்யும்போது பதமாக இறக்கி விடவேண்டும். இல்லையேல், அதன் சுவை மாறுபட்டுப் போகும். வீட்டில் செய்த மைசூர்பாகு ஒருநாள் முறுகலாகிவிட்டது. காரணம் சற்று அடுப்பில் அதிக நேரம் காய்ச்சியதுதான். அதையே பக்குவமாக நெய்விட்டு நுரை பொங்கும் நேரத்தில் இறக்கியிருந்தால் பக்குவமாக உண்ண சுவையோடு இருந்திருக்கும். ஆனால் ஒரே ஒரு பொருள் மட்டும் எத்தனைக்கெத்தனை காய்ச்சினாலும், அது சுண்டச் சுண்ட அதன் சுவை குறையாமல் இருக்கும், அதுதான் பசும்பால். பசும்பாலைச் சுண்டக் காய்ச்சிய திரட்டிப்பால்/பால்கோவா சாப்பிட்டவர்களுக்கு அதன் அருமை தெரியும். இதில் என்ன சொல்ல வருகிறார் ஆசிரியர். சிலரை மற்றவர்கள் காய்ச்சு காய்ச்சென்று வாழ்நாள் முழுவதும் காய்ச்சிக் கொண்டே இருப்பார்கள். அப்படி எத்தனை காய்ச்சினாலும் பெரியோர்கள் தங்கள் நல்ல இயல்பிலிருந்து சிறு துளியும் மாறுவது இல்லை. மேலும் மேலும் காய்ச்சக் காய்ச்ச சுடர்விட்டுப் பிரகாசமாகத் தங்கள் நல்லொழுக்கத்தில் உறுதியாக இருப்பார்கள்.

24. சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது.
சில பாத்திரங்களை, பித்தளை, செம்பு, ஈயம் இவைகளை தீயிலிட்டுக் காய்ச்சினால் ஒளி மாறிவிடும். அனால் தங்கம் மட்டும் காய்ச்சக் காய்ச்ச ஒளி மேலும் பிரகாசமடையுமே தவிர ஒளி குன்றாது. அது போலவேதான் அறிவிற் சிறந்த பெரியோர்கள் முன் வரியில் சொன்னது போல பிறர் எவ்வளவு துன்புறுத்தினாலும் தங்களுடைய நல்ல இயல்பிலிருந்து மாறுபட மாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் தம்முடைய நற்குண நல்லொழுக்கங்களில் பிரகாசித்துக் கொண்டிருப்பார்கள்.

25. அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.
மரக்கட்டைகளுக்குள் சந்தன மரக்கட்டை மணம் உடையது. இந்த சந்தன மரக் கட்டைகளை சிறு துண்டுகளாக வெட்டி, சந்தனக் கல்லில் வைத்து அரைத்தால் சந்தன விழுது உருவாகும். அதனை நெற்றியில் பூசவும், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தவும், இறைவனை பூசிக்கவும் பயன்படுத்துவர். அப்படி சந்தன மரக்கட்டையை கல்லில் வைத்துத் தேய்க்கத் தேய்க்க அதன் மணத்தில் எந்த குறைவும் ஏற்படாது. கட்டை தேய்ந்து கொண்டிருக்குமே தவிர, மணம் மட்டும் முதலில் இருந்ததைப் போலவே அந்தக் கட்டை தெய்ந்து கரைந்து போகும் வரை மணம் மாறவே மாறாது. அதுபோலவெ நல்ல குணம் படைத்த பெரியோர்கள் ஊருக்குழைத்து தேய்ந்து போனாலும் தன் இறுதி வரை தங்கள் நற்செய்கைகளால் மணம் வீசிக் கொண்டிருப்பார்களே தவிர குறையொன்றும் வராது.

26. புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.
அகில் என்பதும் சந்தன மரத்தைப் போல மணம் உள்ள மற்றொரு மரத்தின் வகை. சந்தனத்தைப் போல இது சற்று வெண்மை நிறமின்றி கருமை நிறம் படர்ந்ததாக இருக்கும். இந்த அகில் மரக் கட்டையைத் தீயிலிட்டு எரித்தால், அதிலிருந்து எழும் புகை நறுமணம் வீசும். மேலும் மேலும் அந்தக் கட்டைகளை எரிப்பதால் தீய்ந்த நாற்றம் எழுவதே இல்லை, முதலில் நாம் உணர்ந்த அதே நற்புகை மணம் வீசிக் கொண்டிருக்கும். அது போலவே அறிவிற் சிறந்த பெரியோர்கள் தாங்கள் எவ்வளவுதான் துன்புறுத்தப் பட்டாலும், தங்கள் நற்குணங்களிலிருந்து மாறவே மாட்டார்கள்.

27. கலக்கினும் தண் கடல் சேறு ஆகாதே.
ஊரிலுள்ள ஒரு சிறு குட்டை, குளம், ஏரி இவற்றைப் பார்த்திருக்கிறோம். இவை சில நேரங்களில் மாடு குளிப்பாட்டிவிட்டுப் போன பின்பு, அல்லது மீன் பிடிப்போர் வலைகளை வீசி மீன் பிடித்த பின்போ அவை குழம்பிச் சேறாகக் காட்சி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் அலைகள் வீசிக்கொண்டு பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறதே அதைப் போய் எத்தனை கலக்கினாலும், குழப்பினாலும் அது குழம்பி சேறாக மாறாது. அது போலவே அறிவிற்சிறந்த பெரியோர்களை எத்தனை குழப்பினாலும், கலக்கினாலும் அவர்கள் தங்கள் நல்ல பண்புகளிலிருந்து மாறவே மாட்டார்கள்.

28. அடினும் பால் பெய்துகைப்பு அறாது பேய்ச் சுரைக்காய்.
சுரைக்காய் நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். அடிபெருத்து, நுனி சிறுத்து கூரைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த சுரைக்காயைப் பறித்துக் கறி சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த சுரைக்காயில் பேய்ச்சுரைக்காய் என்றொரு வகை உண்டு. அது வாயில் வைத்தால் கசப்பு ஆளைக் கொண்டு போய்விடும், அத்தனை கசப்பு. சாதாரண சுரைக்காயைச் சமைப்பது போல இந்த பேய்ச்சுரைக்காயைப் பறித்துக் கொண்டு வந்து அறுத்து நிறைய பால் ஊற்றி கறி செய்தாலும், அதிலுள்ள கசப்பு போய்விடுமா என்ன? அதன் இயல்பு கசப்பு என்றால் அதில் என்ன ஊற்றினாலும் கசக்கத்தான் செய்யிம் அல்லவா? அது போலத்தான் நல்லொழுக்கம் இல்லாத தீயமனிதர்களுக்கு எத்தனைதான் நல்லவைகளைச் செய்தாலும், அவர்கள் தங்கள் பொல்லாங்கிலிருந்து மாறவே மாட்டார்கள். அது அவர்கள் இயல்பாக பிறவியிலேயே அமைந்துவிட்டதுதான் காரணம்.

29. ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது.
உள்ளி என்பது நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உள்ளிப்பூண்டு. வெங்காயம் போல வெண்மையாக இருக்கும் உள்ளிப்பூண்டுவின் காரம் அனைவரும் அறிந்தது. சுள்ளென்று தெரிக்கும் காரம் அதில் இருக்கும். உள்ளியின் சுவையை எல்லோருமே விரும்ப மாட்டார்கள், காரணம் அதன் மணம் ஒருவித மாற்று மணமாக இருக்கும். இந்த உள்ளிப்பூண்டை எடுத்து நறுக்கி அதில் பற்பல நறுமண செண்டுகளைப் போட்டு முகர்ந்து பார்த்தாலும், அவை அத்தனையையும் மீறி அதன் இயல்பான பூண்டு நாற்றம் வீசத்தான் செய்யும். அதுபோல தீயோருக்கு எத்தனை நல்ல செயல்களைச் செய்து வந்தாலும், அவர்கள் தங்கள் இயல்பான தீமையைத்தான் செய்வார்களே தவிர நல்லொழுக்கம் பூண்டு விளங்கமாட்டார்கள்.

30. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.
ஒரு சிலர் சமூகத்தில் ஒகோவென்று பாராட்டப் படுகிறார்கள். பொழுது விடிந்தால் பாராட்டு, பொழுது சாய்ந்தாலும் பாராட்டு. அந்த பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதே சொர்க்கம் என்று அவர்கள் நினைப்பார்கள். சிலருடைய அதிர்ஷ்டம், அல்லது பிறந்த நேரத்தின் கொடுமை. அவர்களுக்கு எங்கு போனாலும் சிறுமை, எதைச் செய்தாலும் சிறுமை. நூறு பேர் நீர் எடுத்து முடித்த குடத்தை இவன் போய் நூற்றியோராவது ஆளாக எடுப்பான், அது அப்போதுதான் அம்போவென்று உடைந்து போகும். இது அவன் செய்த வினை என்பதா என்ன சொல்வது. அப்படி சில பேர், இப்படிச் சில பேர். இதுபோல பாராட்டுக்கள் கிடைப்பதோ, அல்லது சிறுமைகள் நடப்பதோ நம்மை மீறி நடப்பதானால் சரி. ஆனால் சில நேரங்களில் பெருமையும் சிறுமையும் நாம் நடந்து கொள்ளும் முறைகளில்தான் இருக்கிறது. ஆகையால் பொது இடங்களில் மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் பொறுப்போடும், கவனத்தோடும் ஒருவன் செயல்படுவானால் அவனுக்குப் பெருமை கிடைக்கும், அலட்சியமும், அவமதிப்பும் கொண்டிருப்பானானால் அவனுக்குச் சிறுமைகள் வந்தே தீரும்.



Friday, June 7, 2013

வெற்றி வேற்கை. (2)

வெற்றி வேற்கை. (2)

முந்தைய பதிவில் முதல் பத்து வரிகளுக்கு விளக்கங்களைப் படித்தீர்கள். இந்தப் பதிவில் அடுத்த பத்து வரிகள் படித்துவிட்டுக் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்:
ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதியா? சமூகத்தில் பெண்கள் எதிர்த்துப் பேசக் கூடாது, அடங்கிப் போக வேண்டும். மற்றவர்கள் எதிரில் பெண்கள் உரத்த குரலில் சிரிக்கக் கூடாது. பாஞ்சாலி சிரித்தாள், பாரதப்போர் வந்தது என்றெல்லாம் நம் பெரியவர்கள் சொல்வதுண்டு இல்லையா? இதைக் கேட்கும் இப்போதைய பெண் விடுதலையாளர்கள் ஆணாதிக்கம் இது. இதை ஒழித்தே தீருவோம் என்று குரல் கொடுப்பார்கள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், பொதுவாக ஆண்கள் பேசுவது, நடந்து கொள்வது, விவாதங்களில் கலந்து கொண்டு பேசும்போது அவர்களது பாணி, இவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. சிவபெருமான் ஆடிய ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனைப் போல் காலை தலைக்கு மேலே உயர்த்தி ஆடமுடியாமல் தில்லை காளி கோபமடைந்து காட்டுக்குள் போய்விட்டாள் என்கிறது நம் புராணம். பெண்களுக்கு அழகு எதிர்த்துப் பேசாதிருத்தல், அதிலும் குறிப்பாக கணவனை எதிர்த்துப் பேசுவோர் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. இது குறித்து யாராவது எதிர் பேச வந்தால் நான் இல்லை.

12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்:
இதில் என்ன அதிசயம். குலப் பெண்கள் கணவனை அன்போடு உபசரித்து, வேளா வேளைக்கு அவனுக்கு உணவு பரிமாறி, அவளும் வேலைக்குச் செல்பவள் என்றாலும், அன்பில் குறையாமல் நடந்து கொள்வதுதான் சிறந்தது. அதனால்தான் அத்தகைய பெண்களைக் குலமகள் என்கின்றனர். மாறாக, வெற்றி வேற்கை. சோறு வைத்திருக்கிறேன் போய் கொட்டிக்க, எனக்குத் தூங்கணும் என்றா சொல்வாள் பெண். சொல்ல மாட்டாள் இல்லையா? குடும்பம் இனிமையாக இருக்க வேண்டுமானால் கணவன் மனைவியைப் பேணுதலும், மனைவி கொழுநனைப் பேணுதலும் அவசியம்.

13. விலைமகட்கு அழகு மேனி மினுக்குதல்:
மிகப் பண்டைய காலமும் இல்லாமல், தற்போதைய நாகரிக உலகமும் இல்லாமல் இருந்த இடைப்பட்ட காலத்தில் 'விலைமகள்' எனும் சொல்லும், ஆண் மனைவி தவிர வெளியே உறவு வைத்துக் கொண்டு அதனால் அந்தக் குடும்பம் தொல்லைகளுக்கு ஆளானதையும் நாம் கேள்விப் படுகிறோம், பழைய கதைகளிலும் படிக்கிறோம். அப்போதெல்லாம் பெண்கள் அறியாமை இருளில் இருந்ததால் இதுபோன்ற சூழ்நிலைகளை அழுது கழித்திருக்கிறார்கள், ஆண்களை எதிர்த்துப் போராடியதாகத் தெரியவில்லை. சரி இந்த வரிக்கு வருவோம். விலைமகளின் தொழில் அது. அந்த தொழிலுக்கு ஏற்றவாறு அவள் தன்னை அழகு படுத்திக் கொண்டு, கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு கண்களை அலைபாய விட்டால்தான் அவள் தொழில் நடக்கும் என்பதால் அவளுக்கு அழகு 'மேனி மினுக்குதல்' என்று இந்த வரியில் குறிப்பிடுகிறார். இது சமூக நியாயமாகக் கொள்ள முடியாவிட்டாலும், அவரவர்க்கு அவரவர் தொழில் முக்கியம் என்பதால், அவளுடைய இலக்கணம் அது என்பதோடு இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்ல குடும்பத்துப் பெண்கள் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்கள்; நடந்து கொள்ளக் கூடாது என்பது விதி.

14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்:
எல்லா நூல்களையும் கற்று அந்நூல்கள் கூறும் அறங்களை நன்கு புரிந்து கொண்டு வாழ முற்படுபவர்களே அறிஞர் எனலாம். தான் கற்றது போதும் என்று இல்லாமல் மேலும் மேலும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து கசடறக் கற்று, அதன் வழி நடத்தல் வேண்டும். தான் கற்ற நீதிகளை நன்கு உணர்ந்து மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதற்குத் தக்கபடி வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். ஆக, நல்ல நூல்களைக் கற்றல், கற்றவற்றை நன்கு உணர்ந்தல்; உணர்ந்தபடி அடக்கத்துடன் வாழ்க்கையை நடத்துதல் இவைகள் எல்லாம் அறிஞர்க்கு அழகு.

15. வறிஞர்க்கு அழகு வறுமையிற் செம்மை:
இதற்கு முந்தைய வரியில் அறிஞர் பற்றி கூறியமையாலோ என்னவோ அடுத்த வரியில் வறிஞர் பற்றி குறிப்பிடுகிறார். வறிஞர் என்பவர் ஏழை என்கிறது தமிழ் அகராதி. உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் இல்லாமல் வருந்துவோர் வறிஞர். வறுமையால் வருந்துபவர் வறிஞர். அப்படிப்பட்ட வறிஞர்கள் தன்னுடைய வறுமையைப் போக்கிக்கொள்ள தீய வழிகளில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முயற்சி செய்யாமல், வறுமையை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அற்பத்தனமாக பிறரிடம் ஈயென்று பல்லைக் காட்டி அவர்கள் இரங்கிக் கொடுக்கும் பொருளை வாங்கி வயிறு வளர்க்க முற்படாமல், அந்த வறிய நிலையிலும் தன்னுடைய சுய கெளரவத்தைக் காப்பாற்றி உள்ளதைக் கொண்டு உவகையோடு வாழ்தலே இன்பம். வறியவன் என்பதால் அவனுக்கு சுய கெளரவம் இல்லாமல் போய்விடக்கூடாது. மயிர் நீப்பின் வாழா கவரிமான் அன்னார் உயிர் நீப்பின் மானம் வரின் எனும் குறளை நினைவில் கொள்வோம்.

16. தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
பனைமரம் நாம் தினமும் கண்டு களிக்கும் மரவகைதான். நகரங்களில் அல்ல, கிராமங்களில். இந்த பனை மரத்தில் பழங்கள் உண்டு. அவைகளைக் கோடை காலத்தில் கொத்து கொத்தாகப் பறிந்துக்கொண்டு வந்து சாலையோரங்களில் போட்டு அதனை கலை நுணுக்கத்தோடு சீவி, அதனுள் இருக்கும் மூன்று நுங்குகளை எடுத்து உண்பர். மூன்று கண்களையுடைய இந்தப் பனம்பழங்கள் சிவபிரானின் முகமோ? யார் கண்டது! இந்தப் பழங்களை முத்தவிட்டு மரத்திலேயே இருந்தால் அதில் மூன்று விதைகள் உருவாகும். அதில் ஏதாவதொன்று பூமியில் விழுந்து பனங்கன்று முளைத்து, அதிலிருந்து மரமொன்று வானளாவ வளர்ந்தாலும், அந்த மரத்தின் நிழலில் ஒருவராவது வெயில் நேரத்தில் ஒண்டிக்கொள்ள முடியுமா? முடியாதே. அது போல சிவபிரான் அருளால் தனியொருவன் செல்வத்தைப் பெருக்கிக்கொண்டு சீமானாக வாழ்ந்தாலும், வானுயர புகழ் மண்ட மாளிகையில் வாழ்ந்தாலும், ஆலமரம்போல் தழைத்து வளர்ந்த மரம்போல அண்டிய அனைவர்க்கும் நிழல் தரும் மரமாக இருக்காமல் நெடிதுயர்ந்த பனையாக இருப்பானாகில் யாருக்கு என்ன பயன்? பயனற்ற மனிதராகத்தான் அவர்கள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பர்.

17. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துள் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே!
முந்தைய வரிகளின் தொடர்ச்சியாக அமைந்ததைப்போல இருக்கும் இந்த வரிகள் சொல்லும் செய்தி முந்தைய வரிகளின் கருத்துக்கு நேர் மாறானது. ஆலமரம் பரந்து விரிந்த மரம். சாலையோரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தழைத்து வளர்கின்ற மரம் ஆல். மரம்தான் பெரிதே தவிர அதில் விளையும் கனிகள் மிகச் சிறியன. அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான விதைகள். மீன் முட்டைகளைவிட சிறியவை அவை. அந்த சிறிய விதைகளில் ஏதேனும் ஒன்று பூமியில் விழுந்து கன்றாகி, செடியாகி, மரமாக தழைத்து வளர்ந்த பின்னர், அந்த மரத்தின் நிழலில் அரசன் ஒருவனின் பட்டத்து யானை முதல், குதிரைகள் பூட்டிய ரதங்கள், காலாட்படைகள் அனைத்தும் நின்று இளைப்பாற நிழல் அல்லவா கொடுக்கிறது. ஆலம்விதை போன்ற கண்களுக்குத் தெரியாத சிலர் நம் சமூகத்தில் இருப்பர். அத்தகையவர் பரந்த மனப்பான்மையும், ஊருக்கு உதவும் மனோபாவமும் கொண்டவராக இருப்பர். ஊருக்குப் பயன்படும் அத்தகையோர் ஆலமரத்துக்கு ஒப்பாவர். யாருக்கும் நிழல் தராத பனையாக இருப்பதினும், ஊருக்கே நிழல்தரும் ஆலாக இருப்பது பெருமையன்றோ?

18. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
ஊரில் பெரிய மனிதர்கள் என்று மதிக்கப்படுபவர் அனைவருமே பெரிய மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இரக்கம், பிறருக்கு உதவும் தயாள குணம், உடுக்கை இழந்தவன் கைபோல பிறர்க்கு துணை புரிய ஓடோடிச் செல்லும் பண்பு, குடும்பத்துத் தலைவன் போல சமூகத்துக்குத் தலைவனாக இருந்த உதவும் எண்ணம் இவைகள் இல்லாமல் இருந்தால் அவரை பெரியோர் எனக் கொண்டாடலாமா? தோற்றத்தாலும், வயது முதிர்தலாலும், செல்வச் செறுக்காலும் அவர் பெரியவர் போலத் தோன்றினாலும் அவர்களைப் பெரியோர் என்று ஒப்புக் கொள்ள முடியுமா? மாறாக ஒருவர் ஊருக்கு உதவும் ஊரணி போன்றவராகவும், ஏனையோருக்குப் பயன்படும் பழுத்த நற்கனிகளையுடைய மரம் போலவும் இருப்பாரானால் அவர் உண்மையில் பெரியோரே!

19. சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
சிலரை அவர்களது வாழ்க்கைத் தரம், வருமானம், செல்வாக்கு இவற்றை வைத்துத்தான் இந்தச் சமூகம் மதிக்கிறது. அவர்களது பார்வையில் கணிசமாகத் தோன்றாதவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. நம் எதிரில் வெள்ளையும் சொள்ளையுமாக என்பார்களே அப்படி பகட்டாக வாழ்ந்து கொண்டு, பழைய சோறு தின்றாலும், அவர் தின்ற இலையில் சிறிது விளக்கெண்ணையைத் தடவி பிறர் பார்க்கும் வண்ணம் வாயிலில் எறிந்து, இவர் அத்தனை நெய் போட்டு சோறு உண்டதாகக் காட்டிக் கொள்ளும் அற்பர்களாக இருந்தால் ஊருக்கு என்ன பயன்? நாம் பொருட்படுத்தாத ஒரு மனிதன், எளியவன் ஆனால் சமயத்தில் ஓடிவந்து உதவக்கூடிய பண்புடையவனாக இருந்தால், அவனை அவன் செல்வச் செழிப்பினால் மட்டுமல்ல, தோற்றத்தினால் மட்டுமல்ல, அவன் நடத்தையால், எண்ணத்தால், அவன் செய்யத் துடிக்கும் உதவிகளினால் அவன் சிறியவன் அல்ல, பெரியோனே!

20. பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்.
குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்கி அவர்களை ஊர் மெச்சும் நல்லவர்களாக ஆக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணியபடி பெற்ற பிள்ளைகள் எல்லாம் ஊர் மெச்சும் குழந்தைகளாக, பெற்றோர்களைத் தாங்கும் நல்ல மக்களாக வளர்ந்து விடுகிறார்களா? இல்லையே! ஆக பிள்ளைகள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், ஆனால் அவர்கள் நல்ல பிள்ளைகளாக ஆவது நம் கையில் இல்லை இறைவன் கருணையில் இருக்கிறது. "எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்றொரு திரைப்பட பாடல் உண்டு. ஒருகால் பிள்ளைகளை வளர்க்கும் அன்னையின் கையில் அந்த பொறுப்பு இருக்கிறதோ என்னவோ?

வெற்றிவேற்கை (1)

                                        வெற்றிவேற்கை (1)

பண்டைய தமிழிலக்கியங்களை பொதுவாக மக்கள் ஆர்வத்தோடு படிப்பதாகத் தெரியவில்லை. இன்றைய இலக்கியவாதிகள் அவரவர்க்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் படிப்பையே இலக்கியமாகக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்ற பெயரைச் சொன்னமாத்திரத்தில் இவைகள் எல்லாம் பள்ளிக்கூட பாடங்களில் காணப்படுபவை, அவற்றை வேறு வழியில்லாமல் மாணவர்கள் படித்து மனப்பாடம் செய்து, தேர்வெழுதி மதிப்பெண் வாங்கத்தான் பயன்படும். இதில் வேறென்ன புதுமை இருக்கிறது என்பது பொதுவான எண்ணம் உண்டு. 

இந்த வெற்றிவேற்கை மூன்றாம் வகுப்பிலேயே படித்ததால் முதிர்ந்த வயதில் அவற்றை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வருவது சிரமமான காரியம்தான். அப்படி இதில் என்னதான் இருக்கிறது. மூன்றாம் வகுப்பு குழந்தைகள் படிப்பதை நாமும் படித்தால்தான் என்ன? பார்ப்போமே என்கிற உணர்வில் இந்த இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினேன். இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்றவைகள் எல்லாம் சிறப்பான கருத்துக்களைக் கூறுகின்றன. 

சரி இந்த வெற்றிவேற்கையில் என்ன இருக்கிறது. அதிவீரராமபாண்டியன் என்பவர் இயற்றியதாக புத்தகங்கள் கூறுகின்றன. அப்படியொன்றும் கடினமான சொற்களைப் போட்டு புரியாமல் எழுதப்பட்டதுமல்ல. மிக எளிமையான, அனைவருக்கும் புரியும்படியான, ஒவ்வொரு வரியிலும் ஒரு ஆழமான கருத்தை அள்ளித் தெளித்திருக்கும் அதிவீரராமபாண்டியர் இவற்றை சிறார்களுக்கென்று மட்டுமா எழுதியிருப்பார், வயது முதிர்ந்திருந்தாலும், சிறார்களுக்குரிய பண்போடு இருக்கும் பலதரப்பட்டவர்க்குமாக இது பயன்படத்தான் எழுதியிருப்பார். பரவாயில்லை, வயதானவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, மீண்டுமொரு முறை படித்துத்தான் பார்ப்போமே. இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை. இந்த உணர்வோடு மீண்டும் இதோ வெற்றிவேற்கை.

இந்த இலக்கியத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்து இருக்கிறது. அது மிக எளிமையான பாடல். மகா கணபதி மீதான பாடல், அதாவது விக்ன விநாயகன் மீது. அது இதோ

"பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணவற் பதமலர் தலைக்கணி வோமே"

அடடா! சிறார்களுக்காக உண்டான இலக்கியமன்றோ மிக எளிதான கடவுள் வாழ்த்து. பிரணவம் எனும் ஓம் எனும் மந்திரத்தின் உருவானவன் கணபதி. அந்த ஐங்கரன் பாதகமலங்களை அள்ளியெடுத்து நம் தலையில் அணிந்து கொள்வோம் என்கிறது இந்தப் பாடல்.

இந்த நூலைப் படிப்பதால் என்ன பயன்? இந்த நூலாசிரியர் அதிவீரராமபாண்டியன் பாண்டிய நாட்டவர். அங்கு கொற்கை எனும் துறைமுகப் பட்டினத்தை ஆளும் மன்னவன் நல்ல தமிழ் நூல்களிலிருந்து திரட்டி எடுத்த நீதிகளை இந்த நூலில் தந்திருப்பதை ஏற்று வாழ்வில் குற்றங்களைக் களைந்து நல்வழிப் படுவார்களானால் அப்படிப்பட்டவர் எந்தக் குறையும் இல்லாதவர்களாக இருப்பர். இனி ஒவ்வொரு வரியாகப் பார்க்கலாம், நூல் என்ன சொல்கிறது என்பதை.

ஒவ்வொரு நாளும் பத்து வரிகளைப் படித்து அதற்குப் பொருள் காண்போம். இன்று முதல் பத்து. படியுங்கள். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிருங்கள். பள்ளிக்கூட சிறார்கள் படிக்க வேண்டியதைக் கொடுத்து படியென்றால் யார் படிப்பது என்று அலட்சியம் செய்யாதீர்கள். இது சிறுவர்களுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள்.

1. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்: 

நமக்குக் கல்வி கற்றுத் தருபவர் ஆசிரியர். அவர் போன்ற ஆசிரியர்களுக்கும், கற்றறிந்த மேலோர்களுக்கும் கல்வியைக் கற்பித்து, எழுத்துக்களை எழுதும் விதம் குறித்து முதன் முதலாக ஆசிரியராக இருந்து பணியாற்றியவர் யார்? அவர்தான் இறைவன். அந்த எழுத்துக்களைக் கொண்ட கல்வியை இன்று நமக்குக் கற்பிப்பவனும் இறைவன் போன்றவனே.

2. கல்விக்கு அழகு கசடற மொழிதல்:

ஒருவன் தன்னைக் கல்வி கற்றவன் என்று சொல்லிக் கொள்வானானால், அவன் பேசும்போதும், பிறருக்கு எடுத்துரைக்கும் போதும் பிழையின்றி தான் படித்தவற்றை உள்ளது உள்ளபடி, பொருள் மாறாமல் பேசுதலே நல்ல கல்வி கற்றதற்குச் சான்றாகும்.

3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்:
இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய 1939 முதல் அது முடிந்த 1945 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பலரும் தாங்கள் இருந்த பூர்வீக ஊர்களிலிருந்து குடிபெயர்ந்து பெரிய ஊர்களுக்கும், நகரங்களுக்கும் செல்லலாயினர். அப்போது அவர்கள் போன இடத்தில் தாங்கள் இருந்த கிராமம் போல அல்லாமல் நல்ல தொழில் புரியவும், பொருள் திரட்டவும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பொருள் சேர்ந்து நல்ல செல்வந்தர்களாக ஆகினர். மாடமாளிகைகளைக் கட்டிக்கொண்டு விரைந்து செல்ல வாகனங்களை வாங்கிக் கொண்டு தங்களைச் செல்வச் சீமான்களாகக் காட்டிக் கொண்டிருந்த அதே வேளையில் இவர்களைப் போல ஊரைவிட்டு வராமல் அங்கேயே தங்கியிருந்தவர்கள் ஏழ்மை நிலையை அடைந்து வருந்தி வரலாயினர். அவர்கள் நகரத்துக்கு வந்து செல்வந்தராக இருக்கும் உறவினர்களைப் பார்த்து அடைக்கலமென்று வந்தால் அவர்களையும் அரவணைத்து, அவர்கள் வாழ்விலும் முன்னேற வழிகாட்டுதலே சிறப்பு. அதுவன்றி ஐயய்யோ, இவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று வாயிற்கதவை அடித்துச் சாத்திவைத்திருப்பது முறையாகாது. அப்படிப்பட்ட செல்வந்தர்களுக்கு அழகு தருவது தங்கள் சுற்றங்களையும் காத்து வருவதாகும்.

4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்:
வேதம் ஓதுதலும், ஊர் வாழ யாகங்களைச் செய்வதும், தன்னலமற்ற இந்த சேவைக்காக பிறர் மனமுவந்து தாங்களாகவே முன்வந்து அளிப்பவற்றைப் பெற்று வாழ்வதும் அந்தணர் கடமை. இவர்களுக்கு வேதம் ஓதுதல் முதற்கடமை. வேதங்களின் ஒலி காற்றில் பரவப் பரவ நல்லன எல்லாம் தானே நடக்கும். அப்படி வேதங்களை ஓதுவோர் தங்களது சொந்த வாழ்க்கை முறையில் தலைசிறந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஒழுக்கம் தவறியோர், என்னதான் வேதங்களைப் படித்தாலும் பயன் இல்லை. ஆகவே வேதம் ஓதுகின்ற வேதியர்க்கு அழகு நித்தமும் வேதம் ஓதுதலும், ஒழுக்கமான வாழ்க்கையுமே ஆகும்.

5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை:
அன்றைய காலகட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்களாகட்டும், இன்றைய ஜனநாயக காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களை ஆளும் பொறுப்பில் உள்ளவர்களாகட்டும் தாங்கள் நேர்மை தவறாமல், தர்மப்படி நாட்டை ஆளுதலே தலையாய கடமையாகும். இதில் எங்காவது ஒரு சிறு தவறு நேர்ந்து ஆள்வோர் நேர்மை தவறுவாரானால் அது அவர்கள் வகிக்கும் பதவிக்கே இழிவாகும். ஆகவே நாட்டை ஆள்வோர் எப்போதும் நீதி நெறிமுறை தவறாமல் ஆட்சி புரிதலே.

6. வணிகர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல்:
பண்டைய நாளில் அந்நியர் வந்து புகாமுன்னம், நம் மக்கள் தமக்குள் செய்யும் பணிகளை பிரித்துக் கொண்டு அவற்றை முறை பிறழா வண்ணம் செய்து கொண்டு வந்தனர். அப்படிச் செய்பவர்கள் செய்யும் தொழிலால் பிரிந்திருந்தாலும் சமூக ஒற்றுமையோடு வாழ்ந்து ஒருவர்க்கொருவர் நேசக்கரம் நீட்டி வாழ்ந்து வந்தனர். அப்படி தொழிலால் பிரிந்தவருள் வணிகர் எனும் பிரிவும் ஒன்று. மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், விற்கவும் இவர்கள் பணியாற்றி வந்தனர். பொருட்களை வாங்குவதற்கு வணிகர்களுக்கு நிறைய பொருள் தேவை. வாங்கியவற்றை நியாயமான முறையில் விற்று, அதில் வரும் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டு தொழிலில் சிறந்து விளங்க வேண்டும். ஆகவே அவர்களது நோக்கம், மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்குதல்.

7. உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்:
உழுது பயிரிட்டு உணவுக்கு வேண்டிய தானியங்களை உற்பத்தி செய்வோர் உழவர்கள். நிலத்தை ஏர் கொண்டு உழுதலால் உழவர் எனப் பெயர் பெற்றனர். வேளாண்மைத் தொழில் செய்தலால் வேளாளர் எனவும் பெயர் உண்டு. இவர்கள் நிலத்தை உழுது பயிரிட்டு தானியங்களை உற்பத்தி செய்வது தங்களுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு தரும் உத்தமமான காரியத்தைச் செய்கிறார்கள். அப்படி தான் உற்பத்தி செய்யும் தானியங்களை மற்றவர்க்கும் கொடுத்துத் தானும் உண்பது அவர்கள் செய்யும் தொழிலுக்கும், அவர்களுக்கும் அழகு தரும்.

8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்:
பொதுவாக மன்னன் என்பவன் ஆளும் பொறுப்பில் இருந்தாலும், நாட்டு நடப்பை நன்கு உணர்ந்தவராக இருப்பவர்கள் அமைச்சர்களே. நம் ஊர் தெருக்கூத்துகளில் வரும் மன்னர்கள் நாட்டில் மழை பெய்கிறதா என்பதை "அமைச்சரே! நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?" என்று கேட்டுத் தெரிந்து கொள்வதாகத்தான் நடித்துக் காட்டுவார்கள். அமைச்சர் என்போர் மக்களுக்கும் ஆட்சி புரியும் மன்னனுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுபவர்கள். நாட்டில் எவ்வெப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டு இது நன்மை தரும், அல்லது இது தீமை தரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து சொல்லி அதற்கேற்றவாறு நடந்து கொள்வது அமைச்சரின் கடமை. அப்படி நடந்து கொள்வதே அமைச்சருக்கு அழகு.

9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை:
தந்திரம் என்பதற்கும் தந்திரி என்பதற்கும் பல பொருள் உண்டு. இங்கு தந்திரம் என்றால் சேனை அல்லது படை. தந்திரி என்பதற்கு இங்கு படைத் தலைவன் என்பது பொருள். ஒரு படைக்கு அல்லது சேனைக்குத் தலைவன் என்றால் ஏதோ தன்னை அலங்காரம் செய்து கொண்டு சிப்பாய்களிடம் சலாம் பெற்றுக் கொள்வது அல்ல. போர் என்றால் போர் முனையில் நின்று போரிடும் வீரமும், விவேகமும் இருத்தல் வேண்டும். அஞ்சா நெஞ்சம் என்பது உண்மையில் வேண்டும். ஆகவே ஒரு படைக்குத் தலைமை வகிப்பவன் அஞ்சா நெஞ்சமும், வீரமும், விவேகமும் உடையவனாக இருத்தல் வேண்டும். அப்படி இருப்பதுதான் அவன் வகிக்கும் படைத்தலைவன் எனும் பதவிக்கு அழகு.

10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்:

உண்டி என்றதும் திருப்பதிக்கு என்று காசு போட்டு வைக்கும் சுட்ட மண்ணால் ஆன குடுவை என்று எண்ண வேண்டாம். இங்கு உண்டி என்பது நாம் சாப்பிடுகின்ற உணவைக் குறிக்கும். வீட்டில் உணவு சமைத்ததும் அதனைத் தான் மட்டும் உண்டு தீர்த்துவிடுவது சிறந்தது அல்ல. ஒவ்வொரு நாளும் தனித்து உண்ணும் நிலைமை வந்தால், யாராவது விருந்தினர் வரமாட்டார்களா அவர்களுக்கும் உணவளித்து அவர்களோடு சேர்ந்து அமர்ந்து உணவருந்த மாட்டோமா என்று அந்த நாட்களில் நம் முன்னோர்கள் ஏங்கினார்கள். இப்போதும் கூட சில கிராமப் புறங்களில் அப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடிகிறது. விருந்தினரோடு உண்ணும் உணவே விருந்து.



Saturday, June 1, 2013

"தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு" நூல்

நான் சில நாட்களுக்கு முன்பு அறிவித்ததைப் போல என்னுடைய "தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு" நூல் வெளியாகிவிட்டது. அதன் முகப்பு அட்டையையும் பின் அட்டைப் படத்தையும் இங்கு காணலாம்.
                                                           வெளியீட்டாளர்:
                                                         அனன்யா பதிப்பகம்,
                                                          8/37,பி.ஏ.ஒய்.நகர்,
                                               குழந்தை ஏசு கோயில் அருகில்,
                                     புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613005
                                                            விலை ரூ.100.
                                          


இலங்கைத் தமிழர்

                                                                 இலங்கைத் தமிழர்

கவி கா.மு.ஷெரீப் நமக்கெல்லாம் தெரிந்த நல்ல கவிஞர். இப்போது இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து அனைவரும் பேசுகின்றனர். இது என்னவோ இப்போதுதான் ஏற்பட்டது போன்ற தோற்றம் இதனால் ஏற்படலாம். அன்று இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆபத்து நேர்ந்தபோது மனம் கொதித்து கவி கா.மு.ஷெரீப் எழுதினார். அதன்பின்னர் பாரம்பரிய யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு நடந்தவற்றை அவர் இருந்து பார்த்திருந்தால் எப்படிக் கொதித்திருப்பார்? 1954இல் கவிஞர் கா.மு.ஷெரீப் எழுதியுள்ள இந்தக் கவிதை சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆசிரியராக இருந்த "தமிழன் குரல்" இதழில் வெளியானது. இப்போது இதைப் படித்தாலும் வரலாறு இன்னமும் மாறவில்லை என்பது தெரிகிறது. இனி கவிதையைப் படியுங்கள். ஐயா ம.பொ.சி. அவர்களின் பேத்தி தி.பரமேஸ்வரி தொகுத்து, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ம.பொ.சியின் "தமிழன் குரல்" இதழ் தொகுப்பு எனும் நூலிலிருந்து.

                                                             என்ன செய்குவீர்?
                                                           கவி கா.மு. ஷெரீப்

இலங்கைவிட்டு தமிழரெல்லாம் திரும்பப் போகிறார்!
ஏதுமற்ற அகதிகளாய்த் திரும்பப் போகிறார்!
பலமிருந்த வரையில் லங்கை நாட்டுக்குழைத்து
பஞ்சையராய் பராரியராய்த் திரும்பப் போகிறார்!

விலங்கு வாழும் காடுகளை வெட்டி திருத்தி
வருவாயுள்ள தோட்டங்களாய் மாற்றி யமைத்து
எலும்பொடிந்த ஏழையராய் திரும்பப் போகிறார்!
ஏக்கத்துடன் இந்தியா வந்தடையப் போகிறார்!

அட்டைக் கடியால் ரெத்தம் செத்த சோகை உடம்பு
அன்னியர்க்கே பாடுபட்டு வறுமை மிகுந்த
குட்டை மனத்து சிங்களத்தார் கொடுமையினால்
குடியிருப்பு உரிமையிழந்து திரும்பப் போகிறார்!

ஊரிருந்தும் வீடுயில்லா ஓட்டாண்டியாக
உறவிருந்தும் அறியமுடியா அன்னியராக
சீரழிந்த குடும்பத்தோடு நெடுநாள் கழித்து
சிங்களத்தான் துரத்தியதால் திரும்பப் போகிறார்!

தோட்டம் புதுக்கி சிங்களத்தை வளப்படுத்திய
திறமை மிக்க தொழிலினத்தை வெளியிலனுப்புறார்!
ஆட்டம் போடும் கொத்தலைக்கு அறிவுறுத்துறோம்
அநீதி செய்த ஆட்சி நீண்டு வாழ்ந்ததேயில்லை.

இந்தியாவை ஆளுகின்ற தலைவர்மார்களே
இலங்கை செய்யும் கொடுமை போக்க என்ன செய்குவீர்
சந்தியிலே வருபவர்கள் திரிந்தலைவதோ?
சர்க்காரவர் குறை துடைக்க வழிவகுக்குமோ?