பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 27, 2013

Gopalakrishna Bharathiyar


தில்லை வெளியிலே...


ராகம் : யமுனா கல்யாணி
தாளம் : ஆதி


தில்லைவெளியிலே கலந்து கொண்டாலவர் திரும்பியும் வருவாரோ 
எல்லைக்கண்ட பேரினிப்பிறவாரென்று இயம்புவதறியாரோ 

பெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அது பேய்ச்சுரைக்காய்த்தோட்டம் 
கண்டுகொள்ளுவார் பெரியோரறிவில் கனகசபையினாட்டம் 

திருவாதிரையில் தரிசனங்காணத் தேடித் திரியாரோ 
அரிதாகிய இந்த மானிடங்கிடைத்தால் ஆனந்தமடையாரோ 

குஞ்சிதபாதத்தைக் கண்டாலொழிய குறையது நீங்காதே 
சஞ்சிதரவினையாதிகளுடாடிய சடமுந் தாங்காதே 

சேரியிடையிலே குடியிருந்தாலிந்தச் சென்மமுந் தொலையாதே 
சிதம்பரம்போவேன் பதம்பெறுவேன் தடைசெய்வது மறியாதே 

இரவும்பகலும் ஒழியாக் கவலை இருப்பது சுகமோடா 
இன்பம் பெருகும் பரமானந்த வெள்ளம் அமிழ்ந்துநீ போடா

Gopalakrishna Bharathiyar


சற்றே விலகியிரும்...


ராகம் : பூரிகல்யாணி
தாளம் : ரூபகம்


பல்லவி
சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ 

அநுபல்லவி
நற்றவம்புரிய நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கிறார் 

சரணம்
சாதி முறைமை பேசுறான் தன்னையிகழ்ந்தும் ஏசுறான் 
கோதிலா குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டோம் [சற்றே] 

வேதகுலத்தைப் போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான் 
பூதலத்தி லிவனைப் போலே புண்யபுருட னொருவனில்லை [சற்றே] 

பத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பாத்து உண்டவன் 
சித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் [சற்றே]

Gopalakrishna Bharathiyar Songs. Nandan Charitham


ஐயே மெத்தகடினம்...


ராகம் : புன்னாகவராளி
தாளம் : ஆதி


பல்லவி
ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம் 

அநுபல்லவி
பொய்யாத பொன்னம்பலத் தையாஇருக்குமிடம் 
நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே] 

வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப் 
பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு) 
ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த 

மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் 
சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு 
பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே 

சரணம்
கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் 
மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று 
சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு 

சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு 
அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே 
நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த 

அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது 
கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது 
பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத 

மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ 
தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ 
தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த 

முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு 
இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் 
ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக் 

கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை 
அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் 
அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ 
நேரமாகுதல்லவோ [ஐயே]

தாமரை பூத்த தடாகமடி..

தாமரை பூத்த தடாகமடி...

ராகம்: சிந்து பைரவி                               தாளம்: ஆதி

பல்லவி

தாமரை பூத்த தடாகமடி - செந்
தமிழ் மணத் தேன் பொங்கி பாயுதடி, ஞான

சரணம்

பாமழையால் வற்றா பொய்கையடி - தமிழ்
பைங்கிளிகள் சுற்றி பாடுதடி - ஞான

காவியச் சோலையதன் கவி அழகே
அதன் கவிஞர்கள் கற்பனைக்கு ஓர் பெரும் சுவையே
ஆவி மகிழும் தமிழ் தென்றலதே
இது அமுதினைக் கொட்டுது பார் இதன் அருகே - ஞான

Tuesday, March 26, 2013

கவி காளமேகம்


கவி காளமேகம்
கவி காளமேகம் பற்றி முன்பே இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். இப்போது சில பாடல்களைப் படியுங்கள். மேலும் சுவையான பாடல்கள் தொடர்ந்து வெளியாகும்.
1.    காஞ்சி வரதராஜப் பெருமாள் நகர்வலம் வரும்போது காளமேகம் அந்த ஊர்வலத்தைப் பார்க்கிறான். அப்போது ஒரு வைணவர் கவியிடம் எப்படி வரதன் ஊர்வலம் என்கிறார். அதற்கு கவி இப்படிச் சொல்லுகிறான்.
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்!--பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!       
                        1.
இதன் பொருள்:  காஞ்சி வரதராஜப் பெருமாள் நல்லவர்தான்; அவருடைய திருவிழாவும் நல்ல திருவிழாதான்; ஆனால் இந்தப் பெருமாள் இருந்தவிடத்தில் சும்மா இல்லாமல் வெளிக்கிளம்பியதால் கருடன் பறந்து வந்து அவரை  எடுத்துச் செல்கிறான் பார் என்கிறான்.
*****************
2.   காளமேகம் நாகைப்பட்டினம் போகிறான். அங்கு இருந்த காத்தான் என்பவன் நிர்வகிக்கும் வருணகுலாதித்தன் சத்திரத்தில் இரவு தங்குகிறான். அப்போதெல்லாம் சத்திரத்தில் தங்குவோர்க்கு சாப்பாடு உண்டு. அதன்படி காத்தானிடம் தனக்கு சாப்பாடு அளிக்கும்படி கேட்கிறான். வழக்கம்போல் சத்திரச் சாப்பாடு ஓட்டல் சாப்பாடு போல உடனடியாக வருமா? காலதாமதம் ஆகிறது. அதிலும் எத்தனை தாமதம்? படித்துப் பாருங்கள் காளமேகத்தின் கேலியை.
கத்துகடல் சூழ் நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
                        2.
இதன் பொருள்: கடற்கரையிலுள்ள நாகைப்பட்டினத்தில் காத்தானுடைய சத்திரத்தில் மாலைப்பொழுது முடிந்து இரவு தொடங்கும்போதுதான் அரிசி வாங்கிவருவான்; அந்த அரிசியைக் களைந்து உலையிலிட ஊரடங்கி எங்கும் அமைதியாக இருக்கும்; விருந்தாளிக்கு இலையில் ஓர் அகப்பை சாதத்தை இடும்போது விடிந்துவிட்டதற்கு அறிகுறியாக வெள்ளி எழுந்துவிடும், அதாவது பொழுது விடிந்துவிடும்.
இதனைக் கேட்ட அந்த காத்தான், இவரை யார் என்பதை உணர்ந்து தனது தவறுக்காக வருந்துகிறான். அப்போது கவி தன் பாட்டின் பொருளை மாற்றி உரைக்கிறான். எப்படி? அந்தி சாய என்றால் நாட்டில் வளம் குறைந்து வறுமை எய்திய காலத்தில், அரிசி வரும் என்றால் இங்கு வருவோர்க்கு உணவு கிடைக்கும். இவன் அளிக்கும் உணவை உண்டு ஊர் மக்கள் பசி அடங்குவர். இவன் சமைத்த உணவு இலையில் விழும்போது வெள்ளிகூட தோற்கும்படியாக சாதம் வெள்ளை வெளேர் என்று  இருக்குமாம்.
******************************
3.    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது. அப்போது கேலி செய்வதுபோல காளமேகம் பாடிய பாடல் இது:
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?--மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றதே ஏன்?     
                        3.
இதன் பொருள்:  நல்ல பலம் பொருந்திய மதங்கொண்ட யானையை ஐயோ! ஒரு எலி தூக்கிக் கொண்டு போகிறதே! சிவபெருமானின் மழு எனும் ஆயுதமும், பெருமாளின் சக்கரமும், பிரம்மனின் தடியும் காணவில்லை போலிருக்கிறது. இருந்திருந்தால் இந்த எலியை அடித்து யானையைக் காப்பாற்றி இருப்பார்களே!
************************************
4.    ஆறுமுகப் பெருமானின் பெருமைகள் எவை?

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பறிய மாமன் உறிதிருடி;--சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.                
                        4.
அப்பன் சிவன் பிச்சையெடுத்து உண்பவன்; ஆத்தாள் பார்வதி மலை அரசனின் மகள் என்பதால் நீல நிறமுடையவள்; மாமன் மகாவிஷ்ணுவோ இடைக்குலப் பெண்டிர் உறியிலிருந்து வெண்ணையைத் திருடி உண்டவன்; அண்ணனுக்குக் கால்கள் சப்பை, வயிறு பெறுத்தவன்; இவைகளே இந்த ஆறுமுகனுக்குப் பெருமை.
**************************************************

Monday, March 25, 2013


ஒன்றிருந்தால் ஒன்றில்லை

எது சொந்தம்! (Pattukkottayaar song)


எது சொந்தம்!