பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 9, 2012

ஹிட்லர் காலத்திய ஜெர்மனி

அடால்ஃப் ஹிட்லர் காலத்திய ஜெர்மனி

அடால்ஃப் ஹிட்லர் மெள்ள மெள்ள தனது ஆட்சியை வல்லமை பொருந்தியதாக ஆக்கிக் கொண்டு 1939இல் உலக நாடுகளை விழுங்கவும் முயற்சி செய்திருக்கிறான். அவன் காலத்தில் அந்த சர்வாதிகாரிக்கு இருந்த ஆதரவு, மக்கட்கூட்டம், படைபலம், துணை நின்ற ராணுவத்தினர், அதிகாரிகள், பொது இடங்களில் அவனுக்கிருந்த ஆதரவு இவைகளை நம்மில் பலர் படங்களில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஓரளவு வரலாற்றில் அவை இடம் பெற்றிருந்தாலும், பின்னாளில் அவன் இழைத்த கொடுமைகள்தான் நம் நினைவில் இருந்ததே தவிர அவன் வானுயர்ந்து ஆட்சி செய்து மக்கள் ஆதரவோடு கொடிகட்டிப் பறந்த நாட்களை நாம் நினைவு கூர்வதில்லை. இப்போது அத்தகைய படங்களைக் காணும் வாய்ப்பை எனது நண்பர் சி.ஆர்.சங்கரன் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பியுள்ள அந்த காட்சிகளை நான் மட்டும் பார்த்தால் போதுமா, நீங்களும் பார்க்க வேண்டாமா? ஆகையால் அவற்றை இங்கே தந்திருக்கிறேன். நண்பர் சி.ஆர்.சங்கரன் அவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுத்து உதவியவர்களுக்கும் நன்றி.

அமெரிக்காவின் லைஃப் பத்திரிகையைப் பற்றி நாம் அறிவோம். அந்தப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் 1939, 40 ஆண்டு காலத்தில் ஜெர்மனிக்குப் போனவர் காணாமல் போய்விட்டார். பெர்லினில் கடைசியாக அவர் இருந்தது தெரிகிறது. அவர் வைத்திருந்த ரோலெக்ஸ் காமிராவோடு அவரும் காணவில்லை என்ற செய்திதான் லைஃப் பத்திரிகைக்குக் கிடைத்தது. ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பற்றிய விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

ரோலெக்ஸ் காமிராவில் அவர் எடுத்த புகைப்படங்கள் 6"x9" அளவுள்ளவை. பெர்லின் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர் ஒருவரிடம் இந்தப் படங்கள் கிடைத்தன. அவர் அவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். அவர் காலமான பிறகு அவருடைய மகள் அவற்றை எடுத்துப் பார்த்துவிட்டு, அவை லைஃப் பத்திரிகைக்குச் சொந்தம் என்பதை அறிந்து கொண்டு அவற்றை அந்த பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். இந்தப் படங்களைப் பார்க்கும்போது நாம் அந்த இடத்தில் நின்றுகொண்டு அந்தக் காட்சிகளைப் பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது.

தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் தங்கள் தலைவர்களுக்கு வைக்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் போலவும், அலங்கரித்த தோரணவாயில்களைப் போலவும் ஜெர்மனியில் அந்த நாளில் ஹிட்லர் வரவேற்கப் பட்டிருக்கிறான். ஒரு சர்வாதிகாரியின் ஏற்றமும், தாழ்ச்சியும் நம் காலத்தில் நாம் கண்ட காட்சிகள் அல்லவா. இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு, அவன் காலம் எப்படியிருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். நன்றி.


Friday, October 5, 2012

தென்னாப்பிரிக்காவில் ஓடிய ஒரு ரயிலின் படம்

புகைவண்டி

அந்தக் காலத்தில் சிறுவர் சிறுமியர் புகைவண்டி வருவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். இப்போதும்கூட ரயில் போகும்போது சற்று அதைப் பார்த்துவிட்டு நகர்வது என்பது பழக்கமாகிவிட்டது. அதிலும் இந்தப் படத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில், அழகான பாலத்தின் மீது ரயில் போவதைப் பார்ப்பது என்பது மகிழ்ச்சி தரக்கூடியதுதான். இனி இதுபோன்ற நீராவி எஞ்சின்களைப் பார்ப்பது அரிது. ஆகையால் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வோம். தென்னாப்பிரிக்காவில் ஓடிய ஒரு ரயிலின் படம் இது.


Thursday, October 4, 2012

காந்தியடிகளும் சார்லி சாப்ளினும்

காந்தியடிகளும் சார்லி சாப்ளினும்

காந்திஜி லண்டன் சென்றிருந்த போது அங்கு பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினைச் சந்தித்த செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவ்விருவரும் இருக்கும் புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? இப்போது பாருங்கள். இதோ:


சியாங்கே ஷேக்

சியாங்கே ஷேக்
(1887-1975)

சீனாவின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சியாங்கே ஷேக் (Chiang Kaishek). சீன அரசியலில் பல வெற்றிகளைப் பெற்றதைப் போலவே அவற்றை இழக்கவும் செய்த தலைவர். சீனா இப்போது பொதுவுடமைக் கட்சி ஆளும் நாடாக இருக்கிறது அல்லவா? சியாங் காலத்தில் அவர் கம்யூனிச எதிரியாக இருந்தவர். இவர் தேசிய சீனக் கட்சியான கோமிண்டாங் எனும் கட்சி ஆட்சியை நடத்தியவர். கம்யூனிஸ்டுகள் மாசே துங் தலைமையில் சீனாவை ஆளத்தொடங்குமுன் இவரது புகழ் சீன தேசத்தில் எங்கும் பரவிக் கிடந்தது. அவர் காலத்தில் சீனாவை மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக முன்னேற்றமடையச் செய்யவேண்டுமென்று அயராது பாடுபட்டவர் சியாங். சீன மக்கள் இவரை மிகவும் அன்போடு நேசித்தனர்.

சீனாவில் ஜீஷியாங் மாகாணத்தில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் சியாங் கேஷேக். இவரது இளம் வயதிலேயே முதலில் இவரது பாட்டனாரையும், அதற்கு அடுத்த ஆண்டில் இவரது தந்தையையும் இழந்தார். பின்னர் தாய் இவரது கல்வியிலும் முன்னேற்றத்திலும் அதிக காட்டினார். அப்போதெல்லாம் தந்தை இழந்த குழந்தைகள் அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. நம் நாட்டில்கூட "தாயோடு அறுசுவை உண்டிபோம், தந்தையோடு கல்வி போம்" என்ற பாடலும் உண்டு அல்லவா? இளமையில் இவர் பல சீன மொழி இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்தார். கல்வியில் ஆர்வம் கொண்டு இவர் நன்றாகப் படித்து உலக நடப்புகளை அறிந்து கொண்டதோடு மேற்கத்திய சட்டக் கல்வியையும் படித்து முடித்தார். சீனாவின் ஒப்புயற்வற்ற தலைவராக இருந்த சன் யாட் சேன் (Sun Yat Sen) அவர்களுடைய இயக்கத்தில் அதிக ஆர்வமும் கவனமும் எடுத்துக் கொண்டு ஈடுபாடு கொண்டார்.

ஜப்பானியர்களிடம் இவர் ராணுவக் கல்வியைப் பயின்றார். 1911இல் ஜப்பானிலிருந்து சீனா திரும்பிய பிறகு சீனாவில் நடந்த புரட்சியில் கலந்து கொண்டார். 1913 தொடங்கி சுமார் மூன்று ஆண்டுகள் சீனாவை ஆண்ட குவிங் ஆட்சியைத் தூக்கி எறிய பாடுபட்டார். 1917இல் இவர் சன் யாட் சென்னுடைய ராணுவ ஆலோசகராக விளங்கினார். 1923இல் இவர் சன் யாட் சென்னுடன் சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று ராணுவ பயிற்சிகளைப் பார்வையிட்டார். நாடு திரும்பிய சியாங்குக்கு ராணுவ பயிற்சி தளத்தின் தலைவர் பதவியை சர் யாட் சென் வழங்கினார்.

1925இல் சன் யாட் சென் காலமானார். அதன் பிறகு சீனாவின் கோமிண்டாங் என வழங்கப்பட்ட சன் யாட் சென் அரசாங்கத்தின் ராணுவத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இவர் சீனாவின் வடக்குப் பகுதியில் தனது தேசிய (கோமிண்டாங்) ராணுவத்தை அணிவகுத்து நடத்திச் சென்றார். ஷாங்காய் எனும் சீன வர்த்தகத் தலைமை கொண்ட நகரத்தையும் நான் ஜிக் நகரத்தையும் இவர்களது படை சென்றடைந்தது. சன் யாட் சென் கம்யூனிஸ்டுகளுடன் ஒத்துழைத்து சோவியத் ரஷ்யாவின் உறவையும் வலுப்படுத்தி வைத்திருந்தார். அதே கொள்கையை சியாங்கும் கடைப்பிடித்தார். சோவியத் நாடு சியாங்கே ஷேக்கின் சீனாவுக்கு அதிக அளவுக்கு உதவிகளைச் செய்தது.

இந்த நிலைமை 1927க்குப் பிறகு மாறியது. கம்யூனிஸ்டுகளுடனான ஒத்துழைப்பை இவர் விலக்கிக் கொண்டார். உடனே கம்யூனிஸ்டுகளுக்கும் சியாங்கின் தேசியப் படைகளுக்குமான உள் நாட்டுப் போர் தொடங்கி விட்டது. 1936இல் சீன தேசியப் படையினரின் ஒரு பகுதியினர் இவரைப் பிடித்து வைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளுடனான உள் நாட்டுப் போரை உடனடியாக கைவிடும்படி கட்டாயப் படுத்தினர். அப்போது ஜப்பான் சீனாவின் மீது படையெடுத்தபடியால் அதற்கு எதிராக சீனா ஒன்றுசேர்ந்து ஜப்பானை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தனர். வேறு வழியின்றி, ஜப்பானை எதிர்த்துப் போரிடுவதற்காக தேசிய சீன அரசாங்கம் சியாங் தலைமையில் ஒற்றுமைக்கு சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து சீனாவில் தேசிய கோமிண்டாங்குக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் இந்த ஒற்றுமை 1940 வரைதான் நீடித்தது. உலகப் போர் தொடங்கி ஐரோப்பாவில் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சீனாவில் மறுபடியும் தேசிய கோமிண்டாங்குகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் வடமேற்கு மாகாணத்தில் மோதல்கள் ஏற்பட்டுவிட்டன. ஜப்பானிய படைகள் சீனாவின் நான் ஜிங் நகரைக் கைப்பற்றி விட்டமையால் சியாங் தனது தலை நகரையும் சாங்கிங் எனுமிடத்துக்கு மாற்றிக் கொண்டார்.

ஜப்பான் அமெரிக்காவின் பெர்ல் ஹார்பரில் குண்டு வீசித் தாக்கியதன் விளைவாக ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டுவிட்டது. இப்போது ஜப்பானின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சீனா அகில உலக அரசியலில் அச்சு நாடுகளுக்கு எதிரான குழுவில் இடம் பெற்றது. 1943இல் எகிப்தின் கெய்ரோ நகரத்தில் நடந்த சர்வ தேச மகா நாட்டுக்கு சியாங் கேஷேக் சென்றார். அங்கு அவர் அமெர்க்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டனின் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோருடன் பேசினார். பின்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சியாங்கின் உள்நாட்டுக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.


ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய பிறகு, ஹிட்லரின் நாஜிப் படைகளின் அழிவுக்குப் பிறக், உலகப் போர் முடிவடைந்தது. சீனாவில் உள்நாட்டுப் பிரச்சினை மட்டும் முடிவடையாமலே இருந்தது. சியாங் கம்யூனிஸ்டுகளோடு எந்த உடன்பாடும் காணமுடியாமல் இருந்தார். உள்நாட்டுப் போர் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் சீன தேசிய கோமிண்டாங் படைகளுக்கு வெற்றி முகம் காணப்பட்டாலும், பிறகு சீன விவசாய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவின் காரணமாக கம்யூனிஸ்ட் படைகளுக்கு வெற்றிகள் கிடைக்கத் தொடங்கிவிட்டன. மாசேதுங் தலைமையில் வடக்கிலிருந்து கம்யூனிஸ்டுகளின் படைகள் வேகமாக முன்னேறி எல்லா பிரதேசங்களையும் தன்வசமாக்கிக் கொண்டன. அந்த கம்யூனிஸ்ட் படையெடுப்பு மாவோவின் கிரேட் மார்ச் என்று கூறப்பட்டது. தைவான் நாட்டில் கோமிண்டாங் நன்கு வலுப்பெற்று விளங்கியது. சியாங்கின் சர்வாதிகார ஆட்சி அங்கு வல்லமை பெற்று இருந்தது. தைவானில் இருந்து கொண்டு சியாங் கேஷேக் சீன நாட்டை மீண்டும் கைப்பற்றிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையில் அவர் சீன நாட்டின் மீது அவ்வப்போது சிறு சிறு தாக்குதல்களையும் நடத்தி வந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் சீனா எனும் நாட்டுக்கு சியாங்கின் தேசிய கோமிண்டாங் அரசுதான் அங்கம் வகித்து வந்தது. அதுவும் கைநழுவிப் போய் கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அங்கு இடம் கிடைத்துவிட்டது. இவற்றால் எல்லாம் மனம் உடைந்த சியாங் கேஷேக் 1975 ஏப்ரில் 5இல் தைவான் நாட்டில் மருத்துவ மனையில் இறந்து போனார்.

Tuesday, October 2, 2012

திடீர் போரட்டங்கள்

திடீர் போரட்டங்கள்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், இந்திய குடிமக்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த ரெளலட் சட்டம் போன்ற கடுமையான வாய்ப்பூட்டுச் சட்டங்களுக்கு இந்திய ஜனநாயக அமைப்பில் இடமில்லை என்றாலும், அதுபோன்ற கடுமையான சட்டங்களை சில சந்தர்ப்பங்களில் நடைமுறை படுத்தப்பட்டன. குறிப்பாக நெருக்கடி நிலை காலத்திலும், அகில இந்திய அளவில் நடந்த பெரிய போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற காலகட்டங்களிலும், அன்னிய படையெடுப்பு காலத்திலும் சில அவசரச் சட்டங்கள், பொடா போன்ற சட்டங்களும் அமல் படுத்தப்பட்டாலும், பெரும்பாலும் சகல உரிமைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற ஒரு ஜனநாயக அமைப்பு நம்முடையது. அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு ஏராளமான உரிமைகளைக் கொடுத்திருந்த போதும், நமது கடமைகள் என்பதில் மிகச் சிலவே எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான கடமையாகக் கருதப்படுவது வரி செலுத்துதல், தேர்தல்களில் வாக்களித்தல் போன்றவை மட்டுமே.

சமீபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்ன கருத்து ஆராயத் தகுந்தது. அவர் சொல்கிறார் "அரசுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, எதிர்ப்பைக் காட்டிய காலம் மாறிப்போய், தங்களுடைய எதிர்ப்பையும், வீரத்தையும் காட்ட, சாலைகளில் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தும் மக்கள் கூட்டம் பெருகி விட்டது". "ஐயாயிரம் மக்களை வெறும் ஐநூறு போலீசார் அடக்க நினைக்கும் முயற்சியில் போலீசாருக்குக் கிடைப்பது அடி, உதை மட்டுமே. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, குடிநீர் பிரச்சினை என போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், போலீசாரை உயர் அதிகாரிகள் பகல் இரவு பாராமல் கசக்கிப் பிழிகின்றனர்" என்கிறார் அவர்.

எல்லா அரசாங்க அதிகாரிகளைப் போலத் தங்கள் கடமையைச் செய்யும் போலீசாருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருக்கிறது. இவர்கள் தங்கள் உரிமைகளுக்காகச் சங்கம் அமைத்துக் கொள்ளவோ, போராடவோ கூடாது என்கிறது பணி சட்ட விதி முறைகள். அதனால்தான் காவல்துறைக்கு என்று மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இவர்கள் பிரச்சினைகளை மட்டும் தனியாக விவாதித்து, இவர்களது உரிமைகள், சலுகைகள் இவைகளை கவனித்துக் கொள்ளும் கடமை சட்ட மன்றத்துக்கு இருக்கிறது. மக்களின் பாதுகாவலர்களான இவர்கள் தாக்கப்பட்டால், உயிரிழந்தால் அந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது.

இந்த உரிமைகள் நமக்குத் தாராளமாக வழங்கப்பட்டிருப்பதாலேயோ என்னவோ, இப்போதெல்லாம் தினமும் செய்திகளில் ஆங்காங்கே நடக்கும் மக்களுடைய திடீர் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுகின்றன. முன்பெல்லாம் பொதுமக்களை பெருமளவில் பாதிக்கும் சில பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகள், அல்லது தொழிற்சங்கங்கள், குறிப்பிட்ட குழுவினர் போன்றவை ஒன்று சேர்ந்து போராட்டங்களை அறிவிப்பார்கள். முறையான அறிவிப்புக் கொடுத்து, நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுப்பார்கள். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தம், அல்லது பந்த் போன்ற காலங்களில் மக்களின் சகஜ வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டாலும், அத்யாவசிய தேவைகளுக்கு மருத்துவ மனைகளின் செயல்பாடு, பால்வண்டிகளை அனுமதித்தல் போன்றவற்றிற்கு பந்திலிருந்து விதிவிலக்கு அளித்து விடுவார்கள்; அதனால் வேலைகள் ஸ்தம்பித்துப் போய்விடுவதில்லை.

காலம் போகப் போக, இப்போதெல்லாம் தினசரி ஆங்காங்கே நடைபெறும் திடீர் போராட்டங்களைப் பார்த்தால், இவைகள் எல்லாம் ஒருங்கிணைந்த, பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடத்தப்படும் போராட்டங்களாகத் தெரியவில்லை. ஒரு சில இடங்களில் அங்குள்ள மக்களின் அன்றாடத் தேவைகள் கிடைக்கவில்லை, அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதாலும் இதுபோன்ற போராட்டங்கள் நடக்கின்றன. மாறாக வாழ்வில் ஏற்படக்கூடிய சர்வ சாதாரணமான இடையூறுகள், எதிர் பாராமல் நடந்துவிட்ட நிகழ்ச்சிகள் இவைகளுக்கு எதிர்ப்பு என்கிற வகையிலும் போராட்டங்கள் தொடங்கிவிடுகின்றன.

ஒரு பகுதியில் குடிநீர் சப்ளை இல்லை என்பதற்காக மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் என்றொரு செய்தி வருகிறது. குடிநீர் சப்ளை இல்லை என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நம் நாட்டில் பெரும்பாலும் நல்ல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது என்பது அரிதாக இருக்கிறது. பல காரணங்களால் இப்போது இருக்கும் ஏற்பாடுகள் சில நேரங்களில் செயலிழந்து விடுகின்றன. அவற்றை மீண்டும் நல்ல முறையில் செயல்பட யாரிடம் முறையிட்டு, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்பதை தீர்க்க ஆலோசிக்காமல், உணர்ச்சிவசப்பட்டு உடனே நடுச் சாலையில் அமர்ந்து தர்ணா பண்ணுவது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகப் போய்விட்டதொன்று.

மின் பற்றாக்குறை என்பது இப்போதெல்லாம் கைக்குழந்தைகளுக்குக்கூட தெரியும். மின் உற்பத்தியில் குறைவு, எதிர்பாராத பழுது, காற்றாலையில் மின் உற்பத்தி இல்லை போன்ற எத்தனையோ வகை காரணங்களால் இதுபோன்ற அசாதாரணமான நிலை ஏற்படுகிறது. இதனால் சிறு தொழில்களும், மருத்துவ மனைகளும், அலுவலகங்களும் மட்டுமல்லாமல் பொது ஜனங்கள் அனைவரும் பாதிக்கத்தான் படுகிறார்கள். இதற்கு மாற்று என்ன? எங்கோ ஒரு சில இடங்களில் சாலை மறியல் செய்வதால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா? முறையாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள் மூலம் இவைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமே யன்றி, திடீர் போராட்டங்களால், மின்சாரமும் உடனடியாகக் கிடைக்கப் போவதில்லை, நம் அவதி மேலும் அதிகரிக்கவும் கூடும்.

ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி, உடல் நிலை மோசமடைந்த காரணத்தாலும் இறந்து போகலாம். அல்லது சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு அதனாலும் ஏற்பட்டிருக்கலாம், எங்கோ எப்போதோ ஓரிரு இடங்களில் தவறான மருத்துவ சிகிச்சை போன்ற தவறுகளாலும் நடந்திருக்கலாம். நோயாளியின் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு அந்த நோயாளியின் இறப்பு தாங்க முடியாத சோகத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கலாம். இறப்பு நேர்ந்து விட்டது என்று தெரிந்த பின் என்னதான் சாலை மறியல் செய்தாலும் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை. இதில் அலட்சியமாக இருந்தவர்கள், தவறான சிகிச்சை கொடுத்தவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கைதான் எடுக்கலாமே தவிர உயிர் இழந்தவர் பிழைக்கப் போவதில்லை. அப்படி ஒரு உயிர் போய்விட்டது என்பதற்காக நிர்வாகத்தை, அரசாங்கத்தைக் கண்டித்து உடனே சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டால், அப்படி மறித்ததால்கூட மேலும் சில உயிர்கள் போக நேர்ந்து விடலாமே. செத்துப்போனவர் உடலை வாங்க மறுத்தும் ஒரு போராட்டம். அப்படி அந்தப் பிணத்தை வாங்காமல் இருப்பதால் யாருக்கு இழப்பு ஏற்படுகிறது. நம் உறவினர் உடலை வாங்காமல் போட்டுவிட்டுப் போய்விட்டால், வாழ்நாள் முழுவதும் நாம்தான் வருந்த நேரிடும். எப்படி இருந்தாலும் உறவினர் அந்த உடலை மீண்டும் வாங்கி சமஸ்காரம் செய்துவிடுவார்களே தவிர, அப்படியே போட்டு விட்டுப் போய்விட்டதாக இதுவரை செய்திகள் வந்ததில்லை.

பாம்பு கடித்தவுடன் முதலுதவி செய்து உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றால், அதற்கான சிகிச்சைகளை செய்து பாம்பு கடித்தவரை பிழைக்கச் செய்ய முடியும். என்ன காரணங்களுக்காகவோ, மந்திரம், மாயம், வேப்பிலை அடித்தல் போன்றவற்றையெல்லாம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்று கடைசி நேரத்தில் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து போட்டுவிட்டு, அவர் இறந்து விட்டார் என்றதும், ஆத்திரப்பட்டு மருத்துவ மனையை சேதப்படுத்துவதும், மருத்துவர்களைத் தாக்குவதும், மருத்துவர்களைக் கண்டித்து மறியல் செய்வதும் எந்த விதத்தில் நியாயம் என்பதை நியாய உணர்வு உள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கேரளத்திலிருந்து ராஜஸ்தான் போகும் விரைவு ரயில் வண்டி கேரளத்திலிருந்து கிளம்பி வந்து கொண்டிருக்கிறது. கேரளத்திலுள்ள ஒரு கிராமப் பகுதியில் ஆள் இல்லாத ரயில்வே கேட் பகுதிக்கு அந்த ரயில் வந்து கொண்டிருந்த போது ஒரு கார் அந்த லெவல் கிராசிங்கை கடக்க முயல்கிறது. அங்கு கேட்டை மூடத்தான் ஆள் கிடையாதே. ரயில் வருகிறதா என்று இரு புறமும் பார்த்துவிட்டு, இப்போது ரயில் தண்டவாளங்களைத் தாண்டினால் ஆபத்து இல்லை என்று உறுதி செய்து கொண்டுதான் கார் அந்த கேட்டைத் தாண்டியிருக்க வேண்டும். இதுகுறித்து அந்த கேட் அருகில் அறிவிப்புப் பலைகைகளும் வைத்திருக்கிறார்கள். என்றாலும் இவை ஒன்றையும் கடைப்பிடிக்காமல் ஐந்து பேரை ஏற்றிக் கொண்டு ஒரு கார் லெவல் கிராசிங்கைக் கடக்கிறது. அப்போது வேகமாக வந்து ரயில் அந்தக் காரின் மீது மோதுகிறது. அதில் ஐந்து பேர் அங்கேயே உயிர் இழக்கிறார்கள். இதில் தவறு யாருடையது? இங்கு என்ன நடந்தது தெரியுமா? பொதுமக்கள் ரயில் மீது தாக்குதல் தொடுத்து இருக்கிறார்கள். சாலை மறியல் செய்து போராடியிருக்கிறார்கள். தவறு செய்தவர் அந்த காரின் ஓட்டுனர்; அப்படியிருக்க ரயிலைத் தாக்குவதும், ரயில்வேயைக் குறை சொல்வதும் எப்படி நியாயம். ஒன்று வேண்டுமானால் செய்யலாம், அந்த ஆளில்லாத ரயில்வே கேட்டுக்கு ஒரு கேட் கீப்பர் நியமனம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கலாம்.

ரயில்வே சட்டத்தின்படி ரயிலில் அடிபட்டு ஒரு மாடு இறந்து போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மாட்டின் இறப்புக்காக மாட்டின் உரிமையாளர் நஷ்ட ஈடு கோர முடியாது. மாறாக ரயில்வே லயனில் அலட்சியமாக மாடுகளை மேயவிட்ட மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு தொடர்ந்து அபராதம் விதிக்க இடமிருக்கிறது. இதனை மக்கள் புரிந்து கொண்டுதான் நடந்து கொள்கிறார்களா தெரியவில்லை. ஒரு உயிர் போகிறது என்றால் எல்லோருக்கும் வருத்தம் தான். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், நாம் கவனமாக இருக்க வேண்டிய இடத்தில் கவனமின்றி இருந்துவிட்டு, குற்றத்தை எதிராளி மீது சுமத்தி நாம் நஷ்ட ஈடு கேட்பது எந்த விதத்தில் நியாயமானது?

அந்தந்த கிராமம், அல்லது நகராட்சிகளில் குடிதண்ணீர் விநியோகம் செய்வது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு. அந்த விவகாரத்தை அகில இந்திய பிரச்சினையாக்கி சாலை மறியல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பொதுமக்களை, மாணவர்களை, உடல் நலம் இல்லாதவர்களை, அவசரமான காரியங்களுக்குச் சென்று கொண்டிருப்பவர்களை மறிப்பது என்ற உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்திருக்கிறார்கள்?

ஒரு முறை பந்த் நடந்து கொண்டிருந்தது. எப்போதும் போல அரசு விடுமுறை எதுவும் Negotiable Instruments Act படி விடப்படவும் இல்லை. அரசாங்க அலுவலகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அலுவலகம் செல்வதற்காக ஒரு பேருந்தில் ஒரு பெரு நகரத்துக்குள் நுழைகின்ற சமயம், எதிரில் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்புறம் ஒரு பதினைந்து பதினாறு வயது பையனை வைத்துக் கொண்டு எதிரில் வருகிறார். பஸ் நிறுத்தப்படுகிறது. அந்த பையன் ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்து பஸ் ஓட்டியின் எதிரில் கண்ணாடி மீது வீசி எறிகிறான். அருகில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீஸ் காவலர் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறார். இந்தப் பையன் பஸ்ஸை உடைத்துவிட்டு, அவசரமில்லாமல் அந்த மோட்டர் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து கொண்டு போய்விடுகிறான். என்ன சாதனை இது? அந்த பந்துக்கு அழைப்பு விடுத்தது ஒரு பெரிய கட்சி; அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் அந்த கட்சிக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார். வந்தவர் ஒருவர், குற்றம் இழைத்தது ஒரு சிறுவன் என்கிறபோதும் காவல்துறை வேடிக்கை பார்த்தது என்றால் அதற்கு யார் காரணம்? சொல்லியா தெரிய வேண்டும். இதுபோன்றவற்றை அரசியல் கட்சிக்காரர்கள் தூண்டிவிடலாமா?

முன்பெல்லாம் சாலைகளில் மோட்டார் வண்டிகள் மிகக் குறைவு, மாட்டு வண்டிகள், பின்னர் குதிரை வண்டிகள், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகனங்கள் ஓரளவும், நடந்து செல்வோர் மிகுந்தும் காணப்படுவார்கள். இன்று அப்படியே மாறி, கார், லாரி, பஸ், மினி லாரி, மணல் லாரிகள் என்று சாலைகளை அடைத்துக் கொண்டு இருபத்தி நான்கு மணி நேரமும் போய்க்கொண்டிருக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்கள் பெருத்து ஏராளமான பேர் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொப்பெட் என்று சவாரி செய்கிறார்கள். ஓரிடத்தில் சாலையைக் கடக்க மணிக்கணக்காககூட ஆகும். சாலை விதிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைக் காப்பதற்காக காவலர்களும் அதற்கென்றே போலீசில் ஒரு பிரிவும் இருந்தும், நம்மில் பலரும் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ஒழுங்கு கட்டுப்பாட்டை காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம்.

நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. நான்கைந்து பாதைகளாகப் பிரிக்கப்பட்டு வாகனங்கள் தேங்கிவிடாமல் அவை உடனுக்குடன் சுங்கத் தொகை வசூலித்து அனுப்பிவிடுகின்றன. ஒரு பஸ் மற்றொரு வண்டியைத் தொடர்ந்து சுங்கச்சாவடி லேனில் வந்து கொண்டிருக்கிறது. முந்திச் செல்லும் வண்டி மீது மோதிவிடாமல் பஸ் சற்று இடைவெளிவிட்டுப் பின்னால் வருகிறது. அதற்குள் ஒரு காரோட்டி தனது காரை முன்னால் செல்லும் வண்டிக்கும் பின்னால் வரும் பஸ்சுக்கும் இடைவெளியில் புகுந்து போய் முந்தி நிற்கிறார். அந்த நேரம் பார்த்து பஸ் ஓட்டுனர் பஸ்சை வேகமெடுத்திருந்தால் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியிருக்கும், உள்ளே இருந்தவர்கள் பரலோகம் போயிருப்பார்கள். உடனே மக்கள் சாலை மறியல் செய்திருப்பார்கள். முன்னால் செல்லும் பஸ் சென்ற பிறகு வரிசைப்படி சென்றால் என்ன? இந்தக் கார்க்காரரின் செயல் நியாயமானதா? இதெல்லாம் யாரால் நேருகிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எல்லா பொறுப்புகளுக்கும் அரசாங்கம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும், பொதுமக்களாகிய நமக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்ற வகையில் நாம் வளர்க்கப்பட்டு விட்டோம். அதனால் விளையும் தீமைகள்தான் மேலே சொன்ன நிகழ்வுகள் அத்தனையும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் கல்வி அறிவு பெற்றோர் இருபது சதவீதத்திற்கும் குறைவுதான். அறியாமையில் இருந்தவர்கள் எண்பது சதவீதம் பேர். இன்று அப்படியே மாறி கல்வி அறிவு பெற்றவர்கள் தொகை எண்பது சதவீதத்திற்கும் மேல் இருந்த நிலையிலும், பொறுப்புணர்வும், புரிதலும், சகிப்புத் தன்மையும் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதைப் பொறுப்புள்ளவர்கள் கண்டுபிடித்து அதற்கு சரியான மாற்றைச் சொல்ல வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம். மகாத்மா காந்தி பயந்தது போல சுதந்திரத்தைப் பெற்று அதனை முறையாக நிர்வகிக்கும் தகுதி இந்திய மக்களுக்கு வருவதற்கு முன்பு சுதந்திரம் கிடைக்கிறதே இதனை இவர்கள் சரியாக நிர்வகிக்க வேண்டுமே என்று கவலைப் பட்டாரே; அது எத்தனை உண்மை என்பதை நாமெல்லாம் உணரவேண்டும். சட்டங்களும் விதி முறைகளும் நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறர் உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ளவுமே தவிர, அவை உடனுக்குடன் மீறப்படுவதற்காக இல்லை என்பதை, குறிப்பாக படித்தவர்கள், வேகமாகச் செல்லும் வாகனங்களை உபயோகிப்பவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

Monday, October 1, 2012

அண்ணலே எங்கள் ஆருயிரே!

2-10-2012

இன்று காந்தி ஜயந்தி. மகாத்மா பிறந்த நாளான இன்று, கடந்த ஒரு வார காலமாக எழுதிவந்த மகாத்மா பற்றிய கட்டுரை  திரு ஆலாசியம் எழுதிய கவிதையுடன் நிறைவு பெறுகிறது.

அண்ணலே எங்கள் ஆருயிரே!
ஆன்மீகச் செம்மலே அனைத்துயிரும் 
இன்பம் பெறவேண்டிய; உமக்கு 
ஈடிணையில்லை, கருணைப் பெருங்கடலே! 
உண்மையான வாழ்வதை வாழ்ந்து 
ஊருக்கு உழைத்த உத்தமரே!

எளிமையின் சிகரமான நீவீரே! 
ஏழைகளின் வாழ்விற்கு ஒளிவிளக்கே! 
ஐம்புலனும் அடக்கி அண்டம்படைத்த 
ஒப்பில்லானை ஒருபோதும் மறவாது
ஓதியுணர்வாயுனை அதுவே மனிதவாழ்வின் 
ஒளடதமான உண்மை பேறு
அஃதே உயிரின் லட்சியமென்றும்...

கல்லாமை, களவு கொல்லாமை
கடுஞ்சொல் சொல்லாமை 
பொல்லாத மது கொள்ளாமை 
பொய்யரை புண்பட வையாமை
புலையரோடு போல்லாதவரையும் 
போருக்கு வரும் மூர்க்கரையும் வெஃகாமை...

தீண்டாமை வேண்டாமே அத்தீதுறு
தீயினும் கொடியதே அதை 
தெய்வமும் மன்னிக்காது அதனாலே
அரியின் புதல்வர்கள் அவரே 
நமது சகோதரர்கள் என்றெண்ணி
சரிநிகர் சமானமாய் வாழ்வதே
சரியான வாழும்முறை யென்றே
வாழும் யாவருக்கும் பறைசாற்றி 
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தீரே!

எதிரி என்பதேது அஹிம்சைக்கு
இரங்கா இதயமது ஏது?
உண்மை ஒருபோதும் சாகாது அதனாலே 
உண்மைக்காக உண்மையாய் உறுதியோடு 
உழைப்பீரே என்றே உலகம் 
உய்ய உயர்வழி கூரிய
உத்தமரே உமது உன்னத 
கொள்கையை உலகம் மறந்திடுமோ?
இனியும் அணுவாயுதம் வேண்டிடுமோ?

எறும்புக்கும் இரங்கிய ஏந்தலே!
உந்தன் இதயம் துளைத்த 
அந்த குண்டும் அல்லவா 
கதறி அழுது இருக்கும்...
ஆட்டுக்கு பரிந்துப்பேசிய ஐயரே!
ஐயகோ உம்மையும் காவுகொடுக்க
எத்தனைக் கொடிய மனமிருக்கணும்?

மகாத்மாவே உம்மைத் தாங்கிய
அந்த உடலிலிருந்து சிதறிய 
ஒவ்வொரு துளி குருதியும் 
ஒவ்வொரு மகாத்மாவாக இப்புவியில்
அவதரிக்காதோ என்ற நம்பிக்கையிலே 
உமது பிறந்தநாளை இங்கே
உலக அகிம்சை தினமாக
கொண்டாடும் எங்களை ஆசீர்வதிப்பீர்! 

இந்த அண்டம் உள்ளவரை 
அண்ணலே உமது நினைவும்
அவதார நோக்கமான அஹிம்சையும்
எங்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும்.

ஆலாசியம்