பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 27, 2017

தாத்தா வேலைக்குப் போன கதை.

 வரலாற்றுச் சிறுகதை. (யார் வரலாறு?)

தாத்தா எனக்கு ஒரு கதை சொல்லு” என்று படுக்கையில் படுத்துக் கொண்டு கேட்டான் என் பேரப் பிள்ளை.

      “நேரம் ஆச்சு தூங்குவியா, கதை கேட்டுகிட்டு, நாளைக்குச் சொல்றேன் இப்போ தூங்கு” என்று என் அதிகாரத்தைச் செலுத்தினேன்.

      “அதெல்லாம் வேணாம், நீ கதையச் சொல்லு, நல்லா இருந்தா கேட்டுவிட்டு அப்புறமா தூங்கறேன், நீ ‘போர்’ அடிச்சியானா நீ சொல்லாமலே நான் தூங்கிடுவேன் என்று இரு தரப்பு ஒப்பந்தம் போட்டான்.

      சரி வேறு வழி? அவன் வழிக்குப் போனால்தான் காரியம் நடக்கும் என்பதால் நானும் சொல்ல ஆரம்பித்தேன். சொல்வது என்றால் எந்த கதையைச் சொல்வது, எனக்கு என்ன கதை தெரியும். பார்த்தேன், இதற்கு ஒரே வழி நம்ம கதையை அவிழ்த்து விட்டால் அவனுக்கு என்ன தெரியவா போகிறது என்று என் சொந்தக் கதையை அவனுக்குச் சொல்ல ஆரம்பித்தேன். அவனும் ஆவலோடு ‘ஊம்’ கொட்ட தயாராகி என் அருகில் வந்து படுத்துக் கொண்டான்.

      சொந்தக் கதையானாலும், அதை எங்கேயிருந்து தொடங்குவது, எங்கே முடிப்பது. சொல்லும் கதை சுவாரசியமாக இல்லாமல் போனால் அவனை எப்படி சமாதானப் படுத்துவது என்ற கவலை எனக்கு. சரி! வந்தது வரட்டுமென்று சொந்த கதை, நான் வெந்த கதையை எடுத்து விட ஆரம்பித்தேன்.

      “குழந்தே! அது 1955ஆம் வருஷம், நான் அப்போது இன்டர்மீடியட் படித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ரொம்ப நாட்கள் இல்லை, சும்மா ஒரு சில மாசங்கள்தான் அப்படி சும்மா இருந்தேன். எதிர் வீட்டில் எனக்கு ஒரு நண்பன், அவன் அப்பா அந்த ஊரில் இருந்த ஒரு மாநில அரசு அலுவலகத்தில் மேனேஜர். ஒரு நாள் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார், போனேன் அவர் என்னை “இப்போ என்னடா பண்ணிண்டிருக்காய்?” என்றார்.

      “சும்மா டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் வகுப்புக்கு போய் வரேன்” என்றேன்.
      “சரி எங்க ஆபீசுல உன்னை 10(a)(1) என்கிற தற்காலிக பணியிலே சேத்துக்கறேன் வந்து வேலை செய்யறியா?” என்றார்.

      கரும்பு தின்ன கூலியா, உடனே தலையை அங்கும் இங்குமா வேகமா ஆட்டினேன். அவர் கேட்டார், “ஏண்டா! உனக்கு கையெழுத்து நல்லா இருக்குமா? கோழிக் கிறுக்கலா இருக்குமா?” என்றார்.

      என் கையெழுத்து மணிமணியாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள். அப்படிப்பட்ட என்னைப் பார்த்து அவர் என்ன கேள்வி கேட்டு விட்டார். இருந்தாலும் எனக்கு வேலை தரப்போகிறவர் இல்லையா? அதனால் அவரிடம் மிகவும் பணிவாக “என் எழுத்து நல்லா இருக்கும் சார்” என்றேன்.

      “சரி நாளைக்கே நீ என் ஆபீசுல வந்து பாரு, அப்பவே வேலைக்கு சேர்ந்துக்கற மாதிரி வந்துடு. வீட்டுல சொல்லிட்டு வா” என்றார். எனக்கு “லட்டு தின்ன ஆசையா என்று கேட்கிற விளம்பரம் போல அவர் கேட்டது ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விட்டேன். முதன் முதலாக எனக்கு ஒரு வேலை, அதிலும் ஒரு கவர்ன்மெண்ட் ஆபீசில் வேலை. அது சரி, அது என்ன 10(a)(1).  உடனே அவர் மகனும் என் நண்பனுமான பார்த்தசாரதியிடம் வாசலுக்கு வந்தவுடன் கேட்டேன், “டேய், அது என்னடா 10(a)(1)? அவன் சொன்னான் அது ஒன்றுமில்லைடா, இந்த வேலை தற்காலிகமானது, எப்போது வேணுமானாலும் வீட்டுக்கு அனுப்பிவிடுவாங்க, ஆனால் சம்பளமெல்லாம் நிரந்தர ஊழியர்களுக்கு உள்ளது போலத்தான் என்று விளக்கினான்.

      விஷயத்தை வீட்டில் போய் சொன்னேன். அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே என் அக்கா ஒரு ஸ்பூனில் சர்க்கரையைக் கொண்டு வந்து என் வாயில் போட்டு மகிழ்ச்சி தெரிவித்தாள். பின்னே என்ன ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸா வாங்கித் தர முடியும்?

      மறுநாள் முதல் அந்த ஆபீசுக்குப் போகத் தொடங்கினேன். அங்கே அப்போது ஒரு எழுத்தாளரா, அரசியல் தலைவரா, தொழிற்சங்கத் தலைவரா, தமிழறிஞரா, ஏதோ இவை அத்தனையும் ஒருங்கிணைந்த ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை, இனிமையான பேச்சு, அனைவரிடம் அன்பு பாராட்டும் குணம். எனக்கு அவரைப் பிடித்துப் போய்விட்டது. அவர் தந்தை ஒரு தமிழ் பண்டிதராம். கடிகாரத்தை “மணிப்பொறி” என்பார். இவரும் பிற்காலத்தில் மாநில அளவில் ஒரு தொழிற்சங்கத் தலைவராக ஆனார், அந்த நிலைமையிலும் அவரை நான் எங்கு கண்டாலும் அன்போடு விசாரிக்கும் பண்பாளர். பாவம் அவர் ஓய்வு பெற்ற ஒரு சில காலத்திற்குள் இறந்து போய்விட்டார்.

      இந்த தற்காலிக பணிக்குச் செல்வதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணம் அரசு கல்லூரியில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனும் அமைப்பு நடத்திய ஒரு தேர்வு அரசுத் துறைகளில் எழுத்தர் பணிக்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட அந்தத் தேர்வை நான் எழுதிவிட்டு வந்திருந்தேன். எங்கள் ஊரில் என்னைப் போல இன்னும் பல இளைஞர்கள் அந்தத் தேர்வை எழுதினார்கள்.

      ஓரிரு மாதங்கள் அந்த தற்காலிக பணியில் இருந்த நான் ஒரு நாள் காலை அலுவலகம் செல்ல வாசலுக்கு வந்தேன். அப்போது தபால்காரர் என் பெயரைச் சொல்லி, “தம்பி! உனக்கு ஒரு ரிஜிஸ்டர் பார்சல் இருக்குப்பா, கையெழுத்து போட்டு வாங்கிக்கோ” என்றார்.

      அந்த ரிஜிஸ்தர் தபாலை வாங்கினேன். அது சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்திலிருந்து என் பெயருக்கு வந்திருந்தது. எனக்குள் ஒரு இன்ப மின் அதிர்ச்சி. ஆகா, நமக்கு சர்வீஸ் கமிஷன் வேலை வந்துவிட்டது. இனி எனக்கு மேலே ஆகாயம் கீழே பூமி, எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மகிழ்ச்சியில் அந்த உறையைப் பிரித்தேன்.
      அதனுள் என்னுடைய சான்றிதழ்கள் எல்லாம் சுற்றி நூலால் கட்டி எனக்குத் திரும்ப அனுப்பப் பட்டிருந்தது. எனக்கு வேலைக்கான ஆர்டர் அதில் எங்காவது இருக்கிறதா என்று புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். வேறு எந்தக் காகிதமும் அதனுள் இல்லை. மனம் ஒடிந்து போனது, நம்பிக்கை இழந்து போனது, மனம் வெறுமையானது. போச்சு, இந்த வருஷம் போச்சு, இனி அடுத்த வருஷம் இதே தேர்வை எழுதித்தான் வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும், அதுவரை இதே 10(a)(1) வேலைதான். கண்களில் கண்ணீர் பொங்கிக் கொண்டிருந்தது, மனம் கனத்தது, உடல் சோர்வடைந்தது. இதை வீட்டில் போய் எப்படிச் சொல்வது? நடப்பது நடக்கட்டும் என்று கவரைக் கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டு தற்காலிக பணிக்கு நடையைக் கட்டினேன்.

      ஒரு வாரகாலம் ஆகியிருக்கும். முந்தைய நிகழ்ச்சியைப் போலவே ஒரு நாள் தபால்காரர் என்னை வழிமறித்து, “தம்பி! உனக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால், வாங்கிக்கோ” என்றார். இது என்னடா புது கரடி என்று கையெழுத்துப் போட்டு அந்தக் கவரை வாங்கினேன். அதுவும் அதே பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்திலிருந்துதான் வந்திருந்தது. ஆர்வம் தாங்கவில்லை, மனம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. கவரைக் கோணல் மாணலாகக் கிழித்து உள்ளே இருக்கும் கடிதத்தை வெளியே எடுத்துப் படித்தேன்.

      அதில் நான் போலீஸ் இலாகாவுக்கு திருச்சியிலுள்ள மத்திய ரேஞ்சு டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு ஒதுக்கி யிருப்பதாகக் கண்டிருந்தது. நான் அப்போது அடைந்த நிலைமையை என்னவென்று சொல்வது. என் கால்கள் தரையில் படவில்லை. ஆகாயத்துக்கு எட்டித் தாண்டி வாயு மண்டலத்தையும் தாண்டி மீண்டும் பூமிக்கு வந்து காலடி வைத்தேன். வாயெல்லாம் சிரிப்பு, மனமெல்லாம் சிலிர்ப்பு, ஓடிப்போய் அக்காவிடம் போய் சொன்னேன், “எனக்கு போலீசில் வேலை வந்துவிட்டது ஆர்டர் இதோ” என்றேன்.

      பாவம் எனக்கும் ஒரு காலம் வரும், நானும் ஒரு வேலைக்குப் போய் சம்பாதித்தால் குடும்பம் நன்றாக இருக்குமென்றெல்லாம் கனவு கண்டவள் அக்கா. அவள் வீட்டினுள் ஓடிப்போய் சுவாமி அலமாரியில் விளக்கை ஏற்றி விழுந்து விழுந்து கும்பிடத் தொடங்கினாள். நான் அதற்குள் இந்தத் தகவலை வழியில் கண்டவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டே அலுவலகம் சென்றேன்.

      இன்னும் சில நாட்களில் திருச்சி டி.ஐ.ஜி.அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வரும் போகலாம் என்று ஆவலோடு ஒவ்வொரு நாளும் தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். டி.ஐ.ஜி. ஆபீஸ் என்றால், பெரிய அதிகாரியின் அலுவலகம், அங்கு வேலை பார்த்தால் நமக்கும் நல்ல மரியாதை மதிப்பு எல்லாம் இருக்கும் என்றெல்லாம் உறக்கத்திலும், விழிப்பிலும் ஒரே கனவுதான்.

      எதிர்பார்த்தபடி ஒரு வாரம் கழித்து இன்னொரு கடிதம். இது ரிஜிஸ்தர் தபால் அல்ல. ஒரு பழுப்பு காகிதத்தில் டைப் செய்து அதையே மடித்து அந்த மடிப்பின் மீது அரசாங்க ஸ்டாம்ப் ஒட்டி என் விலாசத்துக்கு வந்திருந்தது. அந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அதன் மீதிருந்த ரப்பர் ஸ்டாம்ப், அது டெஸ்பாச் கிளார்க், கவர்ன்மெண்ட் ரயில்வே போலீஸ் அலுவலகம், கன்டோன்மெண்ட், திருச்சி என்றிருந்தது. அடடா, அப்போ எனக்கு வேலை டி.ஐ.ஜி. ஆபீசில் இல்லையா, இது என்ன ரயில்வே போலீஸ் என்றால் ரயிலுக்குச் சொந்தமா? ஒன்றும் விளங்கவில்லை. எது எப்படியானால் என்ன எனக்கு வேலை கிடைத்துவிட்டது. இனி மாதம் பிறந்தால் சம்பளம், புதுசு புதுசா பேண்ட், சட்டை அக்கா குழந்தைகளுக்கு துணிமணிகள், இனிப்பு எல்லாம் வாங்கிக் கொடுக்கலாம் இப்படி மனம் கணக்குப் போடத் தொடங்கி விட்டது.

      என்னைப் பணிக்கு வந்து சேரச் சொல்லி இருந்ததே தவிர என்று வரவேண்டுமென்று அதில் இல்லை. ஆகையால் என் அக்கா ஒரு நல்ல ஜோசியரிடம் போய் நல்ல நாள் எது, போகும் திசை இவைகளையெல்லாம் சொல்லி நாள் குறித்துக் கொண்டு வந்தாள். அந்த புனித நாளுக்கு முதல் நாள் பிற்பகல் திருச்சிக்குப் புறப்பட்டேன். கையில் ஒரு தகரப் பெட்டி, ஒரு துணிப்பையில் சில காகிதங்கள், வேலைக்கு வந்த ஆர்டர் முதலியன இருந்தன. திருச்சி நகருக்கு அதற்கு முன்பு ஓரிரு முறை மட்டுமே போயிருக்கிறேன். பெரிய ஊர், அங்கு இந்த ஆபீஸ் எங்கே இருக்கும், எப்படி இருக்கும், எங்கே போய் தங்குவது இப்படி பல கவலைகளோடு அன்று மாலை திருச்சிக்கு ரயில் மூலம் ஜங்ஷன் போய்ச்சேர்ந்தேன்.

      ஜங்ஷனுக்கு வெளியே டவுன் பஸ் நின்று கொண்டிருந்தது. அதில் ஜங்ஷன் to மெயின் கார்ட் கேட் என்றிருந்தது. எனக்கு ஒருமுறை அந்த மெயின்கார்ட் கேட்டுக்குப் போன நினைவு வந்தது. அங்கு சிங்காரத்தோப்பு என்றொரு குறுகிய கடைத்தெரு உண்டு. அங்கு தங்குவதற்கு லாட்ஜ் இருப்பதாக நினைப்பு. உடனே டவுன் பஸ் ஏறி சிங்காரத் தோப்புக்குச் சென்று அங்கு திருச்சி லாட்ஜ் என்ற போர்டு இருந்த கட்டடத்தை அடைந்தேன். அங்கு மேஜையில் இருந்தவர் என்னை ஒரு அலட்சிய பாவத்தோடு நோக்கி “என்னப்பா வேணும்?” என்றார்.

      மிகுந்த பயத்துடனும் தயக்கத்துடனும், “எனக்கு இன்று ராத்திரி தங்க ஒரு ரூம் வேணும்” என்றேன்.

      “ எங்கேயிருந்தப்பா வரே!” என்று கேட்டார்,

      “பட்டுக்கோட்டையிலிருந்து வரேன். இங்கே நாளைக்கு நான் வேலைக்குச் சேரப்போறேன். காலையில அந்த ஆபீசுக்குப் போயிடுவேன். இன்னிக்கு ராத்திரி மட்டும் படுத்துத் தூங்க ஒரு ரூம் வேணும்” என்றேன்.

      எந்த ஆபீஸ், என்ன வேலை என்றெல்லாம் என்னைக் குடைந்தெடுத்துவிட்டு ஒரு அழுக்குப் படிந்த ரிஜிஸ்டரை நீட்டி அதில் ஒரு நூலில் கட்டியிருந்த பேனாவால் விவரங்களை எழுதச் சொன்னார். அதன் பிறகு தரைத் தளத்தில் ஒரே கொசுவும், நாற்றமும் கூடிய காற்றோட்டமே இல்லாத ஒரு அறையைத் திறந்து என்னை அங்கே அனுமதித்தார். அங்கிருந்த படுக்கை எத்தனை மாதத்துக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டதோ, ஒரே அழுக்கு, நாற்றம். வேறு வழி. அன்றைய இரவை அந்த லாட்ஜில் கழித்துவிட்டு காலையில் எழுந்து ஏழு மணிக்கே வேலைக்குப் போகத் தயாரானேன்.

      வாசலில் உட்கார்ந்திருந்த நபரிடம் இங்கே ரயில்வே போலீஸ் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்றேன். அவர் உடனே ரயில்வேன்னா அது ஜங்ஷன்லதான் இருக்கும். ஒண்ணாம் நம்பர் பஸ் ஜங்ஷன் போகும், அதுல போ என்று வழி சொன்னார்.

      நான் நடக்கத் தொடங்கினேன். அது கடைத்தெரு. குறுகிய தெரு தாண்டி பெரிய கடைத்தெரு வந்தது. அங்கே இடப்புறம் மலைக்கோட்டை தெரிந்தது. நேரே அங்கே அடிவாரத்துக்குப் போனேன். அங்கிருந்த பிள்ளையாருக்கு மாணிக்க விநாயகர் என்று நாமகரணம். நான் அங்கு போய் அவருக்கு ஒரு தோப்புக்கரணம் போட்டுவிட்டு பிள்ளையாரப்பா இந்த வேலை எனக்கு நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அருகில் இருந்த அம்பீஸ் கஃபே எனும் காப்பி ஓட்டலில் இரண்டு இட்லியும் ஒரு காபியும் சாப்பிட்டுவிட்டு மெயின் கார்டு கேட் எனுமிடத்துக்கு பஸ் ஏறச் சென்றேன்.

      மெயின் கார்டு கேட் தாண்டி மேலப்புலிவார் சாலை என்றொரு தெரு. அங்கு வரிசையாக நகரப் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அந்த பஸ்களில் சில டி.எஸ்.டி. என்றும் சிலவற்றில் டி.வி.எஸ். என்றும் பெயர்கள் இருந்தன. பின்னாளில் நண்பர்கள் இந்தப் பெயரை வேடிக்கையாக டி.எஸ்.டி. என்றால் தள்ளு சார் தள்ளு என்றும், டிவிஎஸ் என்றால் தள்ள வேண்டாம் சார் என்றும் பேசினார்கள். நான் டி.எஸ்.டி.யில் ஏறி உட்கார்ந்து கொண்டு கண்டக்டரிடம் ஜங்ஷன் என்றேன். அவர் அரை ரூபாய்க்கு ஒரு டிக்கெட் கொடுத்தார். பஸ் ஜங்ஷன் போய்ச்சேர்ந்தவுடன்  இறங்கி ஸ்டேஷன் வாசலுக்குப் போனேன். அங்கு இரண்டு நுழைவு வாயில்கள். உயர் வகுப்புகளுக்கென்று ஒன்று இதர வகுப்புகளுக்கு மற்றொன்று. உள்ளே நுழைய பயம். டிக்கெட் பரிசோதகர் பிடித்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது? பயந்து கொண்டு சிறிது நேரம் நுழைவு வாயிலருகில் நின்று கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வெளியில் வந்தார். அவர் தோள்பட்டையில் இருந்த பேட்ஜில் TRP என்றிருந்தது. அப்படியென்றால் திருச்சி ரயில்வே போலீஸ். அப்பாடா, இவருக்குத் தெரிந்திருக்கும் ரயில்வே போலீஸ் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று நினைத்து அவரிடம் போய் ஒரு சல்யூட் அடித்தேன். அவர் தலையை மட்டும் ஆட்டி என்ன என்பது போல் கேட்டார். “சார் இங்கே ரயில்வே போலீஸ் ஆபீஸ் எங்கே இருக்கிறது?” என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு எதுக்குக் கேட்கிறே என்றார்.

      “சார்! எனக்கு அந்த ஆபீசிலே வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு, அங்கே போய் வேலைக்குச் சேரணும் அதான்” என்றேன்.

      அவர் நடவடிக்கையில் திடீரென்று ஒரு மாறுதல். முகத்தில் ஒரு மலர்ச்சி. “அப்படியா? இங்கே ஸ்டேஷன் பிளாட்பாரத்துல இருக்கறது ரயில்வே போலீஸ் ஸ்டேஷன். அதோ ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு ரவுண்ட் டானா இருக்குதுல்ல, அதைத் தாண்டி போனா செல்வம் ஓட்டல்னு ஒண்ணு இருக்கும். அதை ஒட்டி ஒரு சந்து இருக்கும், அது வழியா போனா உள்ளே ஒரு பெரிய கட்டடம் இருக்கும், அதுதான் ரயில்வே போலீஸ் ஆபீஸ்” என்றார்.

      அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். ரவுண்ட் டாணாவைச் சுற்றி பெட்டிக் கடைகள். அவற்றைக் காக்கா கடை என்பார்கள். மலபாரைச் சேர்ந்த காக்கா என்பவர்கள் நடத்திய கடை எனப் பிறகு தெரிந்து கொண்டேன். அதைத் தாண்டி செல்வம் ஓட்டல் என்றொரு பலகை தெரிந்தது. அதன் அருகில் ஒரு சந்து அதனுள் நுழைந்து நூறடி போனபின் உள்ளே பெரிய திறந்த வெளி ஆங்காங்கே சில மரங்கள் அவற்றின் நடுவில் பழைய கால ஆங்கிலேயர்கள் கட்டிய சுண்ணாம்பு மாடிக் கட்டடம் இருந்தது. மெல்ல அதன் அருகில் சென்றேன். கட்டடத்தின் வாயிலில் ஒரு போலீஸ்காரர் கையில் கத்தி சொருகிய துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். எனக்குப் பயம். எப்படிப் போவது. அப்போது ஒருவர் சைக்கிளில் அங்கு வந்து கட்டடத்தின் அருகில் இருந்த ஒரு கொட்டகையில் தன் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கையில் பையுடன் அந்த ஆபீசினுள் நுழையவிருந்தார். நான் ஓடிப்போய் சார்! சார்! என்று கும்பிட்டேன். அவர் என்னப்பா நீ யாரு என்றார். நான் விஷயத்தைச் சொன்னவுடன் அப்படியா சரி வா, மேனேஜர் வந்துடுவார், வந்ததும் ஒரு ஜாய்னிங் ரெப்போர்ட் எழுதிக் கொடுத்து வேலைக்கு சேரலாம் என்றார்.

      அவர் அங்கு பணியாற்றும் தலைமைக் கிளார்க் என்பதும் திருச்சி டவுன் ஆண்டார் தெருவில் இருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். அவர் பெயர் ராமசாமி ஐயர் வழக்கமாக பேண்ட் அணிபவர்கள் மத்தியில் அவர் வேட்டியும் நெற்றியும் கோபி சந்தனமுமாக விளங்கினார். சற்று அன்பாகப் பேசுவது போலவும் இருந்ததால் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டேன்.

      தொடர்ந்து பலரும் ஆபீசுக்குள் வரவும், ஒரு ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டு விட்டு உள்ளே போவதுமாக இருந்தார்கள். மணி ஒன்பதே முக்கால் இருக்கும் ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு உயரமான மனிதர் இறங்கி வந்தார். பஞ்சகச்சம் கட்டி, சட்டையை அதனுள் தள்ளி மேலே ஒரு கோட் அணிந்திருந்தார். தலையில் ஒரு சேட்டு அணியும் தொப்பி. பின்னர்தான் தெரிந்தது அவர் குடுமி வைத்திருந்தது. நெற்றியில் வடகலை நாமம். அவர் வந்தவுடன் ஹெட் கிளார்க் ராமசாமி ஐயர் இதோ மேனேஜர் வந்துட்டார், போய்ப் பார். என்று சொல்லி என்னை அனுப்பினார்.

      நான் மேனேஜர் அறைக்குள் நுழைந்தேன். அப்போதுதான் வந்து தன் சீட்டில் அமர்ந்த மேனேஜர் என்னை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னுடன் கொண்டு வந்திருந்த ஃபைல்கள் எல்லாவற்றையும் எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டிருந்தார். சில நிமிஷங்கள் கழிந்த பின் என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு “யாருப்பா, உனக்கு என்ன வேணும்?” என்றார்.

      எனக்குக் குரலே எழும்பவில்லை. மெல்ல என் கையில் இருந்த வேலைக்கான கடிதத்தை அவர் முன்பு நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டு எம்.பி.எஸ்.சி. கேண்டிடேட்டா, சரி சரி போய் ஹெட் கிளார்க் கிட்டே சொல்லி ஜாய்னிங் ரிப்போர்ட் கொடுத்துட்டு அவர் சொன்ன வேலையைப் பாரு போ என்று என்னை அனுப்பி விட்டார். திரும்ப ராமசாமி ஐயரிடம் வந்து அவர் எழுதிக் கொடுத்த காகிதத்தில் கையெழுத்திட்டுவிட்டு அவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். என் பணி ரயில்வே போலீஸ் ஆபீசில் தொடங்கியது.

      அன்று தொடங்கிய என் பணி முதலில் ரயில்வே போலீஸ் ஆபீஸ், தொடர்ந்து அதனுள்ளேயே இருந்த ரயில்வே இன்டெலிஜன்ஸ் பீரோ எனும் பிரிவு இப்படி காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு அரசாங்க அலுவலகம், அதிலும் சுதந்திரம் பெற்று பத்து ஆண்டுகளுக்குள் அதிலும் போலீஸ் துறை கேட்க வேண்டுமா கெடுபிடிகளுக்கு. அந்த சூழ்நிலையில் எனக்கு ஏதோ போலீஸ் காவலில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

      அங்கு எஸ்.பி.க்கு பெர்சனல் அசிஸ்டென்ட்டாக இருந்தவர் ஒரு பாலக்காடு ஐயர். அவர் கெடுபிடிக்குப் பெயர் போனவர். மாடியில் அவருக்கு அறை, அங்கு அவர் போடும் கூச்சல் தரைத் தளத்தையே உலுக்கிவிடும். அவரைச் சந்திப்பதென்றால் எனக்கு அஸ்தியில் ஜன்னி வந்துவிடும். ஒரு முறை ஏதோவொரு பைலை கொண்டு வரச் சொன்னார், அதைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தார். அதில் ஏதோ எழுத்துப் பிழை அவர் கூவினார், இதை எந்த காட்டுமிராண்டி டைப் செய்தான் என்று. என் உடல் வியர்த்தது, பதில் சொல்லத் தெரியவில்லை. உடனே என் முகத்தின் மீது ஒரு பைல் வந்து விழுந்தது. பயத்தோடு உடல் நடுங்க அதைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோது அந்த கர்ஜனை கேட்டது, போ, போய் தவறைத் திருத்திக் கொண்டு வா, என்று. ஓடினேன், அத்தனைப் படிகளையும் எப்படித் தாண்டினேன் என்பது தெரியாது வியர்த்து விறுவிறுக்க இடத்தில் போய் உட்காந்ததும் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த இன்னொரு தலைமை குமாஸ்தா முத்தையா என்பவர், என்னப்பா என்ன நடந்தது என்றார். நடந்ததைச் சொன்னேன். சிரித்துக் கொண்டார், இதெல்லாம் சகஜம், போய் வேலையைப் பார் என்றார். அது ஒரு நல்ல அனுபவம்.

      அங்கு அன்போடும், மனிதாபிமானத்தோடும் ஒரு நபர் பழகினார். அவர் காக்கி யூனிபாரத்தில்தான் இருந்தார். கையில் ஒரு ரூல்தடி, ஒரு சைக்கிள், அதோடு அவர் அங்கும் இங்குமாகச் சுற்றிக் கொண்டிருப்பார். அவரை சார்ஜெண்ட் என்றார்கள். ரயில்வே ஜங்ஷனிலும் ஆங்காங்கே நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சார்ஜெண்ட் ப்ளேக் என்று அவரை அழைப்பார்கள். மிக நல்ல மனிதர். துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க முயற்சிக்காவிட்டாலும், அவர் அன்போடு நம்மிடம் ஆதரவாகப் பேசுவதே போதும். அத்தனை நல்ல மனிதர். காக்கி யுனிபாரத்துக்குள் இத்தனை நல்ல மனிதரா? என்று வியந்திருக்கிறேன்.

      காளியப்பன் என்றொரு இன்ஸ்பெக்டர் மதுரை மேலூரைச் சேர்ந்தவர். பிரதமர் ஜவஹர்லால் நேரு திருச்சிக்கு வந்திருந்தார். அவரை வரவேற்க இன்ஸ்பெக்டர் காளியப்பன் செரிமோனியல் ஆடையில் சென்றிருந்தார். ஜரிகைத் தொப்பி, குறுக்கு பெல்ட் இப்படி. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அலுவலகத்தினுள் அவர் நுழையும்போது அந்த காம்பவுண்டை ஒட்டி புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் என்று ஒன்று அந்தக் காலத்தில் இருந்தது. அங்கு யாரிடமோ பிக் பாக்கெட் செய்த திருடன் ஒருவன் ஆபீஸ் காம்பவுண்டினுள் தாண்டிக் குதித்து குறுக்கால் ஓடிக் கொண்டிருந்தான். அலுவலக வாசலில் இருந்த இன்ஸ்பெக்டர் காளியப்பன், அவர் ஒரு திடகாத்திரமான நபர், அந்த பூட்ஸ் காலோடு திமுதிமு வென்று ஓடி அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டார். அவனை நாலு உதை விட்டார், அவன் கீழே விழுந்தான். இவர் மறுபடி அவனை அடிக்கக் கை ஓங்கினபோது, அவன் உரத்த குரலில், என் மேல கைய வைக்காதிங்க, நான் யார் தெரியுமா, மதுரை டி.சி. என்றான். இன்ஸ்பெக்டர் பின் வாங்கிவிட்டார். டி.சி. என்றால் டிஸ்ட்ரிக்ட் கிரிமினல், அதாவது பல முறை சிறை சென்றவன். இதெல்லாம் நமக்குப் புதிது என்பதால் ஒரே அதிர்ச்சி, ஆச்சர்யம். அதுமுதல் இன்ஸ்பெக்டர் காளியப்பன் எனக்கு ஒரு ஹீரோ.

      ரயில்வே போலீஸ் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்த அன்றைய மாலையில் அதே ஆபீசில் பணியாற்றும் ஒருவர் அந்த கட்டடத்துக்கு அடுத்திருந்த வெங்கடா லாட்ஜ் எனும் இடத்தில் தங்கியிருப்பது அறிந்து அவருடன் நானும் சென்று தங்கினேன். பிறகு இன்னொரு அறை எடுத்துக் கொண்டு அதில் நானும், இன்சூரன்ஸ் ஆபீசில் பணியாற்றும் வைத்தியநாதன் என்பவரும் தங்கிக் கொண்டோம். அதே வெங்கடா லாட்ஜில் சாப்பாடும், வெளியில் பகவதி விலாஸ் எனும் ஓட்டலில் டிபனும் வைத்துக் கொண்டோம். அந்த லாட்ஜ் வாழ்க்கை சுவையானது. அப்போதெல்லாம் திருச்சியில் பிளாசா, ராமகிருஷ்ணா எனும் இரு தியேட்டர்களில் ஆங்கிலப் படம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை ரிலீஸாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லாட்ஜுக்கு அருகில் உள்ள பிளாசாவுக்குப் போய் படம் பார்க்கும் வழக்கம் உண்டு. அரை ரூபாய் டிக்கெட். அந்த காலகட்டத்தில் தான் ரூபா, அணா, பைசா மாறி நயா பைசா முறை அறிமுகமானது. சினிமா டிக்கெட் ஐம்பது காசுகள். ரூம் நண்பன் சொன்னான் நீ ஒரு சீசன் டிக்கெட் வாங்கிக் கொள் பிளாசா தியேட்டரில் அதுதான் நல்லது என்பான்.

      நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்கள் ஆகியிருக்கும். திருச்சி கோர்ட் எனும் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எனும் என்.ஜி.ஓ. சங்கத்துக்கு ஒரு புதிய கட்டடம் கட்டி திறப்பு விழா நடந்தது. அதைத் திறந்து வைக்க நான் பட்டுக்கோட்டையில் 10(a)(1) ஆக பணியாற்றிக் கொண்டிருந்தபோது பழக்கமானார் என்று சொன்னேன் அல்லவா ஒரு அன்பர், தமிழறிஞர், நல்ல தொழ்ற்சங்கத் தலைவர் அவர் இப்போது மாநிலத் தலைவராக ஆகியிருந்தார். அவர் தான் அந்த கட்டடத்தைத் திறக்க வந்திருந்தார். அவர் திருச்சிக்கு வரும் விஷயத்தை எனக்குக் கடிதம் மூலம் தெரிவித்து திறப்பு விழாவன்று என் அறையில்தான் தங்கப்போவதாகச் சொல்லியிருந்தார். அது போலவே அவரும் வந்து என்னுடன் தங்கியிருந்தார். விழா நடக்கும் இடத்துக்கு என்னையும் வா என்று அழைத்துப் போனார். இவரோ தலைவர், கட்டடத்தின் திறப்பு விழாவுக்காக வந்திருப்பவர். நானும் அவரோடு இணையாக வருவதைப் பார்த்து நான் பணியாற்றிய அலுவலக ஊழியர்கள் என்னை கேலியாகப் பார்த்து, “பாருங்கப்பா, நேத்துதான் வேலைக்கு வந்திருக்கான், இன்னிக்கு யூனியன் விழாவுக்குத் தலைவரோடு வந்திருக்கான்” என்றெல்லாம் பேசியது காதில் விழுந்தது. எதையும் லட்சியம் செய்யாமல் நான் நண்பரோடு மேடைக்கு எதிரில் உட்கார்ந்திருந்தேன். மறுநாள் என்னை எல்லோரும் துக்கம் விசாரிப்பது போல, தலைவரை உனக்கு எப்படித் தெரியும் என்றெல்லாம் துளைத்தெடுத்தார்கள்.

      ம.பொ.சியின் தமிழரசுக் கழகமும், அவர் செங்கோல், தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளும் வாங்குவது வழக்கம். தமிழ் தினசரி ஒன்று “தமிழ் நாடு” எனும் பெயரில் மதுரையிலிருந்து கருமுத்து தியாகராச செட்டியார் நடத்தியது வரும். அதைத்தான் நான் வாய்விட்டுப் படிப்பது வழக்கம். நண்பர்கள் கேலி செய்தாலும், பிறகு தமிழ் சரளமாகப் பேச அந்த பத்திரிகைகள் காரணமாக அமைந்தன.

      1956 செப்டம்பர் 1ஆம் தேதி ஒரு அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. அப்போது நேரு பிரதமர், சி.டி.தேஷ்முக் என்பார் நிதியமைச்சர். நாட்டில் இன்சூரன்ஸ் துறையில் ஆயுள் இன்சூரன்ஸ் நாட்டுடமையாக்கப்பட்டது. பார்லிமெண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் எனும் நிறுவனம் ஸ்தாபிக்கப் பட்டது. என் அறை நண்பன் வைத்தியநாதன் தனியார் கம்பெனியில் இருந்தவன் இப்போது பொதுத்துறை எல்.ஐ.சி.யின் ஊழியரானதும் நல்ல சம்பள உயர்வும் கிடைத்தது. அவன் என்னையும் தூண்டினான், அங்கு வேலைக்கு ஆள் எடுப்பார்கள், தேர்வு நடக்கும் எழுதினால் வேலை கிடைக்கும் என்றான். அதன்படியே 1957இல் எல்.ஐ.சிக்கு ஆள் எடுக்க தென் மண்டலம் முழுதுக்குமான ஒரு தேர்வு நடந்தது. சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு. தென் மண்டலம் என்பது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகத்தின் சில பகுதிகள் அடங்கியது.

      அந்தத் தேர்வு எழுத நான் மதுரைக்குச் சென்று மதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் தங்கிக் கொண்டு, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை எழுதிவிட்டு வந்தேன். அடுத்த சில மாதங்களுக்குள் அதன் முடிவுகள் வந்தன. என் நண்பன் வைத்தியநாதன் டெலிபோனில் அந்த பட்டியலில் என் பெயரும் இருப்பதாகச் சொல்லி எனக்கும் எல்.ஐ.சி.வேலை கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தான்.

      சில நாட்களுக்குப் பின் மதுரையில் நேர்காணல் நடந்தது. அங்கு நேர்காணல் கண்ட அதிகாரி மகிழ்ச்சியுடன் என்னை வாழ்த்தி திருச்சிக்கே பணி உத்தரவு வரும் என்று சொன்னாராயினும் சில நாட்களில் எனக்கு கரூர் கிளை அலுவலகத்துக்கு நியமனம் செய்து ஒரு உத்தரவு வந்தது.

      போலீஸ் அலுவலக வேலையை ராஜிநாமா செய்ய வேண்டுமே. இது நிரந்தரமான வேலையாயிற்றே. மூன்று வருஷங்கள் வேலை செய்துவிட்டு போவதென்றால் விடமாட்டார்கள். எனக்கு மாற்றாக சர்வீஸ் கமிஷனைக் கேட்டு வேறு ஆள் போட பல காலம் ஆகும் என்பதால் என் ராஜிநாமாவை ஏற்க மறுத்தனர். அது தவிர எல்.ஐ.சிக்கு நான் முறைப்படி அவர்கள் மூலமாக மனுச்செய்யவில்லை என்று என் மீது நடவடிக்கையும் எடுத்தார்கள்.

      எனக்கு அழுகை அழுகையாக வந்தது. யாரிடம் போய்ச் சொல்வது? முத்தையா என்று சொன்னேன் அல்லவா அவரிடம் எல்லாவற்றையும் சொன்னேன். அவர் நீ ஒன்றும் கவலைப் படாதே. நம் எஸ்.பி. இளைஞர், நல்ல படிப்பாளி. சின்ன வயசுப் பையன் உனக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது என்றால் அவர் உன்னை ரிலீவ் செய்துவிடுவார். இந்த மேனேஜரிடம் போனால் உன் காரியம் கெட்டுவிடும். ஆகையால் உன் ராஜிநாமா கடிதத்தை என்னிடம் கொடு. நான் எஸ்.பி.யின் கேம்ப் ஆபீசுக்குப் போகும்போது விஷயத்தை நயமாகச் சொல்லி ராஜிநாமாவை ஏற்கும்படி செய்து விடுகிறேன் என்று வாங்கிச் சென்றார்.

      இதற்கு சார்ஜெண்ட் ப்ளேக் அவர்களும் உதவி செய்வதாக வாக்களித்தார். இவ்விருவரும் எஸ்.பி.யிடம் சென்று என் சார்பாகப் பேசியிருக்கிறார்கள். அவரும் ஓ அந்தப் பையனா, நல்ல வாய்ப்பு கிடைத்தால் போவது சரிதான், அவன் ராஜிநாமாவைக் கொடு ஏற்றுக் கொண்டுவிடலாம், அவனை இன்றே ரிலீவ் செய்து விடச் சொன்னதாக மேனேஜரிடம் சொல்லிவிடுங்கள் என்று உத்தரவு போட்டு விட்டார்.

      முத்தையா சாரும், சார்ஜெண்ட் ப்ளேக்கும் இந்த செய்தியை ஆபீஸ் வந்து என்னிடம் ரகசியமாகச் சொல்லிவிட்டு ராஜிநாமா பேப்பரை, இதர தபால்களுடன் பையோடு மேனேஜரிடம் வைத்துவிட்டு வந்து விட்டார்கள். அங்கு மேனேஜர் அறையில் தபால்களையெல்லாம் எடுத்துப் பார்க்கும் போது எஸ்.பி. கையெழுத்தான எல்லா பேப்பர்களுக்கிடையே என் ராஜிநாமா கடிதத்தையும் மானேஜர் பார்த்து விட்டார். எழுந்தது பார் ஒரு யுகப் புரட்சி. ஒரே களேபரம், காகிதங்கள் பறந்தன. என்னை மீறி எப்படி எஸ்.பியிடம் போனாய், எப்படி உன் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்படும். நான் அதை பரிந்துரைக்காமல் நீ போய்விட முடியுமா என்று ஒரே கூச்சல். நான் இருக்குமிடம் தெரியாமல் பூனை போல உட்கார்ந்து விட்டேன். முத்தையா சார் மட்டும் ஜாடையில் பேசாமல் இரு சூடு ஆறட்டும் என்று சொன்னார். அன்று மாலை வேறு வழியின்றி என்னை ரிலீவ் செய்தார்கள். உடனே எனக்கு ஒரு தேநீர் விருந்துக்கு முத்தையா சார் ஏற்பாடு செய்தார். மேனேஜர் வரமுடியாது என்று மறுத்து விட்டார். எஸ்.பி.இன் பி.ஏ மட்டும் மகிழ்ச்சியோடு வந்து வாழ்த்திவிட்டு புதிதாக உருவாகியிருக்கும் எல்.ஐ.சி. எனும் பொதுத்துறை உனக்கு நல்ல மேன்மையைத் தரும் என்று வாழ்த்தினார். மகிழ்ச்சியோடு முத்தையா சாருக்கும், சார்ஜெண்ட் பிளேக்குக்கும், பி.ஏ.வுக்கும் நன்றி சொல்லிக் கொண்டு கரூருக்குப் பயணமானேன். அங்கு 1958 ஜூன் 4ஆம் தேதி பணியில் சேர்ந்தேன்.

      என் அருகில் படுத்திருந்த பேரனைப் பார்த்து என்னடா கதை எப்படி என்று கேட்டேன். அவன் எப்போதோ தூங்கிவிட்டிருந்தான். கதை சொன்னது அனைத்தும் வீண், அவன் கேட்கவே இல்லை.


      

No comments: