· சிறுகதை
தஞ்சை வெ.கோபாலன்
பிரம்மச்சரியம் என்பது மிக உயர்ந்த சுயகட்டுப்பாடு. அனுமன், பீஷ்மர் போன்றவர்கள் நமது புராணங்களின்படி கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்தவர்கள் என்பது தெரிகிறது. இது ஒரு தவம் போன்றது. பொறிகளின் வசம் மனத்தை ஒப்படைத்து அவை போகும் திசையெல்லாம் போய் தடுமாறாமல், ஐம்புலன்களையும் அடக்கித் தன் வசம் வைத்துக் கொண்டு மனதை ஒருமைப்படுத்தி நல்வழியில் வாழ்பவன் மனிதருள் மாணிக்கமாகத் திகழமுடியும் என்பது நமது பாரத கலாச்சாரம் சொல்லும் நியதி.
இந்த பிரம்மச்சரியத்துக்குச் சில அரிய சக்தி உண்டு என்கின்றனர் பெரியோர். பன்னிரெண்டு வருடங்கள் கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் இடும் சாபம் பலிக்கும் என்பர். அதைப் போல மற்றுமொரு பன்னிரெண்டாண்டுகள் கழிந்தபின் அவன் வாழ்த்தினால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெற முடியுமாம். முப்பத்தியாறு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவன் பிறரது பாவங்களையும் நீக்கி அவனுக்கு நல்வாழ்வு தரமுடியும் என்பது பெரியோர் வாக்கு.
அந்த ஊரின் பெயர் அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் ஈசனின் பெயரால் வந்தது. அந்த சுவாமியின் திருநாமம் காயாரோகணம். இது என்ன புரியாத புதிர் போன்ற பெயர் என்று தோன்றுகிறதல்லவா. இந்தச் சொல்லை காயம் என்றும் ஆரோகணம் என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். காயம் என்பது நமது உடல், ஆரோகணம் என்பது மேல்நோக்கிச் செல்வது, இசையில் ஆரோகணம், அவரோகணம் என்பர். நாம் இந்த பூமியில் எடுத்திருக்கும் பூத உடலோடு மேலுலகம் செல்வதையே காயாரோகணம் எனச் சொல்லலாம். இந்த ஊரையும் திரு நாகைக்காரோகணம் எனத்தான் குறிப்பிடுவர், அதுதான் நாகைப்பட்டினம். இந்த ஊரிலும் எப்படி மதுரையில் மீனாட்சியின் புகழோ, அப்படியே இங்குள்ள அம்மன் நீலாயதாட்சியின் பெயரே முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. ஊரில் ஒரு சிலர் இந்த காயாரோகணம் எனும் பெயரை ஆண் குழந்தைகளுக்கு வைத்திருப்பர்.
இங்கு ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். கடல் வாணிபம் செய்து கோடீஸ்வரராக வாழ்ந்து வந்தார். சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தும், கெளரவமும் அவருக்கு இருந்து வந்தது. இவருடைய முக்கியமான வியாபாரம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்படும் தேக்கு மர வியாபாரம் அதோடு பர்மாவிலிருந்து வரும் அரிசி. இந்த வகை அரிசி மலிவானது. ஏழை மக்கள் இந்த அரிசியை அதிகம் வாங்கிப் பயன்படுத்துவர் என்பதால், கடற்கரையோரமாக ஒரு பழைய கட்டடத்தில் கப்பலில் இறங்கிய மூட்டைகளை சேமித்து வைத்திருப்பார். இங்கிருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்வார்கள். அவருக்குப் பல உப்பளங்கள் இருந்ததால் உப்பு மொத்த வியாபாரமும் இருந்தது. இவருடைய பெயர் காயாரோகணம்.
இந்த காயாரோகணம் செல்வாக்கு உள்ளவர். பிரிட்டிஷ் காலத்தில் இவருக்கு அதிகமான செல்வாக்கு இருந்தது. அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லாம் இவரிடம் அதீத மரியாதை செலுத்தி வந்தனர். அப்போதெல்லாம் நாகைப்பட்டினம் துறைமுகம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆப்பிரிக்கா, மொரீஷஸ், பிஜி, மற்ற கீழை நாடுகளுக்குப் போகின்றவர்கள் நாகப்பட்டினம் வந்து கப்பலில் ஏறித்தான் பயணத்தைத் தொடங்குவர். இது ஒரு முக்கிய துறைமுக நகரமென்பதால் இங்கு வசதியாகவும் செல்வாக்கோடும் வாழ்ந்த இந்த காயாரோகணம் என்பார் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்து வந்தார். அவர்களிடம் ராவ் பகதூர் என்ற விருதையும் பெற்றிருந்தார். சொந்த வாழ்க்கையில் சில விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி சிலரை வெறுத்தும், சிலர் மீது அபாரமான மதிப்பும் வைத்திருந்தார். தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த கதர்க்குல்லாய் அணிந்த காந்தி கட்சியாரை இவருக்கு அறவே பிடிக்காது, அதைச் சொல்லிலும் செயலிலும் அதிகமாகவே காட்டி வந்தார்.
அவ்வூரின் பல சமூக அமைப்புகளில் அவர் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ ஏதோவொரு பதவி இவருக்கு உண்டு. சாதாரண கூலிகளும், ஏழைகளும் இவரைக் கண்டால் உடலை வளைத்து வணங்கிவிட்டுச் செல்வர். இவர் பொதுவாக நடந்து போகும் வழக்கம் இல்லை, ஏதாவதொரு வாகனத்தில்தான் இவரது பயணம் இருக்கும். ஓய்வு தினங்களிலும், பொது நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களிலும் இவர் தன்னுடைய மாளிகையின் முதல் மாடியின் பால்கனியில் நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு கடல் காற்றை அனுபவித்துக் கொண்டு வெளிநாட்டு பானங்களை அருந்திக் கொண்டிருப்பார். அதுபோன்ற சமயங்களில் அந்த பகுதியே வெடிச் சிரிப்பும் கும்மாளமுமாகவே இருக்கும். காயாரோகணம் சாதாரணமாகப் பேசும் பேச்சில்கூட ஏதோ பெரிய நகைச்சுவை இருப்பது போல கூடியிருப்பவர்கள் ஓகோவென்று சிரித்து மகிழ்வார்கள்.
இத்தனை செல்வத்தைப் படைத்திருந்த அவர் எந்த தர்ம காரியங்களும் செய்ததாக ஊரார் சொன்னதில்லை. ஆனால் பிரிட்டிஷாரை ஆதரிக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கும், ஆங்கில புத்தாண்டு, இங்கிலாந்து அரசியார் பிறந்த நாள் விழா, கவர்னர் வந்தால் வரவேற்பு போன்றவற்றிற்கு இவருடைய பங்களிப்பு அதிகமாகவே இருக்கும்.
இவரிடம் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் குறைந்த ஊதியத்திலேயே பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டுமென்று கேட்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, தன் வியாபாரமே நஷ்டத்தில் நடக்கிறது; இத்தனை ஆட்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது; பர்மா தனி நாடாக ஆகிவிட்டதால் அங்கிருந்து மரமோ, அரிசியோ கொண்டு வருவது சிரமமாகப் போய்விட்டது. ஆகையால் இந்த ஊதியம் கட்டுப்படியாகவில்லையானால் அவர்கள் எல்லாம் நின்று கொள்ளட்டும், நானும் வியாபாரத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்றார் காயாரோகணம்.
ஏழை எளியவர்களுக்கு வேறு என்ன வழி. நல்லதோ கெட்டதோ இவரிடம் அடிமையாக வாழ்ந்தாகிவிட்டது. உயிருள்ள வரை அடிமையாகவே வாழ்ந்து விடுவதே நல்லது எனும் முடிவுக்கு வந்துவிட்டனர். அந்த ஊரில் மட்டும் அவருக்கு ஏகப்பட்ட வீடுகள்; சில பங்களாக்கள் ஊரிலேயே மிகப் பெரியவை. அவர் மட்டும் சற்று பழமையான அவருடைய தந்தையார் காலத்தில் கட்டப்பட்ட பங்களாவில் வசித்து வந்தார்.
ஒரு நாள் பிற்பகல் நேரம், காயாரோகணமும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலரும் அவர் பங்களா பால்கனியில் வழக்கம் போல உட்கார்ந்து கொண்டு பானங்களை அருந்திக் கொண்டும், தின்பண்டங்களை கொரித்துக் கொண்டும் பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். பால்கனியிலிருந்து பார்த்தால் அவர் பங்களா வாசலில் வருபவர்கள் நன்றாகத் தெரியும். அப்படி யார் வருகிறார்கள் என்பதையும் அவர் அவ்வப்போது கவனித்துக் கொண்டிருப்பார்.
அந்த நேரத்தில் ஒரு ஏழை மனிதன். இடையில் அழுக்குச் செங்காவி படிந்த நான்கு முழ வேட்டி முழங்காலுக்குச் சற்று கீழ்வரை கட்டி, மேலே ஒரு துண்டை தோளில் போட்டுக் கொண்டு சட்டை எதுவும் அணியாமல் வந்து நின்றார். அவர் முன் தலை முழுவதும் வழுக்கை, பின் தலையில் மட்டும் சிறிய குடுமி முடியப்பட்டிருந்தது. வந்து நின்ற அவர் மாடி பால்கனியில் குரல்கள் கேட்டு அங்கே வாசலில் தயங்கி நின்று மாடியை அண்ணாந்து பார்த்தார்.
தேவைக்கு மேலாகவே பானம் உள்ளே சென்றிருந்ததால் அவருக்கு போதை நன்கு தலைக்கேறியிருந்தது. தன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் இந்த ஆண்டி யார் என்று பார்த்துவிட்டுத் தன் குரலை கனைத்துக் கொண்டு,
“யாரையா அது வாசலில்? என்ன வேண்டும்? இங்கே வந்து ஏன் நிற்கிறாய்?” என்றார் அதிகாரம் தொனிக்கும் குரலில்.
வந்த அந்த எளிய மனிதன் மிக்க பணிவோடு “ஐயாவைப் பார்த்து சில வார்த்தைகள் பேசலாமா? உங்க கிட்டே ஒரு உதவி நாடி வந்திருக்கேன்.” என்றார்.
“உனக்கு எந்த ஊர். என் கிட்டே என்ன உதவி எதிர்பார்த்து வந்தே? பசியா, சோறு வேணுமா?” என்றார் காயாரோகணம்.
“ஐயா! என் பசிக்கு இல்லை ஐயா, ஊரார் பசியை தணிக்க நான் அன்னதானம் செஞ்சுண்டு வரேன். அந்த பணிக்கு உங்களால ஆன அரிசியோ, பணமோ கொடுத்தா வாங்கிண்டு போகலாம்னு வந்தேன். எனக்கு ஊர் கும்பகோணம் பக்கம்” என்றார் அந்த மனிதர்.
“நீ கும்பகோணமாயிருந்தா என்ன கொட்டையூரா இருந்த எனக்கென்ன ஐயா! பசியா இருந்த கொஞ்சம் நில்லு, சோறு போடச் சொல்றேன். பசியாற சாப்பிட்டுப் போ, ஊருக்கெல்லாம் சாப்பாடு போட எங்கிட்ட எதுவும் கிடையாது. ஏன்யா! உனக்கு சோத்துக்கே வழியில்லை, இந்த லட்சணத்துல ஊருக்கு சாப்பாடு போடப்போறே, அதுக்கு நான் அரிசி, பணம் கொடுக்கணுமா?” என்றார் காயாரோகணம் கேலியாக. அவருடைய இந்த கேலியைக் கேட்டு கூட இருந்தவர்கள் ஓகோவென்று கைகொட்டி ஆரவாரம் செய்து கொக்கரித்துச் சிரித்தார்கள்.
ஒரு ஏழை, ஒட்டிய வயிறு, ஒழுங்கான உடைகூட இல்லை, ஆனால் மனம் நிறைய வறியவர்கள் வயிற்றுக்குச் சோறிட வேண்டுமென்பதற்காக, சுய கெளரவம் கூட பார்க்காமல் அன்னியர் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்பவனை எள்ளி நகையாடும் அந்த வசதிபடைத்த செல்வச் சீமான்களின் நோக்கம், இந்த ஏழையைக் கேலி செய்வதல்ல, அந்த செல்வந்தரை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகத்தான்.
வந்தவர் முகத்தில் ஏமாற்றமோ, வருத்தமோ, அவமானமோ இல்லை. வந்து நின்றபோது இருந்த அதே எதிர்பார்ப்பு, அமைதி இப்போதும் இருந்தது. இதைப் போல இதற்கு முன்பும் எத்தனை இடங்களில் இது போல அவமானப் பட்டிருப்பாரோ என்னவோ அதனால் அவர் மனமொடிந்து போய்விடவில்லை. வீட்டுக்காரர் சொன்ன கடும் சொல்லை ஜீரணித்துக் கொண்டாரோ இல்லை அவர் மனத்தைச் சுட்டதோ தெரியவில்லை, மேலும் சற்றுத் தயங்கி நின்றார்.
அப்போது பால்கனியில் வீட்டு முதலாளியுடன் உட்கார்ந்து பானம் பருகிக் கொண்டிருந்த ஒருவர் பேசினார்.
“இன்னும் ஏன்யா நிக்கறே! அதான் ஐயா சொல்லிட்டாருல்ல. போய் வேற இடம் பாரு, போ!” என்றார் அவர்.
“சரி” எனும் பாவனையில் அந்த முதியவர் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்தார். அப்படி அவர் போகும்போது முணுமுணுக்கவோ, வாய்க்குள் அவர்களை சபித்துவிட்டோ போகவில்லை. மாறாக அவரோடு பிறந்த அந்தப் பணிவு, இரக்கம், அன்பு இவற்றால் உந்தப்பட்டு வலக்கையை உயர்த்தி வாழ்த்துவது போல அசைத்துவிட்டுப் போனார்.
“பாரய்யா! அவனுக்குள்ள திமிரை. இல்லைன்னு சொல்லிட்டாராம், அதுக்காக அவன் இவரை வாழ்த்தரானாம், கையை உயர்த்தி வாழ்த்தி விட்டுப் போறான்” என்றார் மாடிக்காரர் ஒருவர். வந்த ஏழை போய்விட்டார். அவர் வந்ததோ, அன்று நடந்த சம்பாஷணைகளோ அங்கிருந்த அனைவருக்கும், காயாரோகணம் உட்பட அனைவருக்குமே மறந்து போய்விட்டது. காலம் ஓடிக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து சுதந்திர இந்தியா உதயமாகிவிட்டது. நம் நாட்டை நம்மவர்களே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முன்பு பர்மா இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது பர்மா தேக்கும், பர்மா அரிசியும் இவருக்குச் செல்வத்தைக் கொண்டு வந்து குவித்தது. சுதந்திரத்துக்கு கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே பர்மா தனி நாடாகிவிட்டது. நமது கதாநாயகர் காயாரோகணத்துக்கும் வியாபாரம் படுத்துவிட்டது. அதே ஊரில் முடிசூடா மன்னனாக இருந்த காலம் போய் இப்போது சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சியோடு ஒத்துப் போக முடியாமல், இவர் யாரையெல்லாம் கேலி பேசினாரோ, அவர்கள் எல்லாம் இப்போது ஆட்சிபுரியும் பிரிவினரோடு சேர்ந்து விட்டதால், இவர் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தார்.
காயாரோகணத்துக்கு வியாபாரத்தில் சரிவும், தன்னுடைய சுய செல்வாக்கில் சரிவும், பண வசதிக் குறைவும், வயதின் மூப்பும் சோர்வடையச் செய்திருந்தது. எதிலும் அதிக ஆர்வமின்றி வீடே கதியென்று முடங்கிக் கிடக்கத் தொடங்கினார். இவரை எந்த பொது நிகழ்ச்சிக்கும் யாரும் அழைப்பதுமில்லை. இவர் காலத்தில் இவர் கொள்கைகளுக்காக இவரைக் கொண்டாடியவர்களுக்கும் இப்போது வயது மூப்பு வந்துவிட்டதால் இவரை யாரும் சீண்டுவாரில்லை. பல காலம் போட்டுக் கழற்றிய ஆடையைப் போல இவர் கழற்றி ஒரு ஓரமாக வீசப்பட்டிருந்தார்.
ஒவ்வொன்றாகத் தன்னுடைய பங்களாக்களை விற்றார். வியாபாரம் பிரிட்டிஷ் காலத்தோடு முடங்கிப் போய்விட்டது. ஒன்றிரண்டு மிச்சமிருந்த சொத்துக்களும் விற்கப்பட்டு விட்டன. இவருடைய எப்போதும் குடியிருந்த அந்த பழைய பங்களாவையும் இப்போது விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு விலை பேசவும் ஆட்கள் வந்திருந்தார்கள். முன்பு பால்கனியில் உட்கார்ந்து உத்சாக பானம் அருந்திய காயாரோகணத்தை இப்போது பார்க்கமுடியவில்லை. நிமிர்ந்தே இருந்த அவரது தலை இப்போது குனிந்தே இருந்தது. பளபளவென்று காட்சியளித்த அவரது முகம் சுருங்கிக் குழி விழுந்து கண்கள் உள்ளே போய் எளிய தோற்றத்தில் இருந்தார். இந்த நிலையில் இவர் யார் வீட்டு வாசலிலாவது போய் நின்றால், ஒன்றும் இல்லை போய்யா என்பார்கள், அந்த நிலைமை அவருக்கு. என்ன கொடுமை?
இந்த வீடுதான் கடைசி சொத்து. இது விற்று வரப்போகும் பணமும் தற்போது அவருக்கு இருக்கும் கடன்களைக் கொடுத்தால் சரியாகப் போய்விடும், கையில் ஒரு பைசாகூட மிஞ்சாது. அதன் பின் எங்கே போய் இருப்பது, எப்படி சாப்பிடுவது. உற்றார் உறவு எல்லோரும் எப்போதோ விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள். உற்ற துணையாக இருந்த அவருடைய மனைவியும் காலமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாரோ அருகிலுள்ள ஒரு குடிசை வீட்டில் இருப்பவர், ஏதொவொரு காலத்தில் இவரிடம் வேலை செயதவராம் அவர் பரிதாபப்பட்டு எங்க முதலாளி என்று சொல்லிக் கொண்டு இவருக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இனி இவர் இந்த வீட்டைவிட்டுப் போய்விட்டால் அதற்கும் இனி திண்டாட்டம் தான்.
வீட்டை வாங்குபவர்கள் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். நாலைந்து பேர் வந்தனர், அதில் அனைவரும் நல்ல பளிச்சென்று கதர் வேட்டி, கதர் முழுக்கைசட்டை அணிந்து தோளில் கதர் துண்டுடன், பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் போல காட்சியளித்தனர். அவர்களோடு சற்று அழுக்கு வேட்டியை இடையில் கட்டிக் கொண்டு சட்டையில்லாமல் மேலே ஒரு துண்டு அணிந்து கொண்டு படு கிழம் ஒன்றும் வந்தது. அவரைப் பார்த்ததும் காயாரோகணத்துக்கு மனத்தில் சுரீர் என்று தைத்தது. முன்பு எப்போதோ, வாசலில் வந்து இதே கோலத்தில் வந்து நின்ற ஒரு ஏழை மனிதரைத் தான் மனிதாபிமானம் இல்லாமல் துரத்திவிட்ட நிகழ்ச்சி நெஞ்சில் நிழலாடியது. அவர்தானோ இவர்? சேச்சே இருக்காது. இத்தனை வருஷம் கழித்து அந்த பரதேசி வரமுடியுமா, நம் மனம் அப்படி சொல்கிறது என்று தேற்றிக் கொண்டார்.
வந்தவர்கள் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர்கள். நல்ல செல்வந்தர் வீட்டார். அவர்கள் நடத்தி வரும் ஒரு தர்ம ஸ்தாபனத்துக்கு அந்த ஊரில் ஒரு கட்டடம் பார்த்துக் கொண்டிருந்தனர். வயது முதிர்ந்த ஆதரவற்ற பெரியவர்களைத் தங்கவைத்து அவர்களுக்கு ஆதரவு தருவது அ ந்த தர்ம தாபனத்தின் நோக்கம். அவர்களுடன் வந்த அந்த ஏழைக் கிழவர் பல ஊர்களிலும் கோயில் திருவிழாக்கள் சமயத்தில் அன்னதானம் செய்யும் பெரியவர். அவர் மூலமாக மக்கள் வழிபடும் ஒரு மதத் தலைவரும் மடாதிபதியுமான பெரியவர் இந்த தர்ம கைங்கர்யத்தைச் செய்யச் சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த வீட்டை முதியோர் இல்லமாகத்தான் நாங்கள் நடத்தப் போகிறோம். இந்த வேலை முடிந்து இல்லம் தயாராகிவிட்டது என்ற செய்தியை இந்த முதியவர் அந்த மடாதிபதியிடம் போய் சொல்வார் என்ற விவரங்களையெல்லாம் வந்தவர்கள் காயாரோகணத்திடம் சொன்னார்கள்.
வந்த அந்த ஏழை முதியவரை தலை நிமிர்ந்து பார்த்தார் காயாரோகணம். இவர் அவராகத்தான் இருக்க முடியும், ஆனால் அவர் அந்த பழைய நிகழ்ச்சிகள் எதையும் நினைவு வைத்திருப்பவர் போல காட்டிக் கொள்ளவில்லையே. அவரிடமே கேட்டு விடலாமா? மனது கேட்கவில்லை, கேட்டே விட்டார்.
“ஏன் சுவாமி? நீங்க இதுக்கு முன்பு ஒரு முறை பல வருஷங்களுக்கு முன்னால இந்த வீட்டு வாசலுக்கு வந்து அன்னதானத்துக்கு அரிசி அல்லது பணம் வேணும்னு கேட்டிருக்கீங்களா. உங்களைப் பார்த்த மாதிரி நினைவு” என்றார் காயாரோகணம்.
அந்த கிழவர் மெல்ல யோசித்துவிட்டு, எனக்கு நினைவில்லை. பல வருஷமா, நான் பல ஊர்களுக்கும் போறேன், பல பேரைப் பார்க்கிறேன். அன்ன தானத்துக்கு அட்சதை கேட்பேன், காய் கறி, சாமான்கள், பணம் உதவி கேட்பேன். பல ஊர் கோயில் திருவிழா சமயத்துல அன்னதானம் செய்வேன், பெரியவர் சொன்னதால அதை செஞ்சிண்டுருந்தேன். இப்பவும் செய்யறேன். இவாளுக்கு இங்க ஒரு இல்லம் தொடங்கணும்னு சொன்னதால இவாளோடு இங்கே வந்தேன். வேற எனக்கு எதுவும் நினைவில்லையே” என்றார் அவர்.
நாப்பது வருஷம் வாழ்ந்தவனுமில்ல, நாப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்ல என்று பொதுவாக மக்கள் சொல்லும் வாக்கு பொய்யில்லை போலிருக்கிறது என்று நினைத்து மனம் கசிந்தார் காயாரோகணம்.
No comments:
Post a Comment