சிறுகதை
தஞ்சை வெ. கோபாலன்
அன்று சம்பள நாள். இப்போது போல் அப்போதெல்லாம் வங்கியில் செலுத்திவிட்டு
அங்கு போய் பணம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை வரவில்லை. அலுவலக கணக்குப் பிரிவில் கணக்காயர்
மேஜைக்குச் சென்று அங்குள்ள சம்பளப் பட்டியலில் ரெவின்யூ ஸ்டாம்பில் கையெழுத்திட்டுவிட்டு
அவர் கொடுக்கும் சம்பள உறையை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி தன்னுடைய சம்பளத்தை
வாங்கிக் கொண்டு கவரில் இருக்கும் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான் சரவணன். அதில்
மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களும் அறுபது பத்து ரூபாய் நோட்டுக்களும் இருந்தன. அப்பாடா,
இன்றே கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். வாடிக்கை வைத்துக் கொண்டிருக்கும்
மளிகைக் கடைக்கு முதலில் நூற்றி முப்பது ரூபாயை வீட்டுக்குப் போகும் வழியிலேயே கொடுத்தால்தான்
நாளைக்கு அடுத்த மாத சாமான்களை வாங்க முடியும். இதென்ன வெறும் முன்னூற்று சொச்சம்
ரூபாய் சம்பளம் என்று திகைக்காதீர்கள். இது நடந்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.
அப்போது ஊதியம் அவ்வளவுதான்.
சம்பள உறையை வாங்கி தன் சட்டைப் பையில் மடித்து வைத்துக் கொண்டான். பின்னர்
தன் இடத்தில் போய் முடிக்க வேண்டிய அன்றைய வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டுத் தன்
பை, டிபன் கேரியர், குடை இவை சகிதம் வீட்டுக்குப் புறப்பட்டான். அப்போதே மாலை மங்கி
இரவு படரத் தொடங்கிவிட்டது. மெல்லிய இருட்டு எங்கும் பரவிய போது ஆங்காங்கே விளக்குகளும்
எரியத் தொடங்கின. வீதியில் இறங்கி வீடு நோக்கிக் கிளம்பினான்.
வழக்கம் போல சம்பள தினத்தில் மனைவிக்கு பம்பாய் இனிப்புக் கடையில் ஏதாவது இனிப்பும்,
வாசலில் உட்கார்ந்து கூடையில் வைத்துக் கொண்டு பூ விற்கும் பெண்மணியிடம் ஒரு முழம்
மல்லிகைப் பூவையும் வாங்கிக் கொண்டான். தன் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்,
பணக் கவர் பத்திரமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, அது அங்கு இருந்தது.
வழியில் ரயில்வே லெவல் கிராசிங். அப்போது எந்த ரயிலும் வரும் நேரமில்லை என்பதால்
கேட் திறந்தே இருந்தது. சாலையில் நடந்து போவோர் அதிகம் இருந்தனர். சில வாகனங்களும்
கேட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. வீட்டுக்குப் போகும் அவசரம் ஒரு புறம் இருந்தாலும்
சரவணனுக்கு வழியில் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைக்குச் சென்று போன மாதம் வாங்கிய
சாமான்களின் பில் பணத்தைக் கொடுத்து விட்டுப் போய்விட வேண்டும். சரவணனுடைய நாணயத்தில்
முழு நம்பிக்கை வைத்திருப்பவர் அண்ணாச்சி. அவரிடம் தன் கணக்கில் அவ்வப்போது தேவைப்படும்
சாமான்களை வாங்கிக் கொண்டு கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவான், அந்த
மாதம் முடிந்து சம்பளம் வாங்கிய அடுத்த கணம் கடைக்குப் பணம் வந்து சேர்ந்துவிடும்.
ஆகையால் சரவணன் எந்த பொருள் எப்போது கேட்டாலும் அண்ணாச்சி கடையில் கிடைத்துவிடும்
அதனால் அவன் சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்துவதும் சிரமம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
சரவணனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மனைவி தவிர அவனுடைய இரண்டு
குழந்தைகள் வயதான விதவைத்தாயார் ஆகியோர் அவன் வீட்டில் இருந்தனர். குழந்தைகளில் முதல்
பையன் கல்லூரியிலும், அடுத்த பெண் பள்ளிக் கூடத்திலும் படித்து வந்தனர். இவர்கள் படிப்புக்கும்
சரவணன் செலவு செய்ய வேண்டியிருந்ததால் குடும்பம் சிரமமாகத்தான் நடந்து கொண்டிருந்தது.
அலுவலக வேலைக்கிடையே அவன் காலை மாலை வேளைகளில் பூஜைகளும் செய்து வந்தான். அது
தவிர கைரேகை, நியுமராலஜி எனும் எண்கணிதம் ஆகியவற்றிலும் தேர்ந்தவனாக இருந்தான். இவனிடம்
ஆரூடம் பார்க்கவும், கைரேகை சாஸ்திரம் பார்க்கவும், நாள் குறித்துக் கொடுக்கவும் அடிக்கடி
பலர் வந்து விடுவார்கள். அவன் குறித்துக் கொடுத்த நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு
வந்து கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அவன் தோற்றமே அவனை ஒரு நல்ல
ஆத்திகனாகவும், தவறிழைக்காத நல்ல மனிதன் என்பதையும் காட்டியது.
வரும் மாதத்தை எப்படிக் கழிப்பது எந்தெந்த செலவுகளைச் சரிக்கட்டுவது என்ற கவலையில்
வீட்டை நோக்கி நடந்த போது ரயில்வே கேட்டில் தண்டவாளத்தைக் கடக்கும் போது எதிரில்
வந்த யாரோ ஒருவன் அவன் மீது இடித்துவிட்டுச் சென்றான். இடது தோளில் சிறிது வலித்தது.
தடவி விட்டுக் கொண்டு, இத்தனை வெளிச்சத்திலேயே இப்படி இடிக்கிறானே, கும்மிருட்டாக
இருந்தால் நம்மைக் கீழே தள்ளிவிட்டே போய்விடுவான் போல் இருக்கிறதே என்று எண்ணியபடியே
மேலே போய்க்கொண்டிருந்தான்.
அண்ணாச்சியின் கடை வந்துவிட்டது. கடையில் விளக்கு ஏற்றியாகிவிட்டது. கடையிலும்
அதிகக் கூட்டம் இல்லை. அண்ணாச்சியின் முன்பு வந்து நின்றுகொண்டு இந்த மாதம் என்ன ஆயிருக்கிறது
பார்த்துச் சொல்லுங்கள், சம்பளம் வந்து விட்டது, கொடுத்துவிட்டுப் போகிறேன் என்றான்
சரவணன்.
அண்ணாச்சி கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு நூற்று முப்பது என்றார்.
சரி என்று சொல்லிவிட்டு பைக்குள் கைவிட்ட சரவணன் அதிர்ச்சியில் துள்ளினான். என்ன ஆயிற்று
என்றார் கடைக்காரர். என்ன சொல்வதென்று புரியாமல் சரவணன் திணறினான். பையில் இருந்த
பணக் கவர் .. என்று இழுத்ததைத் தொடர்ந்து கடைக்காரர், “என்ன சாமி, கவர் காணலியா, எங்கே
வச்சீங்க நல்லா கவனப்படுத்தி பாருங்க” என்றார்.
“இல்லை அண்ணாச்சி, பணக் கவரை பையில்தான் வைத்துக் கொண்டேன். வழியில் பூக்காரியிடம்
பூ வாங்கும் போதுகூட பையில் இருந்ததே, இப்போது காணோமே” என்றான்.
“ஓகோ, வழியிலே ரயில்வே கேட் கிட்டே கூட்டமா இருந்திச்சா, அதில யாரும் உங்க
மேல வந்து மோதினாங்களா?” என்றார் அண்ணாச்சி.
“ஆமாம், ஒரு ஆள் வந்து இடித்துவிட்டு நிற்காமல் போய்விட்டான்” என்றான் சரவணன்.
“அதுதான், அங்கே இதே வேலைதான். சாயங்காலம் ஆயிடுச்சின்னா கூட்டமா வந்து நின்னுகிடுவானுங்க.
போற வர ஆளுங்களை நோட்டம் விட்டு யார் மடியில என்ன இருக்கும்னு தெரிஞ்சுகிட்டு சாமர்த்தியமா
அடிச்சிட்டுப் போயிடுவானுங்க. அது சரி, போனது இனி திரும்ப வரவா போவுது. இந்நேரம்
பணத்தை அடிச்சவன் எங்கேயாவது சாரயக் கடைக்குப் போயிருப்பான். போங்க சாமி, எனக்கு
அடுத்த மாசம் சேர்த்து கொடுத்தா போதும், நான் உங்களை நெருக்க மாட்டேன்” என்றார் அண்ணாச்சி.
“நல்லதுங்க, எல்லாம் என் தலைவிதி, இந்த மாதம் எப்படி போகுமோ, அந்த பகவானுக்குத்தான்
வெளிச்சம்” என்று முணுமுணுத்துக் கொண்டே சரவணன் வீட்டுக்கு நடந்தான்.
வீடு போய்ச் சேர்ந்ததும், ஆவலோடு எதிர்பார்த்திருந்த மனைவி இவனுக்கு அன்று
அதிகப்படி உபசாரம் செய்தாள். “சூடா காப்பி கொண்டு வரவா” என்றும் கேட்டாள். “ஏன் இன்னிக்கு
முகம் வாடியிருக்கு, வேலை அதிகமா?” என்று விசாரித்துவிட்டு அவன் சம்பள கவரை எடுத்துத்
தருவான் என்று எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தாள்.
சரவணன் பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். “அம்மா எங்கே?” என்றான்.
“அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க, இன்னும் வரலை” என்றாள் அவன் மனைவி.
“சரி, சரி, அம்மாவுக்குத் தெரியவேண்டாம், தெரிஞ்சா பெரிசா ரகளை செய்துடுவா.
இந்த மாச சம்பள கவர் வீட்டுக்கு வரும்போது யாரோ பிக் பாக்கெட் அடிச்சுட்டான், போயிடுத்து”
என்றான் சரவணன்.
“அடக் கடவுளே. என்ன கொடுமை இது. இந்த மாதம் என்ன பண்றது. நாளைக்கு பொழுது
விடிஞ்சா அத்தனை பேரும் பாக்கிக்கு வந்து நிற்பாங்களே, எப்படிப் போச்சு, எங்கே போச்சு?”
என்று பதறினாள்.
“கொஞ்சம் பேசாம இரு, என்னைக் கொஞ்சம் அமைதியா இருக்கவிடு, அப்புறமா பேசிக்கலாம்.
அம்மா வந்தா மூச்சு விடாதே, அவளுக்கு எதுவும் தெரியவேண்டாம். நாளைக்கு என் நண்பன் முத்துகிருஷ்ணன்
கிட்ட போய் கொஞ்சம் பணம் கடன் வாங்கிட்டு வந்துடறேன். கவலைப் படாதே போ, போய் உன்
வேலையைப் பாரு” என்றான் சரவணன்.
கவலை தோய்ந்த முகத்துடன் அவன் மனைவியும் சமயலறை நோக்கிப் போனாள். அப்போது
வாயிலில் சைக்கிள் மணி அடிக்கும் ஓசை கேட்டது. சரவணன் போய் யார் என்று பார்த்தான்.
அங்கு அவனுக்கு ஏற்கனவே கடைத்தெருவில் அறிமுகமான சண்முகம் என்பவன் சைக்கிளில் வந்து
காலை ஊன்றிக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.
“என்ன சண்முகம்? என்ன இந்த நேரத்துல” என்றான் சரவணன்.
“ஒண்ணுமில்ல சாமி, உங்ககிட்ட ஒரு வேலையா வந்தேன். இப்போ கொஞ்சம் பேசமுடியும்னா
வரேன்” என்றான்.
“வா, வா எனக்கு ஒண்ணும் அவசர வேலை எதுவும் இல்லை” என்றான் சரவணன்.
இந்த சண்முகம் ஒரு மாதிரியான பேர்வழி. கடைத்தெருவில் இவனை ஒரு போக்கிரி என்பார்கள்.
இவனைக் கண்டு பலரும் அஞ்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த விவரமும் சரவணனுக்குத்
தெரியவில்லை. இவனுக்கு ஒரு தையல் கடை இருந்தது. அதில் ஐந்தாறு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
ஊரில் பலரும் அந்தக் கடையில்தான் பேண்ட் சட்டை தைத்துக் கொள்வார்கள். கொஞ்சம் நாகரிகமாக
இருக்க இவன் கடையில் தைத்துக் கொள்வது என்பது பல இளைஞர்களும் விரும்பிய ஒன்று. இவனை
ஒரு டைலர் என்ற முறையில் சரவணன் அறிந்து வைத்திருந்தான்.
ஒரு சில முறை நாள் குறித்துக் கொள்ளவும், பெயர் வைக்கவும் இவனிடம் வந்து நியுமராலஜிப்படி
கேட்டுத் தெரிந்து கொண்டு சென்றிருக்கிறான். சரவணன் முன்பு அவன் உட்கார்வதில்லை, பவ்யமாக
நின்று கொண்டுதான் பேசுவான். சாமி சாமி என்று இவனை மரியாதையோடு அழைப்பான். சரவணனுடைய
திருநீறணிந்த நெற்றியும் வம்பு தும்புக்குப் போகாத குணமும் அந்த சண்முகத்தை இவனிடம்
அப்படி பணிவாக இருக்கும்படி செய்திருக்கிறது போலும்.
“சாமி முகம் ஏதோ வாடின மாதிரி இருக்கே. என் வேலைய வேணும்னா அப்புறமா பார்த்துக்கலாம்.
உங்க பிரச்சினை என்னன்னு சொன்னீங்கன்னா என்னால முடிஞ்சத செய்யறேன், என் வேலைய அப்புறமா
நாளைக்குக்கூட பார்த்துக்கலாம்” என்றான் சண்முகம்.
“ஒண்ணுமில்லை சண்முகம், ஆபீஸ்ல இன்னிக்கு சம்பளம். அந்த சம்பளப் பணத்தை வாங்கி
சட்டைப் பாக்கெட்ல வச்சுகிட்டு வந்திகிட்டிருக்கும்போது எங்கோ காணாம போயிடுச்சி.
எங்கேன்னு தெரியல” என்றான் சரவணன்.
“அட! அப்படியா? ரயில்வே கேட் வழியா வந்தீங்களா? என்றான் சண்முகம்.
“ஆமாம்பா, அந்த வழிலதான் வந்தேன்”
“அப்படின்னா கொஞ்சம் இருங்க, இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு சண்முகம் அவசரமாகத்
தன் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்விட்டான்.
என்ன இது? இவன் போய் என்ன செய்யப் போகிறான், வைத்ததை எடுப்பது போல போகிறானே,
என் பணத்தை ஏதாவது மீட்டுக் கொண்டு கொடுப்பானோ? அட, அப்படி செய்துவிட்டால் என் இந்த
மாதக் கவலை போயிடுமே, கடவுளே அப்படி ஏதாவது நடக்கக் கூடாதா என்று கடவுளிடம் வேண்டிக்
கொண்டான் சரவணன்.
அரை மணி கழித்து சண்முகம் இன்னொரு இளம் வயது பையனையும் கூட்டிக் கொண்டு வந்து
சேர்ந்தான். சரவணன் வாசலுக்கு வந்து நின்றதும், சண்முகம் அந்தப் பையனைக் கழுத்தில்
கையை வைத்துத் தள்ளி, “போடா, போயி ஐயா காலில் விழுந்து மன்னிப்புக் கேளு, அதையும்
அவர்கிட்ட கொடு” என்றான்.
அந்தப் பையனும் சரவணன் அருகில் வந்து காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சரவணனுடைய
காணாமல் போன சம்பளக் கவரை அவன் கையில் கொடுத்துவிட்டு, “மன்னிச்சுடுங்க சாமி, உங்களைப்
பற்றி தெரியாம உங்க பாக்கெட்ல கைய வச்சுட்டேன். இனிமே உங்ககிட்ட இப்படி நடந்துக்க மாட்டேன்
என்றான்.”
பையன் பார்க்க லட்சணமாக, நாகரிகமாக இருந்தான், இருந்தாலும் இப்படியொரு காரியத்தை
இவன் எப்படி செய்தான், யார் இவன், இவனுக்கும் இந்த சண்முகத்துக்கும் என்ன சம்பந்தம்,
என் பணத்தை இவந்தான் எடுத்திருப்பான் என்று எப்படி இவனுக்குத் தெரிந்து அவனை இங்கு
இழுத்து வந்திருக்கிறான் என்று மனம் குழம்பிக் கிடக்க சண்முகத்தை நோக்கினான்.
அப்போது சண்முகம் பேசினான். “ஐயா ஒண்ணும் நெனச்சுக்காதீங்க. இவன் நம்ம ஆளுதான்.
இவனைப் போல பல பசங்க நம்மகிட்ட வேலை பண்றானுங்க. நீங்க ரயில்வே கேட் வழியா வந்தபோது
பணத்தைக் காணோம்னு சொன்னதுமே அந்த ஏரியாவுல நம்ம பசங்கதானே இருக்காங்கன்னுதான் ஓடிப்போய்
விசாரிச்சேன். இந்தப் பயதான் எடுத்திருக்கான். எலே, யார் மடிலடா கை வச்சே, அவரு சாபம்
கொடுத்தா நீ நாசமா போயிடுவேடா, ஓடிப்போய் பணத்தை அவர்கிட்டே கொடுன்னு சொல்லி அழைச்சிட்டு
வந்துட்டேன்” என்றான் சண்முகம்.
இதென்ன கூத்து. இவனோ டைலர். அந்த பையனோ பிக்பாகெட். அவனுக்கும் இவனுக்கும்
என்ன சம்பந்தம்?
சரவணன் விழிப்பதைப் பார்த்துவிட்டு சண்முகமே பேசினான். “ஐயா, உங்க குழப்பம்
புரியுது. நான் செய்யற வேலை டைலர் வேலைதான். என் உள்வேலையை மறைக்க டைலர் ஷாப் எல்லாம்
வச்சு அஞ்சாறு பேரை வேலைக்கு வச்சு நல்லபடியா கடையை நடத்தறேன். ஆனா எனக்கு பின்னால
ஒரு கதை இருக்கு சாமி. என் தொழிலே இந்தப் பய செய்யற தொழில்தான். அதுலேர்ந்துதான்
முன்னேறி இப்போ கொஞ்சம் கெளரவமா இருக்கத் தொடங்கிருக்கேன். நான் நேரடியா இதுல ஈடுபடலைன்னாலும்,
இவனைப் போல ஒரு பத்து பதினஞ்சு பேரைத் தயார் பண்ணி அவங்களுக்கு ஏரியாவ பிரிச்சுக்
கொடுத்து இப்படி கொண்டு வரச் சொல்லிருக்கேன். அதுல மாசம் இத்தனைன்னு ஒவ்வொருவருக்கும்
கொடுத்துட்டு, மிச்சத்தை நான் வச்சுக்குவேன்.”
சண்முகம் சொல்லச் சொல்ல சரவணனுக்குத் தலை சுற்றியது. ஒருவனுக்கு எத்தனை முகங்கள்.
இவன் நல்லவனா, கெட்டவனா? ஒரு பக்கம் நல்லவனாகவும், சிலருக்குக் கெட்டவனாகவும் இருக்கும்
இவனது குணம்தான் என்ன?
சண்முகம் மேலும் பேசினான். “ஐயா, ஒண்ணுமே இல்லாத பிளாட்பாரமா இருந்தபோது பிழைக்க
இப்படியெல்லாம் நடந்துக்க வேண்டியிருந்திச்சு. அப்புறம் கொஞ்சம் நிலைமை மாறினபிறகு,
நானே நேரடியாகச் செய்யாம இவனைப் போல பசங்களை வச்சு செஞ்சிட்டிருந்தேன். இனிமே இதுவும்
நான் நிறுத்திவுட்டு கெளரவமா நடந்துக்கப் போறேன். இவனுங்க இனிமே தனியா அவங்களே வேலையைப்
பார்த்து முன்னேறிக்குவாங்க”
“அது சரி சண்முகம். நீ டைலர் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். இப்படியொரு
வாழ்க்கை உன் பின்னால் இருக்குங்கறது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. அது போகட்டும்
இன்னைக்கு என்னைத் தேடி வந்த காரணம் என்ன” என்றான் சரவணன்.
“அது சாமி! நாந்தான் சொன்னேனில்ல. இனிமே திருந்தி நல்லபடியா கெளரவமா வாழப்போறேன்னு.
அதுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்க எல்லா வேைலைகளும் செஞ்சு முடிச்சுட்டேன். இடம்
எல்லாம் தயார். முதல்ல சின்ன புள்ளைங்களுக்கு வகுப்புங்க நடத்த பர்மிஷன் எல்லாம் வாங்கியாச்சி,
டீச்சர் எல்லாம் கூட போட்டாச்சு. இந்த பள்ளிக்கூடத்தை நல்லபடியா நடத்தி, கொஞ்சம்
கொஞ்சமா இதைப் பெரிசா ஆக்கிடணும். சமூகத்துல என்னையும் எல்லாரும் மதிக்கும்படியா நடந்துக்கணும்.
அதுக்காகத்தான் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேரு வைக்கணும், ஆரம்பிக்க நாள் பார்க்கணும்னுதான்
உங்ககிட்ட வந்தேன். நீங்க பணத்தைப் பறிகொடுத்திட்டு வந்து நிக்கறதைப் பார்த்து, அதை
மீட்டுக் கொண்டு வந்து கொடுக்கணும்னு இவனைப் பிடிச்சு கொண்டுவந்தேன்.” என்றான் சண்முகம்.
அடடா, ஒரே ஆளுக்கு எத்தனை முகங்கள் என்று திகப்போடு சண்முகத்துக்கு பள்ளிக்கூடப்
பெயரும், ஆரம்பத்துக்கு நாளும் குறித்துக் கொடுத்தான் சரவணன்.
No comments:
Post a Comment